நற்செய்தியைப் பரப்ப ஆவலுள்ள கிலியட் பட்டதாரிகள்
“நாம் கற்பனைசெய்து பார்க்கக்கூடியதிலேயே மிகவும் அருமையான காரியம்.” ஆன்டர்ஸ் மற்றும் ஆமால்யா க்ரோட் தங்களுடைய மிஷனரி பயிற்சியைப்பற்றி அவ்வாறே உணர்ந்தனர். “கிலியட் பயிற்சி எங்களுக்குத் தூண்டுதலளித்து எங்களைத் தயாராக்கி இருக்கிறது, ஆகவே எங்கள் புதிய நியமிப்புகளுக்குச் செல்ல ஆவலாக இருக்கிறோம்,” என்றும் சொல்லியதன்மூலம், உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 97-வது வகுப்பின் மொத்த 48 பட்டதாரிகளின் உணர்ச்சிகளையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
பட்டமளிப்பு நிகழ்ச்சிநிரலின் பேரில் அந்த மாணவர்கள் தங்கள் குறிப்புகளைச் சொல்லுகையில் இந்தச் சந்தோஷத்தை நாம் உணர முடியும்; இந்த நிகழ்ச்சிக்கு, செப்டம்பர் 4, 1994 அன்று 6,420 பேர் கூடிவந்திருந்தனர்.
“‘யெகோவாவால் போதிக்கப்படுதல்’ என்ற பொருளின்பேரில் பேசுவதன்மூலம் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த தீயடோர் ஜரஸ் அந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்,” என்று டேவிட் ஏபல் மற்றும் அவருடைய மனைவி கெல்லியும் சொன்னார்கள். “சகோதரர் ஜரஸ் சொன்ன இந்தக் குறிப்பை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்: ‘யெகோவாவுடன் ஒப்பிடுகையில் நம்முடைய சிறுமையை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்,’ என்று சொல்லி யோபு 38 மற்றும் 39-ம் அதிகாரங்களிலுள்ள பலமான பாடத்தால் அதை விளக்கினார். கிலியட் பள்ளியின் வாயிலாக நாங்கள் எங்களுடைய பைபிள் அறிவை அதிகரித்திருக்கிறபோதிலும், ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை அறிந்தவர்களாக இல்லை என்பதை சகோதரர் ஜரஸ் குறிப்பிட்டுச் சொன்னார். நாங்கள் தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையைப் படிக்கவேண்டும்.”
க்றிஸ்டியன் மற்றும் அன்ஷல் கோஃபி இப்போது சொன்னார்கள்: “‘நல்ல அஸ்திவாரத்தின் மதிப்பு என்ன?’ என்ற பொருளின்பேரில் மாக்ஸ் லார்ஸன் கொடுத்த பேச்சு எங்களைக் கவர்ந்தது. ஒரு பூமியதிர்ச்சி ஏற்பட்டால்கூட நிலைத்திருக்கும்படியாக கெட்டியான நிலத்தில் ஆழமான அஸ்திவாரம் தேவைப்படும் ஒரு கட்டடத்துடன் அவர் எங்களை ஒப்பிட்டது எங்களுக்குப் பிடித்தது. ஊக்கமாகப் படிப்பதன்மூலம் நாம் யெகோவாவுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்க்க முடியும்; மேலும் கடினமான சமயங்களிலும் நிலைத்திருக்கும்படியாக ஆழ்ந்த அறிவில் நம்முடைய விசுவாசத்தை ஊன்றவைக்க முடியும்.”
“‘அறுப்புக்கு நிலங்கள் விளைந்திருக்கின்றன,’ என்ற பொருளின்பேரில் பள்ளி முதல்வராகிய மில்டன் ஹென்ஷலால் கொடுக்கப்பட்ட பேச்சு நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும்,” என்று காரி மற்றும் லின் எல்ஃபர்ஸ் குறிப்பிட்டனர். “முந்தின வேலையாட்களால் ஏற்கெனவே விதைக்கப்பட்ட நிலத்திற்குள் நுழையும் சிலாக்கியத்தை நாங்கள் கொண்டிருப்பதை முக்கிய வசனங்களாகிய யோவான் 4:35-38 அழுத்திக்கூறின. ஓர் அவசர உணர்வோடு வேலை செய்யும்படி இது எங்களைத் தூண்டுவிக்கும்.” இதோடு ஒத்துக்கொள்பவர்களாக, யான் மற்றும் சிர்பா வாடோலா இவ்வாறு குறிப்பிட்டனர்: “பால்டிக் நாடுகளைப் பற்றிய சமீபத்திய அறிக்கையைக் கொடுப்பதன்மூலம், இன்னும் செய்யப்படவிருக்கும் அறுவடையைப் பற்றிய எங்கள் எதிர்பார்ப்பை சகோதரர் ஹென்ஷல் தூண்டுவித்தார். எஸ்டோனியாவில் 51 சதவீதமும், லாட்வியாவில் 106 சதவீதமும், லிதுவேனியாவில் 51 சதவீதமும் அதிகரிப்பு இருந்தது. எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது! அதிகப்படியான வேலையாட்களை அனுப்பும்படி அங்குள்ள சகோதரர்கள் எஜமானை வேண்டிக்கொள்ளுகிறார்கள். இதைக் கேட்பதில் நாங்கள் விசேஷமாக மகிழ்ச்சி அடைந்தோம், ஏனென்றால் நாங்கள் எஸ்டோனியாவுக்குச் செல்லும்படி நியமிக்கப்பட்டிருந்தோம்!”
“‘யெகோவாவில் நம்பிக்கையாய் இருங்கள்,’ என்ற பொருளின்பேரில் ஜோயல் ஆடம்ஸ் அடுத்ததாகப் பேசினார்,” என்று கெவன் மற்றும் ஈவலன் கார்டீனா நினைவுகூர்ந்தனர். “சில நேரங்களில் நாம் யெகோவாவை நம்பலாம் என்றும் சில நேரங்களில் நம்முடைய சொந்த சிந்தையைச் சார்ந்திருக்கலாம் என்றும் நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது என்று அவர் அறிவுரை கூறினார். நம்முடைய நியமிப்பில் நாம் பல சவால்களை எதிர்ப்படுவோம்—உடல்நலம், உணவு, மொழி, பழக்கவழக்கங்கள், போன்றவை. இவை யாவும் நாம் யெகோவாவில் நம்பிக்கை வைப்பதைத் தேவைப்படுத்தும்.”
“யெகோவாவின் இரக்கத்தைக்குறித்து தொடர்ந்து சிந்தித்துப் பாருங்கள்,” என்ற பொருளின்பேரில், நிர்வாகக் குழுவின் அங்கத்தினர் ஒருவரான கெரிட் லாயஷ் அடுத்ததாகப் பேசினார். அலன் மற்றும் அன் மரீ கோகாவீ சொன்னார்கள்: “உடன் மிஷனரிகளுக்கும் நாம் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வோருக்கும் இரக்கத்தைக் காண்பிப்பது கிறிஸ்தவ முதிர்ச்சியின் ஓர் அடையாளமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அயல்நாட்டு நியமிப்புகள் தியாகத்தை உட்படுத்துகின்றன, ஆனால் இரக்கம் இல்லாவிட்டால் நம்முடைய தியாகம் மிகக் குறைந்த மதிப்புடையதாகவே இருக்கும். (மத்தேயு 9:13) பீட்டர் மற்றும் ஃப்ளர் ஹுப்ஸ்டன் தொடர்ந்து சொன்னார்கள்: “நம்முடைய சகோதர சகோதரிகளிடமும் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும்; அவர்களுடைய குறைகளைப் பெரிதுபடுத்துவதற்குப் பதிலாக குறைவாகத் தென்படும்படி, அடையாளப்பூர்வமாகச் சொல்லப்போனால், பைனாக்குலர்களின் முன்பக்கத்தின் வழியாய் அவர்களை நோக்கவேண்டும் என்று சகோதரர் லாயஷ் கூறினார்.”
“எங்கள் கிலியட் போதனையாளர்களில் ஒருவரான ஜாக் ரெட்ஃபோர்ட், ‘கடிந்துகொள்ளுதலை கவனித்து உங்களால் நடக்க முடியுமா?’ என்ற பொருளின்பேரில் தொடர்ந்தார்” என்று மிக்கி மற்றும் ஷெரி மின்ஸ்கி நினைவுகூர்ந்தனர். “சிட்சையை ஏற்றுக்கொள்வதைப் பெருமை கடினமாக்குகிறது என்றும் அறிவுரையைக் குறித்து நாம் அளவுக்கதிக உணர்வுள்ளவர்களாய் இருந்தோமானால், அதன் பலன்களை இழந்துவிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். பின்னர், புலம்பல் 3:27-31-ன் அடிப்படையில், சிட்சையை ஏற்றுக்கொள்வதுபற்றி சில நடைமுறையான ஆலோசனைகளை அவர் கொடுத்தார்.” சார்ல்ஸ் மற்றும் ஜோன் ஹெல்ட் மேலுமாகச் சொன்னார்கள்: “நாம் நம்முடைய குற்றங்குறைகளைக் குறித்து பெரும்பாலான சமயங்கள் அறியாதவர்களாக இருக்கிறோம்; ஆகவே, நாம் அறியாமல் இருந்த காரியங்களுக்கு நம் கண்களைத் திறக்கும் ஒரு வழியாக நாம் சிட்சையை நோக்கவேண்டும். யெகோவாவிடமிருந்து வரும் சிட்சை அல்லது அறிவுரை, நமக்கான அவருடைய அன்பிற்கு ஒரு அத்தாட்சியாக இருக்கிறது.”
“‘ஜீவனுக்கு வழிநடத்தக்கூடிய நடைமுறை ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்,’ என்ற பொருளின்பேரில் மற்றொரு போதனையாளரான யுலிஸிஸ் க்ளாஸ் பேசினார். ‘நீங்கள் கற்றுக்கொண்டவற்றை வைத்து என்ன செய்வீர்கள்?’ என்று அவர் கேட்டார்,” என்பதாக கென்னட் மற்றும் லிஸ்பெட் ஆர்ட்ஷல் கூறினர். “பின்னர் நீதிமொழிகள் 30:24-26-ன் அடிப்படையில், குழிமுசலைப் பற்றியும் வாழ்வதற்கு ஏற்றவிதத்தில் யெகோவா அதை எவ்வாறு வைத்திருக்கிறார் என்றும் ஒரு உதாரணத்தைக் கொடுத்தார். மறுபட்சத்தில் நாம், உந்துணர்வால் ஞானவான்கள் அல்ல; ஆகவே ஞானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் பிரயாசப்படுவது அவசியம். அதைச் செய்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். யெகோவாவோடும் ஒருவருக்கொருவரும் நாம் அன்பில் நெருங்கிவரும்போது, அதிகத்தை நிறைவேற்ற முடியும்.”
முக்கியப் பேச்சு
“‘மணிகளுக்குளேயே ஓர் உயர்ந்த மணி’ என்ற பேச்சில், நிர்வாகக் குழுவின் ஒரு அங்கத்தினராகிய கார்ல் F. க்ளைன், 19-வது சங்கீதத்தை அருமையாக விளக்கினார்,” என்று ஜே மற்றும் க்வென் ஆப்ராசின்ஸ்காஸ் சொன்னார்கள். “சங்கீதக்காரனாகிய தாவீது யெகோவாவின்மீது கொண்டிருந்த ஆழ்ந்த போற்றுதலையும், கடவுளுடைய வார்த்தையின்மீது அவருக்கிருந்த பிரியத்தையும் அவர் சிறப்பித்துக் காட்டினார்.” “சகோதரர் க்ளைன் அந்தச் சங்கீதத்தை மூன்று பாகங்களாகப் பிரித்தார்,” என்று கித் மற்றும் டானா ஹார்ன்பாக் குறிப்பிட்டனர். “பாகம் 1 (1-6 வசனங்கள்) கடவுளுடைய சிருஷ்டிப்பிற்கான தாவீதின் போற்றுதலைக் காண்பிக்கிறது; பாகம் 2 (7-10 வசனங்கள்) கடவுளுடைய சட்டங்களுக்கான அவருடைய போற்றுதலை வெளிப்படுத்துகிறது; பாகம் 3 (11-14 வசனங்கள்) தாவீதைப்போலவே நாமும் யெகோவாவோடு ஒரு நல்ல உறவைக் கொண்டிருக்க விரும்பவேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.”
“தீமையைத் தவிர்க்க வேண்டுமென்றால் யெகோவாவுக்கான பயம் அத்தியாவசியமானது என்ற குறிப்பு எங்களுக்குப் பிடித்திருந்தது. அவருடைய பார்வைக்குச் சுத்தமாக இருப்பவற்றைச் செய்ய இது நம்மை வழிநடத்துகிறது,” என்று டேவிட் மற்றும் ரேலின் லாங் சொன்னார்கள். ஃப்ராங் மற்றும் விபகா மாஸன் அதை ஆமோதித்தனர். “யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள், சட்டங்கள், மற்றும் கட்டளைகள் எவ்வளவு பயனுள்ளவை என்பவற்றைப் பற்றிய சகோதரர் க்ளைனின் குறிப்புகள், நாங்கள் கிலியடில் கற்றவற்றின் சிறப்பான சுருக்கமாக இருந்தன,” என்று அவர்கள் சொன்னார்கள். “அது எங்களை, வருங்காலத்தில் கடவுளுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கும்படியும் விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய ஒரு பொக்கிஷப் பெட்டியைப்போல் அதைப் பாவிக்கும்படியும் இன்னுமதிக தீர்மானமுள்ளவர்களாக இருக்கச் செய்தது.”
முக்கியப் பேச்சைத் தொடர்ந்து, அந்த மாணவர்கள் தங்கள் பட்டச்சான்றிதழ்களைப் பெற்றார்கள்; அதற்குப்பின் அவர்களுடைய அயல்நாட்டு நியமனங்கள் அறிவிக்கப்பட்டன. சிற்றுண்டிகளுக்கான ஒரு இடைவேளைக்குப்பின், மதிய நிகழ்ச்சிக்காக எல்லாரும் மீண்டும் கூடிவந்தார்கள். சுருக்கமான காவற்கோபுர படிப்பு ஒன்றின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அந்தப் பட்டதாரிகள் பங்கெடுத்தனர்.
“‘பூமியெங்கும் ராஜ்ய அறிவிப்பாளர்களாகும்படி பயிற்றுவிக்கப்பட்டிருத்தல்,’ என்ற மாணவர் நிகழ்ச்சி அடுத்ததாகத் தொடர்ந்தது,” என்று பாப் மற்றும் ஷானன் லாக்காடாஸ் நினைவுகூர்ந்தனர். “எங்களுடைய ஐந்து மாத படிப்புத்திட்டத்தின்போது, வெளி ஊழியத்தில் ஏற்பட்ட மாணவ அனுபவங்கள், நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் அளிக்கப்பட்டன. எங்கள் ஊழியத்தில் கேள்விகளைத் திறம்பட்டவிதத்தில் பயன்படுத்துவதன்பேரில் அது கவனம் செலுத்தியது. மிஷனரி வாழ்க்கையின் சவால்களையும் மாறுபடும் சூழ்நிலைகளையும் எதிர்ப்படுவதற்கு நம்பிக்கையூட்டும் வழிகளை ஒரு பேட்டி பகுதி காண்பித்தது. கோஸ்டா ரிகா, இந்தியா, மலாவி ஆகிய நாடுகளைப் பற்றிய மூன்று ஸ்லைட் காட்சிகள், யெகோவாவின் உலகளாவிய அமைப்பைப்பற்றிய ஒரு காட்சியை அளித்தது.”
“அதைத் தொடர்ந்த நாடகம், தேவாட்சிக்குரியவர்களாய் இருங்கள், உலகத்திற்குரியவர்களாக அல்ல என்பது தன்னிச்சையாகச் சிந்திக்கும் சில உலகப்பிரகாரமான உறவினர்கள் கொண்டிருக்கக்கூடிய கெட்ட பாதிப்பை விளக்கியது,” என்று ஜெஸி மற்றும் மிஷல் டன்கன் குறிப்பிட்டனர். “தேவாட்சிக்குரிய வழிமுறைகளையும் கட்டளைகளையும் தேவையானவையாகவும் பிரயோஜனமுள்ளவையாகவும் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அது காண்பித்தது,” என்று வென்ஸட் மற்றும் கெல்லி கோலா மேலுமாகச் சொன்னார்கள்.
ஒரு முடிவான பாட்டும் ஜெபமும் அந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்தப் பட்டதாரிகள், 18 நாடுகளிலுள்ள தங்களுடைய அயல்நாட்டு நியமனங்களுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் விடைபெறுகையில், டாமி மற்றும் யேயல் கெளகோ என்பவர்களின் பின்வரும் இந்தப் பிரிவுரைக் குறிப்பில் அவர்களுடைய எண்ணங்கள் நன்கு வெளிப்படுத்தப்படுகின்றன: “எங்களுடைய நியமிப்புக்குச் சென்று நாங்கள் கற்றிருப்பவற்றை நடைமுறைப்படுத்த மிகவும் ஆவலோடு இருக்கிறோம். நாங்கள் எவ்வளவோ பெற்றுக்கொண்டோம்—இப்போது, கொடுப்பதற்கான எங்களுடைய நேரமாக இது இருக்கிறது.”
[பக்கம் 26-ன் படம்]
உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியடில் பட்டம்பெறும் 97-ம் வகுப்பு
கீழ்க்கண்ட பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னும், ஒவ்வொரு வரிசையிலும் பெயர்கள் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஹாங், J.; ஹாங், D.; க்ரோட், A.; கார்டீனா, E.; லாக்காடாஸ், S.; ஹார்ன்பாக், D.; ஆசெவேடோ, L.; கோஃபி, A. (2) எல்ஃபர்ஸ், L.; கோகாவீ, A.; ஆர்ட்ஷல், L.; ஆப்ராசின்ஸ்காஸ், G.; நாட், K.; லைஸர், T.; ஏபல், K.; ஏபல், D. (3) டன்கன், M.; கோகாவீ, A.; ஹெல்ட், J.; ஹுப்ஸ்டன், F.; லாக்காடாஸ், B.; லாங், R.; மின்ஸ்கி, S.; ஆசெவேடோ, E. (4) ஆர்ட்ஷல், K.; கெளகோ, J.; வாடோலா, S.; கார்டீனா, K.; கார்ஸன், N.; மின்ஸ்கி, M.; லைஸர், G.; கோலா, K.; (5) டன்கன், J.; ஆப்ராசின்ஸ்காஸ், J.; வாடோலா, J.; மாஸன், F.; மாஸன், V.; லாங், D.; கார்ஸன், C.; எல்ஃபர்ஸ், G. (6) கெளகோ, T.; ஹுப்ஸ்டன், P.; ஹெல்ட், C.; க்ரோட், A.; ஹார்ன்பாக், K.; கோலா, W.; நாட், D.; கோஃபி, C.