மகிழ்ச்சியுடன் யெகோவாவைச் சேவித்தல்
“மகிழ்ச்சியோடே யெகோவாவைச் சேவியுங்கள்; ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.”—சங்கீதம் 100:2, தி.மொ.
1, 2. (எ) ஜாதிபேத கொள்கை எவ்வாறு பெர்லின், ஜெர்மனியில் முன்கொண்டுவரப்பட்டது, ஆனால் “ஆயிர-ஆண்டு நாஜி குடியரசு”க்கான துணிகரப் போராட்டம் எவ்வாறு முடிந்தது? (பி) 1936-ல் நடந்ததற்கு எதிர்மாறான எது ஜூலை 1990-ல் ஒலிம்பிக் விளையாட்டரங்கத்தில் கவனிக்கப்பட்டது, அங்கே கூடியிருந்த சர்வதேசக் குழுவின் மகிழ்ச்சி எதில் ஆதாரங்கொண்டுள்ளது?
இந்தக் காட்சி பெர்லினுள்ள ஒலிம்பியா விளையாட்டரங்கம். ஐம்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன், நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், நான்கு பொற்பதக்கங்களைக் கெலித்துப் பெற்ற கறுப்பு அமெரிக்க பந்தய ஓட்டக்காரன் ஒருவனை இழிந்து மட்டந்தட்டினானென சொல்லப்பட்டபோது இந்தச் சிறந்த விளையாட்டரங்கம் வாக்குவாதப் போராட்டத்துக்குரிய ஒரு மையமாயிற்று. நிச்சயமாகவே அது “ஆரியரே உயர்ந்தவர்”a என்ற ஹிட்லரின் ஜாதிபேத உரிமைபாராட்டலுக்கு ஒரு மட்டந்தட்டுதலாயிருந்தது! ஆனால் இப்பொழுது, ஜூலை 26, 1990 அன்று, கறுப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர்—64 தேசீய தொகுதிகளிலிருந்து வந்த ஒற்றுமைப்பட்ட ஒரு ஜனம் மொத்தம் 44,532 பேர்கள்—யெகோவாவின் சாட்சிகளின் “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டுக் கூட்டத்துக்கு இங்கே கூடியிருந்தனர். அந்த வியாழக்கிழமை பிற்பகலில் எத்தகைய மகிழ்ச்சி பொங்கிவழிகிறது! முழுக்காட்டுதலின்பேரில் கொடுக்கப்பட்ட பேச்சுக்குப்பின், முழுக்காட்டப்பட வந்த 1,018 நபர்கள் யெகோவா தேவனின் சித்தத்தைச் செய்யும்படி தாங்கள் ஒப்புக்கொடுத்திருப்பதற்கு உறுதிகூறுவோராய் “ஜா!” மறுபடியும் “ஜா!” என சத்தமிட்டுச் சொல்கின்றனர்.
2 இந்தப் புதிய சாட்சிகள் தாங்கள் முழுக்காட்டப்படப்போகும் நீர்த்தேக்க இடத்துக்குப் போகும்படி ஒருவர்பின் ஒருவராய் வரிசையாக அரங்கத்திலிருந்து வெளிச் செல்ல 19 நிமிடங்கள் எடுக்கின்றன. இந்த நிமிடங்களின்போதெல்லாம், இடிமுழக்கம்போன்ற ஆரவார கைகொட்டுதல் அந்த மிகப் பரந்த வட்டரங்கு முழுவதிலும் எதிரொலித்து முழங்குகிறது. பல தேசத்தவரின் தொகுதிகளிலிருந்து வந்து, உலகத்தை ஜெயிக்கும் விசுவாசத்தைக் காட்டுகிற இந்த நூற்றுக்கணக்கானோரை இப்பொழுது வரவேற்கும் இத்தகைய கைகொட்டுதலை ஒலிம்பிக் பந்தய விளையாட்டுகளில் வெற்றிப்பெற்றோர் ஒருபோதும் அனுபவித்ததில்லை. (1 யோவான் 5:3, 4) கிறிஸ்துவினால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சி நிச்சயமாகவே ஆயிர ஆண்டுகள் மகிமையான ஆசீர்வாதங்களை மனிதவர்க்கத்துக்குக் கொண்டுவருமென்ற திடநம்பிக்கையில் அவர்களுடைய மகிழ்ச்சி உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.—எபிரெயர் 6:17, 18; வெளிப்படுத்துதல் 20:6; 21:4, 5.
3. அந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களின் திடநம்பிக்கையால் என்ன சத்தியம் அறிவுறுத்தப்படுகிறது, எவ்வாறு?
3 ஜாதி அல்லது தேசாபிமான பகைகள் இங்கே இல்லை, ஏனெனில் எல்லாரும் கடவுளுடைய வார்த்தையின் சுத்தமான பாஷையைப் பேசுகின்றனர், இவ்வாறு பேதுருவின் பின்வரும் வார்த்தைகளின் சத்தியத்தை அறிவுறுத்துகின்றனர்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35; செப்பனியா 3:9.
4. இந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பான்மையர் என்ன நிலைமைகளின்கீழ் விசுவாசிகளானார்கள், அவர்களுடைய ஜெபங்கள் எவ்வாறு பதிலளிக்கப்பட்டன?
4 பெர்லினில் இந்த மாநாட்டுக்கு வந்திருப்போரின் ஒரு பெரும் பகுதியினர், நாஜி சகாப்தமும் (1933-45) கிழக்கு ஜெர்மனியில் அதைப் பின்தொடர்ந்த பொதுவுடைமையாட்சி சகாப்தமும் அடங்கிய, கொடுங்கோன்மைக்குரிய நீண்ட ஆண்டுகளின்போது விசுவாசிகளானவர்கள். கிழக்கு ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளின்மீது போடப்பட்ட தடையுத்தரவு இப்போதுதான் மார்ச் 14, 1990 அன்று சட்டப்பூர்வமாய் நீக்கப்பட்டது. ஆகவே, அவர்களில் பலர் “மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்ட”வர்கள். (1 தெசலோனிக்கேயர் 1:6) யெகோவாவைச் சேவிக்க அவர்களுக்கு இப்பொழுது அதிக சுயாதீனம் உண்டு, அவர்களுடைய மகிழ்ச்சிக்கு வரம்பே இல்லை.—ஏசாயா 51:11-ஐ ஒத்துப் பாருங்கள்.
மகிழ்ச்சிக்குரிய சந்தர்ப்பங்கள்
5. சிவந்த சமுத்திரத்தில் யெகோவா தங்களை விடுதலைசெய்ததை இஸ்ரவேலர் எவ்வாறு கொண்டாடினர்?
5 கிழக்கு ஐரோப்பாவிலும், தற்போது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பாகங்களிலும் நம்முடைய சகோதரர் விடுதலைசெய்யப்பட்டது, முற்காலங்களில் யெகோவா செய்த விடுதலைகளைப்பற்றி நமக்கு நினைப்பூட்டுகிறது. சிவந்த சமுத்திரத்தில் யெகோவாவின் வல்லமை மிகுந்த செயலையும், இஸ்ரவேலின் நன்றிசெலுத்தும் பாட்டு பின்வரும் வார்த்தைகளில் உச்சநிலையை எட்டிய முறையையும் நாம் நினைவுகூருகிறோம்: “யெகோவாவே, தேவர்களில் உமக்கு நிகரானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே, பயத்தோடு துதிக்கப்படத்தக்கவரே, அற்புதங்களைச் செய்கிறவரே, உமக்கு நிகரானவர் யார்?” (யாத்திராகமம் 15:11, தி.மொ.) இன்று, யெகோவா தம்முடைய ஜனத்துக்காகச் செய்துகொண்டிருக்கும் அற்புதமான காரியங்களில் நாம் தொடர்ந்து களிகூருகிறோமல்லவா? நிச்சயமாகவே களிகூருகிறோம்!
6. பொ.ச.மு. 537-ல் இஸ்ரவேலர் ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 பாபிலோனின் சிறையிருப்புக்குப் பின் இஸ்ரவேல் ஜனம் பொ.ச.மு. 537-ல் அதன் நாட்டுக்குத் திரும்பிவரச் செய்யப்பட்டபோது மகிழ்ச்சி பெருகியோடியது. ஏசாயா பின்வருமாறு தீர்க்கதரிசனம் சொன்னதுபோல், யெகோவாவின் ஜனம் இப்பொழுது சொல்ல முடியும்: “இதோ, கடவுளே என் இரட்சிப்பு; நான் நம்பிப் பயப்படாதிருப்பேன்; ஆண்டவராகிய யெகோவாவே என் பலம், என் ஸ்தோத்திரப்பாட்டு; அவரே எனக்கு ரட்சிப்பானார்.” எத்தகைய பெரும் மகிழ்ச்சி! அந்த ஜனம் இந்த மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டும்? ஏசாயா மேலும் தொடர்ந்து கூறுகிறான்: “அக்காலத்திலே நீங்கள் பாடி: யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருநாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய திருச்செயல்களை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய திருநாமமே உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள். யெகோவாவைத் துதித்துப் பாடுங்கள்; அவர் மகத்துவமானவைகளைச் செய்தார்; . . . என்பீர்கள்.” இன்று யெகோவாவின் விடுவிக்கப்பட்ட ஊழியர்கள் செய்வதுபோலவே, அவர்கள் இப்பொழுது அவருடைய மகத்துவமான செயல்களை ‘பூமியெங்கும் அறிவிப்பதில்’ “ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரி”க்க முடிந்தது.—ஏசாயா 12:1-6, தி.மொ.
யெகோவாவின் ஊழியத்தில் மகிழ்ச்சி
7. 1919-ல் என்ன விடுதலைகள் மகிழ்ந்துகளிகூரச் செய்தன?
7 தற்காலங்களில் யெகோவாவின் ஊழியர்கள், 1919-ல் அவர் தங்களுக்கு அற்புதமான விடுதலையை அளித்தபோது மகிழ்ச்சியுடன் சத்தமிட்டு ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். அந்த ஆண்டின் மார்ச் 26 அன்று, நிர்வாகக் குழுவின் உறுப்பினர், ராஜத்துரோகப் பொய்க் குற்றச்சாட்டுகளின்பேரில் ஒன்பது மாதங்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஐக்கிய மாகாணங்களின் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களைப் புரூக்லின் பெத்தேலுக்குத் திரும்ப வரவேற்பதில் எத்தகைய ஆரவாரமான கொண்டாட்டம் நடந்தேறிற்று! மேலும், அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரைச் சேர்ந்த யாவரும், சாத்தான் முழு உலகத்தையும் அதன் கண்ணியில் சிக்கவைத்திருக்கிற மத ஒழுங்குமுறையாகிய மகா பாபிலோனிலிருந்து ஆவிக்குரியபிரகாரமாய் விடுதலைசெய்யப்பட்டதில் இப்பொழுது மகிழ்ந்துகளிகூர முடிந்தது.—வெளிப்படுத்துதல் 17:3-6; 18:2-5.
8. 1919-ல் சீடர் பாய்ன்ட் மாநாட்டில் என்ன எதிர்பாரா வெளியீடு அறிவிக்கப்பட்டது, என்ன வேலையில் ஈடுபடும்படியான அழைப்பு கொடுக்கப்பட்டது?
8 1919-ன் இந்தச் சரித்திர முன்னேற்றங்கள், அ.ஐ.மா., சீடர் பாய்ன்ட், ஒஹையோவில், செப்டம்பர் 1-8-ல் நடத்தப்பட்ட கடவுளுடைய ஜனங்களின் மாநாட்டில் உச்ச மகிழ்ச்சிநிலையை அடைந்தன. அந்த மாநாட்டின் ஐந்தாம் நாளாகிய, “உடன்-உழைப்பாளர்களின் நாள்,” அன்று, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முதல்வராகிய J. F. ரதர்ஃபர்ட், “ராஜ்யத்தை அறிவித்தல்” என்ற தலைப்பைக்கொண்ட உணர்ச்சிதூண்டும் பேச்சைக் கூடியிருந்த 6,000 பேருக்குக் கொடுத்தார். வெளிப்படுத்துதல் 15:2-ஐயும் ஏசாயா 52:7-ஐயும் தர்க்கித்துப் பேசினபின், பொற் சகாப்தம் (இப்பொழுது அவேக்! என்றறியப்படுகிறது) என்ற ஒரு புதிய பத்திரிகை, முக்கியமாய் வெளி-ஊழிய விநியோகத்துக்காக, இரண்டுவாரங்களுக்கு ஒருமுறை பிரசுரிக்கப்படும் என்று தனக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்குக் கூறினார். முடிவில் அவர் சொன்னதாவது: “கர்த்தருக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்திருப்போர்; பயமற்றிருப்போர், தங்கள் இருதயத்தில் சுத்தமாயுள்ளோர், கடவுளையும் கர்த்தராகிய இயேசுவையும் தங்கள் முழு மனதுடனும், பலத்துடனும், ஆத்துமாவுடனும் உயிருடனும் நேசிப்போர், வாய்ப்பு கிடைக்கிறபடி, இந்த ஊழியத்தில் பங்குகொள்வதில் மகிழ்ந்துகளிகூருவார்கள். கர்த்தர் உங்களை உண்மையும், நேர்மையும், திறமையுமுள்ள ஸ்தானாபதியாக்கும்படி, அவருடைய வழிகாட்டுதலுக்காகவும் நடத்துதலுக்காகவும் அவரிடம் கேளுங்கள். பின்பு, உங்கள் இருதயத்தில் மகிழ்ச்சிக்குரிய பாட்டுடன், அவரைச் சேவிக்கச் செல்லுங்கள்.”
9, 10. உவாட்ச்டவர் மற்றும் அவேக்! பத்திரிகைகளின் பிரசுரிப்பை யெகோவா எவ்வாறு முன்னேற்றமடைய செய்திருக்கிறார்?
9 அந்த “மகிழ்ச்சிக்குரிய பாட்டு” பூமி முழுவதிலும் கேட்கப்பட்டிருக்கிறது! அவேக்! (விழித்தெழு!) பத்திரிகையைத் தற்போது ஒவ்வொரு வெளியீடும் 64 மொழிகளில் 1,29,80,000 பிரதிகள் பரவலாக விநியோகிக்கப்படும் அளவுக்கு உயர்த்துவதில், எங்கள் வாசகர்களில் பலர் பங்குகொண்டனர் என்பதில் சந்தேகமில்லை. அக்கறைகாட்டும் ஆட்களைச் சத்தியத்துக்கு வழிநடத்துவதில் வல்லமைவாய்ந்த ஒரு கருவியாக, அவேக்! பத்திரிகை உவாட்ச்டவர் (காவற்கோபுரம்) பத்திரிகையுடன் சேர்ந்தியங்கும் ஒன்றாகச் சேவிக்கிறது. கிழக்கத்திய நாடு ஒன்றில், ஒரு பயனியர் சகோதரி, வழக்கமான பத்திரிகை மார்க்க ஊழியத்தில் ஈடுபடுகையில், தான் புதிய பத்திரிகைகள் கொண்டுசென்று கொடுக்கும் ஒவ்வொரு சமயத்திலும், அந்த வீட்டுக்காரர், யெகோவாவின் சாட்சிகளின் உலகமெங்கும் செய்யப்படும் ஊழியத்துக்காக 7 டாலர்கள் (ரூ.119/-) நன்கொடையளித்ததைக் குறித்து ஆச்சரியப்பட்டாள்—நிச்சயமாகவே ராஜ்ய ஊழியத்துக்குச் சிறந்த நன்றியுணர்வைக் காட்டுவதாகும்!
10 இப்பொழுது அதன் பிரசுரத்தின் 112-வது ஆண்டைத் தொடங்குவதாய், உவாட்ச்டவர் பத்திரிகை 111 மொழிகளில் 1,52,90,000 பிரதிகள் பரவலான விநியோகிப்பைக் கொண்டுள்ளது, இவற்றில் 59 பதிப்புகள் ஒரே பொருளடக்கத்துடன் ஒரேசமயத்தில் உலகமெங்கும் வெளிப்படுகின்றன. உண்மையுள்ள விசாரணைக்காரனாக, அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் மதித்துணர்வுள்ள வாசகருக்கு “ஏற்ற வேளையில் [ஆவிக்குரிய உணவு] படியளப்பைத்” தொடர்ந்து கொடுத்துவருகின்றனர். (லூக்கா 12:42) 1990-ம் ஆண்டின்போது யெகோவாவின் சாட்சிகள் இந்த இரண்டு பத்திரிகைகளுக்கும் 29,68,309 புதிய சந்தாக்கள் பெற்றனரென அறிவிப்பு செய்தனர், இது 1989-ம் ஆண்டுக்குமேல் 22.7-சதவீத அதிகரிப்பாகும்.
மகிழ்ச்சி பொங்குகிறது
11. (எ) 1922-ல் சீடர் பாய்ன்ட்டில் கடவுளுடைய ஜனங்களுக்கு என்ன அழைப்பு கொடுக்கப்பட்டது? (பி) மகிழ்ச்சியின் ஆரவார சத்தம் எவ்வாறு பரவச்செய்யப்பட்டிருக்கிறது?
11 செப்டம்பர் 1922-ல், சீடர் பாய்ன்ட்டில் இரண்டாவது மாநாட்டுக்குக் கடவுளுடைய ஜனங்கள், இப்பொழுது 10,000 பேர்கள் கூடிவந்து, 361 பேர் முழுக்காட்டப்பட்டபோது மகிழ்ச்சி பெருகிப்பொங்கினது. மத்தேயு 4:17-ஐ ஆதாரமாகக் கொண்டு, “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்ற தன்னுடைய பேச்சில், சகோதரர் ரதர்ஃபர்ட் படிப்படியாகப் பின்வரும் உச்சநிலைக்கு வழிநடத்தினார்: “யெகோவாவே கடவுள் என்றும் இயேசு கிறிஸ்து ராஜாதிராஜா கர்த்தாதி கர்த்தா என்றும் இந்த உலகம் அறியவேண்டும். இதுவே எல்லாநாட்களிலும் மேம்பட்ட அந்த நாள். இதோ பாருங்கள், அரசர் ஆட்சிசெய்கிறார்! நீங்கள் அவருடைய செய்திபரப்பும் பிரதிநிதிகள். ஆகையால், அரசரையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்.” இந்த மாநாட்டில் எழும்பின மகிழ்ச்சி ஆரவார அறிவிப்பில் பங்குகொண்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வந்தது. 1989-ல் உலகமெங்கும் நடத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் 1,210 மாநாடுகளில் 66,00,000-த்துக்கு மேற்பட்டவர்கள் கூடிவந்தனர், அங்கே 1,23,688 பேர்கள் முழுக்காட்டப்பட்டனர்.
12. (எ) விலை மதிப்பிடமுடியாத என்ன மகிழ்ச்சியில் இன்று கடவுளுடைய ஜனங்கள் பங்குகொள்கின்றனர்? (பி) யெகோவாவுக்குச் செய்யும் நம்முடைய சேவையை “மேலான அதிகாரங்களுக்குக்” கீழ்ப்படிவதோடு நாம் எவ்வாறு சரிநிலைப்படுத்துகிறோம்?
12 யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சுயாதீனத்தை வெகுவாய் மதித்துப் பாராட்டுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் பின்வரும் கூற்றின் தற்கால நிறைவேற்றத்தில் அவர்கள் களிகூருகின்றனர்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” பொய் மதத்தின் புதிர்நிலைகளிலிருந்தும் குருட்டு நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலையாக்கப்பட்டிருப்பது எத்தகைய மகிழ்ச்சியாயுள்ளது! யெகோவாவையும் அவருடைய குமாரனையும் அறிவதும் அவர்களோடு உடன்வேலையாட்களாவதும், நித்திய ஜீவனின் எதிர்பார்ப்புடனிருப்பதும் மதிப்பிடமுடியாத எத்தகைய மகிழ்ச்சியாயுள்ளது! (யோவான் 8:32; 17:3; 1 கொரிந்தியர் 3:9-11) மேலும் கடவுளுடைய ஊழியர்கள், கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள யெகோவாவின் ராஜ்யத்தைப்பற்றிய மகிமையான நம்பிக்கையை யாவரறிய அறிவிக்கும் தங்கள் சுயாதீனத்தை, தாங்கள் கீழ்ப்பட்டு வாழும் இவ்வுலகத்தின் “மேலான அதிகாரங்கள்,” மதிக்கையிலும் நன்றியுள்ளோராயிருக்கின்றனர். அவர்கள் மனப்பூர்வமாய் “இராயனுடையதை இராயனுக்குச் செலுத்து”கிறார்கள், அதே சமயத்தில் “தேவனுடையதைத் தேவனுக்குச்” செலுத்துகிறார்கள்.—ரோமர் 13:1-7; லூக்கா 20:25.
13. கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலைசெய்யப்பட்டதில் தங்கள் மகிழ்ச்சியை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றனர்?
13 எனினும், மனித அதிகாரங்கள் கடவுளுக்குச் செலுத்தவேண்டிய இந்தக் கடமையைத் தடைசெய்ய முயற்சி செய்கையில், யெகோவாவின் சாட்சிகள், அப்போஸ்தலர் பின்வருமாறு சொன்னதுபோல் பதில் சொல்கிறார்கள்: நாங்கள் “மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் [அரசராக, NW] கடவுளுக்கே கீழ்ப்படியவேண்டும்.” அந்தச் சந்தர்ப்பத்தில், அந்த அதிபதிகள் அப்போஸ்தலரை விடுதலைசெய்தப்பின், இவர்கள் “ஆலோசனைச் சங்கத்தை விட்டுப்போய் . . . சந்தோஷப்பட்டார்கள்.” அந்த மகிழ்ச்சியை அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்கள்? “தினந்தினம் தெய்வாலயத்திலும் வீடுகள்தோறும் இடைவிடாமல் உபதேசஞ்செய்து கிறிஸ்துவாகிய இயேசுவை நற்செய்தியாகப் பிரசங்கித்துவந்தார்கள்.” (அப்போஸ்தலர் 5:27-32, 41, 42, தி.மொ.) அவ்வாறே, யெகோவாவின் தற்கால சாட்சிகளும் தங்கள் ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு மேலுமதிக சுயாதீனத்தைப் பெறுகையில் களிகூருகிறார்கள். யெகோவா வழிதிறந்துள்ள பல நாடுகளில், யெகோவாவின் பெயருக்கும் கிறிஸ்து இயேசுவினால் ஆளப்படும் நெருங்கிவந்துகொண்டிருக்கும் ராஜ்யத்துக்கும் முழுமையான சாட்சி கொடுப்பதால் தங்கள் ஆர்வமிக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.—அப்போஸ்தலர் 20:20, 21, 24; 23:11; 28:16, 23 ஒப்பிடவும்.
மகிழ்ச்சியுடன் சகித்திருத்தல்
14. ஆவியின் கனியாகிய இந்த மகிழ்ச்சி, எவ்வாறு அகராதி பொருள்விளக்கம் அளித்துள்ள மகிழ்ச்சியைப் பார்க்கிலும் மிக மேம்படுகிறது?
14 உண்மையான கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் இந்த உச்ச அளவான மகிழ்ச்சி என்ன? ஒலிம்பிக் பந்தய விளையாட்டுகளில் வெற்றிபெறும் ஒருவனின் விரைவில் மறைகிற மகிழ்ச்சியைப் பார்க்கிலும் இது மிக அதிக ஆழமாயும் நீடித்து நிலைத்திருப்பதாயும் இருக்கிறது. இது கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஒரு கனியாகும், கடவுள் இதை அரசராகத் “தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக்” கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 5:32) மகிழ்ச்சி என்பதை ‘அகக்களிப்பைப் பார்க்கிலும் ஆழமாய்-வேரூன்றியதெனவும், இன்பநிலையைப் பார்க்கிலும் அதிகக் கதிர்வீசுவதாயும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுவதாயும் இருக்கிறதெனவும்’ உவெப்ஸ்டர்ஸ் அகராதி பொருள்விளக்கம் அளிக்கிறது. கிறிஸ்தவனுக்கு மகிழ்ச்சி என்பது அவற்றைப் பார்க்கிலும் மிக ஆழ்ந்த பொருளுடையதாயுள்ளது. அது நம்முடைய விசுவாசத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதால், வல்லமைவாய்ந்த, மற்றும் மனதுக்குத் திடமூட்டும் பண்பாகும். “யெகோவாவினால் வரும் மகிழ்ச்சியே உங்கள் பலம்.” (நெகேமியா 8:10, தி.மொ.) கடவுளுடைய ஜனங்கள் இருதயத்தில் வளர்க்கும், யெகோவாவினால் வரும் மகிழ்ச்சி, மாம்சப்படியான, உலகப்பிரகார இன்பங்களிலிருந்து ஆட்கள் பெறும் ஆழமற்ற மேற்போக்கான மனக்கிளர்ச்சிக்குமேல் மிக அதிகமாய் எல்லைக்கடந்து மேம்படுகிறது.—கலாத்தியர் 5:19-23.
15. (எ) உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் அனுபவத்தில் சகிப்புத்தன்மை எவ்வாறு மகிழ்ச்சியுடன் சேர்ந்தியங்கியிருக்கிறது? (பி) மகிழ்ச்சியைக் காத்துவருவதைக் குறித்து பலப்படுத்தும் நிச்சயத்தைக் கொடுக்கும் வேதவசனங்கள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.
15 யூக்ரேனில் இருக்கும் நம்முடைய சகோதரரைக் கவனியுங்கள். 1950-க்குரிய பத்தாண்டுகளின் தொடக்கப் பகுதியில் ‘மேலான அதிகாரம்’ இவர்களில் ஆயிரக்கணக்கானோரை நாடுகடத்தல் தீர்ப்பளித்து சைபீரியாவுக்கு அனுப்பினபோது, அவர்கள் மிகுந்த இன்னல்களை அனுபவித்தனர். பின்னால், அந்த அதிகாரம் அவர்களுக்குப் பொது மன்னிப்பு அளித்தபோது, அவர்கள் நன்றியுடையோராயிருந்தனர், ஆனால் அவர்கள் எல்லாரும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பவில்லை. ஏன்? கிழக்கில் அவர்களுடைய உழைப்புகள் யாக்கோபு 1:2-4-லுள்ள பின்வரும் இதை அவர்களுக்கு நினைப்பூட்டிற்று: “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” அந்த மகிழ்ச்சிநிறைந்த அறுப்புவேலையில் அவர்கள் தொடர்ந்து பொறுமையோடு நிலைத்திருக்கும்படி விரும்பினார்கள், சமீபத்தில் போலந்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளின் மாநாடுகளில் பஸிபிக் கடற்கரையோர சமுதாயங்களாகத் தொலைதூரக் கிழக்கிலிருந்து சாட்சிகளை வரவேற்றது எத்தகைய மகிழ்ச்சியாயிருந்தது. சகிப்புத்தன்மையும் மகிழ்ச்சியும் ஒன்றிணைந்துசென்று இந்தப் பலனை விளைவித்தது. நிச்சயமாகவே, யெகோவாவின் சேவையில் மகிழ்ச்சியுடன் சகித்து நிலைத்திருக்கும் நாமெல்லாரும் பின்வருமாறு சொல்லலாம்: “நான் யெகோவாவுக்குள் மகிழ்ந்திருப்பேன், என் ரட்சிப்பின் கடவுளுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய யெகோவா என் பலம்.”—ஆபகூக் 3:18, 19, தி.மொ.; மத்தேயு 5:11, 12.
16. எரேமியாவின் மற்றும் யோபின் ஊக்கமூட்டும் சிறந்த முன்மாதிரிகள் எவ்வாறு நம்மை வெளி-ஊழியத்தில் ஊக்கப்படுத்தவேண்டும்?
16 எனினும், கடின மனமுள்ள எதிரிகளுக்குள் சாட்சி பகருகையில் நாம் நம்முடைய மகிழ்ச்சியை எவ்வாறு காத்துக்கொள்ள முடியும்? கடவுளுடைய தீர்க்கதரிசிகள் இதைப்போன்ற சூழ்நிலைமைகளில் மகிழ்ச்சியுள்ள மனப்பான்மையைக் காத்துக்கொண்டதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். எரேமியா கடும் சோதனையின்கீழ் இருக்கையில் பின்வருமாறு கூறினான்: “உமது வார்த்தைகள் கிடைத்தவுடனே அவை என் ஆகாரமாயிற்று, உமது வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிற்று; சேனைகளின் கடவுளாகிய யெகோவாவே, உமது திருநாமம் எனக்கு வழங்குகிறதே.” (எரேமியா 15:16, தி.மொ.) யெகோவாவின் பெயரால் அழைக்கப்பட்டிருப்பதும் அந்தப் பெயருக்குச் சாட்சி பகருவதும் எத்தகைய சிலாக்கியம்! நம்முடைய சோரா முயற்சியுள்ள தனிப்பட்ட படிப்பும் கிறிஸ்தவக் கூட்டங்களில் முழு பங்குகொள்ளுதலும் சத்தியத்தில் தொடர்ந்து மகிழ்ந்து களிகூர்ந்துகொண்டிருக்க நம்மைக் கட்டியெழுப்புகின்றன. நம்முடைய மகிழ்ச்சி, வெளி ஊழியத்தில் நம்முடைய நடத்தைப் போக்கிலும் நம்முடைய ராஜ்ய புன்சிரிப்பிலும் தன்னை வெளிப்படுத்தும். கடுமையான சோதனையின்கீழும், யோபு தன் எதிரிகளைக் குறித்து: “நான் சிரித்திடத் தம் தைரியம் இழப்பார், என் முகக்களையை மாற்றுந்திறம் அவர்க்கிலை,” என்று சொல்லமுடிந்தது. (யோபு 29:24, தி.மொ.) உண்மையுள்ள யோபுவைப்போல், நாமும், எதிரிகள் நம்மை ஏளனம் செய்கையில் முகவாட்டமடைய வேண்டியதில்லை. தொடர்ந்து புன்சிரிப்புடனிருங்கள்! நம்முடைய முகத்தோற்றம் நம் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும், ஆகவே மற்றவர்கள் செவிகொடுத்துக் கேட்கும்படி செய்ய முடியும்.
17. மகிழ்ச்சியுடன் சகித்துநிலைத்திருத்தல் எவ்வாறு பலன் தரும்?
17 பிராந்தியத்தில் நாம் திரும்பத் திரும்ப ஊழியஞ்செய்து வருகையில், நம்முடைய பொறுமையும் மகிழ்ச்சியும் நீதியிடம் மனச்சாய்வுள்ள ஆட்களின் மனதைக் கவர்ந்து, நாம் கொண்டுள்ள அந்த மகிமையான நம்பிக்கையை ஆராய்ந்து பார்க்கும்படி அவர்களுக்கு ஊக்கமூட்டலாம். அவர்களுடன் ஒழுங்காகத் தொடர்ந்த முறையில் பைபிள் படிப்புகளை நடத்துவது எத்தகைய மகிழ்ச்சி தரும்! கடவுளுடைய வார்த்தையின் விலைமதியா சத்தியங்களை அவர்கள் தங்கள் இருதயத்துக்குள் ஏற்றுவருகையிலும், முடிவாக யெகோவாவின் சேவையில் நம்முடைய உடன்தோழர்களாகையிலும் எத்தகைய மகிழ்ச்சியை நாம் உணருகிறோம்! அப்பொழுது நாம், அப்போஸ்தலன் பவுல் தன் நாளிலிருந்த புதிய விசுவாசிகளிடம் பின்வருமாறு சொன்னதுபோல் சொல்ல முடியும்: “நமது ஆண்டவராகிய இயேசு வருகையில் அவருக்குமுன் எங்களுக்கு நன்னம்பிக்கையும் சந்தோஷமும் பெருமை பாராட்டும் கிரீடமுமாயிருக்கிறவர்கள் யார்? நீங்கள்தான் அல்லவா? ஆம், நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.” (1 தெசலோனிக்கேயர் 2:19, 20, தி.மொ.) கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்துக்குப் புதியவர்களை வழிநடத்துவதிலும் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாகும்படி அவர்களுக்கு உதவிசெய்வதிலும் நிச்சயமாகவே, திருப்திதரும் மகிழ்ச்சியைக் கண்டடையலாம்.
தளராமல் தொடரச்செய்யும் மகிழ்ச்சி
18. தற்கால பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க எது நமக்கு உதவிசெய்யும்?
18 நம்முடைய அனுதின வாழ்க்கையில், பல சந்தர்ப்பங்கள் சகிப்புத்தன்மையைத் தேவைப்படுத்தலாம். உடல் நோய், மனச்சோர்வு, மற்றும் பொருளாதார நெருக்கடி இவற்றில் ஒருசிலவே. இத்தகைய துன்ப அனுபவங்களைச் சமாளிக்க கிறிஸ்தவன் எவ்வாறு தன் மகிழ்ச்சியை இழக்காமல் காத்துக்கொள்ள முடியும்? ஆறுதலுக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் கடவுளுடைய வார்த்தையினிடம் செல்வதன்மூலம் அவ்வாறு செய்யலாம். சங்கீதங்களை வாசிப்பது அல்லது அவை வாசிக்கப்படுவதைச் செவிகொடுத்துக் கேட்பது துன்ப சமயத்தில் வெகுவாய் ஊக்கமூட்டி ஆறுதலளிக்கும். மேலும் தாவீதின் பின்வரும் ஞானமான அறிவுரையைக் கவனியுங்கள்: “யெகோவாவின்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22, தி.மொ.) யெகோவா நிச்சயமாகவே “ஜெபத்தைக் கேட்கிறவர்.”—சங்கீதம் 65:2.
19. தாவீதைப் போலவும் பவுலைப் போலவும் நாம் என்ன உறுதியுடன் இருக்கலாம்?
19 நாமிருக்கிறபடி நலிந்த மானிடராகிய நமக்கு, நம்முடைய பிரச்னைகளோடு போராடி வெல்ல, யெகோவாவின் அமைப்பு, அதன் பிரசுரங்களின்மூலமும் அதன் சபை மூப்பர்களின் மூலமும் உதவிசெய்ய எப்பொழுதும் ஆயத்தமாய் நிற்கிறது. தாவீது பின்வருமாறு அன்புடன் அறிவுரை கொடுக்கிறான்: “உன் வழியை யெகோவாவுக்கு ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” அவன் மேலும் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், நீதிமான் கைவிடப்பட்டதையும் அவன் சந்ததி பிச்சையெடுத்துப் பிழைக்கிறதையும் நான் காணவில்லை.” கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவில், “நீதிமான்கள் ரட்சிப்போ யெகோவாவினால் வரும், இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்” என்பதை நாம் தெளிவாய் உணருவோம். (சங்கீதம் 37:5, 25, 39, தி.மொ.) பவுலின் பின்வரும் அறிவுரையை நாம் எப்பொழுதும் பின்பற்றுவோமாக: “ஆனபடியினாலே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; . . . காணப்படுகிறவைகளையல்ல காணப்படாதவைகளையே நாம் நோக்கியிருக்கிறோம்; ஏனெனில் காணப்படுகிறவை அநித்தியம், காணப்படாதவையோ நித்தியம்.”—2 கொரிந்தியர் 4:16-18, தி.மொ.
20. விசுவாசக் கண்களால் நாம் எதைக் காண்கிறோம், இது எவ்வாறு நம்மை உந்துவிக்கிறது?
20 யெகோவாவின் புதிய ஒழுங்குமுறை எதிரில்தானே இருப்பதை நம்முடைய விசுவாசக் கண்களால் நாம் காண்கிறோம். ஒப்பற்ற எத்தகைய மகிழ்ச்சிகளும் ஆசீர்வாதங்களும் அங்கிருக்கும்! (சங்கீதம் 37:34; 72:1, 7; 145:16) அந்த மகிமையான காலத்துக்காக ஆயத்தம் செய்பவர்களாய், சங்கீதம் 100:2-ன் இவ்வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுப்போமாக: “மகிழ்ச்சியோடே யெகோவாவைச் சேவியுங்கள்; ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.” (w91 1⁄1)
[அடிக்குறிப்புகள்]
a “ஆரியரே உயர்ந்தவர்,” என்பதைக் குறித்து, பிப்ரவரி 17, 1940-ன் தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை, ஜியார்ஜ்டெளன் சர்வகலாசாலையின் கத்தோலிக்க முதுகலைஞர், “ஜெர்மானிய பேரரசாயிருந்த பரிசுத்த ரோம பேரரசு, கட்டாயமாகத் திரும்ப ஸ்தாபிக்கப்படவேண்டுமென அடால்ஃப் ஹிட்லர் சொன்னதைத் தான் கேட்டாரென்று” சொன்னதாக மேற்கோள் எடுத்துக் குறிப்பிட்டது. ஆனால் சரித்திராசிரியன் உவில்லியம் L. ஷரர் முடிவைப் பின்வருமாறு விவரிக்கிறார்: “ஜனவரி 30, 1933-ல் தொடக்கங்கொண்ட மூன்றாவது நாஜி ஜெர்மன் குடியரசு, ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருக்குமென ஹிட்லர் தற்பெருமை பாராட்டினான், மேலும் நாஜி பேச்சுப்பாங்கில் அது “ஆயிர-ஆண்டு நாஜி குடியரசு” என அடிக்கடி குறிப்பிடப்பட்டது. அது பன்னிரண்டு ஆண்டுகளும் நான்கு மாதங்களுமே நீடித்திருந்தது.”
திரும்பக் கவனித்தல்:
◻ ஜாதிபேதக் கொள்கையை வென்ற என்ன மகிழ்ச்சியான வெற்றி இன்று காணப்படுகிறது?
◻ கடவுளுடைய பூர்வ ஜனம் பாடி மகிழ்ச்சி ஆரவார சத்தமிட செய்வித்தது எது?
◻ தற்காலங்களில் உண்மையான மகிழ்ச்சி எவ்வாறு பெருகியிருக்கிறது?
◻ எவ்வாறு சகிப்புத்தன்மையும் மகிழ்ச்சியும் ஒன்றிணைந்து செல்கின்றன?
◻ எந்த வழிவகைகளால் நாம் நம்முடைய மகிழ்ச்சியைத் தொடர்ந்து காத்துவரலாம்?