உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 5/1 பக். 4-7
  • விரைவில், எவருமே ஏழையாக இரார்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விரைவில், எவருமே ஏழையாக இரார்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏழைகளுக்கு உதவி
  • ஏழ்மையை சமாளிக்க உதவி
  • ஏழ்மையற்ற நிலை—இறுதியில்!
  • வறுமைக்கு விடிவு விரைவில்
    விழித்தெழு!—1998
  • இயேசுவைப் போல் ஏழைகள்மீது அக்கறை காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • வறுமையே இல்லாத உலகம் அருகில்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • வறுமை நிரந்தர தீர்வு காணுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 5/1 பக். 4-7

விரைவில், எவருமே ஏழையாக இரார்!

“பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” (லூக்கா 2:10) இயேசு பிறந்த இரவன்று பெத்லகேமுக்கு அருகே இருந்த ஆச்சரியமடைந்த மேய்ப்பர்கள் இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளைக் கேட்டனர். அந்த அறிவிப்புக்கு இசைவாக, இயேசு தம் பூமிக்குரிய ஊழியத்தின்போது ‘நற்செய்திக்கு’ அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இன்று, நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக நாம் பணத்தின்மீது அதிகமாக சார்ந்திருப்பதால், இயேசுவைப் பற்றிய நற்செய்தி நமக்கு எவ்வாறு பயனளிக்கக்கூடும்?

இயேசு கிறிஸ்து “தரித்திரருக்குச் சுவிசேஷத்தை” அறிவித்தார். (லூக்கா 4:18) மத்தேயு 9:35-ன் பிரகாரம், ‘இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.’ அவருடைய செய்தி ஏழ்மையால் பீடிக்கப்பட்டிருந்தவர்களுக்கு விசேஷமாக ஊக்கமூட்டுவதாயிருந்தது. “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி”னார். (மத்தேயு 9:36) “தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்,” என்று இயேசு சொன்னது உண்மைதான், ஆனால் தேவையில் இருப்பவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று நாம் இந்த வார்த்தைகளிலிருந்து முடிவுக்கு வரக்கூடாது. (யோவான் 12:8) இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை நீடித்திருக்கும் வரை ஏழை மக்கள் இருப்பார்கள், அவர்களுடைய நிலைமைக்குக் காரணம் என்னவாக இருந்தாலும் அப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள். ஏழ்மையின் மெய்ம்மையை கடவுளுடைய வார்த்தை அசட்டை செய்வதில்லை, ஆனால் அது எதிர்மறையான அம்சங்களின் பேரில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மாறாக, வாழ்க்கையின் கவலைகளைச் சமாளிப்பதற்கு ஏழைகளுக்கு அது உதவி அளிக்கிறது.

ஏழைகளுக்கு உதவி

குறிப்பிடத்தக்கவிதத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “தன் மீது எவரும் அக்கறை காட்டுவதில்லை அல்லது புரிந்துகொள்வதில்லை என்று ஒரு தனிப்பட்ட நபர் அறிந்திருப்பதனால் வரும் பாரத்தை சுமப்பதைக் காட்டிலும் வேறு எதுவும் பெரிதாக இருக்கமுடியாது.” என்றபோதிலும், பெரும்பான்மையர் இரக்கம் காண்பிக்க தவறியபோதிலும், ஏழைகளுக்கு இன்னும் நற்செய்தி இருக்கிறது—தற்போதும் எதிர்காலத்திலும்.

வருந்தத்தக்கவகையில், ஏழைகளுக்கு உதவி செய்வதில் அநேகருக்குக் குறைவான அக்கறையே உள்ளது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியாவின்படி, “சமுதாயத்தில் உள்ள மக்கள் பிழைப்புக்காக போட்டியிடுகின்றனர் . . . மேல்நிலையிலுள்ள நபர்கள் வல்லமைவாய்ந்தவர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகின்றனர்.” டார்வினின் சமூக கோட்பாடு என்றழைக்கப்படும் இந்தக் கொள்கையை நம்புபவர்கள், ஏழைகளை வெறுமனே சோம்பேறியான ஜனங்கள் அல்லது வீண்செலவாளிகள் என்று எண்ணலாம். இருப்பினும், கிராமப்புற தொழிலாளிகள், இடம் விட்டு இடம் செல்லும் வேலையாட்கள், இன்னும் மற்றவர்கள், குறைவான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டாலும், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிப்பதற்காக பெரும்பாலும் அதிக கடினமாக உழைக்கின்றனர்.

அநேக தேசங்களில் ஏழ்மை சர்வசாதாரணமாயிருக்கிறது. எனவே பெரும்பான்மையாயிருக்கும் ஏழைகள் தாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்று உணர வைக்கப்படுவதில்லை. இருப்பினும், அப்படிப்பட்ட தேசங்களில் ஏழ்மையின் மத்தியில் பெரும் செழுமையில் வாழும் மக்கள் இருக்கின்றனர். நெருக்கடியான, சுகாதாரமற்ற குடிசைகளின் பக்கத்தில் வசதியான, அதிக பணம் செலவழித்து கட்டப்பட்ட வீடுகள் இருக்கின்றன. ஏழ்மையான மற்றும் வேலையில்லாத மக்கள் நிரம்பிய தெருக்களில், அதிக ஊதியம் பெறும் ஆண்கள் தங்கள் விலையுயர்ந்த கார்களை ஓட்டிச்செல்கின்றனர். அப்படிப்பட்ட தேசங்களில் உள்ள ஏழைகள் தங்கள் நிலையைக் குறித்து அதிக வருத்தமாக உணருகின்றனர். உண்மையில், “ஊட்டச்சத்துக் குறைவு, மோசமான வீடு, போதாத மருத்துவக் கவனிப்பு போன்றவற்றால் மட்டுமல்லாமல், தங்கள் நிலையைக் குறித்து எப்போதும் கவலைப்படுவதாலும்கூட கஷ்டப்படுகின்றனர்,” என்று தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. “நல்ல வேலைகள் கிடைத்து அதில் தொடர்ந்திருக்க முடியாமல், அவர்கள் கண்ணிய உணர்வு மற்றும் சுய-மரியாதையை எல்லாம் இழந்து விடுகின்றனர்.” அப்படியென்றால் அதிக ஏழைகளாயிருக்கும் சிலர் எவ்வாறு தங்கள் நிலைமையை சமாளிக்கின்றனர்? இந்நிலையை சமாளிப்பதற்கும் இயேசுவைப் பற்றிய நற்செய்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

ஞானமற்ற பழக்கங்களால் ஏழ்மை மோசமாக்கப்படலாம் என்பதை முதலில் நினைவில் வையுங்கள். சில உதாரணங்களைச் சிந்தித்துப் பாருங்கள். வால்டெசிர் என்பவர், அவருடைய மனைவிக்கும் சிறு பிள்ளைகளுக்கும் உண்பதற்கு குறைவாக இருந்தபோதிலும்கூட, ஒழுக்கயீனமான வாழ்க்கைபாணியை நடத்தி பணத்தை வீணாக செலவழித்ததாக ஒப்புக்கொள்கிறார். அவர் சொல்கிறார்: “எனக்கு வேலை இருந்தபோதிலும், என் குடும்பத்துக்காக என்னிடம் பணம் இருந்ததே இல்லை, ஆனால் எப்போதும் என் பாக்கெட்டில் பலவிதமான லாட்டரி சீட்டுகள் இருந்தன.” மில்ட்டன் என்பவர் அளவுக்கு மீறி மதுபானம் அருந்தியதாலும் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாலும், 23 வேலையாட்கள் கொண்ட ஒரு வியாபாரத்தை இழந்துவிட்டார். அவர் சொல்கிறார்: “வீட்டுக்குச் செல்லமுடியாமல் தெருவிலே நான் இரவுகளைக் கழித்தேன், என்னால என் குடும்பம் அதிகமாகக் கஷ்டப்பட்டது.”

ஷாவ் என்பவரும்கூட தன் வருமானத்தை தீய பழக்கங்களின் பேரில் வீணாக்கினார். “நான் பல இரவுகளை வீட்டுக்கு வெளியே செலவழித்தேன். நான் சம்பாதித்த பணமெல்லாம் என்னுடைய தீய பழக்கங்களுக்கும் காதல் விவகாரங்களுக்கும் போதவில்லை. நிலைமை சகிக்கமுடியாத அளவுக்கு சென்றது, என் மனைவி என்னை விட்டுப் பிரிந்துபோக விரும்பினாள்.” அவருடைய பண மற்றும் விவாகப் பிரச்சினைகளோடுகூட வேறு பிரச்சினைகளும் இருந்தன. அவர் சொல்கிறார்: “நான் உறவினரோடும் அயலகத்தாரோடும் பிரச்சினைகளைக் கிளப்பினேன், முக்கியமாக வேலை செய்யுமிடத்தில் எனக்கு பிரச்சினைகள் இருந்தன. அதன் காரணமாக நான் எப்போதும் வேலையின்றி இருந்தேன்.” ஜூலியோ என்பவர் போதை மருந்து துர்ப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். என்றபோதிலும், அவர் விளக்குகிறார்: “என்னுடைய போதை மருந்து பழக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு என்னுடைய வருமானம் எப்போதுமே போதுமானதாய் இல்லாததால், போதைப் பொருள் விற்பவராக நான் வேலை செய்ய ஆரம்பித்தேன், அப்போது போதைப் பொருளை வாங்குவதற்கு தேவை இருக்காது.”

எட்டு பிள்ளைகள் அடங்கிய ஒரு ஏழை குடும்பத்தில் வளர்ந்த ஜோஸ் தனக்கென்று எதையாவது கொண்டிருக்க விரும்பினான். தன்னுடைய நிலைமை இன்னும் மோசமடையாது என்ற முடிவுக்கு வந்த பிறகு, மற்ற இளைஞர்களோடு சேர்ந்துகொண்டு அவன் ஜனங்களிடமிருந்து திருட ஆரம்பித்தான். நம்பிக்கையிழந்தவனாய், மற்றொரு இளைஞன் ஹெட்பேங்கர்ஸ் என்ற பெயர்கொண்ட ஒரு கும்பலின் அங்கத்தினராக ஆனான். அவன் விளக்குகிறான்: “எங்களில் அநேகர் அதிக ஏழைகளாய் இருந்தபடியால், பொருட்களை உடைப்பதிலும் ஜனங்களைத் தாக்குவதிலும் நாங்கள் ஒருவிதமான திருப்தியடைந்தோம்.”

இருப்பினும், இன்று இந்த ஆண்களும் அவர்களுடைய குடும்பங்களும் அதிக ஏழ்மை அல்லது கசப்பான மற்றும் வன்ம உணர்ச்சிகள் போன்றவற்றால் இனிமேலும் கஷ்டப்படுவதில்லை. அவர்கள் இனிமேலும் உதவியற்றோ அல்லது நம்பிக்கையற்றோ இருப்பதில்லை. ஏன் அப்படியிருப்பதில்லை? ஏனென்றால் அவர்கள் இயேசு பிரசங்கித்த நற்செய்தியைப் படித்தனர். அவர்கள் பைபிளின் புத்திமதியைப் பொருத்தினர், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் உள்ள அதே போன்ற மனநிலையுடைய நபர்களோடு கூட்டுறவு கொண்டனர். செல்வத்தைப் பற்றியும் ஏழ்மையைப் பற்றியும் அவர்கள் சில அதிமுக்கியமான காரியங்களைக் கற்றுக்கொண்டனர்.

ஏழ்மையை சமாளிக்க உதவி

முதலாவது, பைபிள் நியமங்களைப் பொருத்தினால், ஏழ்மையின் கெட்ட பாதிப்புகளைக் குறைக்கலாம் என்பதை அவர்கள் கற்றுக்கொண்டனர். ஒழுக்கயீனம், குடிபோதை, சூதாட்டம், போதைப் பொருள் துர்ப்பிரயோகம் போன்றவற்றை பைபிள் கண்டனம் செய்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) இப்படிப்பட்ட காரியங்கள் அதிக பணச்செலவை உட்படுத்துபவையாய் இருக்கின்றன. அவை ஒரு செல்வந்தனை ஏழையாகவும், ஒரு ஏழையை அதிக ஏழையாகவும் ஆக்கக்கூடும். இப்படிப்பட்ட தீய பழக்கங்களையும், அவற்றைப் போன்ற மற்றவற்றையும் முழுவதுமாக விட்டுவிடுவது, ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த அதிகத்தைச் செய்கிறது.

இரண்டாவது, செல்வத்தைக் காட்டிலும் அதிமுக்கியமான காரியங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தைகளில் ஒரு சமநிலையான கருத்து சொல்லப்பட்டுள்ளது: “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.” (பிரசங்கி 7:12) ஆம், பணம் தேவையானதுதான். ஆனால் பைபிளை அடிப்படையாகக் கொண்ட ஞானமும், கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய அறிவும் அதைக்காட்டிலும் அதிக பிரயோஜனமுள்ளவை. உண்மையில், ஞானத்தில் குறைவுபடும் ஒருவருக்கு, ஏராளமான பணத்தைக் கொண்டிருப்பது, அதை அதிகக் குறைவாகக் கொண்டிருப்பதைப் போன்றே அத்தனை பாரமாக இருக்கக்கூடும். பைபிள் எழுத்தாளர் ஞானமாக ஜெபித்தார்: “தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.”—நீதிமொழிகள் 30:8, 9.

மூன்றாவது, இயேசு பிரசங்கித்த நற்செய்தியின்படி ஒரு நபர் வாழ்ந்தால், அவர் கைவிடப்பட்டவராக ஒருபோதும் உணரவேண்டிய அவசியமில்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்தச் நற்செய்தி கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது. அந்த செய்தி ‘ராஜ்யத்தினுடைய சுவிசேஷம்’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் நம்முடைய நாளில் குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் அது பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:14) அந்த ராஜ்யத்தில் நம்முடைய நம்பிக்கையை வைத்தோமென்றால் நாம் ஆதரிக்கப்படுவோம் என்று இயேசு நமக்கு சொன்னார். அவர் சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) கடவுள் நவீன கார்களையோ அல்லது மிகவும் ஆடம்பரமான வீடுகளையோ வாக்களிப்பதில்லை. உணவு, உடை போன்ற வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். (மத்தேயு 6:31) ஆனால் இயேசுவின் வாக்கு நம்பத்தக்கது என்று இலட்சக்கணக்கானோர் இன்று சான்றளிக்க முடியும். ஒரு தனிப்பட்ட நபர், அதிக ஏழையான நபரும்கூட ராஜ்யத்தை முதலில் வைத்தால் முழுவதுமாகக் கைவிடப்படுவதில்லை.

நான்காவது, கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது வைக்கும் நபர் பொருளாதாரக் கஷ்டத்தினால் மனக்கசப்படைவதில்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆம், ஒரு ஏழை மனிதன் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் கடவுளைச் சேவித்தார் என்றால், அவர் தன்னுடைய சிருஷ்டிகரோடு ஒரு சிலாக்கியம்வாய்ந்த உறவைக் கொண்டிருப்பார், அவரைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.” (சங்கீதம் 22:24) கூடுதலாக, வாழ்க்கையின் பிரச்சினைகளைக் கையாளுவதில் ஒரு ஏழை நபருக்கு உதவி கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அவர் உடன் கிறிஸ்தவர்களோடு அனலான தோழமையை அனுபவிக்கிறார், யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தைப் பற்றி அறிவும் அதில் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட காரியங்கள் “பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்க”தாயிருக்கிறது.—சங்கீதம் 19:10.

ஏழ்மையற்ற நிலை—இறுதியில்!

கடைசியாக, யெகோவா தேவன் தம்முடைய ராஜ்யத்தின் மூலம் ஏழ்மை பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்க நோக்கங்கொண்டிருக்கிறார் என்பதை நற்செய்திக்கு செவிகொடுப்பவர்கள் கற்றறிகின்றனர். பைபிள் வாக்களிக்கிறது: “எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.” (சங்கீதம் 9:18) ராஜ்யம் என்பது ஒரு மெய்யான அரசாங்கம், இயேசு கிறிஸ்துவை ஆட்சியாளராகக் கொண்டு பரலோகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த ராஜ்யம் மனித விவகாரங்களை நிர்வகிப்பதற்காக மனித அரசாங்கங்களை நீக்கிவிடும். (தானியேல் 2:44) பின்பு, சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் ராஜாவாக, இயேசு “பலவீனனுக்கும் எளியவனுக்கும் . . . இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:13, 14.

அந்த சமயத்தை எதிர்பார்த்து, மீகா 4:3, 4 சொல்கிறது: “அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.” இங்கு யாரைக் குறித்து பேசப்படுகிறது? கடவுளுடைய ராஜ்யத்துக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துகிற அனைவரைக் குறித்தும் பேசப்படுகிறது. மனிதவர்க்கத்தை அல்லற்படுத்தும்—நோய் மற்றும் மரணம் போன்ற பிரச்சினைகளோடுகூட—எல்லா பிரச்சினைகளையும் அந்த ராஜ்யம் தீர்த்து வைக்கும். ‘அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.’ (ஏசாயா 25:8; 33:24) அது எப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான உலகமாக இருக்கும்! இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களை நாம் நம்பலாம் என்பதை நினைவில் வையுங்கள், ஏனென்றால் அவை கடவுளாலேயே ஏவப்பட்டெழுதப்பட்டவை. அவர் சொல்கிறார்: “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.”—ஏசாயா 32:18.

கடவுளுடைய ராஜ்யத்தின் பேரில் உள்ள நம்பிக்கை, ஏழ்மையினால் பெரும்பாலும் ஏற்படும் சுய-மரியாதை குறைவுபடுதலை மேற்கொள்ளச் செய்கிறது. செல்வந்தராயிருக்கும் ஒரு கிறிஸ்தவர் கடவுளின் கண்களில் எவ்வளவு முக்கியமானவராய் இருக்கிறாரோ அதே போன்று தானும் முக்கியமானவராய் இருக்கிறார் என்பதை ஒரு ஏழையான கிறிஸ்தவரும் அறிந்திருக்கிறார். கடவுள் இருவரையுமே சமமாக நேசிக்கிறார், இருவரும் ஒரே நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர். கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், ஏழ்மை கடந்தகால காரியமாகிவிட்டிருக்கும், அந்தச் சமயத்துக்காக இருவருமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அது எப்பேர்ப்பட்ட ஒரு மகிமையான காலமாக இருக்கும்! இறுதியில், எவருமே ஏழையாக இரார்!

[பக்கம் 5-ன் படம்]

சூதாட்டம், புகைபிடித்தல், குடிபோதை, போதைப் பொருள் துர்ப்பிரயோகம் அல்லது ஒழுக்கயீனமான வாழ்க்கை பாணி ஆகியவற்றில் பணத்தை ஏன் வீணாக்க வேண்டும்?

[பக்கம் 7-ன் படம்]

யெகோவா தேவன் மனிதரின் ஏழ்மை பிரச்சினைகளை தம்முடைய ராஜ்யத்தின் மூலம் தீர்த்துவிடுவார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்