சத்தியத்தால் விடுதலை
ஐக்கிய மாகாணங்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் மூவாயிரம் பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக கற்பனைசெய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? உண்மையில், அப்படி ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமே திகிலுண்டாக்குகிறது. ஆனால், ஒருவிதத்தில், எல்லா மனிதரும் இதேபோன்ற ஒரு நிலைமையில்தான் இருக்கிறோம். பைபிள் சொல்கிறது: ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாக இருக்கிறார்கள்.’ (ரோமர் 3:23) ஆமாம், நாம் எல்லாரும் ஆதாமின் வம்சத்தினர்களாக, பாவம் என்னும் நிலைமையின்கீழ் “சிறைப்பட்டு” இருக்கிறோம். (ரோமர் 5:12) சிறைப்பட்டிருக்கும் நிலைமையின் பாதிப்புகளை கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் உணர்ந்ததுபோலவே, நாமும்கூட ஒவ்வொருநாளும் உணருகிறோம்; அவர் எழுதினார்: “என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது.”—ரோமர் 7:23.
உவமையில் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய பாவ சுபாவத்தின் காரணமாக, நாம் ஒவ்வொருவரும் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்; ஏனென்றால் பைபிள் குறிப்பிடுகிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) சங்கீதக்காரனாகிய மோசே நம் நிலைமையை மிகவும் நன்றாக விவரித்தார்: “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதன் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.”—சங்கீதம் 90:10; யாக்கோபு 4:14-ஐ ஒப்பிடுக.
“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறியபோது, மனிதர் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டிருக்கும் இந்த நிலைமைதான் அவருடைய மனதில் இருந்தது. (யோவான் 8:32) அந்த வார்த்தைகளின் வாயிலாக தம்மை பின்பற்றினோருக்கு இயேசு ஒரு மேம்பட்ட நம்பிக்கையை, ரோம ஆட்சிப்பிடியிலிருந்து கிடைக்கும் சுதந்திரத்தைக் காட்டிலும் உயர்வான ஒரு நம்பிக்கையை அளித்துக்கொண்டிருந்தார்; அதாவது பாவத்திலிருந்து மன்னிப்பையும், மரணத்திலிருந்து விடுதலையையும் அவர்களுக்கு முன்வைத்தார்! அது அவர்களுக்கு எப்படி வழங்கப்படும்? அவர்களிடத்தில் இயேசு கூறியதாவது: “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” (யோவான் 8:36) ஆம், ஆதாம் இழந்ததை மறுபடியும் மீட்டுத்தருவதற்காக வேண்டி “குமாரன்” இயேசு தம்முடைய உயிரையே அளிப்பதன் மூலம், ஒரு கிருபாதாரபலியாக சேவித்தார். (1 யோவான் 4:10) இது பாவம் மற்றும் மரணம் என்னும் அடிமை விலங்கை உடைத்தெறிந்து, கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதர்களுக்கும் விடுதலை என்னும் வாசலை திறந்து வைக்கிறது. அவரை “விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” கடவுளுடைய ஒரேபேறான குமாரன் இறந்தார்.—யோவான் 3:16.
ஆகவே, நம்மை விடுதலையாக்கும் சத்தியமானது இயேசு கிறிஸ்துவை சுற்றியே அமைந்துள்ளது. கடவுளுடைய ராஜ்யம் பூமியின் விவகாரங்களையெல்லாம் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்போது, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோராக ஆகும் ஆட்களுக்கு இருக்கிறது. ஏன் இப்போதேகூட, கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை ஏற்றுக்கொள்வோர், உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். எந்தெந்த விதங்களில்?
இறந்துபோனவர்கள் பற்றிய பயத்திலிருந்து விடுதலை
இன்று, கோடிக்கணக்கானோர் இறந்துபோனவர்களை நினைத்து பயத்தோடு வாழ்கிறார்கள். ஏன்? ஏனென்றால் இறக்கும்போது, உடலைவிட்டு ஆத்துமா வெளியேறி, ஒரு ஆவி உலகத்திற்கு சென்றுவிடுவதாக அவர்களுடைய மதங்கள் கற்பிக்கின்றன. இதன் காரணமாகத்தான், சில நாடுகளில் இறந்துபோனவரின் உறவினர்கள் பல நாட்களுக்கு இரவும் பகலும் சடங்குகளைச் செய்கிறார்கள். பெரும்பாலும் இந்தச் சடங்கில் சத்தமாகப் பாட்டு பாடுவதும், மேளங்களைக் கொட்டுவதும் உட்பட்டிருக்கும். இந்தச் சடங்கு இறந்துபோனவரை சாந்தியடையச்செய்கின்றன என்றும், அவருடைய ஆவி வந்து உயிரோடிருப்பவர்களைப் பிடித்துக்கொள்வதிலிருந்து தடைசெய்கின்றன என்றும் துக்கித்துக்கொண்டிருக்கும் ஆட்கள் நம்புகிறார்கள். இறந்தவர்களைப் பற்றிய கிறிஸ்தவமண்டலத்தின் பொய் போதனைகள் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலைத்திருக்கவே உதவின.
இருப்பினும், பைபிள் இறந்தோரின் நிலைமையைப் பற்றிய சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஆத்துமா என்பது நீங்களே; மரணத்திற்குப் பின்பும் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களின் ஒரு மர்மமான பாகம் அல்ல என்று மிகத் தெளிவாக பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 2:7; எசேக்கியேல் 18:4) மேலுமாக, இறந்துபோனவர்கள் எரிநரகத்தில் வதைக்கப்படுவதில்லை அல்லது உயிரோடிருப்பவர்களை பாதிக்கும்வகையில் ஒரு ஆவியுலகத்தின் பாகமாகவும் அவர்கள் இல்லை. பைபிள் சொல்வதாவது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் . . . நீ போகிற பாதாளத்திலே [கல்லறையில்] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 10.
இறந்துபோனவர்கள் பற்றிய பயத்திலிருந்து அநேக மக்களை பைபிள் சத்தியங்கள் விடுதலையாக்கி உள்ளன. அவர்கள் தங்களுடைய மூதாதையர் சாந்தியடையவேண்டும் என்று இனிமேலும் அதிக செலவு பிடித்த படையல்களை படைப்பது கிடையாது. செய்த பாவங்களுக்காக வேண்டி தங்களுடைய அன்பானவர்கள் இரக்கமின்றி வதைக்கப்படுகிறார்கள் என்ற கவலையும் அவர்களுக்குக் கிடையாது. இறந்துபோனவர்களுக்காக பைபிள் ஒரு அற்புதமான நம்பிக்கையை அளிக்கிறது என்பதை அவர்கள் கற்றிருக்கிறார்கள். ஏனென்றால் கடவுளுடைய நியமிக்கப்பட்ட காலத்தில் ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோருக்கு உயிர்த்தெழுதல்’ இருக்கிறது என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. (அப்போஸ்தலர் 24:15; யோவான் 5:28, 29) இவ்வாறாக, ஒரு ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதைப்போன்று இறந்துபோனவர்கள் இப்போது சும்மா ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.—யோவான் 11:11-14-ஐ ஒப்பிடுக.
இறந்துபோனவர்களின் நிலைமையைப் பற்றிய சத்தியம் மற்றும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஆகிய இவை, மரணம் ஏற்படும்போது வரும் நம்பிக்கையற்ற ஒரு எண்ணத்திலிருந்து நம்மை விடுவிக்கலாம். ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய நான்கு வயது மகனை விபத்தில் இழந்தபோது, இதோ இந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. “எங்களுடைய மகனை நாங்கள் உயிர்த்தெழுதலின்போது மறுபடியும் பார்க்கும்வரை எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தச் சூனியமான நிலைமை மாறவே மாறாது. ஆனால், எங்களுடைய வேதனை தற்காலிகமானது என்றும் எங்களுக்குத் தெரியும், ஏனென்றால் நம்முடைய கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவதாக யெகோவா வாக்குக்கொடுக்கிறார்” என்று அவனுடைய தாய் கூறினார்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
எதிர்காலம் பற்றிய பயத்திலிருந்து விடுதலை
எதிர்காலம் எதைக் கொண்டுள்ளது? அணு ஆற்றல் அழிவினால் நம் பூமி எரிந்து சாம்பலாகிவிடுமா? பூமியின் சுற்றுச்சூழலின் நாசம் நம்மை இந்தக் கோளத்தில் வாழ முடியாதபடி செய்துவிடுமா? ஒழுக்கச் சீர்கேடு அராஜகத்திற்கும் பெரும் குழப்பத்திற்கும் வழிநடத்துமா? இவைதான் இன்றைக்கு அநேகருக்கு உண்மையிலேயே பயம் தருபவை.
இருப்பினும், அத்தகைய மிதமிஞ்சிய பயங்களிலிருந்தும்கூட விடுதலையை பைபிள் அளிக்கிறது. அது நமக்கு உறுதியளிக்கிறதாவது: “பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.” (பிரசங்கி 1:4) நமது கோளத்தை பொறுப்பற்ற மனிதர்கள் நாசம் செய்வதை சும்மா பார்த்துக்கொண்டிருப்பதற்காக ஒன்றும் யெகோவா அதைப் படைக்கவில்லை. (ஏசாயா 45:18) அதற்கு மாறாக, ஒன்றுபட்ட மனித குடும்பத்திற்கு இந்தப் பூமி ஒரு பரதீஸான வீடாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் யெகோவா அதைப் படைத்தார். (ஆதியாகமம் 1:27, 28) அவரது நோக்கம் இன்னமும் மாறவில்லை. கடவுள் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என்று பைபிள் நம்மிடம் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) அதற்குப்பின் “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என பைபிள் கூறுகிறது.—சங்கீதம் 37:11.
இந்த வாக்குறுதி நம்பகமானது, ஏனென்றால் கடவுள் பொய் சொல்வதில்லை. தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் யெகோவா குறிப்பிட்டதாவது: “என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் . . . வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:11; தீத்து 1:3) ஆகவே, பைபிளில் 2 பேதுரு 3:13-ல் பதிவுசெய்துள்ளபடி: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” என்ற கடவுளின் வாக்குறுதியின் நிறைவேற்றத்தை நாம் நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்.
மனிதரைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலை
கடவுள் பக்தியை வெளிக்காட்டுவதில் பயப்படாதிருந்த ஆண்களின் மற்றும் பெண்களின் தலைசிறந்த முன்மாதிரிகளை பைபிள் முன்வைக்கிறது. அவர்களில் சிலரை குறிப்பிடவேண்டுமென்றால்—கிதியோன், பாராக், தெபோராள், தானியேல், எஸ்தர், எரேமியா, அபிகாயில் மற்றும் யாகேல். பின்வருமாறு சங்கீதக்காரன் எழுதிய “தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்” என்ற ஒரு மனநிலையைத்தான் விசுவாசமுள்ள இந்த ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்தினார்கள்.—சங்கீதம் 56:11.
இதேபோன்ற தைரியத்தை, முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலனாகிய பேதுருவும் யோவானும் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி மதத்தலைவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டபோது காட்டினார்கள். “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே” என்று அவர்கள் பதிலளித்தார்கள். பேதுருவும் யோவானும் உறுதியாக நிலைநின்றதற்காக, பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் அற்புதகரமாக சிறையிலிருந்து விடுதலையானவுடன், மறுபடியும் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள், தொடர்ந்து “தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.” விரைவிலேயே பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் யூத ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டார்கள். ‘நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பிவிட்டீர்களே’ என்று பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி சொன்னார். அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது’ என்று பதிலளித்தார்கள்.—அப்போஸ்தலர் 4:16, 17, 19, 20, 31; 5:18-20, 27-29.
இன்று யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் வைராக்கியத்தைப் பின்பற்ற கடுமையாக முயற்சிக்கிறார்கள். இளைஞர்களும் தங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களிடம் பேசும்போது தங்களுடைய தைரியத்தை அடிக்கடி நிரூபித்திருக்கிறார்கள். சில உதாரணங்களை சிந்திப்போம்.
டெஸி இயல்பாகவே கூச்ச சுபாவம் உள்ள ஒரு இளம் பெண். எனவே, தன்னுடைய விசுவாசத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வது அவளுக்கு முதலில் ஒரு சவாலாகவே இருந்தது. தன்னுடைய கூச்ச சுபாவத்தை மேற்கொள்ள அவள் என்ன செய்தாள்? “நான் பைபிளை படித்தேன்; நான் பேசிய விஷயத்தை நன்றாகப் புரிந்துகொண்டேனா என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டேன். இது விஷயத்தை சுலபமாக்கியது, என்மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது,” என்று அவள் கூறுகிறாள். டெஸியின் நற்புகழ் உள்ளூர் செய்தித்தாளில் வெளிவந்தது. அந்தக் கட்டுரை அவளுடைய பள்ளி ஆசிரியை எழுதியது. இவ்வாறு புகழ்ந்தார்: “பல பருவ வயதினர் உணரும் சகாக்களின் அழுத்தத்தை எதிர்த்து போராட [டெஸியின்] விசுவாசமே அவளுக்கு உதவியதாகத் தெரிகிறது . . . கடவுளுடைய சேவைதான் தன் மனதில் அதிமுக்கியமாக இடம்பெற வேண்டும் என்று அவள் நினைக்கிறாள்.”
டாமி, ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போதே, அவனுடைய பெற்றோர்களிடமிருந்து பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ள துவங்கினான். அந்தச் சிறுவயதிலேயே, உண்மை வழிபாட்டிற்காக தைரியமாக நிலைநிற்கையை எடுத்தான். அவனுடைய சின்னஞ்சிறு வகுப்பு தோழர்கள் பண்டிகை நாட்களை சித்தரிக்கும் படங்களை வரைந்தபோது, டாமியோ கடவுள் வாக்களித்திருக்கும் பரதீஸின் காட்சிகளை படமாக வரைந்தான். அவன் பெரியவனாக வளர்ந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றி பல மாணாக்கர்கள் குழம்பிப்போய் இருப்பதைக் கவனித்தான். அவன் பயந்துபோய் சும்மா இருந்துவிடுவதற்கு பதிலாக, ஒரு ஆசிரியரை அணுகி, வகுப்பில் கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்றை தான் நடத்தலாமா என்றும், அப்போது அனைவருடைய கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் பதிலளிக்க முடியும் என்றும் அனுமதி கேட்டுக்கொண்டான். அனுமதி அளிக்கப்பட்டது; அது ஒரு அருமையான சாட்சிகொடுப்பதில் விளைவடைந்தது.
மார்கீட்டாவுக்கு 17 வயதிருக்கையில், தன்னுடைய விசுவாசத்தைப்பற்றி வகுப்பில் பேசுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. அவள் இவ்வாறு கூறுகிறாள்: “ஒரு பேச்சை தயாரிப்பதற்கான நியமிப்பு எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. நான் தலைப்புகளை இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்a என்ற புத்தகத்திலிருந்து தெரிவுசெய்தேன். நான் ஐந்து தலைப்புகளைப் புத்தகத்திலிருந்து எடுத்து, கரும் பலகையில் எழுதினேன். வகுப்பில் உள்ளவர்களை நோக்கி எது அதிமுக்கியம் என அவர்கள் நினைக்கிறார்களோ, அதன்படி அவற்றை வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டேன்.” அதனையடுத்து வகுப்பினர் பங்குகொண்ட ஒரு கலந்தாலோசிப்பு ஆரம்பமானது. “நான் வகுப்பினருக்கு புத்தகத்தைக் காட்டினேன். தங்களுக்கு ஒரு பிரதி வேண்டும் என பல மாணாக்கர்கள் கேட்டார்கள். என்னுடைய ஆசிரியை தனக்கும் ஒரு பிரதி வேண்டும் என்று கேட்டார்” என சொல்லி முடிக்கிறார் மார்கீட்டா.
சத்தியத்தால் நீங்களும் விடுதலையடையலாம்
நாம் பார்த்தவிதமாகவே, பைபிளை படித்து, அதன் சங்கதியை மனதில் பதியவைக்கும் எல்லா வயதினர்மீதும் பைபிளில் அடங்கியிருக்கும் சத்தியம் விடுதலையின் பயனை தருகிறது. அது அவர்களை இறந்துபோனவர்களைப் பற்றிய பயத்திலிருந்தும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலிருந்தும் மனிதரைப் பற்றிய பயத்திலிருந்தும் விடுதலையாக்குகிறது. கடைசியாக, இயேசுவின் மீட்கும்பலி கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாக்கும். வழிவழியாக வந்துகொண்டிருக்கும் பாவம் என்னும் நிலைமையில் இனிமேலும் சிறைப்படாமல், பரதீஸான பூமியில் நித்திய காலமும் வாழ்வது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!—சங்கீதம் 37:29.
கடவுள் வாக்களித்திருக்கும் ஆசீர்வாதங்களைப்பற்றி நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இயேசு கூறினார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) ஆகவே, இயேசு தம்முடைய சீஷர்களுக்கு வாக்குக்கொடுத்த சுதந்திரத்தை அனுபவிக்க நீங்கள் விரும்பினால், யெகோவா தேவனைப் பற்றியும் அவருடைய குமாரனைப் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுளுடைய சித்தம் என்ன என்பதை அறிந்து அதன்படி நீங்கள் செய்யவேண்டும், ஏனென்றால் பைபிள் சொல்கிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படிசெய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தில், ஒருவழியாக மனிதவர்க்கம் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாக்கப்படும்