இராசிச் சக்கரம் சோதிடவியலுடன் அதன் தொடர்பு
சூரியனைச் சுற்றி வரும் பூமியின் கோள மட்டத்தின் இரு பக்கங்களிலும், ஒன்பது டிகிரிக்குள்ளாக இருப்பதுபோல, பூமியிலிருந்து காணப்படும் நட்சத்திரப் பட்டை இராசிச் சக்கரம் என்றழைக்கப்படுகிறது. யூதாவின் அரசனாகிய யோசியாவைப் பற்றி 2 இராஜாக்கள் 23:5 சொல்கிறது: “யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த [அந்நிய தெய்வ, NW] பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் [இராசிச் சக்கர விண்மீன் கூட்டங்களுக்கும், NW] வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.” ‘இராசிச் சக்கர விண்மீன் கூட்டங்கள்’ என்று இங்கே பயன்படுத்தப்படும் சொற்றொடர், மாசாலோத் என்ற எபிரெய சொல்லிலிருந்து வருகிறது, யோபு 38:32-ல் காணப்படும் மாசாரோத் என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்தலாம் என்றாலும், இந்தச் சொற்றொடர் ஒரேவொரு முறையே பைபிளில் வருகிறது. சூழமைவுதானே அதன் பொருளைத் தெளிவாக்க உதவுகிறது.
இராசி மண்டலம் என்றழைக்கப்படக்கூடியதைக் கண்டுபிடித்ததற்கான புகழ், பொதுவாகப் பூர்வ பாபிலோனியரைச் சேர்கிறது. சந்தேகமின்றி, நட்சத்திரங்களின் மத்தியில் தோன்றுகிற வருடாந்தர சூரியப் பாதையை அவர்கள் கண்டாராய்ந்தனர், அந்தப் பாதையே இப்போது சூரியத் தோற்றப்பாதை என்றறியப்படுகிறது. பூமியிலிருந்து நோக்குகையில், சூரியத் தோற்றப்பாதையின் இரு பக்கங்களிலும் 9 டிகிரி அளவு நீண்டிருக்கக்கூடிய, சுமார் 18 டிகிரி அகலமுடைய மண்டலத்திற்குள்ளாக, சூரிய, சந்திர, மேலும் முக்கிய கிரகங்களின் பாதைகள் இருக்கலாமென வானியல் அறிஞர்கள் கவனிக்கக்கூடும். என்றபோதிலும், பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டு வரையாக, இராசிச் சக்கரம் ஒவ்வொன்றையும் 30 டிகிரியில் 12 சம பாகங்களாக ஒரு கிரேக்க வானியல் அறிஞர் வகுக்கவில்லை; இந்தப் பாகங்கள் இராசிகள் என்றழைக்கப்பட்டு, அதன் தொடர்பான விண்மீன் கூட்டங்களின் பெயரால் அழைக்கப்பட்டன. இராசிச் சக்கரம் என்பதற்கான “ஸோடியாக்” என்ற ஆங்கில சொல் கிரேக்கிலிருந்து வருவது, “விலங்கின வட்டம்” என அர்த்தங்கொள்கிறது; ஏனெனில் இராசியின் 12 விண்மீன் கூட்டங்களில் பெரும்பான்மையானவற்றிற்கு விலங்கு அல்லது கடல் வாழ் உயிரிகளின் பெயர்கள் சூட்டப்பட்டன.
இன்று இந்த இராசிகள், அவை ஆதியில் பெயரிடப்பட்ட விண்மீன்களையடுத்து இனிமேலும் ஒத்துப்போவதில்லை. இது பகலிரவு சமமுடைய நாட்களின் முன்னிகழ்வு என்றறியப்படுவதன் நிமித்தமே அவ்வாறு இருக்கி
றது; இதன் விளைவு, முற்றுப்பெற சுமார் 26,000 ஆண்டுகள் எடுக்கும் சுழற்சியில், விண்மீன் கூட்டங்கள் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் ஒரு டிகிரி அளவு கிழக்குநோக்கி படிப்படியாக நகருகின்றன. இதனால் கடந்த 2,000 ஆண்டுகளில், மேஷ இராசியானது மீனராசி விண்மீனுக்குள் ஏறத்தாழ 30 டிகிரி அளவு நகர்ந்தது.
சோதிடவியலுடன் தொடர்பு
பூர்வகால மெசபடேமியரின் காலங்கள் முதற்கொண்டு, இராசிச் சக்கர விண்மீன் கூட்டங்கள் பொய் வணக்கத்திற்குரிய ஆராதனைப் பொருட்களாக ஆயின. ஒவ்வொரு வித்தியாசப்பட்ட விண்மீனுக்கும் குறிப்பிட்ட தன்மைகளைக் கொடுத்து, பின்னர் எந்தவொரு சமயத்திலும் இராசிபலன்களில் இவை பயன்படுத்தப்பட்டன; இந்த இராசிபலன்கள் இராசிகளோடு விண்கோளங்கள் இருக்கும் குறிப்பிட்ட இடத்தையும் தொடர்பையும் ஆதாரமாக வைத்து செய்யப்பட்டன. 2 இராஜாக்கள் 23:5-ல் உள்ள வசனத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, அவ்வாறு சோதிடத்தைப் பயன்படுத்தும் காரியமானது, குறிப்பிட்ட சில அரசர்கள் நாட்டிற்குள் கொண்டுவந்த அந்நிய தெய்வ பூஜாசாரிகளால் யூதாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தகைய நட்சத்திர வணக்கத்திற்கு மரண தண்டனையை அளிப்பதன் மூலம், யெகோவா தேவன் வெகுகாலத்திற்கு முன்னரே அதற்குத் தடைவிதித்தார்.—உபாகமம் 17:2-7.
சோதிடம் பாபிலோனிய வணக்கத்தில் தலையாய முகப்புக்கூறாக இருந்தது. என்றபோதிலும், அவளுடைய சோதிடர்களால் இராசிச் சக்கரத்தை ஆதாரமாக கொண்டு செய்யப்பட்ட இராசிபலன்கள், ஏசாயா தீர்க்கதரிசியும் சரியாகவே முன்னுரைத்தபடி, பாபிலோனை அழிவிலிருந்து காப்பாற்றவில்லை.—ஏசாயா 47:12-15.
இந்த நவீன காலங்களில் இராசிகள் அநேக மக்களுடைய வணக்கத்தில் தொடர்ந்து முக்கியப் பங்கை வகித்து வருகின்றன. அக்கறையூட்டும் விதமாக, இராசிகள், சில கிறிஸ்தவமண்டல பேராலயங்களில் காணப்படுகின்றன; பிரான்ஸைச் சேர்ந்த பாரிஸிலுள்ள நாத்ர தாம் பேராலயம் மட்டுமல்லாமல் அம்யன் மற்றும் ஷாட் பேராலயங்களிலும் இன்று காணப்படுகின்றன.