உண்மைத்தன்மையுள்ள குடும்பங்கள் ஸ்ரீலங்காவில் அதிகரிப்பை விரைவுபடுத்துகின்றன
இலங்கை என்று 1972 வரை அறியப்பட்டு வந்த ஸ்ரீலங்கா, தென்னை மரங்கள் ஓரங்களில் வரிசையாய் அமைந்திருக்கும் கடற்கரையோரங்களையும், மலைத்தொடர்களையும், சிறு பாலைவனங்களையும் கொண்ட ஓர் அழகிய தீவாக உள்ளது. நாட்டின் உட்பகுதியில் 2,243 மீட்டர் உயரமுள்ள ஆடம்ஸ் பீக் உள்ளது, அது நான்கு பெரிய மதங்களுக்கு புனித ஸ்தலமாக இருக்கிறது.a அதற்கு அருகாமையில் உவர்ல்ட்ஸ் என்ட் என்ற பெயருடைய நேர்ச்செங்குத்தான மலைச்சரிவு ஒன்று இருக்கிறது, அங்கு பாறைப் பாங்கான செங்குத்தான மலை 1,500 மீட்டர் உயரத்திலிருந்து சரிகிறது. இந்த இடம் ஸ்ரீலங்காவின் கண்கவர் காட்சிகளில் ஒன்றை அளிக்கிறது.
ஸ்ரீலங்காவின் 1.8 கோடி குடிமக்கள் ஓர் ஆர்வத்துக்குரிய பின்னணியைப் பகிர்ந்துகொள்கின்றனர். பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து வட இந்தியாவின் இந்திய-ஐரோப்பிய இனத்திலிருந்து வந்த மக்கள் அந்தத் தீவில் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் சிங்களவர்கள், இப்போது ஜனத்தொகையின் 75 சதவீதத்தை அவர்கள் உண்டுபண்ணுகின்றனர். பிறகு, பொது சகாப்தத்தின் முன்பிருந்த சில நூற்றாண்டுகளிலிருந்து 12-ஆம் நூற்றாண்டு வரையாக, தென் இந்தியாவிலிருந்து அலைபோன்று தமிழ் மக்கள் வந்தனர்; இவர்கள் இப்போது முக்கியமாக அத்தீவின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்றனர். போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களும்கூட தங்கள் நாட்டை விட்டு வந்து அங்குக் குடியேறிய காலத்திலிருந்து தங்கள் அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர். கூடுதலாக, அரேபியா மற்றும் மலேயா தீபகற்பங்களிலிருந்து வந்த கடற்பயணம் செய்யும் வணிகர்கள் உள்ளூர் மக்கள் மத்தியில் குடியேறியுள்ள ஐரோப்பியர்கள், பார்சிக்கள், சீனர்கள், இன்னும் மற்றவர்கள் குடியிருக்கும் தொகுதிகளும்கூட அங்கு இருக்கின்றன.
இனங்கள் கலந்து இருப்பது மட்டுமன்றி, ஸ்ரீலங்காவில் உள்ள மொழியும் மதமும் அதன் பல்வேறு வகைப்பட்ட பின்னணிகளை பிரதிபலிக்கின்றன. இந்தத் தீவில் உள்ள முக்கியமான மொழிகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகும். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அநேகர் இந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகளையாவது பேசுகின்றனர். ஜனங்களின் மதத்தில் இனப் பின்னணிகளும்கூட பெரும் பங்கை வகிக்கின்றன. சிங்களவர்களில் பெரும்பாலானோர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர், ஆனால் தமிழர்களில் பெரும்பாலானோர் இந்துக்களாக இருக்கின்றனர். அரேபியா அல்லது மலேயா நாட்டவரோடு தொடர்பு உள்ளவர்கள் பொதுவாக இஸ்லாம் மதத்தைக் கடைப்பிடிக்கின்றனர், ஐரோப்பிய பின்னணியை உடையவர்கள் பொதுவாக கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் தொகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் அங்கத்தினர்களாய் இருக்கின்றனர்.
சவாலை எதிர்ப்படுதல்
இவையனைத்தும் ஸ்ரீலங்காவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலை அளிக்கின்றன. இவர்கள் இயேசு கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதற்குக் கடினமாக உழைக்கின்றனர்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) வித்தியாசமான மொழிகளைச் சமாளிக்க வேண்டியது மட்டுமன்றி, நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிரஸ்தாபிகள் சில மணிநேரங்கள் பிரசங்கம் செய்வதற்குள்ளாக புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், இந்துக்கள், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் அங்கத்தினர்கள் மேலும் நாத்திகர்கள் ஆகியோரிடம் பேச வேண்டியிருக்கிறது.
பிரஸ்தாபிகள் தங்கள் ஊழியத்தில் திறம்பட்டவர்களாக இருப்பதற்கு, தங்களோடு காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளையும் மற்ற பைபிள் பிரசுரங்களையும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எடுத்துச்செல்ல வேண்டும். பெரும் பாரத்தைச் சுமக்க பலமிருப்பவர்கள் அந்த மொழிகளில் இருக்கும் பைபிள்களையும்கூட எடுத்துச் செல்கின்றனர். கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? மற்றும் நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற சிற்றேடுகளும் மற்றும் இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியும் மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டபோது பிரஸ்தாபிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இது ஊழியத்துக்கு கூடுதலான கருவிகள் கிடைக்கும்படி செய்தது.
சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கத்துக்கு அப்போது தலைவராயிருந்த சார்ல்ஸ் டேஸ் ரஸல் 1912-ல் இலங்கைக்கு குறுகிய காலம் விஜயம் செய்த சமயம் முதற்கொண்டு சாட்சிகள் கடினமாக உழைத்துக்கொண்டு வந்திருக்கின்றனர். ஆயினும், காவற்கோபுர கிலியட் பைபிள் பள்ளியின் பட்டதாரிகள் 1947-ல் வந்து சேரும்வரை குறிப்பிடத்தக்க வளர்ச்சி காத்திருக்க வேண்டியிருந்தது. அது முதற்கொண்டு ஸ்ரீலங்காவில் உள்ள பிரஸ்தாபிகள் தங்கள் பிரசங்க வேலையிலிருந்து சிறந்த பலன்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். 1994-ல் 1,866 ராஜ்ய பிரஸ்தாபிகள் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 2,551 வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தினர். நினைவு ஆசரிப்பு நாளுக்கு 6,930 பேர் வந்திருந்தனர், அது எல்லா சபைகளிலுமிருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய நான்கு மடங்காக இருந்தது. எப்பேர்ப்பட்ட மகத்தான ஓர் ஆசீர்வாதம்!
மற்ற சில தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஸ்ரீலங்காவில் வளர்ச்சி மெதுவாக இருப்பது போல் ஒருவேளை தோன்றலாம். அதற்கு பலமான குடும்ப உறவுகள் ஒரு காரணமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இருப்பினும், குடும்ப உறவுகள் அனுகூலமானதாகவும்கூட இருக்கக்கூடும். ரோம இராணுவ அதிகாரியாயிருந்த கொர்நேலியு சத்தியத்துக்காக நிலைநிற்கை எடுத்தபோது, அவருடைய வீட்டாரும் அவரோடு சேர்ந்துகொண்டனர். (அப்போஸ்தலர் 10:1, 2, 24, 44) லீதியாள், கிறிஸ்பு, பவுலையும் சீலாவையும் அடைத்த சிறைச்சாலைக்காரன் ஆகியோருடைய குடும்பங்கள் உட்பட மற்ற பலமான கிறிஸ்தவக் குடும்பங்களையும்கூட அப்போஸ்தலர் புத்தகம் குறிப்பிடுகிறது.—அப்போஸ்தலர் 16:14, 15, 32-34; 18:8.
நல்ல ஒழுங்கமைப்பும் விசுவாசத்துடன்கூடிய விடாமுயற்சியும் இருக்குமிடத்தில் பலமான குடும்ப பந்தங்கள் அனுகூலமானதாய் இருக்கக்கூடும். நீண்டகாலமாய் மிஷனரியாக சேவிக்கும் ரே மாத்யூஸ் ஏசாயா 60:22-ல் உள்ள வார்த்தைகளை மனதில்கொண்டு, பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “யெகோவா இப்போது சரியான நேரத்தில் காரியங்களை விரைவுபடுத்திக்கொண்டு வருவது போல் தெரிகிறது. தனிப்பட்ட நபர்களால் மட்டுமல்ல குடும்பங்களின் மூலமாகவும்கூட செய்துவருகிறார்.”
ஒழுங்கமைக்கப்பட்ட குடும்பம் துதியைக் கொண்டுவருகிறது
இன்று அப்படிப்பட்ட விசுவாசமுள்ள குடும்பங்கள் நிச்சயமாகவே ஸ்ரீலங்காவில் இருக்கின்றன. உதாரணமாக, நன்கு-ஒழுங்கமைக்கப்பட்ட சின்னப்பா குடும்பத்தார் ஸ்ரீலங்காவின் முக்கிய நகரமாகிய கொழும்புவின் ஒரு பகுதியில் உள்ள கோட்டிஹெனா என்ற இடத்தில் வசிக்கின்றனர். குடும்பத் தலைவரான மரியன் என்பவர் கொஞ்சக் காலத்துக்கு முன்பு மரித்துவிட்டிருந்தபோதிலும், அவருடைய மனைவியாகிய அன்னம்மாவும், அவர்களுக்கு இருக்கும் வயது 13-லிருந்து 33 வரையுள்ள 15 பிள்ளைகளில், 12 பிள்ளைகள் தொடர்ந்து யெகோவாவை ஒரு குடும்பமாக சேவித்து வருகின்றனர். இப்போது எட்டு பிள்ளைகள் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டிருக்கின்றனர், அதில் மூன்று பேர் முழுநேர ஊழியத்தில் ஒழுங்கான பயனியர்களாக சேவித்து வருகின்றனர். மற்ற மூன்று பேர் அவ்வப்போது துணைப் பயனியர் சேவையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். குடும்பத்தில் இருக்கும் இளையவர்களில் நான்கு பேர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாய் இருக்கின்றனர். கூடுதலாக, நான்கு பேரப்பிள்ளைகள் இப்போது மிகவும் சிறியவர்களாய் இருந்தபோதிலும்கூட பைபிளைப் படித்துக்கொண்டும், கொழும்பு வடக்கு சபையில் நடைபெறும் யெகோவாவின் சாட்சிகளின் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராகிக்கொண்டும் வருகின்றனர்.
1978-ல் அன்னம்மா முதலாவது ராஜ்ய நற்செய்தியைக் கேட்டு, காவற்கோபுரம் பத்திரிகையின் இதழ் ஒன்றைப் பெற்றுக்கொண்டார்கள். ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் என்ற பைபிள் படிப்பு உதவி புத்தகத்தைப் படித்து முடித்த பின்பு, அன்னம்மா தன் வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார்கள், இவ்வாறு அவர்கள் தன் குடும்பத்தில் இருந்த அநேகருக்கு முதலாவதாக முன்மாதிரியை வைத்தார்கள்.
இராணுவ மனிதனாகிய கொர்நேலியுவைப் போன்று அன்னம்மா தன் குடும்பத்தில் நல்ல ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கிறார்கள். “நாங்கள் கிறிஸ்தவக் கூட்டங்களுக்காகவும் அசெம்பிளிகளுக்காகவும் திட்டமிட வேண்டியிருந்தது—பள்ளிக்கும்கூட,” என்று அன்னம்மா சொல்கிறார்கள். “உடை ஒரு பிரச்சினையாக இருந்தது, ஆனால் யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு ஒவ்வொரு அசெம்பிளிக்கும் நாங்கள் சில புதிய உடைகளைத் தைத்துக்கொள்ள முடிந்தது. குடும்பத்திலுள்ள அனைவரும் நன்றாக உடுத்திக்கொண்டும் நன்றாக போஷிக்கப்பட்டும் பெரிய புன்முறுவலோடும்கூட வந்து சேர்ந்தனர்.”
அந்தப் பிள்ளைகள் தங்கள் வீட்டு ஒழுங்கமைப்பை பாசத்தோடு நினைவுபடுத்திக்கொள்கின்றனர். முழுக் குடும்பமும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராவதற்கு உதவி செய்ய பொதுவாக பெரிய பிள்ளைகளுக்கு விசேஷ உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டன. உதாரணமாக, மங்களா துணிகளைத் துவைத்தார்கள், வின்னிஃபிரெடா துணிகளை ஸ்திரி செய்தார்கள். சிறியவர்கள் உடுத்திக்கொள்ள உதவிசெய்த வின்னிஃபிரெடா சொல்கிறார்கள்: “வீட்டை விட்டுப் புறப்பட்டபோது எல்லாரும் நேர்த்தியாக தோற்றமளித்தனர்.”
ஆவிக்குரிய ஏற்பாடுகள் அதேபோன்று நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இப்போது ஒழுங்கான பயனியராக சேவிக்கும் புஷ்பம் என்ற அவர்களுடைய மகள் நினைவுபடுத்தி சொல்கிறார்கள்: “ஒவ்வொரு நாளும் எங்களுடைய குடும்பம் பைபிளை வாசிப்பதிலும், தினவசனத்தை விமர்சிப்பதிலும் மகிழ்ச்சியடைந்தது.” அன்னம்மா மேலும் சொல்கிறார்கள்: “ஒவ்வொரு பிள்ளையும் பைபிள், காவற்கோபுரம், இன்னும் மற்ற பிரசுரங்களின் தனிப்பட்ட பிரதியை வைத்திருக்கிறது. கூட்டங்களில் அவர்கள் சொல்லும் குறிப்புகள் அனைத்தையும் நான் கவனமாக செவிகொடுத்துக் கேட்கிறேன். அதற்கேற்றபடி உற்சாகமும் திருத்தமும் தேவைப்படும்போது நான் அதை வீட்டில் இருக்கும்போது கொடுக்கிறேன். இரவில் நாங்கள் ஒன்றுசேர்ந்து அந்நாளை குடும்ப ஜெபத்தோடு முடிக்கிறோம்.”
குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சிறந்த கிறிஸ்தவ கல்வியைக் கொடுப்பதற்காக வயதில் பெரியவர்களாய் இருக்கும் பிள்ளைகள் அன்னம்மாவுக்கு மதிப்புமிக்க உதவியாய் இருக்கின்றனர். ஆயினும் அவர்களுக்கு இருக்கும் மிகுதியான வேலை வீட்டிற்கு வெளியே உள்ளவர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கான அவர்களுடைய விருப்பத்தை தடை செய்வதில்லை. மொத்தமாக குடும்பத்தில் உள்ள பல்வேறு அங்கத்தினர்கள் 57 வீட்டு பைபிள் படிப்புகளை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஜனங்களோடு நடத்துகின்றனர். மருமகன் ராஜன் சொல்கிறார்: “படிப்படியாக முன்னேறிக்கொண்டு செல்லும் பைபிள் படிப்புகளை எங்கள் குடும்பம் நடத்துகிறது. தன் மாணாக்கரில் ஒருவர் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதைப் பார்க்கும் சிலாக்கியம் ஏற்கெனவே என்னுடைய மனைவி புஷ்பத்துக்கு இருந்திருக்கிறது.”
இப்படி ஒரு பெரிய குடும்பம் ரோமன் கத்தோலிக்க சர்ச்சை விட்டுச் சென்றபோது அது கோட்டிஹெனாவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பாதிரி அவர்கள் குடும்பத்தைச் சந்தித்து, ஏன் அவர்கள் சர்ச்சை விட்டுச் சென்றுவிட்டனர் என்பதைக் கண்டுபிடிக்க வராவிட்டாலும்கூட, அவர் சர்ச்சில் இருந்த அங்கத்தினர்களை விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அநேக கலந்தாலோசிப்புகள் தொடர்ந்து நடைபெற்றன, அவை பெரும்பாலும் திரித்துவக் கோட்பாட்டைப் பற்றியே இருந்தன. அன்னம்மா தன் விசுவாசத்தை தற்காத்துப் பேசுவதற்கு எப்போதும் யெகோவாவின் மீதும் பைபிள் மீதும் சார்ந்திருந்தார்கள். இப்படிப்பட்ட கலந்தாலோசிப்புகளில் அவர்களுக்கு மிகவும் பிரியமாயிருந்த வசனம் யோவான் 17:3.
நல்ல ஒழுங்கமைப்பும் நிலையான முயற்சியும் திருப்திகரமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும் என்பதை சின்னப்பா குடும்பம் தெளிவாக செயல்படுத்திக் காண்பிக்கின்றனர். அவர்களுடைய வைராக்கியமான முயற்சிகளின் மூலம் ராஜ்ய பிரஸ்தாபிகள் அடங்கிய ஒரு புதிய சந்ததி வளர்ந்து வருகிறது, இவையனைத்தும் யெகோவாவுக்கு துதியைக் கொண்டுவருகிறது.
எதிர்ப்பு குடும்பத்தை மெய்வணக்கத்தில் இணைக்கிறது
சின்னப்பாவுடைய வீட்டிலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி நார்ஹென்பிட்யா என்ற கொழும்புவின் மற்றொரு பகுதியில் ரத்னம் என்பவருடைய குடும்பம் உள்ளது. அவர்களும்கூட அதற்கு முன்பு ரோமன் கத்தோலிக்கர்களாக இருந்தனர். 1982-ல் வீட்டுக்கு-வீடு வேலையில் ஈடுபட்டிருந்த சாட்சிகள், மூத்த மகள் ஃபாத்திமாவின் கணவர் பாலேந்திரனை சந்தித்தனர். ஒரு பைபிள் படிப்பு முழுக் குடும்பத்தோடும் ஆரம்பிக்கப்பட்டது. விரைவில் அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் இக்னாசி அம்மாள் பாட்டியிடம் கடவுளுடைய பெயரைக் குறித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பிள்ளைகள் “யெகோவா” என்ற பதிலைக் கொடுத்தபோது, அது பாட்டியின் ஆர்வத்தைத் தூண்டியது, ஒரு பைபிள் படிப்பு அவர்களோடு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், அவர்களுடைய மகள்களில் இரண்டு பேர், ஜீவக்கலா மற்றும் ஸ்டெல்லா படிப்பில் சேர்ந்துகொண்டனர், 1988-க்குள் அந்த மூன்று பேரும் முழுக்காட்டப்பட்டனர்.
இதற்கிடையில், பாலேந்திரனும் ஃபாத்திமாவும், ஃபாத்திமாவின் மற்றொரு சகோதரியான மல்லிகாவுடனும் அவளுடைய கணவன் யோகநாதனுடனும் சத்தியத்தைப் பகிர்ந்துகொண்டனர். 1987-க்குள்ளாக இந்தத் தம்பதியினர் முழுக்காட்டப்பட்டனர், அவர்கள் தங்களுடைய இரண்டு பிள்ளைகளில் யெகோவாவின் பேரில் தொடர்ந்து வளரும் அன்பை வளரச்செய்திருக்கின்றனர். ஃபாத்திமாவின் மற்றொரு சகோதரியான புஷ்பா அடுத்ததாக சத்தியத்துக்குள் வந்தார்கள். அவர்கள் தன் ஒப்புக்கொடுத்தலைச் செய்து 1990-ல் முழுக்காட்டுதல் பெற்றார்கள். டோக்கியோவில் இருக்கும்போது அவர்களுடைய கணவன் எக்கா ஆங்கில சபையோடு சேவித்து வந்தார்கள், புஷ்பா தங்களுடைய இளைய மகன், ஆல்ஃபிரட்-ஐ யெகோவாவின் வழியில் வளர்த்து வருவதற்கு உதவி செய்தார்கள்.
இதுவரையாக ரத்னம் குடும்பத்தில் இருந்த பத்து பிள்ளைகளில் நான்கு பேர் மெய் வணக்கத்துக்காகத் தங்கள் நிலைநிற்கையை எடுத்திருக்கின்றனர். மகிழ்ச்சிகரமாக, இன்னும் மூன்று பேர் தங்கள் தனிப்பட்ட பைபிள் படிப்புகளில் நல்ல முன்னேற்றம் செய்துவருகின்றனர். மொத்தம் 11 பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர், அதில் ஒரு பெண் பிரதீப்பா ஏற்கெனவே முழுக்காட்டுதல் பெற்றுவிட்டாள். மற்ற ஏழு இளைய பிள்ளைகள் தங்கள் குடும்ப பைபிள் படிப்புகள் மூலமாக ஒழுங்காகப் போதிக்கப்பட்டு வருகின்றனர். கூடுதலாக, மொத்தம் 24 வீட்டு பைபிள் படிப்புகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள அக்கறை காண்பிக்கும் ஆட்களோடு நடத்தப்பட்டு வருகின்றன.
இவையனைத்தும் எளிதில் வந்துவிடவில்லை. ஆரம்பத்தில் குடும்ப எதிர்ப்பு இருந்தது. தகப்பன் முத்துப்பிள்ளையும் மூத்த சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தில் இருந்தவர்கள் இராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு ஆஜராவது அல்லது வெளிப்படையான பிரசங்க வேலையில் ஈடுபடுவது போன்றவற்றுக்கு அதிக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு தனிப்பட்ட பாதுகாப்பின் பேரில் இருந்த கவலையின் காரணமாக இருந்தபோதிலும், முத்துப்பிள்ளை கூடுதலாக சொல்கிறார்: “நான் ‘புனிதர்களோடு’ முழுவதுமாக ஈடுபாடு கொண்டிருந்தேன், என் குடும்பம் கத்தோலிக்க சர்ச்சை விட்டுச்செல்வதை நான் ஒத்துக்கொள்ளவில்லை.” என்றபோதிலும், அவர்கள் மெய்யான கடவுளை வணங்குவதாக இப்போது அவர் நம்புகின்றார், ஏனென்றால் அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்குக் கொண்டு வந்திருக்கும் நன்மைகளை அவரால் இப்போது காணமுடிகிறது.
உதாரணமாக, ஒரு சமயம் புத்த மதத்தைச் சேர்ந்த அவர்களுடைய வீட்டுச் சொந்தக்காரர் அவர்கள் மீது மாயமந்திரத்தை உபயோகிப்பதன் மூலம் அவர்களை அவருடைய வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி செய்தார். அவர் ஒருநாள் இரவு வந்து வீட்டைச் சுற்றி “மந்திர” ஆற்றல்வாய்ந்த எலுமிச்சம் பழங்களை வைத்தார். மூடநம்பிக்கை கொண்டிருந்த அயலகத்தார் பயப்பட ஆரம்பித்தனர், ரத்னம் குடும்பத்தாரை ஏதோவொரு விபரீதமான சம்பவம் தாக்கப்போகிறது என்று அவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இக்னாசி அம்மாள் இதைக் கண்டுபிடித்தபோது, அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் வெறுமனே அந்த எலுமிச்சம் பழங்களை எந்தவித பயமுமின்றி எடுத்துவிட்டனர்—அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. அவர்கள் பயமின்றி எடுத்த அந்த நடவடிக்கை அப்பிராந்தியத்தில் இருந்த மக்களுக்கு ஒரு நல்ல சாட்சி கொடுக்கும்படியாக ஆனது, ஜனங்கள் அவர்கள் பேரில் பெரும் மரியாதையைக் கொண்டிருக்கும்படி செய்வித்தது. ஸ்டெல்லா இரண்டு வீட்டு பைபிள் படிப்புகளை அருகாமையில் இருந்த குடும்பங்களுக்கு ஆரம்பிக்க முடிந்தது. இதனால் உற்சாகப்படுத்தப்பட்ட மருமகள் நசீராவும்கூட ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டாள்.
தன் குடும்பத்தின் மீது வந்திருக்கும் அநேக ஆசீர்வாதங்களை சிந்தித்துப் பார்க்கையில் இக்னாசி அம்மாள் பின்வருமாறு சொல்கிறார்கள்: “குடும்பத்துக்குள் இருக்கும் ஆவிக்குரிய வளர்ச்சியைக் காண்பதில் நான் அதிக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் எதிர்ப்பு தணிந்துவிட்டிருக்கிறது, எங்களுடைய குடும்ப ஒற்றுமை அதிகரித்திருக்கிறது.”
இந்தப் பெரிய குடும்பங்கள் எப்படிப்பட்ட ஆசீர்வாதமாக நிரூபித்திருக்கின்றன! “பிரகாச சுடரொளி வீசும் தேசம்” என்ற அர்த்தத்தையுடைய ஸ்ரீலங்காவில் அவர்கள் ராஜ்ய நற்செய்தியை அறிவிக்கும் வேலையை விரைவுபடுத்த கடினமாக முயற்சிசெய்யும் சிறிய குடும்பங்களோடும், ஒற்றை-பெற்றோர் குடும்பங்களோடும், விவாகமாகாத கிறிஸ்தவர்களோடும் சேர்ந்து தங்கள் குரல்களை இணைத்திருக்கின்றனர். ஸ்ரீலங்காவில் இருக்கும் சாட்சிகள் உலகமுழுவதிலுமுள்ள தங்கள் உடன்கிறிஸ்தவர்களோடு சேர்ந்து பரதீஸ் திரும்பவும் நிலைநாட்டப்படப்போகும் சமயத்துக்காக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அழகான ஸ்ரீலங்காவின் கடற்கரைகளையும் மலைகளையும் பார்க்கையில் இப்போதும்கூட நம் மனதில் அந்தப் பரதீஸை எண்ணிப்பார்க்கக் கூடும்.
[அடிக்குறிப்புகள்]
a அங்குள்ள ஒரு பெரிய பள்ளம் ஆதாம், புத்தர், சிவன், “புனித” தோமா ஆகியோரின் பாதத் தடம் என்று முறையே, முகமதிய, புத்த, இந்து மற்றும் சர்ச் புராணக்கதைகளில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவிலுள்ள அநேகர் கிறிஸ்தவ பிரசங்கிப்பிற்கும் போதிப்பிற்கும் பிரதிபலிக்கின்றனர்