“சந்தோஷமாய் துதிப்போர்” மாநாடு—நீங்கள் அங்கு இருப்பீர்களா?
சந்தோஷம்! அந்தச் சொல் இந்தக் குழப்பம்-நிறைந்த காலத்தில் விநோதமாய்த் தொனிக்கிறதா? நிச்சயமாகவே செய்தித்தாள்கள் நம்மைச் சந்தோஷப்படுத்துவதற்கு அநேக காரணங்களைக் கொடுப்பதில்லை. இனப்பிரிவுகளுக்கிடையே போர்கள், பரவலாய் காணப்படும் பட்டினி, வேலையின்மை, அபாயகரமான தூய்மைக்கேடு, அரசியலின் நிலையற்றத்தன்மை, குற்றச்செயல்—இவை இருதயத்தைச் சந்தோஷத்தினால் நிரப்பும் காரியங்களாக இல்லை அல்லவா?
இன்று அநேக ஜனங்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கக்கூடிய எல்லா இன்பத்தையும் பறித்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் சந்தோஷம்? சந்தோஷம், “மகிழ்ச்சியான நிலை; களிகூருதல்” என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. அநேக ஜனங்கள் மெய்யான மகிழ்ச்சியை அனுபவிக்கிறதில்லை, அப்படி அனுபவித்தாலும், அது பெரும்பாலும் தற்காலிகமானதே.
இருப்பினும், நம்முடைய நாளை ஆவலோடு எதிர்பார்த்து, பைபிள் இவ்விதமாக முன்னறிவித்தது: “ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ! என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள். இதோ என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்.” (ஏசாயா 65: 13, 14) அது எப்படி இருக்கமுடியும்?
பதிலைக் கண்டுபிடிப்பதற்கு, 1995-ல் நடக்கவிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடுகள் ஒன்றுக்கு ஆஜராகும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். அந்த மாநாட்டின் பொருள் “சந்தோஷமாய் துதிப்போர்,” அனுமதி இலவசம். பைபிளை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகள், நடிப்புகள், கலந்தாலோசிப்புகள் ஆகியவை அந்த மூன்று-நாள் மாநாட்டு நிகழ்ச்சிநிரலில் இடம்பெறும். நிகழ்ச்சிநிரல் முழுவதும், சந்தோஷம் என்ற பொருளின் பேரில் விஷயங்கள் சிறப்பித்துக்காட்டப்படும்.
மாநாடுகள் ஜூன் மாதத்தில் ஐக்கிய மாகாணங்களில் ஆரம்பித்து, உலகமுழுவதுமுள்ள நகரங்களில் 1996-ன் ஆரம்பம் வரை தொடர்ந்து நடைபெறும். நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகாமையில் ஒரு மாநாடு நடைபெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. உங்களுடைய பிராந்தியத்தில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளை நீங்கள் ஏன் கேட்கக்கூடாது? நீங்கள் அங்கு இருக்கும்படி நாங்கள் உங்களை அன்போடு அழைக்கிறோம்.