மனிதரின் துன்பம் கடவுள் ஏன் அதை அனுமதிக்கிறார்?
மனிதரின் சரித்திரத் தொடக்கத்தில், துக்கத்தின் அல்லது வேதனையின் கண்ணீர்களே இருக்கவில்லை. மனிதகுலத்திற்கு ஒரு பரிபூரண தொடக்கம் அளிக்கப்பட்டது. “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”—ஆதியாகமம் 1:31.
ஆனால் சிலர் மறுத்து, ‘ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளின் கதை வெறும் ஓர் உருவகக்கதை’ என்று கூறுகின்றனர். வருந்தத்தக்கதாய், கிறிஸ்தவமண்டலத்தின் பாதிரிமார் பலர் இவ்வாறு சொல்கின்றனர். எனினும், உன்னத அதிகாரியாகிய இயேசு கிறிஸ்து தாமே ஏதேனில் நடந்த சம்பவங்களைச் சரித்திரப்பூர்வமானதாக உறுதிசெய்தார். (மத்தேயு 19:4-6) மேலும், மனிதனின் தொடக்க சரித்திரத்தின் சம்பவங்களை ஆராய்ந்து பார்ப்பதே, மனிதரின் துன்பத்தைக் கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரே வழியாகும்.
முதல் மனிதனாகிய ஆதாம், ஏதேன் தோட்டத்தைக் கவனித்துப் பரிபாலிக்கும் திருப்திதரும் வேலை கொடுக்கப்பட்டான். மேலும் தன் ஏதேனிய வீட்டை ஒரு பூகோள இன்பத் தோட்டமாக விரிவாக்கும் இலக்கையும் கடவுள் அவனுக்கு முன்பாக வைத்தார். (ஆதியாகமம் 1:28; 2:15) இந்தப் பெரிய வேலையை நிறைவேற்ற ஆதாமுக்கு உதவிசெய்ய, கடவுள் அவனுக்கு ஒரு மணத்துணைவியாகிய ஏவாளைக் கொடுத்து, பலுகிப் பெருகி பூமியை ஆண்டுகொள்ளும்படி அவர்களிடம் கூறினார். எனினும், பூமிக்கும் மனிதகுலத்துக்குமான கடவுளுடைய நோக்கம் வெற்றிகரமாவதை நிச்சயப்படுத்துவதற்கு வேறு ஒன்றும் தேவைப்பட்டது. மனிதன் கடவுளுடைய ரூபத்தில் உண்டாக்கப்பட்டிருந்ததால் தெரிவு செய்யும் சுயாதீனமுடையவனாக இருந்தான்; ஆகவே மனிதனின் சித்தம் கடவுளுடைய சித்தத்துக்கு முரண்படாதபடி இருப்பது அவசியமாயிருந்தது. மற்றபடி, சர்வலோகத்தில் குழப்பம் உண்டாயிருக்கும், சமாதானமான மனித குடும்பத்தால் பூமியை நிரப்புவதற்கான கடவுளுடைய நோக்கம் நிறைவேறாது.
கடவுளுடைய ஆட்சிக்குக் கீழ்ப்படுவது தானாக ஏற்படும் காரியமல்ல. அது மனிதனின் தெரிவு செய்யும் சுயாதீனத்தின் அன்புள்ள வெளிக்காட்டாக இருக்க வேண்டும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து கடுமையான ஒரு சோதனையை எதிர்ப்பட்டபோது, அவர்: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபித்தார்.—லூக்கா 22:42.
அவ்வாறே, தாங்கள் கடவுளுடைய ஆட்சிக்குக் கீழ்ப்பட விரும்பினார்களா இல்லையாவென்பதை நிரூபிப்பது ஆதாம் ஏவாளின்பேரில் சார்ந்திருந்தது. இந்த நோக்கத்துடன் யெகோவா ஒரு எளிய சோதனையை ஏற்பாடு செய்தார். தோட்டத்திலிருந்த மரங்களில் ஒன்று ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்’ என்று அழைக்கப்பட்டது. அது சரியான நடத்தைக்குரிய தராதரங்களைத் தீர்மானிப்பதற்கான கடவுளுடைய உரிமையை அடையாளமாகக் குறித்துக்காட்டினது. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்தக் குறிப்பிட்ட மரத்தின் கனியைச் சாப்பிட வேண்டாமென்று கடவுள் தடையுத்தரவிட்டார். ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமற்போனால், அது அவர்களுடைய மரணத்தில் விளைவடையும்.—ஆதியாகமம் 2:9, 16, 17.
மனிதரின் துன்பத்திற்குத் தொடக்கம்
ஒரு நாள் கடவுளுடைய ஆவி குமாரன் ஒருவன் கடவுள் ஆளும் முறையைச் சரியல்லவென்று விவாதிக்கத் துணிகரம் கொண்டான். ஒரு பாம்பைப் பேசும் கருவியாகப் பயன்படுத்தி அவன்: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? என்று ஏவாளைக் கேட்டான். (ஆதியாகமம் 3:1) இவ்வாறு கடவுள் ஆளும் முறை சரியானதா என்பதைக் குறித்து சந்தேகிப்பதற்கான ஓர் எண்ணம் ஏவாளின் மனதில் விதைக்கப்பட்டது.a ஏவாள் தன் கணவனிடமிருந்து அறிந்திருந்தபடி, அதற்குத் திருத்தமான பதிலைக் கொடுத்தாள். எனினும், அந்த ஆவி சிருஷ்டியானவன் கடவுள் சொன்னதற்கு எதிர்மாறாகப் பேசி, கீழ்ப்படியாமையின் விளைவுகளைப்பற்றி பொய் சொன்னான். அவன் சொன்னதாவது: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.”—ஆதியாகமம் 3:4, 5.
வருந்தத்தக்கதாய், கீழ்ப்படியாமையானது மனிதரின் துன்பத்தில் அல்ல, மேம்பட்ட வாழ்க்கையில் பலனடையுமென்று நினைக்கும்படி ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். அந்தக் கனியை அவள் எவ்வளவு அதிகமாய் நோக்கிப் பார்த்தாளோ அவ்வளவு அதிகமாய் அது விரும்பத்தக்கதாகத் தோன்றினது, அவள் அதைச் சாப்பிடத் தொடங்கினாள். பின்னால், ஆதாமையும் வசீகரித்து அதைச் சாப்பிடும்படி செய்வித்தாள். துயரத்துக்கேதுவாய், ஆதாம், கடவுளுடையதைப் பார்க்கிலும் தன் மனைவியின் தயவையே விடாது காத்துக்கொள்ளத் தெரிந்துகொண்டான்.—ஆதியாகமம் 3:6; 1 தீமோத்தேயு 2:13, 14.
இந்தக் கலகத்தைப் பின்னின்று தூண்டிவிட்டதன்மூலம், அந்த ஆவி சிருஷ்டி தன்னைக் கடவுளின் ஓர் எதிரியாக மாற்றிக்கொண்டான். இவ்வாறு அவன் சாத்தான் என்றழைக்கப்படலானான். இது “எதிரி” எனப் பொருள்படும் எபிரெயச் சொல்லிலிருந்து வந்தது. மேலும் கடவுளைப்பற்றி பொய்யும் சொல்லி, தன்னைப் பழிதூற்றுபவனாக ஆக்கிக்கொண்டான். ஆகவே, அவன் பிசாசு என்றும் அழைக்கப்படுகிறான், இது “பழிதூற்றுபவன்” எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது.—வெளிப்படுத்துதல் 12:9.
இவ்வாறு மனிதரின் துன்பம் தொடங்கினது. கடவுளுடைய சிருஷ்டிகளில் மூவர் தங்கள் தெரிவு சுயாதீன அரும்திறமையை தவறான முறையில் பயன்படுத்தி, தங்கள் சிருஷ்டிகருக்கு எதிராக தன்னல வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டார்கள். பரலோகத்திலுள்ள உண்மையுள்ள தூதர்களும் ஆதாம் ஏவாளின் எதிர்கால சந்ததியாரும் உட்பட மீதியான தம்முடைய அறிவுள்ள சிருஷ்டிகளுக்குத் திரும்பவும் நம்பிக்கையளிக்குமாறு ஒரு நீதியான முறையில் கடவுள் இந்தக் கலகத்தை எவ்வாறு கையாளுவார் என்ற கேள்வி இப்போது எழும்பினது.
கடவுளுடைய ஞானமான பதில்
சாத்தானையும் ஆதாமையும் ஏவாளையும் கடவுள் உடனடியாக அழித்திருந்தால் மிகச் சிறந்ததாக இருந்திருக்குமென்று சிலர் தர்க்கிக்கக்கூடும். ஆனால் அது அந்தக் கலகத்தால் எழுப்பப்பட்ட விவாதங்களைத் தீர்த்திராது. கடவுள் ஆளும் முறையை எதிர்த்து சாத்தான் வாதாடி, மனிதர் கடவுளுடைய ஆட்சியில்லாமல் சுயாதீனராக இருந்தால் மேம்பட்டிருப்பார்கள் எனக் குறிப்பிட்டிருந்தான். மேலும் அந்த முதல் இரண்டு மனிதர்களையும் கடவுளுடைய ஆட்சிக்கு எதிராகத் திரும்பச் செய்வதில் அவன் வெற்றிபெற்றது வேறு கேள்விகளையும் எழுப்பினது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்துவிட்டபடியால், கடவுள் மனிதனைச் சிருஷ்டித்திருந்த முறையில் ஏதாவது பிழையிருந்ததென்று இது குறித்ததா? பூமியில் தமக்கு உண்மையுள்ளோராக நிலைத்திருப்பவர் எவரையாவது கடவுள் கொண்டிருக்கக்கூடுமா? சாத்தானின் கலகத்தைக் கண்கூடாகக் கண்ட யெகோவாவின் தூதக் குமாரர்களைப் பற்றியதென்ன? அவர்கள் அவருடைய ஈடற்ற அரசாட்சியின் நீதியை உறுதியாகக் கடைப்பிடிப்பார்களா? தெளிவாகவே, இந்த விவாதங்களைத் தீர்ப்பதற்குப் போதிய காலம் தேவைப்பட்டது, இதனிமித்தமே கடவுள் சாத்தானை நம் நாள்வரையில் இருக்கும்படி அனுமதித்திருக்கிறார்.
ஆதாம் ஏவாளைக் குறித்ததில், அவர்கள் கீழ்ப்படியாமற்போன அதே நாளில், கடவுள் அவர்களுக்கு மரணத்தீர்ப்பு அளித்தார். ஆகவே மரிக்கும் பாங்கு தொடங்கினது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தப்பின் கருத்தரிக்கப்பட்ட அவர்களுடைய சந்ததியார், தங்கள் அபூரண பெற்றோரிடமிருந்து பாவத்தையும் மரணத்தையும் சுதந்தரித்தார்கள்.—ரோமர் 5:14.
அந்த விவாதத்தில் சாத்தான் அந்த முதல் இரண்டு மனிதரையும் தன் சார்பில் கொண்டவனாகத் தொடங்கினான். அவன் தனக்கு அனுமதிக்கப்பட்ட காலத்தை, ஆதாமின் சந்ததியார் யாவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்படி முயற்சி செய்ய பயன்படுத்தியிருக்கிறான். மேலும் தன் கலகத்தில் சேர்ந்துகொள்ளும்படி தூதர்கள் பலரையும் கவர்ந்திழுப்பதில் அவன் வெற்றிபெற்றிருக்கிறான். எனினும், கடவுளுடைய தூதக் குமாரர்களில் பெரும்பான்மையர் யெகோவாவின் ஆட்சியதிகாரத்தின் நேர்மையை விடாப் பற்றுறுதியுடன் கடைப்பிடித்திருக்கின்றனர்.—ஆதியாகமம் 6:1, 2; யூதா 6; வெளிப்படுத்துதல் 12:3, 9.
கடவுளுடைய ஆட்சிக்கு எதிர்ப்பாக சாத்தானின் ஆட்சி என்பதே விவாதத்தில் இருந்தது. இந்த விவாதம் யோபின் நாட்களில் வெகு மும்முரமாக இருந்தது. ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் யோசேப்பு போன்ற கடவுள் பயமுள்ளோராயிருந்த இத்தகைய மனிதர் ஏற்கெனவே செய்திருந்ததுபோல், இந்த உண்மையுள்ள மனிதன், சாத்தானளிக்கும் சுதந்திரத்தைப் பார்க்கிலும் கடவுளுடைய நேர்மையான ஆட்சியையே மேம்பட்டதாகத் தெரிந்துகொண்டாரெனத் தன் நடத்தையால் நிரூபித்தார். யோபு, பரலோகத்தில் கடவுளுடைய உண்மையுள்ள தூதர்களுக்கு முன்பாக நடந்த ஓர் உரையாடலின் பொருள் ஆனார். தம்முடைய நேர்மையுள்ள ஆட்சியின் ஆதரவாகக் கடவுள் சாத்தானிடம்: “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை“ என்று கூறினார்.—யோபு 1:6-8.
தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, சாத்தான், கடவுள் யோபை பொருள் வளத்தைக்கொண்டு நிறைவாய் ஆசீர்வதித்திருந்ததால், தன்னலக் காரணங்களினிமித்தமே அவரைச் சேவித்தாரென வாதாடினான். ஆகவே சாத்தான்: “உமது கையை நீட்டி அவனுக்குரியவற்றையெல்லாம் தொடும், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரேயே உம்மைத் தூஷிக்கமாட்டானோ பாரும்” என்று வற்புறுத்திக் கூறினான். (யோபு 1:11, திருத்திய மொழிபெயர்ப்பு) சாத்தான் இன்னும் மீறிச்சென்று, கடவுளுடைய எல்லா சிருஷ்டிகளின் உத்தமத்தையும் விவாதத்துக்குள்ளாக்கினான். “தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான்” என்று வற்புறுத்திக் கூறினான். (யோபு 2:4) இந்த அவதூறான தாக்குதல் யோபை மட்டுமல்ல, வானத்திலும் பூமியிலுமுள்ள கடவுளுடைய உண்மையுள்ள வணக்கத்தார் யாவரையும் உட்படுத்தினது. தங்கள் உயிர் ஆபத்தில் இருந்தால் அவர்கள், யெகோவாவுடன் கொண்டுள்ள தங்கள் உறவைவிட்டு விலகிவிடுவார்கள் என்று சாத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டான்.
யோபின் உத்தமத்தில் யெகோவா தேவனுக்கு முழு நம்பிக்கை இருந்தது. இதற்கு அத்தாட்சி அளிப்பவராக, யோபின்மீது மனிதனுக்குரிய துன்பத்தைக் கொண்டுவர சாத்தானை அனுமதித்தார். தான் உண்மையுள்ளவராக நிலைத்திருந்ததன்மூலம் யோபு தன் சொந்தப் பெயரைக் கறைபடாமல் காத்ததுமட்டுமல்லாமல், அதிக முக்கியமாக, யெகோவாவின் ஈடற்ற அரசாட்சியின் நேர்மையை உறுதியாகக் கடைப்பிடித்தார். பிசாசானவன் பொய்யனாக நிரூபிக்கப்பட்டான்.—யோபு 2:10; 42:7.
எனினும், சோதனையின்கீழ் மிகச் சிறந்த முன்மாதிரி இயேசு கிறிஸ்துவே. கடவுள் இந்த தேவதூதக் குமாரனுடைய உயிரைப் பரலோகத்திலிருந்து ஒரு கன்னியின் கர்ப்பத்துக்கு மாற்றினார். ஆகையால் இயேசு பாவத்தையும் அபூரணத்தையும் சுதந்தரிக்கவில்லை. மாறாக, முதல் மனிதன் தன் பரிபூரணத்தை இழப்பதற்கு முன்னிருந்த நிலைக்குச் சரிசமமான பரிபூரண மனிதனாக வளர்ந்தார். சாத்தான் இயேசுவை முக்கியமாகத் தாக்கும் இலக்காக்கி, பல சோதனைகளையும் பரீட்சைகளையும் அவர்மீது கொண்டுவந்து, அவமதிப்பான மரணத்தில் உச்சநிலையை அடையும்படி செய்தான். ஆனால் சாத்தான் இயேசுவின் உத்தமத்தை முறிக்க முடியாமற்போனான். முழுமையான ஒரு முறையில் இயேசு தம்முடைய பிதாவின் ஆட்சியின் நேர்மையை விடாது கடைப்பிடித்தார். மேலும் பரிபூரண மனிதனாகிய ஆதாம் சாத்தானின் கலகத்தில் சேர்ந்துகொள்வதற்கு ஒரு சாக்குப்போக்கும் இருக்கவில்லையென்றும் நிரூபித்தார். ஆதாம் தன் மிகச் சிறிய சோதனையின்கீழ் உண்மையுள்ளவனாக நிலைத்திருந்திருக்கக்கூடும்.
வேறு எதுவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது?
ஆதாம் ஏவாளின் கலகம் முதற்கொண்டு மனிதரின் துன்பத்துக்குரிய சுமார் 6,000 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலத்தின்போது பல்வேறுபட்ட அரசாங்க முறைகளைக் கொண்டு சோதனைசெய்து பார்க்கும்படி கடவுள் மனிதகுலத்தை அனுமதித்திருக்கிறார். மனிதரின் துன்பத்தைப்பற்றிய கோரமான பதிவு, மனிதன் தன்னைத்தானே ஆண்டுகொள்வதற்குத் தகுதியுடையவனாக இல்லை என்று நிரூபிக்கிறது. உண்மையில், பூமியின் பல பாகங்களில் இப்பொழுது அராஜகமான நிலை இருந்துவருகிறது. கடவுளைவிட்டு விலகி சுதந்திரமாக இருக்கும்படி சாத்தான் ஆதரித்துக் கூறிய முறை கடும்துயரத்துக்கேதுவானதாக உள்ளது.
யெகோவா எதையும் தமக்கு நிரூபித்துக்கொள்ள வேண்டியதாக இல்லை. தாம் ஆளும் முறை நேர்மையானதென்றும் தம்முடைய சிருஷ்டிகளின் மிகச் சிறந்த அக்கறைகளுக்கேதுவானதென்றும் அவர் அறிந்திருக்கிறார். எனினும், சாத்தானின் கலகத்தால் எழுப்பப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் திருப்தியாய்ப் பதிலளிக்கும்படி, தம்முடைய அறிவுள்ள சிருஷ்டிகள் தம்முடைய நேர்மையுள்ள ஆட்சியை மேம்பட்டதாகத் தெரிந்துகொள்வதைக் காட்டுவதற்கு வாய்ப்பளித்திருக்கிறார்.
கடவுளை நேசித்து அவருக்கு உண்மையுள்ளோராக நிலைத்திருப்பதற்கான பலன்கள், சாத்தானின் கையில் தற்காலிகமாகத் துன்பப்படுவதோடு ஒப்பிட மிகப் பேரளவாயுள்ளன. யோபின் காரியம் இதைச் சித்தரித்துக் காட்டுகிறது. சாத்தான் யோபின்மீது கொண்டுவந்திருந்த அந்த நோயை நீக்கி யெகோவா தேவன் யோபைச் சுகப்படுத்தினார். மேலும், கடவுள் “யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.” கடைசியாக, அவருடைய வாழ்க்கையை மேலும் 140 ஆண்டுகள் நீடிக்கச் செய்த பின்பு, “யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.”—யோபு 42:10-17.
கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளராகிய யாக்கோபு இதற்குக் கவனத்தை இழுத்து, பின்வருமாறு கூறுகிறார்: ‘யோபின் சகிப்புத்தன்மையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் யெகோவா அளித்த பலனையும் கண்டிருக்கிறீர்கள், யெகோவா பாசத்தில் மிக உருக்கமும் இரக்கமுமுள்ளவராக இருக்கிறாரே.’—யாக்கோபு 5:11, NW, அடிக்குறிப்பு.
சாத்தானுக்கும் அவனுடைய உலகத்துக்கும் காலம் நெருங்கிவிட்டது. சீக்கிரத்தில், கடவுள், சாத்தானின் கலகம் மனிதகுலத்தின்மீது கொண்டுவந்துள்ள எல்லா துன்பத்தையும் மாற்றுவார். மரித்தோருங்கூட எழுப்பப்படுவர். (யோவான் 11:25) அப்போது, யோபைப்போன்ற உண்மையுள்ள மனிதர் பரதீஸான பூமியில் நித்திய ஜீவனடைவதற்கான வாய்ப்பை உடையோராக இருப்பர். கடவுள் தம்முடைய ஊழியர்களின்மீது பொழியவிருக்கிற இந்த எதிர்கால ஆசீர்வாதங்கள் அவரை, நிச்சயமாகவே ‘பாசத்தில் மிக உருக்கமும் இரக்கமுமுள்ளவரான’ நேர்மையுள்ள ஈடற்ற பேரரசராக என்றென்றும் நியாயங்காட்டி நிரூபிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a 20-வது நூற்றாண்டின் தொடக்கக்கால வழக்கறிஞரும் நூலாசிரியருமான ஃபிலிப் மாரோ என்பவர், “தீமையின் தொடக்கம்” என்ற தன் ஆய்வுரையில், இந்தத் தடுப்புரையை கூர்ந்தாராய்ந்து, “மனிதகுலத்தின் எல்லா தொல்லைக்கும் காரணம்” இதுவேயென முடிவுசெய்தார்.
[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]
மனிதரின் கொடூரமான தெய்வங்கள்
பூர்வகாலத்தில் தெய்வங்கள் இரத்தவெறிகொண்டவையாகவும் காமவிகாரமுள்ளவையாகவும் அடிக்கடி உருப்படுத்திக் காட்டப்பட்டன. அவற்றைச் சாந்தப்படுத்துவதற்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகளையுங்கூட தீயில் உயிரோடு எரித்தனர். (உபாகமம் 12:31) மீறிய மறு நிலையில், புறமத தத்துவஞானிகள், கடவுள் கோபம் அல்லது இரக்கம் போன்ற இத்தகைய உணர்ச்சிகள் இல்லாதவரென கற்பித்தனர்.
பேய்களால் ஏவப்பட்ட இந்தத் தத்துவஞானிகளின் கருத்துக்கள், கடவுளுடைய ஜனங்களாக உரிமைபாராட்டின யூதர்கள்மீது செல்வாக்கு செலுத்தின. இயேசுவின் சமகாலத்தவனாக இருந்த யூத தத்துவஞானியாகிய ஃபிலோ, கடவுள் “எந்த உணர்ச்சியாலும் பாதிக்கப்படுவதே இல்லை” என்று வலியுறுத்திக் கூறினான்.
கண்டிப்பான யூதக் குழுவினரான பரிசேயருங்கூட கிரேக்க தத்துவஞானத்தின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. மனிதன் அழியாமையையுடைய ஓர் ஆத்துமாவை மனித உடலில் அடைக்கப்பட்டதாகக் கொண்டிருக்கிறான் என்ற பிளேட்டோவின் போதகங்களை அவர்கள் ஏற்றனர். மேலுமாக, பொல்லாத ஆட்களின் ஆத்துமாக்கள் “நித்திய தண்டனையை அனுபவிக்கின்றன” என்று பரிசேயர்கள் நம்பினரென முதல் நூற்றாண்டு சரித்திராசிரியன் ஜொஸிஃபஸ் சொல்கிறார். எனினும், பைபிள் அத்தகைய கருத்துக்கு ஒரு ஆதாரமும் அளிக்கிறதில்லை.—ஆதியாகமம் 2:7; 3:19; பிரசங்கி 9:5; எசேக்கியேல் 18:4.
இயேசுவைப் பின்பற்றினோரைப் பற்றியதென்ன? புறமத தத்துவஞானத்தால் தாங்கள் பாதிக்கப்படும்படி அவர்கள் அனுமதித்தார்களா? இந்த ஆபத்தை உணர்ந்து, அப்போஸ்தலன் பவுல் உடன் கிறிஸ்தவர்களைப் பின்வருமாறு எச்சரித்தார்: “தத்துவசாஸ்திரம் மாயமான வஞ்சகம் இவற்றினால் ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவை மனுஷரின் பாரம்பரை முறைமைக்கும் உலகத்தின் பாலபோதனைகளுக்கும் இசைந்தவைகளேயன்றிக் கிறிஸ்துவுக்கு இசைந்தவைகளல்ல.”—கொலோசெயர் 2:8, தி.மொ.; அதோடு 1 தீமோத்தேயு 6:20-ஐயும் பாருங்கள்.
வருந்தத்தக்கதாக, இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ கண்காணிகளாக உரிமைபாராட்டின பலர் அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்து, கடவுளுக்கு உணர்ச்சிகள் கிடையாதென போதித்தனர். மதக் களஞ்சியம் (The Encyclopedia of Religion) பின்வருமாறு கூறுகிறது: “பொதுவாக, கடவுளுடைய பண்பியல்புகள், அக்காலத்து யூத மற்றும் தத்துவஞான எண்ணத்தில் அவை உறுதிசெய்யப்பட்டபடியே பெரும்பாலும் புரிந்துகொள்ளப்பட்டன . . . பிதாவாகிய கடவுளுக்கு இரக்கம் போன்ற உணர்ச்சிகள் இருக்கக்கூடுமென்ற எண்ணம் . . . இருபதாம் நூற்றாண்டின் பிற்பட்ட காலம் வரையிலாயினும் பொதுவாய் ஏற்கத்தகாததாகக் கருதப்பட்டிருந்தது.”
இவ்வாறு, பாவிகள் உணர்வுடன் என்றென்றுமாக வதைக்கப்படும்படி செய்வதன்மூலம் அவர்களைத் தண்டிக்கிற ஒரு கொடூரமான கடவுளைப்பற்றிய பொய்ப் போதகத்தைக் கிறிஸ்தவமண்டலம் ஏற்றது. மறுபட்சத்தில், யெகோவா தேவன், “பாவத்தின் சம்பளம் மரணம்,” உணர்வுடன் நித்தியமாய் வதைப்பதல்ல என்று தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் தெளிவாய்க் கூறுகிறார்.—ரோமர் 6:23.
[படத்திற்கான நன்றி]
Above: Acropolis Museum, Greece
Courtesy of The British Museum
[பக்கம் 7-ன் படம்]
பூமியை ஏதேனிய பரதீஸாக மாற்றுவதற்கான கடவுளுடைய நோக்கம் நிறைவேற வேண்டும்!