கடவுளின் பூர்வகால ஊழியர்கள் மத்தியில் பெண்களின் மதிப்புவாய்ந்த பங்கு
“பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.”—ஆதியாகமம் 2:18.
1. பண்டைய காலங்களிலிருந்த பெண்களின் பங்கை ஒரு பைபிள் அகராதி எவ்வாறு விவரிக்கிறது?
“நவீன-நாளைய மேற்கத்திய சமுதாயத்தில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் சுயாதீனத்தைப் போல் எந்தப் பண்டைய மத்தியதரைக்கடல் சார்ந்த தேசங்களிலோ அல்லது அண்மைக் கிழக்கு நாடுகளிலோ இருந்த பென்கள் அனுபவிக்கவில்லை. அடிமைகள் சுயாதீனருக்கும், இளைஞர் முதியோருக்கும் கீழ்ப்பட்டிருந்தது போல, பெண்கள் ஆண்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதே பொதுவான வழக்கமாயிருந்தது. . . . ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளைக் காட்டிலும் அதிக மதிப்புக்குரியவர்களாகக் கருதப்பட்டனர், பெண்குழந்தைகள் சிலசமயங்களில் போதிய கவனிப்பின்றி இறந்துபோகும்படி விடப்பட்டனர்.” பண்டைய காலங்களிலிருந்த பெண்களின் நிலைமையை அவ்வாறு தான் ஒரு பைபிள் அகராதி விவரிக்கிறது.
2, 3. (அ) ஒரு அறிக்கையின்படி, இன்று பெரும்பாலான பெண்களின் நிலைமை என்ன? (ஆ) என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
2 இன்று உலகின் அநேக பகுதிகளில் நிலைமை அதைக்காட்டிலும் மேம்பட்டதாயில்லை. 1994-ல் முதன்முறையாக, ஐ.மா.-ன் அயலரசுத் துறையின் வருடாந்தர மனித உரிமைகள் அறிக்கை, பெண்கள் நடத்தப்படும் விதத்திற்குக் கவனத்தைத் திருப்பியது. “அன்றாடம் பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவது ஒரு மெய்யான காரியம் என்று 193 தேசங்களின் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன,” என்று அந்த அறிக்கையைக் குறித்து நியூ யார்க் டைம்ஸ் தலைப்புச்செய்தி குறிப்பிட்டது.
3 பல்வகைப்பட்ட கலாச்சாரப் பின்னணிகளிலிருந்து வரும் பெரும் எண்ணிக்கையான பெண்கள் பூமிமுழுவதிலுமுள்ள யெகோவாவின் ஜனங்களின் சபைகளோடு கூட்டுறவுகொண்டிருப்பதால் சில கேள்விகள் எழும்புகின்றன: சற்றுமுன் விவரிக்கப்பட்ட விதமே, பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று கடவுள் ஆதியில் விருப்பப்பட்ட விதமாக இருக்கிறதா? பைபிள் காலங்களில் யெகோவாவின் வணக்கத்தார் மத்தியில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர்? இன்று பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்?
‘ஒரு உதவியாள்’ மற்றும் ‘நிறைவுசெய்பவள்’
4. முதல் மனிதன் ஏதேன் தோட்டத்தில் தனிமையாக சிறிதுகாலம் இருந்தபிறகு யெகோவா என்ன கவனித்தார், அப்போது கடவுள் என்ன செய்தார்?
4 ஆதாம் ஏதேன் தோட்டத்தில் தனிமையாக சிறிதுகாலம் இருந்தபிறகு, யெகோவா பின்வருமாறு குறிப்பிட்டார்: “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை [“அவனுக்கு ஒரு உதவியாளை, அவனை நிறைவுசெய்பவளாக,” NW] அவனுக்கு உண்டாக்குவேன்.” (ஆதியாகமம் 2:18) ஆதாம் ஒரு பரிபூரண மனிதனாக இருந்தபோதிலும், படைப்பாளரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வேறு ஏதோவொன்று தேவைப்பட்டது. அத்தேவையைப் பூர்த்திசெய்வதற்கு யெகோவா பெண்ணைப் படைத்து முதல் விவாகத்தை நடத்தினார்.—ஆதியாகமம் 2:21-24.
5. (அ) ‘உதவியாள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய பெயர்ச்சொல் பைபிள் எழுத்தாளர்களால் பெரும்பாலும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது? (ஆ) யெகோவா முதல் பெண்ணை ‘நிறைவு செய்பவள்’ என்று குறிப்பிட்டது எதைக் குறிப்பிடுகிறது?
5 ‘உதவியாள்’ மற்றும் ‘நிறைவுசெய்பவள்’ என்ற சொற்கள் பெண்களுக்காக கடவுள் நியமித்த பங்கு மதிப்புக்குறைவானது என்பதை குறிப்பிடுகின்றனவா? அதற்கு நேர்மாறாக பொருள்படுகின்றன. பைபிள் எழுத்தாளர்கள் ‘உதவியாள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய பெயர்ச்சொல்லை (ஈஸர்) அடிக்கடி கடவுளுக்குப் பொருத்துகின்றனர். உதாரணமாக, யெகோவா ‘நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவராக’ நிரூபித்திருக்கிறார். (சங்கீதம் 33:20; யாத்திராகமம் 18:4; உபாகமம் 33:7) ஓசியா 13:9-ல் யெகோவா தம்மை இஸ்ரவேலின் ‘சகாயராக’வும்கூட குறிப்பிடுகிறார். ‘நிறைவுசெய்பவள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் (நீகெத்) என்ற எபிரெய சொல்லைக் குறித்து ஒரு பைபிள் புலவர் இவ்வாறு விளக்குகிறார்: “எதிர்பார்க்கப்பட்ட உதவி, வெறுமனே அவனுடைய அன்றாடக வேலையில் அவனுக்கு உதவிசெய்வது அல்லது பிள்ளைகளை பிறப்பிக்கிறது மட்டுமல்லாமல் . . . தோழமை அளிக்கும் பரஸ்பர ஆதரவு ஆகும்.”
6. பெண்ணை சிருஷ்டித்த பிறகு என்ன சொல்லப்பட்டது? ஏன்?
6 ஆகையால் யெகோவா பெண்ணை ‘உதவியாள்’ என்றும் ‘நிறைவுசெய்பவள்’ என்றும் விவரிப்பதில் எவ்வித மதிப்புக்குறைவும் இல்லை. அந்தப் பெண் தனக்கே உரித்தாயுள்ள தனித்தன்மைவாய்ந்த மனம், உணர்ச்சி, சரீரம் சம்பந்தமான அமைப்பைக் கொண்டிருந்தாள். அவள் அந்த ஆணுக்கு ஒரு பொருத்தமான கூட்டாளியாகவும் திருப்திகரமான விதத்தில் நிறைவு செய்பவளாகவும் இருந்தாள். இருவரும் வித்தியாசமானவர்களாய் இருந்தனர், அப்படியிருந்தபோதிலும் சிருஷ்டிகரின் நோக்கத்துக்கு இசைவாக ‘பூமியை நிரப்புவதற்கு’ இருவருமே தேவைப்பட்டனர். “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது,” என்பது ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்த பிறகே என்பது தெளிவாயிருந்தது.—ஆதியாகமம் 1:28, 31.
7, 8. (அ) ஏதேனில் பாவம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, பெண்ணின் பங்கு எவ்வாறு பாதிக்கப்படும்? (ஆ) யெகோவாவின் வணக்கத்தார் மத்தியில் ஆதியாகமம் 3:16-ன் நிறைவேற்றத்தைக் குறித்து என்ன கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன?
7 பாவம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, ஆணுக்கும் பெண்ணுக்கும் நிலைமைகள் வித்தியாசமாகிவிட்டன. பாவிகளான அவர்கள் இருவர் மீதும் யெகோவா தண்டனைத் தீர்ப்பளித்தார். “நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்,” என்று யெகோவா ஏவாளிடம் கூறினார், பின்னால் ஏற்படப்போகும் அந்நிலையை அவர் அனுமதிப்பதால் அது அவரால் செய்யப்பட்டது போல் பேசினார். அவர் கூடுதலாக சொன்னார்: “வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” (ஆதியாகமம் 3:16) அந்தச் சமயத்திலிருந்து, அநேக மனைவிகள் தங்கள் கணவர்களால் ஆண்டுகொள்ளப்பட்டிருக்கின்றனர், பெரும்பாலான சமயங்களில் கடுமையாக ஆண்டுகொள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்கள் உதவியாளர்களாகவும் நிறைவுசெய்பவர்களாகவும் மதிக்கப்படுவதற்கு பதிலாக, வேலைக்காரர் அல்லது அடிமைகளைப் போல பெரும்பாலான சமயங்களில் நடத்தப்பட்டிருக்கின்றனர்.
8 ஆதியாகமம் 3:16-ன் நிறைவேற்றம் யெகோவாவின் வணக்கத்தாரில் உள்ள பெண்களுக்கு எதை அர்த்தப்படுத்தியது? அவர்கள் தாழ்ந்த நிலைக்கும் இழிவான நிலைக்கும் ஒதுக்கப்பட்டனரா? நிச்சயமாகவே இல்லை! ஆனால் பெண்களைப் பாதிக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறையொழுங்கைப் பற்றி கூறும் பைபிள் பதிவுகள் இன்று சில சமுதாயங்களில் ஏற்கத்தகாததாய் தோன்றக்கூடும். அவற்றைப் பற்றியென்ன?
பைபிள்கால பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ளுதல்
9. பைபிள் காலங்களில் பெண்களை உட்படுத்திய பழக்கவழக்கங்களை நாம் சிந்திக்கும்போது, என்ன மூன்று காரியங்களை நாம் மனதில் வைக்க வேண்டும்?
9 பைபிள் காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் மத்தியில் பெண்கள் நன்றாக நடத்தப்பட்டனர். அந்நாட்களிலிருந்த பெண்களை உட்படுத்திய பழக்கவழக்கங்களை சிந்திக்கையில், அநேக காரியங்களை மனதில் வைப்பது பயனுள்ளதாயிருக்கும். முதலாவது, பொல்லாத ஆண்கள் சுயநலத்தோடு ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக உருவாகிய விரும்பத்தகாத சூழ்நிலைமைகளைக் குறித்து பைபிள் சொல்லும்போது, பெண்களை அவ்விதமாக நடத்துவதை கடவுள் அங்கீகரித்தார் என்பதை அது குறிப்பதில்லை. இரண்டாவது, யெகோவா சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை தம் ஊழியர்கள் மத்தியில் சில காலத்துக்குச் சகித்துக்கொண்டபோதிலும், அவர் பெண்களைப் பாதுகாப்பதற்கென்று இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தினார். மூன்றாவது, நவீன தராதரங்களைக்கொண்டு பண்டைய பழக்கவழக்கங்களை நியாயந்தீர்க்காதபடி நாம் கவனமாயிருக்க வேண்டும். இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களுக்கு விரும்பத்தகாதவையாக தோன்றும் சில பழக்கவழக்கங்கள், அப்போதிருந்த பெண்களால் மதிப்புக்குறைவானதாக நோக்கப்படவில்லை. சில உதாரணங்களை நாம் சிந்திப்போமாக.
10. பலதார மணம் என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்ததை யெகோவா எவ்வாறு கருதினார், ஒருதார மணம் என்ற அவருடைய ஆதி தராதரத்தை அவர் ஒருபோதும் விட்டுவிடவில்லை என்பதை எது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது?
10 பலதார மணம்:a யெகோவாவின் ஆதி நோக்கத்தின்படி, ஒரு மனைவி தன் கணவனை மற்றொரு பெண்ணோடு பகிர்ந்துகொள்ள மாட்டாள். கடவுள் ஆதாமுக்கு ஒரு மனைவியை மட்டுமே சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 2:21, 22) ஏதேனில் நடந்த கலகத்தனத்திற்குப் பிறகு, பலதார மணம் என்பது காயீனின் வம்சாவழியில் முதலில் தோன்றியது. இறுதியில் அது ஒரு பழக்கமாக ஆனது, யெகோவாவின் வணக்கத்தார் சிலர் அதை ஏற்றுக்கொண்டனர். (ஆதியாகமம் 4:19; 16:1-3; 29:21-28) யெகோவா பலதார மணத்தை அனுமதித்தார். இஸ்ரவேலின் ஜனத்தொகையை அது அதிகரிக்கச் செய்தது; என்றாலும், மனைவிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் பாதுகாப்பதற்கென்று அப்பழக்கத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவர் பெண்களுக்குக் கரிசனைக் காண்பித்தார். (யாத்திராகமம் 21:10, 11; உபாகமம் 21:15-17) கூடுதலாக, யெகோவா தம் ஆதி தராதரமாகிய ஒருதார மணத்தை ஒருபோதும் விட்டுவிடவில்லை. ‘பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்’ என்று நோவாவுக்கும் அவருடைய குமாரர்களுக்கும் மறுபடியுமாக கட்டளை கொடுக்கப்பட்டது, அவர்கள் அனைவரும் ஒருதார மணம் செய்தவர்கள். (ஆதியாகமம் 7:7; 9:1; 2 பேதுரு 2:5) கடவுள் இஸ்ரவேலோடு தாம் கொண்டிருந்த உறவை அடையாளப்படுத்திக் காண்பித்தபோது தம்மை ஒருதார கணவனாக வருணித்தார். (ஏசாயா 54:1, 5) பிறகு, கடவுளுடைய ஆதி தராதரமாகிய ஒருதார மணம் இயேசு கிறிஸ்துவால் மறுபடியுமாக ஸ்தாபிக்கப்பட்டது, பூர்வ கிறிஸ்தவ சபையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.—மத்தேயு 19:4-8; 1 தீமோத்தேயு 3:2, 12.
11. பைபிள் காலங்களில் மணப்பெண்-விலை ஏன் கொடுக்கப்பட்டது, இது பெண்களுக்கு மதிப்புக் குறைவை காட்டுவதாக இருந்ததா?
11 மணப்பெண்-விலை கொடுத்தல்: பண்டைய இஸ்ரவேல்—அதன் வாழ்க்கையும் நிறுவனங்களும் என்ற ஆங்கில புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை அல்லது அதற்கு சமமதிப்புள்ள ஒன்றை பெண்ணின் குடும்பத்தாருக்கு செலுத்தும் இந்தக் கடமை, இஸ்ரவேல திருமணம் என்பது ஒரு பொருளை விலைக்கு வாங்குவதைப் போன்ற ஒரு வெளிப்படையான தோற்றத்தை கொடுக்கிறது என்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் [மணப்பெண்-விலை] பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட விலையாக அல்ல, மாறாக, குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடாகத் தோன்றுகிறது.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) ஆகையால் மணப்பெண்-விலை கொடுப்பதானது பெண்ணின் சேவைகளை இழந்ததற்கும், அவளைக் கவனித்துக்கொள்வதற்கு அவளுடைய குடும்பத்துக்குத் தேவைப்பட்ட முயற்சிக்கும் செலவுக்கும் ஈடு செய்வதாயிருந்தது. பெண்ணின் மதிப்பைக் குறைப்பதற்கு பதிலாக, அது அவளுடைய குடும்பத்துக்கு அவளுடைய மதிப்பை உறுதிப்படுத்தியது.—ஆதியாகமம் 34:11, 12; யாத்திராகமம் 22:16; ஆங்கில காவற்கோபுரம், ஜனவரி 15, 1989, பக்கங்கள் 21-4.
12. (அ) விவாகமான ஆண்களும் பெண்களும் வேதாகமத்தில் சில சமயங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தனர், இப்படிப்பட்ட பதங்கள் பெண்களுக்கு அவமதிப்பானதாய் இருந்தனவா? (ஆ) ஏதேனில் யெகோவா உபயோகித்த பதங்களைக் குறித்ததில் எது குறிப்பிடத்தக்கதாய் உள்ளது? (அடிகுறிப்பைக் காண்க.)
12 கணவர்கள் “சொந்தக்காரர்கள்”: ஏறக்குறைய பொ.ச.மு. 1918-ல் ஆபிரகாம் மற்றும் சாராள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், மணமாகியிருந்த ஒரு ஆணை ‘சொந்தக்காரராக’ (எபிரெயுவில் பாஆல்) எண்ணுவதும், விவாகமாகியிருந்த பெண்ணை ‘உடைமையாக’ (எபிரெயுவில், பியுலா) எண்ணுவதும் அவர்களுடைய காலத்தில் பழக்கமாக ஆகிவிட்டிருக்க வேண்டும் என தோன்றச் செய்கிறது. (ஆதியாகமம் 20:3) இப்படிப்பட்ட சொற்றொடர்கள் அதற்குப் பிறகு வேதாகமத்தில் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவ காலத்துக்கு முன் வாழ்ந்த பெண்கள் அதை அருவருத்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.b (உபாகமம் 22:22) ஆனால் மனைவிகளை சொத்துக்களைப் போல் நடத்தக்கூடாது. சொத்தையோ அல்லது செல்வத்தையோ வாங்கலாம், விற்கலாம், பரம்பரைச் சொத்தாகக்கூட பெற்றுக்கொள்ளலாம், ஆனால் மனைவியின் விஷயத்தில் அப்படியல்ல. “வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு,” என்று பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது.—நீதிமொழிகள் 19:14; உபாகமம் 21:14.
மதிப்புவாய்ந்த பங்கு
13. கடவுள்-பயமுள்ள ஆண்கள் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றி அவருடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தபோது, பெண்களுக்கு என்ன நேரிட்டது?
13 கிறிஸ்தவத்துக்கு முன்னான காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் மத்தியில் பெண்களின் பங்கு என்னவாக இருந்தது? அவர்கள் எவ்வாறு கருதப்பட்டனர், நடத்தப்பட்டனர்? எளியவிதத்தில் சொல்லவேண்டுமென்றால், கடவுள்-பயமுள்ள மனிதர்கள் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவருடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தபோது, பெண்கள் தங்கள் மதிப்பை இழக்காதிருந்தனர், அநேக உரிமைகளையும் சிலாக்கியங்களையும் அனுபவித்தனர்.
14, 15. இஸ்ரவேலில் பெண்கள் மதிக்கப்பட்டனர் என்பதற்கு என்ன குறிப்புகள் இருக்கின்றன? அவர்களை தம் வணக்கத்தாரில் உள்ள ஆண்கள் மதிக்க வேண்டும் என யெகோவா எதிர்பார்ப்பது ஏன் சரியானது?
14 பெண்களுக்கு மரியாதைகாட்டப்பட வேண்டியிருந்தது. தந்தைகளுக்கும் தாய்களுக்கும் மரியாதை காண்பிக்க வேண்டும் என்று இஸ்ரவேலருக்குக் கடவுளுடைய சட்டம் கட்டளையிட்டது. (யாத்திராகமம் 20:12; 21:15, 17) ‘உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும் வேண்டும்,’ என்று லேவியராகமம் 19:3 சொல்கிறது. ஒரு சமயம் பத்சேபாள் தன் மகன் சாலொமோனை அணுகியபோது மரியாதைத் தெரிவிக்கும்விதத்தில், ‘ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கினார்.’ (1 இராஜாக்கள் 2:19) என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “இஸ்ரவேல் பேரில் கடவுள் கொண்டிருந்த அன்பை, ஒரு கணவன் தன் மனைவிக்காகக் கொண்டிருக்கும் அன்போடு தீர்க்கதரிசன ஒப்பிடுதல்கள் செய்வது, பெண்களுக்கு மரியாதைக் காட்டப்படும் சமுதாயத்தில் மட்டுமே செய்யப்பட்டிருக்க முடியும்.”
15 யெகோவா தம்மை வணங்கும் ஆண்கள், பெண்களுக்கு மரியாதைக் கொடுக்கும்படி எதிர்பார்க்கிறார், ஏனென்றால் அவர்தாமே பெண்களுக்கு மரியாதைக் காண்பிக்கிறார். பெண்களின் அனுபவங்களை எடுத்துக்காட்டாக பயன்படுத்தி, தம் சொந்த உணர்ச்சிகளை பெண்களின் உணர்ச்சிகளோடு ஒப்பிட்டுக் கூறுவதைப் பற்றிய வேதவசனங்களில் இதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. (ஏசாயா 42:14; 49:15; 66:13) இது யெகோவா எவ்வாறு உணருகிறார் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவிசெய்கிறது. அக்கறைக்குரியவிதத்தில், யெகோவா தமக்குப் பொருத்திக்கொள்ளும் “கிருபை” அல்லது “இரக்கம்” என்ற சொல்லுக்கு எபிரெய பதம், “கருப்பை” என்ற சொல்லுக்கு மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கிறது, அது “தாய்க்குரிய உணர்ச்சிகள்” என்று விவரிக்கப்படலாம்.—யாத்திராகமம் 33:19; ஏசாயா 54:7.
16. கடவுள் பற்றுள்ள பெண்களின் புத்திமதி மதிக்கப்பட்டது என்பதை என்ன உதாரணங்கள் காண்பிக்கின்றன?
16 கடவுள் பற்றுள்ள பெண்களின் புத்திமதி மதிக்கப்பட்டது. ஒரு சமயம் கடவுள்-பயமுள்ள ஆபிரகாம் தன் கடவுள் பற்றுள்ள மனைவி சாராளின் புத்திமதியை ஏற்றுக்கொள்ள தயங்கியபோது, யெகோவா அவரிடம் சொன்னார்: “சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.” (ஆதியாகமம் 21:10-12) ஏசாவின் ஏத்திய மனைவிகள் “ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.” காலப்போக்கில், அவர்களுடைய குமாரனாகிய யாக்கோபு ஒரு ஏத்திய பெண்ணை விவாகம் செய்தால் தான் அனுபவிக்கப்போகும் வேதனையை ரெபெக்காள் வெளிப்படுத்தினாள். ஈசாக்கின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? “ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ள வேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்” என பதிவு சொல்கிறது. ஆம், ரெபெக்காள் நேரடியான புத்திமதி கொடுக்காவிட்டாலும்கூட, அவளுடைய கணவன் அவளுடைய உணர்ச்சிகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு தீர்மானம் செய்தார். (ஆதியாகமம் 26:34, 35; 27:46; 28:1) தாவீது ராஜா அபிகாயிலின் வேண்டுகோளுக்கு செவிகொடுத்ததன் காரணமாக இரத்தப்பழியைத் தவிர்த்தார்.—1 சாமுவேல் 25:32-35.
17. குடும்பத்தில் பெண்கள் ஓரளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தனர் என்பதை எது காண்பிக்கிறது?
17 பெண்கள் குடும்பத்தில் ஓரளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் பின்வருமாறு ஊக்கப்படுத்தப்பட்டனர்: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” (நீதிமொழிகள் 1:8) சுறுசுறுப்பாய் உழைக்கும் விவாகமான பெண் ஒரு வீட்டை நடத்தியது மட்டுமல்லாமல் சொத்து விற்பனைகளைக் கையாளுவது, விளைச்சல்மிக்க வயலை பராமரிப்பது, சிறு தொழிலை நடத்துவது, ஞானமான வார்த்தைகளைப் பேசுபவள் என்று அறியப்பட்டிருப்பது ஆகியவற்றை செய்தாள் என்று நீதிமொழிகள் 31-ஆம் அதிகாரத்தில் ‘திறமைசாலியான மனைவியைப்’ பற்றி கொடுக்கப்பட்டிருக்கும் விவரிப்பு வெளிக்காட்டுகிறது. புகழப்படத்தக்க அந்தப் பெண் யெகோவாவிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியுடன்கூடிய பயமே எல்லாவற்றைக் காட்டிலும் அதிமுக்கியமானதாய் இருந்தது. அப்படிப்பட்ட மனைவியின் மதிப்பு ‘பவழத்தைப் பார்க்கிலும் உயர்ந்தது’ என்று சொல்வது ஆச்சரியமாயில்லை! அருமையான சிவப்பு பவழம் மிகவும் மதிப்புள்ளதாகக் கருதப்பட்டது. அணிகலன் மற்றும் அலங்காரம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது.—நீதிமொழிகள் 31:10-31, NW.
கடவுளின் விசேஷ தயவைப் பெற்றுக்கொண்ட பெண்கள்
18. பைபிள் காலங்களில் சில பெண்கள்மீது விசேஷ தயவு எந்தெந்த வழிகளில் வழங்கப்பட்டது?
18 பெண்களுக்காக யெகோவா கொண்டிருந்த மதிப்பு, பைபிள் காலங்களில் அவர் சில பெண்களுக்கு விசேஷ தயவு வழங்கப்பட்டதில் பிரதிபலிக்கப்பட்டது. ஆகார், சாராள், மனோவாவின் மனைவி ஆகியோரை தேவதூதர்கள் சந்தித்து, தெய்வீக வழிநடத்துதலை அவர்களிடம் அறிவித்தனர். (ஆதியாகமம் 16:7-12; 18:9-15; நியாயாதிபதிகள் 13:2-5) ஆசரிப்புக்கூடாரத்தில் பெண் வேலையாட்களும் சாலொமோனின் அரண்மனையில் பெண் பாடகர்களும் இருந்தனர்.—யாத்திராகமம் 38:8; 1 சாமுவேல் 2:22; பிரசங்கி 2:8.
19. சில சமயங்களில் யெகோவா பெண்கள் அவரை எந்த வழியில் பிரதிநிதித்துவம் செய்ய பயன்படுத்தினார்?
19 இஸ்ரவேலின் சரித்திரத்திலே அநேக தடவைகள் யெகோவா தம்மை பிரதிநிதித்துவம் செய்வதற்கு அல்லது அவருக்காக பேசுவதற்கு ஒரு பெண்ணை பயன்படுத்தினார். தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவளைக் குறித்து நாம் வாசிக்கிறோம்: “அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாய விசாரணைக்குப் போவார்கள்.” (நியாயாதிபதிகள் 4:5) கானானியருடைய ராஜாவாகிய யாபீனால் இஸ்ரவேலர் தோற்கடிக்கப்பட்டதைப் பின்தொடர்ந்து, தெபொராள் உண்மையிலேயே ஒரு விசேஷித்த சிலாக்கியத்தைக் கொண்டிருந்தார்கள். இறுதியில் யெகோவாவின் ஏவப்பட்டெழுதப்பட்ட பதிவின் பாகமாக ஆன வெற்றிப் பாடலின் ஒரு பகுதியையாவது அவர்கள் இயற்றியிருக்க வேண்டும் என்பது தெளிவாயிருக்கிறது.c (நியாயாதிபதிகள், அதிகாரம் 5) பல நூற்றாண்டுகளுக்குப் பின், யோசியா ராஜா யெகோவாவிடத்தில் விசாரிப்பதற்கென்று பிரதான ஆசாரியர் உட்பட பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்கு அனுப்பினார். உல்தாள் அதிகாரத்தோடு இவ்வாறு பதிலளிக்க முடிந்தது: “இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இவ்வாறு உரைத்தார்.” (2 இராஜாக்கள் 22:11-15) அந்தச் சமயத்தில் ராஜா, பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை ஒரு தீர்க்கதரிசியானவளிடம் செல்லும்படி கட்டளையிட்டார், ஆனால் இது யெகோவாவிடமிருந்து வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்வதற்காக செய்யப்பட்டது.—மல்கியா 2:7-ஐ ஒப்பிடுக.
20. பெண்களின் உணர்ச்சிகள் மற்றும் நலனின்பேரில் யெகோவா அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதை என்ன உதாரணங்கள் காண்பிக்கின்றன?
20 யெகோவா தம் வணக்கத்தாரில் சில பெண்கள் சார்பாக செயல்பட்ட சந்தர்ப்பங்களிலிருந்து பெண்களின் நலனின் பேரில் யெகோவா கொண்டிருந்த அக்கறை தெளிவாக தெரிகிறது. ஆபிரகாமின் அழகிய மனைவியாகிய சாராள் கற்பழிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க இரண்டு முறை அவர் குறுக்கிட்டார். (ஆதியாகமம் 12:14-20; 20:1-7) யாக்கோபால் குறைவாக நேசிக்கப்பட்ட மனைவியாகிய லேயாள் மீது கடவுள் தயவு காண்பித்ததால் ‘அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்;’ அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். (ஆதியாகமம் 29:31, 32) எகிப்தில் நடந்த சிசுவதையிலிருந்து எபிரெய ஆண்பிள்ளைகளை பாதுகாப்பதற்கென்று கடவுள்-பயமுள்ள இரண்டு இஸ்ரவேல மருத்துவச்சிகள் தங்கள் உயிரை ஆபத்திற்குட்படுத்தினர். யெகோவா போற்றுதலோடு ‘அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.’ (யாத்திராகமம் 1:17, 20, 21) அவர் அன்னாளின் ஊக்கமான ஜெபத்திற்கும்கூட பதிலளித்தார். (1 சாமுவேல் 1:10, 20) ஒரு தீர்க்கதரிசியின் விதவை தன்னுடைய கடன் முழுவதும் கொடுத்துத் தீர்ப்பதற்கு கடன் கொடுத்தவன் அவளுடைய பிள்ளைகளை எடுத்துக்கொள்ள தயாரானபோது, யெகோவா அவளை கைவிட்டுவிடவில்லை. கடவுள் அன்பாக தீர்க்கதரிசியாகிய எலிசாவைக்கொண்டு அவளுடைய எண்ணெயை மிகுதிப்படுத்தி அவள் தன் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு உதவினார். இவ்வாறு அவள் தன் குடும்பத்தையும் தன் மதிப்பையும் காத்துக்கொண்டாள்.—யாத்திராகமம் 22:22, 23; 2 இராஜாக்கள் 4:1-7.
21. பெண்களின் பங்கைக் குறித்து என்ன சமநிலையான விவரிப்பை எபிரெய வேதாகமம் அளிக்கிறது?
21 இவ்வாறாக, பெண்களை இழிவாகக் கருதும் எண்ணத்தை எபிரெய வேதாகமம் ஊக்குவிக்காமல், கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் அவர்களுடைய பங்கைக் குறித்து ஒரு சமநிலையான விவரிப்பை அளிக்கிறது. ஆதியாகமம் 3:16-ன் நிறைவேற்றத்திலிருந்து யெகோவா தம் வணக்கத்தாரில் இருந்த பெண்களை பாதுகாக்காவிட்டாலும்கூட, யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றி அவருடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிந்த கடவுள் பற்றுள்ள ஆண்களால் பெண்கள் கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்தப்பட்டனர்.
22. இயேசு பூமியிலிருந்த காலத்துக்குள்ளாக பெண்களின் பங்கு எவ்வாறு மாறியிருந்தது, என்ன கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன?
22 எபிரெய வேதாகமம் முடிவடைந்ததைப் பின்தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், யூதர்கள் மத்தியில் பெண்களின் பங்கு மாற்றமடைந்தது. இயேசு பூமியில் தோன்றிய காலத்துக்குள்ளாக, யூத குருமார்களின் பாரம்பரியங்கள் பெண்களின் மதசம்பந்தமான சிலாக்கியங்களையும் சமூக வாழ்க்கையையும் பெருமளவில் கட்டுப்படுத்தியிருந்தது. அப்படிப்பட்ட பாரம்பரியங்கள் இயேசு பெண்களை கையாண்டவிதத்தை பாதித்ததா? இன்று கிறிஸ்தவப் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும்? இக்கேள்விகள் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி-யின்படி, “பலதார மணம்” என்பது “தம்பதிகளில் எவரேனும் ஒன்றுக்கும் மேற்பட்ட துணைவர்களை கொண்டிருப்பது.” “பன்மனை மணமுறை” என்ற அதிக திட்டவட்டமான பதம் “ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை அல்லது வாழ்க்கை துணைவிகளை ஒரே சமயத்தில் கொண்டிருக்கும் நிலை அல்லது பழக்கம்,” என்று விளக்கப்படுகிறது.
b எபிரெய வேதாகமம் முழுவதும் விவாகமான ஆண்களும் பெண்களும் “புருஷன்,” (எபிரெயுவில், இஷ்) “மனைவி” (எபிரெயுவில், இஷ்ஷா) என்று பெரும்பாலான சமயங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக, ஏதேனில், யெகோவா உபயோகித்த பதங்கள் “சொந்தக்காரர்,” ‘உடைமை’ என்றில்லாமல் “புருஷன்,” “மனைவி” என்பதாக இருந்தது. (ஆதியாகமம் 2:24; 3:16, 17) சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பிறகு, இஸ்ரவேல் மனந்திரும்புதலோடு யெகோவாவை “என் சொந்தக்காரர்” என்று இனிமேலும் அழையாமல் “என் புருஷன்,” என்றழைக்கும். “புருஷன்” என்ற பதம் “சொந்தக்காரன்” என்பதைக் காட்டிலும் அதிக அன்புமிக்க அர்த்தத்தைக் கொடுக்கக்கூடும் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனம் முன்னுரைத்தது.—ஓசியா 2:16.
c நியாயாதிபதிகள் 5:7-ல் தெபொராளைக் குறிப்பிடுகையில் தன்னிலை பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பெண்களுக்காக கடவுள்-நியமித்திருக்கும் பங்கைக் குறித்து ‘உதவியாள்’ மற்றும் ‘நிறைவு செய்பவள்’ என்ற சொற்கள் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?
◻ பைபிள் காலங்களில் பெண்களைப் பாதித்த பழக்கவழக்கங்களை சிந்திக்கையில், நாம் எதை மனதில் வைக்கவேண்டும்?
◻ பூர்வ காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் மத்தியில் பெண்கள் மதிப்புக்குரிய பங்கைக் கொண்டிருந்தனர் என்பதை எது காண்பிக்கிறது?
◻ கிறிஸ்தவத்துக்கு முன்னான காலங்களில் பெண்கள்மீது யெகோவா என்ன வழிகளில் விசேஷ தயவைக் காண்பித்தார்?