போர்த்துகலில் பைபிள் சத்தியத்தைப் பரவச் செய்தல்
வடக்கில் காமின்யாவிலிருந்து தெற்கில் வீலா ரியால் ட சான்ட்டூ அன்டோனியூ வரையில், பகட்டான பலநிறங்களில், மீன்பிடிக்கும் படகுகள் ஆயிரக்கணக்கில், போர்த்துகலின் அட்லான்டிக் சமுத்திரக் கரையில், பரவலாகச் சிதறி காணப்படுகின்றன. மீன்பிடிப்பவர்கள், நூற்றாண்டுகளாக, ‘கப்பலேறி, கடல்யாத்திரை செய்து,’ போர்த்துகீஸியர் பலருக்கு மீன் முக்கிய உணவாகும்படி செய்திருக்கின்றனர்.—சங்கீதம் 107:23.
கடந்த 70 ஆண்டுகளாக, மற்றொரு வகையான மீன்பிடித்தல் போர்த்துகலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பத்தாயிரக்கணக்கிலுள்ள அடையாளக்குறிப்பான மீன்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியைக் கொண்டுசெல்வதில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். (மத்தேயு 4:19) 1995-ன் மே மாதத்தில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை 44,650-ஆக—210 குடியிருப்பாளரில் 1 வீதமாக—இருந்தது. சில பட்டணங்களில் வீத அளவு இதற்குப் பாதியாக உள்ளது.
இத்தனை பல ஊழியர் இருப்பதால், பல பகுதிகளில் சாட்சிகொடுக்கும் பிராந்தியங்கள் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் செய்துமுடிக்கப்படுகின்றன. இதனால் போர்த்துகீஸிய சாட்சிகள், பைபிள் தங்களுக்கு அளித்துள்ள நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு வெவ்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த கூருணர்ச்சியுடையோராக இருக்கின்றனர். ஆம், சாத்தியமான எல்லா வழிவகையிலும் பைபிள் சத்தியத்தைத் தெரியப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் மதித்துணருகின்றனர்.—1 கொரிந்தியர் 9:20-23.
மத மனச்சார்புடையோருக்கு உதவி செய்தல்
1991-ன் குடிமதிப்பின்படி, போர்த்துகலில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரில் 70 சதவீதம், ரோமன் கத்தோலிக்கரெனத் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இருந்தபோதிலும், மக்களுக்குள் பைபிளைப் பற்றிய அறிவு மிகக் குறைவாக உள்ளது. செய்தித்தாள் ஜர்னல் ட நோட்டிஸியாஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “இது கத்தோலிக்க உலகத்தின் மிகப் பெரிய வருந்தத்தக்க காரியத்தில் ஒன்றாக உள்ளது: பைபிள் அறிவில்லாமை!” ஏன் இவ்வாறுள்ளது? போர்த்துகீஸ் செய்தித்தாள் எஸ்ப்ரெஸ்ஸோ பதிலைக் குறிப்பிடுகிறது. ஃபாத்திமாவில் 500 குருமாரைக் கொண்ட ஒரு கூட்டத்தின்பேரில் அறிக்கைசெய்து, அந்தச் செய்தித்தாள் இவ்வாறு சொல்கிறது: “உயர் குரு சொல்வதன் பிரகாரம், குருவானவர், ‘விளம்பரம் செய்பவராகத்’ தன் ஸ்தானத்தைத் தனிப்பட்ட விதமாய் திரும்ப நிலைநிறுத்தக்கூடும்படி, முடிவற்ற பல நடவடிக்கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வது அவசியமாயிருக்கிறது. . . . சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் குரு தன் ஆத்துமாவை ஒருமுகப்படுத்தினால், வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் அவருக்கு நேரமிராது.”
இதற்கு நேர்மாறாக, போர்த்துகலில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் சாத்தியமான எல்லா வழிவகைகளிலும் பைபிள் சத்தியத்தை அறிவிப்பதில் சுறுசுறுப்பாய் உழைக்கின்றனர். இதன் பலனாக, நேர்மையான கத்தோலிக்கர் பலர், பைபிளைப் பற்றிய அறிவை அடைந்து வருகின்றனர்.
கார்லோட்டா மதப்பற்றுள்ள கத்தோலிக்காகவும், ஒரு மத ஒழுங்கில் இளைஞர் குழுவின் ஓர் உறுப்பினளாயும் இருந்தாள். மேலும், அன்டோனியோ என்ற ஒரு சாட்சி வேலை செய்த பாலர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகவும் இருந்தாள். அன்டோனியோ, ஒழுங்கான பயனியராக, அல்லது முழுநேர போதக ஊழியராக, பகலுணவுக்குரிய இடை ஓய்வு நேரத்தில், பைபிளைப் பற்றி தன்னோடு வேலைசெய்வோரிடம் பேச எப்போதும் முயற்சி செய்தார். ஒரு நாள் கார்லோட்டா, நரக அக்கினியில் நம்பிக்கையைப் பற்றியும் மரியாள் வழிபாட்டைப் பற்றியும் அவரிடம் கேட்டாள். இந்த விஷயங்களின்பேரில் பைபிள் கற்பிப்பதை அன்டோனியோ அவளுக்குக் காட்டினார். அது பைபிள் சம்பந்தமான கலந்தாலோசிப்புகள் பலவற்றின் தொடக்கமாக இருந்தது. அவ்விடத்து ராஜ்ய மன்றத்தில் கூட்டத்துக்கு முதல் தடவையாக கார்லோட்டா சென்றபோது, அவள் வெகுவாய் மனம் கவரப்பட்டாள். எனினும், கூட்டம் நடத்தப்பட்ட நேரங்கள், அவள் சேர்ந்திருந்த மத ஆராதனை நேரங்களாக இருந்ததனால், தான் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியிருந்ததை அவள் உணர்ந்தாள். என்ன செய்வாள்?
கார்லோட்டா, அந்த இளைஞர் தொகுதி முழுவதையும் கூடிவரச் செய்து, தான் அவர்கள் குழுவை விட்டு விலகுவதன் காரணத்தை பைபிளிலிருந்து விளக்கிக் கூறினாள். வெகு கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்ட ஸ்டெல்லா என்ற பெயருடைய ஓர் இளம் பெண்ணைத் தவிர, எல்லாரும் அவளுடைய தீர்மானத்தைக் குற்றப்படுத்திப் பேசினர். பின்னால், ஸ்டெல்லாவிடம் கார்லோட்டா பேசினபோது, வாழ்க்கையின் தொடக்கத்தையும் நோக்கத்தையும் பற்றி பல கேள்விகளை ஸ்டெல்லா கேட்டாள். உயிர்—இங்கே எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை கார்லோட்டா அவளுக்குக் கொடுத்து, பைபிள் படிப்பு ஒன்றை அவளுடன் தொடங்கினாள்.a
இதற்கிடையில் கார்லோட்டா ஆவிக்குரிய நல்ல முன்னேற்றம் செய்து, 1991-ன் ஜூனில் முழுக்காட்டப்பட்டு, ஆறு மாதங்களுக்குப் பின்பு ஒழுங்கான பயனியராகச் சேவிக்கத் தொடங்கினாள். 1992-ன் மே மாதத்தில், அவளும் அன்டோனியோவும் திருமணம் செய்துகொண்டு, தேவை மிகுந்த இடமான அடுத்துள்ள சபை ஒன்றில் பயனியர்களாகத் தொடர்ந்து சேவிக்கின்றனர். ஸ்டெல்லாவைப் பற்றியதென்ன? அவள் 1993-ன் மே மாதத்தில் முழுக்காட்டப்பட்டு இப்போது ஒழுங்கான பயனியராகச் சேவிக்கிறாள்.
இளம் ஃபிரான்ஸிஸ்கோ மிகவும் மதப்பற்றுள்ளவனாக இருந்தான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், காலையில் பூசைக்கும் பிற்பகலில் ஜெபமாலை பிரார்த்தனைகளுக்கும் சென்றான். பூசையின்போது மதகுருவுக்கு உதவிசெய்பவனாகச் சேவித்தான். தான் ஒரு நாள் ‘பரிசுத்தவானாக’ ஆக்கப்பட வேண்டுமென்றும்கூட அவன் கடவுளிடம் ஜெபித்தான்!
தான் ஒரு பைபிளைக் கொண்டிருக்க ஃபிரான்ஸிஸ்கோ உண்மையில் விரும்பினான். ஒரு நாள் அவனுடைய நண்பன் அவனுக்கு ஒரு பைபிளைக் கொடுத்தான். கடவுளுக்கு யெகோவா என்ற ஒரு பெயர் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். (யாத்திராகமம் 6:3; சங்கீதம் 83:17) வணக்கத்தில் விக்கிரகங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று கடவுள் கட்டளையிடுவதை யாத்திராகமம் 20:4, 5-ல் அவன் வாசித்தபோது, அவனுக்கு இன்னும் அதிக ஆச்சரியம் உண்டாயிற்று! விக்கிரகங்களால் சர்ச் நிறைந்திருப்பதைக் கண்டு, இந்தக் குழப்பத்தையெல்லாம் புரிந்துகொள்ள தனக்கு உதவிசெய்யும்படி கேட்டு கடவுளிடம் ஊக்கமாய் ஜெபித்தான். பல நாட்களுக்குப் பின்பு, முன்னாள் பள்ளித் தோழன் ஒருவனைச் சந்தித்தான். அவன் ஏன் மாலைநேரப் பள்ளியை விட்டுவிட்டானென்று அவனைக் கேட்டான்.
“மேம்பட்ட மாலைநேரப் பள்ளிக்கு நான் இப்போது செல்கிறேன்,” என்று அவனுடைய நண்பன் பதிலளித்தான்.
“அது என்ன பள்ளி, நீ என்ன படிக்கிறாய்?” என்று ஃபிரான்ஸிஸ்கோ கேட்டான். நண்பன் கொடுத்த பதிலை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நான் பைபிளைப் படிக்கிறேன், என்னோடு வர உனக்குப் பிரியமா?” என்று நண்பன் அவனிடம் சொன்னான்.
தான் சென்ற முதல் கூட்டத்தில் தான் கண்டதை —மகிழ்ச்சியான, புன்சிரிப்பைக்கொண்ட முகங்கள்; ஆட்கள் ஒருவரோடொருவர் அன்பான, சிநேகப்பான்மையான முறையில் பேசிக்கொண்டிருப்பது; பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் உட்கார்ந்து, சொல்லப்படுவதற்குக் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருப்பது ஆகியவற்றை—ஃபிரான்ஸிஸ்கோவால் நம்ப முடியவில்லை.
“இங்கே, முற்றிலும் அந்நியனான நான், என்னை அந்தக் குடும்பத்தின் பாகமாக உணர்ந்தேன்!” என்று ஃபிரான்ஸிஸ்கோ ஆச்சரியத்துடன் கூறினான். அதுமுதற்கொண்டு அந்தக் கூட்டங்களுக்கு ஒழுங்காய்ச் சென்றுகொண்டிருந்தான். இப்போது ஃபிரான்ஸிஸ்கோ அந்தச் சபையில் ஒரு மூப்பராகச் சேவிக்கிறார். தன் மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும்கூட அவர், கடவுளுடைய வார்த்தையின் மகத்தான ராஜ்ய வாக்குகளில் களிகூருகிறார்.
உறவினரோடு சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்
லிஸ்பன் பிராந்தியத்தில் ஒழுங்கான பயனியராக இருந்த மன்வெல்லா, உறவினர் உட்பட எல்லாருக்கும் அன்பான சாட்சி கொடுப்பதில் விடாமுயற்சியுடன் தொடர்ந்ததால், ஆவிக்குரிய மீன்களை ஏராளமாய்ப் பிடித்திருந்திருக்கிறார்கள். மாம்சப்படியான அவர்களுடைய சகோதரன் ஜோஸி இத்வர்டூ அவர்களில் ஒருவர், இவர் போருக்குரிய கலைகளிலும் போராயுதங்கள் பயன்படுத்துவதிலும் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார். சட்டத்தை அவர் மிகப் பல தடவைகள் மீறியிருந்து, கடைசியாக 22 குற்றச்சாட்டுகளின்பேரில் 20 ஆண்டுகள் சிறைச்சாலையில் இருக்கும்படி தீர்ப்பளிக்கப்பட்டார். அவர் அவ்வளவு அதிக மூர்க்கமானவராக இருந்ததனால் சிறையில் உடனிருந்தவர்களும் அவரைப்பற்றிய பயத்தில் இருந்தனர். அவர் கடும் கட்டுப்பாட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
ஏழு ஆண்டுகளாக மன்வெல்லா பொறுமையுடன் ஜோஸி இத்வர்டூவை சென்று பார்த்து வந்தார்கள், ஆனால், அவர்களுடைய பைபிள் செய்தியை ஏற்க அவர் எப்போதும் மறுத்தார். முடிவில், உயிர்—இங்கே எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? என்ற புத்தகம் பிரசுரிக்கப்பட்டபோது, அவர் அதை ஏற்றார், அவரோடு பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது. உடனடியாகத் தன் நடத்தையில் மிகப் பெரும் மாற்றங்களைச் செய்தார். ஒரு வாரத்திற்குப் பின், 200 கைதிகளுக்கு, அவர்தாமே சாட்சி கொடுத்தார். அதற்கு ஒரு வாரத்திற்குப் பின் மேலும் 600 பேருக்குச் சாட்சி கொடுத்தார். மற்ற சிறைச்சாலை பகுதிகளிலிருந்த கைதிகளைச் சந்திக்கவும் அனுமதியை அவர் பெற்றார். அவருடைய நடத்தையில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க இந்த மாற்றத்தின் காரணமாக, தண்டனைத் தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டது. 10 ஆண்டுகள் சிறையிலிருந்த பின்பு, நன்னடத்தை சோதனைமுறையான விடுதலை அவருக்கு அளிக்கப்பட்டது. அதுமுதற்கொண்டு ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டன, ஜோஸி இத்வர்டூ இப்போது யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சியாக, அவ்விடத்து சபையில் ஓர் உதவி ஊழியராகச் சேவிக்கிறார். நிச்சயமாகவே, ‘ஓனாய் ஆட்டுக்குட்டியோடு தங்கும்’ காரியமாக உள்ளது!—ஏசாயா 11:6.
தன் குடும்பத்துக்குச் சாட்சி கொடுப்பதில் விடாது தொடர்ந்த மன்வெல்லாவின் முயற்சியின் காரணமாக, தன் கணவரும் தன் குடும்பத்தின் வேறு நான்கு உறுப்பினரும் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய்ச் செயல்படுவோராகும்படி உதவிசெய்வதன் மகிழ்ச்சியை அடைந்தவராக மன்வெல்லா இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய கணவர் இப்போது உதவி ஊழியராக இருக்கிறார்.
“ஓர் உதையுடனும் ஒரு சவுக்கடியுடனும் அவர்களை வெளியில் ஓடச் செய்வேன்”
மரியா டூ கார்மோவைச் சாட்சிகள் சந்தித்தபோது, அவர்கள் லிஸ்பனின் கிராமப்பகுதி ஒன்றில் வாழ்ந்தார்கள். தான் செவிகொடுத்துக் கேட்டதை அவர்கள் விரும்பி, வீட்டில் பைபிள் படிப்பு ஒன்றை தான் வைத்துக்கொள்ளலாமா என்று தன் கணவர் அன்டோனியோவைக் கேட்டார்கள். “அதைப்பற்றி நினைக்கவும் செய்யாதே!” என்று அவர் பதிலளித்து, “யெகோவாவின் சாட்சிகளை நம் வீட்டில் என்றாவது நான் கண்டால், ஓர் உதையுடனும் ஒரு சவுக்கடியுடனும் அவர்களை வெளியில் ஓடச் செய்வேன்” என்றார். கவனிக்கத்தக்கதாய், அன்டோனியோ தற்காப்பு கலையை கற்பிப்பவர், மூன்றாவதுபடி கறுப்பு பெல்ட்டைத் தரித்திருப்பவர். ஆகவே மரியா தன் பைபிள் படிப்பை வேறு எங்கேயாவது வைத்துக்கொள்ள தீர்மானித்தார்கள்.
பின்னால், அன்டோனியோ, தற்காப்பு கலையில் எட்டு-நாள் நீடிக்கும் ஒரு பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டியதிருந்தது. மரியா டூ கார்மோ அவருடைய கைப்பெட்டியில் என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற பிரசுரத்தைக் கவனமாய் வைத்து அடுக்கினார்கள்.b தன் பிரயாணத்தில் அன்டோனியோவுக்கு மிகுதியான நேரம் இருந்ததனால், அவர் அந்தப் புத்தகத்தை வாசித்தார். திரும்பிவரும் விமான பயணத்தின்போது, விமானத்தை ஒரு புயல் கடுமையாய்த் தாக்கியது, தரையில் இறங்குவது அதற்குக் கடினமாகிவிட்டது. தன் வாழ்க்கையில் முதல் தடவையாக, அன்டோனியோ யெகோவாவிடம் ஜெபித்தார்.
அன்டோனியோ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, தன் மனைவியுடன் படிப்பு நடத்தின அந்தச் சாட்சி அவரை ஒரு கூட்டத்துக்கு வரும்படி அழைத்தார். அவர் அதை ஏற்று, எல்லாரும் மிகச் சிநேகப்பான்மையுடையோராக இருப்பதைக் கண்டார். பைபிள் படிப்புக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தான் சில தீர்மானங்கள் செய்ய வேண்டியிருப்பதை அன்டோனியோ சீக்கிரத்தில் தெரிந்துகொண்டார். இதன் பலனாக, அவர் தற்காப்பு கலை கற்பிப்பதை விட்டுவிட்டு, இப்போதும் என்றென்றும் சமாதானமான வாழ்க்கையை வாழ்வது எவ்வாறு என்று தம்முடைய மாணாக்கருக்குக் கற்பிக்கத் தொடங்கினார். கறுப்பு பெல்ட்காரராக இருந்த அவர்களில் ஒருவரும், இப்போது முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவராக இருக்கிறார்.
அன்டோனியோவைக் குறித்ததில், 1991-ன் ஏப்ரலில் அவர் முழுக்காட்டப்பட்டார். தன் முழுக்காட்டுதலுக்குப் பின்னான அடுத்த நாள், ஒரு துணைப் பயனியராகச் சேவிக்கத் தொடங்கினார். ஆறு மாதங்களுக்குப் பின் ஒழுங்கான பயனியராகச் சேவிக்கத் தொடங்கினார், சீக்கிரத்தில் 12 வீட்டு பைபிள் படிப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். 1993-ன் ஜூலையில், உதவி ஊழியராக சபையில் நியமிக்கப்பட்டார்.
அடிக்கடி ஊழியம் செய்யப்பட்ட பிராந்தியம்
நாட்டின் பல பகுதிகளில், பிராந்தியம் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் செய்து முடிக்கப்படுகிறது. சாட்சிகள் “மீன்பிடிக்கும்” தங்கள் நடவடிக்கைகளை பலன்தரத்தக்கதாக எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்?
ஜோவா, ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நபரையும் சந்திக்க முயற்சி செய்கிறார். ஒரு அம்மாளைச் சந்தித்தபோது, அந்த வீட்டில் வேறு எவராவது வசிக்கிறார்களா என்று கேட்டார். தன் கணவரும் இரண்டு குமாரர்களும் அங்கே வசிப்பதாகவும், ஆனால் அவர்கள் வேலை செய்பவர்களாக மாலையில்தானே வீட்டில் இருப்பார்களாதலால் அவர்களைச் சந்திப்பது எளிதாயிராது என்றும் அந்த அம்மாள் பதிலளித்தார்கள். ஆகவே ஜோவா தொடர்ந்து அந்தப் பகுதியில் மற்றவர்களைச் சந்தித்துக்கொண்டு சென்றார். ஏறக்குறைய ஒன்றரை மணிநேரத்துக்குப் பின், ஒரு மனிதர் அவரை அணுகினார்.
“நீர் என்னுடன் பேச விரும்புவதாகச் சொன்னீர், உமக்கு என்ன வேண்டும், தயவுசெய்து என்னிடம் சொல்லும்,” என்று அந்த மனிதர் ஜோவாவிடம் கேட்டார்.
“என்னை மன்னிக்கவும், நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று ஆச்சரியமடைந்தவராய் ஜோவா பதிலளித்து, “நீங்கள் யார்?” என்றார்.
“நான் அன்டோனியோ, நான் இந்த வீதியில்தானே வசிக்கிறேன். குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் பேச நீர் விரும்புவதாக என் தாயாரிடம் சொன்னீர், ஆகவே உமக்கு என்ன வேண்டுமென்று தெரிந்துகொள்ள நான் வந்திருக்கிறேன்.”
ஜோவா அன்டோனியோவுக்கு முழு விளக்கமான சாட்சி கொடுத்து அவரோடு பைபிள் படிப்பு ஒன்றைத் தொடங்கினார். இரண்டாவது படிப்புக்குப் பின்பு, அந்தப் படிப்பை வாரத்தில் இருமுறை நடத்தக்கூடுமாவென அன்டோனியோவை கேட்டார். நான்கே மாதங்களுக்குள், அவர் ஜோவாவுடன் சேர்ந்து, தான் வசிக்கும் வீதியிலேயே நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கினார். மூன்று மாதங்களுக்குப் பின்பு, அவர் முழுக்காட்டப்பட்டார். அவருடைய தாயாரும் சமீபத்தில் பைபிள் படிக்கத் தொடங்கினார்கள். ஊழியத்தில் குடும்பத்தின் எல்லா உறுப்பினரிடமும் பேச முயற்சி செய்வது எவ்வளவு முக்கியமானது!
போர்த்துகலின் தண்ணீர்களில் மிகுதியான ஆவிக்குரிய மீன்பிடித்தல் வேலை இன்னும் செய்யப்படவிருக்கிறதென்று இத்தகைய ஊக்கமூட்டும் அனுபவங்கள் காட்டுகின்றன. அங்குள்ள கடினமாய் உழைக்கும் சாட்சிகளை, முன்னேற்றமுள்ள ஆயிரக்கணக்கான பைபிள் படிப்புகளைக் கொண்டு யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். பைபிள் சத்தியத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தும்படி மேலும் மேலும் அதிகமான வழிகளை அவர்கள் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கையில், பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்களுக்குக் கூறின அப்போஸ்தலன் பவுலின் இவ்வார்த்தைகள் இன்று போர்த்துகலில் உண்மையாகவே நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கின்றன: “எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்.”—பிலிப்பியர் 1:18.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 23-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
ஸ்பெய்ன்
போர்த்துகல்
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
போர்த்துகலில் பைபிள் சத்தியத்தை அறிவிக்க சாட்சிகள் எல்லா வாய்ப்பையும் பயன்படுத்துகின்றனர்