யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு விரிவடைதல்
யெகோவா தேவன், நியூ யார்க் புருக்ளினில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவருடைய சாட்சிகளின் விரிவாக்கத்தை உண்மையாகவே ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை செப்டம்பர் 18, 1995-ன் சாயங்காலத்தில் நடந்த ஒரு பிரதிஷ்டை நிகழ்ச்சி அழுத்திக் காண்பித்தது.
6,000-க்கும் மேலானவர்கள் பிரதிஷ்டை நிகழ்ச்சியை செவிகொடுத்து கேட்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற புருக்ளினில் மாத்திரமல்லாமல், மற்ற இடங்களிலும்கூட அவர்கள் ஒன்றுகூடினார்கள்; நியூ யார்க்கிலுள்ள பேட்டர்ஸன், வால்கில் போன்ற இடங்களுக்கு அருகேயும், கனடாவிலுள்ள டோரன்டோவின் பக்கத்திலுள்ள கிளைகாரியாலயத்தின் அருகேயும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பெரிய கட்டிடங்களையும் இது உட்படுத்தும். புருக்ளினைத் தவிர மற்ற இடங்களில் இருந்தவர்கள், வானொலி ஒலிபரப்பு இணைப்புகளின் மூலமாக நிகழ்ச்சிநிரலைக் கேட்டனர்.
மனமகிழ்வைத் தந்த ஒரு நிகழ்ச்சிநிரல்
நிகழ்ச்சிநிரலை செவிகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த, பெத்தேல் ஊழியர்கள் என்று அழைக்கப்படும் விருப்பார்வ ஊழியர்கள், 16,400-க்கும் மேலான அங்கத்தினர்களை உள்ளடக்கிய உலகளாவிய பெத்தேல் குடும்பத்தின் பெரும் பாகத்தினராக இருந்தனர். அப்படிப்பட்ட அங்கத்தினர்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் சேவை செய்கின்றனர். அங்கே உலகத்திலுள்ள 78,600-க்கும் மேலான யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்கு பைபிள் பிரசுரங்களை அச்சடித்துக் கொடுத்து, ஆதரவு பணிகளை அளிக்கின்றனர்.
பிரதிஷ்டை நிகழ்ச்சி, மாலை 6:30 மணிக்கு பாட்டுடனும், அதன்பின் கார்ல் கிலின் அவர்களுடைய ஜெபத்துடனும் ஆரம்பமானபோது, எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. நிகழ்ச்சிநிரலின் அக்கிராசனர், லாயிட் பாரி, நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தின்பேரில் சுருக்கமாக குறிப்புகளைச் சொல்வதன் மூலமாக அனைவரையும் அன்புடன் வரவேற்றார். அந்த வாரத்தின் காவற்கோபுர பாடத்தை ஆல்பர்ட் ஷ்ரோடர் மறுபார்வை செய்தார், பின்பு, டானியல் ஸிட்லிக் “பெத்தேலில் நம்முடைய பரிசுத்த சேவை” என்ற பொருளின்பேரில் பேசினார். நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக பங்கேற்ற இவர்கள் எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் ஆவர்.
“விரிவாகிக்கொண்டிருக்கும் குடியிருப்பு தேவைகளைப் பூர்த்திசெய்வது, 1974-1995,” மற்றும் “புருக்ளினிலுள்ள பெத்தேலை புதுப்பித்தல் மற்றும் கட்டுமான பணியின் சிறப்புக்குறிப்புகள்” என்ற அடுத்த இரண்டு நிகழ்ச்சிநிரல் பகுதிகள், பிரதிஷ்டை செய்யப்பட்ட கட்டிடங்களின் கட்டுமானத்தின் அல்லது அது வாங்கப்பட்டதன் குறிப்புகளை சிறப்பித்துக் காண்பித்தன. அந்தக் குறிப்புகள், சமீபத்தில் கட்டிமுடிக்கப்பட்டதும் இன்று சுமாராக ஆயிரம் பெத்தேல் ஊழியர்கள் தங்கியிருப்பதுமான அந்தக் குடியிருப்புக் கட்டிடத்தின்மீது கவனத்தைச் செலுத்தின. 90 ஸான்ட்ஸ் தெருவில் உள்ள இந்த 115-மீட்டர்-உயரமுள்ள குடியிருப்புக் கட்டிடம், அச்சுத் தொழிற்சாலையின் வளாகத்தை அடுத்து இருக்கிறது.
நிகழ்ச்சிநிரல், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் பிரெஸிடன்டான மில்டன் ஹென்ஷெலின் பிரதிஷ்டைப் பேச்சை முக்கிய அம்சமாகக் கொண்டிருந்தது. யெகோவாவின் சேவைக்காக பயன்படுத்தப்படப்போகும் கட்டிடங்களை பிரதிஷ்டை செய்வதற்கான பைபிள் உதாரணங்களை அவர் வலியுறுத்திக் காண்பித்தார். பாட்டிற்குப் பிறகு ஆளும் குழுவில் ஒரு அங்கத்தினராக இருக்கும் கேரி பார்பரின் ஜெபத்தோடு நிகழ்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் நிகழ்ச்சிநிரலின் சில சிறப்பம்சங்கள் என்ன?
கட்டிடங்கள் பிரதிஷ்டை செய்யப்படுதல்
பெத்தேலின் வீட்டுக்கண்காணியான ஜார்ஜ் கௌச், புருக்ளினில் மே 2, 1969-ல் பெத்தேல் குடியிருப்பு கட்டிடம் ஒன்று கடைசியாக பிரதிஷ்டை செய்யப்பட்டதற்குப் பிறகு 17 குடியிருப்புக் கட்டிடங்கள் அதோடு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதாக விளக்கினார்.a இவை, ஒன்று புதிதாக கட்டப்பட்ட வீடுகள் அல்லது வாங்கி, புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள். இந்தப் பிரதிஷ்டை, உண்மையில், 17 குடியிருப்புக் கட்டிடங்களுக்கும், 1940-களில் வாங்கப்பட்டு பெத்தேல் குடியிருப்புக் கட்டிடங்களாக மாற்றப்பட்ட இரண்டு சிறிய கட்டிடங்களுக்கும், மார்ச் 15, 1982-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளைகாரியாலய ஆபீஸ் வளாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்குப் பிறகு கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட தொழிற்சாலை மற்றும் அலுவலக கட்டிடங்களுக்கும்கூட இருந்தது.b
பிரதிஷ்டை செய்யப்பட்ட எல்லாவற்றிலும் மிகப் பெரிய கட்டிடம் 360 ஃபர்மன் தெருவில் இருப்பதுதான். 1928-ல் முதலில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், மார்ச் 15, 1983-ல் யெகோவாவின் சாட்சிகளால் வாங்கப்பட்டு முழுமையாகவே புதுப்பிக்கப்பட்டது. 93,000 சதுர மீட்டர் நிலப்பகுதியை அல்லது கிட்டத்தட்ட 23 ஏக்கர் நிலத்தை அது கொண்டிருக்கிறது. பிரதிஷ்டை செய்யப்பட்ட மற்ற கட்டிடங்களில் 175 பர்ல் தெருவில் உள்ள தொழிற்சாலையும் சமீப ஆண்டுகளில் கட்டப்பட்ட பெரிய ஷெட்டுகளும் உட்பட்டிருந்தன.
ஏன் அதிக வீடுகள் தேவை
1969-ல், புருக்ளின் பெத்தேலின் கடைசி குடியிருப்புக் கட்டிடம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, உலகம் முழுவதுமாக நற்செய்தியை பிரசங்கித்த சாட்சிகளின் எண்ணிக்கை 13,36,112 என்ற உச்சநிலையாக இருந்தது. ஆனால் 1995-ல் 51,99,895 பேர் அவ்வாறு பிரசங்கித்துக்கொண்டிருந்தனர், அது மூன்றரை மடங்கைக் காட்டிலும் அதிகம்! இவ்வாறாக, பைபிள் பிரசுரங்களுக்கான அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, புருக்ளின் பெத்தேல் குடும்பம் 1969-ல் 1,042 நிரந்தர அங்கத்தினர்களிலிருந்து இப்பொழுது 22 குடியிருப்புக் கட்டிடங்களில் வாழும் 3,360-க்கும் மேலான அங்கத்தினர்களாக அதிகரித்திருக்கிறது!
1974-லிருந்து 1995 வரையாக கூடுதலான வீடுகளின் தேவை எவ்வாறு சரிசெய்யப்பட்டது என்பதை ஜார்ஜ் கௌச் விளக்கினார். 1970-களின் ஆரம்பப் பகுதியில், வளர்ந்து வரும் பெத்தேல் குடும்பத்தின் இடவசதிக்காக அருகில் இருந்த டவர்ஸ் ஹோட்டலில் பல மாடிகள் யெகோவாவின் சாட்சிகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. 1973 டிசம்பரில், ‘அக்டோபர் 1, 1974-க்குள் டவர்ஸ் ஹோட்டலை காலிசெய்துவிடுவதாக’ சங்கம் தீர்மானித்திருக்கிறது என்பதாக உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்டாக அப்போதிருந்த நேதன் நார், பெத்தேல் ஆபீஸ், டவர்ஸ் நிர்வாகம் ஆகிய இரண்டிற்கும் எழுதினார்.
டவர்ஸில் வசித்துவந்த பெத்தேல் ஊழியர்களைத் தங்கவைப்பதற்கு வேறு இடமில்லாததால் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக சகோதரர் கௌச் கூறினார். டவர்ஸ் நிர்வாகமும் அதிர்ச்சியடைந்தது, ஏனெனில், தொடர்ந்து இயங்குவதற்கு சங்கம் தந்த வாடகைப் பணத்தின்மீது அது சார்ந்திருந்தது. அதனுடைய விளைவு என்னவெனில், அந்த ஹோட்டலை விலைக்கு வாங்கிவிடும்படி டவர்ஸ் நிர்வாகம் யெகோவாவின் சாட்சிகளைத் துரிதப்படுத்தியது. “நாங்கள் உங்கள் அயலகத்தில் இருந்த காலம் முதற்கொண்டே நீங்கள் வளர்ந்துவருகிறீர்கள், ஆகவே உங்களுக்கு கட்டிடம் தேவை,” என்பதாக அவர்கள் சொன்னார்கள்.
“அதில் முழுவதும் குத்தகைக்காரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அதை வாங்கினால், எங்களுடைய சொந்த ஆட்களை அங்கே குடியிருக்கச் செய்ய விரும்புவோம்,” என்பது சங்கத்தின் பிரதிநிதிகளுடைய பதிலாக இருந்தது.
“நாங்கள் கட்டிடத்தை காலிசெய்து தருகிறோம்,” என்பதாக டவர்ஸ் நிர்வாகம் வாக்களித்தது. அதன்பிறகு விரைவிலேயே யெகோவாவின் சாட்சிகள் சரியான விலைக்கு டவர்ஸ் கட்டிடத்தை வாங்கினர். “ஏன் சகோதரர் நார் அந்தக் கடிதத்தை எழுதினார்?” என்பதாக கவரப்பட்டிருந்த தன்னுடைய சபையாரிடம் கௌச் கேட்டார். “ஒருவேளை அவருக்கே அதற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் அதுதான் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கே டவர்ஸ் ஹோட்டல் விற்கப்படும்படி செய்தது,” என்பதாக சொன்னார்.
முதல் பெத்தேல் வீட்டிலிருந்து நேரெதிரான தெருவில் இருப்பதும், புகழ்பெற்ற மார்கரட் ஹோட்டல் முன்பிருந்த இடத்தில் இருப்பதுமான 97 கொலம்பியா ஹைட்ஸை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு விலைக்கு வாங்கினார்கள் என்பதையும் பேச்சாளர் விளக்கினார். இடம் ஏற்றதானதாக உள்ளது, ஏனெனில் அது பெத்தேல் வளாகத்தோடு சுரங்கப் பாதையைக் கொண்டு சுலபமாக இணைக்கப்படலாம். பிப்ரவரி 1980-ல், கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அது எரிந்து தரைமட்டமானது. பின்பு, அந்த இடத்தில் ஒரு புதிய கட்டிடத்தை ஏற்படுத்துவதில் சொந்தக்காரருக்கு பிரச்சினை இருந்ததால் யெகோவாவின் சாட்சிகளுக்கு அந்த நிலத்தை விற்றுவிட்டார்.
சகோதரர் கௌச் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்தக் கட்டிடங்களில் ஏறத்தாழ ஒவ்வொன்றும் அதற்குப் பின்னால் ஒரு ஆர்வமுள்ள செய்தியைக் கொண்டிருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட கட்டிடத்தை பெற்றுக்கொள்ள காணக்கூடிய அமைப்பை வழிநடத்தியது யெகோவா தேவன்தான் என்ற ஒரு காரியத்தை அந்தச் செய்தி சுட்டிக்காண்பிக்கிறது.”
90 ஸான்ட்ஸ்-க்குப் பின்னால் இருக்கும் செய்தி
மிகப் புதிதானதும் மிகப் பெரியதுமான குடியிருப்புக் கட்டிடம்தான் 90 ஸான்ட்ஸ் தெருவில் உள்ளது. 1986 டிசம்பரில் யெகோவாவின் சாட்சிகளால் வாங்கப்பட்டபோது, அது 160 ஜே தெருவில் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு இடமளித்தது.c தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டது, ஆகஸ்ட் 30, 1990-ல் ஒரு 30-மாடி குடியிருப்புக் கட்டிடம் அந்த இடத்தில் கட்டப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பெத்தேல் குடும்பத்திற்குச் சொல்லப்பட்டது.
ஆளும் குழுவின் ஒரு அங்கத்தினரான தியோடோர் ஜாராக்ஸ் நடத்திய பேட்டியில், சங்கத்தின் புருக்ளின் தொழிற்சாலையின் கண்காணியான மாக்ஸ் லார்ஸன், எவ்வாறு 90 ஸான்ட்ஸ் தெருவிலுள்ள குடியிருப்புக் கட்டிடம் கட்டப்படுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது என்பதை விளக்கினார். 1965-ல் நடந்தது நெருக்கடியான ஒன்றாயிருந்ததாக சகோதரர் லார்ஸன் விளக்கினார்.
அந்தச் சமயத்தில், மற்ற தொழிற்சாலைகளுக்கு அருகே உள்ள நிலப்பகுதியில் ஒரு பத்து-மாடி தொழிற்சாலையை கட்டவேண்டுமென்று சங்கம் விரும்பியது, ஆனால் அந்த நிலப்பகுதியின் மண்டலப்பிரிவு இரண்டு-மாடி கட்டமைப்பு முறையை மாத்திரம்தான் அனுமதித்தது. ஒரு கட்டிடக்கலைஞர் புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொழிற்சாலைக்காக கட்டிட வரைபடங்களைத் தயார் செய்வதாக ஒப்புக்கொண்டார், ஆனால், “வாரியத்திடம் அதை அளிப்பதன் மூலமாக ஒரு தர்மசங்கடமான நிலைக்கு நான் ஆளாகமாட்டேன்,” என்பதாகச் சொன்னார். ஸ்டான்டர்ட்ஸ் மற்றும் மேல்முறையீட்டுக் குழுமம் நிலப்பகுதிக்கான அதன் மண்டலப்பிரிவு விதிமுறைகளை எப்போதும் மாற்றிக்கொள்ளாது என்பதில் அவர் நிச்சயமாயிருந்தார். கட்டிட வரைபடங்கள் அங்கீகரிக்கப்பட்டபோது, “இதை எப்படித்தான் பெற்றுக்கொண்டீர்கள்!” என்று ஆச்சரியப்பட்டார்.
அதற்கான காரணம் என்னவென்றால், நம்முடைய பத்து-மாடி தொழிற்சாலைக்காக நிலப்பகுதி வேறு மண்டலப்பிரிவாக்கப்பட்டபோது 160 ஜே தெரு கட்டிடத்தைப் பெற்றுள்ள நிலம் உட்பட அருகாமையிலிருந்த நிலப்பகுதிகளும் மறுபடியும் பிரிக்கப்பட்டது. ஆச்சரியமூட்டும் விதத்தில், மண்டலம் மறுபடியும் பிரிக்கப்பட்டது ஒரு ஹோட்டலுக்கு அனுமதி அளித்தது என்பதாக லார்ஸன் தொடர்ந்து சொன்னார். ஆனால், இதை எவரும் கவனிக்கவே இல்லை—குறைந்தபட்சம் 25 வருடங்களுக்கு பின்பு வரையாக, நாம் ஒரு புதிய பெத்தேல் வீட்டை கட்டுவதற்கு ஒரு இடத்தை தேட ஆரம்பிக்கும் வரையாக எவருமே அதைக் கவனிக்கவில்லை. பின்பு மண்டலப்பிரிவு விதிமுறை மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது!
என்ன நடந்தது என்பதை சகோதரர் லார்ஸன் விளக்கினார்: “30-மாடி குடியிருப்புக் கட்டிடத்திற்காக நாங்கள் வரைபடங்களைத் தயார்செய்து அவற்றை கட்டிடத் துறையிடம் எடுத்துச் சென்றபோது, ‘அங்கே ஒரு குடியிருப்புக் கட்டிடத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது. அவையெல்லாம் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது, உங்களுக்காக மண்டலப்பிரிவை அவர்கள் மாற்றமாட்டார்கள்,’ என்பதாக சொல்லப்பட்டோம்.
“‘அவர்கள் அதை மாற்றவேண்டியது இல்லை,’ என்பதாக நாங்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ‘அது ஏற்கெனவே ஒரு ஹோட்டலுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.’ பதிவை எடுத்துப் பார்த்தபோது, அவர்களால் நம்பவே முடியவில்லை! இப்படித்தான் நம்முடைய 30-மாடி கட்டிடத்தைப் பெற்றுக்கொண்டோம்,” என்பதாக லார்ஸன் முடித்தார்.
யெகோவாவின் ஆசீர்வாதம் தெளிவாகத் தெரிதல்
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா,” என்பதாக பைபிளின் சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 127:1) தெளிவாகவே, இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்ட உலகளாவிய பிரசங்க வேலையையும் சீஷராக்கும் வேலையையும் எளிதாக்க யெகோவாவின் சாட்சிகளுடைய கட்டமைப்பு நடவடிக்கைகளின் மேல் யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்துவந்திருக்கிறது.—மத்தேயு 24:14; 28:19, 20.
செப்டம்பர் 18, 1995-ல் நிகழ்ச்சிநிரலைக் கேட்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தவர்கள், யெகோவாவின் ஊழியக்காரர்களின் உலகத் தலைமை அலுவலகத்தின் விரிவாக்கத்தின்பேரில் அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தின் அத்தாட்சியைக் கண்டு பூரித்துப்போயினர். யெகோவா கட்டளையிடும் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்துவரும்போது அவருடைய இடைவிடாத ஆசீர்வாதத்தின்பேரில் அவருடைய ஜனங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம் (ஆங்கிலம்), ஜூன் 15, 1969, பக்கங்கள் 379-82.
b காவற்கோபுரம் (ஆங்கிலம்), டிசம்பர் 1, 1982, பக்கங்கள் 23-31.
c விழித்தெழு! (ஆங்கிலம்) டிசம்பர் 22, 1987, பக்கங்கள் 16-18.
[பக்கம் 23-ன் படம்]
90 ஸான்ட்ஸ் தெரு • 1995
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
பிரதிஷ்டை செய்யப்பட்ட சில கூடுதலான குடியிருப்புக் கட்டிடங்கள்
97 கொலம்பியா ஹைட்ஸ் • 1986
பாஸ்ஸர்ட் ஹோட்டல், 98 மான்டகுயூ தெரு. • 1983
34 ஆரஞ்சு தெரு • 1945
ஸ்டான்டிஷ் ஹோட்டல், 169 கொலம்பியா ஹைட்ஸ் • 1981
67 லிவிங்ஸ்டென் தெரு • 1989
108 ஜெரேலெமன் தெரு • 1988
டவர்ஸ் ஹோட்டல், 79-99 வில்லோ தெரு • 1975
[பக்கம் 26-ன் படங்கள்]
175 பர்ல் தெரு • 1983
69 ஆடம்ஸ் தெரு • 1991
360 ஃபர்மன் தெரு • 1983