உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 11/15 பக். 4-7
  • ஒரு மேம்பட்ட வாழ்க்கை—விரைவில்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு மேம்பட்ட வாழ்க்கை—விரைவில்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒரு மேம்பட்ட வாழ்க்கை—எப்போது?
  • ஒரு மேம்பட்ட வாழ்க்கை—எப்படி?
  • நீங்கள் செய்ய வேண்டியது என்ன
  • பரதீஸ்—மிக விரைவில்!
    கடவுளுடைய நண்பர்
  • நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுளுடைய நோக்கம் விரைவில் நிறைவேறவிருக்கிறது
    வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
  • பூமி எப்போது பூஞ்சோலையாக மாறும்?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 11/15 பக். 4-7

ஒரு மேம்பட்ட வாழ்க்கை—விரைவில்!

வானிலை முன்கணிப்பவர் ஒருவர் முன்கூட்டியே சொல்லும் எல்லா காரியங்களும் பெரும்பாலும் எப்போதுமே உண்மையாய் நடக்கிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அடுத்த நாள் மழை பெய்யும் என்று அவர் மாலை செய்தியில் அறிவித்தார் என்றால், அடுத்த நாள் காலை வீட்டை விட்டுப் புறப்படும்போது, உங்களுடைய குடையை எடுத்துச்செல்ல நீங்கள் தயங்குவதில்லை. அவருடைய கடந்தகாலப் பதிவு உங்களுடைய நம்பிக்கையை வென்றிருக்கிறது. அவர் சொல்வதன் பேரில் நீங்கள் செயல்படுகிறீர்கள்.

இப்போது, ஒரு பரதீஸிய பூமியின் மீது ஒரு மேம்பட்ட வாழ்க்கைக்கான யெகோவாவின் வாக்கு எவ்வளவு நம்பத்தக்கதாய் உள்ளது? அவருடைய கடந்தகாலப் பதிவு எதைக் காண்பிக்கிறது? பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம், யெகோவாவின் பதிவை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. அவர் தவறாமல் காரியங்களைத் துல்லியமாக நிறைவேற்றுகிற கடவுளாகவும் உண்மைத்தன்மையுள்ள கடவுளாகவும் இருக்கிறார். (யோசுவா 23:14; ஏசாயா 55:11) யெகோவா தேவனின் வாக்குறுதிகள் அவ்வளவு நம்பத்தக்கவையாக இருக்கிறபடியால், வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் எதிர்கால சம்பவங்களை ஏற்கெனவே நடந்துவிட்டவையாக அவர் சில சமயங்களில் உண்மையில் பேசுகிறார். உதாரணமாக, மரணமும் வருத்தமும் இனிமேல் இல்லாமற்போகும் புதிய உலகைப் பற்றிய அவருடைய வாக்கை அடுத்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவை [வாக்களிக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள்] நடந்தேறின!” வேறு வார்த்தைகளில் சொன்னால், “அவை உண்மையில் நடந்த சம்பவங்கள்!”—வெளிப்படுத்துதல் 21:5, 6, NW, அடிக்குறிப்பு.

ஆம், யெகோவா கடந்த காலத்தில் கொடுத்த வாக்குகளின் நிறைவேற்றங்கள், மனிதவர்க்கத்துக்கு ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அளிக்கப் போவதாக அவர் கொடுத்திருக்கும் வாக்கு நிறைவேறும் என்பதன் பேரில் நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. ஆனால் எப்போது இந்த மேம்பட்ட வாழ்க்கை வரும்?

ஒரு மேம்பட்ட வாழ்க்கை—எப்போது?

மிக மேம்பட்டதோர் வாழ்க்கை விரைவில் வரும்! பரதீஸ் ஒரு மேம்பட்ட வாழ்க்கையைக் கொண்டு வருவதற்கு சற்று முன்பு இந்த பூமியில் அநேக கெட்ட காரியங்கள் நடைபெறும் என்று பைபிள் சொல்வதால் நாம் அதைக் குறித்து நிச்சயமாய் இருக்கலாம். அந்தக் கெட்ட காரியங்கள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, மகா யுத்தங்கள் உண்டாகும் என்று இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். அவர் சொன்னார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7) இந்தத் தீர்க்கதரிசனம் உண்மையாய் நிறைவேறியிருக்கிறது. 1914-லிருந்து 1945 வரை இரண்டு உலக யுத்தங்கள் நடந்திருக்கின்றன, அவற்றைத் தொடர்ந்து மற்ற யுத்தங்களும்கூட பெரும் எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன, அவற்றில் தேசங்கள் ஒன்றோடொன்று சண்டை போட்டிருக்கின்றன. “சராசரியாக வருடாந்தர அடிப்படையில், இந்தக் காலப்பகுதியின்போது [இரண்டாம் உலக யுத்தம் முதற்கொண்டு] போர் மரணங்களின் எண்ணிக்கை 19-ம் நூற்றாண்டில் இருந்ததைவிட இரண்டு மடங்குக்கு மேலாகவும், 18-ம் நூற்றாண்டில் இருந்ததைவிட ஏழு மடங்கு அதிகமாகவும் இருந்திருக்கிறது.”—உவோர்ல்ட் மிலிட்டரி அண்ட் சோஷியல் எக்ஸ்பெண்டிச்சர்ஸ் 1993.

பரதீஸில் ஒரு மேம்பட்ட வாழ்க்கை சீக்கிரத்தில் வரவிருக்கிறது என்பதற்கு நோய்கள் பரவிவருவது மற்றொரு அத்தாட்சி. ‘பல இடங்களில் கொள்ளைநோய்கள் உண்டாகும்’ என்று இயேசு முன்னறிவித்தார். (லூக்கா 21:11) இந்தத் தீர்க்கதரிசனம் உண்மையாய் நிறைவேற்றமடைந்துள்ளதா? ஆம். முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு, ஸ்பானிஷ் காய்ச்சல் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட ஜனங்களைக் கொன்று போட்டது. அந்த சமயம் முதற்கொண்டு, புற்றுநோய், இருதய நோய், மலேரியா, எய்ட்ஸ், மற்றும் பல வியாதிகள் லட்சக்கணக்கான ஜனங்களைக் கொன்றிருக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில், அசுத்தமான தண்ணீரால் உண்டாகும் வியாதிகள் (வயிற்றுப்போக்கு, குடல் பூச்சி நோய்த்தாக்கம் ஆகியவை உட்பட) ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான உயிர்களைக் கொல்லுகின்றன.

‘பஞ்சங்கள் உண்டாகும்’ என்றும்கூட இயேசு சொன்னார். (மத்தேயு 24:7) இதற்கு முந்தின கட்டுரையில் பார்த்தபடி, உலகிலுள்ள ஏழை மக்களுக்கு உண்பதற்குப் போதுமான உணவு இல்லை. பரதீஸில் மிகவும் மேம்பட்ட வாழ்க்கை ஒன்று விரைவில் வரும் என்பதற்கான அத்தாட்சியின் மற்றொரு பாகமாய் இது உள்ளது.

‘மகா பூமியதிர்ச்சிகள் உண்டாகும்’ என்று இயேசு சொன்னார். (லூக்கா 21:11) இதுவும்கூட நம்முடைய காலத்தில் உண்மையாய் நடந்திருக்கிறது. 1914 முதற்கொண்டு நாசம் விளைவிக்கும் பூமியதிர்ச்சிகளால் ஏற்பட்ட அழிவு லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கிறது.

ஜனங்களில் ஏற்படும் மாற்றம் ‘கடைசி நாட்களைக்’ குறிக்கும் என்று பைபிள் மேலும் சொல்கிறது. அவர்கள் “தற்பிரியராயும்” “பணப்பிரியராயும்,” பிள்ளைகள் “தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்” இருப்பார்கள். ஜனங்கள் பொதுவாக “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) அநேகர் இந்த விவரிப்புக்குப் பொருத்தமாயிருக்கின்றனர் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?

அதிகமதிகமான ஜனங்கள் கெட்ட காரியங்களை அப்பியாசித்துக் கொண்டிருப்பதால், அக்கிரமத்தில் ஓர் அதிகரிப்பு இருக்கிறது. இதுவும்கூட முன்னறிவிக்கப்பட்டது. மத்தேயு 24:12-ன்படி, இயேசு ‘அக்கிரமம் மிகுதியாவதைக்’ குறித்துப் பேசினார். பல வருடங்களுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் இப்போது குற்றச்செயல் மோசமாக உள்ளது என்பதை நீங்கள் பெரும்பாலும் ஒத்துக்கொள்வீர்கள். கொள்ளையடிக்கப்படுவோமோ, ஏமாற்றப்படுவோமோ அல்லது ஏதாவது ஒருவிதத்தில் தீங்கிழைக்கப்படுவோமோ என்று எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள் பயப்படுகின்றனர்.

போர்கள், வியாதிகள் பரவலாகக் காணப்படுதல், உணவுப் பற்றாக்குறைகள், பூகம்பங்கள், அதிகரித்துக்கொண்டே செல்லும் குற்றச்செயல், மனித உறவுகள் மோசமடைதல்—பைபிள் முன்னறிவித்தபடியே இவையனைத்தும் இன்று தெளிவாகத் தெரிகின்றன. ‘ஆனால் இந்தக் காரியங்கள் மனித சரித்திரம் முழுவதிலுமே நிகழ்ந்திருக்கவில்லையா? நம்முடைய நாளில் என்ன வித்தியாசம் இருக்கிறது?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம்.

இன்று நடந்துகொண்டிருக்கும் காரியங்களின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் சில இருக்கின்றன. உணவுப் பற்றாக்குறை போன்ற ஏதாவது ஒரு அம்சம்தானே நாம் முடிவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் ஒரு மேம்பட்ட வாழ்க்கை அருகாமையில் உள்ளது என்றும் சொல்வதற்கு அத்தாட்சியாக இருக்கும் என்று பைபிள் சொல்வதில்லை. முடிவின் காலத்தைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் தேவ பக்தியற்ற சந்ததியின் மீது நிறைவேற்றப்பட உள்ளன.—மத்தேயு 24:34-39; லூக்கா 17:26, 27.

கூடுதலாக, இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்தின் சில அம்சங்கள் —விசேஷமாக உணவுப் பற்றாக்குறைகள் மற்றும் பரவலாகக் காணப்படும் நோய்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்—இன்றைக்கு உண்மையாய் நிறைவேற்றமடைந்து கொண்டிருப்பது அசாதாரணமானதாய் இருக்கிறது. ஏன்? ஏனென்றால் விஞ்ஞானப்பூர்வமான சாதனைகள் ஒருபோதும் இந்த அளவுக்கு பெரிதாக இருந்ததில்லை. மருத்துவ அறிவும் சிகிச்சை முறைகளும் இதற்கு முன்பு ஒருபோதும் இந்த அளவுக்கு முன்னேற்றமடைந்தோ அல்லது மிகவும் பரவலாகவோ இருந்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு காலத்தில், நோயும் பஞ்சமும் மோசமாகும், சீர்ப்படாது என்பதை கடவுள் மட்டுமே அவருடைய வார்த்தையாகிய பைபிளில் முன்னறிவித்திருக்க முடியும்.

முடிவின் காலம் அல்லது “கடைசி நாட்கள்” பற்றிய எல்லா பைபிள் தீர்க்கதரிசனங்களும் உண்மையாய் நிறைவேற்றமடைந்து வருகிறபடியால், நாம் என்ன முடிவுக்கு வரலாம்? ஒரு மேம்பட்ட வாழ்க்கை அருகாமையில் உள்ளது என்ற முடிவுக்கே! ஆனால் அது எப்படி வரும்?

ஒரு மேம்பட்ட வாழ்க்கை—எப்படி?

மானிடர்கள் பரதீஸைக் கொண்டுவர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நம் நாள் வரையாக மனித சரித்திரம் முழுவதிலும், அநேக வகையான மனித அரசாங்கங்கள் இருந்திருக்கின்றன. சில அரசாங்கங்கள் மக்களின் தேவைகளைத் திருப்தி செய்வதற்கு அதிகக் கடினமாக முயற்சி செய்திருக்கின்றன. இருப்பினும், அநேக பிரச்சினைகள் மோசமடைந்து கொண்டேயிருக்கின்றன. பணக்கார நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் உள்ள அரசாங்கங்கள் போதை மருந்து துர்ப்பிரயோகம், வீட்டு வசதிக்குறைவு, ஏழ்மை, குற்றச்செயல், வேலையின்மை, போர்கள் ஆகியவற்றோடு போராடிக் கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிலவற்றை அரசாங்கங்களால் தீர்க்கமுடிந்தாலும்கூட, நோயுற்றிருக்கும் நிலையிலிருந்து மக்களை முழுவதுமாக விடுவிக்க முடியாது; அவற்றால் முதுமை மற்றும் மரணத்துக்கு ஒரு முடிவையும் கொண்டுவர முடியாது. மனிதர்கள் இந்த பூமிக்கு ஒருபோதும் பரதீஸைக் கொண்டு வரமாட்டார்கள் என்பது தெளிவாயிருக்கிறது.

பைபிள் ஞானமாக சொல்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” அப்படியென்றால், நம்முடைய நம்பிக்கையை நாம் யார் மேல் வைக்க வேண்டும்? பைபிள் பதிலளிக்கிறது: “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.” (சங்கீதம் 146:3, 5) நாம் யெகோவா தேவனின் பேரில் நம்முடைய நம்பிக்கையை வைத்தோம் என்றால், ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டோம்.

நிச்சயமாகவே, பூமி, சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை சிருஷ்டிப்பதற்கு ஞானமும் வல்லமையும் உடைய ஒருவரால் பூமியை பரதீஸாக மாற்றவும் முடியும். ஒரு மேம்பட்ட வாழ்க்கையை மனிதர்கள் அனுபவிப்பதற்கு அவரால் உதவி செய்யமுடியும். யெகோவா தேவன் எதையெல்லாம் செய்வதற்கு விருப்பப்படுகிறாரோ, அதையெல்லாம் அவரால் செய்யமுடியும், அவர் அதை நிச்சயமாக செய்து முடிப்பார். அவருடைய வார்த்தை சொல்கிறது: “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை.” (லூக்கா 1:37) ஆனால் கடவுள் எவ்வாறு ஒரு மேம்பட்ட வாழ்க்கையைக் கொண்டு வருவார்?

யெகோவா தம்முடைய ராஜ்யத்தின் மூலம் மனிதவர்க்கத்துக்கு ஒரு மேம்பட்ட வாழ்க்கையைக் கொண்டு வருவார். கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது, கடவுள் நியமித்திருக்கும் ஓர் ஆட்சியாளராகிய இயேசு கிறிஸ்துவைக்கொண்ட ஒரு மெய்யான அரசாங்கம். கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் உள்ளது, ஆனால் அது விரைவில் மகத்தான ஆசீர்வாதங்களையும் ஒரு மிக மேம்பட்ட வாழ்க்கையையும் பரதீஸிய பூமியில் குடியிருப்போருக்கு கொண்டு வரும்.—ஏசாயா 9:6, 7.

பைபிளில் மத்தேயு 6:9-13 வசனங்களில் காணப்படும் இயேசுவின் மாதிரி ஜெபத்தை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். கடவுளுக்கு ஏறெடுக்கப்பட்ட அந்த ஜெபத்தின் ஒரு பாகம் சொல்கிறது: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” அந்த ஜெபத்துக்கு இசைவாக, பூமிக்காக யெகோவா தேவன் கொண்டிருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு கடவுளுடைய ராஜ்யம் ‘வரும்.’ பூமி ஒரு பரதீஸாக வேண்டும் என்பது அவருடைய நோக்கம்.

ஒரு கடைசி கேள்வி எழும்புகிறது: வரப்போகும் பரதீஸில் ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் செய்ய வேண்டியது என்ன

யெகோவா தேவன் தம்முடைய சித்தத்தைச் செய்யும் அனைவருக்கும் பரதீஸில் ஒரு மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பை அன்புடன் அளிக்கிறார். பைபிள் நமக்கு சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) ஆனால் எது ஒரு நபரை கடவுளின் பார்வையில் நீதிமானாக்குகிறது?

யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைக் குறித்து நாம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுளைப் பற்றிய அறிவை எடுத்துக்கொண்டு அதை நம்முடைய வாழ்க்கையில் பொருத்தினோம் என்றால், நாம் என்றென்றும் வாழலாம். இயேசு கடவுளிடம் ஒரு ஜெபத்தில் சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.

யெகோவா தேவனைப் பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் நமக்கு சொல்லும் புத்தகம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள். அது யெகோவா அளித்திருக்கும் அதிக மதிப்பு வாய்ந்த வெகுமதிகளில் ஒன்றாக உள்ளது. ஒரு அன்புள்ள தகப்பன் தன் பிள்ளைகளுக்கு எழுதும் ஒரு கடிதத்தைப் போல் உள்ளது. மனிதவர்க்கத்துக்கு ஒரு மேம்பட்ட வாழ்க்கையைக் கொண்டு வரப்போகும் கடவுளின் வாக்கைப் பற்றி அது நமக்கு சொல்கிறது, அதை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அது நமக்குக் காண்பிக்கிறது. கடவுள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதையும் எதிர்காலத்தில் என்ன செய்வார் என்பதையும் பைபிள் நமக்குத் தெரிவிக்கிறது. இப்போது நம்முடைய பிரச்சினைகளை எவ்வாறு வெற்றிகரமாகக் கையாளுவது என்பதைப் பற்றியும்கூட அது நமக்கு நடைமுறையான ஆலோசனையை அளிக்கிறது. இந்த குழப்பமிக்க உலகிலும்கூட ஓரளவு சந்தோஷத்தை எவ்வாறு கண்டடைவது என்பதைக் கடவுளுடைய வார்த்தை நமக்கு போதிக்கிறது.—2 தீமோத்தேயு 3:16, 17.

யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு ஒரு இலவச வீட்டு பைபிள் படிப்பை மகிழ்ச்சியோடு ஏற்பாடு செய்வார்கள். இப்போது நீங்கள் எவ்வாறு ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம், அதோடுகூட சமீப எதிர்காலத்தில் எவ்வாறு ஒரு மிகவும் மேம்பட்ட வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

[பக்கம் 5-ன் படம்]

ஒரு மேம்பட்ட வாழ்க்கை அருகாமையில் உள்ளது என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன

[பக்கம் 7-ன் படம்]

கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்துக்கு ஒரு மேம்பட்ட வாழ்க்கையைக் கொண்டு வரும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்