எல்லாரும் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்
“நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.”—ரோமர் 14:12.
1. ஆதாம், ஏவாளின் சுதந்திரத்தின்மீது என்ன வரையறைகள் வைக்கப்பட்டன?
யெகோவா தேவன் நம் முதல் பெற்றோராகிய ஆதாமையும் ஏவாளையும், தெரிவு செய்யும் சுதந்திரமுள்ளவர்களாகப் படைத்தார். அவர்கள் தேவதூதர்களைவிட தாழ்ந்தவர்களாக இருந்தாலும், ஞானமான தீர்மானங்களை எடுக்கத்தக்க புத்திக்கூர்மையுள்ள படைப்புகளாக இருந்தனர். (சங்கீதம் 8:4, 5) என்றாலும், கடவுளால் கொடுக்கப்பட்ட அந்தச் சுதந்திரம், சரி தவறு எதுவென்று தாங்களே சுய தீர்மானம் செய்வதற்கான ஒரு உரிமையை வழங்குவதாக இருக்கவில்லை. அவர்கள், தங்கள் படைப்பாளருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருந்தனர்; மேலும் இந்தக் கணக்குக் கொடுத்தல் அவர்களுடைய சந்ததியில் வந்த அனைவரையும் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக ஆக்கியிருக்கிறது.
2. யெகோவா சீக்கிரத்தில் என்ன கணக்கைக் கேட்பார், ஏன்?
2 தற்போது இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் உச்சக்கட்டத்தை நாம் நெருங்குவதால், யெகோவா பூமியில் கணக்குக் கேட்பார். (ரோமர் 9:28, NW-ஐ ஒப்பிடுக.) பூமியின் வளங்களைக் கொள்ளையடித்ததற்காக, மனித உயிரை அழித்ததற்காக, முக்கியமாக அவருடைய ஊழியர்களைத் துன்புறுத்தியதற்காக, தேவபக்தியற்ற மனிதர் விரைவில் யெகோவா தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 6:10; 11:18.
3. நாம் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
3 இந்தத் தெளிவான எதிர்நோக்கை எதிர்ப்பட்டவர்களாய், கடந்த காலங்களில் யெகோவா தம்முடைய சிருஷ்டிகளுடன் கொண்டிருந்த நீதியான செயல்தொடர்புகளைச் சிந்தித்துப் பார்ப்பது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும். நம்முடைய பாகத்தில், ஏற்கத்தக்க ஒரு கணக்கை நம் படைப்பாளரிடம் கொடுப்பதற்கு வேதவார்த்தைகள் நமக்கு எப்படி உதவி செய்ய முடியும்? என்ன உதாரணங்கள் உதவியாயிருக்கக்கூடும், மேலும் எந்த உதாரணங்களைப் பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும்?
தேவதூதர்கள் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்
4. தேவதூதர்களைத் தங்கள் செயல்களுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாகக் கடவுள் கருதுகிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
4 பரலோகங்களிலிருக்கிற யெகோவாவின் தேவதூத சிருஷ்டிகளும் நம்மைப் போலவே அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்கு முன்னர், சில தேவதூதர்கள் கீழ்ப்படியாதவர்களாக, பெண்களுடன் பாலின உறவுகளில் ஈடுபடுவதற்காக மாம்ச உருவெடுத்தனர். தெரிவு செய்யும் சுதந்திரமுள்ளவர்களாக இந்த ஆவி சிருஷ்டிகளால் இந்தத் தீர்மானத்தை எடுக்க முடிந்தது; ஆனாலும் கடவுள் அவர்களைக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாகக் கருதினார். கீழ்ப்படியாத அந்தத் தூதர்கள் ஆவி எல்லைக்குத் திரும்பியபோது, தங்கள் ஆதி நிலையை அவர்கள் மீண்டும் பெறுவதற்கு யெகோவா அனுமதிக்கவில்லை. அவர்கள் ‘மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக’ சீஷனாகிய யூதா நமக்குச் சொல்லுகிறார்.—யூதா 6.
5. சாத்தானும் அவனுடைய பேய்களும் என்ன வீழ்ச்சியை அனுபவித்தார்கள், மேலும் அவர்களுடைய கலகத்திற்கான கணக்கு எவ்வாறு தீர்க்கப்படும்?
5 கீழ்ப்படியாத இந்தத் தூதர்கள், அல்லது பேய்கள், பிசாசாகிய சாத்தானைத் தங்கள் தலைவனாகக் கொண்டிருக்கின்றனர். (மத்தேயு 12:24-26) இந்தப் பொல்லாத தூதன் தன் படைப்பாளருக்கு விரோதமாகக் கலகம் செய்து, யெகோவாவின் உன்னத அரசாட்சியின் சரியானத்தன்மையைக் குறித்துச் சவால்விட்டான். சாத்தான் நம் முதல் பெற்றோரைப் பாவத்திற்குள் வழிநடத்தினான்; இது முடிவில் அவர்கள் மரணமடைவதில் விளைவடைந்தது. (ஆதியாகமம் 3:1-7, 17-19) அதற்குப் பின்னர் ஒரு காலப்பகுதிக்கு, பரலோக சபை கூடுதல்களுக்கு வரும்படி சாத்தானை யெகோவா அனுமதித்திருந்தபோதிலும், கடவுளுடைய உரிய நேரத்தில், இந்தப் பொல்லாதவன் கீழே பூமியின் பகுதிக்குள் தள்ளப்படுவான் என்பதாக பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் முன்னறிவித்தது. 1914-ல் இயேசு கிறிஸ்து ராஜ்ய அதிகாரத்தைப் பெற்றபின் கொஞ்ச காலத்திலேயே இது நடந்ததாக அத்தாட்சி குறிப்பிட்டுக் காட்டுகிறது. முடிவாக, பிசாசும் அவனுடைய பேய்களும் நித்திய அழிவிற்கு உட்படுவார்கள். உன்னத அரசதிகாரத்தின் விவாதம் முடிவாகத் தீர்க்கப்பட்டிருக்கையில், கலகத்திற்கான கணக்கு நியாயமாகத் தீர்க்கப்பட்டிருக்கும்.—யோபு 1:6-12; 2:1-7; வெளிப்படுத்துதல் 12:7-9; 20:10.
கடவுளுடைய குமாரன் கணக்குக் கொடுக்க வேண்டியவராய் இருக்கிறார்
6. இயேசு தம் பிதாவிடம் கணக்குக் கொடுக்க வேண்டியவராக இருக்கும் தம் சொந்த பொறுப்பை எவ்வாறு கருதுகிறார்?
6 கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் என்னே ஒரு சிறந்த முன்மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது! ஒரு பரிபூரண மனிதராக, ஆதாமை ஒத்திருந்த இயேசு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மகிழ்ச்சி அடைந்தார். யெகோவாவின் சட்டத்திற்கு இசைந்து செல்வதைக் குறித்ததில் கணக்குக் கொடுக்க வேண்டியவராகக் கருதப்படுவதைக் குறித்தும் அவர் சந்தோஷப்பட்டார். அவரைக் குறித்து, சங்கீதக்காரன் பொருத்தமாகவே இவ்வாறு தீர்க்கதரிசனம் சொன்னார்: “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது.”—சங்கீதம் 40:8; எபிரெயர் 10:6-9.
7. தம் மரணத்திற்கு முந்தின நாள் ஜெபிக்கையில், யோவான் 17:4, 5-ல் பதிவுசெய்யப்பட்ட வார்த்தைகளை இயேசுவால் ஏன் சொல்ல முடிந்தது?
7 வெறுப்புணர்ச்சியுடன்கூடிய எதிர்ப்பை இயேசு அனுபவித்தபோதிலும், அவர் கடவுளுடைய சித்தத்தைச் செய்து, வாதனையின் கழுமரத்தில் மரணமடையும் வரையாக உத்தமத்தைக் காத்துக்கொண்டார். அதன்மூலமாக அவர் ஆதாமுடைய பாவத்தின் சாவுக்கேதுவான விளைவுகளிலிருந்து மனிதவர்க்கத்தை மீட்பதற்கான மீட்பின் கிரயத்தைச் செலுத்தினார். (மத்தேயு 20:28) எனவே, அவருடைய மரணத்திற்கு முந்தின நாள், இயேசுவால் இவ்வாறு நம்பிக்கையுடன் ஜெபிக்க முடிந்தது: “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன். பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.” (யோவான் 17:4, 5) இயேசுவால் அந்த வார்த்தைகளைத் தம்முடைய பரலோகத் தகப்பனிடம் சொல்ல முடிந்தது; ஏனென்றால் அவர் கணக்குக் கொடுக்க வேண்டிய பரீட்சையை வெற்றிகரமாக எதிர்ப்பட்டு வந்து, கடவுளுக்கு ஏற்கத்தக்கவராக இருந்தார்.
8. (அ) நம்மைக் குறித்து யெகோவா தேவனுக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று பவுல் எவ்வாறு காண்பித்தார்? (ஆ) கடவுளால் ஏற்கப்படுவதற்கு நமக்கு எது உதவி செய்யும்?
8 பரிபூரண மனிதராகிய இயேசு கிறிஸ்துவைப் போலின்றி, நாம் அபூரணராக இருக்கிறோம். இருந்தாலும், நாம் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.” (ரோமர் 14:10-12) நாம் அவ்வாறு செய்து, யெகோவாவால் ஏற்கப்படத்தக்கவண்ணம், நாம் சொல்பவற்றிலும் செய்பவற்றிலும் நம்மை வழிகாட்டும்படி, அன்பான வகையில் அவர் நமக்கு ஒரு மனச்சாட்சியையும், அவரால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளையும் தந்திருக்கிறார். (ரோமர் 2:14, 15; 2 தீமோத்தேயு 3:16, 17) யெகோவாவின் ஆவிக்குரிய ஏற்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம் மனச்சாட்சியைப் பின்பற்றுவதும் கடவுளால் ஏற்கப்படுவதற்கு நமக்கு உதவி செய்யும். (மத்தேயு 24:45-47) யெகோவாவின் பரிசுத்த ஆவி அல்லது செயல் நடப்பிக்கும் சக்தி, பலத்திற்கும் வழிநடத்துதலுக்கும் கூடுதலான ஒரு உதவியாக இருக்கிறது. ஆவியின் வழிநடத்துதலுக்கும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம் மனச்சாட்சியின் வழிகாட்டுதலுக்கும் இசைவாக நாம் செயல்பட்டால், நம்முடைய எல்லா செயல்களுக்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டிய ‘தேவனை அசட்டைபண்ணவில்லை’ என்று காண்பிக்கிறோம்.—1 தெசலோனிக்கேயர் 4:3-8; 1 பேதுரு 3:16, 21.
தேசங்களாகக் கணக்குக் கொடுக்க வேண்டியிருத்தல்
9. ஏதோமியர்கள் யார், அவர்கள் இஸ்ரவேலரை நடத்திய விதத்திற்காக அவர்களுக்கு என்ன நடந்தது?
9 யெகோவா தேசங்களைக் கணக்குக் கொடுக்கும்படி கேட்கிறார். (எரேமியா 25:12-14; செப்பனியா 3:6, 7) சவக்கடலுக்கு தெற்கிலும் அகபா வளைகுடாவுக்கு வடக்கிலுமாக அமைந்திருந்த பண்டைய ராஜ்யமாகிய ஏதோமைக் குறித்துச் சிந்தியுங்கள். ஏதோமியர்கள் செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவர்கள், இஸ்ரவேலருக்கு நெருங்கிய உறவினர்கள். ஏதோமியர்களின் முற்பிதா, ஆபிரகாமின் பேரனாகிய ஏசாவாக இருந்தபோதிலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குப் போகிற வழியிலே ஏதோமில் “ராஜ பாதை” வழியாகச் செல்வதற்கு இஸ்ரவேலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. (எண்ணாகமம் 20:14-21) நூற்றாண்டுகளினூடே ஏதோமின் கடும் வெறுப்பு, இஸ்ரவேலின்மீது இரக்கமற்ற பகையாக உருவெடுத்தது. பொ.ச.மு. 607-ல் எருசலேமை அழிக்கும்படி பாபிலோனியரைத் தூண்டியதற்காக, கடைசியில் ஏதோமியர் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாய் இருந்தனர். (சங்கீதம் 137:7) பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், அரசனாகிய நபோனிடஸின்கீழ் வந்த பாபிலோனிய துருப்புகள் ஏதோமைக் கைப்பற்றின. யெகோவா ஆணையிட்டிருந்தபடியே அது பாழாகிப்போனது.—எரேமியா 49:20; ஒபதியா 9-11.
10. மோவாபியர்கள் இஸ்ரவேலரிடமாக எவ்வாறு நடந்துகொண்டார்கள், கடவுள் எப்படி மோவாபிடம் கணக்குக் கேட்டார்?
10 மோவாபும் இதைப் போன்ற விளைவையே அனுபவித்தது. மோவாபிய ராஜ்யம், ஏதோமின் வடக்கிலும் சவக்கடலுக்குக் கிழக்கிலும் இருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்கும் முன்னர், மோவாபியர் அவர்களிடமாக உபசரிக்கும் தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை; பொருளாதார லாபத்திற்காகவே அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்திருக்க வேண்டும் என்பது தெளிவாக இருந்தது. (உபாகமம் 23:3, 4) இஸ்ரவேலை சபிக்கும்படியாக மோவாபின் அரசனாகிய பாலாக், பிலேயாம் தீர்க்கதரிசியைக் கூலிக்கும் அமர்த்தினான்; மேலும் இஸ்ரவேல் ஆண்களை ஒழுக்கக்கேட்டிற்குள்ளும் விக்கிரகாராதனைக்குள்ளும் வசப்படுத்தும்படி மோவாபிய பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். (எண்ணாகமம் 22:2-8; 25:1-9) என்றபோதிலும், இஸ்ரவேல்மீது மோவாபுக்கிருந்த பகைமையை யெகோவா கவனியாமல் விடவில்லை. தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதுபோலவே, மோவாப், பாபிலோனியரின் கைகளில் பாழாக்குதலை அனுபவித்தது. (எரேமியா 9:25, 26; செப்பனியா 2:8-11) ஆம், கடவுள் மோவாபிடம் கணக்குக் கேட்டார்.
11. மோவாபும் அம்மோனும் எந்த நகரங்களைப் போல ஆயின, தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையைக் குறித்து பைபிள் தீர்க்கதரிசனங்கள் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?
11 மோவாப் மட்டுமல்ல, அம்மோனும் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. யெகோவா இவ்வாறு முன்னறிவித்திருந்தார்: “மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்.” (செப்பனியா 2:9) சோதோம் மற்றும் கொமோரா நகரங்களைக் கடவுள் அழித்திருந்ததுபோலவே, மோவாப் மற்றும் அம்மோனின் தேசங்கள் பாழாக்கப்பட்டன. லண்டனின் நில இயல் சங்கத்தின்படி, பாழ்படுத்தப்பட்ட சோதோம் மற்றும் கொமோரா இருந்த இடங்களை, சவக் கடலின் கிழக்கு கரையோரத்தில் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உரிமை பாராட்டுகின்றனர். இதன் சம்பந்தமாக இனி கண்டுபிடிக்கப்படப்போகும் நம்பத்தக்க சான்று எதுவும், தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையும் யெகோவா தேவனால் கணக்குக் கேட்கப்படும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்களை ஆதரிப்பதாக மட்டுமே இருக்க முடியும்.—2 பேதுரு 3:6-12.
12. இஸ்ரவேல் அதன் பாவங்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியதாக இருந்தபோதிலும், யூத மீதியானோர் தொகுதி ஒன்றைப் பற்றி என்ன முன்னறிவிக்கப்பட்டிருந்தது?
12 இஸ்ரவேலுக்கு யெகோவாவால் மிகுந்த தயவு காட்டப்பட்டிருந்தபோதிலும், அதன் பாவங்களுக்காக அது கடவுளிடம் கணக்குக் கொடுக்க வேண்டியதாய் இருந்தது. இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் தேசத்தாரிடம் வந்தபோது, அவர்களில் பெரும்பாலானோர் அவரை ஏற்க மறுத்தனர். மீதியானவர்களான ஒரு தொகுதி மட்டுமே விசுவாசம் வைத்து அவரைப் பின்பற்றுகிறவர்களானார்கள். பவுல் பின்வருமாறு எழுதியபோது, குறிப்பிட்ட தீர்க்கதரிசனங்களை இந்த யூத மீதியானோருக்குப் பொருத்தினார்: “இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.” (ரோமர் 9:27-29; ஏசாயா 1:9; 10:22, 23) எலியாவின் காலத்தில் பாகாலுக்கு முன்பாக தலை குனிந்திராத 7,000 பேருடைய உதாரணத்தை அந்த அப்போஸ்தலன் குறித்துக் காட்டிவிட்டு, பின்னர் சொன்னார்: “அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.” (ரோமர் 11:5) தனிப்பட்டவர்களாக கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருந்த நபர்களால் அந்த மீதியானோர் தொகுதி உருவாக்கப்பட்டிருந்தது.
தனிப்பட்டவர்களாகக் கணக்குக் கொடுத்தலுக்கு உதாரணங்கள்
13. தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்ததற்காக கடவுள் காயீனிடம் கணக்குக் கேட்டபோது அவனுக்கு என்ன நடந்தது?
13 தனிப்பட்டவர்களாக யெகோவா தேவனுக்குக் கணக்குக் கொடுப்பது பற்றிய அநேக உதாரணங்களை பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உதாரணத்திற்கு, ஆதாமின் முதல் மகனாகிய காயீனை எடுத்துக்கொள்ளுங்கள். அவனும் அவன் சகோதரன் ஆபேல் ஆகிய இருவருமே யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்தினர். ஆபேலின் பலி கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் காயீனுடையது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முரட்டுத்தனமாகத் தன் சகோதரனைக் கொலை செய்ததற்காகக் காயீனிடம் கணக்குக் கேட்கப்பட்டபோது, அவன் எவ்வித பரிவுமின்றி கடவுளிடம் இவ்வாறு சொன்னான்: “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ”? அவனுடைய பாவத்தின் காரணமாக, காயீன் ‘ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள அகதிகளுக்குரிய தேசத்துக்கு’ துரத்திவிடப்பட்டான். தன்னுடைய குற்றத்திற்காக அவன் எவ்வித உள்ளார்ந்த மனந்திரும்புதலையும் காண்பிக்கவில்லை; அவனுக்குத் தகுந்ததாகவே இருந்த அந்தத் தண்டனையைக் குறித்தே அவன் வருந்திக்கொண்டிருந்தான்.—ஆதியாகமம் 4:3-16, NW.
14. பிரதான ஆசாரியனாகிய ஏலி மற்றும் அவருடைய குமாரரின் விஷயத்தில் தனிப்பட்ட கணக்குக் கொடுத்தல் எவ்வாறு விளக்கப்பட்டது?
14 இஸ்ரவேலின் பிரதான ஆசாரியனாக இருந்த ஏலியின் விஷயத்திலும் தனிப்பட்டவராக ஒருவர் கணக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பு விளக்கப்பட்டிருக்கிறது. அவருடைய குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் முன்னின்று செயல்படும் ஆசாரியர்களாகச் சேவித்தனர், ஆனால் “ஆட்களிடம் அநியாயமாக நடந்துகொள்வது, கடவுளிடமாக பக்தியற்ற விதத்தில் நடந்துகொள்வது, எந்த வகையான பொல்லாத காரியத்திலிருந்தும் விலகாமல் இருப்பது ஆகியவற்றிற்குக் குற்றமுள்ளவர்களாய் இருந்தனர்,” என்கிறார் வரலாற்றாசிரியர் ஜோஸிஃபஸ். இந்த “ஒன்றுக்கும் உதவாத மனிதர்கள்” யெகோவாவை ஏற்றுக்கொள்ளவில்லை, அடாத நடத்தையில் ஈடுபட்டனர், பேரளவில் ஒழுக்கக்கேட்டிற்கும் குற்றமுள்ளவர்களாய் இருந்தனர். (1 சாமுவேல் 1:3; 2:12-17, 22-25, NW) அவர்களுடைய தந்தையாகவும் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியனாகவும் இருந்ததால் அவர்களைச் சிட்சிக்க வேண்டிய கடமை ஏலிக்கு இருந்தது; அவரோ வெறுமனே அவர்களை லேசாகக் கண்டித்தார். ஏலி, ‘யெகோவாவைப் பார்க்கிலும் தன் குமாரர்களுக்கு அதிக மதிப்புக்கொடுத்து வந்தார்.’ (1 சாமுவேல் 2:29, NW) ஏலியின் வீட்டின்மீது தண்டனை வந்தது. இரு மகன்களும் அவர்கள் தந்தையும் ஒரே நாளில் இறந்தனர்; அவர்களுடைய ஆசாரியத்துவ வம்சாவழி முடிவில் முழுமையாக அறுப்புண்டுபோனது. இவ்வாறாக அந்தக் கணக்குத் தீர்க்கப்பட்டது.—1 சாமுவேல் 3:13, 14; 4:11, 17, 18.
15. அரசனாகிய சவுலின் மகன் யோனத்தான் ஏன் பலனளிக்கப்பட்டார்?
15 அரசனாகிய சவுலின் மகன் யோனத்தானால் முற்றிலும் மாறான ஒரு முன்மாதிரி வைக்கப்பட்டது. தாவீது கோலியாத்தைக் கொன்றதும், “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது;” மேலும் அவர்கள் நட்பின் உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டார்கள். (1 சாமுவேல் 18:1, 3) கடவுளுடைய ஆவி சவுலை விட்டு நீங்கியது என்பதை யோனத்தான் பகுத்துணர்ந்திருக்கக்கூடும், ஆனால் உண்மை வணக்கத்திற்கான அவரது சொந்த வைராக்கியம் குறைவுபடாமல் இருந்தது. (1 சாமுவேல் 16:14) தாவீதுக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தினிடமாக யோனத்தான் கொண்டிருந்த போற்றுதல் ஒருபோதும் தடுமாறவில்லை. யோனத்தான், கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டிய தன் பொறுப்பை உணர்ந்தார்; அவருடைய மதிக்கத்தக்க போக்கிற்காக, அவருடைய குடும்ப வம்சாவழி தலைமுறைகளுக்குத் தொடரும்படி பார்த்துக்கொள்வதன்மூலம் யெகோவா அவருக்குப் பலனளித்தார்.—1 நாளாகமம் 8:33-40.
கிறிஸ்தவ சபையில் கணக்குக் கொடுத்தல்
16. தீத்து யார், அவர் தன்னைக் குறித்து கடவுளுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்தார் என்று ஏன் சொல்லப்படலாம்?
16 தங்களைக் குறித்து ஒரு நல்ல கணக்கைக் கொடுத்த அநேக கிறிஸ்தவ ஆண்களையும் பெண்களையும் பற்றி கிரேக்க வேத எழுத்துக்கள் சாதகமான முறையில் பேசுகின்றன. உதாரணமாக, தீத்து என்ற பெயரை உடைய கிரேக்க கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். சீப்புருவுக்குச் சென்ற பவுலின் முதல் மிஷனரி பயணத்தின்போது அவர் கிறிஸ்தவரானார் என்று தெரிய வருகிறது. சீப்புருவிலுள்ள யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தேயின்போது எருசலேமில் இருந்திருப்பார்கள் என்பதால், அதற்குப் பின் சீக்கிரத்தில் கிறிஸ்தவம் அந்தத் தீவைச் சென்றெட்டியிருக்கக்கூடும். (அப்போஸ்தலர் 11:19) இருந்தபோதிலும், தீத்து, பவுலின் உண்மையுள்ள சக ஊழியர்களில் ஒருவராக நிரூபித்தார். விருத்தசேதனத்தைப் பற்றிய முக்கிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டபோது, சுமார் பொ.ச. 49-ல் எருசலேமுக்குச் சென்ற பயணத்தில் அவர் பவுலோடும் பர்னபாவோடும் சேர்ந்து சென்றார். தீத்து விருத்தசேதனம் செய்யப்படாமல் இருந்ததுதானே, கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இருக்கக்கூடாது என்ற பவுலின் தர்க்கத்திற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்தது. (கலாத்தியர் 2:1-3) தீத்துவின் சிறந்த ஊழியம் வேதவார்த்தைகளில் சான்றளிக்கப்பட்டிருக்கிறது; கடவுளால் ஏவப்பட்ட ஒரு கடிதத்தைக்கூட பவுல் அவருக்கு எழுதினார். (2 கொரிந்தியர் 7:6; தீத்து 1:1-4) தீத்து தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவுபரியந்தம் வரையாக, தொடர்ந்து தன்னைப்பற்றி கடவுளுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்துவந்தார் என்பது தெளிவாக இருக்கிறது.
17. தீமோத்தேயு எப்படிப்பட்ட கணக்கைக் கொடுத்தார், மேலும் இந்த உதாரணம் நம்மை எவ்வாறு பாதிக்கலாம்?
17 தன்னைக் குறித்து யெகோவா தேவனுக்கு ஏற்கத்தக்க கணக்குக் கொடுத்த மற்றொரு வைராக்கியமான நபர் தீமோத்தேயு. தீமோத்தேயுவுக்குச் சில உடல்நல பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவர் ‘மாய்மாலமற்ற விசுவாசத்தை’ வெளிக்காட்டினார், மேலும் ‘சுவிசேஷத்தினிமித்தம் பவுலுடன்கூட ஊழியம் செய்தார்.’ அதன் காரணமாக பிலிப்பியிலுள்ள உடன் கிறிஸ்தவர்களிடம் அந்த அப்போஸ்தலனால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி [தீமோத்தேயுவையன்றி] வேறொருவனும் என்னிடத்திலில்லை.” (2 தீமோத்தேயு 1:5, NW; பிலிப்பியர் 2:20, 22; 1 தீமோத்தேயு 5:23) மனித குறைபாடுகளையும் வேறு சோதனைகளையும் எதிர்ப்படுகையில், நாமும்கூட மாய்மாலமற்ற விசுவாசத்தைக் கொண்டிருந்து நம்மைக் குறித்து ஏற்கத்தக்க ஒரு கணக்கைக் கடவுளுக்குக் கொடுக்க முடியும்.
18. லீதியாள் யார், அவர் என்ன மனப்பான்மையை வெளிக்காட்டினார்?
18 லீதியாள், தேவபக்தியுள்ள ஒரு பெண்ணாக இருந்தார்; அவர் தெளிவாகவே தன்னைப்பற்றி கடவுளுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்தவர். அவரும் அவரது குடும்பத்தாரும், சுமார் பொ.ச. 50-ல் பவுலினுடைய ஊழியத்தின் காரணமாக ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்ட முதல் நபர்களில் அடங்குவர். தியத்தீரா ஊரைச் சேர்ந்தவராயிருந்த லீதியாள் ஒருவேளை யூத மதத்திற்கு மதமாறியவராக இருந்திருக்கலாம்; ஆனால் பிலிப்பியில் ஒருசில யூதர் மட்டுமே இருந்திருந்து, அவர்களுக்குரிய ஜெப ஆலயம் எதுவும் இல்லாமலும் இருந்திருக்கலாம். அவரும் பக்தியுள்ள மற்ற பெண்களும் வழக்கமாய் ஓர் ஆற்றினருகே கூடிவந்தனர், அப்போது பவுல் அவர்களிடம் பேசினார். அதன் விளைவாக, லீதியாள் ஒரு கிறிஸ்தவராகி, பவுலும் அவரது கூட்டாளிகளும் தன்னுடன் தங்கும்படி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். (அப்போஸ்தலர் 16:12-15) லீதியாள் காண்பித்த உபசரிப்பு, உண்மை கிறிஸ்தவர்களை வேறுபடுத்திக் காட்டும் தனிப்பண்பாக இருக்கிறது.
19. என்ன நல்ல செயல்கள் மூலமாக தொற்காள், கடவுளுக்கு சிறந்ததோர் கணக்கைக் கொடுத்தார்?
19 தன்னைப் பற்றி யெகோவா தேவனுக்குச் சிறந்ததோர் கணக்குக் கொடுத்தலை செய்த மற்றொரு பெண் தொற்காள். அவர் இறந்தபோது, யோப்பாவில் வாழ்ந்துவந்த சீஷர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பேதுரு அங்கு சென்றார். பேதுருவைச் சந்தித்த இரண்டு மனிதரும் “அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.” தொற்காள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டார். ஆனால் அவருடைய மிகத் தாராளமான மனப்பான்மைக்காக மட்டுமே அவர் நினைவுகூரப்பட வேண்டுமா? இல்லை. அவர் ஒரு “சீஷி,” மேலும் அவர்தாமே சீஷராக்கும் வேலையில் நிச்சயமாக ஈடுபட்டிருந்தார். அதேவிதமாகவே இன்று கிறிஸ்தவ பெண்கள் ‘நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய் செய்துவருகிறார்கள்.’ ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதிலும் சீஷர்களை உண்டுபண்ணுவதிலும் ஒரு சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருப்பதிலும் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.—அப்போஸ்தலர் 9:36-42; மத்தேயு 24:14; 28:19, 20.
20. நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
20 தேசங்களும் தனி நபர்களும் ஈடற்ற பேரரசராயிருக்கிற கர்த்தராகிய யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று பைபிள் தெளிவாகக் காண்பிக்கிறது. (செப்பனியா 1:7) நாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்தால், இவ்வாறு நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம், ‘கடவுளால் கொடுக்கப்பட்ட சிலாக்கியங்களையும் பொறுப்புகளையும் நான் எவ்வாறு கருதுகிறேன்? யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் என்னைக் குறித்து என்ன வகையான கணக்கை நான் கொடுத்துவருகிறேன்?’
உங்கள் பதில்கள் என்ன?
◻ தேவதூதர்களும் கடவுளுடைய குமாரனும் யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர் என்று நீங்கள் எவ்வாறு நிரூபிப்பீர்கள்?
◻ தேசங்களை கடவுள் தமக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவையாகக் கருதுகிறார் என்று காண்பிக்க என்ன பைபிள் உதாரணங்கள் இருக்கின்றன?
◻ தனிப்பட்டவர்களாக கணக்குக் கொடுத்தலைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
◻ யெகோவா தேவனுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்த, பைபிள் பதிவிலுள்ள சில தனி நபர்கள் யாவர்?
[பக்கம் 10-ன் படம்]
இயேசு கிறிஸ்து தம்மைக் குறித்து தம் பரலோக பிதாவுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்தார்
[பக்கம் 15-ன் படம்]
தொற்காளைப் போல, கிறிஸ்தவப் பெண்கள் இன்று தங்களைக் குறித்து யெகோவா தேவனுக்கு ஒரு சிறந்த கணக்கைக் கொடுக்கின்றனர்
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
The Death of Abel/The Doré Bible Illustrations/Dover Publications, Inc.