“அன்பு ஒருக்காலும் ஒழியாது”
சாம்யெல் டி. லடஸுயி சொன்னபடி
நான் கடந்துசென்ற வருடங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகையில், சாதிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் கண்டு வியப்படைகிறேன். யெகோவா பூமிமுழுவதும் ஆச்சரியமான காரியங்களை செய்துகொண்டு வந்திருக்கிறார். நைஜீரியாவில் உள்ள இலிஷா நகரத்தில் 1931-ல் பிரசங்க வேலையை நாங்கள் ஆரம்பித்தபோது வெகு சிலரே இருந்தோம். இப்போது நாங்கள் 36 சபைகளாக ஆகிவிட்டிருக்கிறோம். உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி பட்டதாரிகளின் முதல் தொகுதி 1947-ல் வந்து சேர்ந்தபோது நைஜீரியாவில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4,000 ஆக இருந்தது, இப்போது 1,80,000-க்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை, நடைபெறவிருந்த அதிகரிப்பை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்த மகத்தான வேலையில் நான் ஒரு பங்கைக் கொண்டிருந்ததற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்! இதைப் பற்றி நான் உங்களுக்கு சொல்கிறேன்.
என் தந்தை துப்பாக்கிகளையும் வெடிமருந்தையும் ஒரு பட்டணத்திலிருந்து மற்றொரு பட்டணத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தார்; அவர் வீட்டில் எப்போதாவது தான் இருப்பார். எனக்குத் தெரிந்தவரை அவருக்கு ஏழு மனைவிகள் இருந்தனர், ஆனால் எல்லாருமே அவரோடு சேர்ந்து வாழவில்லை. என் தந்தை என் தாயை தன் இறந்துபோன அண்ணனிடமிருந்து சுதந்தரித்துக்கொண்டார். அவர்கள் அவருடைய இரண்டாவது மனைவியாக ஆனார்கள், நான் அவர்களோடு வாழ்ந்துவந்தேன்.
ஒரு நாள் என் தந்தை அருகாமையில் இருந்த கிராமத்தில் வசித்துவந்த தன் முதல் மனைவியை சந்தித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார். அவர் அங்கு இருந்தபோது என் ஒன்று விட்ட சகோதரன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்ததாக கேள்விப்பட்டார். என் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு வயது பத்து, எனக்கும் அதே வயது தான். ஆகையால் நானும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று என் தந்தை தீர்மானித்தார். அவர் என்னிடம் ஒன்பது செப்புக்காசுகள் கொடுத்தார்—ஒரு பாடநூலுக்கு மூன்று செப்புக்காசுகளும் சிலேட்டுக்கு ஆறு செப்புக்காசுகளும். அது 1924-ஆம் ஆண்டில்.
ஒரு பைபிள் படிப்பு தொகுதி உருவாக்கப்பட்டது
ஆரம்ப வருடங்களிலிருந்தே எனக்கு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் பேரில் அன்பு இருந்தது. நான் பள்ளியில் பைபிள் வகுப்புகளை அனுபவித்தேன், எப்போதும் என் ஸன்டே-ஸ்கூல் ஆசிரியர்களிடமிருந்து பாராட்டுதல் பெற்றுக்கொண்டேன். ஆகையால் 1930-ல் பிரசங்கிப்பதற்காக இலிஷாவுக்கு முதலாவதாக வந்திருந்த பைபிள் மாணாக்கர் ஒருவரின் சொற்பொழிவுக்கு ஆஜராகும் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன். சொற்பொழிவுக்குப் பின், அவர் தி ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை எனக்கு யொரூபா மொழியில் அளித்தார்.
நான் ஸன்டே-ஸ்கூலுக்கு ஒழுங்காக ஆஜராகிக்கொண்டிருந்தேன். நான் இப்போது தி ஹார்ப் ஆஃப் காட் புத்தகத்தை என்னுடன் எடுத்துச்செல்ல ஆரம்பித்தேன், அங்கு கற்பித்துக்கொடுத்துக் கொண்டிருந்த சில கோட்பாடுகளை தவறென காட்டுவதற்கு நான் அதை பயன்படுத்தினேன். தர்க்கங்கள் ஏற்பட்டன, இந்தப் ‘புதிய போதனையை’ பின்பற்றுவதற்கு எதிராக சர்ச் தலைவர்கள் என்னை அடிக்கடி எச்சரித்தார்கள்.
அதற்கு அடுத்த ஆண்டு, தெருவில் நடந்துசென்றுகொண்டிருக்கையில், ஒரு நபர் பேசிக்கொண்டிருப்பதையும், அதை ஒரு ஜனக்கூட்டம் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன். போதனையாளர் ஜே. ஐ. அவன்பா, ஒரு பைபிள் மாணாக்கர். அவர் அங்கு வில்லியம் ஆர். ப்ரௌன் என்பவரால் (பைபிள் ப்ரௌன் என்று அடிக்கடி அழைக்கப்பட்டவர்) அனுப்பப்பட்டிருந்தார், அவர் லாகோஸ் என்ற இடத்திலிருந்து ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை கண்காணித்து வந்தார்.a தி ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தைப் படிப்பதற்கு ஒரு சிறிய பைபிள் படிப்பு தொகுதி ஒன்று இலிஷாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், ஆகையால் நான் அவர்களோடு சேர்ந்துகொண்டேன்.
நான் அந்தத் தொகுதியில் இருந்தவர்களில் மிகவும் இளையவனாக இருந்தேன்—சுமார் 16 வயதுள்ள பள்ளி மாணவன். பொதுவாக 30-களிலும் அதற்கு மேற்பட்ட வயதுகளிலும் இருந்த ஆண்களோடு மிகவும் நெருக்கமாக கூட்டுறவுகொள்வதற்கு நான் சங்கடமாகவும் பயப்பட்டுக்கொண்டும்கூட இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னை அவர்கள் மத்தியில் கொண்டிருப்பதற்கு அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருந்தனர், அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். அவர்கள் எனக்கு தகப்பன்மார்கள் போல் இருந்தனர்.
குருமார்களின் எதிர்ப்பு
விரைவில் நாங்கள் குருமார்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்ப்பட ஆரம்பித்தோம். முன்பு ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்த கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன், இன்னும் மற்றவர்கள், இப்போது நமக்கு எதிராக ஒன்றுசேர்ந்து விட்டனர். அவர்கள் உள்ளூர் தலைவர்களோடு ஒன்றுகூடி சதிசெய்து, எங்களை உற்சாகமிழக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். அவர்கள் நம்முடைய புத்தகங்களை பறிமுதல் செய்வதற்கு காவலரை அனுப்பினர், அவை ஜனங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று சொல்லிக்கொண்டனர். இருப்பினும், புத்தகங்களை எடுத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று மாவட்ட அதிகாரி அவர்களை எச்சரித்தார், இரண்டு வாரங்களுக்குப் பிறகு புத்தகங்கள் திருப்பி கொடுக்கப்பட்டன.
இதற்குப் பிறகு நாங்கள் ஒரு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டோம், நாங்கள் அங்கு ஓபா அல்லது தலைமை அதிகாரியையும் அவர்களோடு சேர்ந்து பட்டணத்தில் இருந்த முக்கியமான ஆட்களையும் சந்தித்தோம். நாங்கள் அந்த சமயத்தில் சுமார் 30 பேர் இருந்தோம். “ஆபத்தான” புத்தகங்களை வாசிப்பதிலிருந்து எங்களை தடைசெய்ய வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணம். நாங்கள் அந்நியர்களா என்று அவர்கள் எங்களைக் கேட்டனர், ஆனால் அவர்கள் எங்கள் முகங்களை கூர்ந்து கவனித்த பிறகு இவ்வாறு கூறினர்: “இவர்கள் மத்தியில் மற்றொரு பிராந்தியத்திலிருந்து வந்த ஆட்கள் சிலர் இருந்தபோதிலும்கூட, இவர்கள் எல்லாரும் உள்ளூர் ஆட்கள்.” தங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மதத்தின் புத்தகங்களை தாங்கள் தொடர்ந்து படிக்க விரும்பவில்லை என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.
நாங்கள் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டோம், அந்த முக்கியத்துவம்வாய்ந்த ஆட்களுக்கு எந்தவித கவனமும் செலுத்தக்கூடாது என்று நாங்கள் எங்கள் மனதில் தீர்மானித்திருந்தோம். எங்களில் அநேகர் நாங்கள் கற்றுக்கொண்டிருந்தவற்றைக் குறித்து அதிக சந்தோஷப்பட்டோம், தொடர்ந்து படிப்பதற்கு தீர்மானமாய் இருந்தோம். ஆனால் சிலர் பயந்துபோய் எங்களுடைய தொகுதியிலிருந்து விலகிக்கொண்டுவிட்டாலும்கூட, எங்களில் அநேகர் ஒரு தச்சனுடைய பணிமனையிலே படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தோம். எங்களுக்கு நடத்துனர் இல்லை. நாங்கள் ஜெபத்தோடு ஆரம்பித்து புத்தகத்திலிருந்து பாராக்களை வாசிப்பதில் வரிசையாக ஒருவர் மாற்றி ஒருவர் வாசிப்போம். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நாங்கள் மறுபடியும் ஜெபித்துவிட்டு வீட்டுக்குச் செல்வோம். ஆனால் நாங்கள் வேவுபார்க்கப்பட்டோம், தலைமை அதிகாரிகளும் மதத்தலைவர்களும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எங்களை தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தனர், பைபிள் மாணாக்கரின் பிரசுரங்களை படிப்பதற்கு எதிராக எங்களை எச்சரித்தனர்.
இதற்கிடையில், எங்களுக்கு இருந்த கொஞ்ச அறிவை உபயோகித்து ஜனங்களுக்கு உதவிசெய்ய முயற்சிசெய்து கொண்டிருந்தோம், அநேக ஜனங்கள் நாங்கள் கூறியதை ஒப்புக்கொண்டனர். ஒருவர் பின் ஒருவராக தனிப்பட்ட நபர்கள் எங்களோடு சேர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். நாங்கள் அதிக சந்தோஷமாய் இருந்தோம், நாங்கள் கூட்டுறவுகொண்டிருந்த மதத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
1932-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் எங்களை ஒழுங்கமைப்பதற்கு உதவி செய்வதற்கென்று லாகோஸ் என்ற இடத்திலிருந்து ஒரு சகோதரர் வந்தார், ஏப்ரல் மாதத்தில் “பைபிள்” ப்ரௌன் என்பவரும்கூட வந்தார். சுமார் 30 பேர் அடங்கிய தொகுதி அங்கிருந்ததைப் பார்த்தபோது, எங்களுடைய வாசிப்பில் நாங்கள் செய்துகொண்டிருந்த முன்னேற்றத்தைப் பற்றி அவர் விசாரித்தார். எங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நாங்கள் அவரிடம் கூறினோம். நாங்கள் முழுக்காட்டுதல் பெற தயாராயிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
அது மழைக்காலமாக இல்லாததன் காரணமாக நாங்கள் இலிஷாவிலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு நதிக்கு பிரயாணம் செய்யவேண்டியதாய் இருந்தது, சுமார் 30 பேர் முழுக்காட்டப்பட்டோம். அந்த சமயத்திலிருந்து ராஜ்யத்தின் பிரசங்கிப்பாளர்களாக இருப்பதற்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாக இருப்பதாக உணர்ந்தோம், வீட்டுக்கு வீடு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் இதை செய்வோம் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் இப்போது எங்களுக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாயிருந்தோம். நாங்கள் எதிர்ப்பட்ட பொய்க் கோட்பாடுகளை தவறென நிரூபிப்பதற்கு பைபிள் ஆதாரத்தைக் கொண்டிருக்க நாங்கள் நன்கு தயாரிக்க வேண்டியிருந்தது. ஆகையால் எங்களுடைய கூட்டங்களில் நாங்கள் கோட்பாடுகளை கலந்தாலோசிப்போம், எங்களுக்குத் தெரிந்தவற்றைக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்வோம்.
எங்களுடைய பிரசங்க வேலை
நாங்கள் அந்தப் பட்டணம் முழுவதும் பிரசங்கம் செய்து முடித்தோம். ஜனங்கள் எங்களை கேலிசெய்து எங்களைப் பார்த்து கூச்சல் போட்டார்கள், ஆனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. எங்களுக்கு கற்றுக்கொள்வதற்கு அதிகம் இருந்தபோதிலும் எங்களுடைய சந்தோஷம் மிகுதியாய் இருந்தது ஏனென்றால் எங்களிடம் சத்தியம் இருந்தது.
நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீட்டுக்கு வீடு சென்றோம். ஜனங்கள் கேள்வி கேட்பார்கள், நாங்கள் அவற்றுக்கு பதிலளிக்க முயற்சி செய்வோம். ஞாயிறு மாலைகளில் நாங்கள் பொதுப் பேச்சு கொடுத்தோம். எங்களுக்கு ராஜ்ய மன்றம் இல்லை, ஆகையால் நாங்கள் கூட்டங்களை திறந்த வெளிகளில் கொண்டிருந்தோம். நாங்கள் ஜனங்களை ஒன்றுகூட்டி, பொதுப் பேச்சு கொடுத்து, அவர்களை கேள்விகள் கேட்கும்படி அழைத்தோம். சில சமயங்களில் நாங்கள் சர்ச்சுகளில் பிரசங்கித்தோம்.
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியே ஜனங்கள் கேள்விப்படாத பிராந்தியங்களுக்கும்கூட நாங்கள் பயணம் செய்தோம். பெரும்பாலான சமயங்களில் நாங்கள் சைக்கிள்களில் சென்றோம், ஆனால் சில சமயங்களில் நாங்கள் ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துக்கொள்வோம். நாங்கள் ஒரு கிராமத்தை சென்றடைந்தவுடன் சப்தமாக ஒலி எழுப்புவோம். முழு கிராமும் அதைக் கேட்கும்! என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் காண்பதற்கு ஜனங்கள் வேகமாக வெளியே வருவர். பிறகு நாங்கள் எங்கள் செய்தியை அளிப்போம். நாங்கள் முடித்த பின்பு, நம்முடைய பிரசுரங்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனங்கள் ஆவலுடன் முட்டி இடித்துக்கொன்டு செல்வர். நாங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரசுரங்களை விநியோகித்தோம்.
நாங்கள் கடவுளுடைய ராஜ்யம் வருமென்று ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். 1935 வருடாந்தர புத்தகத்தை நாங்கள் பெற்றுக்கொண்டபோது, சகோதரர்களில் ஒருவர் அந்த வருடம் முழுவதற்கும் தினவாக்கியங்கள் அடங்கிய அட்டவணையைக் கண்டபோது, “அர்மகெதோன் வருவதற்கு முன் நாம் இன்னும் ஒரு முழு வருடத்தையும் முடிக்கப் போகிறோம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் நடத்துனர் கேட்டார்: “அர்மகெதோன் நாளைக்கு வருமென்றால், நாம் வருடாந்தர புத்தகம் வாசிப்பதை நிறுத்திவிடுவோமா?” அந்த சகோதரர் இல்லை என்று சொன்னபோது, நடத்துனர் சொன்னார்: “அப்படியென்றால் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” நாம் யெகோவாவின் நாளுக்காக ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம், இப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
போர் வருடங்கள்
இரண்டாம் உலகப்போரின்போது நம்முடைய புத்தகங்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது. இலிஷாவில் இருந்த ஒரு சகோதரர் ரிச்சஸ் என்ற புத்தகத்தை ஒரு காவலரிடம் அறியாமலேயே அளித்துவிட்டார். காவலர் கேட்டார்: “இந்தப் புத்தகம் யாருக்குச் சொந்தம்?” அந்த சகோதரர் அது தன்னுடையது என்று சொன்னார். அது தடைசெய்யப்பட்டிருக்கும் ஒரு புத்தகம் என்று அந்தக் காவலர் கூறி அவரைக் காவல்நிலையத்துக்குக் கொண்டுபோய் அங்கு அவரை சிறையில் அடைத்தார்.
நான் காவல்நிலையத்துக்குச் சென்று விசாரித்த பிறகு அந்த சகோதரரை சிறையிலிருந்து விடுதலை செய்துகொண்டு வந்தேன். பிறகு நான் நடந்த விஷயங்களைக் குறித்து லாகோஸில் இருந்த சகோதரர் ப்ரௌனிடம் தெரிவிப்பதற்கு தொலைபேசி மூலம் பேசினேன். புத்தகங்களை பல இடங்களுக்கும் அனுப்புவதை ஏதாவது சட்டம் தடைசெய்ததா என்றும்கூட நான் கேட்டேன். புத்தகங்களை இறக்குமதி செய்வதுதான் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அதை சுற்றியனுப்புவது தடைசெய்யப்பட்டில்லை என்றும் சகோதரர் ப்ரௌன் என்னிடம் கூறினார். மூன்று நாட்களுக்குப் பிறகு, என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க சகோதரர் ப்ரௌன் லாகோஸிலிருந்து ஒரு சகோதரரை அனுப்பினார். அடுத்த நாள் பத்திரிகைகளோடும் புத்தகங்களோடும் பிரசங்க வேலைக்கு அனைவரும் செல்லவேண்டும் என்று இந்த சகோதரர் தீர்மானித்தார்.
நாங்கள் வித்தியாசமான திசைகளில் சென்றோம். சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு பெரும்பாலான சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக எனக்கு செய்தி வந்தது. ஆகையால் அங்கு வந்திருந்த சகோதரரும் நானும் காவல் நிலையத்துக்குச் சென்றோம். நம்முடைய புத்தகங்கள் தடைசெய்யப்பட்டில்லை என்பதற்கு கொடுத்த விளக்கத்தை காவலர் செவிகொடுத்துக் கேட்க மறுத்துவிட்டனர்.
கைதுசெய்யப்பட்டிருந்த 33 சகோதரர்களும் ஐஃப் என்ற இடத்திலிருந்த தலைமை குற்றவியல் நடுவரின் வழக்கு மன்றத்துக்கு அனுப்பப்பட்டனர், நானும் அவர்களோடு சேர்ந்து சென்றேன். நாங்கள் கொண்டுசெல்லப்பட்டதைக் கண்ட பட்டணத்து மக்கள், “இந்த ஜனங்களுடைய வேலை இன்றோடு நிறுத்தப்பட்டுவிட்டது, இவர்கள் இங்கு மறுபடியும் திரும்பி வரப்போவதில்லை.”
அந்தக் குற்றச்சாட்டு நைஜீரியாவைச் சேர்ந்த தலைமை குற்றவியல் நடுவருக்கு முன்பாக வைக்கப்பட்டது. எல்லா புத்தகங்களும் பத்திரிகைகளும் காட்சிக்காக வைக்கப்பட்டன. இந்த ஜனங்களை கைதுசெய்வதற்காக யார் காவல் அதிகாரிக்கு அதிகாரம் கொடுத்தது என்று அவர் கேட்டார். மாவட்ட அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்ட கட்டளைகளின் பேரில் தான் செயல்பட்டதாக காவல் அதிகாரி பதிலளித்தார். அந்தத் தலைமை குற்றவியல் நடுவர் காவல் அதிகாரியையும் என்னையும் சேர்த்து நம்முடைய பிரதிநிதிகளில் நான்கு பேரையும் அவருடைய அறைக்கு அழைத்தார்.
மிஸ்டர் ப்ரௌன் யார் என்று அவர் கேட்டார். லாகோஸில் இருக்கும் உவாட்ச்டவர் சொஸைட்டியின் பிரதிநிதி என்று நாங்கள் அவரிடம் சொன்னோம். எங்களைக் குறித்து மிஸ்டர் ப்ரௌனிடமிருந்து ஒரு தந்திச்செய்தியை பெற்றுக்கொண்டிருப்பதாக அவர் எங்களிடம் சொன்னார். அந்த வழக்கை அன்று அவர் ஒத்திவைத்து விட்டு சகோதரர்களை விடுதலை செய்தார். அடுத்த நாள் அவர் சகோதரர்கள் குற்றவாளிகள் அல்லர் என்று கூறி அவர்களை விடுதலை செய்தார், புத்தகங்களை திருப்பிக்கொடுக்கும்படி அவர் காவலருக்கு உத்தரவிட்டார்.
நாங்கள் பாடிக்கொண்டே திரும்பவும் இலிஷாவுக்கு வந்தோம். ஜனங்கள் மறுபடியும் கூச்சலிட ஆரம்பித்தனர், ஆனால் இந்த முறை, “அவர்கள் மறுபடியும் வந்துவிட்டனர்!” என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.
விவாகத்தைப் பற்றிய யெகோவாவின் தராதரம் தெளிவாக்கப்பட்டது
1947-ல் முதல் மூன்று கிலியட் பட்டதாரிகள் நைஜீரியாவுக்கு வந்து சேர்ந்தனர். இந்த சகோதரர்களில் ஒருவரான டோனி ஆட்வுட் இன்னும் இங்கு நைஜீரியா பெத்தேலில் சேவை செய்துகொண்டிருக்கிறார். அந்த சமயத்திலிருந்து நைஜீரியாவில் உள்ள யெகோவாவின் அமைப்பில் நாங்கள் பெரும் மாற்றங்களை பார்த்தோம். பலதார மணத்தைக் குறித்து எங்களுடைய நோக்குநிலைதான் பெரும் மாற்றங்களில் ஒரு மாற்றமாக இருந்தது.
நான் ஒலாபிசி ஃபாசுபாவை பிப்ரவரி 1941-ல் திருமணம் செய்துகொண்டேன், கூடுதலான மனைவிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதைக் குறித்து நான் போதுமான அறிவைப் பெற்றிருந்தேன். ஆனால் 1947-ல் மிஷனரிகள் வரும்வரை சபைகளில் பலதாரமணம் சாதாரணமானதாய் இருந்தது. அறியாமையின் காரணமாக அவர்கள் ஒரு மனைவிக்கும் மேலான மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டிருப்பதாக பலதாரமணம் செய்துகொண்டிருந்த சகோதரர்களிடம் சொல்லப்பட்டது. ஆகையால் அவர்கள் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து மனைவிகளைக்கொண்டிருந்தால் அவர்கள் அவர்களை வைத்துக்கொள்ளலாம், ஆனால் அதற்கும் மேற்பட்ட மனைவிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்தக் கொள்கையை தான் நாங்கள் கொண்டிருந்தோம்.
அநேகர் எங்களோடு சேர்ந்துகொள்ள ஆவலாய் இருந்தனர், இலிஷாவில் இருந்த கேரூபீன்கள் மற்றும் சேராபீன்கள் சங்கங்கள் விசேஷமாக அவ்வாறு இருந்தன. யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தனர் என்று அவர்கள் கூறினர். அவர்கள் நம்முடைய போதனைகளை ஏற்றுக்கொண்டு தங்கள் சர்ச்சுகளை இராஜ்ய மன்றங்களாக மாற்றியமைக்க விரும்பினர். இந்த ஐக்கியத்தைக் கொண்டுவர நாங்கள் கடினமாக உழைத்துக்கொண்டிருந்தோம். அவர்களுடைய மூப்பர்களை பயிற்றுவிப்பதற்கு நாங்கள் மையங்களையும்கூட கொண்டிருந்தோம்.
பின்னர் பலதாரமணத்தைக் குறித்து புதிய அறிவுரை வழங்கப்பட்டது. மிஷனரிகளில் ஒருவர் 1947-ல் நடந்த ஒரு வட்டார அசெம்பிளியில் பேச்சு ஒன்று கொடுத்தார். அவர் நல்நடத்தை மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி பேசினார். அடுத்து அவர் 1 கொரிந்தியர் 6:9, 10-ஐ மேற்கோள் காட்டினார். அநீதிமான்கள் கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளமாட்டார்கள் என்று அது சொல்கிறது. பிறகு அவர் கூடுதலாக சொன்னார்: “பலதாரமணம் செய்துகொண்டிருப்பவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ள மாட்டார்கள்!” சபையாரில் இருந்த ஜனங்கள் கூச்சலிட்டனர்: “ஓ, பலதாரமணம் செய்துகொண்டவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ள மாட்டார்களே!” பிரிவினை ஏற்பட்டது. அது ஒரு யுத்தத்தைப் போல் இருந்தது. புதிதாக கூட்டுறவுகொண்டிருந்த அநேகர், “கடவுளுக்கு நன்றி, நாங்கள் இந்த அமைப்போடு அதிக ஆழமாக உட்பட்டுவிடவில்லை” என்று கூறி தங்கள் கூட்டுறவை நிறுத்திக்கொண்டனர்.
இருப்பினும், பெரும்பாலான சகோதரர்கள் தங்களுக்கு இருந்த கூடுதலான மனைவிகளை விடுவித்து விட்டு தங்கள் வழிகளை சரிசெய்துகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் அவர்களிடம் பணம்கொடுத்து, ‘நீங்கள் இளம் வயதினராக இருந்தால், மற்றொரு கணவருக்காக போய் தேடுங்கள். உங்களை மணம்செய்துகொள்வதன் மூலம் நான் தவறு செய்துவிட்டேன். இப்போது நான் ஒரு மனைவியையுடைய புருஷனாய் இருக்க வேண்டும்.’
விரைவில் மற்றொரு பிரச்சினை எழும்பியது. சிலர் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்த பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். அவர்கள் முதலில் வைத்திருந்த மனைவியை விடுவித்து விட்டு மற்ற மனைவிகளிலிருந்து ஒருவரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர்! ஆகையால் குழப்பம் மீண்டும் ஆரம்பமானது.
கூடுதலான அறிவுரை புரூக்ளினில் இருந்த தலைமைக் காரியாலயத்திலிருந்து வந்தது, அது மல்கியா 2:14-ஐ அடிப்படையாகக் கொண்டிருந்தது, அது ‘உன் இளவயதின் மனைவியைக்’ குறித்து சொல்கிறது. கணவன்மார்கள் தாங்கள் முதலாவது விவாகம் செய்திருந்த மனைவியை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை. அப்படித்தான் அந்தக் கேள்வி இறுதியில் முடிவுசெய்யப்பட்டது.
ஊழிய சிலாக்கியங்கள்
1947-ல் சங்கம் சபைகளை பலப்படுத்தி அவற்றை வட்டாரங்களாக ஒழுங்குபடுத்த ஆரம்பித்தது. அவர்கள் அறிவில் தேர்ச்சிபெற்றிருந்த முதிர்ச்சிவாய்ந்த சகோதரர்களை ‘சகோதரர்களுக்கு ஊழியர்களாக’ நியமிக்க விரும்பினர், அவர்களை இப்போது வட்டார கண்காணிகள் என்று அழைக்கின்றனர். நான் அப்படிப்பட்ட ஒரு நியமிப்பை ஏற்றுக்கொள்வேனா என்று சகோதரர் ப்ரௌன் என்னை கேட்டார். யெகோவாவின் சித்தத்தைச் செய்யவேண்டும் என்ற காரணத்துக்காகவே நான் முழுக்காட்டப்பட்டேன். “நீங்கள் எனக்கு முழுக்காட்டுதலும்கூட கொடுத்தீர்கள். இப்போது யெகோவாவை இன்னும் அதிக முழுமையாக சேவிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும்போது, நான் அதை மறுத்துவிடுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
அந்த வருடம் அக்டோபர் மாதத்தில் எங்களில் ஏழு பேரை லாகோசுக்கு அழைத்தனர், எங்களை வட்டார ஊழியத்தில் அனுப்புவதற்கு முன்பாக எங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த நாட்களில் வட்டாரங்கள் மிகவும் பெரிதாக இருந்தன. முழு தேசமும் வெறும் ஏழு வட்டாரங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. சபைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
சகோதரர்களுக்கு ஊழியர்களாக நாங்கள் செய்த வேலை அதிக கடினமாக இருந்தது. நாங்கள் ஒவ்வொரு நாளும் அநேக கிலோமீட்டர்கள் நடந்துசென்றோம், மிகவும் உஷ்ணமான காடுகள் வழியாக அடிக்கடி செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு வாரமும் நாங்கள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்துக்கு பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. சில சமயங்களில் என் கால்கள் தளர்ந்து விழுந்துவிடும் போல் நான் உணர்ந்திருக்கிறேன். சில சமயங்களில் நான் மரித்துக்கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்! ஆனால் அதில் பெரும் சந்தோஷமும்கூட இருந்தது, சத்தியத்தை தழுவிக்கொண்ட ஜனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டபோது விசேஷமாக அவ்வாறு இருந்தது. ஏன், ஏழு வருடங்களுக்குள்ளாக தேசத்தில் இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்தது!
இலிஷாவுக்குத் திரும்பிவரும்படி என் உடல்நிலை என்னைக் கட்டாயப்படுத்தும்வரை, அதாவது 1955 வரை நான் வட்டார வேலையில் பங்குகொண்டேன். வீட்டில் இருந்ததானது என் குடும்பத்துக்கு ஆவிக்குரியவிதத்தில் உதவிசெய்ய அதிக கவனம் செலுத்தும்படி எனக்கு உதவியது. இன்று என்னுடைய பிள்ளைகள் ஆறு பேரும் யெகோவாவை உண்மையோடு சேவித்து வருகிறார்கள்.
மெய்யான அன்பு ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை
கடந்துசென்ற வருடங்களை நான் சிந்தித்துப் பார்க்கையில், நன்றியுடன் இருப்பதற்கு எனக்கு அதிகம் உள்ளது. ஏமாற்றங்கள், கவலைகள், வியாதிகள் இருந்திருக்கின்றன, ஆனால் அதோடுகூட அநேக சந்தோஷங்களும்கூட இருந்திருக்கின்றன. காலங்கள் கடந்து செல்லச்செல்ல எங்களுடைய அறிவும் புரிந்துகொள்ளுதலும் வளர்ந்திருக்கிறபோதிலும், 1 கொரிந்தியர் 13:8-ன் அர்த்தத்தை நான் அனுபவத்தின் மூலமாக கற்றறிந்திருக்கிறேன், “அன்பு ஒருக்காலும் ஒழியாது” என்று அது சொல்கிறது. நீங்கள் யெகோவாவை நேசித்து அவருடைய சேவையில் உறுதியாய் நிலைத்திருந்தால், நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு அவர் உதவிசெய்து உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார்.
சத்தியத்தின் ஒளி அதிகமதிகமாக பிரகாசமாகிக்கொண்டே செல்கிறது. நாங்கள் முதலாவது வேலையை ஆரம்பித்த சமயத்தில் அர்மகெதோன் சீக்கிரத்தில் வந்துவிடும் என்று நாங்கள் நினைத்தோம்; அதன் காரணமாகவே நாங்கள் எங்களால் ஆன எல்லாவற்றையும் செய்துமுடிக்க விரைவாக செயல்பட்டோம். ஆனால் அவையனைத்தும் எங்களுடைய நன்மைக்காகவே இருந்தன. அதன் காரணமாகவே நான் சங்கீதக்காரனுடைய வார்த்தைகளை ஒப்புக்கொள்கிறேன்: “நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.”—சங்கீதம் 146:2.
[அடிக்குறிப்புகள்]
a சகோதரர் ப்ரௌன் பைபிள் ப்ரௌன் என்று அழைக்கப்பட்டிருந்தார், ஏனென்றால் அவர் பைபிளை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சுட்டிக் காண்பித்தது அவருடைய வழக்கமாயிருந்தது—“மெய்யான சுவிசேஷகரின் அறுவடை” என்ற கட்டுரையை காவற்கோபுரம் பத்திரிகை செப்டம்பர் 1, 1992, பக்கம் 32-ஐ பாருங்கள்.
[பக்கம் 23-ன் படம்]
சாம்யெல் 1955-ல் மில்ட்டன் ஹென்ஷல் என்பவருடன்
[பக்கம் 24-ன் படம்]
சாம்யெல் தன் மனைவி ஒலாபிசியுடன்