உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 11/1 பக். 3-6
  • ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒடுக்கப்படுவதை உன்னிப்பாய் கவனித்த ஒரு பூர்வீக நபர்
  • ஒடுக்குதல் விரைவில் முடிவுக்கு வரும்
  • உண்மையிலேயே ஒருவர் அக்கறை காட்டுகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துயரப்படுவோருக்கு ஆறுதலளியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • மெய்யான ஆறுதல் எங்கே கிடைக்கும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • உதவிக்காகக் கூப்பிடுவோரை யார் விடுவிப்பார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 11/1 பக். 3-6

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்

உங்களுடைய வாழ்நாட்காலம் முழுவதும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் தலைப்புச் செய்திகளில் திரும்பத் திரும்ப வந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? போர், குற்றச்செயல், பேரழிவு, பசி, துன்பம் இதுபோன்ற வார்த்தைகளை வாசித்து வாசித்து நீங்கள் சலித்துப்போய் விட்டீர்களா? இருந்தபோதிலும், செய்தி அறிக்கைகளிலிருந்து தெளிவாக தெரியும் வகையில் ஒரு வார்த்தை விடுபட்டுப்போயிருக்கிறது. ஆனால், மனிதவர்க்கத்திற்கு பேரளவில் தேவைப்படுகிற ஒன்றை குறிக்கிற வார்த்தை அது. அந்த வார்த்தைதான் “ஆறுதல்.”

“ஆறுதல்படுத்துவது” என்பது ஒருவருக்கு “பலத்தையும் நம்பிக்கையையும் கொடுப்பதை, துயரத்தை அல்லது தொல்லையைப் போக்குவதை” அர்த்தப்படுத்துகிறது. இந்த 20-ம் நூற்றாண்டில் இவ்வுலகம் அனுபவித்திருக்கும் எல்லா குழப்பத்தையும் கவனிக்கையில், நம்பிக்கையும் துயரத்தை தணிக்கும் விஷயங்களும் மிகவும் தேவைப்படுகின்றன. உண்மைதான், நம்முடைய முன்னோர்கள் நினைத்துக்கூட பார்த்திராத அளவுக்கு அவர்களைவிட இன்று நம்மில் சிலர் வெகு சொகுசான காரியங்களை அனுபவித்துக் களிக்கிறோம். இதற்குப் பெருமளவு காரணம் அறிவியலில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமே. ஆனால் துன்பத்திற்கான அனைத்து காரணங்களையும் மனிதகுலத்திலிருந்து நீக்குகிற கருத்தில் பார்த்தால் அறிவியலும் தொழிற்நுட்பமும் நமக்கு ஆறுதல் அளிக்கவில்லை. இந்தக் காரணங்கள் யாவை?

‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்று சொன்னபோது, துன்பத்திற்கான ஒரு அடிப்படை காரணத்தைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஞானியாகிய சாலொமோன் பேசினார். (பிரசங்கி 8:9) தன்னுடைய சக மனிதனை ஆள விரும்பும் மனிதனுடைய எண்ணத்தை அறிவியலும் தொழிற்நுட்பமும் மாற்ற முடியவில்லை. இந்த 20-ம் நூற்றாண்டில், இது நாடுகளுக்குள்ளேயே ஒடுக்கியாளுகிற சர்வாதிகாரங்களுக்கும் நாடுகளுக்கிடையே படுபயங்கரமான போர்களுக்கும் வழிநடத்தியிருக்கிறது.

1914 முதற்கொண்டு 10 கோடிக்கும் மேலான மக்கள் போரின் விளைவாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை விவரித்துக் காட்டுகிற மனிதனின் தாங்கமுடியாத வேதனையை—ஆறுதல் தேவைப்படும் துயரத்திலிருந்த கோடிக்கணக்கான குடும்பங்களை—கற்பனை செய்துபாருங்கள். கோர மரணத்தோடுகூட மற்ற வகையான துன்பத்திற்கும் போர்கள் வழிநடத்துகின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1.2 கோடிக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவில் இருந்தார்கள். வெகுசமீப வருடங்களில், தென்கிழக்கு ஆசியாவிலுள்ள போர் நடக்கும் பகுதிகளிலிருந்து 15 லட்சத்திற்கும் மேலானோர் ஓடிவந்துவிட்டார்கள். பால்கான்ஸில் நடந்த போர், 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களுடைய வீடுகளைவிட்டு ஓடும்படி—பெரும்பாலாருடைய விஷயங்களில் “இனத் துடைத்தழிப்பிலிருந்து” தப்பியோடும்படி—நிர்ப்பந்தப்படுத்தியிருக்கிறது.

அகதிகளுக்கு, முக்கியமாக தாங்கள் சுமக்கமுடிந்த மூட்டைமுடிச்சிகளைத் தவிர வேறொன்றும் இல்லாமல், எங்கே போவது அல்லது தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினருக்கும் என்ன எதிர்காலம் இருக்கிறது என்றே தெரியாமல், வீட்டைவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியே இல்லாமல் இருப்பவர்களுக்கு நிச்சயமாகவே ஆறுதல் தேவை. இப்படிப்பட்ட மக்கள் ஒடுக்குதலுக்கு பலியான மிகவும் பரிதாபகரமான ஆட்கள் மத்தியில் இருக்கிறார்கள்; அவர்களுக்குத் தேவை ஆறுதல்.

இந்தப் பூமியில் சண்டைச்சச்சரவில்லாமல் அதிக அமைதியாக இருக்கும் பகுதிகளில், கோடிக்கணக்கானோர் உலகத்தின் பொருளாதார முறைக்கு நடைமுறையளவில் அடிமைத்தனத்தில்தான் வாழ்கிறார்கள். சிலர் ஏராளமாக பொருள்சம்பந்தமான உடைமைகளை வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், பெரும்பாலான ஆட்களுக்கு அன்றாடங்காய்ச்சிக்கே திண்டாட்டமாகத்தான் இருக்கிறது. அநேகர் போதுமான வீட்டுவசதியைத் தேடி அலைகிறார்கள். அதிகரித்துக்கொண்டே செல்லும் எண்ணிக்கையானோர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். “இந்த உலகம் என்றைக்குமே இல்லாத அளவில் வேலைவாய்ப்பு நெருக்கடியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது, 2020-க்குள்ளாக 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலை தேடி அலைந்துகொண்டிருப்பார்கள்” என்பதாக ஆப்பிரிக்க செய்தித்தாள் ஒன்று கணிக்கிறது. பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவை பலப்படுத்தலும் நம்பிக்கையும், அதாவது ஆறுதல்.

நம்பிக்கையிழந்த சூழ்நிலைமைகளின் விளைவாக, சிலர் குற்றச்செயல் புரியும் வாழ்க்கைக்கு மாறுகிறார்கள். உண்மையில், அவர்களுக்கு பலியாகிற ஆட்களுக்கு அது வேதனையைத்தான் உருவாக்குகிறது, அதோடு குற்றச்செயல்கள் உயர்ந்தளவுக்கு அதிகரிப்பது ஒடுக்கும் உணர்வைக் கூட்டுகிறது. தென் ஆப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க் செய்தித்தாளாகிய தி ஸ்டாரில் வெளிவந்த சமீபத்திய தலைப்புச்செய்தி இவ்விதமாக வாசிக்கிறது: “‘உலகிலேயே மிக அதிக கொலைகார நாட்டின்’ வாழ்க்கையில் ஒரு நாள்.” ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் உள்ள ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றி அந்தக் கட்டுரை விவரித்தது. அந்த ஒரு நாளில், நான்கு ஆட்கள் கொலைசெய்யப்பட்டார்கள், எட்டு பேருடைய மோட்டார் வண்டி கடத்தப்பட்டது. நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் புறநகர் பகுதி ஒன்றில் பதினேழு திருட்டுக்கள் நடந்ததாக அறிக்கை செய்யப்பட்டன. மேலும், ஆயுத முனையில் கொள்ளைகளும் அநேகம் நடந்தன. அந்தச் செய்தித்தாள் அறிக்கைசெய்கிறபடி, அது “ஓரளவுக்கு அமைதலான” நாள்தான் என்பதாக போலீஸார் விவரித்தனர். கொலைகாரனுக்கு பலியானவர்களுடைய உறவினர்களும் வீடு உடைக்கப்படுதலுக்கும் கார் கடத்தப்படுதலுக்கும் ஆளானவர்களும் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு தேவை உறுதிப்பாடும் நம்பிக்கையும், அதாவது ஆறுதல்.

சில நாடுகளில், பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை விபச்சார தொழிலுக்கு விற்றுவிடுகிறார்கள். வெள்ளம்போல் “செக்ஸ் டூர்” செல்லுகிற உல்லாசப் பயணிகளுக்கான ஆசிய நாடு ஒன்றில் வேசித்தொழில் செய்பவர்கள் 20 லட்சம் பேர் இருப்பதாகவும், அவர்களில் அநேகர் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள் அல்லது பிள்ளைகளாக கடத்திவரப்பட்டார்கள் என்பதாக அறிக்கை செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட பரிதாபகரமான பலியாட்களைவிட அதிகம் ஒடுக்கப்படுகிற ஆட்கள் யாராவது இருக்கிறார்களா? இந்தக் கீழ்த்தரமான தொழிலைக் குறித்து விவாதிக்கையில், தென்கிழக்கு ஆசிய பெண்கள் நிறுவனங்களின் 1991 மாநாடு ஒன்றைப் பற்றி டைம் பத்திரிகை அறிக்கை செய்தது. அதில், “1970-களின் மத்திப ஆண்டு முதற்கொண்டு உலகமுழுவதிலும் மூன்று கோடி பெண்கள் விற்கப்பட்டிருக்கிறார்கள்” என்பதாக மதிப்பிடப்பட்டது.

நிச்சயமாகவே, பிள்ளைகள் துன்பப்படுத்தப்படுவதற்கு விபச்சார தொழிலுக்கு மட்டுமே விற்கப்படுவதில்லை. வளர்ந்துவரும் எண்ணிக்கையானோர் உடல் ரீதியாக துர்ப்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் அல்லது பெற்றோர்களாலும் உறவினர்களாலும் தங்களுடைய சொந்த வீடுகளிலேயே கற்பழிக்கவும்படுகிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள் நீண்ட நாட்களாக உணர்ச்சிப்பூர்வமான தழும்புகளைத் தாங்கிவரக்கூடும். நிச்சயமாகவே, ஒடுக்கப்படுகிற சோகமான பலியாட்களாக இருப்பதால், அவர்களுக்கு ஆறுதல் தேவை.

ஒடுக்கப்படுவதை உன்னிப்பாய் கவனித்த ஒரு பூர்வீக நபர்

மானிடர் ஒடுக்கப்படும் அளவைக் கண்டு அரசனாகிய சாலொமோன் திகைப்படைந்தார். அவர் இவ்விதமாக எழுதினார்: “இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, [“அதன் காரணமாக அவர்கள் தேற்றுவாரில்லாமல் போனார்கள்,” NW].”—பிரசங்கி 4:1.

ஒடுக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதலளிப்பவர் ஒருவர் மிகவும் அவசரமாக தேவைப்பட்டார் என்பதை ஞானமுள்ள அரசன் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தார் என்றால், இன்றைக்கு அவர் என்ன சொல்லுவார்? என்றபோதிலும், அவர் உட்பட, எந்தவொரு அபூரண மனிதனும் மனிதவர்க்கத்திற்குத் தேவைப்படுகிற ஆறுதலைக் கொடுக்க முடியாது என்பதை சாலொமோன் அறிந்திருந்தார். ஒடுக்குகிறவர்களின் அதிகாரத்தை ஒழித்துக்கட்டுவதற்கு மிகப் பெரிய ஒரு நபர் தேவைப்பட்டார். அப்படிப்பட்ட நபர் இருக்கிறாரா?

பைபிளில், அனைத்து மக்களுக்கும் மகத்தான ஆறுதலளிப்பவராய் இருக்கும் ஒருவரைப் பற்றி சங்கீதம் 72 பேசுகிறது. அந்த சங்கீதம் சாலொமோனின் தகப்பனாகிய தாவீது அரசனால் எழுதப்பட்டது. அதன் தலைப்பு இவ்விதமாக வாசிக்கிறது: “சாலொமோனைப்பற்றிய சங்கீதம்.” தெளிவாகவே, தன்னுடைய சிங்காசனத்திற்கு வாரிசாக வரப்போகும் ஒருவரைப் பற்றி வயதான அரசனாகிய தாவீதால் அது எழுதப்பட்டது. அந்த நபர், சங்கீதம் சொல்லுகிறபடி, ஒடுக்குதலிலிருந்து நிரந்தர விடுதலையைக் கொண்டுவருவார். “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம்வரைக்கும், . . . பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.”—சங்கீதம் 72:7, 8.

தாவீது இந்த வார்த்தைகளை எழுதியபோது, ஒருவேளை தன்னுடைய மகன் சாலொமோனைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், சங்கீதத்தில் விவரிக்கப்பட்டுள்ள முறையில் மனிதவர்க்கத்திற்கு உதவுவது என்பது தன்னுடைய சக்திக்கும் அப்பாற்பட்டது என்பதை சாலொமோன் உணர்ந்தார். சங்கீதத்திலுள்ள வார்த்தைகளை அவரால் ஒரு சிறிய அளவில் மட்டுமே, இஸ்ரவேல் தேசத்தாரின் சார்பாக மட்டுமே நிறைவேற்ற முடிந்தது, முழு பூமியிலுள்ளவர்களுடைய நன்மைக்காகவும் அல்ல. தெளிவாகவே, ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த சங்கீதம், சாலொமோனைக் காட்டிலும் மிகவும் பெரியவரான ஒருவரை சுட்டிக்காட்டியது. அவர் யார்? அவர் இயேசு கிறிஸ்துவாகத்தான் இருந்திருக்க முடியும்.

தேவதூதர் ஒருவர் இயேசுவின் பிறப்பை அறிவிக்கும்போது இவ்விதமாக சொன்னார்: “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.” (லூக்கா 1:32) மேலும், இயேசு தம்மை “சாலொமோனிலும் பெரியவர்” என்பதாக குறிப்பிட்டார். (லூக்கா 11:31) கடவுளுடைய வலதுபாரிசத்திற்கு இயேசு உயிர்த்தெழுந்தது முதற்கொண்டு, சங்கீதம் 72-ல் உள்ள வார்த்தைகளை நிறைவேற்றக்கூடிய இடமாகிய பரலோகத்தில் அவர் இருந்துவருகிறார். மேலும், மனிதரை ஒடுக்குபவர்களுடைய நுகத்தடியை முறிப்பதற்கான வல்லமையையும் அதிகாரத்தையும் கடவுளிடமிருந்து அவர் பெற்றிருக்கிறார். (சங்கீதம் 2:7-9; தானியேல் 2:44) ஆகவே, சங்கீதம் 72-ன் வார்த்தைகளை நிறைவேற்றப் போகிற அந்த நபர் இயேசுவே.

ஒடுக்குதல் விரைவில் முடிவுக்கு வரும்

இது எதை அர்த்தப்படுத்துகிறது? எல்லா வகையான மனித ஒடுக்குதலிலிருந்தும் வரும் விடுதலை வெகு சீக்கிரத்தில் நிஜமாகிவிட்ட ஒன்றாக இருக்கும் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. இந்த 20-ம் நூற்றாண்டில் கண்ட முன்னொருபோதும் இருந்திராத துன்பமும் ஒடுக்குதலும், ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை’ குறித்துக்காட்டுகிற அடையாளத்தின் பாகமாக இயேசுவினால் முன்னறிவிக்கப்பட்டன. (மத்தேயு 24:3, NW) அவற்றில் மற்ற காரியங்களையும் அவர் முன்னறிவித்தார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்திற்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7) தீர்க்கதரிசனத்தின் அந்த அம்சம், 1914-ல் முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் நிறைவேற ஆரம்பித்தது. இயேசு மேலும் தொடர்ந்து சொன்னார், “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (மத்தேயு 24:12) அக்கிரமமும் அன்பில்லாமையும் ஒரு பொல்லாத, ஒடுக்குகிற தலைமுறையை உருவாக்கியிருக்கிறது. ஆகையால், பூமியின் புதிய அரசராக இயேசு கிறிஸ்து குறுக்கிடுவதற்கான அந்த நேரம் அருகில் இருக்கவேண்டும். (மத்தேயு 24:32-34) இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, அவரை கடவுளால் நியமிக்கப்பட்ட மனிதவர்க்கத்தின் ஆறுதலளிப்பவராக நோக்குகிற ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கு அது எதை அர்த்தப்படுத்தும்?

அந்தக் கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கு, கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றமடைகிற சங்கீதம் 72-ல் உள்ள கூடுதலான சில வார்த்தைகளை நாம் வாசிக்கலாம்: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” (சங்கீதம் 72:12-14) இவ்விதமாக கடவுளுடைய நியமிக்கப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்து, ஒடுக்குதலினால் ஒருவரும் துன்பப்படாதபடி பார்த்துக்கொள்வார். அவர் எல்லா விதமான அநீதிகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வல்லமையுடையவராய் இருக்கிறார்.

‘அது கேட்பதற்கு ரொம்ப நல்லாத்தான் இருக்கு, ஆனால் இப்ப இருக்கிற நிலைமையைப் பற்றியென்ன? இப்ப கஷ்டப்படுரவங்களுக்கு என்ன ஆறுதல் இருக்குது?’ என்று யாராவது சொல்லக்கூடும். உண்மையில் சொல்லப்போனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் நிச்சயமாகவே உண்டு. உண்மை கடவுளாகிய யெகோவாவுடனும் அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் ஒரு நெருக்கமான கூட்டுறவை வளர்த்துக்கொள்வதன் மூலம் எவ்வாறு லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே ஆறுதலை அனுபவித்து வருகிறார்கள் என்பதை இந்தப் பத்திரிகையிலுள்ள பின்வரும் இரண்டு கட்டுரைகள் காண்பிக்கும். ஒடுக்குதல் நிறைந்த இந்தக் காலங்களில் இத்தகைய உறவு நமக்கு ஆறுதலளித்து, ஒடுக்குதலில்லாத நித்திய வாழ்க்கைக்கு ஒரு நபரை வழிநடத்தக்கூடும். கடவுளிடம் செய்த ஜெபத்தில் இயேசு இவ்விதமாக சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.

[பக்கம் 4, 5-ன் படம்]

கடவுளுடைய புதிய உலகில் எந்த மனிதரும் மற்றொருவரை ஒடுக்கமாட்டார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்