எங்களுடைய செழுமையான ஆவிக்குரிய சொத்து
ஃபிலிப் எஃப். ஸ்மித் என்பவர் சொன்னபடி
“இருண்ட ஆப்பிரிக்காவினூடே சுடர் விட்டு எரிவதற்கென்று ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.” 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம், பக்கம் 75-ல் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளை வாசிப்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தோம்! அவ்வார்த்தைகளை என் தாத்தா, ஃபிராங்க் டபிள்யு. ஸ்மித், அப்போது உவாட்ச்டவர் சொஸைட்டியின் தலைவராக இருந்த சகோதரர் ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டுக்கு 1931-ல் எழுதினார். என் தாத்தாவும் அவருடைய தம்பியும் சுற்றுப் பயணம் செய்து பிரசங்கித்த விஷயங்களை அறிக்கை செய்வதற்காக அவர் எழுதியிருந்தார்.
இவ்வாறு விளக்கியது 1992 வருடாந்தர புத்தகம்: “கிரே ஸ்மித் மற்றும் அவருடைய மூத்த சகோதரரான ஃபிராங்க் என்ற இரண்டு தைரியமான பயனியர் ஊழியர்களும் கேப் டவுன் [தென் ஆப்பிரிக்கா] என்ற இடத்திலிருந்து பிரிட்டிஷ் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு நற்செய்தியைப் பரப்புவதற்கான சாத்தியங்களைக் கண்டுபிடிப்பதற்கென்று கிளம்பினர். அவர்கள் டி சோட்டோ என்ற மாடல் காரை நகர்த்தக்கூடிய சிறு வீடாக மாற்றியமைத்திருந்தனர், அந்த காரையும் அதோடு சேர்த்து புத்தகங்கள் அடங்கிய 40 அட்டைப்பெட்டிகளையும் ஒரு கப்பலில் ஏற்றி, கென்யாவின் துறைமுக நகரமாகிய மொம்பாசாவுக்கு கடற்பயணம் செய்தனர்.”
சகோதரர் ரதர்ஃபர்டுக்கு எழுதிய கடிதத்தில் என் தாத்தா மொம்பாசாவிலிருந்து கென்யாவின் தலைநகரமாகிய நைரோபிக்குச் சென்ற பயணத்தை விவரித்தார்: “நான் எப்போதுமே மேற்கொண்டிராத வருத்தம் தந்த பெருந்தொல்லையான ஒரு மோட்டார் வண்டி பயணத்தை நாங்கள் ஆரம்பித்தோம். அது நான்கு நாட்கள் எடுத்தது, 580 கிலோமீட்டர் பிரயாணம் செய்வதற்காக நாள் முழுவதும் சென்றோம் . . . ஒவ்வொரு மைல் தாண்டிச்சென்ற பிறகும் நான் மண்வாரியை எடுத்துக்கொண்டு மேடுகளை சமப்படுத்துவதற்கு இறங்க வேண்டியதாய் இருந்தது, பள்ளங்களை மூட வேண்டியிருந்தது, சக்கரங்கள் இறுகப்பிடிப்பதற்கென்று யானைப் புல்லையும் மரங்களையும் வெட்டி சேற்றுநிலத்தை நிரப்ப வேண்டியதாய் இருந்தது.
நைரோபியை சென்றடைந்த பிறகு, ஃபிராங்கும் கிரேவும் பைபிள் பிரசுரங்களை விநியோகிப்பதற்கு 21 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்தார்கள். “நாங்கள் கேட்கும் அறிக்கைகளின்படி மதிப்பிட்டால், சாட்சி கொடுக்கும் வேலை நைரோபியிலுள்ள மதநம்பிக்கையுள்ள ஆட்கள் மத்தியில் பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது.” அதற்குப் பிறகு என் தாத்தா தன் இரண்டு வயது மகனான டான்ஈவன் மற்றும் தன் மனைவி ஃபிலிஸ் ஆகியோரிடம் தன் வீட்டுக்குத் திரும்பிவர ஆவலாயிருந்தார். ஃபிலிஸ் தன் இரண்டாவது பிள்ளை, எங்களுடைய தந்தை ஃபிராங்கை கருத்தரித்திருந்தாள். என் தாத்தா மொம்பாசாவிலிருந்து கிடைக்கக்கூடிய முதல் கப்பலில் ஏறினார், ஆனால் அவர் வீட்டைச் சென்றடைவதற்கு முன் மலேரியா காய்ச்சலினால் இறந்து போனார்.
என் சகோதரியும், என் சகோதரனும், நானும் அந்த வருடாந்தர புத்தகத்திலிருந்த பதிவை நன்றாக யோசித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எங்களுடைய மனங்கள் எங்களுடைய அன்பான தந்தையிடம் திரும்பின. 1991-ல், நாங்கள் 1992 வருடாந்தர புத்தகத்தை பெற்றுக்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அவர் இருதய அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட சிக்கலான கோளாறுகளினால் இறந்து போயிருந்தார். அவர் தன் தந்தையை சந்திக்க முடியவில்லை என்றாலும்கூட, அவருடைய தந்தை யெகோவாவுக்காக கொண்டிருந்த ஆழமான அன்பை அவர் பகிர்ந்துகொண்டார். 28 வருடங்களுக்குப் பிறகு 1959-ல் அவருடைய மகன் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு கிறிஸ்தவ ஊழியனாக கிழக்கு ஆப்பிரிக்காவுக்குச் செல்வார் என்பதை அறிந்திருந்தால் என் தாத்தா எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்!
தந்தையின் ஆரம்ப வாழ்க்கை
எங்களுடைய தந்தை ஜூலை 20, 1931-ல், அவருடைய தந்தை மரித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேப் டவுனில் பிறந்தார், தந்தையின் பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. சிறு வயதிலிருந்து என் அப்பா யெகோவாவின் பேரில் தன் அன்பைக் காண்பித்து வந்தார். ஒன்பது வயது மட்டுமே இருக்கும்போது, அவர் மத்திப கேப் டவுன் இரயில் வண்டி நிலையத்தில் நின்றுகொண்டு விளம்பர அட்டைகளை வைத்து சாட்சிகொடுத்துக் கொண்டிருக்கையில் அவருடைய பள்ளிதோழர்கள் அவரைக் கேலி செய்தனர். அவர் 11-வது வயதில் யெகோவாவுக்கு தன் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்திக் காண்பித்தார். சில சமயங்களில் என் அப்பா ஊழியத்தில் தனியாக வேலைசெய்து ஒரு முழு தெருவையும் செய்து முடிப்பார். அவர் 18 வயதை அடைந்தபோது, கேப் டவுனின் புறநகர்ப் பகுதியில் இருந்த வயதான கிறிஸ்தவ சகோதரிகள் அடங்கிய ஒரு தொகுதிக்கு காவற்கோபுர படிப்பு நடத்திக்கொண்டிருந்தார்.
1954-ல் சர்வதேச மாநாடுகள் ஐரோப்பாவில் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் நடத்தவேண்டும் என்று உவாட்ச்டவர் சொஸைட்டி அறிவித்தது. அங்கு செல்வதற்கு என் அப்பா அதிக ஆவலாயிருந்தார், ஆனால் கேப் டவுனிலிருந்து அங்கு செல்வதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை. ஆகையால் அவர் வட ரொடீஷியாவில் (இப்போது ஜாம்பியா) இருந்த செம்பு சுரங்கங்களில் வேதியியல் வல்லுநராக வேலை செய்வதற்கு மூன்று மாதங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டார். கனிப்பொருள் உலோகக்கலவையை ஆராய்ந்து பார்ப்பதற்கான வசதிகள் ஆப்பிரிக்க குறுங்காடுகளில் இருந்தன.
வட ரொடீஷியாவில் பெரும் எண்ணிக்கையான ஆப்பிரிக்க சாட்சிகள் இருந்தனர் என்பதை என் அப்பா அறிந்திருந்தார், ஆகையால் அவர் அங்கு வந்து சேர்ந்தபோது அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் எங்கே கூட்டங்கள் நடத்தினார்கள் என்பதை அறிந்துகொண்டார். அவர் உள்ளூர் மொழியை பேச முடியவில்லையென்றாலும்கூட, அவர்களோடு கூட்டுறவுகொண்டு செம்பு சுரங்கத்தில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபையின் கூட்டங்களுக்கு அவர் ஒழுங்காக ஆஜரானார். சுரங்கங்களில் இருந்த ஐரோப்பியர்கள், இனங்களைக் குறித்து தப்பெண்ணம் கொண்டிருந்தனர், ஆப்பிரிக்கர்களை சொற்களால் திட்டுவதன் மூலம் தங்கள் தப்பெண்ணத்தை வெளிக்காட்டினர். ஆனால் என் அப்பாவோ எப்போதும் இரக்கமுள்ளவராயிருந்தார்.
மூன்று மாதங்களின் முடிவில் சாட்சியாக இல்லாத ஒரு ஆப்பிரிக்க தொழிலாளி என் அப்பாவிடம் வந்து இவ்வாறு கேட்டார்: “நாங்கள் உங்களை என்னவென்று அழைக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?” அந்த மனிதன் புன்னகை புரிந்துவிட்டு இவ்வாறு சொன்னார்: “நாங்கள் உங்களை புவானா [மிஸ்டர்] உவாட்ச்டவர் என்று அழைக்கிறோம்.
1955-ல் ஐரோப்பாவில் நடந்த “வெற்றிகரமான ராஜ்யம்” அசெம்பிளிகளுக்கு என் அப்பா ஆஜராக முடிந்தது. அங்கு அவர் மேரி சஹாரியு-வைச் சந்தித்தார், அவர்கள் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் அவருடைய மனைவியாக ஆனார்கள். அவர்களுடைய திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அ.ஐ.மா., பார்மாவிலுள்ள ஒஹாயோவில் குடியேறினார்கள்.
கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு
ஐக்கிய மாகாணங்களில் நடந்த ஒரு மாவட்ட மாநாட்டின்போது, ஊழியர்களுக்குத் தேவை மிகுதியாயிருக்கும் இடத்தில் சேவை செய்வதற்கான அழைப்பு மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. எங்களுடைய பெற்றோர் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு செல்ல தீர்மானித்தனர். அவர்கள் உவாட்ச்டவர் சொஸைட்டி கொடுத்த ஆலோசனையின்படியே செய்தனர். வேலை செய்வதற்கு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அந்த பிராந்தியத்தில் வசிப்பதற்கு அனுமதி இருந்ததால், என் அப்பாவுக்கு வேலை கிடைக்கவில்லையென்றால் அவர்கள் திரும்பி வருவதற்காக டிக்கெட்டுகளை வாங்குவதற்கு போதுமான பணத்தை சேமித்து வைத்தனர்.
ஜூலை 1959-ல் பயண அனுமதிச் சீட்டு, விஸா, நோய்த்தடுப்பு ஊசி ஆகியவற்றைப் பெற்றுக்கொண்ட பிறகு, என் அப்பாவும் அம்மாவும் நியூ யார்க் நகரத்திலிருந்து மொம்பாசாவுக்கு கேப் டவுன் வழியாக ஒரு வணிகச் சரக்குக்கப்பலில் சென்றனர். அந்தப் பயணம் அவர்களுக்கு நான்கு வாரங்கள் எடுத்தன. தேவை மிகுதியாயிருக்கும் இடத்தில் சேவிப்பதற்கென்று அவர்களுக்கு முன்பாக வந்திருந்த கிறிஸ்தவ சகோதரர்களிடமிருந்து மொம்பாசா துறைமுகத்தில் அவர்கள் அனலான வரவேற்பைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் நைரோபிக்கு வந்து சேர்ந்தபோது, என் அப்பா அவருக்காகக் காத்திருந்த ஒரு கடிதத்தைக் கண்டார். உகாந்தா, என்டெபவில் இருந்த மண்ணியல் மதிப்பீடு துறையில் வேதியியல் வல்லுநராக அவர் விண்ணப்பம் செய்திருந்த ஸ்தானத்துக்கு அது பதிலாக இருந்தது. என் அப்பாவும் அம்மாவும் உகாந்தாவில் உள்ள கம்பாலாவுக்கு இரயிலில் சென்றனர், அங்கு என் அப்பா பேட்டி காணப்பட்டு வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அந்த சமயத்தில் என்டெப-கம்பாலா பிராந்தியத்தில் ஜார்ஜ் கடூ என்ற பெயருடைய ஒரு சாட்சி மட்டுமே இருந்தார்.
லுகான்டா என்ற உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்வதற்கு குடியேற்ற அரசு என் அப்பாவுக்கு பணம் கொடுத்தது. அவர் அதைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார், ஏனென்றால் அவர் ஊழியத்தில் அதிக திறம்பட்டவராக இருப்பதற்கு அவர் கற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தார். பின்னர், “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி” என்ற சிறிய புத்தகத்தை லுகான்டா மொழியில் மொழிபெயர்ப்பதற்கும்கூட என் அப்பா உதவினார்.
என் அப்பா மற்றவர்களுக்கு சாட்சி கொடுப்பதில் பயமின்றி இருந்தார். அவருடைய துறையில் இருந்த எல்லா ஐரோப்பியர்களிடமும் அவர் பேசினார், உகாந்தா மக்களுக்கு பிரசங்கம் செய்வதில் ஒழுங்காக பங்குகொண்டார். உகாந்தாவின் ஆப்பிரிக்க சட்டத்துறை தலைவராயிருந்தவரிடம்கூட அவர் சாட்சி கொடுத்தார். அந்த மனிதன் ராஜ்ய செய்திக்கு செவிகொடுத்தது மட்டுமல்லாமல், என் அப்பாவையும் அம்மாவையும் அவரோடு விருந்துண்பதற்காகவும்கூட அழைத்தார்.
என் சகோதரி அன்த்தி 1960-ல் பிறந்தார், நான் 1965-ல் பிறந்தேன். எங்களுடைய குடும்பம் தலைநகர் கம்பாலாவிலிருந்த சிறிய ஆனால் வளர்ந்துகொண்டேயிருந்த சபையின் சகோதரர்களோடும் சகோதரிகளோடும் அதிக நெருக்கமாக ஆனது. என்டெப பிராந்தியத்தில் நாங்கள் மட்டுமே ஐரோப்பிய சாட்சிகளாக இருந்ததன் காரணமாக, நாங்கள் சில வேடிக்கையான அனுபவங்களைக் கொண்டிருந்தோம். ஒரு சமயம் என் அப்பாவின் நண்பர், இடையே என்டெபவில் பயணத்தை எதிர்பாராதவிதமாய் நிறுத்தி என் அப்பாவோடு தொடர்புகொள்ள முயற்சி செய்தார். அவர் இப்படியாக கேட்கும் வரை பயனற்றதாய் இருந்தது: “இங்கு யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கும் ஐரோப்பிய தம்பதியை உங்களுக்குத் தெரியுமா?” அந்த நபர் உடனடியாக அவரை என் அப்பா அம்மா வீட்டுக்கு நேரடியாக ஓட்டிச் சென்றார்.
படைக்கலங்கள் பூண்டு ஆட்சிக்கு எதிராக செய்த எழுச்சிகளினூடே வாழ்ந்தது உட்பட, நாங்கள் கடினமான அனுபவங்களையும்கூட கொண்டிருந்தோம். ஒரு சமயம் அரசு படைகள் ஏதோவொரு இனத்தொகுதியில் இருந்த எவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பகல் இரவு முழுவதும் அங்கே தொடர்ந்து ஓயாமல் சுடுதலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் இருந்ததன் காரணமாக, கூட்டங்கள் என்டெபவில் இருந்த என் பெற்றோர் வீட்டில் பிற்பகல் நேரங்களில் நடத்தப்பட்டன.
பின்னர், ஊரடங்கு சட்டம் முடிவடைந்தபோது, எங்கள் அப்பா எங்களை காவற்கோபுர படிப்புக்கு கம்பாலாவுக்கு ஓட்டிச் சென்றார். ஒரு படைவீரன் சுழல் துப்பாக்கியை எங்களுக்கு நேராக குறி வைத்து, எங்களுடைய காரை நிறுத்தி, நாங்கள் எங்கே செல்கிறோம் என்பதை அறிந்துகொள்ள அதிகாரத்துடன் கேட்டான். நான் அப்போது வெறும் ஒரு குழந்தையாக மட்டுமே இருந்தேன், அன்த்தி ஐந்து வயதாக இருந்தாள். என் அப்பா அமைதலாக அந்த போர்வீரனிடம் நம்முடைய பைபிள்களையும் பிரசுரங்களையும் காண்பித்து விளக்கியபோது, அவன் எங்களை போக அனுமதித்தான்.
எங்களுடைய பெற்றோர் உகாந்தாவில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் இருந்த பிறகு உடல்நல பிரச்சினைகளின் காரணமாகவும் குடும்ப உத்தரவாதங்களின் காரணமாகவும் 1967-ல் ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பிவர தீர்மானித்தனர். நாங்கள் கான்ஃபெல்ட், ஒஹாயோ சபையின் பாகமாக ஆனோம், அங்கு என் அப்பா மூப்பராக சேவித்தார். அங்கு என் பெற்றோர் கம்பாலாவில் இருந்த சிறிய சபையை எவ்வளவு அன்பாக நேசித்தார்களோ அதே போல் அங்கிருந்த சகோதரர்களையும் நேசித்தார்கள்.
அன்பான கிறிஸ்தவ வளர்ப்பு
1971-ல் என் தம்பி டேவிட் பிறந்தான். நாங்கள் வளர்ந்து வருகையில், அன்பும் அனலும் நிரம்பியிருந்த ஒரு வீட்டு சூழ்நிலையில் பேணி வளர்க்கப்பட்டோம். இது எங்களுடைய பெற்றோர் ஒருவரோடொருவர் அனுபவித்த அன்பான உறவிலிருந்து தோன்றியது என்பதில் சந்தேகமேயில்லை.
நாங்கள் இளைஞராய் இருந்தபோது, என் அப்பா படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் எப்போதும் ஒரு பைபிள் கதை வாசிப்பார், ஜெபிப்பார், பிறகு எங்கள் அம்மாவுக்குத் தெரியாமலேயே பளபளப்பான தங்கநிறக் காகிதத்தால் சுற்றப்பட்ட சாக்லெட்டை எங்களுக்குத் தருவார். நாங்கள் எங்கு இருந்தாலும் காவற்கோபுரம் பத்திரிகையை எப்போதும் ஒரு குடும்பமாக படிப்போம். குடும்பமாக விடுமுறைக் காலத்தைக் கழித்தபோது, நாங்கள் ஒரு சமயம் மலைப்பகுதியில் படித்தோம், மற்றொரு சமயம் கடலை நோக்கியவாறு அமைந்த பகுதியில் படித்தோம். அவையே நினைவில் இருந்த மிகவும் மகிழ்ச்சியான சமயங்கள் என்று என் அப்பா அடிக்கடி குறிப்பிடுவார். குடும்ப படிப்பு கொண்டுவரக்கூடிய மிகுதியான மகிழ்ச்சியை தவறவிடுபவர்களுக்காக அவர் வருத்தப்படுவதாக கூறினார்.
யெகோவாவின் பேரில் அன்பு காண்பிக்க வேண்டிய விஷயத்துக்கு வரும்போது, என் அப்பா அதை முன்மாதிரியின் மூலம் காண்பித்தார். காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையின் ஒரு புதிய இதழ் வந்தாலோ அல்லது மற்றொரு உவாட்ச்டவர் பிரசுரத்தை நாங்கள் பெற்றுக்கொண்டாலோ, என் அப்பா உடனடியாக அதை ஆர்வத்தோடு முழுவதுமாக வாசித்து விடுவார். பைபிள் சத்தியத்தை குறைந்த முக்கியத்துவமுடையதாக கருதக்கூடாது, ஆனால் விலைமதிப்புள்ள பொக்கிஷமாக உயர்வாகக் கருதவேண்டும் என்று நாங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம். எங்களுடைய அதிக மதிப்புவாய்ந்த உடைமைகளுள் ஒன்று, என் அப்பாவின் ஆங்கில துணைக்குறிப்புகளுள்ள பைபிள் ஆகும். ஏறக்குறைய எல்லா பக்கங்களுமே அவருடைய படிப்புகளிலிருந்து திரட்டி எடுக்கப்பட்ட குறிப்புகளால் நிறைந்திருக்கின்றன. நாங்கள் இப்போது அவருடைய ஓரக்குறிப்புகளிலிருந்து வாசிக்கும்போது, அவர் இன்னும் எங்களுக்குப் போதித்து ஆலோசனைக் கொடுப்பது போல் கேட்கிறது.
இறுதிவரை உண்மைத்தன்மையோடு இருந்தார்
மே 16, 1991 அன்று வெளி ஊழியத்தில் இருந்தபோது, என் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பல வாரங்களுக்குப் பின்பு, அவருக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது, அது வெற்றிகரமானதாய் இருந்ததாக தோன்றியது. இருந்தபோதிலும், அறுவை சிகிச்சை செய்த இரவன்று, எங்களுக்கு மருத்துவமனையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என் அப்பாவுக்கு இரத்தக்கசிவு இருந்தது, மருத்துவர்கள் அதிகக் கவலைப்பட்டனர். அவர் அன்று இரவு திரும்பவும் இரண்டு முறை இரத்தக் கசிவைத் தடுப்பதற்கென்று அறுவை சிகிச்சை செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டார், ஆனால் அது பயனில்லாமல் போனது. என் அப்பாவின் இரத்தம் உறையாமலேயே இருந்தது.
அடுத்த நாள் என் அப்பாவின் நிலை விரைவில் மிகவும் மோசமானது, என் அப்பாவுக்கு இரத்தம் ஏற்றுவதற்கு இணங்க வைப்பதற்காக மருத்துவர்கள் முதலில் என் அம்மாவையும் பிறகு என் தம்பியையும் வற்புறுத்துவதற்காக தனியே அழைத்துச் சென்றனர். இருந்தபோதிலும், என் அப்பா எந்த சூழ்நிலைமைகளின் கீழும் தான் இரத்தம் ஏற்றிக்கொள்ளப்போவதில்லை என்பதை முன்பே மருத்துவர்களிடம் சொல்லியிருந்தார். இரத்தமேற்றிக்கொள்வதை மறுப்பதற்கு அவர் வேதப்பூர்வமான காரணங்களை அவர்களிடம் விளக்கியிருந்தார், ஆனால் அவர் இரத்தம் இல்லாத மாற்றுவகை சிகிச்சைமுறைகளை ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார்.—லேவியராகமம் 17:13, 14; அப்போஸ்தலர் 15:28, 29.
மருத்துவ பணியாட்கள் அநேகரின் பங்கில் வெளிப்படையாகத் தெரியாத பகைமை, தீவிர சிகிச்சை பகுதியில் மிகவும் இறுக்கமான ஒரு சூழ்நிலைமையை ஏற்படுத்தியது. இந்த விஷயமும், அதோடு சேர்ந்து என் அப்பாவின் மோசமாகிக்கொண்டிருந்த நிலைமையும் சில சமயங்களில் எங்களால் தாங்கிக்கொள்ள முடிவதற்கும் அதிகமாகத் தோன்றியது. நாங்கள் யெகோவாவிடம் உதவிக்காக கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். நாங்கள் பெற்றுக்கொண்ட நடைமுறையான ஆலோசனைகளை பொருத்துவதற்காகவும்கூட முயற்சி செய்தோம். ஆகையால் தீவிர சிகிச்சை பகுதிக்கு செல்லும்போது நாங்கள் எப்போதும் நன்றாக உடுத்திக்கொண்டு மருத்துவ பணியாட்களிடம் மரியாதையோடு நடந்துகொண்டோம். அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்பதன் மூலம் நாங்கள் அப்பாவின் நிலைமையில் தீவிரமான அக்கறை எடுத்துக்கொண்டோம், மேலும் அப்பாவின் கவனிப்பில் உட்பட்டிருந்த மருத்துவ பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றி செலுத்தினோம்.
மருத்துவ பணியாளர்கள் எங்கள் முயற்சிகளை கவனிக்காமல் இருந்துவிடவில்லை. சில நாட்களில் இறுக்கமாக இருந்த சூழ்நிலை இரக்கமுள்ள ஒன்றாக மாறியது. என் அப்பாவை கவனித்துக்கொண்ட செவிலியர் அவருடைய முன்னேற்றத்தைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பர், அவரைக் கவனித்துக் கொள்வதற்கு அவர்கள் நியமிக்கப்படவில்லையென்றாலும்கூட அப்படி செய்வார்கள். எங்களிடம் அதிக முரட்டுத்தனமாக நடந்துகொண்ட ஒரு மருத்துவர், எங்கள் அம்மா எவ்வாறு சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்கும் அளவுக்கு சாந்தமாக ஆனார். எங்கள் சபையினரும் உறவினரும்கூட எங்களுக்கு அன்பாக ஆதரவு தந்தனர். அவர்கள் உணவும் அநேக ஆறுதலளிக்கும் கார்டுகளையும் அனுப்பினர், அவர்கள் எங்கள் சார்பாக ஜெபித்தனர்.
விசனகரமாக, கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு என் அப்பா பிரதிபலிக்கவேயில்லை. முதல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பத்து நாட்கள் கழித்து அவர் இறந்துபோனார். நாங்கள் எங்கள் அப்பாவுக்காக ஆழ்ந்த மனத்துயரம் அடைகிறோம். சில சமயங்களில் இழப்பு உணர்வு சமாளிக்க முடியாததாய் உள்ளது. நல்லவிதமாக, நம்முடைய கடவுள் ‘நமக்காக அன்றாடகம் பாரத்தை’ சுமக்கப்போவதாக வாக்களித்திருக்கிறார், நாங்கள் முன்னொருபோதும் இராதவகையில் அவர் பேரில் சார்ந்திருக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.—சங்கீதம் 68:19.
புதிய உலகில் எங்கள் அப்பாவைக் காணப்போகும் சந்தோஷத்தைக் கொண்டிருக்க, நாங்களும்கூட யெகோவாவை தொடர்ந்து உண்மைத்தன்மையோடு சேவிக்கத் தீர்மானமாயிருக்கிறோம்.—மாற்கு 5:41, 42; யோவான் 5:28; அப்போஸ்தலர் 24:15.
[பக்கம் 21-ன் படம்]
கேப் டவுனில் ஃபிலிப் ஸ்மித் அவருடைய தாய் ஃபிலிஸ்-உடன்
[பக்கம் 22-ன் படம்]
எங்கள் அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய திருமண சமயத்தின்போது
[பக்கம் 23-ன் படம்]
என்டெபவில் நடந்த முதலாவது முழுக்காட்டுதலுக்கு சகோதரர்கள் ஒரு ஆப்பிரிக்க தலைவரின் குளத்தை வாடகைக்கு எடுத்தனர்
[பக்கம் 23-ன் படம்]
வழக்கமான விதத்தில் வாழ்த்துதல் சொல்லுதல்
[பக்கம் 24-ன் படம்]
அப்பாவின் மரணத்துக்கு சற்று முன்பு அப்பாவும் அம்மாவும்