கிறிஸ்மஸைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள்? கிறிஸ்மஸ் (1) உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து இருப்பதற்கான ஒரு சமயம்; (2) விருந்து படைப்பதற்கான ஒரு சமயம்; (3) மத சம்பந்தமான ஒரு சமயம்; (4) அழுத்தங்கள் நிறைந்த ஒரு சமயம்; (5) வீட்டை நினைத்துத் துயரப்படுவதற்கான ஒரு சமயம்; (6) அமர்க்களமான வியாபாரத்துக்கான ஒரு சமயம்.
பிரிட்டனில் நடத்தப்பட்ட சுற்றாய்வில் பேட்டி காணப்பட்ட 1,000 பேருக்கும் அதிகமானவர்களில், 6 சதவீதத்தினர் மட்டுமே கிறிஸ்மஸை முக்கியமாக ஒரு மத சம்பந்தமான சமயமாக கருதினர். இது ஒருவேளை ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம். இதற்கு மாறாக, 48 சதவீதத்தினர் கிறிஸ்மஸ் முக்கியமாக தங்களுடைய குடும்பத்தாரோடு சேர்ந்திருப்பதற்கான ஒரு சமயம் என்று கருதினர். மெய்யாகவே, அது பிள்ளைகளுக்கான விசேஷித்த ஒரு சமயம் என்பதாக அநேகர் வாதாடுகின்றனர். எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், கிறிஸ்மஸில் மிகவும் பிடித்தது எது என்று ஒரு 11-வயது பெண்பிள்ளையிடம் கேட்டபோது, “அதன் கிளர்ச்சி, மகிழ்ச்சி பொங்கும் உணர்ச்சி, [மற்றும்] பரிசுகள் கொடுத்தல்,” என்று அவள் பதிலளித்தாள். நவீனபாணி கிறிஸ்மஸை உருவாக்குதல் (ஆங்கிலம்) இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “‘பழமை பாணி’ கிறிஸ்மஸின் மாறாத முக்கியத்துவம் சந்தேகமின்றி வீட்டிற்கும் குடும்பத்திற்கும் குறிப்பாக பிள்ளைகளுக்குமே கொடுக்கப்படுகிறது.”
ஆனால் விசேஷமாக மேற்கத்திய கிறிஸ்தவமண்டலத்தில் கிறிஸ்மஸானது, உறவினர்கள் ஒன்றுகூடி வந்து பரிசுகளைப் பரிமாறிக்கொள்கிற ஒரு குடும்ப வைபவமாகவே இருக்கிறது. ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஆதிக்கம் செலுத்துகிற நாடுகளில், மக்கள் ஈஸ்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனாலும் கிறிஸ்மஸ் சமயம் பொதுவாகவே ஒரு விடுமுறை காலமாக இருக்கிறது.
ஒரு “வியாபார நடவடிக்கை”
கிறிஸ்மஸ் “கவர்ச்சிமிக்க வர்த்தகமயமாக்கப்பட்டிருக்கிறது,” என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்லுகிறது. இது ஒருவேளை எங்கும் இருப்பதைவிட ஜப்பானில் அதிக உண்மையாக இருக்கிறது.
“ஜப்பானியர்கள் மதம் என்ற போர்வையில் செய்வதையெல்லாம் கைவிட்டுவிட்டுக் கிறிஸ்மஸை சரியான ஒரு வியாபார நடவடிக்கையாகவே மாற்றிவிட்டிருக்கின்றனர்,” என்று வாஷிங்டன் டெய்லி ரெக்கார்ட் அறிவிக்கிறது. ஜப்பானில் கிறிஸ்மஸ், “அதன் மத அம்சத்திற்கு சிறிதளவு முக்கியத்துவம் மட்டுமே கொடுத்து மாறாக வியாபார அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஒரு மாபெரும் கொண்டாட்டம்,” என்று இது மேலும் கூறுகிறது.
கிறிஸ்தவ நாடுகள் என்று அழைக்கப்படும் அநேக நாடுகளிலும்கூட, இந்த “மத அம்சத்தை” கண்டுபிடிப்பது பெரும்பாலும் கடினமானதே. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்மஸுக்கு எதிரான ஒரு துண்டுப்பிரதி புலம்பியதாவது: “வர்த்தக உலகத்தால் கிறிஸ்மஸ் வீண் விளம்பரப்படுத்தப்படுகிறது. வருடத்தில் கொள்ளை லாபம் அடிப்பதற்கான காலமாக இது இருக்கிறது. கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டிக்கொள்ளும் வர்த்தகர்கள் கிறிஸ்மஸ் சமயத்துக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்; கிறிஸ்துவுக்காக அல்ல, ஆனால் பண லாபத்திற்காகவே.” அந்த வார்த்தைகள் இன்று எவ்வளவு உண்மையாக இருக்கின்றன! அநேக தேசங்களில், வருடத்தின் கடைசி காலாண்டைக்கூட எட்டியிருக்கமாட்டோம், அதற்குள் அடுத்த கிறிஸ்மஸுக்குப் பரிசுகள் வாங்க இன்னும் எத்தனை நாட்கள் பாக்கி இருக்கின்றன என்ற நினைப்பூட்டுதல்களைக் கேட்க ஆரம்பித்துவிடுகிறோம். அந்த வருடம் முடிவடைகையில் வியாபாரம் நன்கு சூடுபிடித்து, கிறிஸ்மஸ் சமயத்தில் கடைகளின் வருடாந்திர வியாபாரத்தில் ஏறக்குறைய கால் பங்கு அளவுக்கு நடக்கிறது.
கிறிஸ்மஸைப்பற்றி இப்பொழுது உங்களுக்கு எப்படிப்பட்ட அபிப்பிராயம் இருந்தாலும்சரி, அது எப்படித்தான் தோன்றியது என்று நீங்கள் யோசிக்கலாம். கிறிஸ்மஸ் பரிசு கொடுத்தலை பைபிள் உண்மையிலேயே ஆதரிக்கிறதா? இன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் உண்மையிலேயே கிறிஸ்தவ கொண்டாட்டங்கள்தானா? நாம் பார்க்கலாம்.