உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 11/1 பக். 28-31
  • ஏன் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உண்மையான வணக்கத்தின் ஒரு முக்கிய பாகம்
  • நாம் ஏன் கொடுக்கிறோம்
  • கொடுக்கும் மனப்பான்மையைக் காட்டுவதிலிருந்து ஆசீர்வாதங்கள் உண்டாகின்றன
  • ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்குச் சிலர் எப்படி நன்கொடை கொடுக்கிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • ‘உன் விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவை கனம்பண்ணு’—எவ்வாறு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ‘நன்மையான எந்த ஈவையும்’ கொடுப்பவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • “பணம் எங்கேயிருந்து வருகிறது?”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 11/1 பக். 28-31

ஏன் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்?

சாறிபாத்திலிருந்த சிறு சீதோனிய ஊரின்மீது சூரியன் ஒளிவீசிக்கொண்டிருந்தபோது, ஒரு விதவை விறகு பொறுக்கும்படி குனிந்தாள். மிகச் சிறிதளவான சாப்பாட்டை—அவளும் அவளுடைய இளம் குமாரனும் சாப்பிட ஒருவேளை அதுவே கடைசி சாப்பாடாக இருக்கப்போவதை—சமைப்பதற்கு அவள் நெருப்புண்டாக்க வேண்டியிருந்தது. நீண்ட கால வறட்சி மற்றும் பஞ்சத்தினூடே உயிர்பிழைத்திருக்கும்படி தன்னையும் தன் மகனையும் காத்துக்கொள்வது அவளுக்குக் கடும் போராட்டமாக இருந்தது. இதெல்லாம் விசனகரமான இந்த முடிவுக்கு வந்திருந்தது. அவர்கள் பட்டினியாயிருந்தார்கள்.

ஒரு மனிதர் வந்தார். அவருடைய பெயர் எலியா, அவர் யெகோவாவின் ஒரு தீர்க்கதரிசியென்று அந்த விதவை சீக்கிரத்தில் கண்டுகொண்டாள். இந்தக் கடவுளைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. பாகாலுக்கு வேறுபட்டவராக யெகோவா இருந்தார். அவளுடைய நாடாகிய சீதோனில், பாகாலின் கொடுமையான மற்றும் ஒழுக்கக்கேடான வணக்கம் பரவியிருந்தது. ஆகையால், குடிப்பதற்குத் தண்ணீர் தரும்படி எலியா அவளைக் கேட்டபோது, அவள் உதவி செய்ய ஆவலாயிருந்தாள். அவ்வாறு செய்வது யெகோவாவின் தயவைப் பெறச் செய்யுமென்று அவள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். (மத்தேயு 10:41, 42) ஆனால், பின்பு எலியா மேலுமதிகமானதை—சிறிது உணவை—கேட்டார். கடைசியான ஒரு சாப்பாட்டுக்கு மாத்திரமே போதிய உணவு தன்னிடமிருந்ததென்று அவள் விளக்கினாள். எனினும், எலியா அதைக் கொண்டுவரும்படி வற்புறுத்தி, பஞ்சநிலை தீரும் வரையில், யெகோவா அற்புதமாய் அவளுக்கு உணவளிப்பார் என்று உறுதிகூறினார். அவள் என்ன செய்தாள்? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்.” (1 இராஜாக்கள் 17:10-15) மிகுந்த விசுவாசத்துக்குரிய ஒரு செயலை இந்த எளிய சொற்கள் விவரிக்கின்றன. உண்மையில் அது அவ்வளவு மிகுந்த விசுவாசமாக இருந்ததால், ஏறக்குறைய ஆயிர ஆண்டுகளுக்குப் பின்னால் இயேசு கிறிஸ்து அந்த விதவையைப் போற்றினார்!—லூக்கா 4:25, 26.

இருப்பினும், அவ்வளவு சொற்பமே இருந்த ஒரு பெண்ணிடமிருந்து அவ்வளவு அதிகத்தை யெகோவா கேட்பது ஆச்சரியமாகத் தோன்றலாம். மிக முதன்மையானவராயிருந்த ஒரு மனிதர் ஒரு காலத்தில் ஏறெடுத்த ஜெபம் ஒன்றை நாம் கவனிக்கையில், இது முக்கியமாய் அவ்வாறுள்ளது. அரசன் தாவீது, தன் குமாரனான சாலொமோன் ஆலயத்தைக் கட்டுவதில் பயன்படுத்துவதற்காக காணிக்கைகளைத் திரட்டினது மிகுந்த தயாளத்தைத் தூண்டினது. அளிக்கப்பட்ட அந்த நன்கொடைகள், தற்கால சொற்களில் நூற்றுக்கணக்கான கோடி டாலர்கள் மதிப்பானவை! எனினும், தாவீது, ஜெபத்தில் யெகோவாவிடம் இவ்வாறு சொன்னார்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.” (1 நாளாகமம் 29:14) தாவீது சொன்னபடி, எல்லாம் யெகோவாவுக்குரியது. ஆகையால், தூய்மையான வணக்கத்தை முன்னேற்றுவிக்கும்படி நாம் கொடுக்கும்போதெல்லாம், ஏற்கெனவே யெகோவாவினுடையதாக இருப்பதையே நாம் வெறுமனே அவருக்குச் செலுத்துகிறோம். (சங்கீதம் 50:10) இதனால், நாம் கொடுக்கும்படி முதலாவதாக யெகோவா ஏன் விரும்புகிறார்? என்ற கேள்வி எழும்புகிறது.

உண்மையான வணக்கத்தின் ஒரு முக்கிய பாகம்

பூர்வகாலங்களிலிருந்தே, கொடுப்பதை, தூய்மையான வணக்கத்தின் ஒரு முக்கிய பாகமாக யெகோவா செய்திருக்கிறார் என்பதே மிக எளிதான பதில். உண்மையுள்ள மனிதனான ஆபேல் தன் அருமையான ஆடுகளில் சிலவற்றை யெகோவாவுக்குப் பலிசெலுத்தினார். நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோபு ஆகியோரான கோத்திர பிதாக்கள், அதைப் போன்ற பலிகளைச் செலுத்தினார்கள்.—ஆதியாகமம் 4:4; 8:20; 12:7; 26:25; 31:54; யோபு 1:5.

யெகோவாவுக்கு நன்கொடைகள் செலுத்துவதை மோசேயின் நியாயப்பிரமாணம் அதிகாரப்பூர்வ சட்டமாக்கி, அதை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தவும் செய்தது. உதாரணமாக, இஸ்ரவேலர் எல்லாரும் தசமபாகம் செலுத்தும்படி, அதாவது, நிலத்தின் விளைச்சலிலும் தங்கள் மந்தைகளின் அதிகரிப்பிலும் பத்தில் ஒரு பாகத்தை நன்கொடையாக அளிக்கும்படி கட்டளையிடப்பட்டனர். (எண்ணாகமம் 18:25-28) மற்ற நன்கொடைகள் அவ்வளவு கண்டிப்பாய் கட்டுப்படுத்தப்படவில்லை. உதாரணமாக, ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் மந்தையிலிருந்தும் விளச்சலிலிருந்தும் முதற்பலனைச் செலுத்தும்படி கட்டளையிடப்பட்டான். (யாத்திராகமம் 22:29, 30; 23:19) எனினும், அவன் தன் மிகச் சிறந்ததைக் கொடுத்த வரையில், தன் முதற்பலன்களில் எந்த அளவு செலுத்துவதெனத் தீர்மானிப்பதை, நியாயப்பிரமாணம் அவரவருக்கு விட்டது. தனி நபர் விருப்பத்துக்கே முற்றிலும் விடப்பட்ட, நன்றிசெலுத்துதலுக்கும் பொருத்தனைகளைச் செலுத்துவதற்குங்கூட நியாயப்பிரமாணம் வழிநடத்துதல் அளித்தது. (லேவியராகமம் 7:15, 16) தாம் அவர்களை ஆசீர்வதித்திருந்ததற்குத் தக்க விதத்தில் கொடுக்கும்படி யெகோவா தம்முடைய ஜனங்களை ஊக்குவித்தார். (உபாகமம் 16:17) ஆசரிப்புக் கூடாரத்தையும், பின்னால் ஆலயத்தையும் கட்டின காரியத்தில் இருந்ததுபோல், ஒவ்வொருவரும் அவரவருடைய இருதயம் உந்துவித்தபடி கொடுத்தார்கள். (யாத்திராகமம் 35:21; 1 நாளாகமம் 29:9) தானாக மனமுவந்து அளித்த அத்தகைய நன்கொடைகள் யெகோவாவுக்கு நிச்சயமாகவே மிக அதிக பிரியமாயிருந்தது!

‘கிறிஸ்துவின் பிரமாணத்தின்’ கீழ், கொடுக்கும் எல்லாம் தானாக மனமுவந்த அளிப்பாகவே இருக்கவேண்டியதாக இருந்தது. (கலாத்தியர் 6:2; 2 கொரிந்தியர் 9:7) இது, கிறிஸ்துவைப் பின்பற்றினோர் கொடுப்பதை நிறுத்திவிட்டனர் அல்லது குறைவாகக் கொடுத்தனரென்று அர்த்தப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது! இஸ்ரவேலில் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பிரசங்கித்துவந்தபோது, ஒரு தொகுதியான பெண்கள் அவர்களோடு சென்று, தங்கள் சொந்த உடைமைகளிலிருந்து அவர்களுக்கு ஊழியஞ்செய்து வந்தார்கள். (லூக்கா 8:1-3) அவ்வாறே அப்போஸ்தலன் பவுலும், தன் மிஷனரி ஊழியத்தை ஆதரித்த கொடைகளைப் பெற்றார். மேலும் தன் முறையாக அவர், தேவையிலிருக்கும் மற்றவர்களுக்கு பண உதவி கொடுக்கும்படி சில சபைகளை ஊக்குவித்தார். (2 கொரிந்தியர் 8:14; பிலிப்பியர் 1:3-5) நன்கொடையாக அளிக்கப்பட்டவற்றை, தேவையிலிருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளும்படி, பொறுப்புள்ள மனிதரை எருசலேமிலிருந்த ஆளும் குழு நியமித்தது. (அப்போஸ்தலர் 6:2-4) இத்தகைய வழிகளில் தூய்மையான வணக்கத்தை ஆதரிப்பது ஒரு சிலாக்கியமென, பூர்வ கிறிஸ்தவர்கள் கண்டனர் என்பது தெளிவாயுள்ளது.

எனினும், கொடுப்பதை யெகோவா ஏன் தம் வணக்கத்தின் பாகமாக்குகிறார் என்று நாம் ஒருவேளை சிந்திக்கலாம். நான்கு காரணங்களைக் கவனியுங்கள.

நாம் ஏன் கொடுக்கிறோம்

முதலாவதாக, கொடுப்பது நமக்கு நன்மையாக இருப்பதால், யெகோவா அதை உண்மையான வணக்கத்தின் பாகமாக்குகிறார். கடவுளுடைய நற்குணத்தை நாம் மதித்துணர்வதை இது வலியுறுத்திக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு சிறு பிள்ளை, பெற்றோர் ஒருவருக்கு ஒரு பரிசை வாங்கினால் அல்லது கொடுத்தால், அந்தப் பெற்றோரானவர் ஏன் இன்பத்தால் புன்முறுவல் செய்கிறார்? அந்தப் பெற்றோர் மற்றப்படி பூர்த்திசெய்திருக்க முடியாத ஏதோ பெரும் தேவையை அந்தப் பரிசு பூர்த்திசெய்ததனிமித்தமாகவா? பெரும்பாலும் இல்லை. அதைப் பார்க்கிலும், மதித்துணரும் மற்றும் கொடுக்கும் ஒரு மனப்பான்மையை அந்தப் பிள்ளை வளர்ப்பதைக் காண்பதில் அந்தப் பெற்றோர் மகிழ்ச்சியடைகிறார். இதைப் போன்ற காரணங்களினிமித்தமே, கொடுக்கும்படி யெகோவா நம்மை ஊக்குவிக்கிறார், அவ்வாறு நாம் செய்கையில் மகிழ்ச்சியடைகிறார். அவர் நமக்குக் காட்டும் வரம்பற்ற எல்லா தயவையும் தயாளத்தையும் நாம் உண்மையில் நன்றியோடு மதித்துணருகிறோம் என்பதை இவ்வாறே நாம் அவருக்குக் காட்டுகிறோம். ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ கொடுப்பவர் அவரேயாதலால், அவருக்கு நன்றி தெரிவிப்பதற்கான காரணங்கள் இல்லாமல் நாம் ஒருபோதும் இருக்கமாட்டோம். (யாக்கோபு 1:17) எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா தம்முடைய மிக நேசமான சொந்தக் குமாரனை தந்து, நாம் என்றென்றும் வாழும்படியாக அவர் மரிக்கும்படி அனுமதித்தார். (யோவான் 3:16) நாம் என்றாவது போதியளவு அவருக்கு நன்றிசெலுத்த முடியுமா?

இரண்டாவதாக, கொடுப்பதை நாம் ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், ஒரு மிக முக்கியமான வகையில் யெகோவாவின் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்ற கற்றுக்கொள்கிறோம். யெகோவா நிலையாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார், இடைவிடாமல் தயாளம் காட்டுகிறார். பைபிள் சொல்லுகிற பிரகாரம், அவர் நமக்கு “ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும்” அளிக்கிறார். (அப்போஸ்தலர் 17:25) நாம் உள்ளிழுக்கும் ஒவ்வொரு சுவாசத்துக்காவும், நாம் அனுபவித்து மகிழும் ஒவ்வொரு சிறு துண்டு உணவுக்காகவும், வாழ்க்கையில் சந்தோஷ நிறைவேற்றமுள்ள ஒவ்வொரு விநாடிக்காகவும் நாம் சரியாகவே அவருக்கு நன்றி செலுத்தலாம். (அப்போஸ்தலர் 14:17) இயேசு தம்முடைய பிதாவைப்போலவே, கொடுக்கும் மனப்பான்மையைக் காட்டினார். அவர் தம்மை தடங்கலில்லாமல் தாராளமாய்க் கொடுத்தார். இயேசு அற்புதங்களைச் செய்தபோது, தமக்கு இழப்புண்டாக அவற்றை செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நோயுற்றவர்களை அவர் சுகப்படுத்தினபோது, ‘அவரிடத்திலிருந்த வல்லமை புறப்பட்டது’ என்று வேதவாக்கியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை நமக்குச் சொல்கின்றன. (லூக்கா 6:19; 8:45, 46) இயேசு அவ்வளவு மிக தயாளமுள்ளவராக இருந்து, தன் சொந்த ஆத்துமாவையே, தன் உயிரையே, மரணத்தில் ஊற்றினார்.—ஏசாயா 53:12.

ஆகையால், நம் நேரத்தையோ, நம் சக்தியையோ, அல்லது நம் உடைமைகளையோ, நாம் கொடுக்கையில், யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றி, அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம். (நீதிமொழிகள் 27:11; எபேசியர் 5:1) மேலும், இயேசு கிறிஸ்து நமக்காக விட்டுச் சென்ற மனித நடத்தைக்குரிய பரிபூரண மாதிரியையும் நாம் பின்பற்றுகிறோம்.—1 பேதுரு 2:21.

முன்றாவதாக, கொடுப்பது, உண்மையான மற்றும் முக்கியமானத் தேவைகளை நிறைவுபடுத்துகிறது. உண்மைதான், வார்த்தையைப் பிரசங்கிக்க நம்மைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கற்கள் சத்தமிடும்படி செய்ய யெகோவா ஏற்பாடு செய்யக்கூடியதைப்போல், ராஜ்ய அக்கறைகளுக்குரிய தேவைகளை, நம்முடைய உதவியில்லாமல் அவர் எளிதில் நிறைவுபடுத்த முடியும். (லூக்கா 19:40) ஆனால், இந்தச் சிலாக்கியங்களை நமக்கு அளித்து மதிப்புதரும்படி அவர் தெரிந்துகொண்டார். ஆகையால், ராஜ்ய அக்கறைகளை முன்னெற்றுவிப்பதற்கு, நம்முடைய பொருளாதார வாய்ப்புகளை நாம் அளிக்கையில், இந்த உலகத்தில் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் மிக அதிக முக்கியமான ஊழியத்தில் உண்மையான ஒரு பாகத்தை நாம் வகிக்கிறோமென்று அறியும் மிகுந்த மனத்திருப்தி நமக்குள்ளது.—மத்தேயு 24:14.

யெகோவாவின் சாட்சிகள் செய்யும் உலகளாவிய ஊழியத்தை நடத்துவதற்கு, பணம் தேவை என்பது தெளிவாயிருக்கிறது. 1995-ன் ஊழிய ஆண்டில், ஸ்பெஷல் பயனியர்களையும், மிஷனரிகளையும், பயணக் கண்காணிகளையும் அவர்களுடைய வெளி ஊழிய நியமிப்புகளில் பராமரித்து வருவதற்கு மாத்திரமே ஏறக்குறைய 6 கோடி டாலர்களைச் சங்கம் செலவிட்டது. எனினும், உலகைச் சுற்றி கிளை அலுலகங்களையும் அச்சடிப்பு கட்டடங்களையும் கட்டுவதற்கும் நடத்துவதற்கும் செலவிட்டதோடு ஒப்பிட அது குறைந்த செலவேயாகும். எனினும், தாங்களாக மனமுவந்து அளித்த நன்கொடைகளால் இவை யாவும் சாத்தியமாக்கப்பட்டன!

யெகோவாவின் ஜனங்கள், பணசம்பந்த வளமுள்ளவர்களாகத் தாங்கள் இல்லையெனில், மற்றவர்கள் சுமையைத் தாங்கும்படி விட்டுவிடலாமென பொதுவாகக் கருதுவதில்லை. இத்தகைய மனப்பான்மை, நம்முடைய வணக்கத்தின் இந்த அம்சத்தில் தவறும்படி நம்மை வழிநடத்தக்கூடும். அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி, மக்கெதோனியாவிலிருந்த கிறிஸ்தவர்கள் ‘கொடிய தரித்திரத்தில்’ உபத்திரவப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இருந்தபோதிலும், கொடுக்கும் சிலாக்கியத்திற்காக அவர்கள் வேண்டிக்கொண்டார்கள். அவர்கள் கொடுத்ததை, “தங்கள் திராணிக்கு மிஞ்சி”யதாக இருந்ததென்று பவுல் வலியுறுத்திக் கூறினார்!—2 கொரிந்தியர் 8:1-4.

நான்காவதாக, கொடுப்பது சந்தோஷமாயிருக்க நமக்கு உதவிசெய்யும் என்ற காரணத்தால், யெகோவா அதை உண்மையான வணக்கத்தின் ஒரு பாகமாக்கியிருக்கிறார். இயேசுதாமே இவ்வாறு சொன்னார்: ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் உள்ளது’ (அப்போஸ்தலர் 20:35, NW) அவ்வாறே யெகோவா நம்மை உருவாக்கினார். நாம் அவருக்கு எவ்வளவு அதிகம் கொடுக்கிறோமென்றாலும், நம்முடைய இருதயங்களில் அவரிடமாக நாம் உணரும் நன்றியுணர்வுக்கு அதை ஒருபோதும் இணையாக்க முடியாதென்று நாம் உணரக்கூடியதற்கு இது மற்றோரு காரணம். எனினும், மகிழ்ச்சிக்கேதுவாக, நாம் கொடுக்க முடிவதற்கு மிஞ்சி, யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறதில்லை. நம்மால் முடிகிறதை நாம் சந்தோஷத்துடன் கொடுக்கையில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்று நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்!—2 கொரிந்தியர் 8:12; 9:7.

கொடுக்கும் மனப்பான்மையைக் காட்டுவதிலிருந்து ஆசீர்வாதங்கள் உண்டாகின்றன

நம்முடைய முந்தின உதாரணத்துக்குத் திரும்பலாம். சாறிபாத்திலிருந்த விதவை, எலியாவுக்குத் தேவைப்பட்ட உணவை வேறு யாராவது கவனித்துக்கொள்ளலாமென விட்டுவிட்டிருப்பாளானால் என்னவாயிருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள். எத்தகைய ஆசீர்வாதத்தை அவள் அப்போது தவறவிட்டிருப்பாள்!

கொடுக்கும் மனப்பான்மை காட்டுகிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. (நீதிமொழிகள் 11:25) சாறிபாத் விதவை தன் கடைசி சாப்பாடென அவள் நினைத்ததை அளித்ததற்காக அவள் துன்பம் அனுபவிக்க வேண்டியதாக இருக்கவில்லை. ஓர் அற்புதத்தால் யெகோவா அவளுக்குப் பலனளித்தார். எலியா வாக்களித்தபடி, அவளுடைய மாவு மற்றும் எண்ணெய் கொள்கலங்கள், பஞ்சநிலை தீரும் வரையில் குறைந்துபோகவில்லை. ஆனால் அதைப்பார்க்கிலும் பெரிய ஒரு பலனையும் அவள் பெற்றாள். அவளுடைய மகள் நோயுற்று மரித்தபோது, உண்மையான கடவுளின் மனிதனாகிய எலியா, அவனை அவளுக்குத் திரும்ப உயிர்ப்பித்துக் கொடுத்தார். ஆவிக்குரியப் பிரகாரமாக அது அவளை எவ்வளவாகக் கட்டியெழுப்பியிருக்க வேண்டும்!—1 இராஜாக்கள் 17:16-24.

இன்று, அற்புதங்களைக்கொண்டு ஆசீர்வதிக்கப்படும்படி நாம் எதிர்பார்க்கிறதில்லை. (1 கொரிந்தியர் 13:8) ஆனால். தம்மை முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறவர்களை தாம் ஆதரிப்பாரென யெகோவா நமக்கு நிச்சயமாகவே உறுதியளிக்கிறார். (மத்தேயு 6:33) ஆகையால், யெகோவா நம்மை பராமரிப்பார் என்ற நம்பிக்கையுடன், தாராளமாய்க் கொடுக்கும் காரியத்தில், சாறிபாத் விதவையைப்போல் நாமிருக்கலாம். அவ்வாறே, ஆவிக்குரிய பெரும் பலன்களை அனுபவித்து மகிழலாம். நாம் கொடுப்பது, சிதறலாக, அந்த விநாடியில் தூண்டப்பட்ட காரியமாக இருப்பதைப் பார்க்கிலும், நிலையான ஒழுங்கின் ஒரு பாகமாக இருக்குமானால், இயேசு சிபாரிசு செய்ததுபோல், நம்முடைய கண்ணை தெளிவாயும் ராஜ்ய அக்கறைகளின்பேரில் ஒருமுகமாய் ஊன்றப்பட்டதாயும் வைத்துக்கொள்ள அது நமக்கு உதவிசெய்யும். (லூக்கா 11:34; 1 கொரிந்தியர் 16:1, 2-ஐ ஒப்பிடுக.) யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் உடன் ஊழியர்களாக, அவர்களிடம் மேலும் நெருங்கியவர்களாக உணரவும் இது நமக்கு உதவிசெய்யும். (1 கொரிந்தியர் 3:9) மற்றும், உலகமெங்குமுள்ள யெகோவாவின் வணக்கத்தாரை ஏற்கெனவே குறிப்பிடும் தயாள, கொடுக்கும் மனப்பான்மையை மேலும் மிகைப்படுத்தும்.

[பக்கம் 31-ன் பெட்டி]

கொடுப்பதற்கு சிலர் தெரிந்துகொள்ளும் வழிகள்

உலகெங்கும் செய்யப்படும் ஊழியத்துக்கு நன்கொடைகள்

பலர், ஓரளவு தொகையை ஒதுக்கி வைத்து அல்லது திட்டப்படுத்தி, “சங்கத்தின் உலகளாவிய ஊழியத்துக்கு நன்கொடைகள்—மத்தேயு 24:14” என்று பெயர் ஒட்டியுள்ள நன்கொடை பெட்டிகளில் அதை போடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சபைகள் இந்தத் தொகைகளை நியூ யார்க், புரூக்லினிலுள்ள தலைமை அலுவலகத்துக்காயினும், அல்லது அவ்விடத்து கிளை அலுவலகத்துக்காயினும் அனுப்புகின்றனர்.

பணமாக அனுப்ப விரும்பும் நன்கொடைகளை, Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, என்ற விலாசத்துக்கு அல்லது உங்கள் நாட்டில் சேவை செய்யும் சங்கத்தின் அலுவலகத்துக்கும் அனுப்பலாம். நகைகளையும் அல்லது விலைமதிப்புள்ள மற்றவற்றையுங்கூட நன்கொடையாக அளிக்கலாம். அவை நேரடியான நன்கொடையென்று கூறும் ஒரு சுருக்கமான கடிதத்தையும் அவற்றோடுகூட அனுப்ப வேண்டும்.

நிபந்தனையோடுகூடிய நன்கொடை ஏற்பாடு

நன்கொடை அளிப்பவரின் மரணம் வரையாக பொறுப்பில் வைத்திருக்கும்படியாகவும், அதை அளித்தவருக்குத் தேவை உண்டாகிறபோது அதை அவருக்கு அளிக்கும்படியான ஏற்பாடுடனும் உவாட்ச் டவர் சங்கத்தினிடம் பணம் கொடுக்கப்படலாம். மேலுமான தகவலுக்கு, மேல் குறிப்பிடப்பிட்ட விலாசத்தில் சொஸைட்டியுடன் தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்.

திட்டமிட்ட கொடை

நேரடியான பண நன்கொடைகளும் நிபந்தனையோடுகூடிய பண நன்கொடைகளும் அளிக்கும் முறைகள் மட்டுமல்லாமல், உலகளாவிய ராஜ்ய சேவைக்கு நன்மையுண்டாகக் கொடுப்பதற்கு மற்ற முறைகளும் இருக்கின்றன. பின்வருபவை இவற்றில் அடங்கியுள்ளன:

காப்புறுதி: ஜீவ காப்புறுதி முறையில் அல்லது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற/ஓய்வூதிய திட்டத்தில், தி உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியம் உடையதாகக் குறிப்பிடலாம். அத்தகைய ஏதாவது ஏற்பாடு செய்தால் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகள், சேமிப்பு சான்றுகள், அல்லது தனி நபரின் ஓய்வு சேமிப்பு விவரங்கள் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பொறுப்புக்குரியவையாக அல்லது மரணம் ஏற்பட்டால் அதற்குக் கொடுக்கும்படியாக, அவ்விடத்து வங்கி ஏற்பாடுகளின்படி வைக்கப்படலாம். அத்தகைய ஏதாயினும் ஏற்பாடுகள் செய்தால் சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

பங்கு இருப்புகளும் வாக்குறுதி பத்திரங்களும்: பங்கு இருப்புகளும் வாக்குறுதி பத்திரங்களும் நேரடியான நன்கொடையாக அல்லது அளிப்பவருக்கு வருவாய் தொடர்ந்து செலுத்தப்படும் ஓர் ஏற்பாட்டுடன் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அளிக்கப்படலாம்.

நிலம்புலம்: விற்கக்கூடிய நிலம் வீடு போன்றவை, நேரடியான நன்கொடையாக அல்லது அதை அளிப்பவர் உயிர்வாழும் வரையில் அவற்றை அனுபவித்து, அவருடைய மரணத்துக்குப் பின் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு உரியதாகும்படி செய்யலாம். நிலம்புலம் எவற்றையாவது சட்டமுறைப்படி ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக ஒருவர் சங்கத்துடன் தொடர்பு வைக்க வேண்டும்.

விருப்ப ஆவணங்களும் பொறுப்பாவணங்களும்: சொத்து அல்லது பணம், சட்டப்பூர்வ விருப்பாவணங்களின்மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்குக் கொடுக்கப்படலாம், அல்லது ஒப்படை பொறுப்பில் அனுபவப் பாத்தியம் உடையதாக சங்கம் பெயர் குறிப்பிடப்படலாம். ஒரு மத அமைப்பு நன்மையடையும்படியான ஒரு பொறுப்பாவணம், வரி சம்பந்தப்பட்ட சில அனுகூலங்களை அளிக்கலாம். அந்த விருப்பாவணத்தின் அல்லது பொறுப்பாவணத்தின் ஒப்பந்தப் பிரதி ஒன்று சங்கத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

திட்டமிடப்பட்ட இந்த அளிப்பு ஏற்பாடுகளில் எதிலாயினும் அக்கறையுடையவர்கள், மேலே வரிசையாகக் குறிப்பிடப்பட்ட விலாசத்திலுள்ள சொஸைட்டியோடு அல்லது உங்கள் நாட்டில் சேவிக்கிற சங்கத்தின் அலுவலகத்தோடு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இந்த ஏற்பாடுகளில் எதுவாக இருந்தாலும், அது சம்பந்தப்பட்ட பொருத்தமான ஆவணங்களின் பிரதியை சங்கம் பெறவேண்டும்.

PLANNED GIVING DESK

Watch Tower Bible and Tract Society of Pennsylvania

100 Watchtower Drive, Patterson, New York 12563-9204

Telephone: (914) 878-7000

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்