உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
“[யெகோவா] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.”—சங்கீதம் 46:9.
1. ஏசாயா தீர்க்கதரிசனத்தில் சமாதானத்தைப்பற்றிய என்ன மகத்தான வாக்குறுதியை நாம் காண்கிறோம்?
“நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.” (ஏசாயா 32:17, 18) என்னே ஓர் அழகான வாக்குறுதி! இது கடவுள் கொண்டுவரும் உண்மையான சமாதானத்தைப்பற்றிய ஒரு வாக்குறுதியாகும்.
2, 3. உண்மையான சமாதானத்தை விவரிக்கவும்.
2 ஆனால் உண்மையான சமாதானம் என்பது என்ன? அது வெறுமனே போர் இல்லாமையைக் குறிக்கிறதா? அல்லது வெறுமனே தேசங்கள் அடுத்த போருக்காக தயார்செய்யும் இடைப்பட்ட காலப்பகுதியை குறிக்கிறதா? உண்மையான சமாதானம் வெறும் ஒரு கனவா? இந்தக் கேள்விகளுக்கு நமக்கு நம்பத்தகுந்த பதில்கள் தேவையாயிருக்கின்றன. முதலாவதாக, உண்மையான சமாதானம் ஒரு கனவைக்காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. கடவுள் வாக்களித்திருக்கும் சமாதானம் இந்த உலகம் கற்பனை செய்யக்கூடிய எதற்கும் வெகு அப்பால் செல்கிறது. (ஏசாயா 64:4) இது ஒரு சில வருடங்களுக்கான அல்லது சில பத்தாண்டுகளுக்கான சமாதானம் அல்ல. அது என்றுமாக நிலைத்திருக்கிறது! அது சிலாக்கியம் பெற்ற சில ஆட்களுக்கு மட்டுமல்ல—அது வானத்தையும் பூமியையும் தேவதூதர்களையும் மனிதர்களையும் உள்ளடக்குகிறது. அது சகல தேசத்தினர், இனத் தொகுதியினர், மொழியினர், நிறத்தவர்வரை செல்கிறது. எந்த எல்லைக் கோடுகளும், எந்தத் தடைகளும், எந்தத் தோல்விகளும் அதற்குக் கிடையாது.—சங்கீதம் 72:7, 8; ஏசாயா 48:18.
3 உண்மையான சமாதானம் என்பது அனுதினமுமுள்ள சமாதானத்தை அர்த்தப்படுத்துகிறது. போரின் அல்லது வன்முறையின் யோசனைக்கே இடமில்லாமல் ஒவ்வொரு காலையிலும் எழுந்திருப்பதைக் குறிக்கிறது. உங்களுடைய எதிர்காலத்தைக் குறித்தோ உங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலத்தைக் குறித்தோ உங்களுடைய பேரப் பிள்ளைகளுடைய எதிர்காலத்தைக் குறித்தோகூட கவலைகொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் எழுந்திருப்பதைக் குறிக்கிறது. அது முழுமையான மன சமாதானத்தைக் குறிக்கிறது. (கொலோசெயர் 3:15) இனிமேலும் குற்றச்செயல் இல்லை, இனிமேலும் வன்முறை இல்லை, இனிமேலும் குடும்பங்கள் பிளவுறுவதில்லை. இனிமேலும் வீடற்ற மக்கள் இல்லை, இனிமேலும் மக்கள் பட்டினி கிடக்கவோ பனியால் உறைந்துவிடவோ வேண்டியதில்லை, இனிமேலும் மனமுறிவும் விரக்தியும் இல்லை என்பதை அது குறிக்கிறது. இன்னும் மேம்பட்ட காரியம் என்னவென்றால், கடவுளுடைய சமாதானம் என்பது நோயோ, வேதனையோ, துன்பமோ, மரணமோ இல்லாத ஓர் உலகத்தைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) உண்மையான சமாதானத்தை என்றென்றும் அனுபவித்து மகிழும் என்னே ஒரு சிறப்பான நம்பிக்கை நமக்கு இருக்கிறது! நாம் அனைவரும் வாஞ்சிப்பது இத்தகைய சமாதானமும் மகிழ்ச்சியுமே அல்லவா? நாம் ஜெபிப்பதும் அதற்காக உழைப்பதும் இந்தவிதமான சமாதானத்திற்காகத்தான் அல்லவா?
தோல்விகண்ட மனிதவர்க்கத்தின் முயற்சிகள்
4. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தேசங்கள் என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றன, என்ன விளைவுகளோடு?
4 நூற்றாண்டுகளாக மனிதர்களும் தேசங்களும் சமாதானத்தைப் பற்றி பேசியிருக்கிறார்கள், சமாதானத்துக்காக வாதாடியிருக்கிறார்கள், நூற்றுக்கணக்கான சமாதான ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறார்கள். விளைவு? கடந்த 80 ஆண்டுகளில், ஏதாவது தேசமோ அல்லது தொகுதியோ போரிடாத சமயம் ஏறக்குறைய ஒருபோதும் இருந்ததில்லை. தெளிவாகவே, சமாதானம் மனிதவர்க்கத்தைவிட்டு நழுவியிருக்கிறது. ஆகவே கேள்வியானது, சர்வதேச சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான மனிதனின் முயற்சிகள் அனைத்தும் ஏன் தோல்வியடைந்திருக்கின்றன? நிலைத்திருக்கும் உண்மையான சமாதானத்தைக் கொண்டுவர ஏன் மனிதர் திறமையற்றவர்களாய் இருக்கிறார்கள்?
5. மனிதவர்க்கத்தின் சமாதான முயற்சிகள் ஏன் எப்போதும் தோல்வியே அடைந்திருக்கின்றன?
5 உண்மையான சமாதானத்திற்கான சரியான ஊற்றுமூலத்திடம் மனிதவர்க்கத்தினர் திரும்பாததே எளிய பதிலாகும். பிசாசாகிய சாத்தானுடைய செல்வாக்கின்கீழ், தங்களுடைய சொந்த பலவீனங்களுக்கும் தீயொழுக்கங்களுக்கும் தங்களுடைய பேராசைக்கும் இலட்சியத்திற்கும் அதிகாரத்திற்கும் புகழுக்குமான வேட்கைக்கும் பலியாகியிருக்கிற அமைப்புகளை மனிதர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் பல்கலைக்கழகப் படிப்பைத்தரும் நிறுவனங்களுக்குச் சென்றிருக்கிறார்கள், நிதி ஏற்பாட்டுடைய ஸ்தாபனங்களையும் கூட்டு கட்டுப்பாட்டு நிறுவனங்களையும் நிறுவியிருக்கிறார்கள். ஆனால் இவை அதிகமான ஒடுக்குதலும் அழிவுக்குமுரிய அதிக உபாயங்களையே ஆராய்ந்து திட்டமிட்டிருக்கின்றன. எந்த ஊற்றுமூலத்திற்கு மனிதர்கள் வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எங்கே எதிர் நோக்கியிருக்கின்றனர்?
6, 7. (அ) சர்வதேச சங்கம் என்ன பதிவை தனக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது? (ஆ) ஐக்கிய நாடுகளைப்பற்றிய பதிவு என்ன சொல்கிறது?
6 நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக 1919-ல் சர்வதேச சங்கத்தின்மீது தேசங்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்தன. முஸோலினியினுடைய படைகள் 1935-ல் எதியோபியாவுக்குள் நுழைந்தபோதும், 1936-ல் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோதும் அந்த நம்பிக்கை சின்னாபின்னமாகிவிட்டது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானதுடன் 1939-ல் அந்தச் சர்வதேச சங்கம் செயலற்றுப் போய்விட்டது. சமாதானம் என்று சொல்லப்பட்டது 20 ஆண்டுகளுக்குக்கூட நீடிக்கவில்லை.
7 ஐக்கிய நாட்டு சங்கத்தைப் பற்றி என்ன? பூமி முழுவதிலும் நிலையான சமாதானத்துக்கு எதாவது ஒரு உண்மையான நம்பிக்கையை அது அளித்திருக்கிறதா? இல்லவே இல்லை. 1945-ல் அது தொடங்கப்பட்டது முதல் 150-க்கும் மேற்பட்ட போர்களும் ஆயுதம்தரித்த சண்டைகளும் நடைபெற்றிருக்கின்றன! போரையும் அதன் ஆரம்பத்தையும் பற்றி மேம்பட்ட கல்வியறிவு படைத்தவராகிய கனடாவைச் சேர்ந்த கின் டையர் என்பவர் ஐநாவைப் பற்றி, “வேட்டைக்காரர்களின் சங்கம் மிருகங்களின் புகலிடமாக மாறியது, புனிதர்களின் பேரவையாக அல்ல,” என்றும் “வலிமையற்ற மிகப் பெரிய பேச்சுக்கூடம்” என்றும் விவரித்தார்.—ஒப்பிடுக: எரேமியா 6:14; 8:15.
8. சமாதானத்தைப் பற்றி தேசங்கள் பேசுகிறபோதிலும், அவை தொடர்ந்து என்ன செய்து வருகின்றன? (ஏசாயா 59:8)
8 சமாதானத்தைப் பற்றி தேசங்கள் பேசுகிறபோதிலும், அவை தொடர்ந்து புதுப்புது ஆயுதங்களைக் கண்டுபிடித்தும் உற்பத்திசெய்தும் வருகின்றன. சமாதான மாநாடுகளை ஏற்பாடு செய்கிற நாடுகளே ஆயுதங்களைத் தயாரிப்பதில் அடிக்கடி முன்னணியில் இருக்கின்றன. இந்த நாடுகளில் வலிமைமிக்க வியாபார அணுகூலம் சாவை ஏற்படுத்தும் போராயுதங்களின் உற்பத்தியை முன்னேற்றுவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் படைத்துறை சாராத சுமார் 26,000 வயதுவந்தவர்களையும் பிள்ளைகளையும் பேய்த்தனமான கண்ணிவெடிகள் கொல்லுகின்றது அல்லது ஊனமாக்குகின்றன. பேராசையும் ஊழலும் தூண்டுவிக்கும் சக்திகளாக இருக்கின்றன. இலஞ்சங்களும் ஊழல்களும் சர்வதேச ஆயுத வியாபாரத்தில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இந்த முறையில் அரசியல்வாதிகள் சிலர் தங்களை செல்வந்தர்களாக்கிக் கொள்கிறார்கள்.
9, 10. போர்களையும் மனித முயற்சிகளையும்பற்றி உலகிலுள்ள நிபுணர்கள் எதைக் கவனித்திருக்கிறார்கள்?
9 டிசம்பர் 1995-ல், போலந்து நாட்டு இயற்பியலாளரும் நோபல் சமாதான பரிசைப் பெற்றவருமான ஜோசப் ரோட்பிளாட் என்பவர் ஆயுதப் போட்டியை நிறுத்தும்படி தேசங்களைக் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னார்: “[ஒரு புதிய ஆயுதப் போட்டியை] தடுப்பதற்கான ஒரே வழி, மொத்தமாக போரை ஒழித்துக்கட்டுவதாகும்.” இது நிகழக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 1928 முதற்கொண்டு 62 தேசங்கள் பல்வேறு கட்சிகள் அடங்கிய போர் ஒழிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. அதன் மூலம் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு வழியாக அவர்கள் போரை கைவிட்டுவிட்டனர். அந்த ஒப்பந்தம் மதிப்பில்லாமல் போனதை இரண்டாம் உலகப் போர் தெளிவாக மெய்ப்பித்துக் காண்பித்தது.
10 மறுக்கமுடியாத வண்ணமாக, போர்கள் மனிதவர்க்க சரித்திரத்தின் பாதையில் எப்போதும் முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றன. கைன் டையர் இவ்வாறு எழுதினார்: “மனித நாகரிகத்தில் போர் ஒரு மத்திய நிறுவனமாக இருக்கிறது, அது நாகரிகத்தின் ஆரம்ப சரித்திரம் முதற்கொண்டு இருக்கிறது.” ஆம், உண்மையில் ஒவ்வொரு நாகரிகமும் பேரரசும் அதன் இராணுவ ஹீரோக்களையும், அதன் நிலையான படைகளையும், அதன் புகழ்மிக்க யுத்தங்களையும், அதன் புனிதத்தன்மை வாய்ந்த இராணுவ கல்விச்சாலைகளையும், அதன் போராயுதங்களின் குவியலையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறது. இருந்தபோதிலும், நம்முடைய நூற்றாண்டு வேறெந்த நூற்றாண்டையும்விட, அழிவிலும் உயிர்களின் இழப்பிலும், அதிகமான போரால் குறித்துக்காட்டப்பட்டிருக்கிறது.
11. உலகத் தலைவர்கள் சமாதானத்தை நாடுகையில் எந்த அடிப்படை காரியத்தை அசட்டை செய்துவிட்டிருக்கிறார்கள்?
11 உலகத் தலைவர்கள் எரேமியா 10:23-ல் உள்ள அடிப்படை ஞானத்தை அசட்டை செய்துவிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக உள்ளது: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” கடவுள் அசட்டை செய்யப்படுவாரேயானால், அங்கே உண்மையான சமாதானம் இருக்கமுடியாது. அப்படியானால் நாகரிக சமுதாயத்தில் போர் தவிர்க்கமுடியாதது என்பதை இவையனைத்தும் அர்த்தப்படுத்துகின்றனவா?அந்தச் சமாதானம்—உண்மையான சமாதானம்—சாத்தியமற்ற ஒரு கனவு என்பதை அது அர்த்தப்படுத்துகிறதா?
மூலகாரணங்களைக் கற்றுணர்தல்
12, 13. (அ) போருக்கான அடிப்படையான, கண்ணுக்குப் புலப்படாத காரணத்தைக் குறித்து பைபிள் என்ன வெளிப்படுத்துகிறது? (ஆ) உலக பிரச்சினைகளுக்கான மெய்யான தீர்விலிருந்து மனிதவர்க்கத்தின் கவனத்தை சாத்தான் எவ்விதமாக திருப்பியிருக்கிறான்?
12 அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, போரிற்கான காரணங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கலகக்கார தேவதூதனாகிய சாத்தானே ஆதி ‘கொலைபாதகனும்’ ‘பொய்யனுமாய்’ இருக்கிறான் என்பதையும் உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்பதையும் பைபிள் தெளிவாக சொல்லுகிறது. (யோவான் 8:44; 1 யோவான் 5:19) தன்னுடைய திட்டங்களை நிறைவேற்ற அவன் என்ன செய்திருக்கிறான்? 2 கொரிந்தியர் 4:3, 4-ல் இவ்விதமாக வாசிக்கிறோம்: “எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” உலகத்தின் பிரச்சினைகளுக்குப் பரிகாரமாகிய கடவுளுடைய ராஜ்யத்திடமிருந்து மனிதவர்க்கத்தின் கவனத்தைத் திருப்ப சாத்தியமான அனைத்தையும் சாத்தான் செய்கிறான். பிரிவினையுண்டாக்கும் சமுதாயம், அரசியல், மதசம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவற்றால் மக்களைக் குருடாக்கி திசைதிருப்புகிறான்; இதன் மூலம் கடவுளுடைய அரசதிகாரத்தைவிட இவைதான் அதிக முக்கியமானவை என்று தோன்றும்படிச் செய்கிறான். சமீபத்தில் உலகம் முழுவதிலும் தேசப்பற்றின் அலை தோன்றியிருப்பது இதற்கு ஒரு உதாரணமாகும்.
13 தேசியவாதம் மற்றும் இனக்கொள்கை, ஒரு தேசம், இனம் அல்லது குலம் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று உயர்ந்தது என்பதிலுள்ள நம்பிக்கை ஆகியவற்றை பிசாசாகிய சாத்தான் தூண்டுவிக்கிறான். நூற்றாண்டுகளாக கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வேரூன்றிய பகைமைகள், அதிக போர்களையும் சண்டைகளையும் தூண்டுவிப்பதற்கு உயிர்ப்பூட்டப்படுகின்றன. யுனஸ்கோவின் தலைமை இயக்குநராகிய ஃபெடரிக்கோ மேயர் இந்தப் போக்கை எச்சரித்து சொன்னதாவது: “வழக்கமாக சகிப்புத்தன்மை இருந்துவந்த இடங்களிலும்கூட, அந்நியர்களிடமாக பயங்கொள்ளும் ஒரு மனப்பான்மை அதிக தெளிவாகிக்கொண்டு வருகிறது; கடந்தகால காரியம் என்று தோன்றிய குருட்டுத்தனமான தேசப்பற்றை அல்லது இனப்பற்றை சார்ந்த பேச்சுக்கள், அதிக அடிக்கடி கேட்கப்படுகின்றன.” விளைவு என்னவாக இருந்திருக்கிறது? முன்னாள் யுகோஸ்லாவியாவில் நடைபெற்ற பயங்கரமான படுகொலைகளும் ருவாண்டாவில் நடைபெற்ற இனம் சம்பந்தப்பட்ட இரத்தக்குளியலும் உலக செய்திகளாகிவிட்டிருப்பதற்கான இரண்டு சம்பவங்களாகும்.
14. போரையும் நம்முடைய காலத்தில் அதனுடைய பாதிப்பையும் வெளிப்படுத்துதல் 6:4 எவ்விதமாக வருணிக்கிறது?
14 இந்த ஒழுங்குமுறையின் கடைசி காலத்தில், போரை அடையாளப்படுத்துகிற சிவப்புநிற குதிரை பூமியெங்கும் பாய்ந்து செல்லும் என்பதை பைபிள் முன்னறிவித்தது. வெளிப்படுத்துதல் 6:4-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தை பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.” 1914 முதற்கொண்டு நாம் இந்த அடையாளப்பூர்வ குதிரை வீரன் ‘சமாதானத்தை எடுத்துப்போடுவதை’ பார்த்திருக்கிறோம், தேசங்கள் சண்டைப்போட்டுக்கொண்டும் போர் தொடுத்துக்கொண்டுமிருக்கின்றன.
15, 16. (அ) போர்களிலும் கொலைகளிலும் மதத்தின் பங்கு என்னவாக இருந்திருக்கிறது? (ஆ) மதம் செய்திருக்கும் காரியங்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
15 இந்தப் போர்களிலும் கொலைகளிலும் மதத்தின் பங்கை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. தவறாக வழிநடத்துகிற பொய் மதத்தின் செல்வாக்கை, மனிதனின் இரத்தக்கறைபடிந்த சரித்திரத்திற்கு பெருமளவு காரணம் காட்டலாம். கத்தோலிக்க இறையியலர் ஹேன்ஸ்குங் இவ்வாறு எழுதினார்: “[மதங்கள்] மிகப் பெரியளவில் எதிரிடையான, அழிவுக்கேதுவான செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன, இன்னும் அவ்விதம் செய்துவருகின்றன. ஏராளமான போராட்டம், இரத்தம் தோய்ந்த சண்டைகள் ஆகியவற்றிற்கு ‘மதப் போர்களே’ பொறுப்புள்ளவை என்பதில் சந்தேகமே இல்லை; . . . இரண்டு உலகப் போர்களுக்கும்கூட அவையே பொறுப்புள்ளவையாக இருந்தன.”
16 கொலை செய்தலிலும் போர்களிலும் பொய் மதம் வகித்திருக்கும் பங்கைக் குறித்து யெகோவா தேவன் எவ்வாறு உணருகிறார்? வெளிப்படுத்துதல் 18:5-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் பொய் மதத்தைக் குறித்த கடவுளுடைய குற்றச்சாட்டு இவ்வாறு சொல்கிறது: “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.” உலக அரசியல் ஆட்சியாளர்களுடன் பொய்மதங்களின் உடந்தையானது, கடவுள் அசட்டை செய்ய முடியாதளவுக்கு இப்பேர்ப்பட்ட இரத்தம் சிந்திய குற்றத்திலும் பெரும் குவியலான பாவங்களிலும் விளைவடைந்திருக்கிறது. உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருகையில் வெகு சீக்கிரத்தில் அவர் இந்த இடறுதற்குரிய கல்லை நீக்கிப்போடுவார்.—வெளிப்படுத்துதல் 18:21.
சமாதானத்துக்குப் போகும் வழி
17, 18. (அ) நித்திய சமாதானம் சாத்தியம் என்பதை நம்புவது ஏன் நடைமுறைக்கேற்றதல்லாத வெறும் ஒரு கனவு அல்ல? (ஆ) உண்மையான சமாதானம் வரும் என்பதை உறுதிசெய்வதற்கு யெகோவா ஏற்கெனவே என்ன செய்ய ஆரம்பித்துவிட்டார்?
17 ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகள் மூலமாக மனிதன் உண்மையானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தைக் கொண்டுவர முடியவில்லையென்றால், எந்த ஊற்றுமூலத்திலிருந்து உண்மையான சமாதானம் வரும், எப்படி? நித்திய சமாதானம் சாத்தியம் என்பதை நம்புவது நடைமுறைக்கேற்றதல்லாத வெறும் ஒரு கனவா? சமாதானத்தின் சரியான ஊற்றுமூலரிடம் நாம் திரும்புவோமாகில், அது ஒரு கனவல்ல. அவர் யார்? யெகோவா “பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்,” என்று நமக்குச் சொல்வதன் மூலம் சங்கீதம் 46:9 பதிலளிக்கிறது. யெகோவா போரை முடிவுக்குக் கொண்டுவந்து, உண்மையான சமாதானத்தை நிலைநாட்டும் அந்தச் செயல்முறையை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார். எவ்விதமாக? 1914-ல் தம்முடைய உரிமைக்குரிய ராஜ்ய சிங்காசனத்தில் இயேசு கிறிஸ்துவை நியமிப்பதன் மூலமும், மனிதவர்க்க சரித்திரத்தில் சமாதானத்திற்கான மிகப் பெரிய கல்விப் பிரச்சாரத்தை முன்னேற்றுவிப்பதன் மூலமும் ஆரம்பித்துவிட்டார். ஏசாயா 54:13-ல் உள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள் நமக்கு உறுதியளிப்பதாவது: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.”
18 காரணமும் விளைவும் என்ற நியமத்தை இந்தத் தீர்க்கதரிசனம் விளக்குகிறது—அதாவது, ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. இந்த விஷயத்தில், யெகோவாவின் போதனை—அதாவது, காரணம்—போரை விரும்புகிற மக்களை சமாதானத்தை நேசிக்கும் மக்களாக மாற்றுகிறது; இவர்கள் கடவுளுடன் சமாதானமாக இருக்கிறார்கள். விளைவானது, சமாதானத்தை நேசிக்கிறவர்களாக்கும் இருதய மாற்றம். மக்களுடைய இருதயங்களையும் மனங்களையும் மாற்றுகிற இந்தப் போதனை, ‘சமாதான பிரபுவாகிய’ இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை லட்சக்கணக்கானோர் பின்பற்றுகையில் இப்பொழுதே அது உலகமுழுவதும் பரவிவருகிறது.—ஏசாயா 9:6.
19. உண்மையான சமாதானத்தைப்பற்றி இயேசு என்ன போதித்தார்?
19 உண்மையான சமாதானத்தைப் பற்றி இயேசு என்ன போதித்தார்? தேசங்களுக்கிடையிலான சமாதானத்தைப் பற்றி மட்டும் அவர் பேசவில்லை. மக்களுக்கிடையே உள்ள உறவுகளில் ஏற்படும் சமாதானத்தையும் நல்மனசாட்சியினால் வருகிற உள்ளத்தின் சமாதானத்தையும் பற்றி அவர் பேசினார். யோவான் 14:27-ல் தம்முடைய சீஷர்களுக்கான இயேசுவின் வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” இயேசு தரும் சமாதானம் இந்த உலகத்தின் சமாதானத்திலிருந்து எவ்விதத்தில் வேறுபட்டிருந்தது?
20. எதன் மூலமாக இயேசு உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருவார்?
20 முதலாவதாக, இயேசு தரும் சமாதானம் அவருடைய ராஜ்ய செய்தியுடன் நெருங்கிய வண்ணமாக சம்பந்தப்பட்டிருந்தது. இயேசுவும் 1,44,000 உடன் ஆட்சியாளர்களும் அடங்கிய நீதியான பரலோக அரசாங்கம், போரையும் போரை விரும்புகிறவர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும். (வெளிப்படுத்துதல் 14:1, 3) அவருடைய பக்கத்தில் இறந்த தீயோனுக்கு அவர் பின்பு அளித்த சமாதானமான பரதீஸிய நிலைமைகளை அது கொண்டுவரும் என்பதை அவர் அறிந்திருந்தார். இயேசு பரலோக ராஜ்யத்தில் ஓர் இடத்தை அவனுக்கு அளிக்கவில்லை, ஆனால் “இன்றைக்கு நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன்கூட பரதீஸிலிருப்பாய்” என்று அவர் சொன்னார்.—லூக்கா 23:43, NW.
21, 22. (அ) ஆச்சரியப்படும் விதத்தில் பலப்படுத்துகிற என்ன நம்பிக்கையை உண்மையான சமாதானம் உட்படுத்துகிறது? (ஆ) அந்த ஆசீர்வாதத்தை நாம் காண என்ன செய்யவேண்டும்?
21 அதோடு, அவரில் விசுவாசம் வைக்கிற துக்கப்படுகிற அனைவருக்கும் அவருடைய ராஜ்யம் ஆறுதலைக் கொண்டுவரும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆச்சரியப்படும் விதத்தில் பலப்படுத்துகிற உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் அவருடைய சமாதானம் உட்படுத்துகிறது யோவான் 5:28, 29-ல் காணப்படும் உற்சாகமூட்டும் வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்: “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”
22 அந்தச் சமயத்தை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அன்பான நேசத்துக்குரியவர்களை நீங்கள் மரணத்தில் இழந்திருக்கிறீர்களா? அவர்களை மீண்டும் பார்ப்பதற்கு நீங்கள் வாஞ்சையாய் இருக்கிறீர்களா? அப்படியானால் இயேசு கொடுக்கிற சமாதானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசுவிடம், “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என்று சொன்ன லாசருவின் சகோதரியாகிய மார்த்தாளுடையதைப் போன்ற விசுவாசத்தைக் காட்டுங்கள். ஆனால் மார்த்தாளிடம் இயேசு சொன்ன உற்சாகமூட்டும் பதிலைக் கவனியுங்கள்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா”?—யோவான் 11:24-26.
23. உண்மையான சமாதானத்தை அடைவதற்கு கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவு ஏன் இன்றியமையாதது?
23 நீங்களும்கூட அந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து பயனடையலாம். எவ்விதமாக? கடவுளுடைய வார்த்தையைப்பற்றிய திருத்தமான அறிவை அடைவதன் மூலமாகவே. அப்போஸ்தலன் பவுல் எவ்விதமாக திருத்தமான அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் என்பதை கவனியுங்கள்: ‘நாங்கள் . . . உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவில் விருத்தியடைந்து கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளுங்கள்.’ (கொலோசெயர் 1:9, 10) இந்தத் திருத்தமான அறிவு, யெகோவா தேவனே உண்மையான சமாதானத்தின் ஊற்றுமூலராக இருக்கிறார் என்பதை நீங்கள் நம்பும்படி செய்யும். சங்கீதக்காரனோடு சேர்ந்து பின்வருமாறு சொல்வதற்கு நீங்கள் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்பதைக்கூட அது உங்களுக்குச் சொல்லும்: “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.”—சங்கீதம் 4:8.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ மனிதரின் சமாதான முயற்சிகள் ஏன் எப்போதும் தோல்வியே அடைந்திருக்கின்றன?
◻ போருக்கான மூல காரணம் என்ன?
◻ நிலையான சமாதானம் ஏன் நடைமுறைக்கேற்றதல்லாத வெறும் ஒரு கனவு அல்ல?
◻ உண்மையான சமாதானத்தின் ஊற்றுமூலம் எது?
[பக்கம் 8-ன் படம்]
உண்மையான சமாதானம் ஒரு கனவல்ல. அது கடவுளுடைய வாக்குறுதி
[பக்கம் 10-ன் படம்]
1914 முதற்கொண்டு அடையாள அர்த்தமுள்ள சிவப்பு நிற குதிரையின் சவாரியாளன் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப் போட்டிருக்கிறான்
[பக்கம் 11-ன் படம்]
மதமும் ஐநாவும் சமாதானத்தைக் கொண்டுவர முடியுமா?
[பக்கம் 11-ன் படம்]
UN photo