பைபிள் புரிந்துகொள்வதற்கு எழுதப்பட்ட ஒரு புத்தகம்
பைபிள் சொல்லர்த்தமாகப் பின்பற்றப்பட வேண்டிய கடவுளுடைய தெளிவான வார்த்தை என்பதாக சில ஆட்கள் நம்புகிறார்கள். மற்றவர்களுக்கு, “பைபிளின் செய்தி அதிக தெளிவற்றதாக இருக்கிறது.” இவ்வாறு கனடாவின் மிகப் பெரிய புராட்டஸ்டன்டு பிரிவுக்கான விசுவாசம் மற்றும் இறையியலின் 12 உறுப்பினர் குழு சொல்கிறது. யுனைட்டட் சர்ச்சின் மதகுரு கிளிஃப்போர்ட் எலியாட், சிலருக்கு “பைபிள் சுலபமாக புரியாத, பொதுமுறையான மற்றும் பொருத்தமில்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது,” என்று நினைக்கிறார்.
இப்படிப்பட்ட கருத்துக்கள் பதில்களைப் பெற தகுதியுள்ள பொருத்தமான கேள்விகளை எழுப்புகின்றன. இவற்றுள் முக்கியமானவை, பைபிள் ஏன் எழுதப்பட்டது, புரிந்துகொள்ளமுடியாதபடி அது அளவுக்கு மீறிய வகையில் குழப்புவதாயும் சிக்கலானதாயும் இருக்கிறதா? சராசரி ஆள் அதைப் புரிந்துகொள்ள முடியுமா? வேத வாக்கியங்களின் கருத்தைக் கிரகித்துக்கொள்ள என்ன உதவி ஒருவருக்குத் தேவைப்படுகிறது? கொந்தளிப்பான இந்தக் காலங்களில் பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவு ஏன் இன்றியமையாததாக இருக்கிறது?
பைபிள் ஏன் எழுதப்பட்டது?
மகா உன்னதமான கடவுளாகிய யெகோவாவின் தயவையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது, எப்பொழுதுமே ஒரு முன்தேவையாக இருந்து வந்திருக்கிறது. ராஜாக்கள், ஆசாரியர்கள், பெற்றோர், ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள்—பணக்காரரும் ஏழைகளும் ஒன்றுபோல—பதிவுசெய்யப்பட்ட கடவுளுடைய வார்த்தையை ஜெபசிந்தையோடு ஆய்வுசெய்ய வாழ்க்கையின் அன்றாட விவகாரங்களிலிருந்து நேரத்தை எடுத்துக்கொள்ளும்படி கட்டளையிடப்பட்டனர்.—உபாகமம் 6:6, 7; 17:18-20; 31:9-12; நெகேமியா 8:8; சங்கீதம் 1:1, 2; 119:7-11, 72, 98-100, 104, 142; நீதிமொழிகள் 3:13-18.
உதாரணமாக, யோசுவா இவ்வாறு கட்டளையிடப்பட்டார்: ‘இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வணக்கத்தில் எப்பொழுதும் வாசிக்கப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள். இரவும் பகலும் அதைப் படித்து, அதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்வதை நிச்சயப்படுத்திக்கொள். அப்போது நீ செழுமையாயும் வெற்றிகரமாயும் இருப்பாய்.” (யோசுவா 1:8, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை இப்படி கவனமாய் படிப்பதும் கடைப்பிடிப்பதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும். “எல்லா மனுஷரும்” தம்முடைய வார்த்தையாகிய பைபிளைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், ஜீவன் என்ற பரிசைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்போடு அதற்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று யெகோவா நோக்கங்கொண்டார்.—1 தீமோத்தேயு 2:3, 4; யோவான் 17:3.
புரிந்துகொள்ள முடியாதபடி அந்த அளவு சிக்கலானதா?
பிரமாண்டமான பைபிள் கல்வித் திட்டமொன்று உலகம் முழுவதிலும் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்பதை இயேசு பரத்துக்கு ஏறிப்போவதற்கு முன்பாக தெளிவுபடுத்தினார். (அப்போஸ்தலர் 1:8) பைபிள் புரிந்துகொள்ளப்படுவதற்கென்று எழுதப்பட்ட புத்தகம் என்பதை அவர் அறிந்திருந்தார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் யெகோவா அவருக்குக் கொடுத்திருந்ததை விளக்கியப் பின்பு, அவர் நேரடியான இந்தக் கட்டளையை கொடுத்தார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி [அல்லது, கற்றறிந்தவர்களாக்கி], பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
முழுக்காட்டுதலுக்கு முன்பு, புதிய சீஷர்கள் யெகோவாவை பற்றியும், அவருடைய குமாரனைப் பற்றியும், பரிசுத்த ஆவியின் செயல்பாடுகளை பற்றியும் கற்பிக்கப்பட வேண்டியது அவசியமாயிருந்தது. கூடுதலாக, அவர்கள் கிறிஸ்தவ காரிய ஒழுங்குமுறையின் பிரமாணத்தில் போதிக்கப்படுவது அவசியமாயிருந்தது. (1 கொரிந்தியர் 9:21; கலாத்தியர் 6:2) இந்த விளைவை அடைவதற்கு, முதலாவதாக, பைபிள் யெகோவாவிடமிருந்து வந்தது என்பதையும் இரண்டாவதாக அது புரிந்துகொள்ளப்படுவதற்கென்று எழுதப்பட்டது என்பதையும் பாத்திரமானவர்கள் நம்புவது அவசியமாயிருந்தது.—மத்தேயு 10:11-13.
பைபிளைப் புரிந்துகொள்வதற்கு உங்களுடைய பங்கில் தேவைப்படுவது என்ன? கடவுளுடைய குமாரன் வேதவாக்கியங்களை விளக்குவதற்கு விசேஷித்த முயற்சி எடுத்தார். பரிசுத்த வேத எழுத்துக்கள் உண்மையானவை என்பதையும் அவை யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தைக் கொண்டிருக்கின்றன என்பதையும் அவர் அறிந்திருந்தார். (யோவான் 17:17) தமக்கு நியமிக்கப்பட்ட வேலையைக் குறித்து இயேசு கிறிஸ்து சொன்னார்: “சத்தியத்தைக் குறித்து பேசவேண்டும் என்ற இந்த ஒரே நோக்கத்துக்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே உலகத்தில் வந்தேன். சத்தியத்துக்குரியவன் எவனும் எனக்குச் செவிகொடுக்கிறான்.” (யோவான் 18:37, TEV; லூக்கா 4:43) ஏற்கத்தகுந்த இருதயங்களையும் மனங்களையும் கொண்டிருந்தவர்களுக்கு கற்பிப்பதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. லூக்கா 24:45-ல் நமக்கு இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் [கிறிஸ்து இயேசு] திறந்”தார்.
இயேசுவின் ஊழியத்தின்போது, அவர் எழுதப்பட்ட வார்த்தையிலிருந்து தாராளமாக மேற்கோள் காட்டி, “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும்” உள்ள வேதவாக்கியங்களை குறிப்பிட்டு விளக்கினார். (லூக்கா 24:27, 44) வேதப்பூர்வமான அவருடைய விளக்கங்களைக் கேட்டவர்கள் அவருடைய புரிந்துகொள்ளுதலின் தெளிவினாலும் கற்பிக்கும் அவருடைய திறமையினாலும் வெகுவாக கவரப்பட்டார்கள். (மத்தேயு 7:28, 29; மாற்கு 1:22; லூக்கா 4:32; 24:32) அவருக்கு வேதவாக்கியங்கள் சுலபமாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு புத்தகமாக இருந்தது.
பைபிளும் இயேசுவைப் பின்பற்றினோரும்
இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவராகிய அப்போஸ்தலன் பவுல், வேதவாக்கியங்களில் அடங்கியிருப்பவற்றை மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கான தேவையைக் கண்டார். அது புரிந்துகொள்வதற்கென்று எழுதப்பட்டது என்பதை அவரும்கூட அறிந்திருந்தார். அதன் காரணமாகவே சந்தேகமில்லாமல் அவர் வெளியரங்கமாக கற்பித்து, அவற்றைப் புரிந்துகொள்ள விரும்பியவர்களின் வீடுகளில் வேதவாக்கியங்களை விளக்கினார். பவுல் பின்வருமாறு சொன்னபோது, தன்னுடைய நிலைநிற்கையை தெரியப்படுத்தினார்: “வெளியரங்கமாகவும் உங்கள் வீடுகளிலும் நான் பிரசங்கித்துக் கற்பித்தபோது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும் எதையும் நான் மறைத்து வைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.” (அப்போஸ்தலர் 20:20, TEV) அவருடைய கலந்துரையாடல்களின் போது வேதவாக்கியங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசி, மேற்கோள்கள் துணைகொண்டு தன்னுடைய குறிப்புகளை விளக்கவும் நிரூபிக்கவும் செய்தார். (அப்போஸ்தலர் 17:2, 3) வேதவாக்கியங்களின் பொருளை மற்றவர்கள் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவிசெய்வதில் அவர் அக்கறையுள்ளவராக இருந்தார்.
இயேசுவும் அவருடைய சீஷர்களும் கற்பித்தக் காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு வாஞ்சை இருக்கிறதா? (1 பேதுரு 2:2) பூர்வ பெரோயாவாசிகளுக்கு இத்தகைய ஒரு வாஞ்சை இருந்தது, கிறிஸ்துவைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்குக் கற்பித்தவற்றை நம்புவதற்கு அவர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். ஆகவே வேதவாக்கியங்களை தினந்தோறும் படிக்கவும், இவ்விதமாக அவர்கள் கேள்விப்பட்ட நற்செய்தி உண்மையில் சத்தியம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளவும் உற்சாகப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய மனங்கள் ஏற்றுக்கொள்ளும் இயல்புடையதாய் இருந்தபடியால், ‘அவர்களில் அநேகர் விசுவாசிகளானார்கள்.’—அப்போஸ்தலர் 17:11, 12.
பைபிளைப் புரிந்துகொள்வதற்கு, ஒருவருக்கு சரியான இருதய நிலை, கற்றுக்கொள்ள உண்மையான ஆசையும் ‘தன்னுடைய ஆவிக்குரிய தேவையைக் குறித்த உணர்வும்,’ இருக்கவேண்டும். (மத்தேயு 5:3, NW) இயேசுவிடமாக, “ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்,” என்று கேட்கப்பட்டபோது, அவர் இவ்விதமாக பதிலளித்தார்: “பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.” அவர் ‘தன் வாயை உவமைகளினால் திறப்பார், மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவார்,’ என்பதாக முன்னுரைக்கப்பட்டிருந்தது. (மத்தேயு 13:10, 11, 35) ஆகவே ஆர்வமில்லாமலும் தகா ஆர்வத்துடனும் செவிகொடுப்போரை உண்மை மனதுடன் விசாரித்தறிகிறவரிடமிருந்து பிரிப்பதற்காக இயேசு உவமைகள் மூலமாக பேசினார். இயேசுவின் சீஷர்கள் அவரோடுகூட ஒரு வீட்டுக்குள் சென்று பின்வருமாறு சொன்னபோது, ஒரு சமயம் தங்கள் உண்மை மனதை வெளிப்படுத்தினார்கள்: “நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.”—மத்தேயு 13:36.
பைபிளைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் நமக்கு உதவி தேவை என்பது தெளிவாக இருக்கிறது. இறையியல், விசுவாசம் மற்றும் திருச்சபைகளின் யுனைட்டட் சர்ச் செயலர் மதகுரு ஹல் லுவெலின் இவ்வாறு சொன்னார்: “பைபிள் நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது, அது எவ்விதமாக வாசிக்கப்படுகிறது மற்றும் விளக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்திக்கொள்வது அதிமுக்கியமானதாகும்.” ஆனால் அனைவரும் அதை உணராவிட்டாலும்கூட, நாமாகவே பைபிளைப் புரிந்துகொள்ள முடியாது என்பதே உண்மையாகும். நமக்கு உதவி தேவை.
என்ன உதவி கிடைக்கிறது?
பைபிளிலுள்ள ஒருசில திகைக்க வைக்கும் முதுமொழிகளுக்கும், சிக்கலான கேள்விகளுக்கும், கருத்தாழமுள்ள கூற்றுகளுக்கும் விளக்கம் தேவைப்படுகிறது. எழுதப்பட்ட அந்தச் சமயத்தில் புரிந்துகொள்ளப்படுவதற்கென்று இல்லாத அர்த்தமுள்ள ஒப்புமைகள் பயன்படுத்தப்பட்டு அவற்றின் பொருள் எளிதில் அறியமுடியாதவையாக இருக்கலாம். ஆனால் யெகோவாவின் நோக்கங்கள் அவற்றில் உட்பட்டிருந்தன. உதாரணமாக, வெளிப்படுத்துதல் 13:18, ‘அந்த மிருகத்தின் இலக்கம்,’ “அறுநூற்றறுபத்தாறு” என்று சொல்கிறது. “இதிலே ஞானம் விளங்கும்” என்பதாக அந்த வசனம் சொல்லும்போது, அந்த இலக்கத்தின் முக்கியத்துவத்தை அது விளக்குவதில்லை. என்றபோதிலும், யெகோவா, அவருடைய அமைப்பின் மூலமாக இன்று அவருடைய உத்தமுமுள்ள ஊழியர்கள் அதன் பொருளைப் புரிந்துகொள்ள அனுமதித்திருக்கிறார். (“பைபிளைப் புரிந்துகொள்வதற்கு வழிமூலம்” என்ற பெட்டியைப் பார்க்கவும்.) நீங்களும்கூட ‘சத்திய வார்த்தையை சரியாகக் கையாளுவதில்’ அனுபவமுள்ளவர்களின் உதவியோடு இந்தப் புரிந்துகொள்ளுதலை அடையலாம்.—2 தீமோத்தேயு 2:2, 15, 23-25; 4:2-5; நீதிமொழிகள் 2:1-5.
இயேசு சில சமயங்களில், ராஜ்ய செய்திக்குப் பிரதிபலிப்பை அல்லது பிரதிபலிப்பில்லாமையைக் காண்பிப்பதற்காக உதாரணங்களைப் பயன்படுத்தினார். ஒரு சிலர் நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் வரும் எதிர்ப்பினால் சோர்வடைந்துவிடுவதன் காரணமாக முன்னேற்றம் செய்ய மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார். மற்றவர்கள் ராஜ்ய செய்திக்கு அவர்களுடைய போற்றுதலை, “உபத்திரவமும் துன்பமும்” அழித்துப்போட அனுமதித்துவிடுவார்கள். இன்னும் மற்றவர்கள் வாழ்க்கையின் அன்றாட விவகாரங்களை, ‘உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும்’ நற்செய்திக்காக அவர்கள் கொண்டிருக்கக்கூடிய அன்பை நெருக்கிப் போட்டுவிட அனுமதித்துவிடுவார்கள். மறுபட்சத்தில், சந்தோஷமாக பிரதிபலித்து விலைமதிப்புள்ள வார்த்தையைக் கேட்க மனமுள்ளவர்களாயிருந்து அதன் கருத்தைப் புரிந்துகொள்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கிறிஸ்தவமண்டலத்தில் இயேசு கிறிஸ்துவின் பெயரில் செய்யப்பட்டுவரும் “சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற”வர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் யெகோவாவின் வழியில் போதிக்கப்படவும் தாங்கள் பைபிளில் வாசிப்பதைப் புரிந்துகொள்ளவும் ஆவலுள்ளவர்களாக இருக்கின்றனர்.—மத்தேயு 13:3-9, 18-23; எசேக்கியேல் 9:4; ஏசாயா 2:2-4.
தனிப்பட்டவர்களாக, யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய உட்பார்வையை பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு, தேவையான உதவி அளிக்கப்படுவதை யெகோவா பார்த்துக்கொள்ள முடியும். இதை விளக்குவதற்கு, எருசலேமிலிருந்து பயணப்படுகையில் ஏசாயாவின் பைபிள் புத்தகத்தைச் சிந்தித்துக்கொண்டிருந்த ஒரு எத்தியோப்பிய மனிதனுக்கு உதவிசெய்யும்படி சுவிசேஷகனாகிய பிலிப்புவை யெகோவாவின் ஆவி வழிநடத்தியதை பைபிள் தெரிவிக்கிறது. வீட்டுக்குத் திரும்பி வருகையில், அதை அவர் தன் இரதத்தில் வாசித்துக்கொண்டு வந்தார். யெகோவாவின் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, பிலிப்பு இரதத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டே இவ்விதமாக கேட்டார்: ‘நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?’ தனக்கு உதவி தேவை என்பதை ஒப்புக்கொள்வதற்கு அந்த மனிதன் போதிய அளவு மனத்தாழ்மையும் நேர்மையுமுள்ளவராய் இருந்தார். ஆவிக்குரிய பசியுள்ளவராயும் கற்பிக்கத்தக்கவராயும் இருந்த இந்த நபருக்கு பிலிப்பு சந்தோஷமாக போதித்தார். வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ள இந்தப் போதனை அவருக்கு உதவியாக இருந்தது. நித்திய வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு யெகோவாவோடு தயவான ஓர் உறவை அனுபவித்துக் களிக்க தான் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்பதை அவர் கற்றறிந்தார். அவர் கடவுளுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையைப் பின்தொடர்ந்த யெகோவாவின் மகிழ்ச்சியுள்ள முழுக்காட்டப்பட்ட ஊழியராக ஆனார்.—அப்போஸ்தலர் 8:26-39.
உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு பைபிளை வைத்திருக்கலாம், பல முறை அதை படித்திருக்கலாம். உண்மை மனதுடைய, தாழ்மையுள்ள எத்தியோப்பியன் அனுபவித்த அதே பிரச்சினையை நீங்கள் அனுபவித்திருக்கக்கூடும். அவர் வாசித்தவற்றை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவருக்கு உதவி தேவையாக இருந்தது, யெகோவா தேவன் விரும்பி அளித்த உதவியை ஏற்றுக்கொள்ள அவர் தயங்கவில்லை. பிலிப்புவைப் போலவே, யெகோவாவின் சாட்சிகள் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் கடவுளைப் பற்றிய காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவிசெய்ய மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். யெகோவா பைபிளை அளித்திருக்கிறார் என்பதையும் அது புரிந்துகொள்வதற்கென்றே எழுதப்பட்டது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 2:10; எபேசியர் 3:18; 2 பேதுரு 3:16.
பைபிள் ஏன் அத்தியாவசியமானது?
மனித வரலாற்றிலேயே நாம் மிகவும் அவசரமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பைபிள் இதை “காரிய ஒழுங்கு முறையின் முடிவு,” என்பதாக குறிப்பிடுகிறது. (மத்தேயு 24:3, NW) ஆண்டு 1914 முதற்கொண்டு பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நடந்துவரும் அநேக சம்பவங்கள் இப்பொழுது வெகு சீக்கிரத்தில் கடவுளுடைய பரலோக ராஜ்யம் ‘மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி நிர்மூலமாக்கும்’ என்பதைக் காட்டுகிறது.—தானியேல் 2:44.
பைபிளில், மத்தேயு அதிகாரம் 24, மாற்கு அதிகாரம் 13, மற்றும் லூக்கா அதிகாரம் 21-ல் என்ன முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்களே வாசித்துப் பாருங்கள். அவற்றில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் உலகளாவிய அக்கறைக்குரியவை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். அவை மற்ற எல்லா போர்களிலிருந்தும் வேறுபடுகின்ற உலகப் போர்களை உள்ளடக்கும். முன்னறிவிக்கப்பட்ட உணவு பற்றாக்குறைகளையும் நிலநடுக்கங்களையும் அசாதாரணமான ஒழுங்கில்லா காலத்தையும் முதல் உலகப் போர் முதற்கொண்டு நாம் பார்த்து வருகிறோம். உலக அழிவு உடனடியாக நிகழவிருக்கிறது என்பதற்கு தெளிவான அறிகுறியாக இருக்கும் ஓர் அறிவிப்பை செய்யும் தறுவாயில் தேசங்கள் இப்பொழுது இருப்பதாக தெரிகிறது. இதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: ‘இரவிலே திருடன் வருகிறவிதமாய் யெகோவாவுடைய நாள் வருகிறது. சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.’ (1 தெசலோனிக்கேயர் 5:2, 3, NW) தப்பிப்போகாதவர்கள் யார்? பவுல் விளக்குகிறார்: ‘தேவனை அறியாதவர்களும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களும்.’ (2 தெசலோனிக்கேயர் 1:7-10) ‘குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் ராஜ்யத்தின் நற்செய்தியைப்’ பிரசங்கிக்கும்படியாக மத்தேயு 24:14-ல் (NW) கொடுக்கப்பட்டுள்ள கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களே கூட்டு அடையாளத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றவேண்டியதாக இருந்தது.
இலட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கட்டளையை 231 தேசங்களிலும் சமுத்திரத்தின் தீவுகளிலும் நிறைவேற்றிவருகின்றனர். அவர்கள் மக்களுடைய வீடுகளைச் சந்தித்து யெகோவாவின் ராஜ்ய அரசாங்கத்தைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு தனிப்பட்டவிதமாக அவர்களை அழைக்கிறார்கள். இந்தக் காரிய ஒழுங்குமுறையைத் தப்பிப்பிழைப்பவர்களோடு இருந்து துக்கமும் அலறுதலும் வருத்தமும் அல்லது மரணமும் இல்லாத ஒரு பரதீஸிய பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொருவரும் எடுக்கவேண்டிய நடவடிக்கையை அவர்கள் தயவாக குறிப்பிடுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இந்தப் பொல்லாத உலகத்துக்கு காலம் வேகமாக தீர்ந்து கொண்டிருக்கிறது, ‘நற்செய்திக்குக் கீழ்ப்படிந்து’ இப்படியாக அழிவிலிருந்து தப்புவதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை இந்த உலகின் முடிவைத் தப்பிப்பிழைக்க விரும்புகிற அனைவரும் கற்றுக்கொள்வது அவசரமானது. அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் உங்கள் வீட்டைச் சந்திக்கையில், ஒரு வாராந்தர பைபிள் படிப்புக்கான அழைப்பை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? இன்னும் மேலானது, நீங்கள் அதைப் புரிந்துகொள்ள விரும்புவதன் காரணமாக உங்களோடு பைபிளைப் படிக்கும்படியாக ஏன் அவர்களைக் கேட்கக்கூடாது?
[பக்கம் 8-ன் பெட்டி]
பைபிளைப் புரிந்துகொள்வதற்கு வழிமூலம்
இயேசு தம்முடைய மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பிறகு, தம்முடைய செய்தித்தொடர்பு வழிமூலமாக சேவிக்க இருக்கும் ஒரு ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ எழுப்புவதாக நமக்கு உறுதியளித்தார். (மத்தேயு 24:45-47, NW) அப்போஸ்தலன் பவுல், ‘தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக’ என்பதாக எழுதி எபேசிய கிறிஸ்தவர்களுக்கு இந்த வழிமூலத்தை அடையாளங்காட்டினார். (எபேசியர் 3:10, 11) பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின்போது தோன்றிய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையிடமே ‘வெளிப்படுத்தப்பட்டவைகள்’ ஒப்படைக்கப்பட்டன. (உபாகமம் 29:29) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒரு தொகுதியாக உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக சேவிக்கின்றனர். (லூக்கா 12:42-44) கடவுளால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட வேலை, ‘வெளிப்படுத்தப்பட்டவைகளின்’ ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலை அளிப்பதாகும்.
மேசியாவை சுட்டிக்காண்பித்தது போலவே, பைபிள் தீர்க்கதரிசனம் இப்பொழுது உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக சேவிக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சாட்சிகளின் நெருக்கமாக பின்னப்பட்ட ஒரு குழுவினிடமாகவும்கூட நம்மை வழிநடத்துகிறது.a கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள அது நமக்கு உதவிசெய்கிறது. பைபிளைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும், ‘கடவுளுடைய அநந்த ஞானமானது’ யெகோவாவின் செய்தித்தொடர்பு வழிமூலமாகிய உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின் மூலமாக மட்டுமே அறியப்பட முடியும் என்பதை மதித்துணரவேண்டும்.—யோவான் 6:68.
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம், மார்ச் 1, 1981, பக்கங்கள் 24-30-ஐப் பார்க்கவும்.