கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுதல்
“என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.”—1 கொரிந்தியர் 9:16.
1, 2. (அ) என்ன இரு அம்சங்களையுடைய வேலையில் பங்குகொள்ளும்படி யெகோவா நம்மை தேவைப்படுத்துகிறார்? (ஆ) கடவுளுடைய ராஜ்ய பிரஜைகளாக ஆவதற்கு நேர்மை இருதயமுள்ள ஆட்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
யெகோவா மனிதவர்க்கத்திற்காக நற்செய்தியை வைத்திருக்கிறார். அவர் ஒரு ராஜ்யத்தை ஏற்பாடு செய்திருக்கிறார், அதைப் பற்றி எங்குமுள்ள மக்கள் கேள்விப்படும்படி விரும்புகிறார்! நாம் ஒருமுறை இந்த நற்செய்தியைக் கற்றுக்கொண்டதும், அதை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி கடவுள் தேவைப்படுத்துகிறார். இது இரு அம்சங்களையுடைய ஒரு வேலை. முதலாவது, நாம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இயேசு, ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்’ பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில் இவ்வாறு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:3, (NW) 14.
2 இந்த வேலையின் இரண்டாவது அம்சம் ராஜ்ய அறிவிப்புக்கு சாதகமாக பிரதிபலிப்பவர்களுக்கு போதிப்பதை உட்படுத்துகிறது. இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, ஒரு பெருந்தொகுதியாய் இருந்த தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:19, 20) ‘கிறிஸ்து கட்டளையிட்டவை’ அவரிடமிருந்து வரவில்லை; கடவுளுடைய கட்டளைகளை, அல்லது கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களைக் கைக்கொள்ளும்படி அவர் மற்றவர்களுக்குப் போதித்தார். (யோவான் 14:23, 24; 15:10) எனவே, ‘கிறிஸ்து கட்டளையிட்டவற்றை கைக்கொள்ளும்படி’ மற்றவர்களுக்குப் போதிப்பது, கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்வதை உட்படுத்துகிறது. நேர்மை இருதயமுள்ள ஆட்கள் கடவுளுடைய ராஜ்ய பிரஜைகளாக ஆவதற்கு கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
3. கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? ராஜ்ய செய்தியை நற்செய்தி என்று சொல்லுமளவுக்கு அது எதை சாதிக்கும்?
3 கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? ராஜ்ய செய்தியை நற்செய்தி என்று சொல்லுமளவுக்கு அது எதை சாதிக்கும்? கடவுளுடைய ராஜ்யம் என்பது ஒரு பரலோக அரசாங்கம். அது யெகோவாவின் இருதயத்திற்கு மிகவும் அருமையாய் இருக்கிறது. ஏனெனில் அந்தக் கருவியின் மூலமே அவர் தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தி, அனைத்து நிந்தையையும் நீக்கப்போகிறார். அவருடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதற்கு யெகோவா பயன்படுத்தும் கருவிதான் அந்த ராஜ்யம். அதன் காரணமாகவே கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக ஜெபம் செய்யும்படி போதித்து, அதை நம்முடைய வாழ்க்கையில் முதலாவதாக வைக்கும்படி இயேசு நம்மை உந்துவித்தார். (மத். 6:9, 10, 33) அவருடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்கு போதிப்பது யெகோவாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?
ஒரு சவால் ஆனால் பாரமான ஒன்றல்ல
4. நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய நம்முடைய கடமை பாரமான ஒன்றல்ல என்பதை எவ்வாறு உதாரணத்துடன் விளக்கலாம்?
4 இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்பது பாரமான ஒன்றா? நிச்சயமாகவே இல்லை! அதை நாம் இவ்வாறு விளக்கலாம்: பொருள் சம்பந்தமாக தன்னுடைய குடும்பத்திற்கு கொடுக்கவேண்டிய கடமை ஒரு தகப்பனுக்கு இருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுவது கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிப்பதற்கு சமம். அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) ஆனால் ஒரு கிறிஸ்தவருக்கு அந்தக் கடமை பாரமான ஒன்றா? அவர் தன்னுடைய குடும்பத்தினரை நேசிக்கிறார் என்றால் பாரமானதாக இருக்காது, ஏனென்றால் இந்த விஷயத்தில் அவர்களுக்காக கொடுப்பதற்கு அவர் விரும்புகிறார்.
5. பிரசங்கிக்கும் வேலையும் சீஷராக்கும் வேலையும் ஒரு கடமையாக இருக்கிறபோதிலும், அதில் பங்குகொள்வதில் நாம் ஏன் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
5 அதைப்போலவே, பிரசங்க வேலையும் சீஷராக்கும் வேலையும் ஒரு கடமை, ஒரு தேவை, நம்முடைய ஜீவன் தானேயும் அதன்மீது சார்ந்திருக்கிறது. பவுல் அதை இவ்வாறு சொன்னார்: “அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ”! (1 கொரிந்தியர் 9:16; ஒப்பிடுக: எசேக்கியேல் 33:7-9.) என்றபோதிலும், பிரசங்கிப்பதற்கான நம்முடைய உள்நோக்கம் அன்பே, வெறும் கடமையுணர்வு அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கடவுளை நேசிக்கிறோம், ஆனால் நம்முடைய அயலகத்தாரையும் நேசிக்கிறோம், நற்செய்தியை அவர்கள் கேள்விப்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (மத்தேயு 22:37-39) அது எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறது. கடவுளுடைய ராஜ்யம் வெகுசீக்கிரத்தில் அநீதிகளை சரிசெய்யும், எல்லா ஒடுக்குதலையும் நீக்கும், மேலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் திரும்பவும் நிலைநாட்டும்—இவையனைத்தும் அதன் நீதியான ஆட்சிக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் நித்திய ஆசீர்வாதத்தை வழங்குவதற்கேயாகும். மற்றவர்களுடன் இத்தகைய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கு நாம் சந்தோஷப்படவில்லையா, ஆம் கிளர்ச்சியடையவில்லையா?—சங்கீதம் 110:3.
6. பிரசங்க வேலையும் சீஷராக்கும் வேலையும் ஏன் உண்மையிலேயே ஒரு சவாலை அளிக்கிறது?
6 அதே சமயத்தில், பிரசங்க வேலையும் சீஷராக்கும் வேலையும் உண்மையிலேயே ஒரு சவாலை அளிக்கிறது. மக்கள் வித்தியாசப்படுகிறார்கள். எல்லாருக்கும் ஒரே விருப்பங்களோ திறமைகளோ இல்லை. சிலர் நன்கு கல்விகற்றவர்களாக இருக்கிறார்கள், அதே சமயத்தில் மற்றவர்கள் மிகவும் குறைந்தளவான கல்வியையே பெற்றிருக்கிறார்கள். வாசிப்பது—ஒருகாலத்தில் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது—இப்பொழுது அது பெரும்பாலும் ஒரு கடினமான வேலையாக இருக்கிறது. வாசிப்பார்வமின்மை (Aliteracy) என்பது இவ்வாறு வரையறுக்கப்படுகிறது: “வாசிக்க முடிந்தும் அவ்விதம் செய்வதில் அக்கறையற்றவராய் இருக்கும் ஒரு தன்மை அல்லது நிலை.” கல்விகற்றோர் அதிகமிருப்பதாக பெருமையடித்துக்கொள்ளும் நாடுகளிலும்கூட இது வளர்ந்துவரும் பிரச்சினையாய் உள்ளது. அப்படியானால், கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களைக் கற்றுக்கொள்வதற்கு இப்படிப்பட்ட வித்தியாசமான பின்னணிகளையும் விருப்பங்களையும் கொண்ட மக்களுக்கு நாம் எவ்வாறு உதவி செய்யமுடியும்?—ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 9:20-23.
மற்றவர்களுக்கு உதவ தகுந்த விதத்தில் ஆயத்தமாயிருத்தல்
7. கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களை மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவிசெய்வதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” எவ்வாறு நம்மை ஆயத்தப்படுத்தியிருக்கிறது?
7 உங்களிடம் தகுந்த கருவிகளோ சாதனங்களோ இருந்தால், சவாலளிக்கும் ஒரு வேலையானது செய்வதற்கு சுலபமானதாகிறது. குறிப்பிட்ட ஒரு வேலைக்கு இன்று பொருத்தமாய் இருக்கும் ஒரு கருவி, மாறிக்கொண்டே வரும் தேவைகளின் காரணமாக நாளை மாற்றியமைக்கப்படலாம் அல்லது அதன் இடத்தில் வேறொன்று வரலாம். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் நம்முடைய வேலையும் அது போலவே இருக்கிறது. பல வருடங்களாக, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” சரியான கருவிகளை, வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதில் பயன்படுத்துவதற்காக விசேஷமாய் வடிவமைக்கப்பட்டுள்ள பிரசுரங்களை நமக்கு கொடுத்திருக்கிறது. (மத்தேயு 24:45, NW) இவ்விதமாய், கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களைக் கற்றுக்கொள்வதற்கு ‘சகல கோத்திரத்தாரிலும் . . . பாஷைக்காரரிலுமிருந்து’ வந்த மக்களுக்கு உதவிசெய்ய நாம் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 7:9) அவ்வப்பொழுது, உலக களத்திலுள்ள மாறிவரும் தேவைகளைத் திருப்திப்படுத்துவதற்கு கூடுதலான கருவிகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒருசில உதாரணங்களை நாம் சிந்திக்கலாம்.
8. (அ) பைபிள் கல்வியை முன்னேற்றுவிப்பதில் “கடவுள் சத்தியபரராக விளங்கட்டும்” என்ற புத்தகம் என்ன பாகத்தை வகித்தது? (ஆ) 1968-ல் பைபிள் படிப்பு வேலைக்கு என்ன கருவி கொடுக்கப்பட்டது, அது எவ்வாறு விசேஷமாக வடிவமைக்கப்பட்டது? (இ) சீஷராக்கும் வேலையில் சத்தியம் புத்தகம் எவ்வாறு உதவியது?
8 1946 முதல் 1968 வரை, “கடவுள் சத்தியபரராக விளங்கட்டும்” (Let God Be True) என்ற புத்தகம் பைபிள் கல்விக்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது; இது 54 மொழிகளில் 1,92,46,710 பிரதிகள் பிரசுரிக்கப்பட்டது. 1968-ல் வெளியிடப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் என்ற புத்தகம், அக்கறை காட்டுகிறவர்களுடன் பைபிளைப் படிப்பதில் அநேக ஆண்டுகளாக திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு, முழுக்காட்டப்படாமலே வருடக்கணக்காக யெகோவாவின் சாட்சிகளுடன் சிலர் படிப்பது அசாதாரணமானதாய் இருக்கவில்லை. ஆனால் இந்தக் கருவியானது மாணாக்கரையும் உட்படுத்தி, அவர் என்ன கற்றுக்கொண்டிருந்தாரோ அதைப் பொருத்திப் பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவு? யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்லுகிறது: “செப்டம்பர் 1, 1968-ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 31, 1971-ல் முடிவடைந்த மூன்று ஊழிய ஆண்டுகளில், மொத்தம் 4,34,906 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்—முந்திய மூன்று ஊழிய ஆண்டுகளில் முழுக்காட்டப்பட்டவர்களுடைய எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் மேல்!” அது வெளியிடப்பட்டது முதற்கொண்டு, சத்தியம் புத்தகம் வியக்கத்தக்க எண்ணிக்கையை—117 மொழிகளில் 10,70,00,000-க்கும் மேலான எண்ணிக்கையை—எட்டியிருக்கிறது.
9. என்ன விசேஷித்த அம்சத்தை என்றும் வாழலாம் புத்தகம் கொண்டிருக்கிறது, ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
9 1982-ல், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் பைபிள் படிப்புகளை நடத்துவதில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரதான புத்தகமாக ஆனது. இந்தக் கருவியில் 150-க்கும் மேலான விளக்கப்படங்கள் உள்ளன; ஒவ்வொன்றும் படங்களின் போதனா குறிப்பை சுருக்கமாக சிறப்பித்துக் காட்டுகிற அர்த்தமுள்ள படவிளக்கங்களுடன் (captions) கொடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 1982 நம் ராஜ்ய ஊழியம் இவ்வாறு குறிப்பிட்டது: ‘கடவுள் சத்தியபரராக விளங்கட்டும்’ என்ற புத்தகம் சுமார் 20 வருடங்களாக நம்முடைய பிரதான படிப்பு புத்தகமாய் (1946 முதற்கொண்டு 1960-களின் மத்திபம் வரை) திகழ்ந்தது; 10,00,000-க்கும் மேலான புதிய ராஜ்ய பிரஸ்தாபிகள் நம்முடைய அமைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் புத்தகம் 1968-ல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் புத்தகம் நம்முடைய பிரதான படிப்பு புத்தகமாக ஆனபோது இன்னும் 10,00,000 பிரஸ்தாபிகள் சேர்க்கப்பட்டார்கள். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற நம்முடைய புதிய படிப்பு புத்தகத்தைப் பயன்படுத்தியதால், ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் இதுபோன்ற அதிகரிப்பை நாம் காண்போமா? அது கடவுளுடைய சித்தமாய் இருந்தால், நிச்சயமாகவே காண்போம்!” அது யெகோவாவின் சித்தமாய் இருந்தது என்பது தெளிவாய் இருக்கிறது, ஏனென்றால் 1982 முதல் 1995 வரையாக, ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையில் 27,00,000-க்கும் மேலானோர் சேர்க்கப்பட்டார்கள்!
10. 1995-ல் வழங்கப்பட்ட புதிய கருவி என்ன, பைபிள் மாணாக்கர்கள் ஓரளவு வேகமாக ஆவிக்குரிய முன்னேற்றமடைவதற்கு அது ஏன் உதவி செய்ய வேண்டும்?
10 “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 9:37) நிச்சயமாகவே, அறுப்பு மிகுதி. இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும். சில நாடுகளில், பைபிள் படிப்புகளுக்காக மக்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஆகவே, கடவுளுடைய அறிவை அதிசீக்கிரமாய் பரப்பும் நோக்கோடு, 1995-ல் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஒரு புதிய கருவியை, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்று தலைப்பிடப்பட்ட 192-பக்க புத்தகத்தை வழங்கியது. மதிப்புமிக்க இந்தப் புத்தகம் பொய்க் கோட்பாடுகளின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதில்லை. பைபிள் சத்தியங்களை நேர்மறையான முறையில் அளிக்கிறது. பைபிள் மாணாக்கர்கள் ஓரளவு வேகமாக ஆவிக்குரிய முன்னேற்றமடைவதற்கு இது உதவிசெய்யும் என நம்பப்படுகிறது. உலக களத்தில் அறிவு புத்தகம் ஏற்கெனவே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; 125 மொழிகளில் 4,55,00,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன, கூடுதலாக 21 மொழிகளில் மொழிபெயர்க்கும் வேலையும் நடைபெற்று வருகிறது.
11. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அல்லது நன்றாக வாசிக்கத் தெரியாதவர்களுக்கு உதவிசெய்ய கொடுக்கப்பட்ட திறம்பட்ட கருவி எது, நம்முடைய பூகோள போதனா திட்டத்தில் அது எவ்வாறு ஓர் அழியா முத்திரையைப் பதித்திருக்கிறது?
11 அவ்வப்பொழுது ‘உண்மையுள்ள அடிமை’ ஒரு குறிப்பிட்ட அல்லது மட்டுப்பட்ட எண்ணிக்கையில் உள்ள மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொடுத்திருக்கிறது. உதாரணமாக, தங்களுடைய பண்பாட்டு அல்லது மதப் பின்னணிகளின் காரணமாக விசேஷ உதவி தேவைப்படும் மக்களைப் பற்றியென்ன? கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களைக் கற்றுக்கொள்வதற்கு நாம் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம்? நமக்கு தேவையாய் இருந்தது எதுவோ அதையே நாம் 1982-ல் பெற்றோம்—பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற 32-பக்க சிற்றேடு. தாராளமாக விளக்கப்படங்களைக் கொண்ட இந்தப் பிரசுரம், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அல்லது நன்றாக வாசிக்கத் தெரியாதவர்களுக்கு போதிப்பதில் திறம்பட்ட ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் வேதப்பூர்வமான அடிப்படை போதனைகள் மிகவும் எளிமையான, எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வகையில் அளிக்கப்பட்டுள்ளன. அது வெளியிடப்பட்டது முதற்கொண்டு, பூமியில் வாழ்க்கை என்ற அந்தச் சிற்றேடு, நம்முடைய பூகோள போதனா திட்டத்தில் ஓர் அழியா முத்திரையைப் பதித்திருக்கிறது. 239 மொழிகளில் 10,51,00,000-க்கும் மேலான பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. உவாட்ச் டவர் சொஸைட்டி இதுவரை தயாரித்த பிரசுரங்களிலேயே அதிக பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட பிரசுரமாக அதை ஆக்குகிறது!
12, 13. (அ) 1990 முதற்கொண்டு, ‘உண்மையுள்ள அடிமை’ பரவலாக மக்களை சென்றெட்டுவதற்கு என்ன ஒரு புது முறையை நமக்கு வழங்கியிருக்கிறது? (ஆ) நம்முடைய வெளி ஊழியத்தில் சொஸைட்டியின் விடியோக்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்? (இ) சீஷராக்கும் நம்முடைய வேலையில் உதவிசெய்வதற்கு என்ன புதிய கருவி சமீபத்தில் கொடுக்கப்பட்டது?
12 அச்சிடப்பட்ட பிரசுரங்களைத் தவிர, 1990 முதற்கொண்டு ‘உண்மையுள்ள அடிமை’ பரவலாக மக்களை சென்றெட்டுவதற்கு புது முறையில் போதனா அளிக்கும் கருவியை நமக்கு வழங்கியிருக்கிறது. அதுதான் விடியோகேஸட்டுகள். அந்த வருட அக்டோபர் மாதத்தில், யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்கு பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்) என்ற 55-நிமிட விடியோ வெளியிடப்பட்டது—உவாட்ச் டவர் சொஸைட்டி தயாரித்த முதல் விடியோ. அழகிய, தகவல் நிறைந்த அந்த விடியோ, 35 மொழிகளில் கிடைக்கிறது; அது, பூமி முழுவதற்கும் நற்செய்தியை அறிவிக்கும்படி கொடுக்கப்பட்ட இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுகிற யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட மக்களின் உலகளாவிய அமைப்பை காண்பிக்கிறது. சீஷராக்கும் நம்முடைய வேலையில் உதவுவதற்கு அந்த விடியோ விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளி ஊழியத்தில் இந்தப் புதுக் கருவியை பயன்படுத்துவதில் ராஜ்ய பிரஸ்தாபிகள் சற்றும் தாமதிக்கவில்லை. அக்கறைகாட்டுபவர்களுக்கு உடனடியாக அதைக் காண்பிப்பதற்கு அல்லது அதைக் கொடுப்பதற்கு, சிலர் அதைத் தங்களுடைய புத்தக பையில் எடுத்துச் சென்றார்கள். அது வெளியிடப்பட்ட சிறிது காலத்திலேயே, பயணக் கண்காணி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “விடியோக்கள் லட்சக்கணக்கான ஆட்களுடைய மனதையும் இருதயத்தையும் சென்றெட்டுவதற்கான 21-ம் நூற்றாண்டு கருவியாக ஆகியிருக்கின்றன, உலகளாவிய ராஜ்ய வேலையை முன்னேற்றுவிப்பதற்கு சொஸைட்டி பயன்படுத்தப் போகும் விடியோக்களின் நீண்ட அணிவகுப்பில் இது முதலாவதாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை.” மூன்று பாக தொடர் விடியோவாகிய பைபிள்—உண்மையும் தீர்க்கதரிசனமும் நிறைந்த ஒரு புத்தகம் மற்றும் நாஸி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கிறார்கள் (ஆங்கிலம்) போன்ற விடியோக்கள் உட்பட, உண்மையில் அநேக விடியோக்கள் வழங்கப்பட்டுள்ளன. சொஸைட்டியின் விடியோக்கள் உங்களுடைய மொழியில் கிடைக்கின்றனவெனில், உங்களுடைய வெளி ஊழியத்தில் அவற்றை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா?a
13 சீஷராக்கும் நம்முடைய வேலையில் உதவிசெய்வதற்கு சமீபத்தில் ஒரு புதிய கருவியாகிய கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஏன் பிரசுரிக்கப்பட்டது? அதை எவ்வாறு பயன்படுத்தலாம்?
புதிய கருவியை ஆராய்தல்
14, 15. தேவைப்படுத்துகிறார் என்ற சிற்றேடு யாருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதில் என்ன அடங்கியுள்ளது?
14 கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற அந்தப் புதிய பிரசுரம், ஏற்கெனவே கடவுள்மீது நம்பிக்கை வைத்து பைபிளை மதிக்கிற மக்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வளரும் நாடுகளிலுள்ள அநேக ஆண்டு அனுபவமிக்க பிரயாணக் கண்காணிகளும் கிலியட் பயிற்றுவிப்பு பெற்ற மிஷனரிகளும் இந்தச் சிற்றேட்டை தயாரிப்பதில் துணைபுரிந்தார்கள். பைபிளின் அடிப்படை போதனைகளை உள்ளடக்குகிற விரிவான படிப்பு திட்டம் அதில் அடங்கியுள்ளது. வார்த்தைகளால் விளக்கும் விதம் கனிவான முறையிலும் எளிமையாகவும் நேரிடையாகவும் இருக்கிறது. அதே சமயத்தில், விஷயங்கள் மிதமிஞ்சி எளிமையாக்கப்பட்டவை அல்ல. அது வெறும் “பாலை” அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் ‘பலமான ஆகாரத்தை,’ பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளத்தக்க முறையில் அளிக்கிறது.—எபிரெயர் 5:12-14.
15 பல்வேறு நாடுகளிலுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள் இதே போன்ற ஒரு பிரசுரத்தையே சமீப ஆண்டுகளில் கேட்டிருக்கிறார்கள். உதாரணமாக, பாப்புவா நியூ கினியிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகம் இவ்வாறு எழுதியது: “முரண்படுகிற மதப் போதனைகளால் மக்கள் குழப்பமடைகிறார்கள். தங்கள் சொந்த பைபிள்களில் எடுத்துப் பார்க்கத்தக்க அநேக பைபிள் வசனங்களால் ஆதரிக்கப்படும் சத்தியத்தின் சுருக்கமான கூற்றுகள் அவர்களுக்கு தேவை. மெய் கிறிஸ்தவர்களிடம் கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதைப் பற்றியும் எந்த சம்பிரதாயங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் அவருக்கு ஏற்றுக்கொள்ளத்தகாதவை என்பதைப் பற்றியும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் எடுத்துக்காட்டுகிற ஒரு பிரசுரம் அவர்களுக்குத் தேவை.” இப்படிப்பட்டவர்கள் கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களைக் கற்றுக்கொள்ள உதவிசெய்வதற்கு நமக்கு அவசியமானது தேவைப்படுத்துகிறார் என்ற அந்தச் சிற்றேடே.
16. (அ) புதிய சிற்றேட்டிலுள்ள எளிமையான விளக்கங்களிலிருந்து குறிப்பாக யார் பயனடையலாம்? (ஆ) தேவைப்படுத்துகிறார் என்ற சிற்றேட்டிலிருந்து உங்கள் பிராந்தியத்திலுள்ளவர்கள் எவ்வாறு பயனடையலாம்?
16 இந்தப் புதிய கருவியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்? முதலாவதாக, வாசிப்பதில் சிரமமுள்ள அல்லது வாசிக்க விருப்பமில்லாத ஆட்களுடன் படிப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம்.b இப்படிப்பட்ட ஆட்கள் இந்தச் சிற்றேட்டிலுள்ள எளிமையான விளக்கங்களிலிருந்து பிரயோஜனமடையலாம். முன்கூட்டி அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பிரசுரத்தின் ஒரு பிரதியை (advance copy) பார்த்த பிறகு, உவாட்ச் டவர் கிளை அலுவலகங்கள் இவ்வாறு எழுதின: “அதிகம் வாசிக்க விருப்பமில்லாத ஆட்கள் இருக்கும் தேசத்தின் பல்வேறு பாகங்களில் இந்தச் சிற்றேடு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.” (பிரேஸில்) “தாங்கள் குடியேறிய நாட்டின் மொழியில் வாசிக்க முடியாதவர்களும் பிரெஞ்சு மொழியில் வாசிப்பதில் இன்னும் சிரமமுள்ளவர்களும் அநேகர் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுடன் படிப்பதற்கு இந்தச் சிற்றேட்டை ஒரு உதவிப் புத்தகமாக பயன்படுத்தலாம்.” (பிரான்ஸ்) உங்கள் பிராந்தியத்தில், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து பயனடையக்கூடிய மக்களை நீங்கள் யோசித்துப் பார்க்க முடியுமா?
17. அநேக நாடுகளில் இந்தப் புதிய சிற்றேடு எந்த முறையில் பிரயோஜனமாய் இருக்கலாம், ஏன்?
17 இரண்டாவதாக, எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் கடவுள் பயமுள்ள மக்களுடன் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் பல்வேறு நாடுகளில் இந்தச் சிற்றேடு பயனுள்ளதாக இருக்கலாம். நிச்சயமாகவே, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் படிப்பை ஆரம்பிப்பதற்கு முயற்சியெடுக்க வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒரு சிற்றேட்டிலிருந்து ஒரு படிப்பை ஆரம்பிப்பது எளிதாக இருக்கலாம். பின்பு பொருத்தமான ஒரு சமயத்தில், நம்முடைய பிரதானமானதும் விரும்பப்படுகிறதுமான படிப்புக்கான உதவி புத்தகமாகிய அறிவு புத்தகத்திற்கு அந்தப் படிப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டின் இந்த உபயோகத்தைக் குறித்து உவாட்ச் டவர் கிளை அலுவலகங்கள் இவ்வாறு எழுதின: “பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பது கடினம், ஆனால் பிரஸ்தாபிகள் ஒரு சிற்றேட்டைக் கொண்டு ஆரம்பிக்கும்போது ஒரு படிப்பை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் நன்றாக இருப்பதுபோல் தெரிகின்றன.” (ஜெர்மனி) “இதுபோன்ற ஒரு சிற்றேடு புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் அதிக பலன்தரத்தக்கதாய் இருக்கும், பின்பு அறிவு புத்தகத்தை வைத்து அவற்றை தொடர்ந்து நடத்த முடியும்.” (இத்தாலி) “ஜப்பானியர்கள் நன்கு கல்விகற்றவர்களாக இருக்கிறபோதிலும், பெரும்பாலானோருக்கு பைபிளையும் அதன் அடிப்படை போதனைகளையும் பற்றிய மட்டுப்பட்ட அறிவே இருக்கிறது. அறிவு புத்தகத்திற்கு வழிநடத்தும் ஒரு சிறந்த படிக்கல்லாக இந்தச் சிற்றேடு இருக்க வேண்டும்.”—ஜப்பான்.
18. கடவுள் தேவைப்படுத்தும் தராதரங்களைப் பூர்த்திசெய்வதைப் பற்றி நாம் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும்?
18 உலகமுழுவதிலுமுள்ள சொஸைட்டியின் கிளை அலுவலகங்கள் இந்தச் சிற்றேட்டை கேட்டிருக்கின்றன, 221 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் தங்களிடம் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதை மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவிசெய்வதற்கு நமக்கு துணைபுரிவதில் இந்தச் சிற்றேடு மதிப்புமிக்கதாய் நிரூபிப்பதாக. நம்முடைய பங்கில், பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குவதற்கும் கொடுக்கப்பட்ட கட்டளை உட்பட, கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களைப் பூர்த்திசெய்வது, நாம் யெகோவாவை எவ்வளவாய் நேசிக்கிறோம் என்பதைக் காண்பிப்பதற்கு நமக்கு ஓர் அருமையான வாய்ப்பளிக்கிறது என்பதை நினைவில் வைத்திருப்போமாக. ஆம், கடவுள் நம்மிடம் தேவைப்படுத்துகிற காரியம் பாரமானதல்ல. வாழ்க்கைக்கு அதுவே மிகச் சிறந்த வழி!—சங்கீதம் 19:7-11.
உங்களால் விளக்க முடியுமா?
◻ என்ன இரு அம்சங்களையுடைய வேலையில் பங்குகொள்ளும்படி யெகோவா தம்முடைய ஊழியர்களைத் தேவைப்படுத்துகிறார்?
◻ பிரசங்கித்து சீஷராக்க வேண்டிய நம்முடைய கடமை ஏன் பாரமான ஒன்றல்ல?
◻ நம்முடைய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் பயன்படுத்துவதற்காக “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” என்ன கருவிகளைக் கொடுத்திருக்கிறது?
◻ தேவைப்படுத்துகிறார் என்ற சிற்றேடு யாருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, நம்முடைய ஊழியத்தில் நாம் அதை எவ்வாறு பயன்படுத்தலாம்?
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “விடியோகேஸட்டுகள் எவ்விதத்திலும் அச்சிடப்பட்ட பக்கத்தையோ அல்லது தனிப்பட்ட சாட்சிகொடுத்தலின் இடத்தையோ எடுத்துக்கொள்வதில்லை. சொஸைட்டியின் பிரசுரங்கள் நற்செய்தியைப் பரப்புவதில் தொடர்ந்து இன்றியமையா பாகத்தை வகிக்கின்றன. யெகோவாவின் சாட்சிகளுடைய வீட்டுக்கு வீடு வேலை, அவர்களுடைய ஊழியத்தின் உறுதியான ஆதாரம்கொண்ட வேதப்பூர்வமான அம்சமாக இருக்கிறது. இருப்பினும், யெகோவாவின் அருமையான வாக்குறுதிகளில் விசுவாசத்தை வளர்ப்பதற்கும் நம்முடைய நாளில் பூமியில் அவர் செய்திருக்கிற காரியங்களுக்காக போற்றுதலைத் தூண்டுவிப்பதற்கும் விடியோகேஸட்டுகள் இப்பொழுது அந்த மதிப்புமிக்க கருவிகளோடு சேர்ந்து துணைபுரிகின்றன.”
b தேவைப்படுத்துகிறார் புத்தகத்திலிருந்து எவ்வாறு ஒரு படிப்பை நடத்துவது என்பதைப் பற்றிய விளக்கத்திற்கு, பக்கங்கள் 16-17-ல் உள்ள “கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை மக்கள் கற்றுக்கொள்வதற்கு உதவ ஒரு புதிய கருவி” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 24-ன் படம்]
பிரசங்கிக்கும், சீஷராக்கும் நம்முடைய வேலை பாரமானதல்ல
[பக்கம் 26-ன் படங்கள்]
“கடவுள் சத்தியபரராக விளங்கட்டும்” (1946, திருத்தப்பட்டது 1952): 54 மொழிகளில் 1,92,50,000 பிரதிகள் (ஆங்கிலம் காட்டப்பட்டுள்ளது)
“நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம்” (1968): 117 மொழிகளில் 10,70,00,000 பிரதிகள் (பிரெஞ்சு காட்டப்பட்டுள்ளது)
“நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்” (1982): 130 மொழிகளில் 8,09,00,000 பிரதிகள் (ரஷ்யன் காட்டப்பட்டுள்ளது)
“நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு” (1995): 125 மொழிகளில் 4,55,00,000 பிரதிகள் (ஜெர்மன் காட்டப்பட்டுள்ளது)