உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 1/15 பக். 10-15
  • யெகோவாவுக்குள் சந்தோஷமே நம் கோட்டை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்குள் சந்தோஷமே நம் கோட்டை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “சந்தோஷமாயிருப்பாயாக”
  • கிறிஸ்துவின் மூலமாக கடவுளோடு உறவு
  • மத சுயாதீனமும் அறிவொளியூட்டுதலும்
  • ராஜ்ய நம்பிக்கையும் நித்திய வாழ்க்கையும்
  • ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சகோதரத்துவம்
  • நோக்கமுள்ள ஒரு வாழ்க்கை
  • அசைக்கமுடியாத ஒரு கோட்டை
  • சந்தோஷ இருதயத்தோடு யெகோவாவை சேவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • கடவுள் கொடுத்த சுயாதீனம் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • சந்தோஷம்​—கடவுள் தரும் ஒரு குணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • யெகோவாவில் பூரிப்பு அடைவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 1/15 பக். 10-15

யெகோவாவுக்குள் சந்தோஷமே நம் கோட்டை

“இந்நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; யெகோவாவுக்குள் சந்தோஷமே உங்களுடைய கோட்டை.”—நெகேமியா 8:10, NW.

1, 2. (அ) ஒரு கோட்டை என்பது என்ன? (ஆ) தாவீது தான் யெகோவாவிடம் அடைக்கலம் புகுந்தார் என்பதை எவ்வாறு காட்டினார்?

யெகோவா ஒப்பற்ற ஒரு கோட்டையாக இருக்கிறார். ஒரு கோட்டை என்பது என்ன? அது அரணிப்பான ஓரிடம், பாதுகாப்பு அல்லது உயிர்பிழைத்திருப்பதற்குரிய ஓரிடம். பண்டைய இஸ்ரவேலின் தாவீது கடவுளைத் தன்னுடைய கோட்டையாக கருதினார். உதாரணமாக, தாவீது மகா உன்னதமானவரை நோக்கி ‘கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடின’ பாடலை எடுத்துக்கொள்ளுங்கள்.—சங்கீதம் 18, மேற்குறிப்பு.

2 தாவீது அந்தக் கிளர்ச்சியூட்டும் பாடலை இந்த வார்த்தைகளில் ஆரம்பித்தார்: “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.” (சங்கீதம் 18:1, 2) அநியாயமாக நாடுகடத்தப்பட்டு, சவுல் அரசனால் துரத்தப்பட்டுவந்த செம்மையானவராகிய தாவீது, ஏதோவொரு அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க ஒருவர் அரணிப்பான இடத்திற்குள் ஓடி ஒளிவது போல யெகோவாவிடம் அடைக்கலம் புகுந்தார்.

3. எஸ்றாவின் நாட்களிலிருந்த யூதர்கள் ஏன் “மிகுந்த சந்தோஷம்” அனுபவித்தனர்?

3 அவருடைய வழியில் உத்தமத்தைக் காப்பவர்களாக நடக்கிறவர்களுக்கு யெகோவா தரும் சந்தோஷம் அசைக்கமுடியாத கோட்டையாகும். (நீதிமொழிகள் 2:6-8; 10:29) கடவுளால் கொடுக்கப்படும் சந்தோஷத்தைக் கொண்டிருப்பதற்கு, மக்கள் தெய்வீக சித்தத்தைச் செய்யவேண்டும். இதன் சம்பந்தமாக, பொ.ச.மு. 468-ல் எருசலேமில் என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நகல் எடுப்பவரான எஸ்றாவும் மற்றவர்களும் நியாயப்பிரமாணத்தை அர்த்தத்துடன் வாசித்துக்காண்பிப்பதன் மூலம் புரிந்துகொள்ளுதலை அளித்தனர். பின்னர் ஜனங்கள் பின்வருமாறு துரிதப்படுத்தப்பட்டனர்: “நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.” யூதர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அறிவைப் பொருத்திப் பயன்படுத்தி, சந்தோஷமான கூடாரப்பண்டிகையை ஆசரித்தபோது “மிகுந்த சந்தோஷம்” அதன் விளைவாக இருந்தது. (நெகேமியா 8:1-12) ‘யெகோவாவில் சந்தோஷமே தங்கள் கோட்டையாகக்’ கொண்டிருந்தவர்கள் அவருடைய வணக்கத்துக்காகவும் ஊழியத்துக்காகவும் பெலனைத் திரட்டிக்கொண்டார்கள். யெகோவாவில் சந்தோஷமாயிருப்பது அவர்களுடைய கோட்டையாக இருந்தபடியால், இன்று கடவுளுடைய மக்களும்கூட சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். அப்படியென்றால், இன்றைய நாளில் அவர்களுடைய சந்தோஷத்திற்கான சில காரணங்கள் யாவை?

“சந்தோஷமாயிருப்பாயாக”

4. யெகோவாவின் மக்களுக்குச் சந்தோஷப்படுவதற்கு குறிப்பிடத்தக்க ஒரு காரணமாயிருப்பது எது?

4 ஒன்றாகக் கூடிவருவதற்கு யெகோவா செய்யும் ஏற்பாடு சந்தோஷத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகும். இஸ்ரவேலர் வருடந்தோறும் ஆசரித்த பண்டிகைகள் அவர்களுடைய இருதயங்களுக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவந்தது போலவே, யெகோவாவின் சாட்சிகளுடைய அசெம்பிளிகளும் மாநாடுகளும் இன்று அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவருகின்றன. இஸ்ரவேல் மக்கள் பின்வருமாறு சொல்லப்பட்டனர்: “உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.” (உபாகமம் 16:13-15) ஆம், கடவுள் அவர்கள் ‘சந்தோஷமாயிருக்கவேண்டும்’ என்று விரும்பினார். கிறிஸ்தவர்களின் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது, ஏனென்றால் அப்போஸ்தலன் பவுல் தன் உடன்விசுவாசிகளைப் பின்வருமாறு துரிதப்படுத்தினார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”—பிலிப்பியர் 4:4.

5. (அ) சந்தோஷம் என்பது என்ன, கிறிஸ்தவர்கள் அதை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றனர்? (ஆ) சோதனைகள் மத்தியிலும் நாம் எவ்வாறு சந்தோஷத்தைக் கொண்டிருக்கமுடியும்?

5 நாம் சந்தோஷமாயிருக்கவேண்டும் என்று யெகோவா விரும்புவதன் காரணமாக, அவருடைய பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்றாக சந்தோஷத்தை நமக்குக் கொடுக்கிறார். (கலாத்தியர் 5:22, 23) சந்தோஷம் என்பது என்ன? பிரயோஜனமும் விரும்பத்தகுந்ததுமான ஒன்றை எதிர்பார்ப்பதால் அல்லது பெற்றுக்கொள்வதால் உண்டாகும் இன்பம் தரும் ஒரு உணர்ச்சியாக அது இருக்கிறது. சந்தோஷம் உண்மையான மகிழ்வான ஒரு நிலையாக, களிகூருதலாகவும்கூட இருக்கிறது. கடவுளுடைய பரிசுத்த ஆவியின் இந்தக் கனி சோதனையின்கீழ் நம்மைத் தாங்குகிறது. “அவர் [இயேசு] தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” (எபிரெயர் 12:2) சீஷனாகிய யாக்கோபு இவ்விதமாக எழுதினார்: “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” ஆனால் ஒரு சோதனையைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியாதிருந்தால் அப்போது என்ன? அப்பொழுது அதை ஞானமாக கையாளுவதற்கு நாம் நம்பிக்கையோடு ஜெபிக்கலாம். பரம ஞானத்துக்கு இசைவாக செயல்படுவது, யெகோவாவில் சந்தோஷமாயிருப்பதை இழந்துபோகாமலே பிரச்சினைகளைத் தீர்க்க அல்லது தொடர்ந்து நீடித்திருக்கும் சோதனைகளைச் சமாளிக்க நமக்கு உதவிசெய்கிறது.—யாக்கோபு 1:2-8.

6. சந்தோஷத்திற்கும் உண்மை வணக்கத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

6 யெகோவா தரும் சந்தோஷம் உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிக்க நம்மைப் பலப்படுத்துகிறது. நெகேமியா மற்றும் எஸ்றாவின் நாட்களிலும் இதுதான் நடந்தது. அந்நாட்களில் தங்கள் கோட்டையாக யெகோவாவில் சந்தோஷமாயிருந்த யூதர்கள் உண்மை வணக்கத்தின் அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்குப் பலப்படுத்தப்பட்டனர். யெகோவாவின் வணக்கத்தை அவர்கள் முன்னேற்றுவித்தப்போது, அவர்களுடைய சந்தோஷம் அதிகரித்தது. இன்றும் அதுவே உண்மையாக இருக்கிறது. யெகோவாவின் வணக்கத்தாராக, மிகுதியாக களிகூருவதற்கு நமக்கு ஆதாரம் இருக்கிறது. இப்பொழுது நம்முடைய சந்தோஷத்திற்கான அநேக காரணங்களில் இன்னும் சிலவற்றைச் சிந்திப்போமாக.

கிறிஸ்துவின் மூலமாக கடவுளோடு உறவு

7. யெகோவாவின் சம்பந்தமாக, சந்தோஷமாயிருப்பதற்குக் கிறிஸ்தவர்களுக்கு என்ன காரணமிருக்கிறது?

7 யெகோவாவோடு நம்முடைய நெருக்கமான உறவு நம்மை பூமியின் மீது இருக்கும் அதிக மகிழ்ச்சியுள்ள ஜனமாக ஆக்குகிறது. கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பாக, ‘புத்தியில் அந்தகாரப்பட்டு, தேவனுக்குரிய ஜீவனுக்கு அந்நியராயிருக்கும்’ அநீதியுள்ள மனித சமுதாயத்தின் பாகமாக நாம் இருந்தோம். (எபேசியர் 4:18, NW) யெகோவாவுக்கு நாம் இனிமேலும் அந்நியராயில்லை என்பதற்காக எவ்வளவு சந்தோஷமுள்ளவர்களாயிருக்கிறோம்! நிச்சயமாகவே, அவருடைய தயவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி தேவையாக இருக்கிறது. நாம் “கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திரு”க்கவேண்டும். (கொலோசெயர் 1:21-23) இயேசுவின் சொந்த வார்த்தைகளுக்கு இசைவாக, யெகோவா நம்மை அவருடைய குமாரனிடமாக இழுத்துக்கொண்டதற்காக நாம் களிகூரலாம்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” (யோவான் 6:44) கிறிஸ்துவின் மூலமாக கடவுளோடுள்ள நம்முடைய மதிப்புவாய்ந்த உறவை நாம் உண்மையிலேயே போற்றுகிறோமென்றால், அதைக் கெடுத்துவிடக்கூடிய எந்தக் காரியத்துக்கும் எதிராக எச்சரிக்கையாயிருப்போம்.

8. நம்முடைய சந்தோஷமான நிலைக்கு இயேசு எவ்வாறு பங்களித்திருக்கிறார்?

8 இயேசுவின் மீட்பின் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலமாக பாவ மன்னிப்பு சந்தோஷத்திற்கு மிகப் பெரிய காரணமாகும், ஏனென்றால் இதுதானே கடவுளோடு நம்முடைய உறவைக் கூடியகாரியமாக்குகிறது. வேண்டுமென்றே பாவத்திற்குள் சென்றதன் மூலம், நம்முடைய முற்பிதா ஆதாம் எல்லா மனிதவர்க்கத்தின்மீதும் மரணத்தைக் கொண்டுவந்தான். என்றபோதிலும், அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு விளக்கினார்: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” பவுல் இவ்விதமாகவும்கூட எழுதினார்: “ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” (ரோமர் 5:8, 18, 19) இப்படிப்பட்ட அன்பான ஓர் ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் ஆதாமின் சந்ததியாரை மீட்பதற்கு யெகோவா பிரியமுள்ளவராக இருப்பதற்காக நாம் எவ்வளவு சந்தோஷமாயிருக்கலாம்!

மத சுயாதீனமும் அறிவொளியூட்டுதலும்

9. மதசம்பந்தமான ஒரு நோக்குநிலையிலிருந்து பார்க்கையில், நாம் ஏன் சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறோம்?

9 பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோனிலிருந்து விடுதலை, சந்தோஷமாயிருப்பதற்கு மற்றொரு காரணமாகும். தெய்வீக சத்தியமே நம்மை விடுதலையாக்கியிருக்கிறது. (யோவான் 8:32) இந்த மத வேசியிடமிருந்து விடுதலையானது, நாம் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளை அனுபவிக்காமலும் அவளோடுகூட முடிவில் அழிவுக்கு உட்படுத்தப்படாமலும் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 18:1-8) அவை அனைத்திலிருந்து தப்புவதைக் குறித்து வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை!

10. யெகோவாவின் மக்களாக நாம் என்ன அறிவொளியூட்டுதலை அனுபவித்துவருகிறோம்?

10 கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்துவதும் மிகுந்த களிகூருதலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. பொய் மதத்தின் செல்வாக்குகளிலிருந்து விடுபட்டவர்களாய், நம்முடைய பரலோக தந்தை ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைக்’ கொண்டு அளித்துவரும் படிப்படியாக தெளிவுபெறும் ஆவிக்குரிய உட்பார்வையை நாம் அனுபவித்துக் களிக்கிறோம். (மத்தேயு 24:45-47, NW) பூமியில் வாழும் அனைத்து மக்களிலும், யெகோவாவுக்கென்று தனிப்பட்ட பக்தியுடையவர்களாக இருப்பவர்கள் மாத்திரமே அவருடைய பரிசுத்த ஆவியையும் அவருடைய வார்த்தை மற்றும் சித்தத்தைப் பற்றிய ஆசீர்வதிக்கப்பட்ட புரிந்துகொள்ளுதலையும் உடையவர்களாக இருக்கின்றனர். அது பவுல் சொன்னவிதமாகவே இருக்கிறது: “நமக்கோ தேவன் அவைகளைத் [தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவற்றை] தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் [ஆவி, NW] எல்லாவற்றையும் தேவனுடைய ஆழங்களையும், ஆராய்திருக்கிறார்[து].” (1 கொரிந்தியர் 2:9, 10) நீதிமொழிகள் 4:18-லுள்ள வார்த்தைகள் காண்பிக்கிற படிப்படியான புரிந்துகொள்ளுதலை நாம் அனுபவித்து மகிழுவதற்காக நன்றியுள்ளவர்களாயும் சந்தோஷமுள்ளவர்களாயும் இருக்கலாம்: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.”

ராஜ்ய நம்பிக்கையும் நித்திய வாழ்க்கையும்

11. சந்தோஷமான ராஜ்ய நம்பிக்கை எவ்வாறு மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது?

11 நம்முடைய ராஜ்ய நம்பிக்கையும்கூட நம்மைச் சந்தோஷமுள்ளவர்களாக இருக்கச் செய்கிறது. (மத்தேயு 6:9, 10) யெகோவாவின் சாட்சிகளாக, கடவுளுடைய ராஜ்யமே எல்லா மனிதவர்க்கத்துக்கும் ஒரே நம்பிக்கை என்பதாக நாம் நீண்ட காலமாக அறிவித்து வந்திருக்கிறோம். உதாரணமாக 1931-ல் உலகம் முழுவதிலும் 51 மாநாடுகளில் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலமாக யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை நாம் தழுவிக்கொண்ட அந்த வருடத்தை நினைத்துப்பாருங்கள். (ஏசாயா 43:10-12) அந்தத் தீர்மானமும் J. F. ரதர்ஃபர்டின் (உவாட்ச் டவர் சொஸையிட்டியின் அப்போதைய பிரஸிடென்ட்) முக்கியமான மாநாடு பேச்சும் ராஜ்யம், உலகத்தின் நம்பிக்கை (ஆங்கிலம்) என்ற சிறுபுத்தகத்தில் வெளியிடப்பட்டன. கிறிஸ்தவமண்டலத்தை அவளுடைய விசுவாசதுரோகத்துக்காகவும் யெகோவாவின் புத்திமதியை அலட்சியம் செய்திருப்பதற்காகவும் குற்றஞ்சாட்டும்வகையில் அந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றொரு தீர்மானமும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. அது மேலுமாக அறிவித்ததாவது: “உலகின் நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யமே, வேறு எந்த நம்பிக்கையும் இல்லை.” ஒருசில மாதங்களுக்குள், யெகோவாவின் சாட்சிகள் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தச் சிறுபுத்தகத்தின் பிரதிகளை விநியோகித்திருந்தார்கள். அப்போது முதற்கொண்டு நாம் ராஜ்யமே மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை என்பதாக பல தடவைகள் வலியுறுத்திக் கூறிவந்திருக்கிறோம்.

12. யெகோவாவைச் சேவிப்பவர்களுக்கு முன்னால் என்ன சந்தோஷமான வாழ்க்கை எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன?

12 இராஜ்ய ஆட்சியின் நித்திய வாழ்க்கையின் எதிர்பார்ப்பிலும்கூட நாம் களிகூருகிறோம். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலான “சிறுமந்தை”க்கு சந்தோஷமான பரலோக நம்பிக்கை இருக்கிறது. “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்,” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (லூக்கா 12:32; 1 பேதுரு 1:3, 4) இன்று, யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலானோர் ராஜ்ய ஆட்சியின் எல்லைக்குள் பரதீஸில் நித்திய வாழ்வை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். (லூக்கா 23:43; யோவான் 17:3) நம்முடைய மகிழ்ச்சியான எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடக்கூடிய எதுவும் பூமியிலுள்ள வேறு எந்த ஜனத்துக்கும் இல்லை. நாம் அவற்றை எவ்வளவாக போற்றிப் பேணவேண்டும்!

ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சகோதரத்துவம்

13. சர்வதேச சகோதரத்துவத்தை நாம் எவ்வாறு கருதவேண்டும்?

13 கடவுள் அங்கீகரித்துள்ள ஒரே சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பதும்கூட மிகுந்த சந்தோஷத்திற்கு ஒரு காரணமாகும். மகிழ்ச்சிக்குரியவிதமாக, பூமியில் அதிகமாக விரும்பப்படத்தக்க கூட்டாளிகள் நமக்கு இருக்கின்றனர். யெகோவா தேவன் தாமே நம்முடைய நாளுக்கு குறிப்பாக கவனத்தைத் திருப்பி இவ்விதமாகச் சொன்னார்: “எல்லா தேசங்களையும் அசையப்பண்ணுவேன், எல்லா தேசங்களிலுமுள்ள விரும்பத்தக்க காரியங்கள் உள்ளே வரவேண்டும்; நான் இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன்.” (ஆகாய் 2:7, NW) உண்மைதான், எல்லா கிறிஸ்தவர்களும் அபூரணராயிருக்கின்றனர். என்றபோதிலும், யெகோவா இப்படிப்பட்டவர்களை இயேசு கிறிஸ்துவின் மூலமாக தம்மிடமாக இழுத்துக்கொண்டிருக்கிறார். (யோவான் 14:6) விரும்பத்தக்கவர்களாக யெகோவா கருதும் ஆட்களை அவர் தம்மிடமாக இழுத்துக்கொண்டிருப்பதன் காரணமாக, நாம் சகோதர சிநேகத்தைக் காட்டி, அவர்களை உயர்வாக மதித்து, தெய்வீக நடவடிக்கைகளில் அவர்களோடு ஒத்துழைத்து, சோதனைகளில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களுக்காக ஜெபம் செய்வோமானால் நம்முடைய சந்தோஷம் மிகுதியாயிருக்கும்.

14. என்ன ஊக்குவிப்பை 1 பேதுரு 5:5-11-லிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடியும்?

14 இவை அனைத்தும் நம்முடைய சந்தோஷத்துக்குப் பங்களிப்பதாய் இருக்கும். ஆம், யெகோவாவில் சந்தோஷமாயிருப்பதே பூமி முழுவதிலுமுள்ள நம்முடைய ஆவிக்குரிய சகோதரத்துவத்தின் கோட்டையாக இருக்கிறது. ஆம், நாம் அனைவரும் துன்புறுத்தலையும் மற்ற பெருங்கஷ்டங்களையும் அனுபவிக்கிறோம். ஆனால் இது நம்மை ஒன்றாக சேர்த்து, பூமியில் கடவுளுடைய ஒரே உண்மையான அமைப்பின் பாகமாக ஒற்றுமையின் ஒரு உணர்வை நமக்குக் கொடுக்கவேண்டும். பேதுரு சொன்னவிதமாக, கடவுள் நம்மை கவனித்துக்கொள்வார் என்பதை அறிந்தவர்களாய் நம்முடைய எல்லா கவலைகளையும் அவர் மீது வைத்துவிட்டு அவருடைய பலத்த கரங்களின்கீழ் நம்மைத் தாழ்த்தவேண்டும். பிசாசு நம்மை விழுங்குவதற்கு வகைதேடிக்கொண்டிருப்பதன் காரணமாக ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும், ஆனால் இதில் நாம் தனிமையாக இல்லை, ஏனென்றால் பேதுரு மேலுமாக சொல்கிறார்: “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.” சந்தோஷமுள்ள இந்தச் சர்வதேச சகோதரத்துவம் ஒருபோதும் முறிந்துவிடாது, ஏனென்றால் ‘கொஞ்சக்காலம் நாம் பாடநுபவித்தப் பிறகு, கடவுள் நம்முடைய பயிற்றுவிப்பை முடித்து நம்மைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்,’ என்ற உறுதிமொழி நமக்கிருக்கிறது. (1 பேதுரு 5:5-11) அதை எண்ணிப்பாருங்கள். நம்முடைய சந்தோஷமுள்ள சகோதரத்துவம் என்றுமாக நிலைத்திருக்கும்!

நோக்கமுள்ள ஒரு வாழ்க்கை

15. யெகோவாவின் சாட்சிகள் நோக்கமுள்ள ஒரு வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றனர் என்று ஏன் சொல்லப்படலாம்?

15 நமக்கு நோக்கமுள்ள ஒரு வாழ்க்கை இருப்பதன் காரணமாக தொந்தரவுகள் நிறைந்த இந்த உலகில் சந்தோஷம் நம்முடையதாக இருக்கிறது. நம்மையும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்கும் ஒரு ஊழியம் நம்மிடமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (ரோமர் 10:10) கடவுளுடைய உடன் வேலையாட்களாக இருப்பது நிச்சயமாகவே சந்தோஷமுள்ள ஒரு சிலாக்கியமாகும். இதன் சம்பந்தமாக பவுல் சொன்னார்: “பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். . . . மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.”—1 கொரிந்தியர் 3:5-9.

16, 17. யெகோவாவின் மக்கள் நோக்கமுள்ள சந்தோஷமான வாழ்க்கையைக் கொண்டிருப்பதை நிரூபிக்க என்ன உதாரணங்களைச் சொல்ல முடியும்?

16 யெகோவாவை உண்மையுடன் சேவிப்பது நம்மை சந்தோஷத்தால் நிரப்பும் நோக்கமுள்ள ஒரு வாழ்க்கையில் விளைவடைகிறது என்பதைக் காண்பிக்க அநேக உதாரணங்களைச் சொல்ல முடியும். பின்வரும் கூற்று ஓர் எடுத்துக்காட்டாகும்: “ஆட்கள் நிறைந்து காணப்பட்ட ராஜ்ய மன்றத்தைச் [அதனுடைய பிரதிஷ்டை நாள் நிகழ்ச்சியின்போது] சுற்றி பார்வையிட்டபோது நான், என்னுடைய மனைவி, எங்களுடைய மூன்று பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய துணைவர்கள் உட்பட என்னுடைய குடும்ப அங்கத்தினர்களில் எட்டுபேரை என்னால் பார்க்க முடிந்தது. . . . என்னுடைய மனைவியும் நானும் உண்மையிலேயே கடவுளுடைய சேவையில் மகிழ்ச்சியான, நோக்கமுள்ள ஒரு வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.”

17 ஒரு நபர் எந்த வயதிலும் யெகோவாவின் சேவையில் உண்மையான நோக்கமுள்ள சந்தோஷமான ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்பதை உணருவதும்கூட ஊக்கமளிப்பதாக இருக்கிறது. உதாரணமாக, தனியார் மருத்துவமனை ஒன்றில் பைபிள் சத்தியத்தைக் கற்றறிந்த ஒரு பெண்மணி, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக 102-வது வயதில் முழுக்காட்டப்பட்டார்கள். இப்படியாக அவர்கள் ‘மெய் கடவுளுக்குப் பயந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு’ சந்தோஷமான நோக்கத்தோடு தன்னுடைய வாழ்க்கையை முடித்தார்கள்.—பிரசங்கி 12:13, NW.

அசைக்கமுடியாத ஒரு கோட்டை

18. கடுமையான மனச்சோர்வை மேற்கொண்டு நம்முடைய சந்தோஷத்தை அதிகரிக்க என்ன செய்யப்படலாம்?

18 உண்மையுள்ளவர்களுக்கு யெகோவாவில் சந்தோஷமாயிருப்பது அசைக்கமுடியாத ஒரு கோட்டையாகும். என்றாலும், இந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருப்பது கெத்செமனேயில் இயேசுவைப் பின்வருமாறு சொல்லத் தூண்டியது போன்ற சோகமான சமயங்கள் நமக்கு ஒருபோதும் இராது என்பதை அர்த்தப்படுத்துவதில்லை: “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.” (மாற்கு 14:32-34) நாம் தன்னல நாட்டங்களுக்கு விட்டுகொடுத்ததால் கடுமையான மனச்சோர்வு விளைவடைந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் நம்முடைய வாழ்க்கைப் பாணியை மாற்றிக்கொள்வோமாக. சுயநலம் கருதாமல் வேதப்பூர்வமான மிகவும் பாரமான சுமையை ஏற்றிருப்பதால் நம்முடைய சந்தோஷம் குறைந்துவிட்டிருந்தால், அழுத்தத்தை இலகுவாக்கி சந்தோஷமுள்ள ஆவியை மீண்டும் புதுப்பிக்கக்கூடிய சரிப்படுத்தல்களை நாம் செய்யலாம். மேலுமாக, நாம் பாவமுள்ள மாம்சம், பொல்லாத உலகம் மற்றும் பிசாசையும் மும்முரமாக எதிர்த்துக்கொண்டிருப்பதன் முலம் அவரைப் பிரியப்படுத்த விழைந்தால் யெகோவா சந்தோஷத்தால் நம்மை ஆசீர்வதிப்பார்.—கலாத்தியர் 5:24; 6:14; யாக்கோபு 4:7.

19. கடவுளுடைய அமைப்பில் நமக்கிருக்கும் எந்தச் சிலாக்கியங்களையும் நாம் எவ்வாறு கருதவேண்டும்?

19 நாம் கலந்தாலோசித்திருக்கும் காரணங்களுக்காகவும் மற்ற அநேகவற்றிற்காகவும், நமக்கு மிகுந்த சந்தோஷம் இருக்கிறது. சபை பிரஸ்தாபிகளாக இருந்தாலும் சரி அல்லது ஏதாவது ஒரு வகையான முழு நேர சேவையில் பங்குகொண்டிருந்தாலும் சரி, நாம் அனைவருமே கர்த்தருடைய சேவையில் செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருக்கமுடியும், இது நிச்சயமாகவே சந்தோஷத்தைக் கொண்டுவரும். (1 கொரிந்தியர் 15:58) யெகோவாவின் அமைப்பில் நமக்கு இருக்கும் சிலாக்கியங்கள் எதுவாக இருப்பினும், அதற்காக நன்றியுள்ளவர்களாக இருந்து, நம்முடைய அன்புள்ள, சந்தோஷமுள்ள கடவுளுக்குத் தொடர்ந்து பரிசுத்த சேவையைச் சந்தோஷமாக செய்துகொண்டிருப்போமாக.—1 தீமோத்தேயு 1:11.

20. நம்முடைய மிகப் பெரிய சிலாக்கியம் என்ன, நாம் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?

20 அவருடைய சாட்சிகளாக யெகோவாவின் மகா பெரிய பெயரைத் தாங்கியிருக்கும் நம்முடைய சிலாக்கியத்தில் களிகூருவதற்கு விசேஷமாக நமக்குக் காரணம் இருக்கிறது. ஆம், நாம் அபூரணராகவும் அநேக சோதனைகளை எதிர்ப்படுகிறவர்களாகவும் இருக்கிறோம், ஆனால் யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய அதிசயமான ஆசீர்வாதங்களை எப்போதும் மனதில் வைப்போமாக. மேலுமாக நம்முடைய பிரியமான பரலோக தகப்பன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை நினைவில் வையுங்கள். யெகோவாவில் சந்தோஷமாயிருப்பது நம்முடைய கோட்டையாக இருக்குமானால் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்போம் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்.

நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

◻ ‘யெகோவாவில் சந்தோஷமாயிருப்பது’ என்பது என்ன?

◻ கிறிஸ்தவர்கள் எவ்விதமாக உண்மையான சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்?

◻ யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமுள்ளவர்களாக இருப்பதற்கு சில காரணங்கள் யாவை?

◻ யெகோவாவில் சந்தோஷமாயிருப்பது ஏன் அசைக்கமுடியாத ஒரு கோட்டையாக இருக்கிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்