கடவுளுடைய ஊழியர்கள்—ஒழுங்கமைக்கப்பட்டும் மகிழ்ச்சியாயும் உள்ள ஒரு ஜனம்
“யெகோவாவைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் மகிழ்ச்சியுள்ளது.”—சங்கீதம் 144:15, NW.
1, 2. (அ) யெகோவா ஏன் தம்முடைய ஊழியர்களுக்குத் தராதரங்களைத் தீர்மானிக்க உரிமையுடையவராக இருக்கிறார்? (ஆ) நாம் விசேஷமாக பின்பற்றுவதற்கு விரும்ப வேண்டிய யெகோவாவின் இரண்டு தனிச் சிறப்புப் பண்புகள் யாவை?
யெகோவா சர்வலோக பேரரசர், சர்வவல்லமையுள்ள கடவுள், படைப்பாளர். (ஆதியாகமம் 1:1; சங்கீதம் 100:3) இப்படி அவர் இருப்பதால், தம்முடைய ஊழியர்களுக்கு எது மிகச் சிறந்தது என்பதை அறிந்தவராக, அவர்களுக்கு நடத்தைக்குரிய தராதரங்களைத் தீர்மானிக்க உரிமையுடையவராக இருக்கிறார். (சங்கீதம் 143:8) அவரே அவர்களின் முக்கிய முன்மாதிரியாளராக இருக்கிறார், அவருடைய குணங்களை இவர்கள் பின்பற்றுவது அவசியமாகும். “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களா”குங்கள் என்று ஓர் அப்போஸ்தலன் எழுதினார்.—எபேசியர் 5:1.
2 நாம் பின்பற்றவேண்டிய கடவுளுடைய ஒரு தனிச் சிறப்புப் பண்பு ஒழுங்கமைப்போடு சம்பந்தப்பட்டதாகும். அவர் ‘ஒழுங்கின்மையின் கடவுள் அல்ல.’ (1 கொரிந்தியர் 14:33, NW) கடவுள் படைத்திருப்பவற்றை நாம் கூர்ந்து கவனிக்குமிடத்து, சர்வலோகத்திலும் அவரே மிகவும் ஒழுங்கமைப்புள்ள ஒரு முக்கியமான நபர் என்று முடிவுசெய்ய நாம் வற்புறுத்தப்படுகிறோம். என்றபோதிலும், அவர் தம்முடைய ஊழியர்கள் பின்பற்றவேண்டும் என்று விரும்புகிற அவருடைய மற்றொரு தனிச் சிறப்புப் பண்பு அவருடைய மகிழ்ச்சியாகும், ஏனென்றால் அவர் ‘மகிழ்ச்சியுள்ள தேவன்.’ (1 தீமோத்தேயு 1:11, NW) இதன் காரணமாக, ஒழுங்கமைக்கும் அவருடைய திறமையானது மகிழ்ச்சியோடு சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று மற்றொன்றைப் பாதிக்கும் வகையில் மேலோங்கியிருக்கச் செய்யப்படுவதில்லை.
3 யெகோவா, உண்டாக்கியிருக்கும் மிகப் பெரியது முதல் மிகச் சிறியது வரையாக எல்லாம் அவர் ஒழுங்கமைப்பின் கடவுளாக இருப்பதற்குரிய அத்தாட்சியைக் கொடுக்கிறது. உதாரணமாக காணக்கூடிய பிரபஞ்சத்தைப் பற்றி யோசித்துப்பாருங்கள். இது கோடான கோடி நட்சத்திரங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாக சிதறப்பட்டில்லை. ஜார்ஜ் க்ரன்ஸ்டன் என்ற வானியற்பியல் ஆய்வாளர், “நட்சத்திரங்களின் ஒழுங்கமைப்பில் ஒரு குறிப்பிட்ட முறை” இருப்பதாக குறிப்பிடுகிறார். அவை பால்வீதிமண்டலங்கள் என்றழைக்கப்படும் தொகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன, சிலவற்றில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு. இவ்விதம் நூற்றுக்கோடிக்கணக்கான பால்வீதிமண்டலங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. பால்வீதிமண்டலங்களும்கூட (சொற்பமான எண்ணிக்கையிலிருந்து பல ஆயிரம்வரை) பால்வீதிமண்டல கொத்துக்களுள் தொகுதிகளாக சேர்க்கப்பட்டு ஒழுங்கமைக்கட்டிருக்கின்றன. இந்தப் பால்வீதிமண்டல கொத்துக்கள், பெரும்கொத்துக்கள் என்றழைக்கப்படும் அதைவிட பெரிய தொகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.—சங்கீதம் 19:1; ஏசாயா 40:25, 26.
4, 5. பூமியிலுள்ள உயிர்ப்பொருட்களின் மத்தியில் காணப்படும் ஒழுங்கமைப்புக்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
4 கடவுளுடைய படைப்புகளின் உன்னதமான ஒழுங்கமைப்பு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது, காணக்கூடிய வானங்களில் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான உயிர்ப்பொருட்களைக் கொண்ட பூமியிலும் காணப்படுகிறது. இவை அனைத்தையும் பற்றி, இயற்பியல் பேராசிரியர் பால் டேவிஸ், “சடப்பொருள் உலகின் மாட்சிமையும் சிக்கலான ஒழுங்கமைப்பும்” உற்றுநோக்குபவர்களைப் “பிரமிக்க” வைக்கிறது என்பதாக எழுதினார்.—சங்கீதம் 104:24.
5 உயிர்ப்பொருட்களில் காணப்படும் ‘சிக்கலான ஒழுங்கமைப்புக்கு’ ஒரு சில உதாரணங்களை சிந்தியுங்கள். மனித மூளையையும் தண்டு வடத்தையும் பற்றி நரம்பியல் அறுவைமருத்துவர் ஜோசப் ஈவான்ஸ் இவ்வாறு சொன்னார்: “உயர்ந்த ஒழுங்கின் மெய்ம்மை ஆச்சரியத்தால் ஏறக்குறைய திணறச்செய்யும் அளவில் இருக்கிறது.” மிக நுண்ணிய உயிரணுக்களைப் பற்றி பாக்டீரியா ஆய்வாளர் H. J. ஷாநிசி இவ்வாறு சொன்னார்: “நுண்ணுயிர் அறிவியல் உலகின் சிக்கலானத் தன்மையும் அழகான ஒழுங்கும் அத்தனை அதிசயமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதால், அது தெய்வத்தால் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கின் ஒரு பாகமாக இருப்பதாக தோன்றுகிறது.” அணுத்திரண்ம அறிவியல் அறிஞர் மைக்கல் டென்டன் ஒரு செல்லினுள் இருக்கும் மரபியல் தொகுப்பு (டிஎன்ஏ) குறித்து இவ்வாறு சொன்னார்: “கிரகத்தின்மீது எக்காலத்திலுமிருந்திருக்கும் . . . உயிர்ப்பொருட்களின் எல்லா சிறப்பினங்களின் வடிவமைப்பையும் குறிப்பிடுவதற்குத் தேவைப்படும் அனைத்து தகவலும் ஒரு தேக்கரண்டியில் வைக்கப்பட்டாலும், எக்காலத்திலும் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு புத்தகத்திலுமுள்ள எல்லா தகவலுக்கும் இன்னும் இடமிருக்கும் வகையில் . . . அது அத்தனை திறம்பட்டதாயிருக்கிறது.”—சங்கீதம் 139:16-ஐப் பார்க்கவும்.
6, 7. ஆவி சிருஷ்டிகள் மத்தியில் என்ன ஒழுங்கமைப்பு காண்பிக்கப்பட்டிருக்கிறது, தங்களை உண்டுபண்ணினவருக்கு அவை எவ்விதமாக போற்றுதலை வெளிப்படுத்துகின்றன?
6 யெகோவா தம்முடைய சடப்பொருளான படைப்புகளை ஒழுங்கமைப்பது மட்டுமல்லாமல் பரலோகத்திலுள்ள தம்முடைய ஆவி சிருஷ்டிகளையும்கூட ஒழுங்கமைத்திருக்கிறார். தானியேல் 7:10, (NW) தூதர்கள் எண்ணிக்கையில் ‘கோடானகோடிபேர் யெகோவாவுக்கு முன்பாக நிற்பதாக’ நமக்குத் தெரிவிக்கிறது. கோடான கோடி வல்லமையுள்ள சிருஷ்டிகள், ஒவ்வொன்றும் அவற்றின் சரியான வேலைக்கு நியமிக்கப்பட்டு ஆஜராயிருக்கின்றன! இத்தகைய மிகப் பெரிய எண்ணிகையினரை ஒழுங்கமைக்க தேவைப்படும் திறமையைச் சிந்தித்துப்பார்ப்பது திகைப்படையச் செய்கிறது. பொருத்தமாகவே பைபிள் சொல்கிறது: “கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய [தூத] சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.”—சங்கீதம் 103:20, 21; வெளிப்படுத்துதல் 5:11.
7 படைப்பாளரின் கிரியைகள் எத்தனை மகத்துவமாக ஒழுங்கமைக்கப்பட்டும் திறமையுள்ளதாயும் இருக்கின்றன! வான மண்டலத்திலுள்ள வல்லமையுள்ள ஆவி சிருஷ்டிகள் பிரமிப்போடும் பணிவோடும் பின்வருமாறு சொல்வது ஆச்சரியமாயில்லை: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.
8. யெகோவா பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களை ஒழுங்கமைக்கிறார் என்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
8 யெகோவா பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களையும்கூட ஒழுங்கமைக்கிறார். பொ.ச.மு. 2370-ல் நோவாவின் நாளில் அவர் பிரளயத்தைக் கொண்டுவந்தபோது, நோவாவும் மற்ற ஏழு பேரும் ஒரு குடும்ப அமைப்பாக ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தனர். பொ.ச.மு. 1513-ன் புறப்பாட்டின் போது, யெகோவா லட்சக்கணக்கான தம்முடைய மக்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டுவந்து அவர்களுடைய அன்றாடக விவகாரங்களையும் வணக்கத்தையும் ஒழுங்கமைப்பதற்கு விவரமான சட்டங்களின் ஒரு தொகுதியை அவர்களுக்குக் கொடுத்தார். பின்னால், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில், ஆயிரக்கணக்கானோர் ஆலயத்தில் விசேஷித்த சேவைக்காக ஒழுங்கமைக்கப்பட்டனர். (1 நாளாகமம் 23:4, 5) முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபைகள் தெய்வீக வழிநடத்துதலின்கீழ், ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன: “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காக அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.”—எபேசியர் 4:12, 13.
நவீன நாளைய ஊழியர்களும்கூட ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றனர்
9, 10. யெகோவா நம்முடைய காலத்தில் தம்முடைய மக்களை எவ்வாறு ஒழுங்கமைத்திருக்கிறார்?
9 அதேவிதமாகவே, யெகோவா நம்முடைய நாளுக்கான அவருடைய வேலையை—தற்போதைய அவபக்தியுள்ள காரிய ஒழுங்குமுறையை அவர் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதை—திறம்பட்ட விதமாக செய்யும்பொருட்டு தம்முடைய நவீன நாளைய ஊழியர்களை ஒழுங்கமைத்திருக்கிறார். (மத்தேயு 24:14) இந்த உலகளாவிய வேலையில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதையும் நல்ல ஒழுங்கமைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும் சிந்தித்துப்பாருங்கள். இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தப் பயிற்றுவிப்பை ஆதரிப்பதற்கு, அதிகமான எண்ணிக்கையில் பைபிள்களும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களும் அச்சடிக்கப்படுகின்றன. ஏன், ஒவ்வொரு காவற்கோபுர வெளியீடும் இப்பொழுது 118 மொழிகளில் 160 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகளும், விழித்தெழு! 73 மொழிகளில் சுமார் 130 லட்சம் பிரதிகளும் அச்சிடப்படுகின்றன. யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும் நடைமுறையில் ஒரே சமயத்தில் ஒரே தகவலைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு ஏறக்குறைய எல்லா பிரதிகளுமே ஒரே சமயத்தில் அச்சிடப்படுகின்றன.
10 மேலுமாக, உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 73,000-க்கும் மேலான சபைகள் பைபிள் போதனைக்காக ஒழுங்காக கூடிவருவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன. (எபிரெயர் 10:24, 25) ஆயிரக்கணக்கான பெரிய கூட்டங்களும்—வட்டார மாநாடுகள் மற்றும் மாவட்ட மாநாடுகள்—ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. பெரிய அளவில் உலகம் முழுவதிலும் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட ராஜ்ய மன்றங்கள், அசெம்பிளி மன்றங்கள், பெத்தேல் வீடுகள் மற்றும் பைபிள் இலக்கியத்தை அச்சுசெய்வதற்கு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மிஷனரிகளுக்கான உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி, மற்றும் பயனியர் சேவைப் பள்ளி போன்ற பைபிள் போதகர்களின் உயர் பயிற்சிக்காக பள்ளிகள் உலகம் முழுவதிலும் பல தேசங்களில் நடத்தப்பட்டுவருகின்றன.
11. இப்பொழுது நல்ல ஒழுங்கமைப்பைக் கற்றுக்கொள்வதன் மூலம் என்ன எதிர்கால நன்மை வரும்?
11 யெகோவா தமக்கு ஊழியஞ்செய்யும் தேவதூதர்களின் உதவியோடு பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்கள் ‘தங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு’ அவருடைய மக்களை எத்தனை நேர்த்தியாக ஒழுங்கமைத்திருக்கிறார்! (2 தீமோத்தேயு 4:5; எபிரெயர் 1:13, 14; வெளிப்படுத்துதல் 14:6) இப்பொழுது கடவுள் தம்முடைய ஊழியர்களுக்கு நல்ல ஒழுங்கமைப்பின் வழிகளைப் போதிப்பதன் மூலம், வேறு ஏதோவொன்றையும் நிறைவேற்றிவருகிறார். அவருடைய ஊழியர்கள் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை தப்பிப்பிழைக்கையில், அவர்கள் புதிய உலகில் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு ஏற்கெனவே ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக இருக்கும்பொருட்டு அவருடைய ஊழியர்கள் நன்றாக தயார்செய்யப்பட்டுவருகிறார்கள். பின்னர், யெகோவாவின் வழிநடத்துதலின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் உலகளாவிய பரதீஸை அவர்கள் கட்ட ஆரம்பிப்பார்கள். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட போகிற கோடிக்கணக்கான ஆட்களுக்கு ஜீவனுக்கான கடவுளுடைய விளக்கமான தேவைகளைக் கற்பிப்பதற்கு நல்ல தயாரிப்புடன் இருப்பார்கள்.—ஏசாயா 11:9; 54:13; அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 20:12, 13.
ஒழுங்கமைக்கப்பட்டிருந்தாலும் மகிழ்ச்சியுள்ளவர்கள்
12, 13. யெகோவா தம்முடைய மக்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்க விரும்புகிறார் என்று நாம் ஏன் சொல்லக்கூடும்?
12 யெகோவா அதிசயமான வேலையாளராகவும், உன்னத ஒழுங்கமைப்பாளராகவும் இருப்பினும், அவர் உணர்ச்சியற்ற, கடினமான அல்லது இயந்திரத்தன்மையுள்ளவர் அல்ல. மாறாக, அவர் நம்முடைய மகிழ்ச்சியில் அக்கறையுள்ளவராக இருக்கும் கனிவுள்ள மகிழ்ச்சியுள்ள நபராவர். ‘அவர் உங்களை விசாரிக்கிறவர்,’ என்பதாக 1 பேதுரு 5:7 அறிவிக்கிறது. அவர் மனிதனுக்காக உண்டுபண்ணியிருப்பவற்றிலும் அவருடைய அக்கறையையும், அவருடைய ஊழியர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்ற அவருடைய ஆசையையும் நாம் காணமுடியும். உதாரணமாக, கடவுள் பரிபூரண மனிதனையும் மனுஷியையும் படைத்தபோது, அவர் இன்பமான ஒரு பரதீஸில் அவர்களை வைத்தார். (ஆதியாகமம் 1:26-31; 2:8, 9) அவர்களை உச்ச அளவில் மகிழ்ச்சியுள்ளவர்களாகச் செய்வதற்கு தேவையான எல்லா காரியங்களையும் அவர் அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால் கலகத்தின் மூலமாக அவர்கள் அவை அனைத்தையும் இழந்துபோனார்கள். அவர்களுடைய பாவத்தின் விளைவாக, நாம் அபூரணத்தையும் மரணத்தையும் சுதந்தரித்துக்கொண்டோம்.—ரோமர் 3:23; 5:12.
13 இப்பொழுது அபூரணராக இருந்தபோதிலும், மனிதர்களாகிய நாம் இன்னும் கடவுள் உண்டுபண்ணியிருப்பவற்றில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். நமக்கு மகிழ்ச்சியைக்கொண்டு வரும் அநேக காரியங்கள் உண்டு—கம்பீரமான மலைகள்; அழகிய ஏரிகள், ஆறுகள், சமுத்திரங்கள் மற்றும் கடற்கரைகள்; வர்ணமிக்க, வாசனையுள்ள மலர்கள் மற்றும் முடிவில்லா வகையான மற்ற தாவரங்கள்; அபரிமிதமான ருசியான உணவுகள்; நாம் ஒருபோதும் பார்த்து சலிப்படையாத கண்கவர் சூரிய அஸ்தமனங்கள்; இரவில் நாம் உற்றுநோக்கி மகிழும் நட்சத்திரங்கள் நிறைந்த வானங்கள்; மிகப் பேரளவான பல்வகை மிருக படைப்பும், வேடிக்கையான கோமாளித்தனமுள்ள அவற்றின் கவர்ச்சியுள்ள குட்டிகளும்; ஊக்கமளிக்கும் இசை; சுவாரசியமான மற்றும் பயனுள்ள வேலை; நல்ல நண்பர்கள். இப்படிப்பட்ட காரியங்களுக்கு ஏற்பாடு செய்தவர் மற்றவர்களை மகிழ்விப்பதை அனுபவிக்கும் ஒரு மகிழ்ச்சியுள்ள நபர் என்பது தெளிவாக இருக்கிறது.
14. யெகோவா தம்மைப் பின்பற்றுவதில் என்ன சமநிலையை நம்மிடமிருந்து கேட்கிறார்?
14 யெகோவா விரும்புவது வெறும் ஒழுங்கமைப்போடு சிறப்பாகக் காரியங்களைச் செய்யக்கூடிய திறமை அல்ல. அவர் மகிழ்ச்சியுள்ளவராக இருப்பது போலவே அவருடைய ஊழியர்களும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். தங்கள் மகிழ்ச்சியைக் கெடுத்துப்போடும் அளவுக்கு அவர்கள் காரியங்களை ஒருவித வெறியோடு ஒழுங்கமைத்துக்கொண்டிருப்பதை அவர் விரும்புவதில்லை. கடவுளுடைய ஊழியர்கள் அவர் செய்வதைப் போலவே ஒழுங்கமைப்புக்குரிய திறமைகளை மகிழ்ச்சியோடு சமநிலைப்படுத்தவேண்டும், ஏனென்றால் வல்லமையுள்ள அவருடைய பரிசுத்த ஆவி இருக்குமிடத்தில், சந்தோஷம் இருக்கிறது. ஆம், அவருடைய மக்கள் மீது செயல்படும் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் இரண்டாவது கனி “சந்தோஷம்” என்பதாக கலாத்தியர் 5:22 காட்டுகிறது.
அன்பு மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது
15. நம்முடைய மகிழ்ச்சிக்கு அன்பு ஏன் அத்தனை முக்கியமாக இருக்கிறது?
15 பைபிள் பின்வருமாறு சொல்வதைக் கவனிப்பது மிகவும் அக்கறைக்குரியதாக இருக்கிறது: “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8, 16) “தேவன் ஒழுங்கமைப்பாகவே இருக்கிறார்,” என்று அது ஒருபோதும் சொல்வதில்லை. அன்பு கடவுளுடைய முதன்மையான குணமாக இருக்கிறது, அதை அவருடைய ஊழியர்கள் கட்டாயமாகவே பின்பற்றவேண்டும். இதன் காரணமாகவே கலாத்தியர் 5:22-ல் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய ஆவியின் முதல் கனி ‘அன்பாகவும்’ அடுத்தது ‘சந்தோஷமாகவும்’ இருக்கிறது. அன்பு சந்தோஷத்தை உண்டுபண்ணுகிறது. மற்றவர்களோடு நம்முடைய செயல்தொடர்புகளில் யெகோவாவின் அன்பை நாம் பின்பற்றும்போது, மகிழ்ச்சி பின்தொடருகிறது, ஏனென்றால் அன்புள்ள மக்கள் மகிழ்ச்சியுள்ள மக்களாக இருக்கின்றனர்.
16. இயேசு எவ்விதமாக அன்பின் முக்கியத்துவத்தைக் காட்டினார்?
16 தெய்வீக அன்பைப் பின்பற்றுவதனுடைய முக்கியத்துவம் இயேசுவின் போதகங்களில் முனைப்பாகச் செய்யப்பட்டுள்ளது. அவர் சொன்னார்: “என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்.” (யோவான் 8:28) விசேஷமாக இயேசுவுக்குக் கற்பிக்கப்பட்டதும் முறையே அவர் மற்றவர்களுக்குக் கற்பித்ததும் என்ன? கடவுளை நேசிப்பதும் அயலானை நேசிப்பதுமே மிகப் பெரிய இரண்டு கற்பனைகள் என்பதாகும். (மத்தேயு 22:36-39) இப்படிப்பட்ட அன்புக்கு அவர் முன்மாதிரியாக இருந்தார். அவர் சொன்னார்: “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்.” மரணம் வரையாக கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மூலம் அதை நிரூபித்தார். மக்களுக்காக மரிப்பதன் மூலம் அவர்களிடமாக தம்முடைய அன்பைக் காட்டினார். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: ‘கிறிஸ்து பலியாக தம்மை ஒப்புக்கொடுத்து உங்களில் அன்புகூர்ந்தார்.’ (யோவான் 14:31; எபேசியர் 5:2) இதன் காரணமாக, இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.”—யோவான் 15:12, 13.
17. பவுல் மற்றவர்களுக்கு அன்பை வெளிப்படுத்துவது இன்றியமையாதது என்பதை எவ்வாறு காட்டினார்?
17 பவுல் பின்வருமாறு சொல்வதன் மூலம் இந்தத் தெய்வீக அன்பு எத்தனை இன்றியமையாதது என்பதை வெளிப்படுத்தினார்: “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும் சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. . . . விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.”—1 கொரிந்தியர் 13:1-3, 13.
18 நாம் யெகோவாவின் அன்பை பின்பற்றும்போது, நாம் தவறுகள் செய்துவிடும்போதும்கூட, நம்மிடமாக அவருடைய அன்பைக் குறித்து நம்பிக்கையோடிருக்கலாம், ஏனென்றால், அவர் “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.” (யாத்திராகமம் 34:6) நாம் தவறுசெய்துவிடுகையில் நாம் உண்மையாகவே மனந்திரும்புவோமானால், கடவுள் இவற்றை கணக்கில் வைத்துக்கொள்வதில்லை, ஆனால் அன்பாக நம்மை மன்னித்துவிடுகிறார். (சங்கீதம் 103:1-3) ஆம், “[யெகோவா, NW] மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” (யாக்கோபு 5:11) இதை அறிந்திருப்பது நம்முடைய மகிழ்ச்சிக்கு உதவுகிறது.
இப்பொழுது சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி
19, 20. (அ) முழுமையான மகிழ்ச்சி ஏன் இப்பொழுது சாத்தியமில்லை? (ஆ) சம்பந்தப்பட்ட மகிழ்ச்சியை இக்காலத்தில் நாம் கொண்டிருக்க முடியும் என்பதை பைபிள் எவ்விதம் காண்பிக்கிறது?
19 என்றபோதிலும் வியாதியையும் மரணத்தையும் நாம் எதிர்ப்படுகின்ற சாத்தானின் கீழிருக்கும் குற்றச்செயல்கள் நிறைந்த, வன்முறையான, ஒழுக்கமற்ற உலகின் இந்தக் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதால் இன்று மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமா? நிச்சயமாகவே, அவருடைய வார்த்தை முன்னறிவிப்பது போன்ற கடவுளுடைய புதிய உலகில் நிலவப்போகும் அளவுக்கு மகிழ்ச்சியை நாம் இப்பொழுது எதிர்பார்க்க முடியாது: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.”—ஏசாயா 65:17, 18.
20 கடவுளுடைய ஊழியர்கள் இப்பொழுது கொண்டிருக்கக்கூடியது சம்பந்தப்பட்ட மகிழ்ச்சியாகும், ஏனென்றால் அவருடைய சித்தத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் அவருடைய பரதீஸிய புதிய உலகுக்கு விரைவில் வரவிருக்கும் மகத்தான ஆசீர்வாதங்களைப் பற்றிய திருத்தமான அறிவை உடையவர்களாக இருக்கிறார்கள். (யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 21:4) இதன் காரணமாகவே பைபிள் பின்வருமாறு சொல்ல முடியும்: “சேனைகளின் யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் மகிழ்ச்சியுள்ளவன்,” “யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் மகிழ்ச்சியுள்ளவன்,” “சாந்தகுணமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” (சங்கீதம் 84:12; 128:1; மத்தேயு 5:5, NW) இதன் காரணமாக, நாம் எதிர்த்துப் போராடவேண்டிய தற்போதைய கடினமான சூழ்நிலைமைகளின் மத்தியிலும், நாம் கணிசமான அளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும். கெட்ட காரியங்கள் நமக்குச் சம்பவித்தாலும்கூட, யெகோவாவை அறியாதவர்களையும் நித்திய வாழ்க்கையின் நம்பிக்கையில்லாதவர்களையும் போல நாம் வருத்தப்படுவதில்லை.—1 தெசலோனிக்கேயர் 4:13.
21. தங்களையே அர்ப்பணிப்பது எவ்வாறு யெகோவாவின் ஊழியர்களுடைய மகிழ்ச்சிக்கு உதவுகிறது?
21 யெகோவாவின் ஊழியர்கள், மற்றவர்களுக்கு விசேஷமாக சாத்தானிய உலகில் செய்யப்படுகிற ‘சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற’ மக்களுக்கு பைபிள் சத்தியங்களைக் கற்பிப்பதில் நேரத்தையும் சக்தியையும் செல்வங்களையும் செலவழிப்பதன் காரணமாகவும்கூட அவர்களுக்கு மகிழ்ச்சிவருகிறது. (எசேச்கியேல் 9:4) பைபிள் சொல்கிறது: “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் மகிழ்ச்சியுள்ளவன்; தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் மகிழ்ச்சியுள்ளவனாயிருப்பான்.” (சங்கீதம் 41:1, 2, NW) இயேசு சொன்னவிதமாகவே, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதிலேயே அதிக மகிழ்ச்சி.”—அப்போஸ்தலர் 20:35, NW.
22. (அ) மகிழ்ச்சியைக் குறித்ததில், கடவுளுடைய ஊழியர்களை, அவரைச் சேவிக்காதவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும். (ஆ) எந்த விசேஷமான காரணத்துக்காக நாம் மகிழ்ச்சியாயிருக்க எதிர்பார்க்கலாம்?
22 கடவுளுடைய ஊழியர்கள் தற்போது உச்ச அளவான மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாதென்றாலும், கடவுளை சேவிக்காதவர்கள் அனுபவித்து மகிழாத மகிழ்ச்சியை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். யெகோவா அறிவிக்கிறார்: “இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.” (ஏசாயா 65:14) மேலுமாக, கடவுளைச் சேவிப்பவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியாயிருப்பதற்கு அதிவிசேஷமான ஒரு காரணம் இருக்கிறது—‘அரசராக தமக்குக் கீழ்ப்படிருந்திருப்பவர்களுக்கு கடவுள் கொடுத்திருக்கும்,’ அவருடைய பரிசுத்த ஆவி அவர்களுக்கு இருக்கிறது. (அப்போஸ்தலர் 5:32) கடவுளுடைய ஆவி எங்கேயோ அங்கே மகிழ்ச்சி இருக்கிறதென்பதை நினைவில் வையுங்கள்.—கலாத்தியர் 5:22.
23. நம்முடைய அடுத்த படிப்பில் நாம் என்ன சிந்திப்போம்?
23 இன்று கடவுளுடைய ஊழியர்களுடைய அமைப்பில், சபைகளில் முன்நின்று நடத்துகின்ற ‘மூப்பர்கள்’ யெகோவாவின் மக்களுடைய மகிழ்ச்சிக்கு துணைபுரிவதில் முக்கிய பங்கை வகிக்கின்றனர். (தீத்து 1:5) இவர்கள் தங்களுடைய உத்தரவாதங்களையும் தங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளோடுள்ள தங்களுடைய உறவையும் எவ்வாறு கருதவேண்டும்? எமது அடுத்தக் கட்டுரை இதைக் கலந்தாலோசிக்கும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா ஒழுங்கமைப்புள்ளவராயிருப்பதற்கு படைப்பு எவ்வாறு சான்றளிக்கிறது?
◻ யெகோவா எவ்விதமாக தம்முடைய ஊழியர்களை கடந்த காலத்திலும் தற்காலத்திலும் ஒழுங்கமைத்திருக்கிறார்?
◻ என்ன சமநிலையை நாம் காண்பிக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்?
◻ நம் மகிழ்ச்சிக்கு அன்பு எந்த அளவு அத்தியாவசியமானது?
◻ நம்முடைய காலத்தில் நாம் எந்த வகையான மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம்?
3. நட்சத்திரங்கள் நிறைந்த வானங்கள் ஒழுங்கமைப்பதற்குக் கடவுளுக்கிருக்கும் திறமையை எவ்வாறு காட்டுகின்றன?
18. நம்முடைய மகிழ்ச்சியைக் கூட்டுகின்ற எதை நாம் யெகோவாவிடமிருந்து எதிர்பார்க்கலாம்?