இக்காலங்கள் ஏன் இவ்வளவு கேடடைந்துள்ளன?
ஒருசெய்தித்தாளை வாசிப்பதற்கு அல்லது டெலிவிஷனில் செய்தியைப் பார்ப்பதற்கு அல்லது ரேடியோ ஒலிபரப்பு செய்தியைக் கேட்பதற்கு நீங்கள் உட்காருகையில், ஏதாகிலும் கெட்ட செய்தியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அல்லவா? நடந்துகொண்டிருக்கிற ஒரு போர் இன்னும் தொடருகிறது என்றோ, வன்முறையானக் குற்றச்செயல் இன்னும் பெருகிக்கொண்டிருக்கிறது என்றோ, அல்லது முன்னேறத் தொடங்கிக்கொண்டிருக்கும் நாட்டின் பலத்தை பஞ்சம் பாழ்ப்படுத்துகிறது என்றோ தெரிந்துகொள்வதில் நீங்கள் ஆச்சரியப்படாதிருக்கலாம்.
இந்தச் சம்பவங்கள் நிகழும் இடங்களிலிருந்து வெகு தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்களென்றால், இத்தகைய அறிக்கைகளால் நீங்கள் மட்டுக்குமீறி தொடர்ந்து கவலைப்படுபவராக ஒருவேளை இருக்கமாட்டீர்கள். எவ்வாறாயினும், துன்பப்படும் அந்தப் பெருந்திரளான நபர்கள் எல்லாரைப்பற்றியும் வருத்த உணர்வைக்கொண்டிருக்க யாரால் முடியும்? அப்படியிருந்தாலும், தனி நபர்கள் துன்பப்படுவது கண்முன் நேர்ந்தால் நாம் உணர்ச்சிப்பூர்வமாகப் பாதிக்கப்படாமல் இருப்பது மிகக் கடினம். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், ஒரு போரைப் பற்றி வாசித்து உயிரிழப்புகளின் புள்ளிவிவரங்களைப் பற்றி சிந்தனை செய்வது ஒரு காரியமாக இருக்கையில், ஒரு வெடிகுண்டால் தங்கள் வீடு அழிக்கப்பட்டபோது தன் தாயைப் பறிகொடுத்த ஒன்பது வயது போஸ்னிய சிறுவனாகிய அட்னெனைப் பற்றி வாசிப்பது முற்றிலும் வேறான காரியம். சில மாதங்களுக்கு பின்புதானே, அட்னென் தன் தகப்பனுடன் வீதியில் ஒன்றாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவனுடைய தகப்பன் எவராலோ சுட்டுக் கொல்லப்பட்டார். சில வாரங்களுக்கு பின்பு, அவனுடைய சகோதரியும், பள்ளி மைதானத்தில் விழுந்த பீரங்கி வெடியால் தாக்கப்பட்டு அவனுடைய கண்களுக்கு முன்புதானே இரத்தம் பீரிட்டு வெளியாகி மரித்துவிட்டாள். உணர்வதிர்ச்சிக் கோளாறுக்காக அட்னெனுக்குச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் அந்தப் பையன் எல்லா உணர்ச்சிகளையும்—அறிவார்வ இயல்பையுங்கூட—இழந்து மரத்துப்போயிருந்ததைக் கண்டனர். பயங்களும் முன்னிகழ்ச்சியின் திடீர் மனத்தோற்றங்களும் அவன் விழித்திருக்கையில் அவனைத் தாக்கின; கொடுங்கனவு கிலிகள் அவன் தூக்கத்தைக் கெடுத்தன. பாதிக்கப்பட்ட அநேகரில் அட்னென் ஒருவனே. அவன் துன்பப்படும் ஒரு பிள்ளையாக இருக்கிறான்; அவனுக்காக அனுதாபத்தை உணராமல் நாம் இருக்க முடியாது.
உலக நோய்கள் மற்றவற்றைக் குறித்ததிலும் அவ்வாறே உள்ளது. பஞ்சத்தைப் பற்றி வாசிப்பது ஒரு காரியம்; ஐந்து வயது சிறு பெண் உப்பிய வயிற்றுடனும் தீக்குச்சியைப் போன்ற கைகால்களுடனும், பசிபட்டினியால் உயிர் ஊசலாடும் நிலையில் இருக்கும் ஒரு படத்தைக் காண்பது முற்றிலும் வேறொரு காரியம். குற்றச்செயல் புள்ளிவிவரங்களை வாசிப்பது ஒரு காரியம்; வயதான ஒரு விதவை, கொடுமையாக அடிக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டு, கற்பழிக்கப்படுவதைப் பற்றி கேள்விப்படுவது முற்றிலும் மற்றொரு காரியம். குடும்ப அன்பு குறைந்து போவதைப் பற்றி வாசிப்பது ஒரு காரியம்; ஒரு தாய், தன் சொந்த பிள்ளையை வேண்டுமென்றே பட்டினிபோட்டு கொடுமைப்படுத்தியதைப் பற்றி தெரிந்துகொள்வது முற்றிலும் மற்றொரு காரியம்.
இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றி வாசிப்பது வேதனையளிக்கிறது. ஆனால் இந்தப் பூகோள வாதைகளில் ஒன்று நம்மை நேரடியாகத் தாக்குகையில் எவ்வளவு அதிக மோசமாயிருக்கிறது! நீங்கள்தாமே தீமையை அனுபவிக்கையில், உலகச் செய்தி மூலம் கேள்விப்படும் பெரும் உலக நிலைமைகள் திணறடிப்பவை ஆகிவிடலாம். கடும் குற்றச்செயல், போர், பஞ்சம், நோய் ஆகியவற்றினால் துன்பம் அனுபவிப்பது, மனித சரித்திரத்திலேயே என்றுமில்லாத அளவிற்கு பெருகிக்கொண்டிருக்கும் இந்த உண்மையை எதிர்ப்படுவது திகிலூட்டுவதாக உள்ளது. இந்த 20-வது நூற்றாண்டின் மெய்ம்மைகளைக் கையாளுவதன் பாதிப்புகள் நிச்சயமாகவே அதி ஆழமாக உள்ளன—மனத்தடுமாற்றம், பயம், மனச்சோர்வு ஆகியவை சாதாரணமாக உள்ளன.
காரியங்கள் ஏன் இவ்வளவு சீர்குலைந்து விட்டன? மனிதவர்க்கம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது? இத்தகைய மனக்கலக்கமுண்டாக்கும் கேள்விகளின் பதில்களுக்காக, பல மதங்களைச் சேர்ந்த மக்கள் நாடித் தேடுகின்றனர்.
வருந்தத்தக்கதாக, இன்றைய மதங்கள் திருப்திகரமான பதில்களை அளிப்பது அரிதாக உள்ளது. இந்தப் பத்திரிகையின் முன் அட்டையில் உள்ள கேள்வியை நீங்கள் முதலாவதாகப் பார்த்தபோது, ஒருவேளை உங்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்—அது புரிந்துகொள்ளத்தக்கதே. எந்த விளக்கமுமின்றி பைபிளிலுள்ளதை அப்படியே ஏற்கும் கோட்பாட்டு மதங்கள், பைபிளில் இல்லாத ஒன்றை—இந்த உலகத்தினுடைய முடிவின் நாளையும் மணிநேரத்தையும் துல்லியமாய்—அதிலிருந்து காண அடிக்கடி கடினமாக முயற்சி செய்கின்றன. (மத்தேயு 24:36-ஐக் காண்க.) இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்கள், பைபிள்தானே சுயவிளக்கத்தைத் தரும்படி அனுமதிக்கின்றனர். கடைசி நாட்களைப் பற்றிய பைபிளின் விவரிப்பு உண்மை நிகழ்ச்சியாகவும் நியாயமானதாகவும் இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்வதில் நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படுவீர்கள். மேலும், காரியங்கள் ஏன் இவ்வளவு மிக கேடடைந்தவையாக இருக்கின்றன என்பதை வெறுமனே விவரிப்பதைப் பார்க்கிலும் அதிகத்தை பைபிள் செய்கிறது. உண்மையாக ஆறுதல் அளிக்கிற ஓர் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அது அளிக்கிறது. இது எவ்வாறு என்பதைக் காண்பதற்குப் பின்வரும் கட்டுரைகளைச் சிந்திக்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Jobard/Sipa Press