உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 3/15 பக். 21-24
  • எங்களுக்கு ஓய்வுக்காலமே கிடையாது!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எங்களுக்கு ஓய்வுக்காலமே கிடையாது!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • அவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கான காரணம்
  • இணங்கிப்போக மனமுள்ளவராயிருப்பது
  • சுகவீனங்களில் தாங்கியிருப்பது
  • இன்னும் நீடிக்கும் கவலை
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 3/15 பக். 21-24

எங்களுக்கு ஓய்வுக்காலமே கிடையாது!

ஜப்பானில் டோக்கியோவிலிருக்கும் அபூர்வ வீடு ஒன்றை நீங்கள் விஜயஞ்செய்தால், “எங்களுக்கு ஓய்வுக்காலமே கிடையாது” என்ற உணர்வையே பெறுவீர்கள். சராசரி 70 வயதிலுள்ள 22 ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு குடும்பம் அங்கு வாழ்கிறது. அவர்கள் குடும்ப பந்தத்தினால் அல்ல, ஆனால் மிஷனரி சேவை என்ற பொது அக்கறையினால் ஒருமைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மொத்தமாக 1,026 வருடங்கள் முழுநேர பிரசங்க வேலையில் நிலைத்திருந்திருக்கின்றனர்! மிகவும் வயதான மூன்று அங்கத்தினர்கள் 1910-ல் பிறந்தனர். அவர்களில் ஏழு பேர் பருவவயதினராக இருக்கையில் தங்கள் முழுநேர சேவையைத் தொடங்கினர். ஒன்பது பேர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானில் ராஜ்ய-பிரசங்க வேலை தொடங்கியது முதல், அதன் வளர்ச்சியைக் கண்டிருக்கின்றனர்.—ஏசாயா 60:22.

என்றபோதிலும், இந்த முந்தைய ஆறு அடுக்கு மாடி உவாட்ச் டவர் கிளை அலுவலக கட்டடம் உற்சாகத்திற்கான இடமாக இருக்கிறது, விசேஷமாக அங்கு வாழும் மிஷனரிகளின் செல்வாக்குள்ள மனநிலையாகிய ஆவிக்காகவே. பெரும்பான்மையருக்கு வயது மற்றும் சுகவீனம் சம்பந்தமான சரீரப்பிரகார குறைபாடுகள் இருந்தாலும், இந்த ஆவிக்குரிய போர்வீரர்களில் எவரும் சேவையிலிருந்து நீங்கத் தயாராயில்லை. ஜப்பானிய சாட்சிகள் அவர்களுக்காக அந்த முழுக் கட்டடத்தையும் புதுப்பித்திருக்கின்றனர், அடித்தளத்தில் ஒரு ராஜ்ய மன்றத்தையும் லிஃப்ட்டையும் அமைத்துத் தந்திருக்கின்றனர்.

அவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கான காரணம்

இவ்வளவு அநேக ஆண்டுகளாக தங்கள் நியமிப்பில் இருப்பதால், இவ்விடத்தையே அவர்களுடைய வீடாக இந்த மிஷனரிகள் நினைக்கின்றனர். “கடந்த கோடையில் நடந்த மாவட்ட மாநாட்டிற்கு ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பச் சென்றபோது, இரண்டு வாரங்கள் ஆனதும் வீடுவர தயாராயிருந்தேன்!” என்று அக்குடும்பத்திலுள்ள ஒரு மூத்த அங்கத்தினர் சொன்னார். அவர்கள் தாங்கள் உதவுகிற ஜனங்களை நேசிக்கின்றனர், அவர்களிடம் ஆழமான பாசத்தை வளர்த்திருக்கின்றனர். கடந்த நாட்களில் செய்த ஊழிய நடவடிக்கைகளை நினைவுபடுத்தும் கடிதங்களையும் ஃபோனின் மூலம் வரும் அழைப்புகளையும் எல்லா மிஷனரிகளும் மிகவும் போற்றுகின்றனர்.

ஊக்கமான ஊழியத்தின் விளைவு அதுதான். யெகோவாவிலுள்ள அன்பால் நெகிழப்பட்டு, இந்த மிஷனரிகள் வெவ்வேறான சூழ்நிலைமைகளில் கடவுளுடைய வார்த்தையை அவசரத்தன்மையுடன் பிரசங்கித்திருக்கின்றனர். (ஒப்பிடுக: 2 தீமோத்தேயு 4:2, NW.) “யெகோவாவைச் சேவிப்பதால் சந்தோஷமாக இருப்பதற்கு எங்களையே நாங்கள் பயிற்றுவித்துக்கொண்டோம்,” என்று ஜப்பானில் 37 ஆண்டுகளாகச் சேவித்த விரா மக்கே சொல்கிறார். “கதவண்டைக்கு யாரும் வராவிட்டாலும் நாங்கள் யெகோவாவைப் பற்றி சாட்சிபகருவதற்கு அங்கிருந்தோம்.”

இந்த மிஷனரிகளில் பன்னிரண்டு பேர் விவாகமே செய்யவில்லை, ஆனால் கவலையில்லாமல் கர்த்தரைச் சேவிப்பதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். (1 கொரிந்தியர் 7:35) 43 ஆண்டுகளாக மிஷனரியாகச் சேவித்த கிளேடிஸ் கிரெகரி அவர்களில் ஒருவர். அவர் சொல்கிறார்: “யெகோவாவின் சேவைக்காக அதிகமான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதற்கு, நான் பயனியர் வேலையிலும் பின்னர் கிலியடிற்கும் [உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி], அடுத்து மிஷனரி வேலைக்கும் சென்றேன். விவாகமாகாமலிருக்க வேண்டும் என்ற பொருத்தனை எதுவும் செய்யாமல், நான் விவாகமின்றி இருந்திருக்கிறேன், பல நண்பர்களைப்போல அதற்காக மனஸ்தாபப்பட்டதே இல்லை.”

இணங்கிப்போக மனமுள்ளவராயிருப்பது

வயதாக ஆக, சில ஆட்கள் இணங்காதவர்களானாலுங்கூட, மிஷனரிகள் இணங்கிப்போகும் மனமுள்ளவராக இருந்திருக்கின்றனர். லோயஸ் டையர், மாலி ஹேரன், மேலும் லேனா மற்றும் மார்கிரிட் வின்டலரும் டோக்கியோவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், சிறிய மிஷனரி வீடு ஒன்றில் இருந்தனர். அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்ததால் அந்தப் பகுதியிலுள்ள ஜனங்களோடு மிகவும் நட்புறவு கொண்டனர். தங்கள் பிராந்தியங்களில், வின்டலர் சகோதரிகள் 40 பத்திரிகை மார்க்கங்களை வைத்திருந்தனர், மாலிக்கும் லோயஸுக்கும் 74 இருந்தன. பின்னர், டோக்கியோவின் மையப்பகுதியிலுள்ள ஆறு அடுக்கு மாடி மிஷனரி வீட்டிற்குப் போகும்படி சொஸைட்டி அவர்களைக் கேட்டுக்கொண்டது. “முதலில் எனக்கு மனச்சோர்வாகவும் விசனமாகவும் இருந்தது,” என்று லேனா ஒத்துக்கொள்கிறார். என்றபோதிலும், எப்போதும்போல, அவர்கள் தங்களுடைய புதிய நியமிப்பிற்கேற்ப இணக்குவித்துக் கொண்டனர். இப்போது அவர்கள் எவ்வாறு உணருகின்றனர்? “மிகவும் சந்தோஷம். இப்போது இரண்டு பெத்தேல் சகோதரர்கள் சமைப்பதற்கும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கும் எங்களுக்கு இருக்கின்றனர். நாங்கள் நன்கு பராமரிக்கப்படுகிறோம்,” என்று லேனா பதிலளிக்கிறார். அவர்கள் யாவரும் இவ்வாறு சொல்லும் லோயஸோடு ஒப்புக்கொள்கின்றனர்: “யெகோவாவின் அமைப்பு எங்களுக்குக் கொடுக்கும் அன்பான கவனிப்பு, நாங்கள் நிலைத்திருப்பதற்கு உதவுகிறது.”

நோரின் டாம்ஸனும் புதிய சூழ்நிலைமைகளுக்குத் தன்னை இணக்குவித்துக் கொண்டார். “ஜப்பான் முழுவதும் ஒரேவொரு மாவட்டமாக இருக்கையில், 15 ஆண்டுகளாக [நியூ ஜீலாந்தைச் சேர்ந்த] என் கணவனோடு மாவட்ட வேலைக்குச் செல்லும் சிலாக்கியம் பெற்றவளாக இருந்தேன்,” என்று அவர் சொல்கிறார். என்றபோதிலும், அவருடைய கணவனின் உடல்நிலை மோசமானது, இதனால் 18 வருடங்களுக்கு முன்பாகத் தன்னுடைய வாழ்க்கையிலேயே ஒரு பெருஞ்சோதனையை, அவருடைய மரணத்தை அவர் மேற்கொண்டார். “அப்போது, ஜப்பான் முழுவதிலுமுள்ள சகோதரர்கள் காட்டிய அன்பும் அதோடுகூட ஜெபமும் சேவையில் சுறுசுறுப்பாயிருப்பதும் மிஷனரி வேலையில் தொடர்ந்திருக்க எனக்கு உதவியது,” என்று அவர் சொல்கிறார்.

சுகவீனங்களில் தாங்கியிருப்பது

“பெரும்பான்மையர் ஏதோவொரு வகையில் உடல்நலக் குறைவோடு இருந்தபோதிலும் ஆனந்தமாக இருக்கின்றனர், சேவிக்கவேண்டும் என்ற அவர்களுடைய ஆசை தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு குணம்,” என்று மிஷனரி வீட்டுக் கண்காணியாகிய ஆல்பெர்ட் பாஸ்டர் சொல்கிறார். மிஷனரிகளைப் பார்த்துக்கொள்வதற்காக ஒரு டாக்டரும் நர்ஸாகிய அவருடைய மனைவியும் இந்த வீட்டிற்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு, கிலியட் பள்ளியின் 11-ம் வகுப்பில் பட்டம்பெற்று தேறிய எல்ஸி டானிகாவா, தன் இடக்கண்ணில் ஒரு நாள் திடீரென்று பார்வை இழந்தார். நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவருடைய வலக்கண்ணும் பாதிக்கப்பட்டது. “முன்பு செய்ததுபோல என்னால் செய்ய முடியவில்லையே என்று நான் சில வேளைகளில் ஓரளவு மனச்சோர்வு அடைந்ததுண்டு. ஆனால் சொஸைட்டியின் எல்லா தயவான ஏற்பாடுகளாலும் என்னுடைய பார்ட்னரும் மற்றவர்களும் கொடுக்கிற அன்பான உதவியாலும் யெகோவாவின் சேவையில் தொடர்ந்து மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன்,” என்று சொல்கிறார் எல்ஸி.

எல்ஸியின் கிலியட் வகுப்புத் தோழர்களாயிருந்த ஷீனிச்சி டொஹாராவும் அவருடைய மனைவியாகிய மசாகோவும் கடந்த சில வருடங்களாக உடல்நலம் சம்பந்தமாக அநேக சோதனைகளை எதிர்ப்பட்டிருக்கின்றனர். திறம்பட்ட பேச்சாளராகிய ஷீனிச்சிக்கு மங்கிவரும் பார்வையின் காரணமாகக் குறிப்புத்தாளைப் பார்க்க முடியாதது சவால் நிறைந்ததாக இருக்கிறது. சமீப வருடங்களில் சிறிய, பெரிய அறுவைசிகிச்சைகளைச் செய்திருந்தபோதிலும், தான் தற்போது உதவிசெய்கிற 90 வயது பைபிள் மாணாக்கரைப் பற்றி அவர் பேசுகையில் அவருடைய கண்கள் மின்னும்.

“மாம்சத்திலே ஒரு முள்” இருந்தபோதிலும், இந்த மிஷனரிகள் தங்கள் பலவீனங்களை இவ்வாறு சொன்ன அப்போஸ்தலன் பவுலைப்போல உணருகின்றனர்: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 12:7-10) அவர்கள் பலமுள்ளவர்களே! தினமும் ஏழு மணிக்குக் காலை வணக்கத்திற்கு வருகின்றனர். காலை உணவை அருந்தியதும், சுகநலமுடைய ஆட்கள் காலையிலேயே வெளி ஊழியத்துக்குச் செல்கின்றனர்.

ரிச்சர்டும் மர்ட்டில் ஷிரோமாவும் அவ்வாறு ஒழுங்காக ஊழியத்துக்குச் செல்வோராவர். மர்ட்டிலுக்கு 1978-ல் மூளையின் தமனி இறுக்க தாக்கலால் ஸ்ட்ரோக்குகள் வந்திருக்கின்றன, அப்படியும் அவர் தன்னுடைய கணவனோடு சேர்ந்து நவம்பர் 1987 வரை பயண வேலையில் ஈடுபட்டிருந்தார். இப்போது 70 வயதுள்ளவராக ரிச்சர்டுதானே, மர்ட்டிலுக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார். காலை 5:00 மணிக்கு எழுந்ததும், அவரைப் படுக்கையை விட்டுக் கிளப்பி, குளிப்பாட்டி, உடுத்துவித்து, சிங்காரித்து ஸ்பூனினால் அவருக்குச் சாப்பாடு ஊட்டுகிறார். பின்னர் ஒவ்வொரு நாள் காலையிலும் அவரைச் சக்கர நாற்காலியில் வெளி ஊழியத்திற்கு அழைத்துச் சென்று ஒரு மணிநேரம்போல வீடு வீடாய் ஊழியஞ்செய்த பிறகு பஸ் நிறுத்தங்களில் உள்ள ஆட்களிடம் சாட்சிபகர கூட்டிக்கொண்டு செல்கிறார். மர்ட்டிலால் இப்போது பேச முடியவில்லை, ஆனால் கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள் டென்டோ, டென்டோ என்பவை, ஜாப்பனீஸில் “பிரசங்கம், பிரசங்கம்” என்பதே இவற்றின் அர்த்தம்.

அவர்களுடைய மகளாகிய சான்ட்ரா சுமீடா அவர்களுக்கு உதவ மிஷனரி வீட்டிற்கு மாறி வந்துவிட்டார். சான்ட்ரா, தன் அருமை கணவனைச் சமீபத்தில் மாரடைப்பில் இழந்தார். தன் கணவனோடு மிஷனரியாகச் சேவித்துவந்த குவாம் என்ற நாட்டிலிருந்து திரும்பவும் ஜப்பானிற்கு நியமிக்கச்செய்த உவாட்ச் டவர் சொஸைட்டியின் தயவான ஏற்பாட்டிற்காக அவர் பாராட்டுகிறார். “குவாமிலிருந்ததன் காரணமாக என்னுடைய பெற்றோருக்கு அவ்வளவாக உதவி செய்ய முடியவில்லையே என்று நான் எப்போதும் உணர்ந்ததுண்டு. இந்த வீட்டில் என் தங்கையாகிய ஜொயன் அவர்களைக் கவனித்துக்கொண்டாள். ஆகையால் வாய்ப்பு கிடைத்ததும், நான் மனநிம்மதி அடைந்தேன். என்னுடைய கணவனின் திடீர் மரணம் முதற்கொண்டு, நான் இங்குத் தேவைப்படுகிறேன் என்ற உணர்வு எனக்கு நிவாரணமாக இருந்திருக்கிறது,” என்று அவர் சொல்கிறார்.

இன்னும் நீடிக்கும் கவலை

முதிர் வயதின் பாதிப்புகளை மிஷனரிகள் உணர்ந்தபோதிலும் தங்கள் மிஷனரி ஆவியை விட்டுக்கொடுக்க அவர்கள் மறுக்கின்றனர். (சங்கீதம் 90:10; ரோமர் 5:12) ஜப்பானுக்கு முதன் முதலில் வந்த கிலியட் பட்டதாரிகளான ஜெர்ரியும் யோஷி டோமாவும் டோக்கியோ நகரிலிருக்கும் ஷிபூயா என்ற வியாபார பிராந்தியத்திற்கு இப்போதும் செல்கின்றனர். “1949-ல் இந்த இரண்டு அடுக்கு மாடி கட்டடத்திற்கு வந்தபோது, நாங்கள் கிடங்கு வீடுகளாக மாறிச்சென்றோம். இப்போது டோக்கியோ ஒரு பெருநகரமாக மாறியிருக்கிறது. இப்போது வயதாகிவிட்டதால், முன்பு செய்ததுபோல எங்களால் செய்யமுடியவில்லை. ஆனால் பிரசங்க வேலையிலிருந்து திரும்பும்போது, நாங்கள் மிகவும் சுகமாக உணருகிறோம்,” என்று யோஷி சொல்கிறார்.

லில்யன் சாம்சன் என்பவர் 40 வருடங்களாக ஜப்பானில் மிஷனரியாக, தன்னுடைய ஊழியத்தை மிகவும் அனுபவித்து மகிழ்கிறார். “வியாதிப்பட்டிருக்கிற தன் அம்மாவைக் கவனித்துக் கொள்வதற்காக திரும்பியிருக்கிற என்னுடைய பார்ட்னராகிய அட்லைன் நாகோ என்பவரோடு படித்துவந்த 80 வயது பெண்மணிக்கு இப்போது நான் உதவி செய்து வருகிறேன். மூதாதையர் வணக்கப் பிரச்சினையை மேற்கொண்டு, சமீபத்தில் அந்தப் பெண்மணி ராஜ்ய பிரஸ்தாபியாயிருக்கிறார். அவர் கோயிலுக்குச் சென்று பூஜாரியின் மனைவியிடம், ‘நான் கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்டேன்!’ என்று சொன்னார்.” அத்தகைய சந்தோஷங்களைத் தன் வாழ்க்கையில் அனுபவித்தவராக, 19 வயதில் தன்னுடைய உலகப்பிரகாரமான வேலையை விட்டுவிட்டு பயனியர் வேலை தொடங்கியதற்காக அவர் மனவருத்தப்பட்டதே கிடையாது.

45 வருடங்களுக்கும் மேலாக மிஷனரி பார்ட்னர்களாக வேலைசெய்த ரூத் அல்ரிக்கும் மார்த்தா ஹெஸும் இந்த மிஷனரி வீட்டில் தங்கியிருந்து 35 வருடங்களாக ஊழியம் செய்திருக்கின்றனர். அவர்கள் நன்றாக அந்தப் பிராந்தியத்தில் பழக்கப்பட்டுவிட்டார்கள். ஒரு முறை வட்டாரக் கண்காணி மார்த்தாவிடம், “வீடு வீடாய் ஊழியஞ்செய்ய உங்கள் முகத்தைக் கடனாகத் தர முடியுமா?” என்று கேட்டார். ஜனங்கள் மார்த்தாவின் முகத்தை அறிந்தவர்களாக பத்திரிகைகள் வேண்டுமென்று கேட்டு வாங்கினர், வட்டாரக் கண்காணியோ சம்பாஷணைகளைத் தொடங்குவதற்கே அல்லற்பட்டார்.

ரூத் பத்திரிகை மார்க்கம் வைத்திருக்கிற ஒரு பெண்ணுக்கு உடல்நல குறைபாடுகளின் காரணமாக வாசிக்க முடியாது. அப்படியிருந்தும், அந்தப் பெண் பத்திரிகைகளைத் தொடர்ந்து பெற்று மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் என்ற கெட்டியான அட்டையுள்ள ஆங்கில புத்தகத்தையும் பெற்றுக்கொண்டார். பத்திரிகைகளை யாரும் வாசிக்காததுபோல தோன்றியதால் அவற்றைத் தொடர்ந்து கொடுக்க வேண்டுமா என்று ரூத் யோசித்தார். பின்னர் ஒரு நாள், அந்தப் பெண்ணின் கணவன் தேடுதல் புத்தகத்தோடு ரூத்திடம் வந்து, “இந்தப் புத்தகம் பிரமாதம்! இதை நான் இரண்டு தடவை முழுவதுமாகப் படித்துமுடித்துவிட்டேன்,” என்று சொன்னார். ரூத் அவரோடும் அவருடைய மனைவியோடும் ஒரு பைபிள் படிப்பைத் தொடங்கினார்.

இந்த மிஷனரி வீடுதானே, அக்கறையுள்ள ஆட்களைக் கவர்ந்திழுக்கிறது. ஒரு நாள் சாயங்காலம் ஓர் இளம் மனிதன் இந்த வீட்டிற்கு வந்து சொன்னார்: “நான் இங்கு வந்தால் பைபிளைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.” அவரோடு ஒரு பைபிள் படிப்புத் தொடங்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன் சபை நீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண்ணோடு சைனீஸ் ரெஸ்ட்ரான்ட்டில் சமையற்காரனாக அவர் பணிபுரிந்தார். ஒரு பிரஸ்தாபி ரெஸ்ட்ரான்டிற்குச் சென்றிருந்தபோது பத்திரிகைகள் அளிக்கப்பட்டன, அப்பத்திரிகைகள் சமையலறையிலும் நுழைந்தன. இளம் மனிதனாகிய இந்தச் சமையற்காரனுக்கு அந்தப் பத்திரிகைகள் பிடித்துப்போயின, இதனால் முன்பு சாட்சியாக இருந்த அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார். பதிலளிக்க முடியாமல், மிஷனரி வீட்டிற்குப் போகும்படி அந்தப் பெண் சொன்னார். அந்த மனிதன் இப்போது ஒரு உதவி ஊழியராகவும் பயனியராகவும் சேவிக்கிறார். உரிய காலத்தில் சபை நீக்கம் செய்யப்பட்ட அந்தப் பெண்ணும் திரும்ப நிலைநாட்டப்பட்டார், முடிவில் அவரும் ஒழுங்கான பயனியராக ஆனார்.

இந்த வீட்டிலிருக்கிற எல்லா மிஷனரிகளும் யெகோவா தங்களுக்குச் செய்திருக்கும் காரியங்களுக்காகப் போற்றுதல் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஹவாய், ஸ்விட்ஸர்லாந்து, மேலும் ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்தனர்; 11 பேர் கிலியட் மிஷனரி பள்ளியின் 11-ம் வகுப்பையோ அல்லது அதற்கு முற்பட்ட வகுப்புகளையோ சேர்ந்தவர்களாக இருந்தனர். ஜப்பானில் நடந்த ராஜ்ய வேலையின் முன்னேற்றத்தைக் கண்டவர்களாக, இவ்வாறு சொன்ன தாவீது ராஜாவின் உணர்ச்சிப் பொங்கும் வார்த்தைகளைப் பகர்ந்துகொள்கின்றனர்: “நான் இளைஞனாயிருந்தேன். முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:25) கடவுளுடைய அன்பான பராமரிப்பிற்கு நன்றி செலுத்துபவர்களாக, இந்த மிஷனரிகள் ஓய்வுபெறாமல் யெகோவாவைத் தொடர்ந்து சேவித்துக்கொண்டிருக்க திடத்தீர்மானமாக இருக்கின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்