மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா?
ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக இரண்டு கேள்விகள் மனிதவர்க்கத்தை குழப்பமடையச் செய்திருக்கின்றன: நாம் ஏன் முதியோராகி கடைசியில் மரித்துப்போக வேண்டும்? மரணத்திற்குப் பின் ஏதாவது ஒருவகையான உணர்வுள்ள வாழ்க்கை இருக்கிறதா?
முதல் கேள்வி அநேக மக்களை குழப்பமடையச் செய்திருக்கிறது, ஏனென்றால் நவீன மருத்துவ விஞ்ஞானமும்கூட, அதன் எல்லா கவர்ச்சிகரமான கண்டுபிடிப்புகளோடுகூட ஒரு முடிவான அல்லது திருப்தியான பதிலை பெறமுடியாமல் இருந்திருக்கிறது.
இரண்டாவது கேள்வி ஏராளமான வித்தியாசப்படும் பதில்களைப் பெற்றிருந்திருக்கின்றன. இருப்பினும், பொதுவாக, மரணத்திற்குப் பின் உணர்வுள்ள வாழ்க்கை ஒன்று இருக்கிறதா என்பதற்கான பதில்களில், எதிர்பார்ப்பதற்கு இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கை மட்டுமல்ல என்ற நம்பிக்கையோடிருப்பவர்களுக்கும் மரணத்தில் உணர்வுள்ள வாழ்க்கை முடிவடைகிறது என்று அதே அளவுக்கு பிடிவாதமாக இருப்பவர்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. மனிதன் எதிர்பார்ப்பதெல்லாம் அவனுடைய குறுகிய வாழ்நாட்காலமே என்பதைக் குறித்து தங்கள் மனங்களில் எந்தச் சந்தேகமுமில்லை என்று இந்த இரண்டாவது தொகுதியிலுள்ள பெரும்பாலானோர் நமக்கு சொல்கின்றனர். பெரும்பாலும், அதற்கு முரணாக சொல்லப்படும் எந்த விவாதங்களும் மிகவும் சுய-திருப்தியடைந்த பதிலையே பெற்றுக்கொள்கின்றன, “நம்மிடம் வந்து சொல்வதற்கு எவரும் திரும்பி வந்ததேயில்லை அல்லவா?”
மற்ற கருத்து வேறுபாட்டுக்குரிய கேள்விகளைப் போலவே, இன்னும் தீர்மானிக்கப்படாத கேள்விகள் அநேகம் இருக்கின்றன—அவை ஏதாவது ஒருவிதத்தில் நம்பிக்கை கொள்வதற்கு எப்போதும் வாய்ப்புள்ளவை என்ற உறுதியுடன் சொல்லப்படுகின்றன. ஆனால் மற்றவர்களோ “அந்த நேரம் வரும்வரை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்!” என்று ஒருவேளை கவலையற்றவிதத்தில் பதிலளிப்பர்.
நெடுங்காலமாயுள்ள கேள்வி
துன்பத்தின் மத்தியில் பொறுமையோடு இருந்ததற்காக புகழ் பெற்றிருந்த கிழக்கத்திய நாட்டைச் சேர்ந்த யோபு, சுமார் 3,500 வருடங்களுக்கு முன்பு, மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றி முன்கூட்டியே ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். இந்த விதத்தில்தான் யோபு தன் கேள்வியைக் கேட்டார்: “மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறது போல, மனுஷன் படுத்துக்கிடக்கிறான், . . . எழுந்திருக்கிறதும் இல்லை. . . . மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?”—யோபு 14:10-14.
ஆனால் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைக் குறித்து கேள்வி கேட்டது யோபு மட்டுமல்ல. “மரித்தோரின் நிலை” என்ற தலைப்பின்கீழ் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் அண்ட் எத்திக்ஸ் இந்த அறிவொளியூட்டும் தகவலை அளிக்கிறது: “மரணத்திற்குப் பின்னான நிலையைப் பற்றிய விஷயத்தைக் காட்டிலும் தன் ஆன்மீக வாழ்க்கை சம்பந்தமான வேறு எந்த விஷயமும் மனிதனின் மனதை அந்த அளவுக்கு முழுவதுமாக கவர்ந்ததில்லை. ஆவியுலகத்தைக்—அதன் வாழ்க்கை, அதன் சிறப்பான பண்புகள், அதன் இயற்கைக்காட்சிகள் ஆகியவற்றை— குறித்து பொதுவாக மிகவும் தெளிவான, ஆர்வமிக்க கருத்துக்களை உலகின் எல்லா பகுதிகளிலுமுள்ள [பழங்குடி மக்கள்] பெற்றிருக்கின்றனர். இது அந்தப் பின்னான வாழ்க்கையைக் குறித்த விஷயத்தைப் பற்றி அளவுக்குமீறி கவலைப்படுவதைக் குறிப்பிடுகிறது. மரித்தோரின் நிலை, உயிர் முடிவுற்ற நிலை அல்ல என்ற ஒரு பண்டையகால கருத்தை மரித்தோரைப் பற்றி பரவலாயிருக்கும் பயம் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. மரணம் சக்திகளைத் துண்டித்துவிட்டிருந்தது; அது வெளிப்படையாய் தெரிந்தது; ஆனால் மற்ற சக்திகள் செயல்படவில்லையா, அல்லது அந்தச் சக்திகள் தந்திரமான, மறைமுகமான வழிகளில் செயல்படுவதற்குரிய இயல்புவாய்ந்தவையாய் இருந்தனவல்லவா? உடலிலிருந்து பிரிந்துசெல்லும் ஒரு ஆவியில், ஆத்துமாவில், அல்லது பேய்த்தோற்றத்தில் மனிதர்கள் முதலில் நம்பிக்கை வைத்திருந்தார்களோ இல்லையோ, மரித்தோர் இன்னும் ஏதோவொரு வகையான வாழ்க்கையை தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்ததாக அவர்கள் கருதினர் என்பதை நம்புவதற்கு எல்லா காரணமும் இருப்பதாகத் தோன்றுகிறது.”
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று வகைப்பிரிவுகளில் ஏதாவது ஒரு வகைப்பிரிவுக்குள் நீங்கள் பொருந்தலாம்: மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து நிச்சயமற்று இருக்கலாம்; மரணத்திற்குப் பின் ஏதாவது ஒருவகையான வாழ்க்கை இருக்கும் என்பதைக் குறித்து உறுதியோடிருக்கலாம்; அல்லது இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கை மட்டும்தான் என்ற உறுதியோடிருக்கலாம். உங்கள் கருத்து எதுவாயிருப்பினும், பின்வரும் கட்டுரையை கவனமாய்ச் சிந்தித்துப் பார்க்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். மரணத்திற்குப் பின் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கும் என்பதற்கான அதிசயமான எதிர்பார்ப்பு இருக்கிறதா, அது எவ்வாறு நிகழும், எங்கே, எப்போது போன்றவற்றுக்கான நம்பவைக்கும் பைபிள்பூர்வமான அத்தாட்சியை நீங்கள் அதில் காணலாமா என்பதை பாருங்கள்.