அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தனர்
மோசேயும் ஆரோனும்—கடவுளுடைய வார்த்தையின் தைரியமுள்ள அறிவிப்பாளர்கள்
இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்: எண்பது வயதான மோசேயும் அவருடைய சகோதரன் ஆரோனும், பூமியில் மிக அதிக வல்லமைவாய்ந்த மனிதனான எகிப்தின் பார்வோன் முன் நிற்கின்றனர். எகிப்தியருக்கு இந்த மனிதன், தெய்வங்களின் ஒரு பிரதிநிதியைப் பார்க்கிலும் மேலானவனாக இருக்கிறான். அவன்தானே ஒரு தெய்வமென அவர்கள் நம்புகின்றனர். கழுகுபோன்ற தலையைக் கொண்ட ஒரு தெய்வமான, ஹோரஸின் மனித உருவெடுத்தவனாக அவன் கருதப்படுகிறான். எகிப்திய தேவர்களும் தேவதைகளுமானோருக்குள், ஐஸிஸ் மற்றும் ஆஸிரிஸோடுகூட, ஹோரஸ் ஒன்றுசேர்ந்து முக்கிய திரித்துவமாயினர்.
பார்வோனை அணுகுவோர் எவரும், அவனுடைய கிரீடத்தின் நடுவிலிருந்து அச்சுறுத்தும் உருவான நாகப் பாம்பின் தலை தூக்கியதாக நிற்பதைக் கவனியாமல் இருக்க முடியாது. இந்தப் பாம்பு பார்வோனின் சத்துருக்கள் எவரின்மீதும் அக்கினியையும் அழிவையும் கக்கிப்போடக்கூடுமெனக் கருதப்பட்டது. இப்போது, இந்தத் தெய்வ-அரசனுக்கு முன்பாக, மோசேயும் ஆரோனும், அடிமைப்படுத்தப்பட்ட இஸ்ரவேலைத் தங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பண்டிகை ஆசரிக்கும்படி அவன் அனுப்ப வேண்டுமென்ற, முன்னொருபோதும் கேட்கப்பட்டிராத வேண்டுகோளுடன் வந்திருக்கின்றனர்.—யாத்திராகமம் 5:1.
பார்வோனின் இருதயம் கடினப்பட்டதாக இருக்குமென யெகோவா ஏற்கெனவே முன்னறிவித்திருந்தார். ஆகையால் மோசேயும் ஆரோனும் அவனுடைய எதிர்ப்பான பதிலின்பேரில் ஆச்சரியப்படவில்லை: “யெகோவா யார்? நான் ஏன் அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து இஸ்ரவேலைப் போகவிடவேண்டும்? நான் அந்த யெகோவாவை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை.” (யாத்திராகமம் 4:21; 5:2, திருத்திய மொழிபெயர்ப்பு) இவ்வாறு, நேருக்குநேரான ஒரு போராட்டத்திற்கு ஆயத்தமாகியது. அடுத்த சந்திப்பின்போது, மோசேயும் ஆரோனும், மெய்யானவரும் சர்வவல்லமையுள்ளவருமான கடவுளைத் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதற்கு அதிர்ச்சியூட்டும் சான்றை பார்வோனுக்கு அளித்தனர்.
ஓர் அற்புதம் நிகழ்கிறது
யெகோவா கட்டளையிட்டபடி, எகிப்தின் தெய்வங்களுக்கு மேலாக யெகோவாவின் உச்ச உயர்நிலையை நிரூபித்த ஓர் அற்புதத்தை ஆரோன் நடப்பித்தார். பார்வோனுக்கு முன்பாக அவர் தன் கோலைக் கீழே போட்டார், உடனடியாக அது ஒரு பெரிய பாம்பாயிற்று! இந்த அற்புதத்தால் திகைப்புற்று, பார்வோன் தன் மந்திரவாத பூசாரிகளை அழைப்பித்தான்.a பேய்களுடைய ஆற்றலின் உதவியால், இந்த ஆட்கள் தங்கள் சொந்த கோல்களைக் கொண்டு இதைப்போன்ற ஒன்றைச் செய்யக்கூடியோராக இருந்தனர்.
பார்வோனும் அவனுடைய பூசாரிகளும் மகிழ்ந்திருந்தால், அது ஒரு கணநேரத்திற்கேயாகும். ஆரோனின் பாம்பு அவர்களுடைய பாம்புகளை ஒவ்வொன்றாக விழுங்கினபோது அவர்களுடைய முகபாவங்களைக் காட்சிப்படுத்திப் பாருங்கள்! எகிப்திய தெய்வங்கள், மெய்யான கடவுளாகிய யெகோவாவுக்கு நிகரற்றவையென அங்கிருந்த எல்லாரும் காணக்கூடியதாக இருந்தது.—யாத்திராகமம் 7:8-13, தி.மொ.
எனினும், இதற்குப் பின்னும், பார்வோனின் இருதயம் கடினப்பட்டே இருந்தது. பாழ்ப்படுத்தின பத்து அடிகளை, அல்லது வாதைகளை எகிப்தின்மீது கடவுள் கொண்டுவந்த பின்பே, கடைசியாகப் பார்வோன் மோசேயினிடமும் ஆரோனிடமும் இவ்வாறு சொன்னான்: “நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து என் ஜனத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய் நீங்கள் சொன்னபடியே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்.”—யாத்திராகமம் 12:31, தி.மொ.
நமக்குப் பாடங்கள்
வல்லமை மிகுந்த எகிப்தின் பார்வோனை அணுக மோசேவுக்கும் ஆரோனுக்கும் எது உதவிசெய்தது? முதலில், மோசே தன் திறமையில் நம்பிக்கையில்லாமையை வெளிப்படுத்தி, தான் “திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்று கூறினார். யெகோவாவின் ஆதரவு அவருக்கு உறுதியளிக்கப்பட்ட பின்பும்: “நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்,” என்று கெஞ்சினார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், கடவுள் வேறு யாரையாவது அனுப்பும்படி மோசே மன்றாடினார். (யாத்திராகமம் 4:10, 13) எனினும், அவருடைய பொறுப்பளிப்பை நிறைவேற்றுவதற்குத் தேவைப்பட்ட ஞானத்தையும் பலத்தையும் அவருக்கு அளித்து, சாந்த குணமுள்ள மோசேயையே யெகோவா பயன்படுத்தினார்.—எண்ணாகமம் 12:3.
இன்று, யெகோவா தேவனின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் ஊழியர்கள், ‘சகல ஜாதியாரின் ஜனங்களையும் சீஷராக்கும்படியான’ கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். (மத்தேயு 28:19, 20, NW) இந்த ஊழிய பொறுப்பை நிறைவேற்றுவதில் நம்முடைய பங்கை செய்வதற்கு, நமக்கு இருக்கும் வேதாகம அறிவையும் எந்தத் திறமைகளையும் மிகச் சிறந்த முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். (1 தீமோத்தேயு 4:13-16) நம்முடைய குறைபாடுகளின்பேரில் கவனத்தை ஊன்ற வைத்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, கடவுள் நமக்கு அளித்திருக்கும் எந்த ஊழிய பொறுப்பையும் விசுவாசத்துடன் நாம் ஏற்போமாக. அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு அவர் நம்மைத் தகுதிபெற செய்து பலப்படுத்தக்கூடும்.—2 கொரிந்தியர் 3:5, 6; பிலிப்பியர் 4:13.
மோசே, மனித மற்றும் பேய்த்தன எதிர்ப்பை எதிர்ப்பட்டிருந்ததால், அவருக்கு நிச்சயமாகவே மனித இயல்புக்கு மிஞ்சிய உதவி தேவைப்பட்டது. இதனால், “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்,” என்று யெகோவா அவருக்கு உறுதியளித்தார். (யாத்திராகமம் 7:1) ஆம், மோசேவுக்கு கடவுள் அளித்த ஆதரவும் அதிகாரமும் இருந்தன. யெகோவாவின் ஆவி அவர்மீது இருந்ததனால், பார்வோனுக்கோ அல்லது அந்த அகந்தையுள்ள அரசனின் படை வீரர்களுக்கோ பயப்பட மோசேவுக்கு எந்தக் காரணமுமில்லை.
நாமும்கூட, நம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு, யெகோவாவின் பரிசுத்த ஆவி, அல்லது செயல் நடப்பிக்கும் சக்தியின்பேரில் நம்பிக்கையுடன் சார்ந்திருக்க வேண்டும். (யோவான் 14:26; 15:26, 27) கடவுளுடைய ஆதரவுடன் நாம், பின்வருமாறு பாடின தாவீதின் இவ்வார்த்தைகளை எதிரொலிக்கலாம்: “கடவுளில் நம்பிக்கைவைத்திருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?”—சங்கீதம் 56:11, தி.மொ.
யெகோவா தம்முடைய இரக்கத்தினால், மோசேயை அவருடைய வேலை பொறுப்பில் தனிமையாக விட்டுவிடவில்லை. மாறாக, கடவுள் இவ்வாறு சொன்னார்: “உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; . . . உன் சகோதரனாகிய ஆரோன் [பார்வோனிடத்தில்] பேசவேண்டும்.” (யாத்திராகமம் 7:1, 2) மோசே நியாயப்படி கையாளக்கூடிய வரையறைகளுக்குள் செயல்படுவதற்கு யெகோவா எத்தகைய அன்புள்ளவராக இருந்தார்!
மகா உன்னதராகிய யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் சவாலை ஏற்கிற உடன் விசுவாசிகளின் கூட்டுறவை கடவுள் நமக்கு அருளுகிறார். (1 பேதுரு 5:9) ஆகையால், நாம் எதிர்ப்படக்கூடிய இடையூறுகளின் மத்தியிலும், மோசேயையும் ஆரோனையும் போல், கடவுளுடைய வார்த்தையை தைரியமாய் யாவரறிய அறிவிப்போராய் இருப்போமாக.
[அடிக்குறிப்பு]
a ‘மந்திரவாத பூசாரிகள்’ (NW) என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெயச் சொல், பேய்களின் வல்லமைக்கும் மேலாக, இயல்புமீறிய வல்லமைகளை உடையோரென்று பாராட்டின ஒரு தொகுதி சூனியக்காரரைக் குறிக்கிறது. இந்த மனிதர், பேய்களைக் கீழ்ப்படியும்படி வரவழைக்கக்கூடும் என்றும், இந்தச் சூனியக்காரர்மீது பேய்களுக்கு வல்லமை இருக்கவில்லை என்றும் நம்பப்பட்டது.
[பக்கம் 25-ன் படம்]
பார்வோனுக்கு முன்பாக மோசேயும் ஆரோனும் தைரியமாய் யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்தனர்