உலகமுழுவதும் யெகோவாவின் சாட்சிகள்—நைஜீரியா
நைஜீரியா, ஆப்பிரிக்காவின் மேற்கு புடைப்பு அடிவாரத்திலுள்ள வளைவுக்குள் செருகியதாக உள்ளது. கினீ வளைகுடாவில் அமைந்ததாக, அது பூமத்தியரேகைக்கு வடக்கேயுள்ளது. 8 கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது.a
சென்ற இரண்டு ஊழிய ஆண்டுகளின்போது, உவாட்ச் டவர் சொஸையிட்டியினுடைய நைஜீரியாவின் கிளை அலுவலகம் இளைஞருக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்தியுள்ளது. 1992-ன் போது நைஜீரியாவில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கினவர்களுக்குள் 80 சதவீதம், 10-க்கும் 20-க்கும் இடைப்பட்ட வயதினராக இருந்தார்களென்று யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் செய்த மதிப்பாய்வு காட்டினது. அந்த ஆண்டின்போது முழுக்காட்டப்பட்டவர்களில் 63 சதவீதம் அந்த வயது தொகுதியினராக இருந்தனர்.
இளைஞர் பயனியர் சேவையை ஏற்கின்றனர்
இளைஞர் பலர் பயனியர்களாக முழுநேர பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுகின்றனர். ஹன்னா என்ற பெயரைக்கொண்ட ஒரு பயனியர் இவ்வாறு சொல்கிறாள்: “நான் பள்ளிப் படிப்பை முடிக்கும் தறுவாயில் இருந்தபோது, பயனியர் சேவை பள்ளிக்கு வந்திருந்தவர்களைப் போய்ப் பார்த்தேன், அங்கே முதிர்வயதான இரண்டு சகோதரிகளைச் சந்தித்தேன். ‘அவர்கள் பயனியர் செய்யக்கூடுமானால், நான் ஏன் செய்யக்கூடாது?’ என்று எனக்குள் நான் சிந்தித்தேன்.
“ஆகையால் நான் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, பயனியரானேன். மூன்று மாதங்களுக்குப் பின், ஜூஜூ வணக்கத்தாளான 26 வயது ஜோசஃபீனை சந்தித்தேன். அவள்: ‘யெகோவாவின் சாட்சிகளாகிய நீங்கள் கெட்ட ஜனங்கள். நீங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுவதோ தாயத்துகள் பயன்படுத்துவதோ இல்லை’ என்று சொன்னாள். அதற்கு நான், அவளோடு பைபிள் படிக்கும்படி அவள் என்னை அனுமதித்தால், நாங்கள் ஏன் அந்தக் காரியங்களை அனுசரிக்கிறதில்லை என்பதை அவள் தெரிந்துகொள்வாள் என்று பதிலளித்தேன். வரும்படி அவள் என்னை அழைத்தாள். விரைவில் அவள் கூட்டங்களுக்கு வரத் தொடங்கி, தன் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்தாள். 1990-ன் டிசம்பரில் அவள் முழுக்காட்டப்பட்டாள். ஆகஸ்ட் 1991 முதற்கொண்டு ஜோசஃபீன் ஒரு பயனியராக இருந்துவருகிறாள். சென்ற ஆண்டில் பயனியர் சேவை பள்ளிக்கு அவள் வந்திருந்தபோது, தன் வகுப்புத்தோழர்களிடம் என்னைத் தன் ஆவிக்குரிய தாய் என்று அறிமுகம் செய்தாள்!”
வீடியோவும் ராஜ்ய மன்றமும்
சங்கத்தின் வீடியோ பதிவுகளில் ஒன்று, ராஜ்ய மன்றத்திற்காக நிலம் வாங்க, ஒரு சிறிய சபைக்கு உதவிசெய்தது. ஒரு நிலம் வாங்கும்படி நாடி, நான்கு சகோதரர்கள், அந்த நிலப்பகுதியின் பாரம்பரிய அரசனாகிய ஓனோஜீயை அணுகினர். அவர் ஒரு சிறு நிலத்தை 20,000 நேய்ராவுக்கு [ரூ.30,750] அளிக்க முன்வந்தார். அந்தத் திட்டத்துக்குப் பணமளித்து உதவ 17 பிரஸ்தாபிகள் மாத்திரமே இருந்ததால், சபை அவ்வளவு பெரும் தொகையைச் செலுத்த முடியாதிருந்தது. மற்றொரு இடத்தைப்பற்றி தான் சிந்தித்துப் பார்ப்பதாக அந்த ஓனோஜீ கூறினார்.
சில மாதங்களுக்குப் பின், சபை மூப்பர்களில் ஒருவர் அந்த ஓனோஜீயின் வீட்டிற்குச் சென்றார். அந்த ஓனோஜீ தன் முடிசூட்டு விழாவின் வீடியோ பதிவைப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த மூப்பர்: “என்னிடம் ஒரு வீடியோ உள்ளது, நீர் இதைப் பார்க்கும்படி விரும்புகிறேன். இது யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (Jehovah’s Witnesses—The Organization Behind the Name) என்றழைக்கப்படுகிறது” என்று சொன்னார்.
பின்னால், அந்த வீடியோவைப்பற்றி ஓனோஜீயின் எண்ணம் என்னவெனக் கேட்டார். “அந்தப் படத்தை நான் ஐந்து தடவைகள் பார்த்தேன்” என்று ஓனோஜீ சொன்னார். அந்த வீடியோவில் அவர் பார்த்த ராஜ்ய மன்றங்களைப்பற்றி மூப்பர் ஓனோஜீக்கு நினைவுபடுத்தி, அவ்விடத்து சபை அதற்கொப்பான ஒன்றைக் கட்டவே விரும்புவதாக விளக்கினார். பின்பு, அந்தச் சபைக்கு ஏற்கெனவே சொந்தமான ஒரு சிறிய நிலத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் கொஞ்சத்தை சபை வாங்கக்கூடுமாவெனக் கேட்டார். அதற்கு ஓனோஜீ: “சென்ற இரவு அந்த வீடியோவைப் பார்த்த பின்பு, அதையே நானும் நினைத்தேன்” என்று பதிலளித்தார். அதன்பின் அவர் அந்தச் சபைக்குச் சொந்தமான நிலத்திற்கு அடுத்திருந்த நிலத்தில் 6 மீட்டர்கள் அகலத்திற்கு ஒரு நிலத்தை அளந்து, “இதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறினார். “நீளத்தில் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். பத்திரங்களைத் தயார்செய்யுங்கள், நான் அவற்றிற்குக் கையெழுத்திடுகிறேன்” என்றார்.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டி 1994-ஐப் பாருங்கள்.
[பக்கம் 9-ன் பெட்டி]
நாட்டு தகவல்கள்
1993 ஊழிய ஆண்டு
சாட்சி கொடுப்பவர்களின் உச்ச எண்ணிக்கை: 1,74,582
விகிதம்: 1 சாட்சிக்கு 507
நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தோர்: 4,73,245
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 19,777
சராசரி பைபிள் படிப்புகள்: 2,42,028
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 8,888
சபைகளின் எண்ணிக்கை: 3,289
கிளை அலுவலகம்: பெனின் நகரம், ஈடோ நாடு