‘சகலவிதமான ஆறுதலின் தேவனிடமிருந்து’ ஆறுதல்
“நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்,”—2 கொரிந்தியர் 1:3, 4.
1, 2. துக்கப்படுகிற ஆட்களுக்கு என்ன வகையான ஆறுதல் தேவை?
துக்கப்படுகிற ஆட்களுக்கு உண்மையான ஆறுதல் தேவை—வெறுமையான பேச்சும் வெறுமையான சொல்லும் அல்ல. ‘காலம் புண்ணை ஆற்றிவிடும்,’ என்ற முதுமொழியை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம், ஆனால் துக்கத்தின் ஆரம்ப கட்டத்தில், துக்கத்தால் தாக்கப்பட்டிருக்கும் எந்த நபர் இந்த எண்ணத்தால் ஆறுதல் பெறுவார்? கடவுள் ஒரு உயிர்த்தெழுதலை வாக்களித்திருக்கிறார் என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள், ஆனால் சடுதியான இழப்பினால் வரும் ஆழமான காயத்தையும் வேதனையையும் அது தடுப்பதில்லை. நிச்சயமாகவே நீங்கள் ஒரு பிள்ளையை இழந்திருந்தால், உயிரோடிருக்கும் மற்ற பிள்ளைகள் அந்த அருமையான பிள்ளையை ஈடுசெய்துவிடமுடியாது.
2 அன்பான ஒருவர் மரிக்கையில், கடவுளுடைய வாக்குறுதிகளில் உறுதியான ஆதாரத்தையுடைய ஆறுதலினால், உண்மையான ஆறுதலினால் நாம் அதிகமாக உதவப்படுகிறோம். நமக்கு ஒற்றுணர்வும்கூட தேவை. ருவாண்டாவிலுள்ள மக்களுக்கு, விசேஷமாக அந்தக் கொடூரமான இனவெறி படுகொலையில் அன்பானவர்களை இழந்துவிட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இது நிச்சயமாகவே உண்மையாக இருந்திருக்கிறது.
யெகோவா—ஆறுதலின் தேவன்
3. ஆறுதலைக் கொடுப்பதில் யெகோவா எவ்விதமாக முன்மாதிரியை வைத்திருக்கிறார்?
3 நம் அனைவருக்கும் ஆறுதலைக் கொடுப்பதில் யெகோவா ஒரு முன்மாதிரியை வைத்திருக்கிறார். நமக்கு நித்திய ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுப்பதற்காக தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை அவர் பூமிக்கு அனுப்பினார். இயேசு இவ்வாறு போதித்தார்: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) அவர் தம்மைப் பின்பற்றினோருக்கு பின்வருமாறும் சொன்னார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 15:13) மற்றொரு சமயத்தில் அவர் சொன்னார்: “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:28) மேலும் பவுல் இவ்வாறு சொன்னார்: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8) இந்த வேதவாக்கியங்களின் மூலமாகவும் அநேக மற்ற வேதவாக்கியங்களின் மூலமாகவும், நாம் கடவுளின் அன்பையும் கிறிஸ்து இயேசுவின் அன்பையும் உணர்ந்துகொள்கிறோம்.
4. அப்போஸ்தலன் பவுல் ஏன் விசேஷமாக யெகோவாவுக்கு கடன்பட்டிருந்தார்?
4 அப்போஸ்தலன் பவுல் விசேஷமாக யெகோவாவின் தகுதியற்ற தயவைக்குறித்து உணர்ந்தவராக இருந்தார். ஆவிக்குரிய விதமாக மரித்த நிலையிலிருந்து, கிறிஸ்துவைப் பின்பற்றுவோரை வெறியோடு துன்புறுத்துபவராக இருப்பதிலிருந்து தானே துன்புறுத்தப்படும் ஒரு கிறிஸ்தவனாக ஆகும்படியான வாய்ப்பைப் பெற்றார். (எபேசியர் 2:1-5) அவர் தன்னுடைய அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்: “நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது.”—1 கொரிந்தியர் 15:9, 10.
5. தேவனிடமிருந்து வரும் ஆறுதலைப்பற்றி பவுல் என்ன எழுதினார்?
5 அப்படியென்றால் பொருத்தமாகவே பவுல் எழுதினார்: “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறது போல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.”—2 கொரிந்தியர் 1:3-7.
6. “ஆறுதல்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை உணர்த்துவது என்ன?
6 என்னே ஊக்கமூட்டும் வார்த்தைகள்! “ஆறுதல்” என்பதாக இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை “ஒருவரின் பக்கத்தில் இருப்பதற்காக அழைக்கப்படுவது,” என்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே, அது “ஒரு நபர் கடுமையான சோதனையை அனுபவித்துக்கொண்டிருக்கையில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பக்கத்தில் இருப்பதாகும்.” (எ லிங்குவிஸ்ட்டிக் கீ டு தி கிரீக் நியூ டெஸ்டமெண்ட்) ஒரு பைபிள் கல்விமான் எழுதினார்: “இந்த வார்த்தை . . . உணர்ச்சிகளை அமைதிப்படுத்தும் அனுதாபத்தைவிட எப்போதும் அதிகத்தையே அர்த்தப்படுத்தியிருக்கிறது. . . . கிறிஸ்தவ ஆறுதல் என்பது தைரியத்தைக் கொண்டுவரும் ஆறுதலாக, வாழ்க்கையின் எல்லா கஷ்டங்களையும் வெற்றிகரமாக சமாளிக்க ஒரு மனிதனுக்கு உதவிசெய்கிற ஆறுதலாகவும் இருக்கிறது.” அது உறுதியான வாக்குறுதி மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த ஆறுதலளிக்கும் வார்த்தைகளையும்கூட உட்படுத்துகிறது.
இயேசுவும் பவுலும்—இரக்கமுள்ள ஆறுதலளிப்பவர்கள்
7. பவுல் எவ்விதமாக அவருடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதலாக இருந்தார்?
7 ஆறுதலைக் கொடுப்பதில் பவுல் என்னே ஒரு அற்புதமான முன்மாதிரியாக இருந்தார்! தெசலோனிக்கேயாவிலுள்ள சகோதரர்களுக்கு அவரால் இவ்வாறு எழுதமுடிந்தது: “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறது போல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் எங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.” அன்புள்ள, அக்கறையுள்ள பெற்றோரைப் போலவே, நாமனைவருமே மற்றவர்களோடு அவர்களுக்கு தேவையாக இருக்கும் சமயங்களில் நம்முடைய அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் பகிர்ந்துகொள்ளலாம்.—1 தெசலோனிக்கேயர் 2:7, 8, 12.
8. இயேசுவின் போதனை ஏன் துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது?
8 இத்தகைய அக்கறையையும் தயவையும் காண்பிப்பதில், பவுல் தன்னுடைய பெரிய முன்மாதிரியாளரான இயேசுவை பின்பற்றிக்கொண்டிருந்தார். மத்தேயு 11:28-30-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி இயேசு அனைவருக்கும் விடுக்கும் இரக்கமுள்ள அழைப்பை நினைவில் கொள்ளுங்கள்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” ஆம், இயேசுவின் போதனை புத்துயிரளிப்பதாக உள்ளது, ஏனென்றால் அது நம்பிக்கையையும் ஒரு வாக்குறுதியையும்—உயிர்த்தெழுதலின் வாக்குறுதியையும் கொடுக்கிறது. உதாரணமாக மக்களிடம் நாம் நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டை விட்டுவருகையில் இந்த நம்பிக்கையையும் வாக்குறுதியையுமே நாம் அளிக்கிறோம். நாம் நீண்டகாலமாக துக்கித்துக்கொண்டிருந்தாலும்கூட, இந்த நம்பிக்கை நம் அனைவருக்கும் உதவிசெய்யக்கூடும்.
துக்கப்படுகிறவர்களுக்கு எவ்விதமாக ஆறுதலளிப்பது
9. துக்கப்படுகிற ஆட்களிடமாக நாம் ஏன் பொறுமையை இழந்துவிடக்கூடாது?
9 அன்பான ஒருவரின் மரணத்துக்குப்பின்பு உடனடியாக முன்நிர்ணயிக்கப்பட்ட ஏதோ ஒரு காலத்துக்கு துக்கம் கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. சில ஆட்கள், விசேஷமாக பிள்ளைகளை இழந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமாக தங்கள் துக்கத்தின் சுமையை சுமக்கின்றனர். ஸ்பெய்னில் உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவ தம்பதி 1963-ல் தங்கள் 11 வயது மகனை மூளையைப் பாதித்த ஒரு வியாதியின் பலியாளாக இழந்தனர். இன்றுவரையாக, தங்கள் மகன் பாக்கீட்டோவைப் பற்றி பேசும்போதெல்லாம் கண்ணீர் வடிக்கின்றனர். திருமண நாள், புகைப்படங்களும் ஞாபகப் பொருட்களும் துயரமான நினைவுகளை திரும்பக் கொண்டுவரக்கூடும். ஆகவே, நாம் ஒருபோதும் பொறுமையை இழந்து, இப்பொழுதிற்குள் மற்றவர்கள் இழப்பின் காரணமாக ஏற்பட்ட தங்கள் துக்கத்திலிருந்து மீண்டிருக்கவேண்டும் என்பதாக நினைக்கக்கூடாது. மருத்துவ குறிப்பு ஒன்று ஒப்புக்கொள்கிறது: “மனச்சோர்வும் மனநிலை மாற்றங்களும் பல ஆண்டுகள் வரையாக நீடிக்கக்கூடும்.” ஆகவே, உடலில் சரீர தழும்புகள் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய விதமாகவே, அநேக உணர்ச்சித் தழும்புகளும் இருக்கக்கூடும்.
10. துக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய நாம் என்ன செய்யவேண்டும்?
10 கிறிஸ்தவ சபையில் துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதலளிக்க நாம் செய்யக்கூடிய ஒருசில நடைமுறையான காரியங்கள் யாவை? எல்லா உண்மை மனதோடும் நாம் ஆறுதல் தேவைப்படுகிற ஒரு சகோதரன் அல்லது சகோதரியிடம், “நான் செய்யக்கூடியது ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்,” என்பதாக சொல்லக்கூடும். ஆனால் துக்கத்தில் இருக்கும் ஒருவர் நம்மை அழைத்து, “நீங்கள் எனக்கு உதவிசெய்யக்கூடிய ஒன்றைக் குறித்து நான் யோசித்திருக்கிறேன்,” என்று எத்தனை தடவை சொல்லியிருப்பார்? தெளிவாகவே, துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்யவேண்டுமாயின் நாம்தாமே பொருத்தமான சமயத்தில் முன்வருவது அவசியமாக இருக்கிறது. ஆகவே, பயனுள்ள விதத்தில் நாம் என்ன செய்யலாம்? இங்கே சில நடைமுறையான ஒருசில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
11. நாம் செவிகொடுத்துக் கேட்பது எவ்விதமாக மற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கமுடியும்?
11 செவிகொடுத்துக் கேளுங்கள்: நீங்கள் செய்யக்கூடிய அதிக பயனுள்ள காரியங்களில் ஒன்று, செவிகொடுத்துக் கேட்பதன் மூலமாக அன்பானவரை மரணத்தில் இழந்தவருடைய வேதனையைப் பகிர்ந்துகொள்வதாகும். “அதைப் பற்றி நீங்கள் பேச விரும்புகிறீர்களா?” என்பதாக நீங்கள் கேட்கலாம். அவர்களே தீர்மானிக்கட்டும். தன்னுடைய அப்பா மரித்ததை நினைவுபடுத்தி ஒரு கிறிஸ்தவன் சொன்னதாவது: “மற்றவர்கள் என்ன நடந்தது என்பதைக் கேட்டு, பின்பு உண்மையிலேயே செவிகொடுத்தது எனக்கு நிஜமாகவே உதவிசெய்தது.” யாக்கோபு புத்திமதி சொன்னவிதமாக, கேட்கிறதற்கு தீவிரமாயிருங்கள். (யாக்கோபு 1:19) பொறுமையுடனும் அனுதாபத்துடனும் செவிகொடுத்துக் கேளுங்கள். “அழுகிறவர்களுடனே அழுங்கள்,” என்பதாக பைபிள் ரோமர் 12:15-ல் சிபாரிசு செய்கிறது. மார்த்தாள் மற்றும் மரியாளோடுகூட இயேசு அழுதார் என்பதை நினைவில் வையுங்கள்.—யோவான் 11:35.
12. துக்கப்படுகிறவர்களுக்கு என்ன வகையான உறுதிப்பாட்டை நாம் அளிக்கலாம்?
12 உறுதிப்பாட்டை அளியுங்கள்: அன்பானவரை மரணத்தில் இழந்த நபர் தான் அதிகத்தைச் செய்திருக்கலாம் என்பதாக ஒருவேளை யோசித்து முதலில் குற்றமுள்ளவராக உணரக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள். அவர் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறார் என்ற உறுதியை அளியுங்கள் (அல்லது நீங்கள் அறிந்த உண்மையான மற்றும் நம்பிக்கையான மற்றவற்றைக் குறிப்பிடுங்கள்). அவருடைய உணர்ச்சிகள் கொஞ்சம்கூட அசாதாரணமானவையல்ல என்பதாக அவருக்கு உறுதியளியுங்கள். இதுபோன்ற இழப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவந்திருக்கிற உங்களுக்குத் தெரிந்த வேறுசிலரைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், எளிதில் புரிந்துகொள்கிறவராகவும் அனுதாபப்படுகிறவராகவும் இருங்கள். நம்முடைய தயவான உதவி அதிகத்தை அர்த்தப்படுத்தக்கூடும்! சாலொமோன் எழுதினார்: “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.”—நீதிமொழிகள் 16:24; 25:11; 1 தெசலோனிக்கேயர் 5:11, 14.
13. நாம் சென்று பார்ப்பவர்களாக இருந்தால், அது எவ்விதமாக உதவிசெய்யும்?
13 சென்று பார்ப்பவராயிருங்கள்: அநேக நண்பர்களும் உறவினர்களும் இருக்கிற முதல் சில நாட்களுக்கு மட்டுமே அல்ல, மற்றவர்கள் தங்களுடைய வழக்கமான வேலைகளுக்குத் திரும்பிய சில மாதங்களுக்குப் பின்பும்கூட நீங்கள் அவர்களைச் சென்று பாருங்கள். துக்கிக்கும் காலம் தனிப்பட்ட நபரைப் பொருத்து வெகுவாக வேறுபடக்கூடும். நம்முடைய கிறிஸ்தவ அக்கறையும் அனுதாபமும் உதவி தேவைப்படும் எந்த ஒரு சமயத்திலும் அதிகத்தை அர்த்தப்படுத்தக்கூடும். “சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பவனுமுண்டு,” என்பதாக பைபிள் சொல்லுகிறது. இதன் காரணமாக “ஆபத்தில் உதவுபவனே உண்மை நண்பன்,” என்ற பழமொழி உலகமறிந்த உண்மையாகும், அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.—நீதிமொழிகள் 18:24; அப்போஸ்தலர் 28:15-ஐ ஒப்பிடுக.
14. அன்பானவரை மரணத்தில் இழந்திருப்பவருக்கு ஆறுதலளிக்க எதைப்பற்றி நாம் பேசலாம்?
14 மரித்துப்போன நபரின் நல்ல பண்புகளைப் பற்றி சரியான சமயத்தில் பேசுங்கள்: இது மற்றொரு பெரிய உதவியாக இருக்கிறது. தனிப்பட்டவரைப் பற்றி உங்கள் நினைவுக்கு வரும் நேர்நிலையான சிறு நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மரித்துப்போன நபரின் தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்த தயங்காதீர்கள். மரித்துப்போன அன்பானவர் ஒருபோதும் வாழ்ந்திருக்கவே இல்லை அல்லது முக்கியமில்லாதவர் என்பது போல பாவனை செய்யாதீர்கள். ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் ஒரு பிரசுரம் சொல்வதை அறிவது ஆறுதலளிப்பதாக உள்ளது: “அன்பானவரை மரணத்தில் இழந்தவர் மரித்தவரைக் குறித்து அளவு மீறிய வருத்தமில்லாமல் நினைத்துப்பார்க்க முடிகிறபோது ஒரு வகையான இயல்பான நிலையை எய்தப்பெறுகிறார் . . . புதிய ஒரு நிஜ நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜீரணிக்கப்படுகிறது, உயர்வாக மதித்துப் போற்றப்படும் நினைவுகளுக்குள் துக்கம் மறைந்துவிடுகிறது.” ‘உயர்வாக மதித்துப் போற்றப்படும் நினைவுகள்’—அன்பான ஒருவருடன் செலவிடப்பட்ட அந்த அருமையான சமயங்களை நினைவுபடுத்திப் பார்ப்பது எவ்வளவு ஆறுதலளிப்பதாக இருக்கிறது! ஒருசில ஆண்டுகளுக்கு முன்பாக தன் அப்பாவை இழந்த ஒரு சாட்சி சொன்னார்: “விசேஷமாக எனக்கு நினைவில் இருப்பது என் அப்பா சத்தியத்தைப் படிக்க ஆரம்பித்த உடனேயே அவரோடு பைபிளைப் படித்த அந்தச் சமயமாக இருக்கிறது. ஓர் ஆற்றுப்படுகையில் படுத்துக்கொண்டு என்னுடைய ஒருசில பிரச்சினைகளைக் கலந்துபேசியதும் விசேஷமாக நினைவில் இருக்கிறது. நான் அவரை ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே பார்த்தேன், ஆகவே அந்தச் சமயங்கள் மிகவும் அருமையானவையாக இருந்தன.”
15. உதவிசெய்ய எவ்விதமாக ஒருவர் முன்வரமுடியும்?
15 பொருத்தமாக இருக்கையில் உதவிசெய்ய முன்வாருங்கள்: துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சில ஆட்கள் மற்றவர்களைவிட மேம்பட்ட விதமாக சமாளிக்க முடியும். ஆகவே, சூழ்நிலைமைகளைப் பொருத்து, உதவிசெய்ய நடைமுறையான படிகளை எடுங்கள். துக்கத்திலிருந்த ஒரு கிறிஸ்தவப் பெண் நினைவுபடுத்திச் சொல்வதாவது: “‘நான் செய்யயக்கூடியது ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்,’ என்று அநேகர் சொன்னார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவ சகோதரி கேட்கவில்லை. அவள் நேராக படுக்கையறைக்கே சென்று, படுக்கை உறையை கழற்றினாள், மேலும் அழுக்காயிருந்த படுக்கை விரிப்புகளை சலவைசெய்தாள். வேறொருவர் ஒரு பக்கெட், தண்ணீர், துவைப்பதற்கு வேண்டிய பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று, என்னுடைய கணவர் வாந்திபண்ணியிருந்த ஜமுக்காளத்தை துவைக்க ஆரம்பித்தார். இவர்கள் உண்மையான நண்பர்கள், நான் அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்.” உதவி தேவையாக இருப்பது தெளிவாக இருக்கையில் அதைச் செய்ய முன்வாருங்கள்—ஒருவேளை சாப்பாடு தயாரிப்பது, சுத்தம் செய்ய உதவிசெய்வது அல்லது சிறிய வேலைகளைச் செய்வது ஆகியவற்றின் மூலமாக. நிச்சயமாகவே அன்பானவரை மரணத்தில் இழந்தவர் தனிமையை விரும்புகையில் நாம் தலையிட்டு தொந்தரவு செய்யாதபடி கவனமாக இருக்கவேண்டும். இவ்விதமாக, நாம் பவுலின் வார்த்தைகளை உண்மையாகவே பின்பற்ற முயற்சிசெய்ய வேண்டும்: “ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும், பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்”கொள்ளுங்கள். தயவு, பொறுமை மற்றும் அன்பு ஒருபோதும் ஒழியாது.—கொலோசெயர் 3:12; 1 கொரிந்தியர் 13:4-8.
16. ஒரு கடிதம் அல்லது கார்டு ஏன் ஆறுதலளிக்க முடியும்?
16 ஒரு கடிதம் எழுதுங்கள் அல்லது ஆறுதலான வார்த்தைகளையுடைய கார்டு அனுப்புங்கள்: பெரும்பாலும் கவனிக்கத் தவறிவிடுவதானது, இரங்கல் கடிதம் அல்லது அழகான அனுதாப கார்டு அனுப்புவதன் மதிப்பாகும். அதனால் வரும் பயன்? அதைத் திரும்பத்திரும்ப வாசிக்க முடியும். இப்படிப்பட்ட ஒரு கடிதம் நீளமாக இருக்கவேண்டியதில்லை, ஆனால் அது உங்கள் இரக்கத்தைக் காண்பிக்க வேண்டும். அது ஆவிக்குரிய ஒரு தோரணையில் இருக்க வேண்டும், ஆனால் பிரசங்கம் செய்வது போல இருக்கக்கூடாது. “உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்,” என்ற அடிப்படை செய்திமட்டுமே ஆறுதலாக இருக்கக்கூடும்.
17. ஜெபம் எவ்விதமாக ஆறுதலைக் கொண்டுவர முடியும்?
17 அவர்களோடு சேர்ந்து ஜெபியுங்கள்: அன்பானவரை மரணத்தில் இழந்தவரோடும் அவருக்காகவும் செய்கிற உங்களுடைய ஜெபங்களின் மதிப்பைக் குறைவாக மதிப்பிடாதிருங்கள். யாக்கோபு 5:16-ல் பைபிள் சொல்கிறது: “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” உதாரணமாக, அன்பானவரை மரணத்தில் இழந்தவர்கள் அவர்களுடைய சார்பாக நாம் ஜெபிப்பதைக் கேட்கும்போது, அது குற்றவுணர்வு போன்ற எதிர்மறையான உணர்ச்சியை சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது. நாம் பலவீனமாக, உள்ளத்தில் உரம் குறைந்தவர்களாக இருக்கும் சமயங்களில், சாத்தான் அவனுடைய ‘சூழ்ச்சிகளால்’ அல்லது ‘தந்திரங்களால்’ நமக்கு தீங்குசெய்ய முயற்சி செய்கிறான். இப்போதுதானே நமக்கு ஆறுதலும் பவுல் குறிப்பிட்டபடி ஜெபத்தின் ஆதரவும் தேவையாக இருக்கிறது: ‘எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணுங்கள். அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.’—எபேசியர் 6:11, 18, கிங்டம் இன்டர்லீனியர்; யாக்கோபு 5:13-15-ஐ ஒப்பிடுக.
என்ன தவிர்க்க வேண்டும்
18, 19. நம்முடைய சம்பாஷணைகளில் நாம் எவ்விதமாக சாதுரியத்தைக் காண்பிக்கலாம்?
18 ஒரு நபர் துக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், செய்யக்கூடாத அல்லது சொல்லக்கூடாத காரியங்களும்கூட இருக்கின்றன. நீதிமொழிகள் 12:18 எச்சரிக்கிறது: “பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.” சிலசமயங்களில் நாம் அதை உணராமலே, சாதுரியத்தைக் காண்பிக்கத் தவறிவிடுகிறோம். உதாரணமாக, “உங்களுக்கு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்,” என்பதாக நாம் ஒருவேளை சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியுமா? சரியாக அதேமாதிரியான இழப்பை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? அப்போதும்கூட, மக்கள் வித்தியாசமாக பிரதிபலிக்கிறார்கள். உங்களுடைய பிரதிபலிப்புகள் துக்கப்படும் நபருடையதைப் போலவே இல்லாமல் இருந்திருக்கலாம். “நான் உண்மையில் உங்களுக்காக அனுதாபப்படுகிறேன், ஏனென்றால் கொஞ்ச காலத்துக்கு முன்பாக என்னுடைய . . . மரித்தபோது இதேபோன்ற ஒரு இழப்பை நான் அனுபவித்தேன்,” என்பதாகச் சொல்வது உணர்ச்சிகளை அதிகமாக புரிந்துபேசும் காரியமாக இருக்கலாம்.”
19 மரித்துப்போனவர் உயிர்த்தெழுப்பப்படுவாரா மாட்டாரா என்பதைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பதும்கூட மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதைக் காண்பிக்கும். மரித்துப்போன அவிசுவாசியான துணைவரின் எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி சொல்லப்பட்ட தீர்ப்புக்குரிய கருத்தினால் ஒருசில சகோதரர்களும் சகோதரிகளும் வெகுவாக புண்பட்டிருக்கின்றனர். யார் உயிர்த்தெழுப்பப்படுவர் அல்லது யார் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார் என்பதைத் தீர்க்கும் நியாயாதிபதிகள் நாம் அல்லர். இருதயத்தைப் பார்க்கும் யெகோவா, நம்மில் பெரும்பாலானவர்கள் எக்காலத்திலும் இருப்பதைவிட மிக அதிகமாக இரக்கமுள்ளவராக இருப்பார் என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.—சங்கீதம் 86:15; லூக்கா 6:35-37.
ஆறுதலளிக்கும் வசனங்கள்
20, 21. அன்பானவரை மரணத்தில் இழந்தவரைத் தேற்றும் ஒருசில வசனங்கள் யாவை?
20 அன்பானவரை மரணத்தில் இழந்தவர்களுக்கு சரியான சமயத்தில் அளிக்கப்படுகையில் மிகப் பெரிய உதவிகளில் ஒன்றாக இருப்பது மரித்தோருக்கான யெகோவாவின் வாக்குறுதிகளைச் சிந்திப்பதாகும். பைபிள்பூர்வமான இந்தக் கருத்துக்கள் அன்பானவரை இழந்த நபர் ஏற்கெனவே சாட்சியாக இருந்தாலும் சரி அல்லது ஊழியத்தில் நாம் சந்திக்கும் நபராக இருந்தாலும் சரி, இவை பிரயோஜனமாக இருக்கும். இந்த வசனங்களில் சில யாவை? யெகோவா சகலவிதமான ஆறுதலின் தேவன் என்பது நமக்குத் தெரியும், ஏனென்றால் அவர் சொன்னார்: “நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.” மேலும் அவர் சொன்னார்: “ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.”—ஏசாயா 51:12; 66:13.
21 சங்கீதக்காரன் எழுதினார்: “அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.” அந்தப் பகுதிகளில் “ஆறுதல்” என்ற வார்த்தை திரும்பத்திரும்ப பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். ஆம், நமக்கு வேதனையாக இருக்கும் சமயத்தில் யெகோவாவின் வார்த்தைக்கு கவனத்தைத் திருப்புவதன் மூலம் நமக்கும் மற்றவர்களுக்கும் உண்மையான ஆறுதலைக் கண்டடையலாம். இதுவும், சகோதரர்களின் அன்பும் கருணையும் சேர்ந்து, இழப்பினால் ஏற்பட்ட வேதனைகளை வெற்றிகரமாக சமாளிக்க நமக்கு உதவிசெய்து நம்முடைய வாழ்க்கையை மறுபடியுமாக கிறிஸ்தவ ஊழியத்தில் சந்தோஷமுள்ள வேலைகளால் நிரப்பிடமுடியும்.—சங்கீதம் 119:50, 52, 76.
22. நமக்கு முன்னால் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது?
22 மற்றவர்களுக்கு அவர்களுடைய துயரத்தில் சுறுசுறுப்பாக உதவிசெய்வதன் மூலமாக நம்முடைய துக்கத்தையும்கூட நாம் ஓரளவு மேற்கொள்ள முடியும். ஆறுதல் தேவைப்படுகிற மற்றவர்களிடமாக நம்முடைய கவனத்தைத் திருப்புகையில், ஆவிக்குரிய கருத்தில் கொடுப்பதால் வரும் உண்மையான சந்தோஷத்தையும் நாம் பெற்றுக்கொள்கிறோம். (அப்போஸ்தலர் 20:35) முந்தைய சகல ஜாதிகளையும் சேர்ந்த மக்கள், தலைமுறைக்குப் பின் தலைமுறையாக மரித்தோரிலிருந்து தங்களுடைய அன்பானவர்களை ஒரு புதிய உலகிற்குள் வரவேற்கும் உயிர்த்தெழுதல் நாளின் காட்சியை அவர்களோடு பகிர்ந்துகொள்வோமாக. என்னே ஒரு எதிர்பார்ப்பு! யெகோவா உண்மையிலேயே “சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன்” என்பதை நினைவுகூரும்போது என்னே ஓர் ஆனந்தக் கண்ணீர்!—2 கொரிந்தியர் 7:6.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவா எவ்விதமாக ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாக’ இருக்கிறார்?
◻ துக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இயேசுவும் பவுலும் எவ்விதமாக ஆறுதலளித்தனர்?
◻ துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்ய நாம் செய்யக்கூடிய சில காரியங்கள் யாவை?
◻ அன்பானவரை மரணத்தில் இழந்தவரோடு செயல்தொடர்பு கொள்ளும்போது, நாம் தவிர்க்கவேண்டியது என்ன?
◻ இழப்பின் சமயத்தில் ஆறுதலுக்காக நீங்கள் விரும்பும் வசனங்கள் யாவை?
[பக்கம் 15-ன் படம்]
துக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய சாதுரியமாக முன்வாருங்கள்