ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
மெய்க் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவர்
ஆபேலின் நாட்கள் முதற்கொண்டு யெகோவாவின் ஊழியர்களில் அநேகர் மத சம்பந்தமான துன்புறுத்தலை அனுபவித்து வந்திருக்கின்றனர். (லூக்கா 11:49-51) “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்,” என்று பைபிள் எச்சரிப்பு கொடுப்பது ஆச்சரியமாயில்லை. (2 தீமோத்தேயு 3:12) அதற்கு இசைவாக, இன்று 25-க்கும் மேற்பட்ட தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் தடையுத்தரவின் கீழ் வாழ்ந்துகொண்டு துன்புறுத்தலை சகித்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஒரு தேசத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடைசெய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், மதப்பற்றுள்ள ஆட்களால் துன்புறுத்தப்பட்டும்கூட வந்திருக்கின்றனர். அங்கு 12,000-க்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகள் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையைத் தொடர்ந்து வைராக்கியத்தோடு செய்து வருகின்றனர், 15,000-க்கும் மேற்பட்ட ஜனங்களோடு பைபிளை படித்து வருகின்றனர். அவர்களுடைய பிரங்க வேலை முன்ஜாக்கிரதையோடு செய்யப்படுகிறது. அவர்கள் பொதுவாக தங்கள் கிறிஸ்தவ கூட்டங்களை தனிப்பட்ட வீடுகளில் நடத்துகின்றனர், அப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அக்கறை காண்பிக்கும் ஆட்களை அழைக்கும்போது அவர்கள் ஜாக்கிரதையாய் இருக்கின்றனர்.
அரசாங்கம் சமீபத்தில் சாட்சிகள் சார்பாக அதிக கண்டிப்புக் குறைவான மனப்பான்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறது, சாட்சிகள் இப்போது தங்கள் பெரும்பாலான வேலையை எதிர்க்கும் தன்மையோடு குறுக்கிட்டுத் தடைசெய்யும் பிரச்சினையின்றி செய்கின்றனர். இருந்தபோதிலும், பல்வேறு மதத் தொகுதிகள் குழப்பத்தைக் கிளறிவிடுவதற்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தியிருந்தனர்.
ஒரு நகரத்தில் சுமார் 50 யெகோவாவின் சாட்சிகள் ஒரு வீட்டில் சபைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கையில் சுமார் 200 மத வெறியர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அவ்வீட்டை நோக்கிச் சென்றது. அந்தக் கும்பலில் இருந்த சிலர் பாறைகளை எடுத்துக்கொண்டு மத சம்பந்தமான வாசகங்களை கத்திக்கொண்டும் சென்றனர். அவர்கள் சாட்சிகளைத் தாக்கி அந்த வீட்டை நாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றது வெளிப்படையாய் இருந்தது. அந்த மதத்தலைவர்கள் சிறிது காலம் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டிருந்து விட்டு, சரியான நேரத்தில் தாக்குவதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அந்த கும்பல் அந்த வீட்டிற்குள் நுழையப்போகும் சமயத்தில் 15 காவலர்கள் வந்து சேர்ந்தனர், ஜனக்கூட்டத்தை கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். இது சாட்சிகளுக்கு ஆச்சரியமாய் இருந்தது, ஏனென்றால் அவர்களில் ஒருவருக்கும்கூட காவலரை அழைப்பதற்கு நேரம் இருக்கவில்லை.
ஆனால் மற்ற சமயங்களில் எதிராளிகள் அதிக வெற்றிகரமானவர்களாய் இருந்திருக்கின்றனர். அநேக சாட்சிகள் விசாரணைக்காகக் கொண்டுவரப்பட்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு நீதிமன்ற வழக்கு பல வருடங்களாக முடிவு செய்யப்படாமலேயே இருந்தது, வழக்குத் தொடுத்தவர்கள் அதில் ஆர்வமின்றி இருந்துவிட்டதாகத் தோன்றியது. இருப்பினும், உள்ளூர் குருமார்களின் தூண்டுதலினால் அந்த விஷயம் மறுபடியுமாக நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது, அந்த சாட்சிக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
மற்றொரு இடத்தில் சாட்சிகள் அடங்கிய ஒரு தொகுதி ஒரு தனிப்பட்டவருடைய வீட்டில் கர்த்தருடைய இராப்போஜன நாளை ஆசரிக்க ஒன்றுகூடினர். அந்த மாலையின் பிற்பட்ட பகுதியில் அநேக காவலர்கள் வீட்டுக்காரரையும் கூட்டத்தை நடத்திய மூப்பரையும் கைதுசெய்தனர். காவல் நிலையத்தில் அவர்களைக் கடுமையாக அடித்தனர். இரக்கமற்ற விசாரணை ஒன்று பல மணிநேரங்கள் நீடித்திருந்தது. சாட்சிகளில் ஒருவர் குளிர்ந்த நீர் இருந்த ஒரு கிணற்றுக்குள் போடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதை சகித்துக்கொண்டார்.
காவலர் ஏன் அப்படிப்பட்ட தாக்குதலை நடத்தினர்? மறுபடியும், மத வெறியர்கள் அடங்கிய ஒரு தொகுதி உள்ளூர் மதகுருக்களுடைய உதவியுடன் காவலர் அந்த நடவடிக்கை எடுக்கும்படி பின்னாலிருந்து தூண்டியது. காவல்துறை அதிகாரியின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரியே பின்னர் வெளிப்படையாகச் சொன்னார். குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கப்பட்டது, அடிகளுக்குக் காரணமாயிருந்த நபர்கள் தண்டிக்கப்பட்டனர்.
உலகமுழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் ராஜ்யத்தின் நற்செய்தியை தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் இயேசுவின் புத்திமதியைப் பின்பற்றுகின்றனர்: “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால் சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.”—மத்தேயு 10:16.
[பக்கம் 31-ன் படம்]
முதலாவதாக துன்புறுத்தப்பட்டவர் ஆபேல்