‘ஓ, அவர்களைப் போல் ஒவ்வொருவரும் இருந்திருந்தால்!’
லெட்சுபெர்கர் ஷூர்னல் என்ற லக்செம்பெர்க் செய்தித்தாளின் பத்திரிகை ஆசிரியருடைய வார்த்தைகள் இவை. அவர் யாரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்?
ஆஷ்விட்ஸ் விடுதலையின் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஆஜராவதற்கு அவர் போலந்துக்கு சென்றிருந்தார், பெருமளவில் துன்பத்தைச் சகித்திருந்த ஒரு தொகுதியைச் சேர்ந்தவர்களைக் குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பதை அவர் கவனித்தார். இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என பிப்ரவரி 2, 1995 அன்று வெளியான பத்திரிகையில் அவர் அடையாளம் காண்பித்தார், அவர் எழுதினார்: “காவலில் அதிக கடுமையாக அடைத்து வைத்தல் அல்லது சித்திரவதை முகாம் அல்லது கட்டுக் குடியிருப்புகளில் பரிதாபகரமாக இறந்து போவோமோ என்ற பயம் அல்லது கோடரி அல்லது தலைவெட்டு இயந்திரத்தால் கொல்லப்படுவோமோ என்ற பயம் போன்றவை அவர்களுடைய விசுவாசத்தை மறுத்துவிடும்படி அவர்களைச் செய்விக்கவில்லை.” அவர் தொடர்ந்து சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு சாகும்வரை தைரியத்தோடு இருந்தனர் என்பதைக் கண்டு முரட்டுத்தனமாய் நடந்துகொண்ட எஸ்எஸ் காவலர்களும்கூட வியப்படைந்தனர்.”
யெகோவாவின் சாட்சிகள் இரத்தசாட்சிகளாக இறந்துபோக வேண்டும் என்று விரும்பவில்லை. ஆனால் முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களைப் போன்று அவர்களில் ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ நியமங்களை விட்டுக்கொடுத்து விடுவதற்குப் பதிலாக மரணத்தைத் தெரிந்துகொண்டனர். அப்படிப்பட்ட விசுவாசம் நாசி ஆட்சியின் இருண்ட காலங்களில் அவர்களை மிகவும் முனைப்பாக வித்தியாசப்படுத்திக் காண்பித்தது.
அந்தப் பத்திரிகையாளர் இவ்வாறு முடித்தார்: “ஓ, எல்லா ஜனங்களும் யெகோவாவின் சாட்சிகளைப் போல் இருந்திருந்தால்!” அப்படியிருந்திருந்தால், இரண்டாம் உலக யுத்தம் நடந்தே இருக்காது.