“மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு”
“நா ன் அதைச் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்,” என்று எத்தனை தடவைகள் நீங்கள் வருந்தியிருக்கிறீர்கள்? எனினும், நீங்கள் பேசத் தவறின மற்ற சந்தர்ப்பங்களும் உங்களுக்கு நினைவிருக்கலாம். சென்ற கால நிகழ்ச்சியைப் பற்றி சிந்தித்து, ‘நான் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும்,’ என்று நீங்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம்.
“மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு,” என்று பைபிள் சொல்லுகிறது. (பிரசங்கி 3:7) அப்படியானால், எப்போது பேசுவது எப்போது மவுனமாயிருப்பது என்பதைத் தீர்மானிப்பதில்தான் பிரச்சினை உள்ளது. தவறான நேரத்தில் காரியங்களைச் செய்யும்படியும் சொல்லும்படியும் நம்முடைய அபூரண மனித இயல்பு அடிக்கடி நம்மை உந்துவிக்கிறது. (ரோமர் 7:19) கட்டுக்கடங்காத நம்முடைய நாவை நாம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?—யாக்கோபு 3:2.
நாவை அடக்குவதற்கான வழிகள்
எப்போது பேசுவது எப்போது பேசாமலிருப்பது என்பதைத் தீர்மானிக்க உதவிசெய்வதற்கு, நிகழக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உட்படுத்தும்படி திட்டமிடப்பட்ட நீண்ட பட்டியல் நமக்குத் தேவையில்லை. மாறாக, கிறிஸ்தவ ஆளுமையின் உள்ளியல்பான ஒரு பாகமாக இருக்கிற பண்புகளால் நாம் வழிநடத்தப்பட வேண்டும். இந்தப் பண்புகள் யாவை?
அன்பே தம்முடைய சீஷர்களுக்கு உள்நோக்கத் தூண்டுதலை அளிக்கும் முக்கிய பண்பாக உள்ளதென்று இயேசு கிறிஸ்து விளக்கினார். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்,” என்று அவர் சொன்னார். (யோவான் 13:35) அத்தகைய சகோதர அன்பை எவ்வளவு அதிகமாய் நாம் காட்டுகிறோமோ, அவ்வளவு அதிகமாய் நம்முடைய நாவை நாம் அடக்குவோம்.
இதோடு சம்பந்தப்பட்ட இரண்டு பண்புகளும் நமக்கு மிகவும் உதவிசெய்யும். மனத்தாழ்மை இவற்றில் ஒன்றாக இருக்கிறது. இது, ‘மற்றவர்களை நம்மிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணும்படி’ நமக்கு உதவிசெய்கிறது. (பிலிப்பியர் 2:3) மற்றொன்று சாந்தம் ஆகும், இது ‘தீமையைச் சகிக்கிறவர்களாக’ இருக்கும்படி நம்மைச் செய்விக்கிறது. (2 தீமோத்தேயு 2:24, 25) இந்தப் பண்புகளை எவ்வாறு செயலில் காண்பிக்க வேண்டும் என்பதற்கு இயேசு கிறிஸ்துவில் பரிபூரண முன்மாதிரி நமக்கு உள்ளது.
நெருக்கடியின்கீழ் நாம் இருக்கையில் நம்முடைய நாவை அடக்குவது அதிகக் கடினமாக இருப்பதால், இயேசுவின் மரணத்துக்கு முந்தின இரவை—அவர் ‘வியாகுலப்பட்ட’ ஒரு சமயத்தை—நாம் சிந்தித்துப் பார்க்கலாம். (மத்தேயு 26:37, 38) இயேசு இவ்வகையில் உணர்ந்தது ஆச்சரியமாக இல்லை, ஏனெனில் மனிதவர்க்கம் முழுமையினுடைய நித்திய எதிர்காலம், கடவுளுக்கு அவர் உண்மையுள்ளவராக நிலைத்திருப்பதன்பேரில் சார்ந்திருந்தது.—ரோமர் 5:19-21.
நிச்சயமாகவே இது, இயேசு தம்முடைய பரலோகத் தகப்பனிடம் பேசுவதற்கான ஒரு சமயமாக இருந்தது. ஆகையால் அவர், தம்முடைய சீஷர்களில் மூவரை விழித்திருக்கும்படி கேட்டுக்கொண்டு, ஜெபிப்பதற்குச் சென்றார். சிறிது நேரத்துக்குப் பின்பு அவர் வந்து அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அப்பொழுது அவர் பேதுருவை நோக்கி: “நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?” என்றார். இந்த அன்புள்ள கடிந்துகொள்ளுதலோடு, அவர்களுடைய பலவீனத்தைப் புரிந்துகொண்டதைக் காட்டின வார்த்தைகள் சேர்ந்து வந்தன. “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது,” என்று அவர் சொன்னார். பின்னால், இயேசு மறுபடியும் வந்து சீஷர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர் தயவுடன் அவர்களிடம் பேசிவிட்டு, “போய், மூன்றாந்தரமும் . . . ஜெபம்பண்ணினார்.”—மத்தேயு 26:36-44.
மூன்றாம் தடவையாக சீஷர்கள் தூங்கிக்கொண்டிருப்பதை இயேசு கண்டபோது, அவர் கடுமையாகப் பேசாமல்: “இப்படிப்பட்ட ஒரு நேரத்திலா நீங்கள் தூங்கிக்கொண்டு இளைப்பாறுகிறீர்கள்! இதோ! மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளுக்குள் காட்டிக்கொடுக்கப்படவிருக்கிற வேளை நெருங்கிவந்துவிட்டது,” என்று சொன்னார். (மத்தேயு 26:45, NW) உண்மையில் அன்பு நிறைந்த இருதயத்துடன், சாந்தமும் தாழ்மையுமுள்ள மனப்பான்மையோடு இருக்கும் ஒருவர் மாத்திரமே, அத்தகைய ஒரு இக்கட்டான சமயத்தில் நாவை அந்த முறையில் பயன்படுத்தியிருக்க முடியும்.—மத்தேயு 11:29; யோவான் 13:1.
அதன்பின் அதிசீக்கிரத்தில், இயேசு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சில சமயங்களில், நம்முடைய கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போதும்கூட, மவுனமாயிருப்பது சிறந்ததென்று நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம். இயேசுவுக்குக் கண்டனத் தீர்ப்பு அளிக்கும்படியான நோக்கத்துடன் இருந்த பிரதான ஆசாரியர்களுக்கு, உண்மையைத் தெரிந்துகொள்வதைப்பற்றி எத்தகைய அக்கறையும் இருக்கவில்லை. ஆகையால் வன்முறை உருவாகும் இந்த சூழ்நிலையில், இயேசு மவுனமாக இருந்தார்.—மத்தேயு 7:6-ஐ ஒப்பிடுக.
எனினும், “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்,” என்று பிரதான ஆசாரியர் கட்டளையிட்டபோது, இயேசு மவுனமாக இருக்கவில்லை. (மத்தேயு 26:63) இயேசு ஆணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததால், அவர் பேசுவதற்கு இது சமயமாயிருந்தது. ஆகையால் அவர் இவ்வாறு பதிலளித்தார்: “நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 26:64.
அந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளின்போது, இயேசு தம்முடைய நாவை முற்றிலும் கட்டுப்படுத்தி செயல்பட்டார். அவருடைய காரியத்தில் அன்பு, சாந்தம், மற்றும் மனத்தாழ்மை ஆகியவை, அவருடைய ஆளுமையின் உள்ளியல்பினுடைய பாகங்களாக இருந்தன. நாம் நெருக்கடியின்கீழ் இருக்கையில், நம்முடைய நாவைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தப் பண்புகளை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?
கோபமாக இருக்கையில் நாவைக் கட்டுப்படுத்துதல்
நாம் கோபமடைகையில், நம்முடைய நாவைக் கட்டுப்படுத்துவதை இழந்துவிடுகிறோம். உதாரணமாக, பவுலும் பர்னபாவும் ஒரு சமயத்தில் ஒருவருக்கொருவர் வேறுபட்ட எண்ணத்தை உடையோராக இருந்தனர். “பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக் கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள்.”—அப்போஸ்தலர் 15:37-39.
கட்டட அமைப்பு திட்டங்களில் சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிற மைக்கல்a இவ்வாறு கூறுகிறார்: “கட்டடம் கட்டும் இடத்தில் நான் நன்றாக அறிந்து மதித்த ஒருவர் இருந்தார். ஆனால் அவர் என் வேலையில் எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றினது. எனக்கு வருத்தமும் எரிச்சல் உணர்ச்சியும் உண்டாயிற்று, ஆனால் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. ஒரு நாள், நான் அப்போதுதான் செய்துமுடித்திருந்த ஒரு வேலையை அவர் குறை கூறினபோது, காரியங்கள் மீறிய நிலைக்குச் சென்றுவிட்டன.
“நான் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளையெல்லாம் வெளிக்காட்டிவிட்டேன். எங்களைச் சுற்றியிருந்த எல்லாரிலும் கெட்ட அபிப்பிராயத்தை இது உண்டாக்கியிருக்கும் என்பதையுங்கூட அந்தக் கோப விநாடியில் நான் மறந்துவிட்டேன். அந்த நாளின் மீதியான நேரமெல்லாம் அவரிடம் பேச அல்லது அவரைப் பார்க்கவும்கூட நான் விரும்பவில்லை. அந்தப் பிரச்சினையை நான் சரியான முறையில் கையாளவில்லை என்று இப்போது உணருகிறேன். நான் பேசாமல் அமைதியாயிருந்து, என் கோபம் தணிந்த பிறகு பேசியிருந்தால் வெகு நலமாக இருந்திருக்கும்.”
மகிழ்ச்சியுண்டாக, கிறிஸ்தவ அன்பு, இந்த இருவரையும் தங்கள் சச்சரவைத் தீர்த்துக்கொள்ளும்படி தூண்டியியக்கினது. மைக்கல் விளக்குகிறார்: “ஒருவருக்கொருவர் மனம்விட்டு கூடிப் பேசின பின்பு, நாங்கள் ஒருவரையொருவர் மேலும் நன்றாய்ப் புரிந்துகொண்டோம், இப்போது நாங்கள் உறுதியான நட்புடையோராக இருக்கிறோம்.”
நாம் கோபமூண்டவர்களாக இருந்தால், மைக்கல் கற்றுக்கொண்டபடி, மவுனமாக இருப்பது சில சமயங்களில் ஞானமாக உள்ளது. “உணர்வுள்ளவன் அமர்ந்த மனதுடையான்,” என்று நீதிமொழிகள் 17:27 (தி.மொ.) சொல்லுகிறது. மனதைப் புண்படுத்தும் எதையாவது உளறிக் கொட்டும்படியான நம்முடைய உள்ளத் தூண்டுதலைக் கட்டுப்படுத்துவதற்கு, தெளிந்துணர்வும் சகோதர அன்பும் நமக்கு உதவிசெய்யும். நாம் புண்படுத்தப்பட்டிருந்தால், சமாதானத்தைத் திரும்ப நிலைநாட்டும் நோக்கத்துடன், அந்த மற்ற ஆளிடம் தனிமையில் சாந்தத்துடனும் தாழ்மையான மனப்பான்மையுடனும் பேசுவோமாக. ஏற்கெனவே கோபத்தை வெளிப்படுத்திக் காட்டியிருந்தால் என்ன செய்வது? அப்போது, நம்முடைய பெருமையை அடக்கிக்கொண்டு மனத்தாழ்மையுடன் சமாதானம் செய்துகொள்ள, அன்பு நம்மைத் தூண்டியியக்குவிக்கும். அதற்காக வருத்தம் தெரிவித்து, புண்படுத்தின உணர்ச்சிகளை உள்ளப்பூர்வமான பேச்சுத் தொடர்பின்மூலம் சரிசெய்யும்படி, இது பேசுவதற்கான சமயமாக உள்ளது.—மத்தேயு 5:23, 24.
மவுனமாயிருப்பது பரிகாரமாக இல்லாதபோது
நம்மைத் தொல்லைப்படுத்தும் நபரிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளும்படி, கோபம் அல்லது எரிச்சல் நம்மைச் செய்விக்கக்கூடும். இது மிகக் கேடுண்டாக்குவதாக இருக்கலாம். “எங்கள் மணவாழ்க்கையின் முதல் ஆண்டின்போது, ஒரே சமயத்தில் பல நாட்கள் நான் என் கணவரோடு பேசாதிருந்த சந்தர்ப்பங்கள் இருந்தன,” என்று மரியb சொல்கிறாள். “பொதுவாக, அது பெரிய பிரச்சினைகளின் காரணமாக அல்ல, ஆனால், பெரும்பாலும், சிறிய கோபமூட்டுதல்கள் ஒன்றுசேர்ந்ததன் காரணமாகவே அவ்வாறு இருந்தது. இந்த எரிச்சலூட்டுதல்கள் எல்லாவற்றையும் மனதில் பேணிவைத்து சிந்தித்துக் கொண்டிருந்தேன், முடிவில் அவை மலைபோன்ற தடையாகிவிட்டன. பின்பு இனிமேலும் அதைத் தாங்கமுடியாத சமயம் வந்தது, அப்போது என் கோப எரிச்சல் தணியும் வரை என் கணவனிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன்,” என்று தொடர்ந்து சொல்லுகிறாள்.
மரியா மேலும் சொல்லுகிறாள்: “குறிப்பிட்ட ஒரு பைபிள் வசனம்—‘சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது’ என்பது—என் சிந்தனையைத் திரும்பவும் சரிப்படுத்திக்கொள்ள எனக்கு உதவிசெய்தது. பிரச்சினைகள் சேர்ந்து எழும்பிக்கொண்டிராதபடி, என் கணவரும் நானும் பேச்சுத்தொடர்பை முன்னேற்றுவிப்பதற்குக் கடினமாக உழைத்தோம். இது எளிதாக இருக்கவில்லை, ஆனால், மண வாழ்க்கையின் பத்து ஆண்டுகளுக்குப் பின், இந்தக் கடும் மவுன காலப்பகுதிகள் மிக அரிதாகவே ஏற்படுகின்றனவென்று சொல்வதில் நான் சந்தோஷப்படுகிறேன். எனினும், இந்த மனப்போக்கைக் கட்டுப்படுத்துவதற்கு இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.”—எபேசியர் 4:26.
மரியா கண்டுபிடித்தபடி, இரண்டு ஆட்களுக்கிடையே மனத்தாங்கல்கள் ஏற்பட்டிருக்கையில், பேச்சுத்தொடர்பை நிறுத்திவிடுவது பரிகாரம் அல்ல. அந்தச் சூழ்நிலைகளில் கோபம் பெருகி, உறவு ஒருவேளை கெடுக்கப்படலாம். நாம் ‘காரியங்களைச் சீக்கிரமாய்ச் சரிசெய்துகொள்ள’ வேண்டும், என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:25, NW) “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை,” ‘சமாதானத்தைப் பின்தொடர’ நமக்கு உதவிசெய்யக்கூடும்.—நீதிமொழிகள் 25:11; 1 பேதுரு 3:11.
மேலும், நமக்கு உதவி தேவைப்படுகையில் நாம் வாய்விட்டு சொல்ல வேண்டும். ஆவிக்குரிய பிரச்சினை ஏதோவொன்றின் காரணமாக நாம் துன்பப்பட்டுக்கொண்டிருந்தால், அந்தப் பாரத்தால் மற்றவர்களை வருந்தச் செய்யத் தயங்குவோராக நாம் உணரலாம். ஆனால் நாம் பேசாமலிருந்தால், அந்தப் பிரச்சினை இன்னும் மோசமாகலாம். நியமிக்கப்பட்ட மூப்பர்கள் நம்மில் அக்கறைப்படுகிறார்கள், நாம் அவர்களை அனுமதித்தால், உதவிசெய்வதற்கு ஆவலாக இருக்கிறார்கள். இது, நாம் பேச வேண்டிய ஒரு சமயமாக உள்ளது.—யாக்கோபு 5:13-16.
எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு செய்ததைப்போல், இருதயப்பூர்வமான ஜெபத்தில் நாம் யெகோவாவிடம் தவறாமல் பேசிவர வேண்டும். நிச்சயமாகவே, நம்முடைய பரலோகத் தகப்பனிடம் ‘நம் இருதயத்தை ஊற்றிவிடுவோமாக.’—சங்கீதம் 62:8; எபிரெயர் 5:7-ஐ ஒப்பிடுக.
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி ‘பேச ஒரு காலம்’
கிறிஸ்தவ ஊழியமானது, முடிவு வருவதற்கு முன்பாக நிறைவேற்றி முடிக்க வேண்டிய, கடவுள் கட்டளையிட்ட பொறுப்பாக உள்ளது. ஆகையால், முன்னொருபோதும் இராத முறையில், யெகோவாவின் ஊழியர் இந்த ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவருவது முக்கியம். (மாற்கு 13:10) அப்போஸ்தலர்களைப்போல், உண்மையானக் கிறிஸ்தவர்கள், ‘தாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பற்றி பேசாமலிருக்க முடியாது.’—அப்போஸ்தலர் 4:20.
நிச்சயமாகவே, நற்செய்தியைக் கேட்க எல்லாரும் விரும்புகிறதில்லை. உண்மையில், இயேசு, தம்முடைய சீஷர்களைப் பிரசங்கிக்கும்படி வெளியில் அனுப்பினபோது, அதில் ‘பாத்திரமானவர்கள் யாரென்று தேடும்படி’ அவர்களுக்கு அறிவுரை கூறினார். யெகோவா தம்மை வணங்கும்படி எவரையும் ஒருபோதும் வற்புறுத்துகிறதில்லையாதலால், ராஜ்ய செய்தியை ஏற்க பிடிவாதமாய் மறுக்கும் ஒருவரிடம் நாம் விடாது தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க மாட்டோம். (மத்தேயு 10:11-14) ஆனால், ‘நித்திய ஜீவனிடமாக நேர்மையாய் மனஞ்சாய்வோரிடம்’ யெகோவாவின் அரசதிகாரத்தைப் பற்றி பேச நாம் இன்பம் கொள்ளுகிறோம்.—அப்போஸ்தலர் 13:48, NW; சங்கீதம் 145:10-13.
விளைவை எண்ணாமல் துடுக்காய்ப் பேசிவிடுவது அல்லது முறைப்பாக மவுனம் சாதிப்பது ஆகிய நம்முடைய அபூரண மனப்போக்கைக் கட்டுப்படுத்துவதற்கு, அன்பும், சாந்தமும், மனத்தாழ்மையும் நமக்கு உதவிசெய்யக்கூடிய பண்புகளாக இருக்கின்றன. இந்தப் பண்புகளில் நாம் படிப்படியாய் முதிர்ச்சியடைந்து வருகையில் பேசுவதற்கான சரியான நேரத்தையும் தவறான நேரத்தையும் பகுத்தறிந்துகொள்வதற்கு நாம் மேலும் தகுதிபெற்றவர்களாவோம்.
[அடிக்குறிப்புகள்]
a அவருடைய உண்மையான பெயரல்ல.
b அவளுடைய உண்மையான பெயரல்ல.
[பக்கம் 23-ன் படம்]
நல்ல பேச்சுத்தொடர்பின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்