பிரான்ஸில் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தோற்கடித்தல்
பிரான்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் அண்மையில் சரமாரியான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு குறியிலக்காக இருந்தனர். ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் மத கருத்துவேறுபாட்டுக் குழுக்களை உட்படுத்திய பயங்கரமான சம்பவங்களைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, செய்தித்துறை, சாட்சிகளைப்பற்றிய உண்மைகளைத்திரித்துக்கூறி புரளிகளைப் பரப்பியது. அவர்கள் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆபத்தான மத கருத்துவேறுபாட்டுக் குழுக்களில் ஒன்றாக தவறாக வருணிக்கப்பட்டிருந்தார்கள்.
பிழைகளைத் திருத்தும் ஒரு முயற்சியில், யெகோவாவின் சாட்சிகள் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளித்த ஒரு துண்டுப்பிரதியை வெளியிட்டார்கள்: யெகோவாவின் சாட்சிகள் யார்? அவர்கள் கிறிஸ்தவர்களா? அவர்கள் மருத்துவ கவனிப்பை ஏற்கின்றனரா? அவர்கள் ஏன் வீடுவீடாகச் செல்கின்றனர்? அவர்கள் வேலைக்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது? யெகோவாவின் சாட்சிகள் சமுதாயத்துக்கு எவ்வாறு பயனுள்ளவர்களாக இருக்கின்றனர்?
பிரெஞ்சு மொழியில் இருந்த இந்தத் தகவல் நிறைந்த துண்டுப்பிரதியின் தலைப்பு யெகோவாவின் சாட்சிகள்—அவர்களைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்திருக்க வேண்டும். கூடுமானவரை அநேக ஆட்களிடம் இந்தத் துண்டுப்பிரதியை கொடுப்பதற்காக, விசேஷ அளிப்புத் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மே 13 முதல் ஜூன் 9, 1996 வரையாக 90 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.
அரசு அதிகாரிகள் உட்பட, அநேகரை இந்தத் துண்டுப்பிரதி கவர்ந்தது. “யெகோவாவின் சாட்சிகளைப்பற்றிய குற்றச்சாட்டைக்குறித்து என் உள்ளம்கொதிக்கிறது,” என்பதாக துண்டுப்பிரதியை வாசித்தபின் வட்டார மன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார். “பல சமயங்களில் உங்கள் வேலையின் பெருந்தன்மையையும் தன்னலமில்லாத அக்கறையையும் குறித்து பாராட்டியிருக்கிறேன்.” துண்டுப்பிரதிக்குப் பிரதிபலிப்பவராக, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒரு அங்கமாக இருக்கும் அந்தத் தொகுதிக்கும் மத கருத்துவேறுபாட்டுக் குழுக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை பெரும்பாலான மக்கள் அறிந்தவர்களாகவும் அதை வித்தியாசப்படுத்திக் காண முடிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.”
பிரிட்டானியில் ஒரு சாட்சி துண்டுப்பிரதியை ஒரு பாதிரியிடம் அளித்தார், அவர் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டார். “நீங்கள் செய்யும் காரியத்துக்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன்,” என்று அவர் சொன்னார். மேலுமாக அவர் சொன்னதாவது: “உங்களை வீட்டுக்குள் அனுமதித்து உங்களுக்கு ஒரு கப்பு காப்பி கொடுக்கும்படியாக நான் என் பங்கிலுள்ளவர்களை உற்சாகப்படுத்துகிறேன். நீங்கள் சந்திப்பவர்களிடம் என் வீட்டுக்கும்கூட நீங்கள் வந்துபோனதை சொல்லலாம். உங்கள் பிரசுரங்களை நான் வாசிப்பதை போற்றுவதையும்கூட உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.”
துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டபிறகு, அல்சேஸிலிருந்த ஒரு புராட்டஸ்டன்டு மனிதன் ஒரு பைபிள் படிப்பு படிக்க விரும்பி உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதினார். “என்னுடைய சர்ச்சின் மீதிருந்த எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டபடியால், ஆவிக்குரிய விதமாக புதிய ஓர் ஆரம்பத்தைக் கொண்டிருக்க நான் ஆவலாய் இருக்கிறேன்,” என்பதாக அவர் எழுதினார். தங்களுக்கு எதிராக சில சமயங்களில் சொல்லப்படும் பொய் குற்றச்சாட்டுகளின் மத்தியிலும், பிரான்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள்—ஆம், உலகின் எல்லா பாகங்களிலுமிருப்பவர்கள்—பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கடவுளுடைய நோக்கங்களைப்பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ளும்படியாக தொடர்ந்து மக்களுக்கு உதவிவருகிறார்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17.