கனெடிக்கட் உச்ச நீதிமன்றம் நோயாளியின் உரிமைகளை நிலைநாட்டுகிறது
அ.ஐ.மா., கனெடிக்கட் உச்ச நீதிமன்றம், 1996, ஏப்ரல் 16 அன்று, இரத்தமேற்றிக்கொள்ள மறுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமையை நிலைநாட்டியது. வழக்கு விசாரணை மன்றத்தில் முன்னதாக வழங்கப்பட்ட ஆணையை இந்தத் தீர்ப்பு ரத்துசெய்தது.
1994 ஆகஸ்டில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான நெல்லி வேகாவுக்கு அவளுடைய முதல் குழந்தை பிறந்தபின்பு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பித்தது. இரத்தப்போக்கை நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனற்றவையாக இருந்தன. திருமதி வேகாவின் நிலைமை மோசமானபோது, இரத்தமேற்றுதலுக்கு அதிகாரமளிக்கும் நீதிமன்ற ஆணை ஒன்றைப் பெற்றுக்கொள்ள மருத்துவமனை நாடியது. திருமதி வேகா, தான் மருத்துவமனையில் தங்கியிருக்கும் சமயத்தில் இரத்தமோ இரத்தத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களோ தனக்குள் செலுத்தப்படக்கூடாது என்று தெரிவித்து, தன்னுடைய தீர்மானத்தின் காரணமாக ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் மருத்துவமனையை பொறுப்பிலிருந்து விடுவிக்கும் ஒரு ஆவணத்தில் ஏற்கெனவே கையொப்பமிட்டிருந்தாள். இருந்தபோதிலும், பலவந்தமாக இரத்தத்தைச் செலுத்துவது புதிதாக பிறந்த குழந்தையின் நலனைக் கருதி செயல்படுவதாக இருக்கும்; ஏனென்றால் குழந்தைக்கு அதனுடைய தாய் அவசியம் என்பதாக மருத்துவமனை வாதாடியது. வழக்கு விசாரணை மன்றமும்கூட கவலையுள்ளதாய் இருந்தது, இரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தவிர, திருமதி வேகா இளவயதிலிருந்த ஆரோக்கியமான ஒரு பெண்ணாக இருந்தாள். இதன் காரணமாக, திருமதி வேகாவின் கணவரும் அவளுடைய வழக்கறிஞரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், நீதிமன்றம் ஆணையைப் பிறப்பித்தது; இரத்தம் செலுத்தப்பட்டது.
காலப்போக்கில், வழக்கு கனெடிக்கட் உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கே, மருத்துவமனையின் நடவடிக்கை திருமதி வேகாவின் உரிமைகளை மீறுவதாக உள்ளது என்பதாக ஒருமித்து தீர்மானிக்கப்பட்டது. தீர்ப்பு இவ்வாறு சொன்னது: “மிகவும் நெருக்கடியான நிலைமைகளின்கீழ் வழக்கு நடுஜாமத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டதால் இருதரப்பினருக்குமே தங்களுடைய வாதங்களை முழுமையாக எடுத்துரைக்க உகந்த சமயமாக அது இல்லை.”
கனெடிக்கட் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, யெகோவாவின் சாட்சிகளைத் தவிர மற்ற ஆட்களுக்கும் முக்கியமானதாய் இருக்கிறது. “மருத்துவர்கள் செய்யும் தீர்மானங்களை ஒப்புக்கொள்ளாத எல்லா நோயாளிகளுக்கும் இது முக்கியமாகும்” என்பதாக திருமதி வேகாவின் வழக்கறிஞரான டோனால்ட் டி. ரிட்லே சொல்லுகிறார். “மதம் சம்பந்தப்பட்டதாயினும் மதம் சம்பந்தப்படாததாயினும், நோயாளிகளின் கொள்கைகளை மருத்துவமனைகள் பலவந்தமாக மீறுவதை இந்தத் தீர்ப்பு தடைசெய்வதாக இருக்கும்.”