யெகோவாவைத் தெரிந்தெடுக்க உங்கள் பிள்ளைக்கு உதவிசெய்கிறீர்களா?
“பைபிளைப் படிப்பது உண்மையில் சலிப்பாகவும் களைப்பாகவும் இருப்பதாக நான் உணர்ந்தேன். நான் வளர்ந்து பெரியவனாகும்போது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நான் இருக்கப்போவதில்லை என்பதாக இரகசியமாக என் இருதயத்தில் தீர்மானம் செய்தேன்,” என்பதாக ஓர் இளம் மனிதன் தெரிவித்தான். நம்பிக்கையளிக்கும் விதமாக, கிறிஸ்தவ வீடுகளிலுள்ள பெரும்பாலானோர் கடைசியில் யெகோவாவை வணங்கவே தெரிந்தெடுத்தாலும், இவனைப் போன்ற இளைஞர் யெகோவாவைத் தங்களுடைய கடவுளாகத் தெரிந்தெடுப்பதில் கடினமான ஒரு காலத்தை அனுபவிக்கக்கூடும்.
பெற்றோர் சில சமயங்களில் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு திறம்பட்ட விதமாக வழிநடத்துவது என்பதைப் பற்றி நிச்சயமற்றவர்களாக இருக்கின்றனர். கவலையுற்றிருந்த ஒரு தகப்பன் சொன்னதுபோல அவர்கள் தங்கள் மனச்சாட்சியை அதிகமாக ஆய்வுசெய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்: “நேர்மையாக சொல்லப்போனால், என்னுடைய பிள்ளைகளின் கன்னங்களில் ஏமாற்றத்தின் கண்ணீர் இன்னும் மறையாதிருக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும் என் பிள்ளைகளின் முகங்களைப் பார்த்து, நான் கண்டிப்புக் குறைவாக இருந்திருக்கவேண்டும் என்று நினைத்த சமயங்கள் இருந்திருக்கின்றன.” அவருடைய இரண்டு மகன்களும் பெரியவர்களாக வளர்ந்து யெகோவாவைச் சேவிப்பதைத் தெரிந்தெடுத்தார்கள்.
என்றாலும் யெகோவாவை உதறித்தள்ளிவிட்டு சாத்தானுடைய உலகத்துக்காக கிறிஸ்தவ மந்தையை விட்டு சென்றுவிட்டிருக்கும் இளைஞர் இருக்கின்றனர். ஆகவே தங்கள் பிள்ளைகள் யெகோவாவைத் தெரிந்தெடுப்பதற்கு உதவிசெய்வதில் பெற்றோர் எவ்விதமாக வெற்றிகாண முடியும்? அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, பிள்ளைகள் அவரிடமிருந்து அகலாதிருக்க வேண்டும் என்று பெற்றோர் அத்தனை தீவிரமாக விரும்பும்போது ஒரு சில இளைஞர் ஏன் யெகோவாவை உதறித்தள்ளிவிடுகின்றனர் என்பதை நாம் முதலில் கண்டுபிடிக்கலாம்.
சில இளைஞர் யெகோவாவை ஏன் உதறித்தள்ளிவிடுகின்றனர்
சில இளைஞர் ஒருபோதும் யெகோவாவை அல்லது அவருடைய வழிகளை உண்மையில் தெரிந்தெடுக்காதிருப்பது மிக அதிக பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சிசு பருவத்திலிருந்து கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தபோதிலும், அவர்கள் அதை ஒரு கடமையாகச் செய்கிறார்களே தவிர, யெகோவாவை உண்மையாக தேடுவது கிடையாது. (ஏசாயா 55:6; அப்போஸ்தலர் 17:27) மேலே குறிப்பிடப்பட்ட பையன் கிறிஸ்தவ கூட்டங்களில் சலிப்படைந்ததற்கு காரணம், மேடையில் பேச்சாளர்கள் சொன்னவற்றை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
சத்தியத்தின் விதைகள் சில பிள்ளைகளில் விதைக்கப்படுகின்றன, ஆனால் வெளித்தோற்றத்துக்கு கவலையற்றதாக தோன்றும், சாத்தானுடைய உலகின் பொருள்பற்றுள்ள வாழ்க்கைப் பாணியில் தங்கள் இருதயங்கள் மயங்கிவிட அவர்கள் அனுமதித்துவிடுகின்றனர். சிலரால் தங்கள் சகாக்களோடு கூட்டுறவுக்கொண்டு, அவர்களைப் பின்பற்ற விரும்பும் அந்த அதிபலமான ஆசையை எதிர்த்து சமாளிக்க முடிவதில்லை.—1 நாளாகமம் 28:9; லூக்கா 8:12-14; 1 கொரிந்தியர் 15:33.
என்றபோதிலும் உலகம் முழுவதிலும், கிறிஸ்தவ வீடுகளிலுள்ள அநேக பிள்ளைகள் யெகோவாவின் பக்கத்தில் நிற்பதைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர் எடுத்திருக்கும் நேர்நிலையான படிகளிலிருந்து எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா?
சிறுபிராயத்தில் ஆரம்பித்துவிடுங்கள்
யெகோவாவைத் தெரிந்தெடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதில் இன்றியமையாத திறவுகோல் சிறுபிராயத்தில் ஆரம்பித்துவிடுவதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இருதயம் எதையும் எளிதில் பதிய வைத்துக்கொள்வதாயும் கருத்துக்களை வாங்கிக்கொள்வதாயும் இருக்கும்போது பெற்றுக்கொள்ளப்படும் அபிப்பிராயங்களும் கற்றுக்கொள்ளப்படும் பாடங்களும் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்கின்றன. (நீதிமொழிகள் 22:6) ஆகவே சிறுபிராயத்திலேயே, யெகோவாவின் நற்குணத்தையும் அவருடைய அன்பையும் பிரமிக்க வைக்கும் அவருடைய குணாதிசயங்களையும் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல ஆரம்பித்து, யெகோவாவின்மேல் அன்பையும் யெகோவா அவர்களுக்குச் செய்திருக்கும் காரியங்களுக்காக போற்றுதலையும் அவர்களுடைய இருதயங்களில் வளர்க்க பாடுபடுங்கள். இதை செய்துமுடிப்பதற்கு, அநேக பெற்றோர் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்களில் காணப்படும் யெகோவாவின் படைப்புகளின்பேரிலான ஏராளமான கட்டுரைகளை வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
யெகோவாவுக்கும் அவருடைய வணக்கத்துக்கும் கீழ்ப்படிதலும் மரியாதையும் வாழ்க்கையின் ஆரம்பத்தில் மனதில் ஆழமாக பதிய வைக்கப்படவேண்டிய மற்ற குணங்களாகும். பள்ளிச்செல்லும் வயதை இன்னும் அடையாத பிள்ளைகள் கிறிஸ்தவ கூட்டங்களில் எளிமையான குறிப்புகளை எடுக்கவும், தங்களுடைய சொந்த பைபிள்களில் வசனங்களை எடுத்துப்பார்க்கவும் போராடுவதைப் பார்ப்பது அல்லது தூக்கம் வருவதுபோல இருக்கையில் குளிர்ந்த நீரால் தங்கள் முகங்களைக் கழுவிக்கொள்ள தங்கள் பெற்றோருடன் குளிக்கும் அறைக்குச் செல்வதைப் பார்ப்பது இருதயத்தை மகிழ்விப்பதாக இருக்கிறது. இவை சிறிய காரியங்களே, ஆனால் யெகோவாவுக்கு மரியாதையும் கீழ்ப்படிதலும் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை இளம் மனதில் பதிய வைப்பதில் இவை எத்தனை இன்றியமையாதவையாக இருக்கின்றன!
கருத்தாழமுள்ள தனிப்பட்ட பைபிள் போதகத்தையும்கூட சிறுபிராயத்திலேயே ஆரம்பிக்கவேண்டும். தங்களுடைய பையன்கள் இரண்டு வயதாயிருக்கையில், ஒரு தம்பதியினர் அவர்களோடு சேர்ந்து பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்a புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார்கள். பின்னால், பையன்கள் பள்ளி செல்ல ஆரம்பித்தபோது, அவர்கள் காலையில் சீக்கிரமாக எழுந்து ஒவ்வொரு காலையும் தங்கள் தாயோடு என்னுடைய பைபிள் கதை புத்தகம் மற்றும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்* புத்தகத்தையும் படிப்பார்கள். இதைத் தொடர்ந்து காலை உணவுக்கு முன்பாக தந்தை தினவாக்கியத்தை கலந்தாலோசிப்பார். அவர்களுடைய மகன்கள் சமீபத்தில் 10 மற்றும் 11 வயதில் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்தி, யெகோவாவைச் சேவிப்பதைத் தெரிந்தெடுத்தபோது பெற்றோரின் முயற்சிகளுக்கு நிறைவான பலன்கள் கிடைத்தன.
ஜப்பானிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளைக்காரியாலயத்தில் சேவித்துவரும் நேர்த்தியான ஓர் இளம் மனிதன், அவன் மிகச் சிறியவனாக இருந்தபோதே, இரவில் தன் அம்மா அவன் அருகாமையில் அமர்ந்துகொண்டு ஜெபிக்க உதவிசெய்வதன் மூலம் யெகோவாவோடு ஓர் உறவை வளர்த்துக்கொள்ள தனக்கு உதவியதை நினைவுபடுத்திக் கூறுகிறான். கற்றுக்கொடுக்கப்பட்ட பாடத்தை—அவன் எங்கு சென்றாலும் அல்லது என்ன செய்தாலும், யெகோவா எப்போதும் அருகாமையிலும் உதவிசெய்ய தயாராகவும் இருக்கிறார்—என்பதை அவன் ஒருபோதும் மறக்கவில்லை.
வெற்றிகரமான பெற்றோர், பிள்ளைகளின் சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தின் காரணமாக வரும் தவறான மனச்சாய்வுகளைக் கண்டுகொள்ள கற்றுக்கொள்கின்றனர், இவற்றைத் திருத்திக்கொள்வதற்குத் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுபிராயத்திலேயே உதவிசெய்ய ஆரம்பித்துவிடுகின்றனர். (நீதிமொழிகள் 22:15) சுயநலம், பிடிவாதம், பெருமை, அளவுக்கு அதிகமாக மற்றவர்கள்பேரில் குற்றங்கண்டுபிடித்தல் போன்ற மனச்சாய்வுகள் ஆரம்பத்திலேயே கண்டிக்கப்பட வேண்டும். இல்லாவிடில், இப்படிப்பட்ட விதைகள் பின்னால் கடவுளுக்கும் அவருடைய வழிகளுக்கும் எதிராக கலகமாக வளரும். உதாரணமாக, நல்ல எண்ணமுடைய ஆனால் அளவுக்கு அதிகமாக செல்லம்கொடுக்கும் பெற்றோர் அடிக்கடி தங்கள் பிள்ளைகள் தன்னலம் கருதும் மனநிலைகளை வளர்த்துக்கொள்ள அனுமதித்துவிடுகின்றனர். இந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு அல்லது யெகோவாவுக்கு மரியாதைக் காட்டுவதைக் கடினமாகக் காண்பார்கள், பைபிளில் குறிப்பிடப்பட்ட ‘நன்றியில்லாதவர்களைப்’ போலாகிவிடுவார்கள். (நீதிமொழிகள் 29:21) மறுபட்சத்தில், வீட்டு வேலைகள் கொடுக்கப்பட்டு மற்றவர்களின் தேவைகளுக்கு விழிப்புள்ளவர்களாக இருக்கும்படியாக கற்பிக்கப்படுகிற பிள்ளைகள், தங்கள் பெற்றோருக்கும் யெகோவாவுக்கும் அதிக நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
மற்றொரு இன்றியமையாத காரியம், ஒரு பிள்ளை நியாயமாகவே முயன்று அடையக்கூடிய தேவராஜ்ய இலக்குகளை சிறுபிராயத்திலேயே வைப்பதாகும். இது சீக்கிரமாகவும், தொடர்ந்தும் செய்யப்படாவிட்டால், மற்றவர்கள் அவனுடைய மனதையும் இருதயத்தையும் வித்தியாசமான இலக்குகளால் நிரப்பிவிடக்கூடும். பைபிளை ஆரம்பம் முதல் முடிவு வரையாக வாசித்தல், உவாட்ச்டவர் சொஸையிட்டியின் பிரசுரங்களைத் தனிப்பட்ட விதமாக படித்தல், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொள்ளுதல், நற்செய்தியை அறிவிப்பவராதல், முழுக்காட்டுதல் பெறுதல் ஆகியவை இந்த இலக்குகளில் இடம்பெற வேண்டும்.
டக்காஃபியூம் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில், தன் அம்மா காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து எளிய கேள்விகளைத் தயார் செய்து அவற்றை சமையலறை மேசைமீது வைத்துவிடுவதன் மூலம், இவற்றை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதாக நினைவுபடுத்திக் கூறுகிறான். கிறிஸ்தவ ஊழியர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும் இடங்களில் சேவைசெய்யும் பயனியர்களோடுb சில நாட்கள் தங்கியிருந்து, ஊழியத்தில் அவர்களோடு செல்வது, அவர்கள் நல்ல சாப்பாட்டை தயாரிப்பதைப் பார்ப்பது, அவர்களுடைய சந்தோஷத்தையும் வைராக்கியத்தையும் கூர்ந்து கவனிப்பது அதேவிதமாக யெகோவாவை சேவிக்கும் ஆசையை வெகுவாக பாதித்தது யூரிக்கு நினைவிலிருக்கிறது. யெகோவாவை சந்தோஷத்தோடு சேவிக்கும் மற்ற இளம் ஆண்களையும் பெண்களையும் கவனிக்கும்படிக்கு, பெத்தேல் என்றழைக்கப்படுகிற உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைமைக்காரியாலயங்களுக்கும் கிளைக்காரியாலயங்களுக்கும் தங்கள் பெற்றோர் அவர்களை ஒழுங்காக அழைத்துச்சென்றதை அநேக இளைஞர் நினைவுக்குக் கொண்டுவருகிறார்கள். பிள்ளைகளாக, பெத்தேலுக்கு விஜயம் செய்தவர்கள் இப்பொழுது உலகம் முழுவதிலும் பெத்தேல்களில் சேவித்து வருகின்றனர்.
உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுங்கள்
உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் செலவழிக்கும் நேரத்தின் அளவும் தரமும், அவர்கள் யெகோவாவைச் சேவிப்பதைத் தெரிந்தெடுக்கிறார்களா இல்லையா என்பதன் பேரில் நேரடியான தொடர்புடையதாக இருக்கக்கூடும். அவர்களுக்கு நீங்கள் நடத்தும் பைபிள் படிப்புக்கு நீங்கள் எவ்வளவு நேரத்தையும் தயாரிப்பையும் ஒதுக்குகிறீர்கள் என்பதை விரைவாக உணர்ந்துகொண்டுவிடுகின்றனர். கடந்தப் படிப்பில் நீங்கள் எங்கே நிறுத்தினீர்கள் என்பதை உங்களால் நினைவுகூரமுடியாதிருந்தால் அல்லது அற்பமான காரணங்களுக்காக படிப்பை நீங்கள் ரத்து செய்துவிட்டால், படிப்பு அத்தனை முக்கியமானதல்ல என்ற செய்தியை நீங்கள் தெரிவிக்கிறீர்கள். என்றபோதிலும், பெற்றோர் படிப்புக்காக தியாகங்களைச் செய்வதை, அதற்காக நன்றாக தயாரிப்பதை, என்ன வந்தாலும் ஒழுங்காக படிப்பை நடத்துவதை அவர்கள் காண்கையில், முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது. சில தாய்மார் அது தேவையாக இல்லாதபோதிலும், கூட்டங்களுக்குச் செல்கையில் அல்லது அயலாரோடு ஒரு படிப்பை நடத்துகையில் செய்வதைப் போலவே தங்கள் பிள்ளைகளோடு படிப்பதற்கும் முறைப்படியாக உடுத்திக்கொள்கின்றனர். யெகோவாவின் வணக்கம் முக்கியமானது என்ற எண்ணம் பதியவைக்கப்படுகிறது.
உங்கள் பிள்ளைகளின் இருதயங்களைச் சென்றெட்டி பைபிள் கல்வியை அவர்கள் அனுபவித்து மகிழச்செய்வதற்கு அதிகமான நேரமும் முயற்சியும் தேவைப்படும். குறிப்பாக, சிறு பிள்ளைகள் தாங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்கள் தங்கள் முன்னால் நடித்துக்காட்டப்படுவதைக் காண்கையில் அது அவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. ஒரு தகப்பன், லாசருவின் உயிர்த்தெழுதல் பற்றிய பைபிள் பதிவை நடித்துக்காட்டுவதன் மூலம் உயிர்த்தெழுதலைக் கற்பனைச் செய்துபார்க்க தன் பிள்ளைகளுக்கு உதவிசெய்தார். அவர் அறையில் ஒரு தனி அடைப்பிடத்திற்குள் சென்றுவிட்டு பின்னர் உயிர்த்தெழுப்பப்பட்ட லாசருவாக வெளியே வந்தார்.—யோவான் 11:17-44.
பிள்ளைகள் முழுவளர்ச்சி பருவத்தை நெருங்கும்போது, அவர்களுக்குள் பொங்கிவரும் உணர்ச்சிகளையும், அவர்கள் எதிர்ப்படும் சந்தேகங்கள் மற்றும் கவலைகளையும் சமாளிக்க இன்னும் அதிகமான நேரமும் திறமையும் தேவைப்படும். பிள்ளைகள் யெகோவாவில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், இந்தக் கட்டத்தில் அன்பும் பகுத்துணர்வுமுடைய பெற்றோர் ஒதுக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. தன்னுடைய பிள்ளைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் தான் உவாட்ச்டவர் பிரசுரங்களில் அது சம்பந்தப்பட்ட தகவல்களை எடுத்துப்பார்த்து அந்த நெருக்கடி நிலை முற்றிலுமாக மேற்கொள்ளப்படும் வரையாக ஒவ்வொரு நாளும் அவர்களோடு அதைக் கலந்தாலோசித்ததாக நான்கு பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்த்திருக்கும் ஒரு தகப்பன் கூறினார்.
இரண்டு பிள்ளைகளுடைய சுறுசுறுப்பான ஒரு பயனியர் தாய் தன்னுடைய மகள் பின்வாங்குவதையும் தேவராஜ்ய நடவடிக்கையில் அவளுக்கு மகிழ்ச்சிக் குறைந்துவருவதையும் கவனித்தாள். ஆகவே ஒவ்வொரு நாளும் பிற்பகல் பிள்ளை பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சமயத்தில் வீட்டிலிருக்கவும் தேநீர் அருந்தியவண்ணம் அவளோடு பேச்சுக்கொடுக்கவும் தீர்மானித்தாள். தாய்க்கும் மகளுக்குமிடையே நடந்த நெருக்கமான உரையாடலின் மூலமாக, அந்தப் பெண் அவளுக்குத் தேவையாயிருந்த உதவியைப் பெற்றாள். இப்பொழுது, உயர் நிலைப்பள்ளியிலிருந்து பட்டம் பெற்றப்பின் அவள் பயனியர் சேவையில் தன் தாயோடுச் சேர்ந்துகொண்டிருக்கிறாள்.—நீதிமொழிகள் 20:5.
நல்ல கூட்டுறவும் முன்மாதிரியும்
தங்கள் நேரத்தைக் கொடுப்பதோடுகூட, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான கூட்டுறவை அளித்திடவேண்டும். நீதிமொழிகள் 13:20 இவ்வாறு சொல்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”
அநேக வெற்றிகரமான பெற்றோர் அந்த நீதிமொழியின் உண்மையை உணர்ந்திருக்கின்றனர். நான்கு பிள்ளைகளையுடைய ஒரு தகப்பன் சொல்கிறார்: “கடந்த காலத்தைப் பற்றி நான் சிந்திக்கையில், சத்தியத்தில் எங்களுடைய பிள்ளைகளுக்கிருந்த நண்பர்களின் பெரிய ஒரு கூட்டமே, யெகோவாவை சேவிக்க அவர்களைத் தூண்டுவதற்கு உதவியாக இருந்தது என்பதாக நான் நினைக்கிறேன். மற்ற சபைகளிலும் எங்களுடைய சொந்த சபையிலும் நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டு அந்த நட்பைப் பேணிவளர்க்கும்படியாக நான் அவர்களை ஊக்குவித்தேன்.” பெத்தேலில் அநேக வருடங்கள் சேவித்து வருகிற ஒரு கிறிஸ்தவ மூப்பர் நினைவுகூருகிறார்: “நான் இளைஞனாயிருந்த போது, நாங்கள் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தோம், ஆனால் எப்பொழுதும் வட்டாரக் கண்காணி தங்குவதற்கு அங்கு இடவசதி செய்து கொடுக்கப்பட்டது. மேலுமாக, எங்களுடைய சபையிலிருந்த விசேஷித்த பயனியர்கள் ஒழுங்காக எங்களோடு இரவு உணவைச் சாப்பிட்டனர். அவர்கள் எங்கள் வீட்டில் குளித்து, எங்களோடு கூட்டுறவுக்கொண்டனர். அவர்களுடைய அனுபவங்களைக் கேட்பதும் அவர்களுடைய சந்தோஷத்தைக் காண்பதும், முழு நேர சேவைக்குப் போற்றுதலை வளர்த்துக்கொள்ள எனக்கு உதவிசெய்தது.”
இக்கட்டுகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல கூட்டுறவு உதவிசெய்கிறது. கொந்தளிப்பான காலத்தை அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு மகனின் தாய் பிரச்சினையை யெகோவாவின் சாட்சிகளுடைய பிரயாண கண்காணியிடம் கலந்துபேசினாள். அவர் வெளி ஊழியத்துக்கு அவனை அவள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சிபாரிசு செய்தார். “அவ்வாறு செய்தால், அவனுடைய ஆவிக்குரியத் தன்மையும் மற்ற எல்லா காரியங்களுமே முன்னேற்றமடையும்,” என்பதாக கண்காணி சொன்னார். அவள் அறிக்கைச் செய்கிறாள்: “எங்களுடைய சபையில் மாலைநேரம் சாட்சிகொடுப்பதற்கு ஏற்பாடு இருந்தது, இதில் அநேக பள்ளி வயது பிள்ளைகள், வயதான பல ஒழுங்கான பயனியர்கள், குறைந்தபட்சம் ஒரு மூப்பராவது கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் ஒழுங்காக அவனைப் போகச் செய்வது ஒரு போராட்டமாக இருந்தது, ஆனால் விரைவில் இது மாறிவிட்டது, அவன் எப்பொழுதும் வீட்டுக்கு அதிக மனமகிழ்ச்சியோடும் ஆரோக்கியமான கூட்டுறவினால் ஊக்குவிக்கப்பட்டவனாயும் வீடு திரும்பினான். அவன் பள்ளியில் ஒரு மாணவனாக இருந்தபோதே முழுக்காட்டுதல் பெற்று ஒவ்வொரு மாதமும் துணைப்பயனியராக சேவித்து, பின்னர் பட்டம்பெற்ற போது ஓர் ஒழுங்கான பயனியராக ஆனான்.” ஆரோக்கியமான கூட்டுறவு யெகோவாவின் சித்தத்தைச் செய்வதோடு இணைந்து நல்ல பலன்களைக் கொண்டுவந்தது.
உள்ளூரில் உங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான செல்வாக்காக இருக்கக்கூடிய இளைஞர் ஒருவேளை இருக்கமாட்டார்கள், ஆனால் யெகோவாவைச் சேவிப்பதைத் தெரிந்தெடுத்திருக்கும் அநேக இளைஞர் திரும்பத் திரும்பச் சொன்ன கருத்துக்கள் அவர்களுடைய பெற்றோரின் முன்மாதிரி சம்பந்தப்பட்டதாக இருந்தன. அநேக இளைஞர் தங்கள் பெற்றோரை வியந்து நோக்கி அவர்களைப் போலிருக்க விரும்பினார்கள். யூரிக்கு அவளுடைய தாயின் உபசரிக்கும் தன்மையும், அவள் தொலைபேசி மூலம் அவர்களுடன் தொடர்புகொள்வதும், வியாதியில் இருப்பவர்களுக்கு உணவு தயாரிப்பதுமாக இருந்ததும் மற்றவர்கள் பேரில் அவள் காட்டிய அக்கறையும் நினைவுக்கு வருகிறது. இப்பொழுது பெரியவர்களாக வளர்ந்து யெகோவாவைச் சேவித்துக்கொண்டிருக்கும் நான்கு பையன்கள் இருந்த குடும்பத்திலிருந்து வரும் டாட்சுவோ இவ்வாறு சொன்னார்: “அப்பா அவிசுவாசியாக இருந்ததாலும் உறவினர்களிடமிருந்து அதிகமான எதிர்ப்பை பெற்றதாலும், அம்மாவால் எங்களோடு ஒழுங்காக படிக்க முடியவில்லை. ஆனால் சத்தியத்துக்காக அவருடைய நிலைநிற்கையையும், யெகோவாவைச் சேவிப்பதில் அவருக்கிருந்த சந்தோஷத்தையும் கவனித்தபோது, அது என்னை வெகுவாக பாதித்தது. அதிகாலைவரையாக எங்கள் பிரச்சினைகளில் எங்களுக்கு உதவிசெய்ய எங்களோடிருக்க அவர் மனமுள்ளவராக இருந்தார்.” பெற்றோரின் ஞானமான வார்த்தைகள் உண்மையுள்ள கிரியைகளால் ஆதரிக்கப்படும் பட்சத்தில் அவை வல்லமைவாய்ந்ததாக இருக்கின்றன. யோக்கீரோ தன் பெற்றோரைப் பற்றி இவ்விதமாகச் சொன்னான்: “சபையிலுள்ள மற்றவர்களைப்பற்றி அவர்கள் ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்தியது எனக்கு நினைவில் இல்லை; பிள்ளைகளாகிய நாங்கள் மற்றவர்களின் தவறுகளைப்பற்றி வீண்பேச்சு பேசவும் அவர்கள் எங்களை அனுமதித்தது கிடையாது.”—லூக்கா 6:40-42.
பிள்ளைகள் யெகோவாவைத் தெரிந்தெடுப்பதைக் காண்பதில் சந்தோஷம்
உங்கள் பிள்ளைகள் யெகோவாவைத் தெரிந்தெடுப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்ய, தவறிவிடுவதற்கே இடமில்லாத சூத்திரம் எதுவுமில்லை. அநேக கவலைக்கிடமான நேரங்கள் இருக்கலாம். ஆனால் முன்னால் குறிப்பிடப்பட்ட கவலைக்கொண்டிருந்த தகப்பன் இவ்வாறு சொன்னார்: “பெற்றோராக நாங்கள் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் ஆலோசனைகளை எப்பொழுதும் உண்மையுடன் பின்பற்றிவர முயற்சி செய்திருக்கிறோம். பிரச்சினைகளை மேற்கொள்வதில் இது பெரும் உதவியாக இருந்தது.” அவர்களுடைய முயற்சிகள் வெற்றியடைந்திருக்கின்றன.
ஆம், பைபிள் அறிவுரைகளைப் பின்பற்ற உங்களாலான மிகச் சிறந்ததைச் செய்வதன் மூலம், யெகோவாவை நேசிப்பதற்கு உங்களுடைய பிள்ளைகளுக்கு நியாயமான காரணங்களைக் கற்பித்து, உங்களுடைய உண்மையுள்ள முன்மாதிரியினாலும் உதவிசெய்ய உண்மையுள்ள முயற்சியினாலும் அதை வலுப்படுத்துகையில் உங்களுடைய முயற்சிகளும் கடைசியில் வெற்றிவாகைச் சூடுவதை நீங்கள் காணக்கூடும். ஒரு சமயம் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆகப்போவதில்லை என்று தீர்மானித்திருந்த முன் குறிப்பிடப்பட்ட பையனை நீங்கள் நினைத்துப்பாருங்கள்? அவனுடைய தாய் கடினமான வருடங்களினூடாக அவனுக்கு வெற்றிகரமாக உதவிசெய்த பின்பு, அவன் சொன்னான்: “அவர் முயற்சியை ஒருபோதும் கைவிடாதிருந்தமைக்காக நான் மகிழ்ச்சியுள்ளவனாக இருக்கிறேன்!” நீங்களும் உங்கள் பிள்ளைகளோடு இப்படிப்பட்ட பிரதிபலிப்பை எதிர்ப்படலாம்.—கலாத்தியர் 6:9.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியினால் பிரசுரிக்கப்பட்டவை.
b யெகோவாவின் சாட்சிகளின் முழு நேர ஊழியர்கள் பயனியர்கள் என்றழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் ஒரு துணைப்பயனியர் குறைந்தது 60 மணிநேரங்களும், ஓர் ஒழுங்கான பயனியர் 90 மணிநேரங்களும், விசேஷித்த பயனியர் 140 மணிநேரங்களும் செலவழிக்கிறார்.
[பக்கம் 30-ன் படம்]
நீங்கள் மகிழ்ச்சியான நினைவுகளோடு பிள்ளை வளர்ப்பை பின்னோக்கிப் பார்க்க முடியுமா?