‘கடவுளுடைய மலையின்’ தேசத்தில் ஒரு ‘சாட்சி குவியல்’
கண்டத்தின் வரைபடம் ஒன்றில், மேற்கு ஆப்பிரிக்க எல்லையின் கரையோரத்தை பின்பற்றி கிழக்கு திசையை நோக்கி கினீ வளைகுடா ஓரமாக நீங்கள் சென்றால், தெற்கு பக்கமாக கரை திரும்பும் முனையில் நீங்கள் காமரூனைக் காண்பீர்கள். நீங்கள் தெற்கு திசையில் கரையோரமாக தொடர்ந்து சென்றால், நீண்டு பரந்துகிடக்கும் கருமைநிற மணல்நிறைந்த கடற்கரையோரங்களுக்கு வருவீர்கள். காமரூன் மலையின் எரிமலை எழுச்சியின் காரணமாக அங்கு கருமைநிற மணல் உள்ளது.
இந்தக் கூம்பு வடிவான, 4,070-மீட்டர் உயரமுள்ள மலை உச்சி, அப்பிராந்தியம் முழுவதிலும் மேலோங்கி நிற்கிறது. அஸ்தமிக்கும் கதிரவன் காமரூன் மலைச்சரிவுகளை ஒளியால் தோய்விக்கும்போது, அது கண்ணைக் கவர்ந்து ஆட்கொள்ளும் வண்ணங்களை—வெளிர் ஊதா நிறம், ஆரஞ்சு, பொன்னிறம், செந்நிறம்—கண்ணுக்கு விருந்தாக அளிக்கிறது. கடலும் அருகாமையிலுள்ள சதுப்புநிலங்களும் இந்த மென்னிறங்கள் அனைத்தையும் ஒரு கண்ணாடியைப் போல் பிரதிபலிக்கின்றன, அது ஏறக்குறைய வானத்திலிருந்து பூமியை வேறுபடுத்தி காணமுடியாததுபோல செய்துவிடுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மவாத இனக்குழுவினர் அந்த மலையை மாங்கோ மா லோபா என்று ஏன் பெயரிட்டனர் என்பதை புரிந்துகொள்வது சுலபமாயிருக்கிறது; அது “கடவுட்களின் இரதம்,” அல்லது மிகச் சாதாரணமாக, “கடவுளுடைய மலை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
தென்திசையில் வெகுதொலைவில், தென்னை மரங்களை கரையோரங்களில் உடைய வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரைகள் பல கிலோமீட்டர் நீளத்துக்கு பரந்திருக்கின்றன. எளிய வனப்புமிக்க கரையோரம் நீங்கலாக, காங்கோ மற்றும் மத்திப ஆப்பிரிக்கக் குடியரசு எல்லை வரையும் வடக்கே நைஜீரியா மற்றும் சப்-சஹாரா சாத் வரையும் தேசத்தின் பெரும்பகுதி அடர்த்தியான பூமத்திய ரேகை காடுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. தேசத்தின் மேற்குப் பகுதி மலைப்பிரதேசமாய் இருக்கிறது, பிரயாணம் செய்பவருக்கு ஐரோப்பாவின் பகுதிகளை இது நினைப்பூட்டுகிறது. இருப்பினும், அங்குள்ள உஷ்ணமான சீதோஷ்ண நிலை பூமத்திய ரேகைக்கு வெகு அருகாமையில் நீங்கள் இருப்பதை மறந்துவிடாமலிருக்கச் செய்யும். அதன் நாட்டுப்புற பகுதியின் பல்வகைப்பட்ட தன்மை, ஆப்பிரிக்க கண்டத்தை ஒரு சிறிய அளவில் காமரூன் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று விவரிப்பதற்கு அநேக பயண வழிகாட்டிகளை வழிநடத்துகிறது. இந்த உணர்ச்சி வித்தியாசமான இனத்தொகுதிகளாலும் 220-க்கும் மேற்பட்ட ஆட்சி மொழிகள் மற்றும் கிளைமொழிகளாலும் உறுதிசெய்யப்படுகிறது.
நீங்கள் காமரூனை விஜயம் செய்தால், டுயாலா துறைமுகப் பட்டணத்திலுள்ள பெரிய ஹோட்டல்கள் ஒன்றில் தங்கலாம், அல்லது தலைநகர் யவோவ்ண்ட்-ல் தங்கலாம். ஆனால் நீங்கள் ஜனங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் விசேஷமாக 24,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் இந்தக் “கடவுளுடைய மலை”யின் தேசம் முழுவதும் “சாட்சி குவியலை” கட்டுவதில் சுறுசுறுப்பாய் இருந்திருக்கின்றனர் என்பதை பற்றியும் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை இழந்துவிடலாம்.a அவர்களில் சிலரை சந்திப்பதற்கு ஏன் அத்தேசத்துக்கு பயணம் செய்யக்கூடாது? இந்த மேற்கு ஆப்பிரிக்க தேசத்துக்கு நீங்கள் ஆய்வுப்பயணம் செய்வது நிச்சயமாகவே முற்றிலும் பலனளிப்பதாய் இருக்கும்.
மரப்படகு, புஷ் டாக்ஸி, அல்லது சைக்கிள் மூலம் பயணமா?
காமரூனில் உள்ள சனகா என்ற மிக நீளமான நதி கடலை சென்றடையும்போது, ஒரு பெரிய கழிமுகத்தை உண்டுபண்ணுகிறது. இந்தப் பெரிய நிலப்பரப்பின் மீது குடியிருக்கும் மக்கள் அனைவரையும் சென்றெட்டுவதற்கு, யெகோவாவின் சாட்சிகள் பெரும்பாலும் மரப்படகுகளில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. எம்பிக்கோவில் உள்ள ஒன்பது ராஜ்ய பிரஸ்தாபிகள் அடங்கிய சிறு தொகுதியினர் இதைத்தான் செய்கின்றனர். அவர்களில் இரண்டு பேர் யோயோ என்ற கிராமத்தில் 25 கிலோமீட்டர் தூரம் தள்ளி வாழ்கின்றனர். அவர்கள் எம்பிக்கோவை சென்றடைவதற்கு துடுப்பினால் படகை விரைவாக ஓட்டிச்செல்ல வேண்டியிருக்கிறது, அப்படி இருந்தபோதிலும் அவர்கள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு எப்போதும் ஆஜராயிருக்கிறார்கள். இந்தத் தொகுதியைச் சந்திக்கையில் ஒரு பயணக் கண்காணி, யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்) என்ற வீடியோவை காண்பிப்பதற்கு ஆலோசனை கூறினார். ஆனால் அதைச் செய்வதைக் காட்டிலும் சொல்வது எளிது. அந்தத் தொலைக்கோடி தூரத்தில் உள்ள கிராமத்தில் வீடியோவைக் காண்பிப்பதற்கு, வீடியோகேசட் ரெக்கார்டர், டிவி, மின்சாரம் ஆகியவை அவருக்கு எங்கிருந்து கிடைக்கும்?
வட்டார ஊழியரின் சந்திப்பு வாரத்தின்போது, சில பிரஸ்தாபிகள் உள்ளூர் சர்ச்சின் பாஸ்டரை சந்தித்தனர். அவர்கள் ஆச்சரியப்படும்விதத்தில், அந்தப் பாஸ்டர் அவர்களை அன்போடு வரவேற்றார், அவரோடு சுவாரஸ்யமான பைபிள் கலந்தாலோசிப்பை அவர்கள் நடத்தினர். பாஸ்டர் ஒரு விசிஆர் மட்டுமல்லாமல் ஜெனரேட்டரும்கூட வைத்திருந்தார் என்பதை சகோதரர்கள் கவனித்தபோது, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவருடைய சாதனங்களை இரவல் கேட்டனர். அதற்கு முன்பு பைபிள் கலந்தாலோசிப்பை மகிழ்ச்சியோடு அனுபவித்ததால், பாஸ்டர் உதவிசெய்வதற்கு ஒப்புக்கொண்டார். சனிக்கிழமை மாலை பாஸ்டரும் அவருடைய சர்ச்சின் பெரும்பாலான அங்கத்தினர்கள் உட்பட 102 பேரும் அப்படக்காட்சிக்கு வந்தனர். யோயோவிலிருந்து வந்திருந்த இரண்டு சாட்சிகள் ஆர்வம் காண்பித்த அநேக ஆட்களை இரண்டு படகுகளில் கூட்டிக்கொண்டு வந்தனர். மேலே உயர எழும் நீரோட்டத்தின் பேரலைகளுக்கு எதிராய் ஓட்டிச்செல்வதைப் பற்றி அவர்கள் அவ்வளவாய் பொருட்படுத்தவில்லை. வீடியோவை பார்த்த பின்னர், அவர்கள் மிகவும் ஆழமாய் தூண்டப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டனர்; யெகோவாவை கனப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ள பெரும் அமைப்பைச் சேர்ந்தவர்களாய் இருப்பதைக் குறித்து அவர்கள் பெருமைப்பட்டனர்.
மரப்படகுகளால் செல்லமுடியாத இடங்களுக்குச் செல்வதற்கு ஒருவர் புஷ் டாக்ஸியை பயன்படுத்தலாம். பயணிகளுக்காக இந்த டாக்ஸிகள் காத்திருக்கும் நிறுத்துமிடங்கள் எப்போதும் ஜேஜேவென்று இருக்கின்றன. குளிர்ந்த தண்ணீர் விற்பனை செய்பவர்கள், வாழைப்பழம் விற்பவர்கள், பஸ் வாயிலோன் ஆகியோரால் சூழப்பட்டு முற்றிலுமாக குழப்பமடைந்து விடுவது சுலபம். காத்துக்கொண்டிருக்கும் புஷ் டாக்ஸிக்குள் பிரயாணம் செய்பவர்களை ஏற்றுவது பஸ் வாயிலோனின் வேலையாகும், அவர்கள் சொல்படி, “செல்வதற்கு தயார்.” என்றபோதிலும், “தயார்” என்ற சொல்லை அப்படியே அர்த்தங்கொள்ளக்கூடாது. பிரயாணம் செய்பவர்கள் பல மணிநேரங்கள், சில சமயங்களில் பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். எல்லா பயணிகளையும் உள்ளே நெருக்கித் திணித்த பின்பு, மூட்டை முடிச்சுகள், விளைபொருள்கள் அடங்கிய பைகள், சில சமயங்களில் உயிரோடிருக்கும் கோழிகள், ஆடுகள் ஆகியவற்றையும்கூட டிரைவர் ஸ்டான்டுகளில் நன்கு செருகி வைத்த பிறகு, ஆட்டி அலைக்கழிக்கும் தூசி நிறைந்த சாலைகளில் புஷ் டாக்ஸி செல்ல ஆரம்பிக்கிறது.
இவ்வகையான போக்குவரத்தினால் உற்சாகமிழந்திருந்த ஒரு பயணக் கண்காணி சுதந்திரமாகச் செல்வதற்கு விரும்பினார். அவர் இப்போது எல்லா பயணங்களையும் சைக்கிளிலேயே செய்கிறார். அவர் சொல்கிறார்: “ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு செல்ல நான் சைக்கிளை பயன்படுத்த தீர்மானித்ததிலிருந்து, நேரத்துக்கு நான் சந்திப்புகளுக்கு எப்போதும் செல்லமுடிகிறது. பயணம் பல மணிநேரங்கள் எடுக்கலாம் என்பது உண்மை, ஆனால் புஷ் டாக்ஸிகளுக்காக நான் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. மழைக்காலத்தின்போது, சில சாலைகள் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏறக்குறைய முழுவதுமாக மறைந்துவிடுகின்றன. இப்படி தண்ணீரும் சேறும் நிறைந்த பகுதிகளைக் கடந்துசெல்வதற்கு நீங்கள் உங்கள் ஷூக்களை கழற்றிவிட வேண்டும். ஒருநாள் என் ஷூக்களில் ஒன்று ஒரு ஓடைக்குள் விழுந்துவிட்டது, அது பல வாரங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது; யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருடைய மகள் மீன்பிடித்துக்கொண்டிருக்கையில் அதை எதிர்பாராதவிதத்தில் கண்டுபிடித்தாள்! இந்த ஷூக்களில் ஒன்று மீன்களோடு கொஞ்சகாலத்தை கழித்தபிறகு மறுபடியும் அவற்றை அணிந்துகொள்வதில் சந்தோஷப்படுகிறேன். யெகோவாவின் சாட்சிகள் முன்பு பிரசங்கித்திராத பிராந்தியங்கள் வழியாய் நான் சில சமயங்களில் செல்கிறேன். நான் என்ன வைத்திருக்கிறேன் என்று கிராமவாசிகள் எப்போதும் என்னிடம் கேட்கின்றனர். ஆகையால் நான் பத்திரிகைகளையும் சிற்றேடுகளையும் என் கைவசம் வைத்திருப்பேன். நான் ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும், பைபிள் அடிப்படையிலான இந்தப் பிரசுரங்களை அளித்து ஒரு சுருக்கமான சாட்சி கொடுப்பேன். யெகோவா இந்தச் சத்திய விதைகள் வளரும்படி செய்வார் என்று நம்புகிறேன்.”
எல்லைக்குள் நெடுந்தொலைவில்
காமரூனின் நடுப்பகுதியில் நெடுந்தொலைவில், காடுகளின் உட்பகுதிகளில் மறைந்திருக்கும் கிராமங்களிலும்கூட யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கின்றனர். இது பெரும் முயற்சியை தேவைப்படுத்துகிறது, ஆனால் பலன்களோ இதயத்துக்கு அனலூட்டுவதாய் இருக்கின்றன.
மாரி என்ற ஒரு முழுநேர ஊழியர் ஆர்லெட் என்ற ஒரு இளம் பெண்ணோடு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் உள்ள வழக்கத்தின்படி, முதல் படிப்பின் முடிவில் திரும்பிச் செல்லும்போது ஆர்லெட் தன்னோடுகூட வாசல் வரை வருவாளா என்று மாரி அவளை கேட்டார். என்றபோதிலும், தன் பாதங்களில் உள்ள வலியின் காரணமாக நடப்பதற்கு கடினமாயிருப்பதாக அந்த இளம் பெண் விளக்கினாள். ஆர்லெட்டின் பாதங்களில் ஒருவகை உண்ணி தொற்றிக்கொண்டிருந்தது, அதில் பெண்ணினத்தைச் சேர்ந்த உண்ணி தசைக்குள் துளைத்துச் சென்று கட்டிகளை உண்டாக்குகிறது. மாரி அந்த உண்ணிகளை தைரியமாக ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துப்போட்டார். இந்த இளம் பெண் இரவில் பிசாசுகளால் வதைக்கப்பட்டாள் என்பதையும்கூட பின்னர் அறிந்துகொண்டார். ஒருவர் யெகோவாவின் பேரில் எவ்வாறு நம்பிக்கை வைத்து, ஜெபத்தில் சப்தமாக அவருடைய பெயரை அழைப்பதன் மூலம் குறிப்பாக அதைச் செய்யலாம் என்பதை மாரி பொறுமையோடு விளக்கினார்.—நீதிமொழிகள் 18:10.
ஆர்லெட் மிகவும் விரைவாக முன்னேற்றம் செய்தாள். அவள் சரீர வளர்ச்சியிலும் அறிவாற்றலிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் செய்ததைப் பார்த்து முதலில் அவளுடைய குடும்பத்தார் படிப்பதில் எவ்வித தவறுமில்லை என்று நினைத்தனர். ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆக வேண்டும் என்று அவள் விரும்பியதை அவர்கள் அறிந்தபோது, அவள் தொடர்ந்து படிப்பதை தடுத்து நிறுத்தினர். மூன்று வாரங்களுக்குப் பின்பு ஆர்லெட்டின் தாய், தன் மகள் எவ்வளவு வேதனைப்படுகிறாள் என்பதை உணர்ந்தபோது, மாரியோடு தொடர்புகொண்டு மறுபடியும் படிப்பை தொடரும்படி கூறினார்.
ஒரு வட்டார மாநாட்டுக்கு ஆஜராகும் நேரம் வந்தபோது, இரண்டு நாட்கள் பயணத்துக்கும் ஆர்லெட்டை கொண்டுசெல்வதற்கு மாரி ஒரு டாக்ஸி டிரைவருக்கு பணம் கொடுத்தார். இருப்பினும், சாலைக்கு செல்லும் பாதையை கடந்துசெல்லவே முடியாது என்று முடிவெடுத்து டிரைவர் ஆர்லெட்டின் வீடு வரை ஓட்டிச்செல்ல மறுத்தார். ஆகையால் மாரி ஆர்லெட்டை சாலைக்கு எப்படியோ கொண்டுவந்து விட்டார். யெகோவா இந்த முயற்சிகளை நிச்சயமாகவே ஆசீர்வதித்தார். இன்று ஆர்லெட் எல்லா சபை கூட்டங்களுக்கும் ஆஜராகிறாள். இதைச் செய்வதற்கு அவளுக்கு உதவிட, மாரி அவளைக் கூட்டிச்செல்வதற்கு சோர்வின்றி வருகிறார். அவர்கள் இருவருமாக ஒன்றுசேர்ந்து ஒவ்வொரு முறையும் 75-நிமிடம் நடக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை கூட்டம் காலை 8:30 மணிக்கு ஆரம்பமாவதால், மாரி வீட்டை விட்டு 6:30-க்கு புறப்பட வேண்டியிருக்கும்; இருந்தபோதிலும் அவர்களால் நேரத்துக்கு வந்துசேர முடிகிறது. ஆர்லெட் விரைவில் தன் ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்திக் காண்பிக்க விரும்புகிறாள். மாரி சொல்கிறார்: “அவள் படிக்க ஆரம்பித்தபோது அவளைக் காணாமல் இருந்தவர்கள் அவள் எவ்வளவு மாறியிருக்கிறாள் என்பதைக் கற்பனை செய்யமுடியாது. யெகோவா அவளை ஆசீர்வதித்திருக்கும் விதத்தைக் குறித்து நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்.” மாரி நிச்சயமாகவே சுயதியாகமுள்ள அன்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாய் இருக்கிறார்.
வடக்கே வெகுதொலைவில்
வட காமரூன் முனைப்பான வேறுபாடுகளும் வியப்பான காரியங்களும் நிறைந்ததாய் உள்ளது. மழைகாலத்தின்போது, அது ஒரு பெரிய வளங்கொழிக்கும் தோட்டமாக மாறுகிறது. ஆனால் வாட்டுகிற வெயில் வரும்போது, புற்கள் கருகிவிடுகின்றன. மதிய வேளையில், உச்சி வெயிலின்போது நிழலை கண்டுபிடிப்பது கடினமாகையில், வீடுகளின் சிகப்புநிற மண்சுவர்களுக்கு எதிரே ஆடுகள் தங்களை நெருக்கிக்கொண்டு நிற்கும். மணல் மற்றும் கருகிப்போன புற்களுக்கிடையே, பசுமையான செடிகொடிகள் இருந்ததற்கான ஒரே அடையாளம் பாபோப் மரங்களின் ஒருசில இலைகளாகும். இந்த மரங்கள் பூமத்தியரேகை காடுகளில் உள்ள அதே இனத்தைச் சேர்ந்த மரங்களைப் போல் பெரிதாக இல்லாவிட்டாலும், அவற்றைப் போன்றே பலம்பொருந்தியவையாய் இருக்கின்றன. கடுமையான சூழலைச் சகித்துக்கொள்வதற்கு அவற்றிற்கு இருக்கும் திறமை, சத்தியத்தின் ஒளியைப் பிரகாசிக்கச்செய்வதற்காக இந்தப் பகுதியில் வாழச்சென்ற ஒருசில சாட்சிகளின் வைராக்கியத்தையும் தைரியத்தையும் நன்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள சில சபைகள் 500 முதல் 800 கிலோமீட்டர் தூரம்வரை பிரிக்கப்பட்டிருக்கின்றன, மேலும் தனிமையாக ஒதுக்கப்பட்ட உணர்வு ஏற்படுவது முற்றிலும் உண்மையே. ஆனால் அங்கு மிகுதியான ஆர்வம் உள்ளது. மற்ற பிராந்தியங்களிலிருந்து வரும் சாட்சிகள் உதவி செய்வதற்கு இங்கே வருகின்றனர். ஊழியத்தில் திறம்பட்டவர்களாய் இருப்பதற்கு, அவர்கள் ஃபுஃபுல்டா என்ற ஒரு உள்ளூர் கிளைமொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கருவாவிலிருந்து ஒரு சாட்சி, சுமார் 160 கிலோமீட்டர் தூரத்திலிருந்த, தான் பிறந்த கிராமத்தில் சில நாட்கள் பிரசங்கிப்பதற்கு தீர்மானித்தார். அவர் அக்கறை காண்பித்த சிலரை கண்டுபிடித்தார், ஆனால் போக்குவரத்து செலவுகள் மிகவும் அதிகமாய் இருந்தபடியால் அவரால் ஒழுங்காக திரும்பச் சென்று சந்திக்க முடியவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, அக்கறை காண்பித்த நபர்களில் ஒருவரிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்றுக்கொண்டார்; அதில் அவரை மறுபடியும் வந்து பார்க்கும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தார். கட்டணத்துக்கான பணம் இன்னும் குறைவுபட்டதால் அவரால் போக முடியவில்லை. அவருடைய சந்திப்புக்காக அந்தக் கிராமத்தில் பத்து பேர் காத்துக்கொண்டிருந்தனர் என்பதை கருவாவில் உள்ள அவருடைய வீட்டிற்கு அந்த நபர் வந்து கூறியபோது சாட்சி எவ்வளவு ஆச்சரியமடைந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!
மற்றொரு கிராமத்தில், சாத் என்ற இடத்தின் எல்லைக்கு அருகாமையில், ஆர்வம் காண்பித்த 50 நபர்கள் அடங்கிய தொகுதியினர் தங்கள் சொந்த பைபிள் படிப்பை ஒழுங்கமைத்திருக்கின்றனர். சாத்-ல் மிகவும் அருகாமையில் இருந்த சபையில் நடக்கும் கூட்டங்களுக்கு ஆஜராகும்படி தங்களில் மூன்று பேரை அவர்கள் ஏற்பாடு செய்தனர். திரும்பி வந்த பிறகு, இவர்கள் முழு தொகுதியுடனும் பைபிள் படிப்பு நடத்துவார்கள். உண்மையில், இயேசுவின் வார்த்தைகள் இங்கு நன்றாக பொருந்தும்: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.”—மத்தேயு 9:37, 38.
பட்டணங்களில் சாட்சிகொடுத்தல்
பல வருடங்களாக பிரசுரங்களின் பற்றாக்குறைக்குப் பிறகு, சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் காமரூனில் தாராளமாக கிடைக்க ஆரம்பித்தன. இந்தப் பத்திரிகைகளின் பேரில் மிகுதியான ஆர்வமும் அக்கறையும் உள்ளது, ஏனென்றால் அநேக ஜனங்கள் இவற்றை முதல் முறையாக வாசிக்கின்றனர். இந்தப் பட்டணங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட ஓர் இளம் விசேஷ பயனியர் தம்பதியினர் தங்கள் புதிய பிராந்தியத்தில் முதல் நாள் காலை 86 பத்திரிகைகளை அளித்தனர். சில பிரஸ்தாபிகள் 250 பத்திரிகைகள் வரை ஒரு மாதத்தில் அளிக்கின்றனர்! அவர்களுடைய வெற்றியின் இரகசியம் என்ன? எல்லாருக்கும் பத்திரிகைகளை அளியுங்கள்.
பொதுமக்கள் வரும் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு சாட்சி, எப்போதும் பத்திரிகைகளை பலர் காணும்படி வைக்கிறார். ஒரு பெண் பத்திரிகைகளை பார்த்தார், ஆனால் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. அந்தச் சாட்சி அவளுடைய அக்கறையை கண்டுணர்ந்து ஒரு பிரதியை அளித்தார், அதை அவள் ஏற்றுக்கொண்டாள். அதற்கு அடுத்த நாள் அவள் திரும்பி வருவதை கண்டபோது அவர் ஆச்சரியமடைந்தார். தான் எடுத்துக்கொண்ட பத்திரிகைக்கு நன்கொடையளிக்க விரும்பியது மட்டுமல்லாமல் கூடுதலான பத்திரிகைகளையும் கேட்டாள். ஏன்? கற்பழிப்புக்கு ஆளாகியிருந்ததால், அவள் அந்தப் பொருளின் பேரிலிருந்த பத்திரிகையை தேர்ந்தெடுத்தாள். அதில் கொடுக்கப்பட்டிருந்த புத்திமதியை மறுபடியும் மறுபடியுமாக வாசிப்பதில் முழு இரவையும் அவள் செலவழித்திருந்தாள். மனபாரம் குறைந்துவிட்டது போல் உணர்ந்தவளாய், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள விரும்பினாள்.
சிறு பிள்ளைகளும்கூட பைபிளின் நம்பிக்கையளிக்கும் செய்தியை பரப்புவதில் பங்குகொள்ளலாம். கத்தோலிக்க பாட்டு ஒன்றை பாடும்படி ஆறு வயது சாட்சி பெண்ணை அவளுடைய ஆசிரியர் கேட்டுக்கொண்டபோது, தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்று சொல்லி அதைப் பாட மறுத்துவிட்டாள். பிறகு அந்த ஆசிரியர் அப்பெண்ணினுடைய மத பாடல் ஒன்றை பாடும்படி கேட்டுக்கொண்டார், அதன் பேரில் அவர் மதிப்பெண் கொடுப்பதாக கூறினார். “பரதீஸ் பற்றிய தேவ வாக்கு” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் பாடலை அவள் தேர்ந்தெடுத்து பாராமல் பாடினாள். “உன் பாடலில் பரதீஸைக் குறித்து நீ குறிப்பிடுகிறாய். இந்தப் பரதீஸ் எங்கே இருக்கிறது?” என்று ஆசிரியர் அவளைக் கேள்வி கேட்டார். பூமியின் மீது வெகு சீக்கிரத்தில் பரதீஸை நிலைநாட்டுவதற்கான கடவுளுடைய நோக்கத்தை அந்தப் பெண் விளக்கினாள். அவளுடைய பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆசிரியர் அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகம் வேண்டும் என்று அவளுடைய பெற்றோரை கேட்டார். மதத்தின்பேரில் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்கள் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்காமல் அப்புத்தகத்திலிருந்து அவள் கற்றுக்கொண்டதன் பேரில் மதிப்பெண் கொடுக்க அவர் விருப்பமுள்ளவராயிருந்தார். அவளுக்கு சரியான மதிப்பெண் கொடுக்க அவர் விரும்பினால், அவரே முதலாவது படிக்க வேண்டும் என்று பெற்றோர் ஆலோசனை கூறினர். அவரோடு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
விஜயம் செய்ய திட்டமிடுகிறீர்களா?
இன்று உலகின் அநேக பகுதிகளில், ஜனங்கள் ராஜ்ய நற்செய்திக்கு அலட்சிய மனநிலையைக் காண்பிக்கின்றனர். கடவுள் பேரிலோ அல்லது பைபிளிலோ அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. இன்னும் சிலர் பயத்தால் தடுமாற்றமடைந்து வீட்டுக்கு வரும் எந்த அந்நியருக்கும் செவிகொடுக்க மறுக்கின்றனர். இவையனைத்தும் யெகோவாவின் சாட்சிகளுக்கு அவர்கள் செய்யும் ஊழியத்தில் பெரிய சவாலாய் இருக்கின்றன. ஆனால் காமரூனில் என்னே ஒரு வித்தியாசம்!
வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிப்பது இங்கு மகிழ்ச்சி தரும் விஷயம். கதவைத் தட்டுவதற்குப் பதிலாக, “காங், காங், காங்,” என்று அழைப்பது வழக்கமாயிருக்கிறது. பின்னர் உள்ளேயிருந்து ஒரு குரல், “யார் அது?” என்று கேட்கும், அதற்குப் பிறகு நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று எங்களை அறிமுகப்படுத்திக்கொள்வோம். பெற்றோர் மரத்தின் நிழலில் வழக்கமாக மாமரத்தின் கீழ் பெஞ்சுகளை எடுத்து வந்து போடுமாறு தங்கள் பிள்ளைகளை கேட்டுக்கொள்வர். கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன, மனிதவர்க்கத்தை துயரார்ந்த நிலையிலிருந்து விடுவிப்பதற்கு அது என்ன செய்யும் என்பதை விளக்குவதில் பின்னர் நேரம் இன்பமாக செலவிடப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு கலந்தாலோசிப்பைத் தொடர்ந்து, ஒரு பெண் தன் உணர்ச்சிகளை தாராளமாக வெளிப்படுத்திக் காண்பித்து இவ்வாறு சொன்னாள்: “நான் பிறந்து வளர்ந்து பெரியவளான மதத்தில், நான் தேடிக்கொண்டிருந்த சத்தியம் கிடைக்கவில்லை என்பதைக் கண்டு நான் மிகவும் வேதனையடைகிறேன். கடவுள் எனக்கு சத்தியத்தைக் காண்பித்திருப்பதற்காக நான் அவருக்கு நன்றி சொல்கிறேன். நான் என் சர்ச்சில் உதவி குருவாக இருந்திருக்கிறேன். கன்னி மரியாளின் சிலை ஒவ்வொரு உதவி குருவின் வீட்டிலும் ஒவ்வொரு வாரம் இருக்கும், அப்போது குருமாரில் ஒவ்வொருவரும் அவர்களிடம் வேண்டிக்கொள்ளலாம். நானோவென்றால், சத்தியத்தை அறிந்துகொள்ள எனக்கு உதவும்படி நான் எப்போதும் மரியாளை கேட்டிருக்கிறேன். அவர்களிடம் சத்தியம் இல்லை என்பதை கடவுள் இப்போது எனக்கு காண்பித்திருக்கிறார். நான் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.”
கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் மகிழ்ச்சிமிக்க நேரத்தை அனுபவிக்க வேண்டுமென்று என்றாவது ஒருநாள் நீங்கள் உணர்ந்தால், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள இப்பகுதிக்கு நீங்கள் ஏன் விஜயம் செய்யக்கூடாது? மரப்படகு, புஷ் டாக்ஸி, அல்லது சைக்கிள் போன்றவற்றின் மூலம் “மிகச்சிறிய அளவில் ஆப்பிரிக்காவை” நீங்கள் கண்டுபிடிப்பது மட்டுமன்றி, “கடவுளுடைய மலை” தேசத்தின் மீது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் “சாட்சி குவியலுக்கும்கூட” நீங்கள் உதவியாயிருப்பீர்கள்.
[அடிக்குறிப்பு]
a “கிலியட்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய சொல்லுக்கு அநேகமாக “சாட்சி குவியல்” என்பது அர்த்தமாய் இருக்கலாம். 1943 முதற்கொண்டு, உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி, காமரூன் உட்பட உலகமுழுவதும் பிரசங்க வேலையை ஆரம்பிப்பதற்கு மிஷனரிகளை அனுப்பிக்கொண்டேயிருக்கிறது.
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
Map: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.