“இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் . . . சோர்ந்துபோகிறதில்லை”
ரானல்ட் டெய்லர் சொன்னபடி
1963-ன் கோடைகாலத்தின் போது, நான் என் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தேன். நான் கரையோரமாக ஆழமற்ற நீர்நிலையைக் கடந்து சென்றுகொண்டிருக்கையில், பாதுகாப்பற்ற குழிக்குள் கால் வைத்த போது திடீரென்று அதிக ஆழமான நீர் பகுதிக்குள் விழுந்துவிட்டேன். எனக்கு நீந்தத் தெரியாததால் கரையிலிருந்து சில மீட்டர் தள்ளி நான் மூழ்கிவிடும் நிலையில் இருந்தேன். நான் ஏற்கெனவே மூன்று முறைகள் மூழ்கி ஏராளமான கடல்நீரை விழுங்கியிருந்தேன். அப்போது ஒரு நண்பர் என் நிலைமையைப் பார்த்து என்னை கரைக்கு இழுத்தார். உடனடியாக செயற்கை சுவாசத்தின் உதவியோடு நான் உயிர்ப்பிழைத்தேன்.
நிலைமைகள் நம்பிக்கையற்று தோன்றினாலும் சோர்ந்துபோய் விடாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை நான் போற்றினது இது தான் முதல் தடவை அல்ல. சிறு வயதிலிருந்தே என் ஆவிக்குரிய வாழ்க்கைக்காக போராட வேண்டியிருந்தது.
இரண்டாம் உலகப் போரின் இருண்ட நாட்களின் போது நான் முதலாவது கிறிஸ்தவ சத்தியத்தோடு தொடர்பு கொண்டேன். குண்டுவீச்சு தாக்குதல்களின் அபாயத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு லண்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பிள்ளைகளுள் நானும் ஒருவன். எனக்கு அப்போது வயது 12, அப்போர் எனக்கு அதிகத்தைக் குறிக்கவில்லை; அது ஒரு வீரச்செயலைப் போல் இருந்தது.
தென்மேற்கு இங்கிலாந்தில் வெஸ்ட்டன்-ஸூப்பர்-மேர் என்ற இடத்தில் ஒரு வயதான தம்பதியினர் என்னை கவனித்துக்கொண்டார்கள். நான் அத்தம்பதியினரின் வீட்டில் வந்து சேர்ந்தவுடனேயே சில பயனியர் ஊழியர்கள் எங்களைச் சந்திக்க ஆரம்பித்தனர். அது ஹார்கிரெவ்ஸ் குடும்பம்; அந்த நான்கு பேரும்—ரெஜ், மாப்ஸ், பாமலா, வேலரி—விசேஷ பயனியர்களாக இருந்தனர். என் வளர்ப்புப் பெற்றோர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர், தி ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தைப் படித்த பின்பு நானும் யெகோவாவை சேவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தேன். ஆறே வாரங்களுக்குப்பின், பிரசங்க வேலையில் பங்குகொள்ளும்படி எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
முதல் நாள் வெளி ஊழியத்துக்குச் சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எந்தத் தயாரிப்புமின்றி சிறு புத்தகங்களை என்னிடம் கொடுத்து இவ்வாறு சொன்னார்கள்: “தெருவின் அந்தப் பக்கம் நீ ஊழியம் செய்.” அப்படித்தான் என் முதலாவது நாள் பிரசங்க வேலையைச் செய்தேன். அந்த நாட்களில், நாங்கள் அவ்வப்போது சக்திவாய்ந்த பேச்சுக்கள் அடங்கிய ஒலிப்பதிவுப் பெட்டிகளை உபயோகித்து பிரசங்கம் செய்தோம். வீடு வீடாக ஒலிப்பதிவு பெட்டியை எடுத்துச் சென்று, பதிவுசெய்யப்பட்ட சொற்பொழிவுகளைப் போட்டுக்காட்டிய சமயங்கள் அதிக சந்தோஷமானவை. அவ்விதத்தில் உபயோகிக்கப்படுவதை உண்மையில் ஒரு சிலாக்கியமாக கருதினேன்.
நான் பள்ளியில் அதிக நேரம் பிரசங்கிப்பதில் செலவழித்தேன், பைபிள் பொருள்கள் பேரில் இருந்த இரண்டு புத்தகங்களைத் தலைமை ஆசிரியரிடம் அளித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. 13 வயதை அடைந்த போது, பாத் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றேன். போர்க் காலத்தின் போது நடந்த மற்றொரு மாநாட்டை நான் மறக்கவே மாட்டேன், அது லெஸ்டர்-ல் டி மான்ட்ஃபோர்ட் மன்றத்தில் 1941-ல் நடந்தது. நான் பிள்ளைகள் என்ற ஆங்கில புத்தகத்தின் பிரதியைப் பெற்றுக்கொள்ள மேடைக்குச் சென்றேன், அதில் அப்போது உவாட்ச்டவர் சொஸைட்டியின் பிரஸிடென்டாயிருந்த ரதர்ஃபர்டு என்பவரிடமிருந்து வந்த தனிப்பட்ட செய்தி அடங்கியிருந்தது. அங்கே ஆஜராயிருந்த எல்லா இளைஞருக்கும் கொடுக்கப்பட்ட உற்சாகமான பேச்சு, யெகோவாவை என்றென்றுமாக சேவிக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை உறுதிப்படுத்தியது.
இவ்வாறு நான் என் வளர்ப்புப் பெற்றோரோடு இரண்டு சந்தோஷமான வருடங்கள் சத்தியத்தில் வளர்ந்தேன். ஆனால் 14 வயதை அடைந்த போது வேலை செய்து பிழைப்பதற்காக லண்டனுக்குத் திரும்பிவர வேண்டியிருந்தது. மறுபடியும் என் குடும்பத்தோடு சேர்ந்துகொண்டாலும், ஆவிக்குரியப் பிரகாரமாய் என் வளர்ப்புப் பெற்றோரின் ஆதரவின்றி இப்போது இருக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் வீட்டில் எவரும் என் நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளவில்லை. யெகோவா விரைவில் எனக்குத் தேவைப்பட்ட உதவியை அளித்தார். லண்டன் வந்து சேர்ந்து மூன்று வாரங்களுக்குப் பின்பு, ஒரு சகோதரர் என் வீட்டுக்கு வந்து இராஜ்ய மன்றத்துக்கு என்னை அழைத்துச் செல்வதற்கு என் தகப்பனின் அனுமதியைக் கேட்டார். அந்தச் சகோதரர் ஜான் பார், அவர் இப்போது யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவின் அங்கத்தினர். அந்த இக்கட்டான பருவ வயது ஆண்டுகளில் அவர் என் ஆவிக்குரிய ‘தகப்பன்மார்களில்’ ஒருவராக ஆனார்.—மத்தேயு 19:29.
கிரேவன் டெரஸ் என்ற இடத்தில் லண்டன் பெத்தேல் வீட்டுக்கு அருகே இருந்த பாடிங்டன் சபைக்குச் செல்ல ஆரம்பித்தேன். நான் ஆவிக்குரிய ‘அனாதையாக’ இருந்தபடியால், ஒரு வயதான அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர் “பப்பா” ஹம்ஃபிரிஸ் என் பேரில் விசேஷ அக்கறை எடுத்துக்கொள்ளும்படியாக நியமிக்கப்பட்டார். அந்தச் சபையில் சேவித்த அநேக அபிஷேகம்செய்யப்பட்ட சகோதர சகோதரிகளோடு கூட்டுறவுகொள்ள முடிந்தது நிச்சயமாகவே ஒரு பெரும் ஆசீர்வாதமாக இருந்தது. ‘யோனதாப்புகள்’ என்றழைக்கப்பட்ட பூமிக்குரிய நம்பிக்கையைக் கொண்டிருந்த எங்களைப் போன்றவர்கள் சிறுபான்மையரே இருந்தனர். உண்மையில், நான் ஆஜராயிருந்த சபை புத்தகப்படிப்பு தொகுதியில் நான் மட்டுமே “யோனதாப்” ஆக இருந்தேன். என் வயதுள்ள நபர்களோடு நான் அதிக கூட்டுறவுகொள்ளவில்லையென்றாலும், முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்களோடு கொண்டிருந்த அருமையான கூட்டுறவு எனக்கு அநேக பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. யெகோவாவின் சேவையை ஒருபோதும் விடக்கூடாது என்பது தான் அதில் அதிமுக்கியமானது.
அந்த நாட்களில், வார இறுதி நாட்கள் முழுவதையும் பிரசங்க வேலைக்கு என்று ஒதுக்கி வைப்போம். “சவுண்ட் கார்” கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது, ஒலி சாதனங்களும் கார் பாட்டரியும் வைப்பதற்கு ஏற்றாற் போல் செய்யப்பட்ட மூன்று சக்கர சைக்கிளாக அது இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்த மூன்று சக்கர சைக்கிளில் வெவ்வேறு தெரு முனைகளுக்குச் சென்று இசைத் தட்டுக்களை ஒலிக்கச்செய்வேன், அதற்குப் பிறகு சகோதரர் ரதர்ஃபர்டின் பேச்சு ஒன்றைப் போடுவோம். எங்களுடைய பத்திரிகை பைகளோடு தெரு ஊழியம் செய்வதற்கும்கூட சனிக்கிழமைகள் பயன்படுத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் வீட்டுக்கு-வீடு ஊழியம் செய்து சிறு புத்தகங்களையும் பவுண்ட் புத்தகங்களையும் விநியோகித்தோம்.
வைராக்கியமான வயதுமுதிர்ந்த சகோதரர்களோடு நான் கொண்டிருந்த கூட்டுறவு, பயனியர் செய்யும்படி என் ஆர்வத்தைத் தூண்டியது. மாவட்ட மாநாடுகளில் பயனியர் சேவை பற்றிய பேச்சுக்களைக் கேட்டபோது இந்த ஆசை பலப்படுத்தப்பட்டது. என் வாழ்க்கையின்மீது அதிக ஆழமான பாதிப்பைக் கொண்டிருந்த ஒரு மாநாடு, 1947-ல் லண்டனில் உள்ள எர்ல்ஸ் கோர்ட் என்ற மன்றத்தில் நடத்தப்பட்ட மாநாடு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் பயனியர் சேவையில் சேர்ந்து கொண்டேன், அப்போதிலிருந்து பயனியர் மனநிலையைக் காத்துவர முயற்சி செய்திருக்கிறேன். படிப்படியாக முன்னேற்றமடையும் பைபிள் படிப்புகளை நடத்துவதிலிருந்து அடைந்த சந்தோஷம், இது தான் சரியான தீர்மானம் என்பதை மறுபடியும் உறுதி செய்தன.
ஒரு ஸ்பானிய மணமகளும் ஒரு ஸ்பானிய நியமிப்பும்
பாடிங்டன் சபையோடு 1957-ல் பயனியர் ஊழியம் செய்துகொண்டிருக்கையில், ரஃபேலா என்ற பெயருடைய ஒரு அழகிய ஸ்பானிய சகோதரியைச் சந்தித்தேன். சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ஒன்றாக சேர்ந்து பயனியர் ஊழியம் செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய இலக்காக இருந்தது, ஆனால் முதலில் நான் ரஃபேலாவின் பெற்றோரைச் சந்திக்கவேண்டி நாங்கள் மாட்ரிட்டுக்குச் சென்றோம். அது என் வாழ்க்கையை மாற்றிய ஒரு சந்திப்பாக இருந்தது. அனுபவம் வாய்ந்த சகோதரர்கள் மிகவும் தேவைப்பட்ட ஸ்பெய்னில் நாங்கள் சேவை செய்ய முடியுமா என்று நாங்கள் மாட்ரிட்-ல் இருந்தபோது ஸ்பெய்ன் தேசத்து கிளை அலுவலகக் கண்காணி சகோதரர் ரே டுசின்பெர் என்பவர் என்னைக் கேட்டார்.
அப்படிப்பட்ட ஒரு அழைப்பை நாங்கள் எப்படி மறுக்க முடியும்? ஆகையால் 1958-ல் நாங்கள் இருவரும் ஸ்பெய்ன்-ல் முழுநேர சேவையை ஆரம்பித்தோம். அந்தச் சமயம் அத்தேசம் ஃபிரான்கோவின் ஆட்சியின் கீழ் இருந்தது, நம்முடைய வேலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால் பிரசங்க வேலை அதிகக் கடினமாயிருந்தது. கூடுதலாக, முதல் இரண்டு வருடங்கள் ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அதிகக் கஷ்டப்பட்டேன். சபையிலுள்ள சகோதரர்களோடு பேச்சுத்தொடர்புகொள்ள முடியாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக அநேக சமயங்கள் அழுதபோதிலும், மறுபடியும் நான் விட்டுவிடாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கண்காணிகளுக்கானத் தேவை அதிகமாக இருந்ததன் காரணமாக என்னால் ஸ்பானிய மொழியைப் பேச முடியாவிட்டாலும்கூட, ஒரு மாதத்துக்குள்ளாக ஒரு சிறிய தொகுதியைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நம்முடைய வேலை மறைவாக செய்யப்பட்டதன் காரணமாக, 15 முதல் 20 பிரஸ்தாபிகள் அடங்கிய சிறிய தொகுதிகளாக நாங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தோம், அவை ஏறக்குறைய சிறு சபைகளைப் போன்றே செயல்பட்டு வந்தன. முதலில் கூட்டங்களை நடத்துவது மிகவும் கடினமாய் இருந்தது, ஏனென்றால் சபையாரிடமிருந்து வரும் பதில்களை நான் எப்போதும் புரிந்துகொள்ளவில்லை. என் மனைவி பின்னால் உட்கார்ந்திருப்பாள், நான் குழப்பமடைந்திருப்பது போல் தோன்றினால், பதில் சரி என்பதை உறுதிப்படுத்த என்னைப் பார்த்து புத்திசாலித்தனமாய் தலையசைப்பாள்.
மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு எனக்கு இயற்கையாகவே திறமை இல்லாமலிருந்ததன் காரணமாக, எல்லாவற்றையும் அதிக சுலபமாக செய்வதற்கு இங்கிலாந்துக்குத் திரும்பிவிடலாம் என்று அநேக தடவைகள் நினைத்தது உண்டு. இருந்தாலும் ஆரம்பத்திலிருந்து நம்முடைய அன்பான ஸ்பானிய சகோதரர்களும் சகோதரிகளும் காட்டிய அன்பும் நட்பும், மொழியைப் பேசமுடியாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுசெய்து விட்டது. மேலும் யெகோவா எனக்கு விசேஷமான சிலாக்கியங்களைக் கொடுத்தார், அவை எல்லாவற்றையும் பயனுள்ளதாக ஆக்கியது. ஸ்பெய்னிலிருந்து ஒரு பிரதிநிதியாக நியூ யார்க்கில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கு ஆஜராகும்படி நான் 1958-ல் அழைக்கப்பட்டேன். பிறகு 1962-ல், மொராக்கோவில் உள்ள டாங்கியர் என்ற இடத்தில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராஜ்ய ஊழியப்பள்ளியில் மதிப்புமிக்க பயிற்சி பெற்றுக்கொண்டேன்.
மொழியைத் தவிர நான் எதிர்ப்பட்ட மற்றொரு பிரச்சினை, போலீசார் பிடித்துக்கொள்வார்கள் என்ற பயம் எப்போதும் இருந்தது. ஒரு அயல்நாட்டவராக நான் கைது செய்யப்பட்டால், என்னை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்பதையும் அறிந்திருந்தேன். அந்த அபாயத்தைக் குறைப்பதற்கு நாங்கள் இரண்டு பேராக வேலை செய்தோம். ஒருவர் சாட்சி கொடுத்துக் கொண்டிருக்கையில், மற்றவர் ஆபத்து ஏற்படுவதற்கு அறிகுறிகள் உள்ளனவா என்று செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பார். அடுக்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் ஒன்று அல்லது இரண்டு வீடுகள் செய்துவிட்டு, பிறகு இரண்டு அல்லது மூன்று வளாகங்கள் தள்ளி இரண்டு அல்லது மூன்று வீடுகளுக்குச் செல்வோம். நாங்கள் பைபிளை அதிகமாகப் பயன்படுத்தினோம், அக்கறையுள்ள ஆட்களுக்குக் கொடுப்பதற்கென்று எங்களுடைய மேல் சட்டைகளில் சில சிறிய புத்தகங்களைச் செருகி வைத்திருப்போம்.
மாட்ரிட்-ல் ஒரு வருடம் இருந்த பிறகு, வடமேற்கு ஸ்பெய்னில் சாட்சிகளே இல்லாத ஒரு பெரிய பட்டணமான விகோ என்ற இடத்துக்கு நாங்கள் மாற்றப்பட்டோம். முதல் ஒன்றிரண்டு மாதங்கள் என் மனைவி சாட்சி கொடுப்பதில் அதிகமாக ஈடுபடும்படி சொஸைட்டி சிபாரிசு செய்தது—நாங்கள் சுற்றுலா பயணிகளாக வந்திருக்கிறோம் என்ற அபிப்பிராயத்தைக் கொடுப்பதற்காகவே. சிறிது கவனத்தை மட்டுமே ஈர்க்க வேண்டும் என்ற அணுகுமுறையைப் பயன்படுத்திய போதிலும், எங்களுடைய பிரசங்க வேலை ஆட்களின் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக கத்தோலிக்க பாதிரிகள் வானொலி மூலம் எங்களைப் பழித்துரைக்க ஆரம்பித்தனர். திருமணமான ஒரு தம்பதி வீட்டுக்கு வீடு சென்று பைபிளைக் குறித்து பேசுகின்றனர் என்று அவர்கள் தங்கள் சபையாரை எச்சரித்தனர்—பைபிள் அந்தச் சமயத்தில் ஏறக்குறைய தடைசெய்யப்பட்ட புத்தகமாக இருந்தது. “போலீஸ் தேடிக்கொண்டிருக்கும் தம்பதி” ஒரு அயல்நாட்டவரும் எல்லாவற்றையும் பேசிய அவருடைய ஸ்பானிய மனைவியும்!
இந்த ஆபத்தான தம்பதியினரிடம் வெறுமனே பேசுவது தானே ஒரு பாவம் என்றும், அதை உடனடியாக பாதிரியிடம் அறிக்கையிட்டால் மட்டுமே அது மன்னிக்கப்படும் என்றும் பாதிரிகள் கட்டளையிட்டனர். நாங்கள் ஒரு பெண்மணியோடு சந்தோஷமான உரையாடலை முடித்தபோது, அவள் தான் சென்று இதை பாவ அறிக்கை செய்ய வேண்டும் என்று வருத்தத்தோடு எங்களிடம் சொன்னாள். அவள் வீட்டை விட்டு நாங்கள் வெளியேறிய பிறகு, அவள் சர்ச்சை நோக்கி விரைவாக செல்வதை நாங்கள் பார்த்தோம்.
நாடுகடத்தல்
நாங்கள் விகோவில் வந்து சேர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, போலீசார் எங்கள் மீது பாய்ந்தனர். எங்களைக் கைது செய்த காவலாளன் இரக்கமுள்ளவனாய் இருந்தான், காவல் நிலையத்துக்குச் செல்கையில் எங்களுக்குக் கைவிலங்கு போடவில்லை. காவல் நிலையத்தில், நாங்கள் அறிமுகமாகியிருந்த ஒரு முகத்தைப் பார்த்தோம், அவள் ஒரு தட்டச்சர், நாங்கள் அவளுக்குச் சமீபத்தில் சாட்சி கொடுத்திருந்தோம். குற்றவாளிகளைப் போல் எங்களை நடத்தியதைக் கண்டு அவள் தடுமாற்றமடைந்து, குற்றச்சாட்டில் சிக்கவைத்ததற்கு அவள் காரணமல்லவென்று உறுதி செய்வதற்கு விரைந்து வந்தாள். இருப்பினும், “ஸ்பெய்ன் தேசத்தின் ஆவிக்குரிய ஐக்கியத்துக்கு” இடர் உண்டாக்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்பு நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.
அது ஒரு பின்னடைவாக இருந்தது, ஆனால் விட்டுவிட எங்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. ஐபீரியன் தீபகற்பத்தில் செய்வதற்கு வேலை அதிகம் இருந்தது. டாங்கியரில் மூன்று மாதங்கள் இருந்த பிறகு, நாங்கள் ஜிப்ரால்டருக்கு மாற்றப்பட்டோம்—வேலை செய்யப்படாத மற்றொரு இடம். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறபடி, நம்முடைய ஊழியத்தை மதித்தோம் என்றால், தொடர்ந்து வேலை செய்வோம், பலனையும் பெற்றுக்கொள்வோம். (2 கொரிந்தியர் 4:1, 7, 8) இது எங்களுடைய விஷயத்தில் உண்மையாயிருந்தது. ஜிப்ரால்டரில் நாங்கள் சந்தித்த முதல் வீட்டிலேயே ஒரு முழு குடும்பத்தோடு பைபிள் படிப்பை ஆரம்பித்தோம். விரைவில் நாங்கள் ஒவ்வொருவரும் 17 படிப்புகளைக் கொண்டிருந்தோம். எங்களோடு படித்துக்கொண்டிருந்த அநேகர் சாட்சிகளாக ஆனார்கள், இரண்டு வருடத்துக்குள் 25 பிரஸ்தாபிகள் அடங்கிய சபை இருந்தது.
ஆனால் விகோவில் இருந்ததைப் போன்று குருமார் எங்களுக்கு விரோதமாக செயல்பட ஆரம்பித்தனர். நாங்கள் “விரும்பத்தகாதவர்கள்” என்று ஜிப்ரால்டரின் ஆங்கிலிக்கன் பிஷப் காவல் அதிகாரி ஒருவரிடம் எச்சரித்தார், அவர்களுடைய செல்வாக்கு இறுதியில் விளைவுகளைக் கொண்டு வந்தது. ஜனவரி 1962-ல் ஜிப்ரால்டரிலிருந்து வெளியேற்றப்பட்டோம். நாங்கள் அடுத்து எங்கே செல்வோம்? ஸ்பெய்னில் பெரும் தேவை இன்னும் இருந்தது, ஆகையால் நாங்கள் திரும்பவும் ஸ்பெய்னுக்குச் சென்றோம், எங்களுடைய பழைய போலீஸ் பதிவு கவனத்துக்குக் கொண்டுவரப்படாது என்ற நம்பிக்கையுடன் சென்றோம்.
வெயில் நிறைந்த செவைல் எங்களுடைய புதிய வீடாக இருந்தது. ரே, பாட் கெர்க்கப் என்ற மற்றொரு பயனியர் தம்பதியினரோடு நெருக்கமாக ஊழியம் செய்யும் சந்தோஷம் எங்களுக்கு இருந்தது. செவைல் பட்டணம் ஐந்து இலட்சம் ஜனத்தொகையுடையதாக இருந்தாலும், நாங்கள் 21 பிரஸ்தாபிகள் மட்டும் தான் இருந்தோம், ஆகையால் செய்வதற்கு வேலை அதிகம் இருந்தது. இப்போது 1,500 பிரஸ்தாபிகள் கொண்ட 15 சபைகளும் இருக்கின்றன. ஒரு வருடத்துக்குப் பிறகு எங்களுக்கு இனிய எதிர்பார்ப்பு இருந்தது; பார்சிலோனா பிராந்தியத்தில் பிரயாண வேலை செய்யும்படி அழைக்கப்பட்டோம்.
நம்முடைய வேலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத தேசத்தில் வட்டார வேலை செய்வது வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் நாங்கள் சிறிய தொகுதிகளைச் சந்தித்தோம், அதில் அநேக சபைகளில் சில தகுதிவாய்ந்த சகோதரர்களே இருந்தனர். நாங்கள் கொடுக்கக்கூடிய எல்லா பயிற்சியும் ஆதரவும் இந்தக் கடினமாக உழைத்த சகோதரர்களுக்குத் தேவைப்பட்டது. நாங்கள் இந்த வேலையை நேசித்தோம்! வெகு சில சாட்சிகளே இருந்த பிராந்தியங்களில் அநேக வருடங்கள் செலவழித்த பிறகு, வித்தியாசமான சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். கூடுதலாக, பிரசங்க வேலை பார்சிலோனாவில் சுலபமாக இருந்தது, அநேக மக்கள் பைபிளைப் படிக்க விரும்பினர்.
மனச்சோர்வை எதிர்த்துப் போராடுதல்
இருப்பினும், ஆறு மாதங்களுக்குப் பின்பு என் வாழ்க்கை திடீரென மாறியது. ஆரம்பத்திலே விவரித்திருந்த விபத்தின் காரணமாக கடலருகே எங்களுடைய முதல் விடுமுறை ஏறக்குறைய ஒரு பெரும் இடராக ஆனது. ஏறக்குறைய மூழ்கிவிட்ட அதிர்ச்சியிலிருந்து நான் சரீரப்பிரகாரமாக விரைவில் குணமடைந்த போதிலும், அந்தச் சம்பவம் என் நரம்பு மண்டலத்தின் மீது ஆழ்ந்த பாதிப்பை விட்டுச் சென்றது.
சில மாதங்கள் நான் வட்டார வேலையில் தொடர்ந்திருக்க போராடினேன், ஆனால் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டியிருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் ஸ்பெய்னுக்குத் திரும்புமளவுக்குக் குணமடைந்த பிறகு மறுபடியும் வட்டார வேலையை எடுத்துக்கொண்டோம். இருப்பினும் அதுவும் ஒரு குறுகிய காலத்துக்குத் தான். என் மனைவியின் பெற்றோர் கடும் நோய்வாய்ப்பட்டனர், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக நாங்கள் முழு-நேர ஊழியத்தை விட்டோம்.
1968-ல் எனக்கு முழுவதுமாக நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டபோது வாழ்க்கை அதிக கடினமாக ஆனது. சுகமடையமாட்டேன் என்று ரஃபேலாவும் நானும் எண்ணின சமயங்கள் இருந்திருக்கின்றன. அது நான் மறுபடியும் மூழ்கிக்கொண்டிருந்ததைப் போல் இருந்தது, ஆனால் வித்தியாசமான விதத்தில்! எதிர்மறையான உணர்ச்சிகளால் மூழ்கிப்போய்விடும்படி என்னை செய்வித்தது மட்டுமல்லாமல், அந்த மனச்சோர்வு என் பலத்தையெல்லாம் இழந்துபோகும்படி செய்தது. கடும் சோர்வினால் அடிக்கடி தாக்கப்பட்டேன், அது எப்போதும் ஓய்வெடுக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தியது. அந்தச் சமயத்தில் எல்லா சகோதரர்களும் இவ்வகையான பிரச்சினையைப் புரிந்துகொள்ளவில்லை; நிச்சயமாகவே யெகோவா புரிந்துகொண்டார் என்பதை அறிந்திருந்தேன். மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உதவியாயும் புரிந்துகொள்ளும் விதத்திலும் எழுதப்பட்டிருக்கும் அற்புதமான கட்டுரைகளை காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் வாசித்தது பெரும் திருப்தியைக் கொடுத்தன.
இந்தக் கடினமான காலம் முழுவதும் என் மனைவி என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள். இருவருமாக சேர்ந்து பிரச்சினைகளைச் சமாளிப்பது திருமணப் பிணைப்பைப் பலப்படுத்துகிறது. ரஃபேலாவின் பெற்றோர் மரித்தனர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் முழுநேர சேவையை ஆரம்பிக்கலாம் என்று நாங்கள் உணரும் அளவுக்கு என்னுடைய ஆரோக்கியம் முன்னேறியது. 1981-ல் எங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் வகையில், வட்டார வேலையில் மறுபடியும் சேவை செய்யும்படி அழைப்பு கொடுக்கப்பட்டது.
பிரயாண ஊழியத்தில் நாங்கள் முதலில் கொண்டிருந்த அனுபவத்தின் சமயத்திலிருந்து ஏராளமான தேவராஜ்ய மாற்றங்கள் ஸ்பெய்னில் ஏற்பட்டிருந்தன. இப்போது பிரசங்கம் செய்வதற்குத் தடை எதுவும் இல்லை, ஆகையால் நான் புதிய சூழ்நிலைமைகளோடு அறிமுகமாக வேண்டியிருந்தது. இருப்பினும், ஒரு வட்டாரக் கண்காணியாக மறுபடியும் சேவிப்பது பெரும் சிலாக்கியமாக இருந்தது. கடினமான சூழ்நிலைமைகள் மத்தியிலும் நாங்கள் பயனியர் ஊழியம் செய்தது, பிரச்சினைகளைக் கொண்டிருந்த மற்ற பயனியர்களை உற்சாகப்படுத்தும்படி எங்களை செய்வித்தது. பயனியர் அணியில் மற்றவர்களும் சேர்ந்துகொள்ளும்படி நாங்கள் அவ்வப்போது உதவி செய்தோம்.
மாட்ரிட், பார்சிலோனா போன்ற இடங்களில் 11 வருடங்கள் பிரயாண வேலை செய்த பிறகு, மறுபடியும் மோசமாகிக்கொண்டிருந்த எங்களுடைய ஆரோக்கியம் நியமிப்புகளை மாற்றும்படி அவசியப்படுத்தியது. நாங்கள் சாலமான்கா என்ற பட்டணத்தில் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம், அங்கு நான் ஒரு மூப்பராக பிரயோஜனமாயிருக்க முடியும். சாலமான்காவில் இருந்த சகோதரர்கள் எங்களை உடனடியாக வரவேற்றார்கள். ஒரு வருடத்துக்குப் பிறகு எங்களுடைய சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் வகையில் மற்றொரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது.
ரஃபேலா காரணம் சொல்லமுடியாத அளவுக்கு அதிக இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டாள், பெருங்குடலில் புற்றுநோய் இருப்பதாக சோதனைகள் காண்பித்தன. இப்போது நான் அதிக பலமுள்ளவனாயிருந்து என் மனைவிக்கு என்னால் முடிந்த எல்லா ஆதரவையும் கொடுக்க வேண்டியிருந்தது. எங்களுடைய முதல் பிரதிபலிப்பு அவநம்பிக்கை, அதைப் பின்தொடர்ந்து பயம். ரஃபேலா இவையெல்லாவற்றையும் சமாளிப்பாளா? இப்படிப்பட்ட சமயங்களில் யெகோவாவின் பேரில் முழுமையாய் நம்பிக்கை வைத்திருப்பது தான் நாம் தொடர்ந்திருக்க உதவி செய்யும். ரஃபேலாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, புற்றுநோய் மறுபடியும் ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் ஸ்பெய்னில் செலவழித்த 36 ஆண்டுகளின்போது ஏற்றத் தாழ்வுகளை நாங்கள் அனுபவித்திருந்தபோதிலும், இந்த ஆவிக்குரிய வளர்ச்சியின் முன்னேற்றத்தின் காலத்தினூடே வாழ்ந்து வந்தது இருதயத்துக்கு அனலூட்டுவதாய் இருந்தது. 1958-ல் 800 பிரஸ்தாபிகள் அடங்கிய சிறிய தொகுதி, இன்று 1,00,000-க்கும் மேலான பிரஸ்தாபிகள் அடங்கிய சேனையாக அதிகரித்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எங்களுடைய பிரச்சினைகள் எங்களுடைய அநேக சந்தோஷங்களினால்—மற்றவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு ஆவிக்குரியப்பிரகாரமாய் முதிர்ச்சியடைய உதவுவது, கணவனும் மனைவியுமாக ஒன்றாக வேலை செய்வது, சிறந்த முறையில் நாங்கள் எங்கள் வாழ்க்கையை உபயோகித்திருக்கிறோம் என்று உணருவது ஆகியவற்றால்—மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.
பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதிய தன் இரண்டாவது கடிதத்தில் இவ்வாறு சொல்கிறார்: “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.” (2 கொரிந்தியர் 4:1) கடந்த காலத்தை சிந்தித்துப் பார்க்கையில், விட்டுவிடுவதை தடைசெய்திருக்கும் அநேக காரணங்கள் என் வாழ்க்கையில் இருந்திருக்கின்றன. வளரும் பருவத்தின்போது என் பேரில் அக்கறை காண்பித்த உண்மையுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களின் முன்மாதிரி ஒரு நல்ல அஸ்திபாரத்தை அளித்தது. ஒரேவிதமான ஆவிக்குரிய இலக்குகளைப் பகிர்ந்துகொள்ளும் துணையைக் கொண்டிருப்பது ஒரு அற்புதமான உதவி; நான் மனச்சோர்வடைந்தபோது ரஃபேலா என்னை உற்சாகப்படுத்துவாள், நானும் அதேவிதமாக அவளுக்குச் செய்திருக்கிறேன். நகைச்சுவை உணர்வு இருப்பதும்கூட ஒரு பெரும் மதிப்புள்ள சொத்து. சகோதரர்களோடு சேர்ந்து சிரிப்பது—நம்மைக் குறித்தே சிரித்துக்கொள்வது—எப்படியோ பிரச்சினைகளைச் சமாளிக்கத்தக்கதாய் ஆக்குகிறது.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, சோதனைகளை எதிர்ப்படும்போது சகித்துக்கொள்வதற்கு யெகோவாவின் பலம் தேவைப்படுகிறது. நான் எப்போதும் பவுலின் வார்த்தைகளை நினைவுகூருவேன்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” யெகோவா நம் பக்கமாக இருப்பதால், விட்டுவிடுவதற்கு எப்போதும் நமக்கு அவசியமே இல்லை.—பிலிப்பியர் 4:13.
[பக்கம் 23-ன் படங்கள்]
1958-ஆம் வருடத்தில் ரானல்டும் ரஃபேலா டெய்லரும்
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
ஸ்பெய்னில் தடையுத்தரவின் போது ஒன்றுகூடி வருதல் (1969)