பாருங்கள்! நியூவேயில் ஒரு ராஜ்ய மன்றம்
நியூவே என்பது தென் பசிபிக்கில் உள்ள ஒரு சிறிய பவழ தீவு, அது நியூ ஜீலாந்துக்கு வடகிழக்கே 2,160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு பயண சிற்றேட்டின்படி, நியூவே என்ற பெயர் இரண்டு சொற்களிலிருந்து வருகிறது, நியூ என்பதற்கு “தென்னை மரம்,” என்றும், ஏ என்பதற்கு “அதோ பார்,” அல்லது “பார்” என்றும் அர்த்தம். அந்தச் சிற்றேடு சொல்கிறது: “புராணக்கதையின்படி, அத்தீவில் முதலாவது வந்து குடியேறிய பாலிநீசியர்கள் அந்தத் தேசத்தில் தென்னை மரங்கள் வளருவதைப் பார்த்தபோது, இந்த வார்த்தைகளை கூறினர்.”
இன்று நியூவேயில் உள்ள யெகோவாவின் சாட்சிகள், “ஏ! ஃபாலே ஹெ கேயுட்டூ ஹா மேயுட்டாலூ!” என்று அங்கு வருகை தருபவர்களிடம் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றனர். அதன் அர்த்தம், “பாருங்கள்! எங்களுடைய ராஜ்ய மன்றம்!” இந்த மன்றத்தைப் பற்றி அவர்கள் ஏன் அவ்வளவு ஆழமான உணர்ச்சிகளைக் கொண்டிருக்கின்றனர்? எல்லா இடங்களிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ராஜ்ய மன்றங்களைக் குறித்து பெருமைப்படுகின்றனர், விசேஷமாக அவர்கள்தாமே அதைக் கட்டியிருந்ததால் அவ்வாறு உணருகின்றனர். ஆனால் பரந்து கிடக்கும் தென் பசிபிக் மத்தியில் உள்ள ஒரு தொலைகோடியான தீவில் ஒரு ராஜ்ய மன்றத்தை கட்டுவது என்றால் அது முற்றிலும் ஒரு வித்தியாசமான விஷயம். நியூவே 260 சதுர கிலோமீட்டர் மட்டுமே அடங்கியுள்ள ஒரு தீவு, முழு தீவிலும் 2,300 ஆட்கள் மட்டுமே இருக்கின்றனர்.
அந்த ராஜ்ய மன்றத்தை யார் கட்டப்போவது என்ற கேள்வி எழும்பியது. நியூவேயில் ஒரு சபை உள்ளது, அதில் 32 சாட்சிகள் மட்டுமே இருக்கின்றனர். டிரக்குகள், புல்டோசர்கள், பாரந் தூக்கிகள் போன்ற தேவைப்பட்ட பெரிய சாதனங்கள் அனைத்துமே அரசாங்கத்துக்கு சொந்தமானவை. கூடுதலாக, தேவைப்பட்ட எல்லா முக்கியமான கட்டட பொருட்கள்—இரும்பு, காரைக்கட்டுகள், கூரைக்கு வேண்டிய பொருட்கள், மின்சார மற்றும் குழாய் சம்பந்தமான பொருட்கள், ஒலிபெருக்கி சாதனங்கள், நாற்காலிகள்—நியூ ஜீலாந்திலிருந்து ஒரு போக்குவரத்து வாகனத்தில் கொண்டுவர வேண்டியிருந்தது, அந்தப் போக்குவரத்து வாகனம் ஐந்து வாரத்துக்கு ஒருமுறைதான் இயங்குகிறது. கடைசியில், அத்தீவின் பாறை நிலம் கட்டடம் கட்டுவதை கடினமானதாக்கிவிடும், மேலும் வெப்பமண்டல புயற்காற்றுகளை தாங்கி நிற்பதற்கு ஏற்றவாறு மன்றத்தைக் கட்ட வேண்டும். அது நிச்சயமாக எவருக்குமே ஒரு கடினமான வேலையாயிருக்கும்!
இருப்பினும், இங்கு ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. யெகோவாவின் சாட்சிகளுக்கு உள்ளூரில் ராஜ்ய மன்றம் மெய் வணக்கத்துக்கு ஒரு மையமாக உள்ளது, அவர்கள் வழிநடத்துதலுக்காகவும் உதவிக்காகவும் யெகோவா தேவனை நோக்கியிருக்கின்றனர். (சங்கீதம் 56:11; 127:1) ஆக்லாண்டில் உள்ள நியூவே சபையைச் சேர்ந்த அங்கத்தினர்களும் உட்பட நியூ ஜீலாந்திலிருக்கும் கிறிஸ்தவ சகோதரர்கள், நியூவேயில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய உதவிக்கு வந்தனர், கட்டட வேலைக்கு இருதயப்பூர்வமான ஆதரவைக் கொடுத்தனர்.
ஆரம்பித்து அதை தொடர்ந்து செய்வதற்கான தீர்மானம்
ஜூன் 1994-ல் நியூ ஜீலாந்தில் உள்ள ரோட்டரியூயா என்ற இடத்தில் இருந்த ராஜ்ய மன்றம் கட்டும் இடத்தில், நியூவே கட்டட வேலையில் பங்குகொள்ள விருப்பமுள்ளோருக்கு ஒரு அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆச்சரியப்படும்விதத்தில், 200 கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் முன்வந்தனர். இந்த எண்ணிக்கையிலிருந்து 80 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதில் தச்சர்கள், இரும்பு வேலை செய்பவர்கள், தண்ணீர் குழாய் முதலியன பழுதுபார்ப்பவர்கள், கூரை போடுபவர்கள், சுவர் பூசுபவர்கள், பெயிண்ட் அடிப்பவர்கள், மின்சார வேலை செய்பவர்கள், ஒலிபெருக்கி சாதன பணியாளர்கள், காரைக்கட்டு வேலை செய்பவர்கள், கொத்தனார்கள், தொழிலாளிகள் ஆகியோர் இருந்தனர்.
சகோதரர்கள் திட்ட வரைபடம் தயாரித்து யெகோவாவின் பேரில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து செயல்பட்டனர். நியூவேயில் இருக்கும் இரண்டு சபை மூப்பர்களில் ஒருவர் ஒரு உள்ளூர் வணிகர், அவர் தேவைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்தார். அயல்நாட்டு வேலையாட்களுக்கு ஒரு விசேஷ விமானப் பிரயாணம்/தங்கும் வசதி செலவுகள் கலந்துபேசி முடிவுசெய்யப்பட்டன, அதற்கான செலவுகளை அந்த வாலண்டியர்களே கொடுக்க முன்வந்தனர், கட்டட வேலைக்கான தேதிகள் தீர்மானிக்கப்பட்டன. அக்கட்டட வேலையை மார்ச் 4 முதல் மார்ச் 23, 1995 வரை 20 நாட்களில் முடிக்க வேண்டும், அதற்குப் பிறகு ராஜ்ய மன்றம் அர்ப்பணிக்கப்படும்.
முன்னேற்பாடுகள் செய்வதற்கென்று நியூ ஜீலாந்திலிருந்து ஒரு வாரத்துக்கு முன்பாகவே வந்திருந்த திட்ட இயக்குநர் இவ்வாறு சொன்னார்: “நான் அந்த இடத்தை முதலாவது பார்த்தபோது திகிலடைந்தேன். நிலம் கற்பாறையாக இருந்தது. அடித்தளத்தை மட்டும் தோண்டுவதற்கு இரண்டு வாரங்கள் எடுக்கும்.” ஆனால் அவர் உள்ளூர் சாட்சிகளை குறைவாய் மதிப்பிட்டதாக பின்னர் ஒப்புக்கொண்டார். “நியூவேயில் இருக்கும் சகோதரர்கள் பாறைகளின் கலவையை நன்கு அறிந்திருக்கின்றனர், பாறைகளை எங்கு அடித்தால் பெரிய துண்டுகள் விழும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர்,” என்று அவர் சொன்னார். அடித்தளங்கள் போடும் வேலை இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது!
மார்ச் 4 அன்று நியூ ஜீலாந்திலிருந்து சாட்சிகள் அடங்கிய முதலாவது தொகுதி ஒன்று விமானத்தில் வந்து இறங்கியது, அப்போது காரைக்கட்டு வேலை நடந்து முடிந்தது. வேலையாட்கள் அடங்கிய தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துசேர்ந்தபோது, அக்கட்டட வேலையின் பல்வேறு கட்டங்கள் முடிவடைந்தன. வேலைநாட்கள் காலை 7:00 மணிக்கு ஆரம்பமாயின, அதோடு தின வசனமும் சுருக்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது. சில சகோதரர்கள் ஒரு நாளில் 12-மணிநேரம், 97 டிகிரி ஃபேரன்ஹீட் வெயிலில் வேலை செய்தனர். கடைசியில் மார்ச் 23-க்குள்ளாக நிலத்தோற்றம் சரிசெய்யப்பட்டது. ஒரு மாமரத்திலிருந்து செய்யப்பட்ட கவர்ச்சிமிக்க அடையாளச் சின்னம் ஒன்று அந்த கட்டடத்தை “யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்” என்று அடையாளம் காண்பித்தது.
ஒத்துழைக்கும் மனப்பான்மையும் உபசரிப்பு தன்மையும்
நியூவேயில் இருந்த ஜனங்களின் ஒத்துழைப்பு, அந்தக் கட்டட வேலை வெற்றிகரமாக முடிந்ததற்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது. உள்ளூர் கிராமவாசிகள் சகோதரர்களின் மனப்பான்மையைக் கண்டு உற்சாகமடைந்து உணவும் பணமும் அளித்தனர். அந்த மன்றம் கட்டும் வேலையை அநேகர் தங்கள் சொந்த வேலையாக கருதினர். அரசு அதிகாரிகளும் வணிகர்களும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகத்தைச் செய்தனர். தேவைப்பட்ட சாதனங்களும் கிடைப்பவையாய் இருந்தன, மரவேலை தொழிற்சாலையும்கூட அவர்களுக்கு கிடைப்பதாய் இருந்தது. கப்பல் போக்குவரவு கம்பெனி ஒன்று அதனுடைய கப்பல் செல்லும் வழியைக்கூட மாற்றி தேவைப்பட்ட பொருட்கள் சரியான நேரத்தில் வந்துசேருவதை நிச்சயப்படுத்திக்கொண்டது.
நியூவேயில் இருந்த சாட்சிகளின் கடினமான உழைப்பையும் உபசார குணத்தையும் அங்கு வருகை தந்திருந்தவர்கள் உண்மையிலேயே போற்றினர், அவர்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் பகிர்ந்துகொண்டனர். “உள்ளூர் சகோதரிகள் மிகவும் உதவியாய் இருந்தனர்,” என்று கட்டட வேலையாள் ஒருவர் சொன்னார். ஒவ்வொரு நாளும் சூடான மதிய உணவோடுகூட, ஒவ்வொரு நாள் காலையும் சகோதரிகள் 6:30 மணிக்கு, காலை உணவை தயாரித்துக் கொடுத்தனர். சிலர் உணவு தயாரிப்பதற்காக காலை 4:30 மணிக்கு எழுந்தனர். ஒரு கட்டட வேலையாள் சொன்னார்: “நம்முடைய சொந்த வீடுகளில் இருப்பதைவிட இங்கு நியூவேயில் வாழும் நிலைமைகள் மேலானவையாய் இருக்கின்றன.”
மார்ச் 10 அன்று நியூவே ஸ்டார் அந்த சம்பவத்தைப் பற்றி முதல் பக்கத்தில், “நியூவேயில் முதல் ராஜ்ய மன்றம்” என்ற தலைப்பில் அறிக்கை செய்தது. அதோடு நியூ ஜீலாந்து மற்றும் நியூவே நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் வேலை செய்யும் படம் ஒன்று அதில் இருந்தது. அந்த மன்றத்தின் அளவு 280 சதுர மீட்டர் என்றும் அதில் 70 முதல் 100 ஆட்கள் அமரலாம் என்றும் அது கூறியது. அந்த கட்டுரை கூடுதலாக சொன்னது: “உண்மையில் அந்த வேலையை இரண்டு [வாரங்களில்] தான் முடிக்க முடியும், ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அது நீடிக்கப்படும். இந்த கட்டத்தில், வேலை ஆரம்பித்து இரண்டே நாட்களுக்குப் பிறகு, அஸ்திவாரம், கட்டுமானச் சட்டங்கள், மரக்கட்டைகள், கூரை போன்றவை குறிக்கப்பட்டிருந்த நேரத்துக்கு முன்பே எழுப்பப்பட்டன.”
நியூவே தீவில் உள்ள அனைவரும் அக்கட்டடத்தை பார்க்கும்படியும் அதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும்படியும் ஒரு உள்ளூர் வணிகர் தன் விருப்பத்தை தெரிவித்தார். அன்பு மற்றும் ஒத்துழைப்போடும் என்ன செய்யப்படலாம் என்பதை அது காண்பிக்கும் என்று அவர் சொன்னார்.
204 பேர் அடங்கிய ஒரு கூட்டம் ஒன்று பிரதிஷ்டை அன்று வந்தது. ராஜ்ய மன்ற கட்டட வேலையை பாடல் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் நியூவேயில் இருந்த சகோதரர்களும் சகோதரிகளும் பிள்ளைகளும் சேர்ந்து ஒரு விசேஷ நிகழ்ச்சி நடத்திக் காண்பித்தனர், அது அங்கு வந்திருந்த அனைவரின் உணர்ச்சிகளையும் தூண்டியது. கட்டட குழுவுக்கும் யெகோவாவுக்கும் நன்றி தெரிவிக்கும் வார்த்தைகள் சொல்லப்பட்டன. அந்த வேலையைச் செய்துமுடிப்பதற்கு யெகோவாவின் ஆவி அவர்களுடைய மனங்களையும், இருதயங்களையும், கைகளையும் உந்துவித்தது.—ஏசாயா 40:28-31.