அகதிகளாக இருப்பினும், கடவுளைச் சேவித்துக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி
போர்கள், பஞ்சங்கள், பெருஞ்சேதங்கள், கொந்தளிப்பு. சில ஆட்களுக்கு இவை வெறுமென தலையங்கச் செய்திகளாக மாத்திரமே இருக்கின்றன. மற்ற அநேகருக்கு அவை அன்றாடக வாழ்க்கையின் ஒரு பாகமாக இருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள், உலகளாவிய கிறிஸ்தவர்களின் ஒரு கூட்டுறவாக இருப்பதன் காரணமாக, போர் தொடுக்கப்படும்போது அல்லது பெருஞ்சேதம் ஒன்று ஏற்படும்போது தங்களுடைய சர்வதேச சகோதரத்துவத்தின் ஒரு பகுதி துன்புறக்கூடும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஓடவேண்டியதாக இருக்கையில், நம்முடைய சகோதரர்களும் அதையே செய்ய வேண்டியதாக இருக்கலாம்.
பல ஆண்டுகளாக ஆப்பிரிக்காவிலுள்ள அநேக தேசங்களில் சாட்சிகள் இப்படிப்பட்ட அனுபவங்களைச் சகித்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அவர்களில் அநேகர் தங்களால் எடுத்துச்செல்ல முடிந்தவற்றை மூட்டைக்கட்டிக் கொண்டு வேறிடத்தில் அடைக்கலம் புக வேண்டியதாக இருக்கிறது. வெகு சிலரே போக்குவரத்துக்கு ஏதோ ஒரு வசதியை, ஒருவேளை ஒரு சைக்கிளை உடையவர்களாக இருந்தபோதிலும், பெரும்பாலானவர்கள்—பல நாட்கள் கணக்கில், வாரக் கணக்கிலும்கூட—கால்நடையாக நடந்தே தாங்கள் போய் சேரவேண்டிய இடத்தை அடைய வேண்டியதாக இருக்கிறது.
போய் சேரவேண்டிய இப்படிப்பட்ட இடங்களில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ம்போகி என்ற பெயருடைய ஒரு சிறிய பட்டணமாக இருந்தது. ஆண்டுகளினூடாக, ஆண்களும் பெண்களும் இளைஞரும் முதியோரும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளில் அநேகரும் அவர்களோடேகூட அக்கறைக் காட்டும் ஆட்களும் இருந்தார்கள். நிச்சயமாகவே, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரமாகிய பாங்குயிலுள்ள உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகத்திலுள்ள உடன் கிறிஸ்தவர்கள் உதவி அளிப்பதற்காக இந்த அகதிகளைச் சந்திப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். சுமார் 1,130 கிலோமீட்டர் தொலைவில் பாங்குயிலுள்ள சாட்சிகள் தாராளமாக அளித்திருந்த பணம், உணவு, உடை, மருந்து ஆகியவற்றோடு ஐந்து தடவைகள் பிரதிநிதி ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார். தாராளமான இந்த உதவியை அளித்துக்கொண்டிருந்தவர்கள் பொருளாதாரத்தில் குறைவுபட்டவர்களாக இருந்தாலும், தங்களால் இயன்றதைச் செய்வதில் சந்தோஷமாயிருந்தார்கள்.
ம்போகியைச் சென்றடைதல்
கிளை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் வேறு என்ன செய்யப்பட முடியும் என்பதையும் அகதிகளுக்கு எவ்வாறு ஆவிக்குரிய வகையில் உதவியளிக்க முடியும் என்பதையும் காண விரும்பினார்கள். ஆகவே என்னுடைய மனைவியும் நானும், விசேஷித்த பயனியராக இருந்த சான்போரியானோடும் அவருடைய மனைவியோடும் சேர்ந்து கரடு முரடான பாதையில் ஓடக்கூடிய மோட்டார் வண்டியில் (Land Cruiser) எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். சான்போரியான் பாதையை நன்கு அறிந்திருந்தார், ம்போகியிலுள்ள அகதிகளின் ஸாண்டே மொழி அவருக்குத் தெரிந்திருந்தது. அங்கு சென்றுசேருவதற்கு நாங்கள் நான்கு நாட்கள் பயணம்செய்தோம்.
கடைசி 400 கிலோமீட்டர்கள் எல்லையற்ற வளம் கொழிக்கும் நாட்டுப்புறத்தையும் பிரம்மாண்டமான பருத்த அடியுடைய மரங்களையும் கொண்ட அழகான பிராந்தியத்தின் வழியாக செல்ல வேண்டியதாய் இருந்தது. அங்கும் இங்குமாக நாங்கள் சிறிய கிராமங்களைக் கடந்து வந்தோம். சாலையின் இந்தப் பகுதியில், என்னுடைய மனைவி சரியாக 50 பாலங்களை—மோசமான நிலையில் பல பாலங்களும் கடக்கமுடியாத நிலையில் சில பாலங்களுமாக—எண்ணிக்கொண்டு வந்தாள். சில பாலங்களை கம்புகளையும், இற்றுப்போன உத்தரங்களையும் கொண்டு பழுதுபார்த்து, நான்கு சக்கர மோட்டார் வண்டியை அதன்மீது நிறுத்தி ஜெபம் செய்து மிகவும் கவனமாக அதை இழுத்துச்சென்றோம். அருகாமையில் ஒரு சிறிய கிராமம் இருக்கும் பட்சத்தில், சிறுவர்கள் கொஞ்சம் பணம்வாங்கிக்கொண்டு உதவிசெய்ய ஓடிவருவர். அடர்த்தியான புற்களின் கீழேயும் அருகாமையிலுள்ள முட்புதர்களிலும் அவர்களுக்கு எப்போதும் மரத்துண்டுகளும் பாலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரப்பலகைகளும் கிடைத்தது எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது. பாலத்திலிருந்து இவை அகற்றப்பட்டு தேவையிலிருக்கும் வாடிக்கைக்காரர்களுக்காக அங்கே வைக்கப்பட்டிருக்கக்கூடுமா என்று எங்களை அது யோசிக்கச்செய்தது.
பாலங்கள் கடந்துசெல்வதற்கு மிகவும் ஆபத்தானதாக தோன்றியதால் மூன்று சமயங்கள் நாங்கள் அந்தச் சிறுவர்களின் உதவியை ஏற்க மறுத்தோம். ஆகவே நாங்கள் சாலையை விட்டிறங்கி குறுகிய சமவெளியிலும் பின்னர் பாறைகளின் மீதும், மேட்டிலும் ஏறி பின்னர் சாலைக்கு ஓட்டி வந்தோம். அது வறட்சியான காலமாக இருந்தமைக்காக நாங்கள் எத்தனை மகிழ்ச்சியடைந்தோம், மற்றபடி, ஒருவேளை ஹெலிகாப்டரின் மூலமாக மட்டுமே அன்றி அந்தப் பயணத்தை மேற்கொள்ள எந்த வழியும் எங்களுக்கு இருந்திருக்காது!
ம்போகி எதைப் போன்றிருக்கும்? மத்திய ஆப்பிரிக்க குடியரசில் “பெஸ்ட்” என்னும் பிரெஞ்சு வார்த்தையால் அழைக்கப்படும் மணலும், பாறைகளும் இடிந்தக் கட்டடக் கற்கூளங்களும் நிறைந்த—ஆயிரக்கணக்கான குழிகளையும் கொண்ட—இந்தச் சாலையில் வண்டியை ஓட்டிக்கொண்டு வருகையில் இது அடிக்கடி எங்கள் மனங்களில் வந்துகொண்டிருந்தது.
நான்காவது நாள், பிற்பகலுக்குச் சற்றுப்பின், பப்பாளி மரங்களும் மரவள்ளிக்கிழங்கு விளைநிலமும் சூழ்ந்த புல்லால் வேயப்பட்ட குடிசைகளை சான்போரியான் சுட்டிக் காட்டினார். “வ்யாலா! இங்கேதான் ம்போகி ஆரம்பமாகிறது,” என்று அவர் கத்தினார். நாங்கள் பார்த்தவை எங்களை ஆச்சரியமடையச் செய்தன. “இது ம்போகி? முகாம் எங்கே?” என்று நாங்கள் கேட்டோம், ஏனென்றால் நாங்கள் பார்த்தது முகாம் அல்ல, ஆங்காங்கே சிதறிய வீடுகள். அவை சிறியவையாக ஆனால் புல்லால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட சுத்தமான சிறிய குடிசைகளாக இருந்தன. மரங்களும் முட்புதர்களும்கூட எல்லா இடங்களிலுமிருந்தன. தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் மக்கள் பயிரிடுகிறார்கள். ம்போகி நாங்கள் எதிர்பார்த்ததைப் போன்ற முகாமாக இல்லை; அது சுமார் 35 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய கிராமமாக இருந்தது.
சகோதரர்களைச் சந்தித்தல்
எங்கள் பயணம் ஐந்து நாட்கள் எடுக்கும் என்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த போதிலும் நாங்கள் வரப்போவதை ம்போகியிலிருந்த சகோதரர்கள் அறிந்திருந்தார்கள். எங்களுடைய காரின் சப்தம் கேட்டவுடன், எங்களை வாழ்த்துவதற்காக ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் தங்கள் குடிசைகளுக்குள்ளிருந்தும் மதிலுக்குப் பின்னிருந்தும் தங்கள் வயல்களிலிருந்தும் ஓடோடி வந்தார்கள். அனைவருமே, புன்முறுவல்செய்துகொண்டும், சிரித்துக்கொண்டும், முடிந்தால் பல முறைகள் கைக் குலுக்கிக்கொண்டும் இருந்தார்கள். குழந்தைகளைக் கையிலேந்திக்கொண்டிருந்த தாய்மார்களும் எங்களுக்கு வாழ்த்துதல் சொன்னார்கள். அனைவரும் எங்களுக்கு ஹலோ என்று சொல்ல விரும்பினார்கள், மிகவும் அன்பாக எங்களை வரவேற்றார்கள்.
மொழி ஒரு தடையாக இருந்ததால், அந்தச் சமயத்தில் என்னுடைய மனைவிக்கும் எனக்கும் செய்வதற்கு அதிகமில்லை. நாங்கள் கொஞ்சம் பிரெஞ்சு, கொஞ்சம் சேன்சோ, கொஞ்சம் ஆங்கிலம் மற்றும் அராபிய மொழியில் பேச முயற்சி செய்தோம். நம்முடைய சகோதரர்களில் பெரும்பாலானவர்கள் ஸாண்டே மொழியில்தானே பேசவும், படிக்கவும், எழுதவும் செய்கிறார்கள். சான்போரியான் மொழிபெயர்த்து எங்களுடைய சந்திப்பின் நிகழ்ச்சிநிரலை விளக்க வேண்டியதாக இருந்தது.
நாங்கள் இன்னும் ஒரு சில கிலோமீட்டர்கள் பயணம்செய்து ராஜ்ய மன்றத்தை வந்தடைந்தோம். இது ம்போகியில் அகதிகளால் கட்டப்பட்ட முதல் “சர்ச்”சாக இருந்தது. இன்னும் அநேக சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளும், அக்கறையுள்ளவர்களும் கைகளைக் குலுக்குவதற்காக நீட்டினார்கள். அக்கம் பக்கத்திலிருந்த அநேக பிள்ளைகளும்கூட எங்கள் கைகளைக் குலுக்குவதற்காக சகோதரர்களோடு வந்தார்கள்.
அவர்களுடைய விருந்தாளிகளாகிய எங்களுக்கு நம்முடைய சகோதரர்கள் இரண்டு சிறிய வீடுகளைத் தயாராக வைத்திருந்தார்கள். அவை பளிச்சென்று சுத்தமாக இருந்தன. வாளிகளில் சுத்தமான தண்ணீர் எங்களுக்கு தயாராக காத்திருந்தன. உணவுக்கும் தண்ணீருக்கும் கடுமையான பற்றாக்குறையை எதிர்பார்த்ததாலும் எங்களுடைய சகோதரர்களுக்குச் சுமையாக இருக்க விரும்பாததாலும் எங்களோடு உணவையும் குடிநீரையும் எடுத்துச்சென்றிருந்தோம். வண்டியிலிருந்து மூட்டைகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்தபோது, இளம் பெண் ஒருத்தி, எங்களிடம் வந்து அன்றிரவு கோழியை வாட்டியா அல்லது தாளித்தக்கூட்டாகவா எப்படி சமைக்கவேண்டும் என்று கேட்டாள். அதை நாங்கள் சற்றேனும் எதிர்பார்க்கவே இல்லை, அதோடு என்ன சாப்பிட அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதாக கேட்டோம். பதில்: மரவள்ளிக்கிழங்கு. ஆகவே நாங்கள் காரசாரமான தாளித்தக்கூட்டைத் தெரிந்துகொண்டோம். எங்களுக்கு இருந்த பயங்கரமான பசியில் அன்றிரவு திருப்தியாக சாப்பிட்டோம். ஆனால் ஒவ்வொரு நாளும்—பிற்பகலிலும் மாலையிலும்—தொடர்ந்து எங்களுக்கு உணவளித்துக் கொண்டே இருந்தார்கள். எங்களால் இதை நம்பவே முடியவில்லை—அவர்களுக்கே அதிகம் இல்லாதபோதிலும், எங்களுக்கு உணவளித்து எங்களைக் கவனித்துக்கொண்டார்கள்.
சந்தோஷமுள்ள ஒரு சிறிய சபை
இங்கே இப்படிப்பட்ட ஒரு தொலைதூரமான இடத்தில் ஆனால் நம்முடைய 21 சகோதரர்களின் மத்தியில் இருந்தோம். இங்கே ஏற்கெனவே முழுக்காட்டப்பட்டவர்களாக வந்தவர்கள் இரண்டு பேர் மாத்திரமே. மற்றவர்கள் இங்கு வந்தபோது அக்கறையுள்ள ஆட்களாகவே இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து படித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய சந்திப்பின் சமயத்தில் இன்னும் நான்குபேர் அருகிலிருந்த ஆற்றில் முழுக்காட்டப்பட்டார்கள்.
குறிப்பிட்டத்தக்க ஓர் உதாரணம் ஃபாஸ்டீனோ. ம்போகியிற்கு வருவதற்கு முன்பாக, ஒரு நண்பரிடமிருந்து அடிப்படை பைபிள் சத்தியங்களைக் கற்றார். ஃபாஸ்டீனோ தான் கற்றுக்கொண்டிருந்தவற்றைப் போற்றினார். சீக்கிரத்தில் அவரும் அவருடைய நண்பரும் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள், ஆனால் எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேர்ந்தது, தங்கள் மதத்தினால் “மக்களை தூண்டுவதாக” அவர்கள் சிறையில் போடப்பட்டனர். சிறைவாசத்தின் போது, ஃபாஸ்டீனோவின் நண்பர் பயத்தின் காரணமாக பின்வாங்கிவிட, அவர் விடுவிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஃபாஸ்டீனோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். என்றபோதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது தெளிவாக இருந்தது, ஆகவே அவர் விடுவிக்கப்பட்டார். அவர் இருந்த பிராந்தியத்தில் போர் மூண்டபோது, ஃபாஸ்டீனோ மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கு ஓடினார். அங்கே அவர் சகோதரர்களைச் சந்தித்து தன்னுடைய பைபிள் படிப்பைத் தொடர்ந்தார். அவர் 1991 ஜூலை மாதம் முழுக்காட்டப்பட்டு 1992-ல் ஒழுங்கான பயனியராக முழு நேர ஊழியத்தை எடுத்துக்கொண்டார்.
ம்போகியிலுள்ள சந்தோஷமும் சிநேகபான்மையுமுள்ள சிறிய சபையில் இப்பொழுது ஒரு விசேஷித்த பயனியரும் 21 பிரஸ்தாபிகளும் இருக்கின்றனர். ஆங்கிலம் பேசும் இரண்டு சகோதரர்கள் மூப்பர்களாக சேவிக்கின்றனர், பாங்குயிலுள்ள கிளை அலுவலகத்தோடு செய்தித் தொடர்பை நல்லவிதமாக வைத்துக்கொள்ள இவர்களால் முடிகிறது. அகதிகளாக இருக்கும் நம்முடைய சகோதரர்கள் பயங்கரமான, நம்பிக்கையற்ற நிலையில் இருப்பார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் இது அவ்விதமாக இல்லை. பொருள் சம்பந்தமாக ஏழ்மையிலிருந்தாலும், யாருமே குறைக்கூறிக்கொண்டு, கவலைப்பட்டுக் கொண்டு அல்லது முறுமுறுத்துக்கொண்டில்லை. அங்கு வந்து சேர்ந்தது முதல் சகோதரர்கள் தங்கள் குடிசைகளையும் வீடுகளையும் கட்டிக்கொண்டு, உணவு பொருட்களை விளைவிக்கவும் கோழிகளை வளர்க்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னிருந்ததைக் காட்டிலும் அவர்களுக்குக் குறைவாக இருக்கிறது, ஆனால் அவர்கள் உயிரோடும் உடன் கிறிஸ்தவர்களோடும் இருக்கிறார்கள்.
ம்போகியில் 17,000-க்கும் 20,000-க்குமிடையே அகதிகள் இருப்பதாலும், ஒவ்வொரு மாதமும் இன்னும் அதிகமானவர்கள் வந்துகொண்டிருப்பதாலும் நம்முடைய சகோதரர்களுக்கு அவர்களுடைய ஊழியத்துக்கு மிகப்பெரிய பிராந்தியம் இருக்கிறது. அவர்களோடு நாங்கள் பிரசங்கிக்கச் சென்றோம், நிச்சயமாகவே அது மிகவும் அக்கறையூட்டுவதாக இருந்தது. அவர்கள் அநேகமாக ஸாண்டே மொழி பைபிளைப் பயன்படுத்துகிறார்கள், இந்த மொழிபெயர்ப்பு எபிரெய வேதாகமத்திலும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பல இடங்களிலும் கடவுளுடையப் பெயரைக் கொண்டிருக்கிறது. இந்த மக்களுக்கு கடவுள் வெறுமென ம்போலி (ஸாண்டேவில் “கடவுள்”) அல்ல, ஆனால் யெக்கோவாவாக இருக்கிறார். இப்படித்தான் கடவுளுடைய தனிப்பட்ட பெயரை அவர்கள் உச்சரிக்கிறார்கள். ம்போலி யெக்கோவா என்பதே பொதுவான சொற்றொடராக இருக்கிறது. மற்ற அநேக ஆப்பிரிக்க மொழிகளில் புராட்டஸ்டன்டு மொழிபெயர்ப்புகள் இந்தச் சரியான மொழிபெயர்ப்பைப் பின்பற்றாமல் “யெகோவா” என்ற பெயருக்குப் பதிலாக ஸாப்பா, ஸாம்பே என்றோ அல்லது கடவுள் என்பதற்குரிய மற்ற ஆப்பிரிக்க பெயர்களையோ பயன்படுத்துகின்றன.
இயேசுவின் தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக, ராஜ்ய நற்செய்தி உலகம் முழுவதிலுமாக, ம்போக்கியிலும்கூட பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:14) பைபிள்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், சிறுபுத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரதிகளை அவர்களுக்குத் தேவையான எல்லா மொழிகளிலும் சபை இப்பொழுது போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் ஸாண்டே மொழியில் இன்னுமதிகமான பிரசுரங்கள் கிடைக்கலாம்.
நிரந்தரமான வீட்டை எதிர்நோக்கியிருத்தல்
முதல் நாள் மாலை, “கிழக்கு ஐரோப்பாவில் மகிழ்ச்சியுள்ள மாநாட்டு பிரதிநிதிகள் யெகோவாவைத் துதிக்கிறார்கள்,” என்ற சங்கத்தின் படக்காட்சி நிகழ்ச்சிநிரலை நாங்கள் காட்டினோம். “முடிவின் காலத்தில் அநேகரை நீதிக்குட்படுத்துதல்” அடுத்த நாள் இரவு நிகழ்ச்சியாக இருந்தது. படக்காட்சி நிகழ்ச்சி ராஜ்ய மன்றத்தை அடுத்துள்ள திறந்த வெளியில் தெளிவான வானத்தில் பளபளக்கும் நிலவொளியின் கீழ் நடைபெற்றது. என்னே ஒரு சூழ்நிலை! இந்தப் படக்காட்சிகளைக் காண நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர், மக்களுக்கு விசேஷமாக ஏதோவொன்றை அளிப்பது நம்முடைய சகோதரர்களுக்கு மகிழ்ச்சியாயும் பெருமையாயும் இருந்தது.
திங்கட்கிழமை வந்தபோது நாங்கள் திரும்பி வருவதற்கு தயாரானோம். அதே சாலைகளையும் அதே 50 பாலங்களையும் கடந்துச் செல்லும் மற்றொரு நான்கு நாள் பயணமாக அது இருக்கும். பயணத்துக்காக உணவை—இன்னும் இரண்டு கோழிகள், ஏற்கெனவே வாட்டப்பட்டு வெள்ளைப்பூண்டு கொண்டு தனிச்சுவையூட்டப்பட்டிருந்த உணவை—தயாரித்து ஒரு சகோதரி வற்புறுத்தி கொடுத்தார்கள். வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கையில் அவற்றின் மணம் அத்தனை நன்றாக இருந்தது. நண்பகலில் நாங்கள் ம்போக்கியிலுள்ள நம்முடைய சகோதரர்களைப் பற்றி நினைத்துக்கொண்டே வாட்டப்பட்ட கோழியை அனுபவித்து உண்பதற்காக ஒரு மரநிழலில் நின்றோம். அகதிகளாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலும், அவர்கள் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய பூமியில் சமாதானமுள்ள நிரந்தரமான ஒரு வீட்டுக்காக காத்திருக்கையில், அவர்கள் தொடர்ந்து யெகோவாவை உண்மையுடன் சேவித்துவருகிறார்கள். (2 பேதுரு 3:13)—அளிக்கப்பட்டது.