ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
கடவுளின் ஜனங்கள் தங்களையே மனமுவந்து அளிக்கின்றனர்
அவருடைய பெயர் யோசே, அவர் சீப்புரு தீவின் குடிமகனாக இருந்தார். கிறிஸ்தவ மதத்தை முன்னேற்றுவிப்பதற்கு பணசம்பந்தமான நன்கொடை வழங்குவதற்காக நிலங்களையும் வீடுகளையும் விற்ற முதல்-நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் இவரும் ஒருவராக இருந்தார். அவருக்கு மிகுதியான அன்பும் தாராள குணமும் இருந்தபடியால், பர்னபா என்று அறியப்பட்டார், அதன் அர்த்தம் “ஆறுதலின் மகன்.”—அப்போஸ்தலர் 4:34-37.
மற்றவர்களில் இப்படிப்பட்ட உண்மையான அக்கறை காண்பிப்பது யெகோவாவின் மெய் வணக்கத்தாருக்கு எப்போதும் அடையாளக்குறியாக இருந்திருக்கிறது. இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகள் இவ்விஷயத்தில் வித்தியாசமானவர்களாய் இல்லை என்பதை சாலமன் தீவுகளிலிருந்து வரும் பின்வரும் அனுபவம் சிறப்பித்துக் காண்பிக்கிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஜீலாந்திலிருந்து 60-க்கும் மேற்பட்ட சாட்சிகள் ஒரு தொகுதியாக ஹோனியாரா என்ற இடத்துக்கு பிரயாணம் செய்தனர், அது குவாடல்கேனல் மீதுள்ள சாலமன் தீவுகளின் தலைநகர். பெரிய கிறிஸ்தவ கூட்டங்கள் நடத்துவதற்காக ஒரு மாநாட்டு மன்றத்தைக் கட்டுவதற்கு உதவி செய்ய அவர்கள் வந்தனர். சுமார் 1,200 பேர் உட்காரும் வசதி கொண்ட ஒரு மன்றத்தை எழுப்புவதற்கு அவர்களுக்கு இரண்டு வாரம் மட்டுமே எடுத்தது!
ஏறக்குறைய அதே சமயத்தில், நியூ ஜார்ஜியா தீவின் மீதுள்ள முன்டா என்ற சிறிய பட்டணத்து உள்ளூர் அதிகாரிகள், பட்டணத்துக்கு மத்தியிலேயே ஒரு மனையை யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்குக் கொடுத்தனர். அவர்கள் வணக்கத்துக்கென்று ஒரு இடத்தை, ஒரு ராஜ்ய மன்றத்தை கட்ட விரும்பினர். அவர்களுக்கு ஒரு மன்றம் உண்மையிலேயே தேவைப்பட்டது. அவர்கள் ஒரு சிறிய ஓலை வீட்டின் பகல் நேர அறையில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தனர், ஆனால் ஒரு இராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கு அவர்களிடம் பணம் இல்லை.a அந்தச் சபையில் வயதானவர்கள், நோயுற்றோர், பிள்ளைகள் போன்றவர்கள் தான் அதிகமாக இருந்தனர், கட்டட தொழிலில் அனுபவமிருந்தவர்கள் எவருமே இல்லை.
a ஒரு ஓலை வீடு என்பதானது, காடு அல்லது புதர்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து செய்யப்பட்டதாகும். அதன் சட்டம் கம்புகளாலும் குச்சிகளாலும் செய்யப்பட்டிருந்தது. பனை ஓலைகளிலிருந்து செய்யப்பட்ட அடைப்புத் தட்டியால் கூரையும் சுவர்களும் மூடப்பட்டிருந்தன. அப்பனை ஓலைகள் கம்புகளின் மீது மடிக்கப்பட்டு கொடியால் வேயப்பட்டிருந்தன.
சுமார் 380 கிலோமீட்டருக்கு அப்பால், குவாடல்கேனல் தீவின் மீது, ஹோனியாரா பட்டணத்தில் இருந்த சாட்சிகள் தங்களையே மனமுவந்து அளித்தனர். (சங்கீதம் 110:3) அவர்கள் இவ்வாறு காரணம் கூறினர்: “மற்ற தேசங்களில் இருக்கும் நம்முடைய சகோதரர்கள் ஒரு மாநாட்டு மன்றத்தை இரண்டு வாரங்களில் கட்டுவதற்கு விருப்பமுள்ளவர்களாய் இருந்தார்களென்றால், முன்டாவில் இருக்கும் நம்முடைய சகோதரர்களுக்கு நாம் நிச்சயமாகவே உதவி செய்து, இரண்டு வாரங்களில் அவர்களுக்கு ஒரு இராஜ்ய மன்றத்தைக் கட்டலாம்.”
அது தான் நடந்தது. ஒரு நாள் சந்தோஷமான ஆவலுள்ள சாட்சிகளான வாலண்டியர்கள் நிரம்பிய பயணப்படகு ஒன்று முன்டாவுக்கு வந்து சேர்ந்தது. ஆண்களும் பெண்களும், வயோதிபரும் இளைஞரும், தங்கள் சரக்குகளை சுறுசுறுப்பாய் இறக்கினர். மரம், சிமென்ட், கூரை போடுவதற்கு இரும்பு, மற்ற பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு கட்ட ஆரம்பிப்பதற்குத் தயாராயினர், அவர்கள் வந்து சேருவதற்கு முன்பே அவை முன்டாவுக்கு வந்து விட்டன.
அந்த வேலை ஆரம்பித்தவுடனேயே, ஒரு கடும் இடி மின்னலுடன்கூடிய புயல் காற்று பட்டணத்தின் தண்ணீர் விநியோகத்தைத் தடைசெய்து விட்டது. என்றபோதிலும், இது ஒரு மேற்கொள்ள முடியாத பிரச்சினையாக ஆகிவிடவில்லை. சாட்சிகள் ஒரு கிணற்றைத் தோண்டினர், அது கட்டுமானப் பணி நடந்து முடியும்வரை தண்ணீரை அளித்தது. எல்லா வேலையாட்களுக்கும் தேவையான உணவைப் பற்றியதென்ன? அதுவும் ஒரு பிரச்சினையாக இல்லை. ஹோனியாராவிலிருந்து வந்த வாலண்டியர்கள் ஹோனியாரா சபைகளால் அளிக்கப்பட்ட திரளான உணவுப்பொருட்களை கொண்டு வந்தனர். சொந்த சமையல்காரர்களையும்கூட தங்களுடன் அழைத்து வந்தனர்!
இந்தக் கட்டட வேலையின் முன்னேற்றத்தை சுற்றியிருந்த அயலகத்தார் வியப்புடன் கவனித்தனர். அவர்களில் ஒருவர் சொன்னார்: “இங்கெல்லாம் காரியங்கள் சில நாட்களில் நடப்பதில்லை. அவை அநேக வருடங்கள் எடுக்கின்றன.” மற்றொரு அயலார் ஒரு மதத்தலைவர், தன்னுடைய சர்ச் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருவதாகவும் அது இன்னும் முடிக்கப்படவில்லையென்றும் ஒப்புக்கொண்டார். இதற்கு மாறாக, முன்டாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய புதிய இராஜ்ய மன்றம் வெறும் பத்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது!
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
தென் பசிபிக் பெருங்கடல்
முன்டா
ஹோனியாரா
குவாடல்கேனல்
சாலமன் தீவுகள்
ஆஸ்திரேலியா
நியூ ஜீலாந்து