வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கிறிஸ்தவ முழுக்காட்டுதல்களின்போது எத்தகைய மனநிலை காட்டப்பட வேண்டும்?
இது ஆர்வமூட்டும் ஒரு கேள்வி, ஏனென்றால் நம் வாசகருள் அநேகர் ஏற்கெனவே முழுக்காட்டப்பட்டிருப்பினும், முழுக்காட்டப்படுகிறவர்களைப் போன்றே இது அவர்களையும் உட்படுத்துகிறது. முதலாவதாக நாம், முற்றிலும் மூழ்கி முழுக்காட்டுதல் எடுப்பவர்களைக் குறித்து சிந்திப்போம். அவர்களுடைய மனநிலை எப்படியிருக்க வேண்டும்?
மத்தேயு 28:19, 20-ல் இயேசு தம்மைப் பின்பற்றினோரிடம், போய் ஜனங்களுக்குக் கற்பித்து முழுக்காட்டுதல் கொடுத்து அவர்களை சீஷர்களாக்குங்கள் என்று சொன்னார். அவர் முழுக்காட்டுதலை அதிக உணர்ச்சிமிக்க அனுபவமாக, தற்காலிக உணர்ச்சித் தூண்டுதலினால் செய்யப்படும் ஓர் செயலாக விளக்கவில்லை. இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் பார்க்கிறபடி இது ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படியாகும். லூக்கா 3:21 சொல்கிறது: “இயேசுவும் ஞானஸ்நானம் [“முழுக்காட்டுதல்”, NW] பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது.” ஆம், நமக்கு முன்மாதிரியானவர் முழுக்காட்டுதலை ஆழ்ந்த முக்கியத்துவத்துடனும் ஜெபத்துடனும் கருதினார். தண்ணீருக்குள்ளிருந்து வெளியே மேலெழும்பினப் பின், அவர் வெற்றி சைகை ஒன்றை காண்பிப்பதையோ கட்டுக்கடங்கா உணர்ச்சியுடன் வெற்றிக் கூக்குரல் எழுப்புவதையோ பெருமிதத்துடன் கைகளை உயர்த்தி ஆட்டுவது போன்ற சைகைகளை செய்வதையோ நாம் கற்பனை செய்யவே முடியாது. இருப்பினும், சமீப காலங்களில் சிலர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்திருக்கின்றனர். இல்லை, யோவான் ஸ்நானன் மட்டுமே அவரோடிருக்க இயேசு ஜெபத்தில் தம் பிதாவை அணுகினார்.
ஆயினும், முழுக்காட்டுதல் இன்று சில கிறிஸ்தவமண்டல சர்ச்கள் தேவைப்படுத்தியிருப்பது போன்று விசேஷ தோரணையில் நிற்பதையோ அல்லது மனப்பாடமாய் ஓதுவதையோ அவசியப்படுத்தும் சோகமான அல்லது கிளர்ச்சியற்ற நிகழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று பைபிள் காட்டுவதில்லை. ஏன், பெந்தெகொஸ்தே நாளின்போது, ஆயிரக்கணக்கான யூதர்களும், யூதமதம் மாறியவர்களும் கிறிஸ்தவ முழுக்காட்டுதல் எடுத்ததை நினைத்துப்பாருங்களேன். அவர்கள் ஏற்கெனவே கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் படித்து, கடவுளுடன் உறவுக்குள் வந்திருந்தவர்கள். ஆகவே அவர்கள் வெறுமனே மேசியாவாகிய இயேசுவைப்பற்றி கற்றுக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டியது அவசியமாயிருந்தது. அவர்கள் அப்படிச் செய்தார்களேயானால், முழுக்காட்டப்படக்கூடும்.
அப்போஸ்தலர் 2:41 அறிக்கை செய்வதாவது: “அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.” உவேமத் பைபிள் மொழிபெயர்ப்பு வாசிப்பதாவது: “எனவே அவருடைய வார்த்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர்கள் முழுக்காட்டப்பட்டனர்.” மேசியாவைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் செய்தியில் அவர்கள் மகிழ்ச்சி கண்டனர். அந்த மனப்பூர்வமான மகிழ்ச்சி நிச்சயமாக முழுக்காட்டுதலுக்குத்தானே பரவியது. நூற்றுக்கணக்கான சந்தோஷமுள்ள பார்வையாளர்கள் முன் அந்த முழுக்காட்டுதல் நடந்தேறியது. பரலோகத்தில் இருந்த தேவதூதரும்கூட கண்டு களிகூர்ந்தனர். இயேசுவின் பின்வரும் வார்த்தைகளை நினைவுகூருங்கள்: “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 15:10.
முழுக்காட்டுதலின் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த தன்மையையும் மகிழ்ச்சியையும் நாம் ஒவ்வொருவரும் வெளிக்காட்ட அநேக வழிகள் உண்டு. சில சர்ச்களில் முழுக்காட்டப்படுவோர் வெள்ளை அல்லது கருப்பு அங்கிகளை அணிந்து கொள்கின்றனர். இத்தகைய தேவைக்கு எவ்வித வேதப்பூர்வமான ஆதாரமும் இல்லை. இருப்பினும், உடலை அரைகுறையாக மூடும் குளியல் ஆடைகள் ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கோ தகுதியற்றவை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தண்ணீரிலிருந்து வெளியேறிய பிறகு புது கிறிஸ்தவன் ஒரு பெரிய வெற்றியை சாதித்துவிட்டது போல விசேஷ சைகைகள் செய்யவோ நடந்துகொள்ளவோ கூடாது. அந்தப் புதியவர் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டார் என்று மற்ற கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவரும் சந்தோஷப்படுவர். கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய உத்தமமுள்ள நீண்டகால பாதையில், விசுவாசத்தின் இந்த வெளிக்காட்டுதல் ஓர் ஆரம்பப் படியே என்பதை அவர் உணரவேண்டும்.—மத்தேயு 16:24.
நம் உறவினரோ அல்லது நம்முடன் பைபிள் படித்தவரோ முழுக்காட்டப்படுகையில், விசேஷமாக நாம் வெளிப்படையான முழுக்காட்டுதலின் பார்வையாளர்களாக அந்நிகழ்ச்சியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். இருப்பினும், முற்றிலுமாகப் பகிர்ந்துகொள்ள, அந்நபர்களோடு சேர்ந்து நாமும் முழு பேச்சையும் கவனித்துக் கேட்பதும், கேள்விகளுக்கு அவர்கள் அனைவர் முன் பதிலளிப்பதைக் கேட்பதும், ஜெபத்தில் சேர்ந்துகொள்வதும் அவசியம். அப்படிச் செய்வது நிகழ்ந்த அந்த முழுக்காட்டுதலின் பேரில் நாம் சரியான நோக்குநிலையை வைக்க உதவும், அதைக் குறித்து கடவுளுக்கு இருப்பதைப் போன்ற மனநிலை நமக்கு இருக்கும். முழுக்காட்டுதலுக்குப் பிறகு, நம் மகிழ்ச்சி ஒரு வெற்றி அணிவகுப்பையோ, மலர்ச்செண்டையோ, அல்லது முழுக்காட்டப்பட்டவரின் சார்பாக ஒரு விருந்தையோ தேவைப்படுத்துவதில்லை. ஆனால் நம் புதிய சகோதரரையோ அல்லது சகோதரியையோ அவர் எடுத்திருக்கும் அற்புதமான படியைக் குறித்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கவும் நம் கிறிஸ்தவ சகோதரத்துவத்துக்குள் மிகவும் கனிவான நல்வரவை அவருக்கு அளிக்கவும் நாம் அணுகலாம்.
சுருக்கமாக, தண்ணீர் முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் உட்பட, நாம் அனைவரும் முழுக்காட்டுதலை தகுந்த ஆழ்ந்த முக்கியத்துவத்தோடு நடத்துவது அவசியம். பலத்த உணர்ச்சிவசப்பட்ட செயல்களுக்கோ, விருந்து கொடுப்பதற்கோ, ஆரவார சிரிப்பிற்கோ அது நேரமல்ல. ஆனால் அது சோகமான அல்லது கடுகடுப்பான நேரமும் அல்ல. நித்திய ஜீவனுக்குச் செல்லும் பாதையில் புதியவர்கள் நம்முடன் சேர்ந்துகொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைவது சரியானதே. நம் புதிய சகோதர சகோதரிகளுக்கு நாம் மகிழ்ச்சியுடன் நல்வரவு அளிக்கலாம்.