உங்களுக்கொரு உடல்நல பரிசோதனையா?
மருத்துவ சிகிச்சைகளைப் பற்றியும் நோய்க் கண்டுபிடிப்பு முறைகளை (diagnostic practices) பற்றியும் உவாட்ச் டவர் சொஸையிட்டி தனிப்பட்ட நபர்களின் சார்பாக சிபாரிசு செய்வதோ தீர்மானங்கள் எடுப்பதோ கிடையாது. எனினும், குறிப்பிட்ட சில முறைகளில் பைபிள் நியமங்களின் அடிப்படையில் கேள்விக்குரிய அம்சங்கள் இருக்குமானால், இவற்றிற்குக் கவனம் செலுத்தலாம். பின்னர், ஒவ்வொரு நபரும் உள்ளடங்கியிருப்பவற்றைச் சீர்தூக்கிப்பார்த்து என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கலாம்.
அன்பார்ந்த சகோதரர்களே: உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு [குறிப்பிட்ட உடல்நல சிகிச்சையாளர்] நல்ல வெற்றிகரமான சிகிச்சை அளிப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர் பயன்படுத்தும் ஒரு முறையானது எனக்குச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. . . . பரிசோதனையின்மூலம் கோளாறு என்ன என்று கண்டுபிடிக்கிறார். பின்னர் என்னவகை மருந்து தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க, ஒரு சுரப்பிக்கு அல்லது உறுப்புக்கு அருகிலுள்ள தோலுக்கருகில் ஒரு மருந்து பாட்டிலை வைக்கிறார். நோயாளியின் உயர்த்தப்பட்ட கையை கீழ்நோக்கி இழுக்க முயற்சிக்கிறார். அந்தக் கையை கீழே இழுக்கத் தேவையான சக்தியை வைத்து என்னவகை மருந்து, எவ்வளவு அளவு என்பதைத் தீர்மானிக்கிறார். இதன் தத்துவம் என்னவென்றால் அந்த மருந்திலிருக்கும் எலக்ட்ரான்கள் பாட்டிலின் உலோக மூடியின் வழியாக ஒரு மின்னோட்டத்தைப்போல ஒரு உடலுறுப்புக்குள் பாய்ந்து சென்று அதை உறுதிப்படுத்துகின்றன. இது நிலத்தடி நீர்த்தளம் காணுதலை (water witching) போன்றதா?
ஊட்டச்சத்துத் தேவைகளைத் தீர்மானித்தல், உணர்ச்சி சம்பந்தமான பிரச்சினைகளைச் சீர்தூக்குதல், ஞாபகசக்தியை மதிப்பிடுதல், அனுதின வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைத் தீர்த்துவைத்தல் போன்றவற்றிற்குச் சிலர் பயன்படுத்தும் ஒரு பழக்கத்தைப் பற்றியதாக இருக்கிறது அ.ஐ.மா.-வின் ஆரிகானிலிருந்து வரும் இந்தக் கடிதம். இந்தப் பழக்கம் எவ்வளவுதான் பொதுவானதாக இருந்தாலும், இதை எழுதியவரின் சந்தேகங்கள் நியாயமானவைதானா?
உடல்நலம்—என்ன விலையில்?
பூர்வ காலங்களிலிருந்தே, தங்களுக்கு ஏன் நோய் வருகிறது, எப்படி குணமடைவது என்றெல்லாம் புரிந்துகொள்ள மக்கள் முயன்றிருக்கின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் அனுகூலம் பெற்றவர்களாக இருந்தனர். ஏனென்றால் தாங்கள் பாவிகள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது; மேலும் கடவுளிடமிருந்து பெறப்பட்ட நியாயப்பிரமாணங்கள் அவர்களுக்கு இருந்தன. இவை இவர்களுக்கு அநேக நோய்கள் வருவதையோ அல்லது இவர்கள் அவற்றைப் பரப்புவதையோ தவிர்க்க அவர்களுக்கு உதவின. (லேவியராகமம் 5:2; 11:39, 40; 13:1-4; 15:4-12; உபாகமம் 23:12-14) இருப்பினும்கூட, கடவுளுடைய ஜனங்கள் தங்களுடைய காலத்திலிருந்த தகுதிபெற்ற மருத்துவர்களின் உதவியையும் நாடினர்.—ஏசாயா 1:6; 38:21; மாற்கு 2:17; 5:25, 26, NW; லூக்கா 10:34; கொலோசெயர் 4:14.
பண்டைக்கால பாபிலோனியர்களிலிருந்தும் எகிப்தியர்களிலிருந்தும் எவ்வளவு வித்தியாசப்பட்டவர்கள் இவர்கள்! அவர்களுடைய “மருத்துவர்கள்” ஏதோ இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை அடிப்படையாகக்கொண்டு குணமாக்கினார்கள். ஆயினும் அவர்களுடைய “சிகிச்சைகள்” அநேகம் இப்போது போலி என்று பட்டம் தீட்டப்படும். ஒரு மருத்துவர் பன்றியின் கண்கள், அஞ்சனக்கல், காவிக்கல், தேன் ஆகியவற்றாலான நாறிப்போன ஒரு கூட்டுப் பொருளைக்கொண்டு கண்பார்வை இழப்புக்குச் சிகிச்சை அளித்ததாக எகிப்தியரின் பழங்கால எழுத்துப்பதிவு ஒன்று கூறுகிறது. இந்த மருந்துக்கலவை நோயாளியின் காதில் ஊற்றப்பட்டது! இந்தச் சிகிச்சை “உண்மையிலேயே பிரமாதம்” என்பதாக பழங்கால சான்றிதழ் ஒன்று கூறுகிறது. இதன் வினோதத்தன்மை அல்லது மர்மம் அதன் கவர்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கக்கூடும்.
பாபிலோனியர்களும் எகிப்தியர்களும் அடிக்கடி மாயமந்திர சக்திகளை வேண்டிக்கொண்டனர்.a ஒரு பூஜாரி/மருத்துவர் செம்மறியாட்டின் நாசித் துவாரங்களில் சுவாசிக்கும்படி நோயாளி ஒருவரைக் கேட்டுக்கொள்ளலாம். காரணம் ஏதோவொரு வல்லமை அல்லது சக்தி நோயாளியிடமிருந்து மற்றொரு ஜீவிக்குள் பாய்ந்து ஒரு விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்தச் செம்மறியாடு கொல்லப்பட்டு, அதன் ஈரல் அந்த நோயாளியின் வியாதியையோ அவனுடைய எதிர்காலத்தையோ வெளிப்படுத்தக்கூடும் என்று நம்பப்பட்டது.—ஏசாயா 47:1, 9-13; எசேக்கியேல் 21:21.
சந்தேகமின்றி, பூர்வ இஸ்ரவேலில் இருந்த கடவுள் பயமுள்ள ஒரு மருத்துவர் ஆவிக்கொள்கைப் பழக்கங்களை உபயோகித்திருக்கமாட்டார். ஞானமாக கடவுள் இவ்வாறு கட்டளையிட்டார்: “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும் . . . உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” (உபாகமம் 18:10-12; லேவியராகமம் 19:26; 20:27) கடவுளுடைய இன்றைய ஊழியர்களுக்கும் இது பொருந்துவதாக இருக்கிறது. எச்சரிக்கையாயிருப்பது சரியானதாக இருக்கிறது.
சமீப வருடங்களில் அநேகர் “மாற்று” நோய்க் கண்டுபிடிப்பு முறைகளையும் சிகிச்சைகளையும் நாடிப் போயிருக்கின்றனர். இது அடிப்படையாகவே ஒரு தனிப்பட்ட தீர்மானம் எடுக்கவேண்டிய அம்சமாக இருக்கிறது. (மத்தேயு 7:1; ஒப்பிடுங்கள்: ரோமர் 14:3, 4.) எந்தக் கிறிஸ்தவனும், உயிர்களைக் காப்பாற்றும் நிச்சயமான ஒரே வழியாகிய ஊழியத்தை நிழலாடச் செய்யுமளவுக்கு முரண்பாடான உடல்நலப் பிரச்சினைகளில் அமிழ்ந்துவிடுவது வருத்தத்திற்கு உரியதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. (1 தீமோத்தேயு 4:16) புதிய உலகத்தில் மருத்துவ அணுகுமுறைகள், மூலிகைகள், உணவுமுறைகள், அல்லது மன மற்றும் உடல் மருத்துவ முறைகள் ஆகியவற்றால்தான் வியாதிகள் குணமாக்கப்பட்டு பரிபூரண ஆரோக்கியம் அடையப்படும் என்று பைபிள் கூறுகிறதில்லை. உண்மையில், இயேசுவின் கிரய பலியின் அடிப்படையில் கிடைக்கும் பாவமன்னிப்பின் மூலம் மட்டுமே முழுமையான சுகப்படுத்துதல் கிடைக்கும்.—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 22:1, 2.
ஈடுபட்டிருக்கும் சக்திகள் யாவை?
தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தசைப் பரிசோதனைமுறை சம்பந்தமாக சொந்த தீர்மானம் எடுப்பதில் ஒரு கிறிஸ்தவன் என்னென்ன காரியங்களைக் கருத்தில்கொள்ள விரும்பலாம்?
தசைகளின் பலத்தை அல்லது பிரதிபலிப்பைப் பரிசோதிக்கும் குறிப்பிட்ட சில முறைகள் பழங்கால மருத்துவத்தின் பாகமாக இருக்கின்றன; ஆகவே அவை தகுமா தகாதா என்று ஒருசிலரே சந்தேகிப்பர். உதாரணமாக, இளம்பிள்ளைவாதம் (poliomyelitis) தசைகளைப் பலவீனப்படுத்தக்கூடும். இதற்கான சிகிச்சை உடலியக்க இயல் (kinesiology)—“தசைகள் மற்றும் தசைகளின் இயக்கம் பற்றிய ஆய்வு”—என்று அழைக்கப்படுவதை உட்படுத்தலாம். கைகால் விளங்காமல்போன நோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கான சிகிச்சையிலும் இப்படிப்பட்ட உடலியக்க இயல் உபயோகிக்கப்படுகிறது. அத்தகைய சிகிச்சையை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்வார்கள்.
ஆனால் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்த தசைப் பரிசோதனைபற்றி என்ன? இவ்வகை “உடலியக்க இயல்” குறிப்பிட்ட சில உணவுகள், மூலிகைகள், அல்லது வைட்டமின்கள் ஒரு நபருக்கு உதவி செய்கின்றனவா அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடிக்கடி செய்வதுபோல, ஒரு ஆள் தன்னுடைய கையை நீட்டுகிறான், தசையின் பலத்தைக் கண்டுபிடிக்க ஒரு மருத்துவர் கீழ்நோக்கி அழுத்துகிறார். அடுத்ததாக பரிசோதிக்கப்படுபவன் ஒரு ஊட்டச்சத்துப் பொருளையோ மற்ற பொருளையோ தன்னுடைய வாயில் அல்லது தனது வயிற்றின்மீது அல்லது தனது கையில் வைத்துக்கொள்கிறான். பின்னர் கைத் தசைகள் மீண்டும் பரிசோதிக்கப்படுகின்றன. அந்த ஊட்டச்சத்து அவனுக்குத் தேவையானால் அவனுடைய கை பலமடைந்திருக்கும்; அது அவனுக்குக் கேடுவிளைவிக்குமானால், தசைகள் பலவீனமடைந்திருக்கும்.b
இதை முயற்சித்துப் பார்த்திருக்கிற சிலர் இது பலனளிக்கக்கூடியது என்றும், அதன் விளைவு உடலின் உள்ளிருக்கும் சக்திகளின் ஆதாரத்தினால் உண்டாக்கப்படுகிறது என்றும் கருதுகின்றனர். நவீன அறிவியலால் விவரிக்கப்பட முடியாத ஆனால் நடைபெறுகிற அல்லது கவனிக்கப்பட முடிகிற எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன அல்லவா என்று அவர்கள் யோசிக்கின்றனர். ஆகவே, மருத்துவர்கள் இதுவரை இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சக்தியின் ஓட்டங்களோ, சக்திகளுக்கும் பொருட்களுக்கும் இடையே ஏற்படும் செயல்விளைவுகளோ இருக்கலாம் என்று அவர்கள் அடித்துச் சொல்கின்றனர்.
மறுபட்சத்தில், அப்ளைட் கைனிசியாலஜி என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “ஊட்டச்சத்துப் பொருட்களைப் போன்ற ரசாயன பொருட்களைக் கையில் பிடித்துக்கொண்டு தசையைப் பரிசோதிப்பதன் மூலம் அவை மதிப்பிடப்படுகின்றன என்று சிலசமயங்களில் [புத்தகங்கள்] கற்பிக்கின்றன. ஆனால் இவ்வகைப் பரிசோதனை எவ்வளவும் நம்பத்தக்கது என்று உறுதிப்படுத்தும் எந்த அத்தாட்சியும் இல்லை. . . . பரிசோதிப்பவர் பரிசோதனை முறையைப்பற்றி திருத்தமான தகவல்களைப் பெறவிடாமல் அவருடைய தப்பெண்ணம் தடைசெய்யும் அளவுக்கு அவரின் தத்துவரீதியிலான மனப்பான்மை வல்லமைவாய்ந்ததாக இருக்கிறது.” “மனித தசைப் பரிசோதனையில் அனுபவமுள்ள ஒரு பரிசோதனையாளர், பரிசோதனையில் ஒரு மிகச் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், அவருடைய தீர்மானத்திற்கு ஏற்றாற்போல் பரிசோதிக்கப்படுபவரின் தசையைப் பலமுள்ளதாகவோ பலமற்றதாகவோ எளிதில் தோன்றச் செய்யமுடியும்.”
ஜாக்கிரதை!
எனினும், ஒரு சில தசைப் பரிசோதனை இதற்கப்பால் போகிறது. “மாற்றாள் பரிசோதனை” என்று பெயரிடப்பட்டிருக்கும் முறையைக் கவனியுங்கள். இது பரிசோதிக்கப்பட முடியாதளவு பலவீனமாயிருக்கும் வயதான ஒரு ஆளிடமோ ஒரு குழந்தையிடமோ உபயோகிக்கப்படலாம். ஒரு மாற்றாள் அந்தக் குழந்தையின் கையைத் தொடுகையில், மருத்துவர் மாற்றாளின் கையைப் பரிசோதிக்கிறார். இது செல்லப் பிராணிகளுக்கும்கூட பொருத்தப்படுகிறது. காலி நாய், ஜெர்மானிய நாய், அல்லது வியாதியுற்றிருக்கும் மற்ற செல்லப் பிராணிகள் ஆகியவற்றின்மீது ஒரு மாற்றாள் கையை வைத்திருக்கையில் அவனுடைய கை பரிசோதிக்கப்படுகிறது.
அத்தகைய செயல்களைக் கண்டனம் செய்யும் நிலையில் நாம் இல்லை. ஆனால் ‘இந்த விளைவுகளுக்குப் பின்னால் இயற்பியல் சார்ந்த சரீரப்பிரகாரமான சக்திகள் இருக்கின்றனவா?’ என்று நீங்கள் கேட்கலாம். அண்டக் கதிர்களும் (cosmic rays) நுண்ணலைகளும் (microwaves) பல்வேறு வகை மின்காந்தக் கதிர்வீச்சுக்களும் (electromagnetic radiation) இருக்கின்றன என்பதாக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். ஆனாலும், செல்லப் பிராணிகளும் குழந்தைகளும் உட்பட்ட அனைத்து உயிரிகளும் தங்களிலிருந்து வெளியேறி ஒரு இரண்டாவது நபருக்குள் பரிசோதித்தறியப்படக்கூடிய விளைவை உண்டாக்கவல்ல சக்திகளைக் கொண்டிருக்கின்றனவா என்ன? சக்திகள் வெளியேறி ஒரு செம்மறியாட்டிற்குள் புகுந்து பாதிப்பை உண்டாக்கக்கூடும் என்று பாபிலோனியர்கள் நினைத்தனர். நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளலாம், ‘மனிதரிலோ விலங்குகளிலோ அதேபோல ஏதாவது இன்று ஏற்படக்கூடும் என்று நான் நம்புகிறேனா? அல்லது அந்த விளைவுகளுக்கு வேறு ஏதேனும் விளக்கம் இருக்கக்கூடுமா?’
ஒரு நபரின் “சக்திகளை” உலோக சுருள்கள் அல்லது ஊசல் குண்டுகள் போன்ற சாதனங்களைக்கொண்டு அளப்பதாக சுகமளிக்கும் சிலர் உரிமைபாராட்டிக் கொள்கின்றனர். சுகமளிப்பவரின் “சக்தி களம்” நோயாளியின் சக்தி களத்தோடு செயல்விளைவுகளைக் கொண்டிருக்கும்போது இவை அசைவதாகக் கருதப்படுகின்றன. இத்துறையின் மருத்துவரும் எழுத்தாளரும், ஒருகாலத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும் இருந்த ஒருவர், சிலசமயங்களில் ஒரு ஊசல் குண்டை உபயோகித்துக் கண்டுபிடிக்கிறார். தனிப்பட்ட ஆட்களைச் சூழ்ந்திருப்பதாகச் சொல்லப்படும் “மனித சக்தி களத்தை” (the human energy field) அல்லது வண்ண ஒளிவட்டத்தைத் தன்னால் பார்க்க முடிவதாகவும்கூட அவர் உறுதிப்படுத்தினார். ஒரு உடலின் உள்ளே உள்ள கட்டிகளை, இரத்த செல்களை, அல்லது நுண்கிருமிகளைப் பார்ப்பதற்கும் கடந்த காலத்தைக் காண்பதற்கும் தான் “அகப் பார்வையை” உபயோகிப்பதாக அவர் அடித்துக்கூறினார்.c
முன்பே குறிப்பிட்டிருந்தபடி, கைப் பலத்தின் வாயிலாக சக்திகளை அளத்தல் உணர்ச்சிகளைப் பரிசோதிக்க பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பெரும் எண்ணிக்கையில் விற்பனையாகும் புத்தகம் ஒன்று இவ்வாறு சொன்னது: “ஒரு சிறிய உணர்ச்சி சம்பந்தமான பரிசோதனையை விரும்பினால், அதேசமயம் உள்ளடக்க ‘உங்களுக்குப் பிரச்சினை ஏதாவது இருக்கிறதா?’ என்று சத்தமாகக் கேட்டு மறுசோதனை செய்யுங்கள். ஊட்டச்சத்து போதாததாக இருந்தால் இது அவ்வப்போது கையைப் பலவீனப்படுத்திவிடும்.” அத்தகைய ஒரு பரிசோதனை முறையைக் “குறிப்பிட்ட சரீரப்பிரகாரமான, உணர்ச்சி சம்பந்தமான அல்லது ஆவிக்குரிய அதிர்ச்சி எந்த வயதில்” ஏற்பட்டது “என்று கண்டுபிடிக்க” சிலர் பயன்படுத்துகின்றனர். அனுதின வாழ்க்கை விஷயங்களில் ‘வேண்டும் அல்லது வேண்டாம்’ என்கிற தீர்மானங்களை எடுக்கவும் இது உபயோகப்படுத்தப்படுகிறது.
இத்தகைய தசைப் பரிசோதனையை (உடலியக்க இயல்) செய்யும் அநேகர், தங்களுடைய முறை சற்றுமுன் விவரித்த முறையிலிருந்து வித்தியாசப்பட்டது, ஆவிக்கொள்கையோடு சம்பந்தமே கிடையாது, அல்லது தாங்கள் உணர்ச்சி சம்பந்தமான பரிசோதனை ஒன்றும் செய்வதில்லை என்றெல்லாம் சொல்லலாம். இருந்தபோதிலும், அவர்களின் செயல்முறை, விசேஷித்த வல்லமை பெற்றிருப்பதாக உரிமைபாராட்டும் ஒருசிலரால் மட்டுமே பரிசோதிக்கப்படக்கூடிய அல்லது காணப்படக்கூடிய, ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் சக்திகளில் உள்ள நம்பிக்கையையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறதா?
கிறிஸ்தவர்கள் அத்தகைய பிரச்சினைகளை ஏனோதானோ என்று கருதுவதில்லை. கடவுள் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டிருந்தார்: “[மர்ம சக்திகளோடே, NW] ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.” (ஏசாயா 1:13) அந்தத் தேசத்தினர் விசுவாச துரோகிகளானபோது, அவர்கள் ‘குறிகேட்டு சகுனம் பார்த்தனர்.’ (2 இராஜாக்கள் 17: 17, NW; 2 நாளாகமம் 33:1-6, NW) தெளிவாகவே அவர்கள் விசேஷித்த சடங்குகள் மூலம் தகவல்களை நாடி, ‘மர்மமானதை’ பேசினார்கள்.—சகரியா 10:2, NW.
ஒரு சில தசைப் பரிசோதனை முறை நோயாளிக்கோ சிகிச்சை அளிப்பவருக்கோ எந்தத் தீங்கும் விளைவிக்காதவையாய் இருக்கலாம். இருந்தாலும், தெளிவாகவே, ஒரு சிலவற்றில் அகப் பார்வை, மர்ம ஒளிவட்டம், ஊசல் குண்டின் உபயோகம் போன்ற மர்ம அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட அம்சங்கள் இருக்கலாம். மர்ம சக்திகளைக் கிறிஸ்தவன் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் சாத்தானின் ஆழமான காரியங்களைப்பற்றி ஆர்வமுள்ளவர்களாக இல்லை. அவர்கள் அவற்றைப் பரிசோதித்துக்கூட பார்க்கக்கூடாது. (வெளிப்படுத்துதல் 2:24) மாறாக கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிற ஆவிக்கொள்கை பழக்கத்தோடு தொடர்புள்ளதாகத் தோன்றுகிற எதைப்பற்றியும் எச்சரிக்கையாய் இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது.—கலாத்தியர் 5:19-21.
சுகமளிக்கும் ஒருவர் என்ன செய்கிறாரோ அது அவருடைய பொறுப்பே; அதை மறுபார்வை செய்து ஒவ்வொருவரின் உரிமைபாராட்டுதல்கள்மீதோ செயல்முறைகள்மீதோ தீர்ப்பு வழங்குவது எங்களது நோக்கம் கிடையாது. இந்த முறைகள் சிலவற்றில் மர்ம சக்திகள் உட்பட்டிருக்கின்றன என்று நீங்கள் உணர்ந்தாலும்கூட, அவற்றைச் செய்து பார்த்தவர்களில் அநேகர் எந்தவொரு கள்ளம்கபடமுமின்றி ஆவிக்கொள்கைகளில் ஈடுபடவேண்டும் என்ற எந்த எண்ணமும் இன்றியும்தான் செய்தனர் என்பது தெளிவாக இருக்கிறது. அது அவர்கள் நம்பிக்கையற்றுப்போன நிலையில் உடல்நலத்தை விரும்பியதன் அடையாளமாக மட்டுமே இருந்திருக்கலாம். இருப்பினும், அத்தகைய பழக்கங்களில் ஈடுபட்டு இருந்திருக்கிற சிலர், அதிலிருந்து கிடைத்த எந்தச் சரீரப்பிரகாரமான பலனும் அதனால் வரும் ஆவிக்குரிய ஆபத்தைப் பார்க்கையில் பிரயோஜனமற்றது என்று தீர்மானித்திருக்கின்றனர்.
மீண்டும், அத்தகைய தனிப்பட்ட காரியங்களில் என்ன செய்வது என்பதைப்பற்றி ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தீர்மானிக்கவேண்டும். எனினும், கிறிஸ்தவர்கள் கடவுளுடைய இந்தக் கட்டளையை ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) இது உடல்நல அனுகூலங்களைக் கோருவதற்கும் பொருந்துவதாக இருக்கிறது.
உண்மை வணக்கத்திலிருந்து கடவுளுடைய ஊழியர்களைத் திசைத்திருப்ப சாத்தான் ஆவலோடு காத்திருக்கிறான். மற்ற அக்கறைகளில் கிறிஸ்தவர்களைக் கவர்ச்சியடையச் செய்வதன்மூலம் பிசாசால் இதைச் செய்யமுடிந்தால் அவன் ஆர்ப்பரிப்பான். அவர்களை ஆவிக்கொள்கைக்குள் இழுக்கும் மர்ம பழக்கங்களாக இருக்கக்கூடிய அல்லது இருப்பதாகத் தோன்றக்கூடிய காரியங்களில் கவர்ச்சியடைந்தார்களேயானால் அவன் இன்னும் அதிகம் திளைப்படைவான்.—1 பேதுரு 5:8.
கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லையென்றாலும், மாயமந்திர பழக்கங்களைப் பற்றிய யெகோவா தேவனின் நோக்குநிலை மாறிவிடவில்லை. முன்பே கூறப்பட்டதுபோல, “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும்” உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம் என்றும்; “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; . . . உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்,” என்றும் கடவுள் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார்.—உபாகமம் 18:10-13.
“வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” ஆகவே, “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்” தரித்துக்கொண்டிருப்பது இன்று கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு விவேகமானதாக இருக்கிறது!—எபேசியர் 6:11, 12.
[அடிக்குறிப்புகள்]
a அநேகர் இன்னும் சூனிய பூஜாரிகளையும் (shamans) சூனிய வைத்தியர்களையும் (witch doctors) அல்லது அவர்களைப் போன்ற சுகப்படுத்துபவர்களிடமும் ஆலோசனை பெறுகின்றனர். சூனிய பூஜாரி என்றால், “நோயாளியை குணப்படுத்துவதற்கும், ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்கும், சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மாயமந்திரத்தை உபயோகிக்கும் ஒரு பூஜாரியாவான்.” சூனிய வைத்தியனோ சூனிய பூஜாரியோ மூலிகைகளை ஆவிக்கொள்கைப் பழக்கங்களோடு (மாயசக்திகளை வேண்டிக்கொள்வது) சேர்த்து உபயோகிக்கலாம். ஆவிக்கொள்கையில் அவ்வாறு ஈடுபடுவது குணப்படுத்துவதாகத் தோன்றினாலும், கவனமுள்ள உண்மைத்தன்மையுள்ள ஒரு கிறிஸ்தவன் அதைத் தவிர்க்கவேண்டும்.—2 கொரிந்தியர் 2:11; வெளிப்படுத்துதல் 2:24; 21:8; 22:15.
b இது பொதுவான ஒரு விவரிப்பு மட்டுமே, ஆனால் பரிசோதனை முறை வித்தியாசப்படலாம். எடுத்துக்காட்டாக, பரிசோதிக்கப்படுபவன் தன்னுடைய கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து அழுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படலாம். அப்போது மருத்துவர் அவற்றைப் பிரிப்பதற்காக இழுக்க முயற்சிக்கிறார்.
c அவர் எழுதுகிறார்: “அதிசயங்களாகத் தோன்றும் இதுபோன்ற சம்பவங்கள் எப்படி நடக்கின்றன? . . . நான் உபயோகிக்கும் முறை கைகளை வைத்தல், விசுவாச குணப்படுத்துதல் அல்லது ஆவிக்குரிய குணப்படுத்துதல் என்றழைக்கப்படுகிறது. இது மர்மம் எதுவுமே இல்லாத ஒளிவுமறைவற்ற ஒரு செயல்முறையாகும். . . . ஒவ்வொருவருக்கும் மாம்ச உடலை சூழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் பரஸ்பரமாக ஊடுருவும் ஒரு சக்தி களம் அல்லது ஒளிவட்டம் இருக்கிறது. இந்தச் சக்தி களமானது உடல்நலத்தோடு நெருக்கமான தொடர்புடையதாக இருக்கிறது. . . . மனக்கண்ணால் காணக்கூடிய கூரிய உணர்வு ஒருவித ‘பார்த்தல்’ ஆக இருக்கிறது. இதில் உங்களுடைய இயல்பான பார்வையின் உதவியின்றி ஒரு படத்தை உங்களுடைய மனக்கண்ணில் காண்கிறீர்கள். இது கற்பனையல்ல. இது சிலசமயங்களில் புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல் (clairvoyance) என்று குறிப்பிடப்படுகிறது.”