உலகெங்கிலும் யெகோவாவின் சாட்சிகள்
ஸ்வீடன்ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்து, ஆர்க்டிக் வட்டம்வரை பரந்துள்ளது ஸ்வீடன். பசுமைமாறாக் காடுகளால் மூடியிருப்பதற்கும் அதோடுகூட ஏரிகளுக்கும் மலைகளுக்கும் அது உலகப் பெயர்பெற்றது. ஜன நெருக்கடியற்ற ஐரோப்பிய நாடுகளுள் ஸ்வீடனும் ஒன்றாகும். ஆயினும், யெகோவாவின் சாட்சிகள் 1800-களின் பிற்பகுதியிலிருந்து சத்தியத்தை நேசிப்பவர்களை வெற்றிகரமாக தேடிக் கண்டுபிடித்துள்ளனர். சமீப உதாரணம் ஒன்றை கவனியுங்கள்.
சாட்சிகளோடு ஒரு பெண் பைபிளைப் படித்தார்கள், ஆனால் இதை அவர்களுடைய கணவர் விரும்பவில்லை. படிப்பதை நிறுத்திவிடும்படி தன் மனைவியிடம் சொன்னார், அவர்களும் நிறுத்திவிட்டார்கள். இந்த மனிதர், சாராய ஆலை உற்பத்தி பொருட்களின் கிடங்கு ஒன்றில் வேலை பார்த்தார். ஒரு நாள் டிரக் டிரைவர் ஒருவர், தன்னுடைய பத்து வயது பேரனோடு கிடங்குக்கு வந்தார். வண்டியில் சாமான்களை ஏற்றும்போது தாத்தா இந்த மனிதரிடம் பேரனை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பேச்சுக் கொடுக்க வேண்டுமே என்பதற்காக, அவனுடைய போன பிறந்த நாளின்போது, என்ன பரிசுகளைப் பெற்று கொண்டான் என்று சிறுவனிடம் அந்த மனிதர் கேட்டார். அந்த மனிதர் ஆச்சரியமடையும் விதத்தில், தானும் தன் குடும்பமும் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதால், பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என்று சிறுவன் கூறினான். மேலும் அந்தச் சிறுவன் தான் மிகவும் கனிவும் அன்பும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பதால், வருடத்தின் மற்ற சமயங்களில் பரிசுகளைப் பெற்றுக்கொள்வதாகவும் அதனால் எதையோ இழந்துவிட்டதைப்போன்று உணரவில்லை என்பதாகவும் கூறினான். அதற்கு இணையாக எத்தகைய பரிசுகளும் தகுதியுடையவை அல்ல என்றும்கூட சொன்னான்.
அந்தச் சிறுவன் தன் தாத்தாவுடன் அநேக தரம் மீண்டும் வந்தான். ஒவ்வொரு முறையும் சிறுவனிடத்தில் நிறைய கேள்விகளை அந்த மனிதர் கேட்பார், எந்தவித தயக்கமுமின்றி சிறுவன் கொடுத்த நேர்மையான, சுற்றி வளைக்காத பதில்களால் மிகவும் கவரப்பட்டார். உண்மையான நியமங்களின் பேரில் சிறுவனுக்கிருந்த மதித்துணருதலாலும் கவரப்பட்டார். உலகிலுள்ள அவல நிலைமைகளைக் காட்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை ஒரு இரவில் பார்த்தபின், ஆன்மீக காரியங்களை மிகவும் கருத்தூன்றி ஆராய வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். தன் மனைவியோடு படித்த சாட்சிக்கு ஃபோன் செய்து, மீண்டும் வருமாறு கேட்டுக்கொண்டார். விரைவிலேயே தானும் சாட்சி ஒருவருடன் படித்து, வேகமான முன்னேற்றங்களைச் செய்தார். ஏப்ரல் 10, 1994-ல் முழுக்காட்டப்பட்டார். அவருடைய மனைவியும்கூட இப்பொழுது முழுக்காட்டப்பட்டவராக இருக்கிறார்.
அதிகரிப்பு கட்டடத்தைத் தேவைப்படுத்துகிறது
மற்ற தேசங்களிலிருந்து வரும் அநேக அகதிகளுக்கும்கூட ஸ்வீடன் இல்லமாகத் திகழ்கிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சாட்சிகள், அவர்களுக்குப் பிரசங்கிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர். பொதுவாகவே பிரசங்கிக்கும் வேலை அவ்வளவு வெற்றிகரமாக இருப்பதால், அதிகரிப்பைச் சமாளிக்க புதிய ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன. விரைவாக கட்டும் முறையின் மூலம், 1986-லிருந்து 1993 வரை 37 ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன, அதே சமயத்தில், 8 மன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. 1994-ல் மட்டும் கூடுதலாக ஏழு ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன, மூன்று புதுப்பிக்கப்பட்டன.
தற்போது 65 சபைகள் புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்படவோ தற்போது உள்ளதை விரிவுபடுத்தவோ புதுப்பிக்கப்படவோ உதவியை நாடி காத்திருக்கின்றன. அத்தகைய கட்டும் திட்டத்தில் சுமார் 2,500 வாலண்டியர்கள் உதவுகின்றனர், அவர்களுடைய அன்பான உதவியைச் சபைகள் மிகவும் போற்றுகின்றன.
ஆர்க்டிக் வட்டம்வரை பரந்துள்ள ஸ்வீடனின் வடபகுதி, சில சமயங்களில் நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், அங்கு கோடைகாலத்தின்போது அடிவானத்திற்குக்கீழே சூரியன் அஸ்தமிப்பதேயில்லை. அவ்விதமே, ஸ்வீடன் முழுவதும் சத்தியத்தின் வெளிச்சமும் தொடர்ந்து பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. யெகோவாவின் ஆசீர்வாதங்களால், ஆவிக்குரிய வெளிச்சம் மங்கவே மங்காது, மாறாக தொடர்ந்து பிரகாசித்துக்கொண்டே இருக்கும்.
[பக்கம் 8-ன் பெட்டி]
நாட்டுத் தகவல்கள்
1994 ஊழிய ஆண்டு
சாட்சிகொடுப்பவர்களின் உச்ச எண்ணிக்கை: 24,246
விகிதம்: 1 சாட்சிக்கு 362
நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர்: 40,372
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 2,509
சராசரி பைபிள் படிப்புகள்: 11,306
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 850
சபைகளின் எண்ணிக்கை: 358
கிளை அலுவலகம்: அர்போகா
[பக்கம் 9-ன் படம்]
அர்போகாவில் உள்ள கிளை அலுவலகம் மற்றும் பெத்தேல் வீடு
[பக்கம் 9-ன் படம்]
ஹிஜோவில் ஆரம்பகால சாட்சிகள் சுமார் 5,000 சதுர கிலோமீட்டர் பிராந்தியத்தைச் செய்து முடிக்க மினிபஸ்ஸை உபயோகித்தனர்