உங்கள் திருமணத்தை நிலையான இணைப்பாக்குங்கள்
“தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—மத்தேயு 19:6.
1. இன்றிருக்கும் உண்மை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெறப்படும் திருமண வெற்றிக்கான ஆதாரம் என்ன?
இன்றுள்ள யெகோவாவின் மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் நிறைவளிக்கும் நீடித்திருக்கும் திருமணங்களை சந்தோஷமாக அனுபவித்து வாழ்கின்றனர். என்றாலும், இப்படிப் பெருவாரியாக வெற்றியடைந்திருப்பது, வெறும் தற்செயலல்ல. துணைவர்கள் இருவரும் (1) திருமணத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை மதித்து, (2) அவருடைய வார்த்தையிலுள்ள நியமங்களுக்கேற்ப வாழ முயற்சி செய்யும்போது கிறிஸ்தவ திருமணங்கள் வளங்கொழிக்கின்றன. மொத்தத்தில், கடவுள்தாமே திருமணத்தை ஏற்படுத்தி வைத்தார். அவர்தாமே ‘பூலோகத்திலுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராக’ இருக்கிறார். (எபேசியர் 3:14, 15) திருமணத்தில் வெற்றியடைவதற்கு எது தேவையாயுள்ளது என்பதை யெகோவா அறிந்திருப்பதால், அவருடைய வழிநடத்துதலை பின்பற்றுவதன் மூலம் நாம்தாமே பயனடைகிறோம்.—ஏசாயா 48:17.
2. திருமணத்தில் பைபிள் நியமங்களைப் பொருத்தத் தவறுவதன் விளைவுகள் எவை?
2 மாறாக, பைபிள் நியமங்களைப் பொருத்தத் தவறுவது திருமண துயரில் ஆழ்த்திவிடும். இன்று, ஐக்கிய மாகாணங்களில் மணமாகும் சுமார் மூன்றில் இரண்டு பாகமான ஆட்கள் முடிவில் திருமண விலக்கைச் செய்துகொள்வார்கள் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களின்’ அழுத்தங்களிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் கிறிஸ்தவர்களுங்கூட விடுபட்டில்லை. (2 தீமோத்தேயு 3:1, NW) பொருளாதார நெருக்கடிகளும் வேலையிடங்களில் உண்டாகும் அழுத்தங்களும் எந்தவொரு திருமணத்திலும் துயரகரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சில கிறிஸ்தவர்களுடைய துணைவர்கள் பைபிள் நியமங்களைப் பொருத்த தவறியிருப்பதன் காரணமாகவும் அவர்கள் மிகவும் மனமுறிவடைந்து இருக்கின்றனர். “நான் யெகோவாவை நேசிக்கிறேன், ஆனால் என்னுடைய திருமண வாழ்க்கையானது 20 ஆண்டுகளாக பிரச்சினை நிறைந்ததாக இருந்திருக்கிறது. என்னுடைய கணவர் ஒரு தன்னலவாதியாயிருப்பதால் எந்தவொரு மாற்றங்களையும் செய்ய விரும்புவது கிடையாது. நான் மாட்டிக்கொண்டு முழிக்கிறேன்,” என்று ஒரு கிறிஸ்தவ மனைவி சொல்கிறாள். இப்படிப்பட்ட உணர்ச்சிகளை அநேக கிறிஸ்தவ கணவர்களும் மனைவிகளும் தெரிவித்திருக்கின்றனர். என்ன தவறு ஏற்படுகிறது? மிகவும் உணர்ச்சிப்பூர்வ அக்கறையின்மைக்குள்ளோ வெளிப்படையான பகைமைக்குள்ளோ அலைக்கழிக்கப்படுவதிலிருந்து எது ஒரு திருமணத்தைக் காக்கக்கூடும்?
திருமணத்தின் நிரந்தரத்தன்மை
3, 4. (அ) திருமணத்திற்கான கடவுளுடைய தராதரம் என்ன? (ஆ) திருமணத்தின் நிரந்தரத்தன்மை ஏன் ஒழுக்கநலமுள்ளதாகவும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கிறது?
3 மிகவும் சாதகமான சூழ்நிலைமைகளிலுங்கூட, திருமணம் அபூரண ஆட்களைக்கொண்ட இணைப்பாயிருக்கிறது. (உபாகமம் 32:5, திருத்திய மொழிபெயர்ப்பு) எனவே, பவுல் அப்போஸ்தலன் “[திருமணம் செய்பவர்கள்] சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்,” என்று சொன்னார். (1 கொரிந்தியர் 7:28) சமாளிக்க முடியாத சில சூழ்நிலைமைகள் பிரிந்து வாழ்வதிலோ திருமண விலக்கிலோகூட முடிவடையலாம். (மத்தேயு 19:9; 1 கொரிந்தியர் 7:12-15) என்றாலும், அநேகருடைய விஷயத்தில், பவுலின் ஆலோசனையைக் கிறிஸ்தவர்கள் அப்பியாசிக்கின்றனர்: “மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. . . . புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.” (1 கொரிந்தியர் 7:10, 11) நிச்சயமாகவே, திருமணம் ஒரு நிரந்தர கட்டாக இருக்கவேண்டியதாயிருந்தது, ஏனெனில் இயேசு கிறிஸ்து தெரிவித்தார்: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—மத்தேயு 19:6.
4 நட்புறவற்ற அல்லது அன்பற்ற திருமணத்தில் சிக்கிக்கொண்டதாக உணரும் ஒருவருக்கு யெகோவாவின் தராதரம் கடுமையானதாகவும் நியாயமற்றதாகவும் தோன்றக்கூடும். ஆனால் அது அவ்வாறில்லை. திருமண கட்டின் நிரந்தரத்தன்மையானது, பிரச்சினைக்கான முதல் அறிகுறியைக் கண்டதும் அவரவருக்குரிய கடமைகளை உடனடியாக புறக்கணிப்பதற்குப் பதிலாக, தங்களுடைய பிரச்சினைகளை எதிர்ப்பட்டு அவற்றைத் தீர்க்கும்படி நாட ஒரு தெய்வபயமுள்ள தம்பதியை உந்துவிக்கிறது. மணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு மனிதன் அதைப்பற்றி இவ்வாறு சொல்கிறார்: “பிரச்சினையான காலங்களை உங்களால் தவிர்க்க முடியாது. நீங்கள் எல்லா காலத்துக்கும் ஒருவரோடொருவர் சந்தோஷமாக இருக்கமுடியாது. அப்பொழுதுதான் செய்துகொண்ட ஒப்பந்தம் உண்மையில் முக்கியமாக இருக்கிறது.” நிச்சயமாகவே, மணமான கிறிஸ்தவ தம்பதிகள் திருமணத்தை ஏற்பாடு செய்துவைத்த யெகோவா தேவனுக்கு முக்கியமாய் கடன்பட்டிருப்பதை உணருகின்றனர்.—பிரசங்கி 5:4-ஐ ஒத்துப்பாருங்கள்.
தலைமைத்துவமும் கீழ்ப்பட்டிருத்தலும்
5. கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் பவுல் கொடுத்த சில ஆலோசனைகள் எவை?
5 ஆகவே, பிரச்சினைகள் எழும்பினால், அவற்றிலிருந்து விடுபடும் சமயமாக அது இல்லாமல், கடவுளுடைய வார்த்தையின் ஆலோசனைகளைப் பொருத்துவதற்கான சிறந்த வழியைத் தேடும் சமயமாக இருக்கிறது. உதாரணமாக, எபேசியர் 5:22-25 மற்றும் 27-ன் பிற்பகுதியிலிருந்து 29 வரை உள்ள பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.”
6. உலக ஆண்களிலிருந்து எவ்வாறு கிறிஸ்தவ கணவர்கள் வித்தியாசப்பட்டவர்களாயிருக்க வேண்டும்?
6 அடிக்கடி மனிதர்கள் தங்களுடைய கணவனுக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்கள் மனைவிகளை அடக்கியாண்டிருக்கின்றனர். (ஆதியாகமம் 3:16) பவுலோ கிறிஸ்தவ கணவர்கள் உலக ஆண்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாயும், தங்கள் மனைவிகளுடைய தினசரி வாழ்க்கையின் எல்லா காரியத்திலும் தலையிட்டுக் கட்டுப்படுத்தக்கூடிய கொடுங்கோலர்களாக இல்லாமல் கிறிஸ்துவைப்போல இருக்குமாறும் ஊக்குவித்தார். உண்மையில், மனிதனாகிய இயேசு கிறிஸ்து கொடுமையாகவோ ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துபவராகவோ இருக்கவே இல்லை. தம்மைப் பின்பற்றுபவர்களை மதிப்பு மரியாதையோடு பாவிப்பவராக, அவர் சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”—மத்தேயு 11:28, 29.
7. ஓர் ஆண், தன் மனைவி உலகப்பிரகாரமான வேலைசெய்யும்போது எவ்வாறு கொடுக்கவேண்டிய கனத்தைக் கொடுக்க முடியும்?
7 ஒரு கிறிஸ்தவ கணவன் தன் மனைவி பலவீன பாண்டமென்று அறிந்து அவளுக்கு கொடுக்கவேண்டிய கனத்தைக் கொடுக்கிறார். (1 பேதுரு 3:7) உதாரணமாக, அவள் ஒருவேளை உலகப்பிரகாரமான வேலை செய்துகொண்டிருக்கலாம். அவர் அதை கவனத்தில் கொண்டு, முடிந்தவரை உதவியளித்து கரிசனையுள்ளவராக இருப்பார். திருமண விலக்கு செய்துகொள்வதற்கு பெண்கள் கொடுத்த ஒரு பிரதான காரணமானது தங்களுடைய கணவன் பிள்ளைகளையோ வீட்டையோ கவனியாது விட்டுவிடுவதாகும். எனவே, ஒரு கிறிஸ்தவ கணவன் முழுக் குடும்பமும் பயனடையக்கூடிய பயனுள்ள விதங்களில் வீட்டில் அவளுக்கு உதவியாயிருக்க நாடுகிறார்.
8. கீழ்ப்பட்டிருத்தல் என்பது கிறிஸ்தவ மனைவிகளின் விஷயத்தில் எதை அவசியப்படுத்துகிறது?
8 கனத்தோடு பாவிக்கப்படுவது, கிறிஸ்தவ மனைவிகள் தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதை எளிதாக்குகிறது. ஆயினும் இது முழுமோசமான அடிமைத்தனத்தை குறிக்கவில்லை. மனைவி அடிமையாயிராமல், மனிதனுக்கு பொருத்தமான ஒன்றைக் குறிப்பதாக “ஏற்ற துணை”யாக (“பூர்த்திசெய்பவ”ளாக, NW-ன் அடிக்குறிப்பு) இருக்கும்படி கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:18) மல்கியா 2:14-ல் மனிதனுடைய “தோழி”யாக மனைவி பேசப்படுகிறாள். இவ்விதமாக, பைபிள் காலங்களிலிருந்த மனைவிகள் கணிசமான விடுதலையையும் உரிமைகளையும் அனுபவித்து மகிழ்ந்தனர். “குணசாலியான ஸ்திரீ”யைப் பற்றி பைபிள் கூறுவதாவது: “அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்.” உண்மையில், வீட்டு அலுவல்களைக் கவனித்துகொள்வது, உணவு கொள்முதலை கண்காணிப்பது, வீடு, நில விவகாரங்களில் பேரம்பேசுவது, ஒரு சிறிய தொழிலை நடத்துவது போன்ற காரியங்கள் அவளுடைய பொறுப்பில் விடப்பட்டன.—நீதிமொழிகள் 31:10-31.
9. (அ) பைபிள் காலங்களில் வாழ்ந்த தெய்வபயமுள்ள பெண்கள் எவ்வாறு உண்மையான கீழ்ப்பட்டிருத்தலைக் காட்டினர்? (ஆ) இன்று ஒரு கிறிஸ்தவ மனைவி கீழ்ப்பட்டிருத்தலோடு இருப்பதற்கு எது உதவலாம்?
9 ஆனாலும், தெய்வபயமுள்ள மனைவி தன் கணவனின் அதிகாரத்தை ஏற்று நடந்தாள். உதாரணமாக, சாராள் “ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்;” ஓர் ஆசாரமுறைப்படியாயிராமல், தன்னுடைய கீழ்ப்பட்டிருத்தலின் உள்ளப்பூர்வமான பிரதிபலிப்பாக அவ்வாறு செய்தாள். (1 பேதுரு 3:6; ஆதியாகமம் 18:12) மேலும் தன் கணவனோடு கூடாரங்களில் வாசமாயிருக்க ஊர் என்ற நகரத்திலிருந்த வசதியான வீட்டையும் அவள் மனப்பூர்வமாக விட்டு வந்தாள். (எபிரெயர் 11:8, 9) ஆனால் அவசியம் ஏற்படும்போது மனைவி, பொறுப்பான காரியத்தை செய்யக்கூடாது என்பதைக் கீழ்ப்பட்டிருத்தல் அர்த்தப்படுத்தவில்லை. விருத்தசேதனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மோசே கடவுளுடைய சட்டத்திற்கு இணங்கி நடக்கத் தவறியபோது அவருடைய மனைவியாகிய சிப்போராள் ஆபத்தை முன்னுணர்ந்து திடத்தீர்மானமாக செயல்பட்டாள். (யாத்திராகமம் 4:24-26) ஓர் அபூரண மனிதனைப் பிரியப்படுத்துவதைவிட அதிகம் உட்பட்டிருக்கிறது. மனைவிகள் ‘கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, தங்கள் சொந்தப் புருஷருக்கு கீழ்ப்படிய’ வேண்டும். (எபேசியர் 5:22) கடவுளோடு வைத்திருக்கும் உறவு சம்பந்தமாக ஒரு கிறிஸ்தவ மனைவி யோசித்தாளென்றால், தன் கணவன் செய்யும் சிறிய தப்பிதங்களையும் குறைகளையும் கண்டுங்காணாமலிருக்க இது அவளுக்கு உதவிசெய்யும்; அவளுடன் தொடர்புகொள்கையில் அவரும் அவ்வாறே செய்வது அவசியம்.
பேச்சுத்தொடர்பு—திருமணத்தின் உயிர்நாடி
10. திருமணத்தில் பேச்சுத்தொடர்பு எவ்வளவு முக்கியமானது?
10 தம்பதிகள் பிரிந்துவிடுவதற்கான ஒரேவொரு மிகப் பெரிய காரணம் என்னவென்று கேட்டபோது, திருமண விலக்கு வழக்கறிஞர் பதிலளித்தார்: “ஒருவரோடொருவர் நேர்மையாகப் பேசிக்கொள்வது, தங்கள் உள்ளார்ந்த கருத்துக்களை மனம்விட்டு சொல்வது, ஒருவரையொருவர் தங்களுடைய மிகச் சிறந்த நண்பராக பாவிப்பது ஆகியவற்றை செய்யவியலாதிருப்பதே ஆகும்.” ஆம், ஒரு பலமான திருமணத்துக்கு பேச்சுத்தொடர்பு உயிர்நாடியாயிருக்கிறது. பைபிள் சொல்வதுபோல, “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்.” (நீதிமொழிகள் 15:22) கணவர்களும் மனைவிகளும் ‘நம்பிக்கைக்குரிய நண்பர்களாக’ இருந்து, ஓர் அனலான, நெருக்கமான உறவை அனுபவித்து மகிழவேண்டும். (நீதிமொழிகள் 2:17, NW) ஆனாலும், தம்பதிகளில் அநேகர் பேச்சுத்தொடர்புகொள்ள கஷ்டப்படுகின்றனர், இதனால் அழிவுக்கேதுவான கோபம் வெடிக்கும்வரை மனக்கசப்பானது வளருகிறது. அல்லது மணத் துணைவர்கள் மரியாதைமிக்க ஒரு மேற்பூச்சான தோற்றத்தைக் கொடுத்து, ஒருவரையொருவர் உணர்ச்சிப்பூர்வமாக விலக்கிவைத்துக் கொள்கின்றனர்.
11. கணவன் மனைவிக்கிடையே உள்ள பேச்சுத்தொடர்பை எவ்வாறு முன்னேற்றுவிக்கலாம்?
11 ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான பேச்சுத்தொடர்பு பாணிகள் இருப்பதானது அடிக்கடி இந்தப் பிரச்சினையின் பாகமாகத் தெரிகிறது. அநேக பெண்கள் உணர்ச்சிகள் பரிமாறிக்கொள்வதை வசதியாயிருப்பதாக காண்கையில், ஆண்கள் பொதுவாக உண்மைகள் பரிமாறிக்கொள்வதை விரும்புவதாக தோன்றுகிறது. பெண்கள் ஒற்றுணர்வைக் காட்டி, உணர்ச்சிப்பூர்வ ஆதரவைத் தர அதிக மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கையில், ஆண்கள் தீர்வுகளை நாடித் தரும் சுபாவமுள்ளவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும், இரு துணைவர்களும் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருப்பதில் உறுதியாயிருந்தால், நல்ல பேச்சுத்தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. (யாக்கோபு 1:19) நேருக்கு நேர் பார்த்து பேசி, நன்கு செவிசாய்த்து கேளுங்கள். கரிசனையான கேள்விகளைக் கேட்டு ஒருவரோடொருவர் மனம்விட்டு பேசிக்கொள்ளுங்கள். (1 சாமுவேல் 1:8-ஐயும் நீதிமொழிகள் 20:5-ஐயும் ஒத்துப்பாருங்கள்.) உங்கள் துணைவர் ஒரு பிரச்சினையை மனம்திறந்து சொல்கையில், உடனடியாக தீர்வளிக்க முயற்சி செய்வதற்கு பதிலாக, கவனமாகக் கேட்டு, காரியங்களை நிவர்த்தி செய்யப்பாருங்கள். மேலும் ஒன்றுசேர்ந்து மனத்தாழ்மையுடன் ஜெபித்து, கடவுளுடைய வழிநடத்துதலைப் பெற நாடுங்கள்.—சங்கீதம் 65:2; ரோமர் 12:12.
12. கிறிஸ்தவ துணைவர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் நேரத்தை வாங்கிக்கொள்ளலாம்?
12 அவ்வப்போது வாழ்க்கையின் அழுத்தங்களும் நெருக்கடிகளும் மணத் துணைவர்களுக்கிடையே அர்த்தமுள்ள பேச்சைக் கொண்டிருக்க சொற்பமான நேரத்தையோ சக்தியையோ விட்டுவைப்பதாக தோன்றுகிறது. இருந்தபோதிலும், கிறிஸ்தவர்கள் தங்களுடைய திருமணத்தைக் கனமுள்ளதாயும் அசுசிப்படுவதிலிருந்து அதைக் காக்கவும் வேண்டுமானால், அவர்கள் ஒருவரோடொருவர் நெருக்கமாக ஒன்றியிருக்க வேண்டும். தங்களுடைய இணைப்பை அருமையானதாகவும் மதிப்புவாய்ந்ததாகவும் கருதி, அதற்காகவும் ஒருவருக்கொருவரும் நேரத்தை வாங்க வேண்டும். (கொலோசெயர் 4:5-ஐ ஒத்துப்பாருங்கள்.) சிலருடைய விஷயத்தில், ஆரோக்கியமான பேச்சிற்காக நேரத்தை எடுத்துக்கொள்ள டிவியை அணைப்பதுதானே பரிகாரமாயிருக்கும். ஒழுங்காக ஒரு கப் டீயோ காப்பியோ இருவராக சேர்ந்து பருகுவது, திருமணத் துணைவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக தொடர்புவைத்துக்கொள்ள உதவக்கூடும். இத்தகைய சந்தர்ப்பங்களில், வெவ்வேறு குடும்ப விவகாரங்களைக் குறித்து அவர்கள் ‘ஒன்றுசேர்ந்து ஆலோசிக்கலாம்.’ (நீதிமொழிகள் 13:10, NW) மேலும் சிறிது எரிச்சலடைய வைக்கும் காரியங்களும் மனத்தாங்கலடையச் செய்யும் காரியங்களும் அழுத்த நிலைக்கான பிரதான காரணிகளாக மாறுவதற்கு முன்பாக அவற்றைப் பற்றி பேசிவிடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது எவ்வளவு ஞானமுள்ளது!—மத்தேயு 5:23, 24-ஐயும் எபேசியர் 4:26-ஐயும் ஒத்துப்பாருங்கள்.
13. (அ) ஒளிவுமறைவில்லாமலும் நேர்மையாகவும் பேசுவதில் இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்? (ஆ) திருமணத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக ஒன்றிவருவதற்கான சில வழிமுறைகள் எவை?
13 ஒரு மனிதன் இவ்வாறு வெளிப்படையாக தெரிவித்தார்: “பெருமளவு அடிக்கடி, என்னுடைய மனதில் உள்ளதை உண்மையில் எடுத்துச்சொல்வதற்கும் நான் உணரும் விதத்தை அப்படியே [என் மனைவியிடம்] சொல்வதற்கும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது.” ஆனால், நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதற்கு சுய வெளிப்பாடு ஒரு முக்கியமான திறவுகோலாயிருக்கிறது. இயேசு தம்முடைய மணவாட்டி வகுப்பைச் சேர்ந்த எதிர்கால அங்கத்தினரிடம் எவ்வளவு ஒளிவுமறைவில்லாமலும் நேர்மையாகவும் பேசினார் என்பதைக் கவனியுங்கள். அவர் சொன்னார்: “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.” (யோவான் 15:15) ஆகவே, உங்கள் மணத் துணைவரை ஒரு நண்பராக கருதுங்கள். உங்கள் துணைவரை நம்பி உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள். எளிதான, நேர்மையான ‘பாசங்கலந்த கூற்றுகளை’ சொல்ல முயற்சி செய்யுங்கள். (உன்னதப்பாட்டு 1:2, NW) ஒளிவுமறைவின்றி பேச்சுத்தொடர்பு கொள்வது அவ்வப்போது சங்கடமாக தோன்றக்கூடும், ஆனால் மணத் துணைவர்கள் இருவருமே போதியளவு முயற்சி எடுத்தால், தங்களுடைய திருமணத்தை நிலையான இணைப்பாக்குவதில் அதிகத்தை சாதிக்கலாம்.
அபிப்பிராய பேதங்களைக் கையாளுவது
14, 15. சண்டையை எவ்வாறு தவிர்க்கலாம்?
14 உண்மையான அபிப்பிராய பேதங்கள் அவ்வப்போது எழுவது நிச்சயம். ஆனால் உங்களுடைய வீடு ‘சண்டை நிறைந்த வீடாக’ சீரழியவேண்டிய அவசியமில்லை. (நீதிமொழிகள் 17:1) பிள்ளைகள் கேட்கக்கூடிய விதத்தில் உணர்ச்சிமிக்க காரியங்களைக் கலந்துபேசாமலிருப்பதில் கவனமுள்ளவர்களாயிருங்கள், உங்கள் துணைவரின் உணர்ச்சிகளுக்கு கரிசனையுள்ளவர்களாயிருங்கள். ராகேல் தான் மலடியாயிருக்கும் நிலைமையின்பேரில் வருத்தத்தைத் தெரிவிப்பவளாய், தனக்கு பிள்ளைகளைக் கொடுக்கும்படி யாக்கோபைக் கேட்டபோது, அவர்: “தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா?” என்று கோபமாக பதிலளித்தார். (ஆதியாகமம் 30:1, 2) குடும்ப சச்சரவுகள் ஏற்பட்டால், அந்த நபரை தாக்காமல் பிரச்சினையைக் கையாளப்பாருங்கள். தனிப்பட்ட உரையாடலில், “யோசனையின்றி பேசு”வதையோ அநாவசியமாக ஒருவர் பேசும்போது இன்னொருவர் குறுக்கிடுவதையோ தவிர்க்கப்பாருங்கள்.—நீதிமொழிகள் 12:18, NW.
15 உங்களுடைய நோக்குநிலையைப் பற்றி உங்களுக்குத் தீவிரமான உணர்ச்சிகள் இருப்பது உண்மைதான், ஆனால் இவற்றை “கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும்” இல்லாமல் எடுத்து பேசலாம். (எபேசியர் 4:31) “உங்கள் பிரச்சினைகளை சாதாரண குரலில் கலந்து பேசுங்கள். ஒருவர் கத்துவதற்கு தொடங்கினால், பேசுவதை நிறுத்திவிடுங்கள். கொஞ்சம் நேரம் பொறுத்து திரும்புங்கள். மறுபடியும் பேசத் தொடங்குங்கள்,” என்று ஒரு கணவன் சொல்கிறார். நீதிமொழிகள் 17:14 (NW) இத்தகைய நல்லதொரு புத்திமதியை அளிக்கிறது: “சண்டை எழும்புமுன் விட்டுச்செல்.” இருவரும் கோபம் தணிந்த நிலையில் இருக்கையில், திரும்பவும் காரியங்களைக் கலந்து பேச முயற்சி செய்யுங்கள்.
ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாயிருங்கள்
16. விபசாரம் ஏன் அவ்வளவு வினைமையான காரியமாக இருக்கிறது?
16 எபிரெயர் 13:4 சொல்கிறது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” விபசாரம் கடவுளுக்கு விரோதமான பாவமாயிருக்கிறது. அது திருமணத்தைக் குலைத்துப் போடவுஞ்செய்கிறது. (ஆதியாகமம் 39:9) விவாக ஆலோசகர் ஒருவர் எழுதுகிறார்: “அதைக் கண்டுபிடித்துவிட்ட பிறகு விபசாரம் ஒரு பெரும் சூறாவளிக் காற்றைப்போல முழுக் குடும்பத்தையும் தாக்கி, குடும்பங்களை அழித்து, நம்பிக்கையையும் தன்மானத்தையும் குலைத்து, பிள்ளைகளுக்கு தீங்கிழைக்கிறது.” கருத்தரிப்போ பாலுறவினால் கடத்தப்படும் நோயோ இதன் பலனாக உண்டாகக்கூடும்.
17. விபசாரத்துக்கேதுவான மனச்சாய்வுகளை எவ்வாறு தவிர்க்கவோ விலக்கித்தள்ளவோ செய்யலாம்?
17 சில ஆட்கள் புத்தகங்களிலும் தொலைக்காட்சியிலும் சினிமாக்களிலும் வருணிக்கப்பட்டிருக்கிற பாலுறவைப் பற்றிய உலகின் இழிவான கருத்தினால் ஈர்க்கப்பட்டு விபசாரத்துக்கேதுவான மனச்சாய்வுகளுக்கு உரமூட்டுகின்றனர். (கலாத்தியர் 6:8) என்றாலும், விபசாரமானது சாதாரணமாக, மோகத்தின் காரணமாக மாத்திரமல்ல, ஒருவர் தான் இன்னும் கவர்ச்சிவாய்ந்தவராக இருக்கிறார் என்பதைக் காட்டுவதற்கான ஊகிக்கப்பட்ட அவசியத்தாலோ அதிகப்படியான நேசத்திற்கான இச்சையாலோ விளைவடைகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். (நீதிமொழிகள் 7:18-ஐ ஒத்துப்பாருங்கள், NW) காரணம் என்னவாயிருந்தாலும், ஒரு கிறிஸ்தவன் ஒழுக்கக்கேடான கற்பனா உருவங்களை விலக்கித்தள்ளவேண்டும். உங்களுடைய உணர்ச்சிகளை உங்கள் துணைவருடன் வெளிப்படையாக கலந்து பேசுங்கள். அவசியமிருந்தால், சபை மூப்பர்களின் உதவியை நாடுங்கள். அவ்வாறு செய்வது பாவத்திற்கு ஆட்படுவதிலிருந்து காக்கவே செய்யும். மேலும், கிறிஸ்தவர்கள் எதிர்பாலாரோடு தொடர்பு கொள்ளும்போது ஜாக்கிரதையாயிருப்பது அவசியம். ஒரு நபரை மணம் செய்துகொண்டு, ஆனால் மற்றொரு நபரைக் காமவுணர்வோடு நோக்குவது வேதப்பூர்வ நியமங்களுக்கு முரணானதாயிருக்கும். (யோபு 31:1; மத்தேயு 5:28) வேலைசெய்யுமிடங்களில் உள்ள ஆட்களோடு உணர்ச்சிப்பூர்வமான தொடர்புகளை வளர்த்துக்கொள்வதில் கிறிஸ்தவர்கள் விசேஷ கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். அத்தகைய உறவுகள் சிநேகப்பான்மையாக இருந்தாலும் வேலைச்சார்பானதாக வைத்துக்கொள்ளுங்கள்.
18. திருமணத்தில் பாலுறவு பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் எது வேராயிருக்கிறது, இவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்?
18 ஒருவருடைய துணைவரோடு அன்பான, ஒளிவுமறைவற்ற உறவை வைத்துக்கொள்வது இன்னும் அதிக பாதுகாப்பானதாக இருக்கிறது. திருமணத்தில் பாலுறவு பிரச்சினைகள், மாம்சப்பிரகாரமாக இருப்பது அபூர்வமானதாயிருந்தாலும், சாதாரணமாக குறைவான பேச்சுத்தொடர்பின் விளைபொருட்களாகவே இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் அநேகர் சொல்கின்றனர். ஒரு தம்பதி ஒளிவுமறைவின்றி பேச்சுத்தொடர்புகொண்டு திருமணக் கடனை ஒரு கடமையாக செய்வதற்கு மாறாக அன்பின் வெளிக்காட்டாக செய்தால் இந்தக் காரியங்களில் பிரச்சினைகள் எழும்புவது அரிது.a இத்தகைய பொருத்தமான சூழ்நிலைமைகளில், நெருக்கமான உறவுகள் திருமணக் கட்டைப் பலப்படுத்த உதவலாம்.—1 கொரிந்தியர் 7:2-5; 10:24.
19. எது ‘பூரண சற்குணத்தின் கட்டாக’ இருக்கிறது, திருமணத்தின்மீது அது என்ன நற்பாதிப்பை கொண்டிருக்கக்கூடும்?
19 கிறிஸ்தவ சபையில் அன்புதானே ‘பூரண சற்குணத்தின் கட்டாக’ இருக்கிறது. அன்பை வளர்த்துக்கொள்வதன் மூலம், தெய்வபயமுள்ள மணமான ஒரு தம்பதி ‘ஒருவரையொருவர் தாங்கி, ஒருவருக்கொருவர் மன்னிக்கக்கூடியவர்களாக’ இருக்கலாம். (கொலோசெயர் 3:13, 14) நியமஞ்சார்ந்த அன்பு பிறருடைய நலனை நாடுகிறது. (1 கொரிந்தியர் 13:4-8) அத்தகைய அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய திருமணக் கட்டைப் பலப்படுத்த அது உதவிசெய்யும். உங்களுடைய மணவாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்துங்கள். அவ்வாறு பொருத்தினால், உங்கள் திருமணம் நிலையான இணைப்பாக, யெகோவா தேவனுக்குத் துதியையும் கனத்தையும் கொண்டுவரும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்த அம்சத்தில் தம்பதிகள் எவ்வாறு பிரச்சினைகளை மேற்கொள்ளலாம் என்பதை ஆகஸ்ட் 1, 1993 காவற்கோபுரத்தில் வெளிவந்த “பேச்சுத்தொடர்பு—வெறும் பேச்சைவிட அதிகத்தை உட்படுத்துகிறது” என்ற கட்டுரை எடுத்துக்காட்டியது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ திருமணம் ஏன் ஒரு நிரந்தர கட்டாக இருக்கவேண்டும்?
◻ தலைமைத்துவத்தையும் கீழ்ப்பட்டிருத்தலையும் பற்றியதில் பைபிளின் கருத்தென்ன?
◻ திருமணத் தம்பதிகள் எவ்வாறு பேச்சுத்தொடர்பை முன்னேற்றுவிக்கலாம்?
◻ தம்பதிகள் எவ்வாறு கிறிஸ்தவ முறையில் அபிப்பிராய பேதங்களைக் கையாளலாம்?
◻ திருமணக் கட்டைப் பலப்படுத்த எது உதவிசெய்யும்?
[பக்கம் 12-ன் படம்]
ஒரு கிறிஸ்தவ கணவன் தன்னுடைய மனைவி உலகப்பிரகாரமான வேலை செய்துகொண்டிருந்தால், அவள் அதிக பாரமடைய விடமாட்டார்