உண்மையான மகிழ்ச்சியை எங்கே காணமுடியும்?
பொருளாதார உடைமைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியைக் காணமுடியும் என்பதாக அநேக ஆட்கள் நினைக்கின்றனர். நீங்களும் அப்படி நினைக்கிறீர்களா? பொருளாதார காரியங்கள் நிச்சயமாகவே நம்முடைய மகிழ்ச்சிக்குப் பங்களிக்கக்கூடுமென்றாலும், அவை அதற்கு உத்தரவாதமளிப்பது கிடையாது; அல்லது சரீரசம்பந்தமான செளகரியங்கள் விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதோ அல்லது ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்வதோ கிடையாது.
இயேசு கிறிஸ்து தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இவ்வாறு சொன்னார்: “ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” (மத்தேயு 5:3, NW) இயேசு இவ்வாறும்கூட சொன்னார்: “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.”—லூக்கா 12:15.
அநேகர் ஒழுக்கக்கேடான பாலுறவிலும் மற்ற ‘மாம்சத்தின் கிரியைகளிலும்’ ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியை நாடுகிறார்கள். (கலாத்தியர் 5:19-21) என்றபோதிலும், சிற்றின்பங்களுக்கு இடங்கொடுப்பது உண்மையான மற்றும் நிலையான மகிழ்ச்சியைக் கொண்டுவருவது கிடையாது. உண்மையில், இப்படிப்பட்ட காரியங்களைப் பழக்கமாய்ச் செய்கிறவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ள மாட்டார்கள்.—1 கொரிந்தியர் 6:9, 10.
மற்றவர்கள் மகிழ்ச்சிக்கான தங்களுடைய தாகத்தில் சொந்த சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள முற்படுவதன் மூலம் தங்கள் மனதினிடமாக கவனத்தைத் திருப்புகிறார்கள். நூலகங்களிலும் புத்தக கடைகளிலும் சுய உதவி புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன, ஆனால் இப்படிப்பட்ட பிரசுரங்கள் மக்களுக்கு நிலையான மகிழ்ச்சியை கொண்டுவரவில்லை. அப்படியென்றால், உண்மையான மகிழ்ச்சியை நாம் எங்கே காணமுடியும்?
உண்மையில் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பதற்கு, நமக்குள் இயல்பாய் அமைந்துள்ள ஆவிக்குரிய தேவையை உணர்ந்துகொள்ள வேண்டும். இயேசு சொன்னார்: “ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” நிச்சயமாகவே வெறுமனே இந்தத் தேவையைப் புரிந்துகொண்டு பின்னர் அதைக்குறித்து எதையும் செய்யாமல் இருந்தால் நமக்கு அது பிரயோஜனமாயிராது. இதை விளக்குவதற்கு: பந்தயத்திற்குப் பின்பு தண்ணீருக்காக தன் சரீரம் தாகமாய் இருக்கையில், அதைக் குறித்து எதையும் அவன் செய்யாதிருந்தால் மாரத்தான் ஓட்டப்பந்தயக்காரனுக்கு என்ன நேரிடும்? சீக்கிரத்தில் அவன் தன்னுடைய உடலிலுள்ள நீரை இழந்துவிடுவதையும் மற்ற கவலைக்குரிய பாதிப்புகளையும் எதிர்ப்படமாட்டானா? அதேவிதமாகவே, ஆவிக்குரிய ஊட்டத்துக்கான நம்முடைய தேவையை உணரத் தவறினால், நாம் கடைசியில் ஆவிக்குரிய விதமாக சோர்ந்துபோவோம். இது சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் இழந்துவிடுவதற்கு வழிநடத்தும்.
இயேசு இந்த ஆவிக்குரிய தேவையை முழுமையாக உணர்ந்தவராய் தவறாமல் கடவுளுடைய வார்த்தையைப் படிக்கவும் தியானிக்கவும் செய்தார். அவரால் சுலபமாக பரிசுத்த வேதாகமத்திலுள்ள பகுதிகளைக் கண்டுபிடிக்கவும் வாசிக்கவும் முடிந்தது, மற்றவர்களும் அதையே செய்யும்படியாக அவர் கற்பித்தார். (லூக்கா 4:16-21; எபேசியர் 4:20, 21-ஐ ஒப்பிடுக.) இயேசு தம்முடைய பரம தந்தையின் சித்தத்தைச் செய்வதை உணவோடும் ஒப்பிட்டு பேசினார். கடவுளுடைய சித்தத்தைச் செய்வது அவருக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது.—யோவான் 4:34.
ஆம், பொருளாதார காரியங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியாது; பாவமுள்ள மாம்சத்தை மகிழ்விப்பதனாலும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. உண்மையான மகிழ்ச்சி என்பது உண்மையான விசுவாசத்தையும் யெகோவா தேவனோடு ஒரு நல்ல உறவையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் இருதய நிலையாகும். அப்படியென்றால் சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு பாடியது பொருத்தமாகவே உள்ளது: “யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் சந்தோஷமுள்ளது.”—சங்கீதம் 144:15ஆ, NW.
[பக்கம் 23-ன் படம்]
விசுவாசமும் கடவுளோடு ஒரு நல்ல உறவும் உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவரும்