உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 6/15 பக். 23-27
  • பிஜி தண்ணீரில் “மீன்பிடித்தல்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிஜி தண்ணீரில் “மீன்பிடித்தல்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • பிஜியின் ஒரு கிராமத்தில் “மீன்பிடித்தல்”
  • “மீன்பிடித்தல்” பாலினீஸிய பாணி
  • இந்திய சமுதாயத்துக்கு ஏற்ப நடத்தல்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 6/15 பக். 23-27

பிஜி தண்ணீரில் “மீன்பிடித்தல்”

பிஜி என்ற பெயர் தென் பெருங்கடல் பரதீஸின் காட்சிகளை மனதுக்குக் கொண்டுவருகிறது. நீலப்பச்சை தண்ணீர்கள், பவழக்கடல் பாறைத்தொடர்கள், பனைவகையை சேர்ந்த மரங்களின் ஊசலாட்டம், பச்சைப்பசேலென்றிருக்கிற மலைகள், வெப்ப மண்டல மீன்கள், வெளிநாட்டு பழங்கள் மற்றும் பூக்கள். தென் பசிபிக்கில் உள்ள நியூ ஜீலாந்துக்கு சுமார் 1,800 கிலோமீட்டர் வடக்கே 300 தீவுகளைக் கொண்ட இந்தத் தீவு கூட்டத்தில் இவையெல்லாவற்றையும் அபரிமிதமாகக் காணமுடியும். இதன் காரணமாகவே, பிஜி எல்லாருக்கும் ஒரு வெப்ப மண்டல பரதீஸாக இருக்கக்கூடும் என்று நீங்கள் ஒருவேளை ஒத்துக்கொள்வீர்கள்.

எனினும், பிஜி அதன் இயற்கை அழகைவிட அதிகமான கவர்ச்சியுடையதாக இருக்கிறது. ஆம், பவழக்கடல் பாறைத்தொடர்களில் மீன்கள் மிகப் பல்வேறுபட்ட வகைகளாக இருப்பதுபோல், நிலத்தின்மீதும் மிகப் பலதரப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒருவேளை பிஜியின் மனித இன கலப்பு தென் பசிபிக்கில் ஒப்பிடப்பட முடியாதளவுக்கு இருக்கின்றன. அதில் குடியிருக்கும் கிட்டத்தட்ட 7,50,000 பேர்களில் இரண்டு மிகப் பெரிய தொகுதிகள் உள்ளூர் பிஜியர்களாக இருக்கின்றனர். அவர்கள் மேலனீஸியர் ஆரம்பத்தை உடையவர்கள், மற்றும் பிரிட்டிஷ் குடியேற்ற காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட வேலையாட்களின் சந்ததியினரான, பிஜியில் பிறந்த இந்தியர்கள் ஆவர். ஆனால், அங்கு பனபன்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள், கில்பெர்ட்டர்கள், ரோட்டுமன்கள், டுவாலுவன்கள் மற்றும் ஏனையோரும் இருக்கிறார்கள்.

இந்தப் பல்வேறுபட்ட பண்பாட்டு சமூகத்தில், யெகோவாவின் சாட்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக ஒரு “மீன்பிடிக்கும்” வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். (மாற்கு 1:17) இத்தகைய வித்தியாசப்பட்ட சமுதாயத்தில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பது அக்கறையைத் தூண்டும் சவாலாய் இருக்கிறது. முதலாவது, மொழி மற்றும் பண்பாட்டு தடைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆங்கிலம் வணிக மொழியாக இருந்தாலும், பல சமயங்களில் பிஜியன், ஹிந்தி, ரோட்டுமன், அல்லது மற்ற மொழிகள் பயன்படுத்தப்படவேண்டும்.

வித்தியாசமான மத பின்னணிகளை உடையவர்களிடம் பேசுவதற்கு வித்தியாசமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பல உள்நாட்டு பிஜியர்களும் மற்ற தீவினரும் பல்வேறுபட்ட கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள்தொகை, இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகியோரால் ஆகியது. இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள். நகரங்களிலும் கிராமங்களிலும் சர்ச்சுகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், பிஜியின் இரண்டு மிகப் பெரிய தீவுகளில் இந்துக் கோவில்களும் முஸ்லீம் மசூதிகளும் ஒரு வித்தியாசமான காட்சியைக் கொடுக்கின்றன.

பல உள்ளூர் சாட்சிகள் மூன்று பிரதான மொழிகளைப் பேசுபவர்களாக வளர்ந்துவருகின்றனர்—ஆங்கிலம், பிஜியன், ஹிந்தி. இந்தத் திறமையைப் பெற்றிருப்பது, “மீன்பிடித்தல்” வேலைக்கு அதிக அனுகூலமானதாக இருக்கிறது. சிலசமயங்களில், ஒரு பிஜியன் சரளமாக ஹிந்தி பேசுவதையும், ஒரு இந்து சரளமாக பிஜியன் பேசுவதையும் கேட்டு மக்கள் ஆச்சரியப்படுகின்றனர். பண்பாடு, மதம், மொழி வித்தியாசங்கள் சமாளிக்கப்பட இருப்பதால், “[நற்செய்தியில்] மற்றவர்களோடு உடன்பங்காளியாவதற்கு” தக்கவாறு மாற்றியமைத்துக்கொள்ளும் அணுகுமுறை அவசியப்படுகிறது.—1 கொரிந்தியர் 9:23, NW.

பிஜியின் ஒரு கிராமத்தில் “மீன்பிடித்தல்”

உள்ளூர் பிஜியர்கள் சிநேகப்பான்மையுடைய, உபசரிக்கும்தன்மையுடைய மக்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான் இன யுத்தம் பெரியதாக நடந்தது என்பதை கற்பனைசெய்து பார்ப்பது கடினமாக இருக்கிறது. உண்மையில், ஐரோப்பியர்கள் முதலில் அறிய வந்தபோது, தன் இனத்தைச் சாப்பிடுபவர்கள் (Cannibal) என்ற தீவுகளாக பிஜி அறியப்பட்டிருந்தது. உயர் தலைவர் ஒருவர் எழும்பி, கிறிஸ்தவத்தைத் தழுவியதிலிருந்து, சண்டையும், தன் இனத்தைச் சாப்பிடுவதும் நின்றுவிட்டது. பல பேச்சு வழக்குகளில்தான் இன வேறுபாடுகள் இருக்கின்றன. பவ்வான் பேச்சுவழக்கு பெரும்பாலும் புரிந்துகொள்ளப்பட்டாலும், பல பேச்சுவழக்குகள் வேறுபட்ட மாவட்டங்களில் காணப்படுகின்றன.

தலைநகரம் சுவாவோடு, பிஜியெங்கும் பல நகரங்கள் இருக்கின்றன. அநேக பிஜியர்கள் தூராங்கா நி காரோ அல்லது தலைவர் என்ற ஒருவரின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் கிராம சமுதாயங்களில் வாழ்கிறார்கள். “மீன்பிடித்தல்” வேலையில் ஈடுபடுவதற்காக ஒரு கிராமத்துக்குள் நுழையும்போது, வேறுபட்ட பூரேக்கள் (bures), அல்லது உள்ளூர் வீடுகளைச் சந்திக்க அனுமதி வாங்குவதற்கு இந்த மனிதரை அணுகுவது வழக்கம். எப்போதாவதுதான், பெரும்பாலும் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக கிராம மதகுரு ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அனுமதி மறுக்கப்படுகிறது. பிஜியர்களின் ஒரு வீட்டுக்கு செல்வதென்பது எப்படிப்பட்டதாய் இருக்கிறது?

பூரேக்குள் போய், சம்மணமிட்டு தரையில் உட்காருகிறோம். மேலைநாடுகளில் அக்கறையைக் கவர்ந்திழுப்பதற்கு பயன்படுத்தப்படுவதுபோல மிகவும் ஜாக்கிரதையாய் வார்த்தைகளாக்கப்பட்ட அறிமுகம் இங்கு அவசியம் இல்லை. கடவுளைப் பற்றி பேச வரும் எவரும் வரவேற்கப்படுகின்றனர். பைபிளை எடுங்கள் என்று சொல்லும்போது, உடனே வீட்டுக்காரர் எழுந்து, “டூலோ” (கொஞ்சம் பொறுங்கள்) என்ற வார்த்தையை சொல்லி நிலையடுக்கிலிருந்து பிஜி மொழியில் ஒரு பைபிளை எட்டி எடுத்து, வந்திருக்கும் ஊழியர் சொல்லும் பல்வேறுபட்ட வசனங்களை ஆவலோடு படிக்கிறார். எனினும், உபசரிக்கும்தன்மையுள்ள, மரியாதைகாட்டும் பிஜி நாட்டினர் மனப்பான்மை வித்தியாசமான வகையில் சவாலளிப்பதாய் இருக்கிறது. வீட்டுக்காரரைச் சம்பாஷணைக்குள் கொண்டுவருவதற்குப் போதுமான விவேகமும் சாதுரியமும் தேவைப்படுகின்றன. சொல்லப்படுகிற விவாதத்தின் போக்கைப் பின்பற்ற வைப்பதற்கு அல்லது அவர்களுடைய சொந்த நம்பிக்கைகளைப் பைபிள் போதகங்களின் நம்பிக்கைகளோடு தொடர்புபடுத்திப் பார்க்க உதவிசெய்வதற்கு அவை தேவைப்படுகின்றன.

பிஜி வீட்டுக்காரர்கள் பொதுவாக, சமூக நிலைமைகள் அல்லது பிரச்னைகள் பற்றிப் பேசுவதைவிட, கோட்பாடு சம்பந்தப்பட்ட தலைப்புகளைப் பற்றி கலந்துபேச அதிகம் விரும்புகிறார்கள். உண்மையில், பிஜியில் உள்ள 1,400-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சுறுசுறுப்பான சாட்சிகளில் அநேகர், நரகம் எப்படிப்பட்ட இடம்? பரலோகத்துக்கு யார் போகிறார்கள்? பூமி அழிக்கப்படுமா? போன்ற இப்படிப்பட்ட கேள்விகளைக் கலந்துபேசியதால் பைபிள் சத்தியத்தின்மீது ஆர்வமுள்ளவர்களாக ஆனார்கள். எனினும், காண்பிக்கப்பட்ட ஆர்வத்தைத் தொடர்ந்து காத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையும், தளர்ச்சியடையாத போக்கும் தேவைப்படுகிறது. ஒத்துக்கொண்ட நேரத்தில் திரும்பிவரும்போது, வீட்டுக்காரர் பெரும்பாலும் டேட்டேவுக்கு (வயலுக்கு) அல்லது வேறு எங்கேயாவது போயிருப்பார். இல்லை, அவர்கள் நாம் விஜயம் செய்வதைப் போற்றவில்லை என்ற காரணத்தினால் அல்ல, ஆனால் நேரந்தவறாமல் இருப்பதைப் பற்றிய அவர்களுடைய மனநிலை வித்தியாசமாக இருப்பதுதான் காரணம். ஆனாலும், உள்ளூர் சாட்சிகளுக்கு இது விநோதமாய் தோன்றுவதில்லை. அவர்கள் மற்றொரு சமயத்தில் தளராது சந்திக்கின்றனர். தெரு பெயர்களோ வீட்டு எண்களோ எழுதுவதற்கு இருப்பதில்லை. எனவே மறுசந்திப்புகள் செய்ய ஒருவருக்கு நல்ல ஞாபகச் சக்தி தேவைப்படுகிறது.

“மீன்பிடித்தல்” பாலினீஸிய பாணி

இப்போது நாம், ரோட்டுமாவிலுள்ள சிறிய சபையை விஜயம்செய்யும் ஒரு பயண ஊழியரோடு அல்லது வட்டாரக் கண்காணியோடு, “மீன்பிடித்தல்” வேலையைச் செய்யலாம். எரிமலைசார்ந்த இந்தத் தீவுக்கூட்டம், பிஜியிலிருந்து 500 கிலோமீட்டர் வடக்கே இருக்கிறது. அங்குப் போவதற்கு, நாம் 19 இருக்கைகள்கொண்ட ஒரு விமானத்தில் பறந்துபோகிறோம். பெரிய தீவு பரப்பளவில் வெறும் 50 சதுர கிலோமீட்டர். இதனுடைய மொத்த மக்கள்தொகை சுமார் 3,000. ஒரு மண் ரோடு, கடற்கரையோரமாக அமைந்திருக்கிறது. அது சுமார் 20 கிராமங்களை ஒன்றுசேர்க்கிறது. ரோட்டுமா பிஜியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வித்தியாசமான பண்பாட்டையும் மொழியையும் உடையதாக இருக்கிறது. பாலினீஸிய ஆரம்பத்தைக் கொண்டிருப்பதால், அதன் மக்கள் மேலனீஸிய பிஜியர்களின் தோற்றத்திலிருந்து வேறுபடுகிறார்கள். மத அடிப்படையில் பேசினால், பெரும்பான்மையானோர் ரோம கத்தோலிக்கர்களாக அல்லது மெத்தடிஸ்ட் பிரிவினராக இருக்கின்றனர்.

விமானம் குறைவான உயரத்திற்கு தாழ்ந்துவந்து, தரையிறங்க முயலும்போது தீவின் செழிப்பான பச்சைத் தாவரங்களை நாம் காண்கிறோம். இறகுபோன்ற தென்னை மர ஓலைகள் எங்கும் காணப்படுகின்றன. வாரம் ஒருமுறை வரும் விமானத்தை வரவேற்க பெரிய கூட்டம் காத்திருக்கிறது. அவர்கள் மத்தியில் சாட்சிகள் தொகுதி ஒன்றும் இருக்கிறது. நாம் கனிவோடு வரவேற்கப்படுகிறோம். எங்கள் தாகத்தைத் தணிப்பதற்கு அநேக பெரிய இளநீர்களை எங்களுக்குத் தந்தனர்.

ஒரு குறுகிய பயணத்திற்குப் பின்பு, எங்களுடைய தங்கும் இடங்களுக்கு நாங்கள் வருகிறோம். நில சூளையில் சுடப்பட்ட உணவு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. வாட்டப்பட்ட பன்றிக்கறி, கோழிக்கறி, மீன் வருவல், நன்னீர்நண்டு வகை, உள்ளூர் வேர்வகை, சேம்பினக் கிழங்கு ஆகியவை எங்கள் முன் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. என்னே ஓர் விருந்து, இளம் தென்னை மரங்களுக்குக் கீழே என்னே ஓர் பரதீஸ்போன்ற அமைப்பு!

ரோட்டுமானில் ஹூவாங்கா என்றழைக்கப்படுகிற கிராமங்களில் உள்ள மக்களை அடுத்த நாள் நாங்கள் சந்தித்தோம். நாங்கள் முதல் வீட்டை அடைந்தபோது, ஒரு பன்றிக்குட்டி பன்றித்தொட்டியிலிருந்து கீறிச்சிட்டுக் கொண்டு குதித்தோடி போகிறது. நாங்கள் வருவதைக் கண்ட வீட்டுக்காரர் புன்முறுவலோடு, ரோட்டுமானில் “நாயியா!” என்று எங்களுக்கு வணக்கம் கூறிக்கொண்டே கதவைத் திறந்தார்; பின் உட்காரும்படி சொன்னார். எங்கள் முன்பு ஒரு தட்டு நிறைய பழுத்த வாழைப்பழங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. சில இளநீர்களை குடிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டோம். ரோட்டுமானில் உபசரிக்கும்தன்மை முதலிடத்தை வகிக்கிறது.

இங்கு அரியொணாமைக் கொள்கையினரோ பரிணாமவாதிகளோ இல்லை. அனைவரும் பைபிளை நம்புகின்றனர். பூமியைப் பற்றிய கடவுளுடைய நோக்கம் போன்ற தலைப்புகள் அவர்களுடைய அக்கறையை எளிதில் கவர்ந்துவிடுகின்றன. பூமி அழிக்கப்படப் போவதில்லை, மாறாக என்றென்றைக்கும் வாழப்போகும் நீதியான மக்களால் சுதந்தரிக்கப்பட்ட இடமாக அது இருக்கப்போகிறது என்று கற்றுக்கொள்வதில் வீட்டுக்காரர் ஆச்சரியப்படுகிறார். (சங்கீதம் 37:29) இந்தக் குறிப்பை நிரூபிக்கும் பைபிள் வசனங்கள் வாசிக்கப்படுகிறபோது அவர் உன்னிப்பாகப் பின்பற்றுகிறார். நாங்கள் கொடுக்கும் பைபிள் பிரசுரத்தை அவர் ஆவலோடு ஏற்றுக்கொள்கிறார். நாங்கள் திரும்பிப்போக தயாராகும்போது, வந்ததற்காக நன்றி சொல்லிவிட்டு, நாங்கள் திரும்பிப்போகும் வழியில் சாப்பிடுவதற்காக ஒரு பிளாஸ்டிக் பை நிறைய பழுத்த வாழைப்பழங்களை எங்களுக்குக் கொடுக்கிறார். இங்குப் பிரசங்கிப்பு செய்வதால், ஒருவர் மிக எளிதில் குண்டாகி விட முடியும்!

இந்திய சமுதாயத்துக்கு ஏற்ப நடத்தல்

தென் பசிபிக்கின் மற்ற அநேக தீவு நாடுகளும் பல இனத்தவரை உடையதாக இருந்தாலும், பிஜி இந்த வகையில் மிகச் சிறந்ததாக இருக்கிறது. மேலனீஸியன், மைக்ரோனீஸியன், பாலினீஸியன் பண்பாடுகளோடுகூட ஆசியாவிலிருந்து வந்த ஒன்றும் இருக்கிறது. 1879-க்கும் 1916-க்கும் இடையே, ஒப்பந்தத்துக்குட்பட்ட வேலையாட்கள் கரும்பு வயல்களில் வேலைசெய்ய இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தனர். இந்த ஏற்பாடு கிர்மிட் (ஒப்பந்தம்) என்றழைக்கப்பட்டது. இது ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பிஜிக்கு வருவதில் விளைவடைந்தது. இந்த வேலையாட்களின் சந்ததிகள் நாட்டின் மக்கள்தொகையில் பெரிய பகுதியை உருவாக்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பண்பாட்டை, மொழியை, மதத்தை தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிஜியின் முக்கியத் தீவினுடைய காற்றுக்கு ஒதுக்குப் புறமான பக்கத்தில் லேவுட்டோக்கா நகர் இருக்கிறது. இது பிஜி கரும்புத்தொழில் மையமாகும். நாட்டின் இந்திய மக்கள்தொகையின் பெரிய பகுதியினருக்கு இருப்பிடமாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய மூன்று சபைகளின் அங்கத்தினர்களும் தங்களுடைய “மீன்பிடிக்கும்” வேலையில் மிகவும் சமயோசிதமாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. வீட்டுக்கு வீடு போகும்போது, வீட்டுக்காரரின் இனம் மற்றும் மதத்திற்கு ஏற்றாற்போல, தலைப்புப்பொருள்களை மாற்றுவதற்கு ஒருவர் தயாராக இருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. லேவுட்டோக்காவுக்குச் சிறிது வெளியே கரும்பு வயல்களில் அங்கும் இங்குமாக சிதறியிருக்கும் வீடுகளைச் சந்திக்க உள்ளூர் சாட்சிகள் குழு ஒன்று போகையில் நாமும் அவர்களோடு சேர்ந்துகொள்ளலாம்.

நாங்கள் முதல் வீட்டை அணுகினபோது, காம்பவுண்டின் முன் ஒரு மூலையில் ஏதோ நீண்ட ஒரு மூங்கில் கம்பத்தில் சிவப்பு நிற சிறு துணிகள் உச்சியில் கட்டப்பட்டிருப்பதை காண்கிறோம். இது குடும்பத்தை இந்து என்று அடையாளப்படுத்துகிறது. அநேக இந்து வீடுகள் அவர்களுடைய கடவுட்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. பலர், பிரியமான கடவுளாக கிருஷ்ணா போன்ற கடவுளை வணங்குகின்றனர். பெரும்பாலும் அங்கு சிறிய கோவில் இருக்கிறது.a

பல இந்துக்கள் எல்லா மதங்களும் நல்லது என்றும், அவை வணங்குவதற்கான வித்தியாசமான வழிகள் என்றும் நம்புகின்றனர். எனவே, வீட்டுக்காரர் அமைதலாக கேட்டுவிட்டு, பிரசுரங்களை வாங்கிக்கொள்வார்; சிற்றுண்டிகளைப் பரிமாறுவார், அவருடைய கடமையைச் செய்ததாக அவர் உணர்வார். பொருத்தமான கேள்விகளை எழுப்பி, வீட்டுக்காரர்களை அதிக அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்குக் கவர்ந்திழுப்பதற்கு, அவர்களுடைய நம்பிக்கையின் பாகமாயிருக்கும் சில கதைகளை அறிந்திருப்பது அடிக்கடி உதவியளிப்பதாய் இருக்கிறது. உதாரணமாக, அவர்களுடைய கடவுட்கள், பல மக்கள் கேள்வி எழுப்பக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை அவர்களின் கதைகளில் சில காண்பிப்பதை அறிந்தவர்களாய், நாம் இவ்வாறு கேள்வி கேட்கலாம்: “இப்படிப்பட்ட செயலை உங்கள் மனைவி (கணவன்) செய்தால் அதை நீங்கள் அங்கீகரிப்பீர்களா?” பதில் பொதுவாக: “இல்லை, நிச்சயமாகவே இல்லை!” பின்பு, அந்த நபரிடம் இப்படியாகக் கேள்வி கேட்கலாம்: “சரி, ஒரு கடவுள் இப்படிச் செய்யலாமா?” அப்படிப்பட்ட கலந்தாலோசிப்புகள் பெரும்பாலும் பைபிளின் மதிப்பை எடுத்துக் காண்பிப்பதற்கு வாய்ப்புகளை அளிக்கின்றன.

மறுபிறவி கொள்கையில் நம்பிக்கை, இந்துக் கொள்கையின் மற்றொரு அம்சம், இது கலந்தாலோசிப்புக்கு ஒரு சுவாரஸ்யமான பொருள். நன்கு கல்விகற்ற ஒரு இந்துப் பெண் தன் தகப்பனை சிறிது காலத்திற்கு முன்பாக மரணத்தில் இழந்திருந்தாள், அவள் இவ்வாறு கேட்கப்பட்டாள்: “உங்கள் அப்பா முன்பு எப்படி இருந்தாரோ அதேபோல் நீங்கள் அவரைப் பார்க்க உங்களுக்கு விருப்பமா?” அவளுடைய பதில்: “ஆம், பார்த்தா நல்லது.” அவளின் பிரதிபலிப்பிலிருந்தும் அதைப் பின்தொடர்ந்த உரையாடலிலிருந்தும் அவளுடைய அப்பா வேறு உருவத்தில் உயிரோடிருக்கிறார், அவரை அவள் இனி ஒருபோதும் அறிய முடியாது என்ற நம்பிக்கையிலிருந்து அவளுக்கு திருப்தி இல்லை என்பது தெளிவாய் இருந்தது. ஆனால், பைபிளின் ஆச்சரியமான உயிர்த்தெழுதல் போதகம் அவளுடைய இருதயத்தைக் கவர்ந்தது.

சில இந்துக்கள் நிச்சயமாகவே கேள்விகளைக் கொண்டிருக்கின்றனர். திருப்திகரமான பதில்களுக்காகத் தேடவும் செய்கிறார்கள். இந்து வீட்டாரிடம் ஒரு சாட்சி போனபோது, அந்த மனிதர் இவ்வாறு கேட்டார்: “உங்களுடைய கடவுளின் பெயர் என்ன?” சாட்சி அவருக்கு சங்கீதம் 83:17-ஐ வாசித்து, கடவுளுடைய பெயர் யெகோவா என்று விளக்கினார். மேலும் நாம் ரட்சிப்பைப் பெற அவருடைய பெயரைச் சொல்லிக் கூப்பிடவேண்டும் என்று ரோமர் 10:13 சொல்கிறது என்றும் விளக்கினார். அந்த மனிதர் மனங்கவரப்பட்டார். அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினார். உண்மையில், அவர் அறிந்துகொள்ள ஆவலாய் இருந்தார். அவர் தன்னுடைய குடும்ப சிலைக்கு அதிக பக்தி காட்டிய தன் அப்பா, அதற்கு முன்பாக நின்று வணங்கியபின் நோய்வாய்ப்பட்டு, பின்னர் சீக்கிரத்திலேயே மரித்துவிட்டார் என்று சொன்னார். அதே காரியம்தான் அவருடைய மூத்த சகோதரருக்கு நடந்தது. பின்பு அவர் சொன்னார்: “அந்தச் சிலை எங்களுக்கு மரணத்தைக் கொண்டுவருகிறது, ஜீவனையல்ல. எனவே, அதை வணங்குவதில் ஏதோ தவறு இருக்கவேண்டும். ஒருவேளை இந்தக் கடவுள், யெகோவா, ஜீவனுக்குரிய பாதையைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவிசெய்யக்கூடும்.” ஆகவே, ஒரு பைபிள் படிப்பு அவரோடும், அவருடைய மனைவியோடும், அவருடைய இரண்டு குழந்தைகளோடும் ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் விரைவாக முன்னேறினார்கள், சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் பெற்றனர். அவர்கள் விக்கிரகங்களை விட்டுவிட்டு, இப்போது ஜீவனுள்ள கடவுளாகிய யெகோவாவின் வழியில் நடக்கிறார்கள்.

அடுத்ததாக, நாம் ஒரு முஸ்லீம் குடும்பத்தினரின் வீட்டுக்கு வருகிறோம். அதே உபசரிக்கும் தன்மை இங்கும் வெளிப்படுகிறது. உடனே குளிர்பானங்களை எங்கள் கைகளில் ஏந்திக்கொண்டிருப்போர்களாக நாங்கள் உட்கார்ந்தோம். மதப் படங்களை சுவர்களில் நாங்கள் காணவில்லை. ஆனால், அரபியமொழி எழுத்துக்களில் எழுதப்பட்ட ஒரு வசனம் சிறிய ஃபிரேம் இடப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. பைபிளுக்கும் குர்ஆனுக்கும் இடையே பொதுவான தொடர்பு இருப்பதாக நாங்கள் குறிப்பிடுகிறோம். அதாவது, கோத்திரப் பிதா ஆபிரகாம்மூலம் சகல தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவர் என்று கடவுள் அவரிடம் வாக்குக் கொடுத்திருந்தார். இந்த வாக்குறுதி யெகோவாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றமடைய இருக்கிறது. கடவுளுக்கு ஒரு குமாரன் இருக்கிறார் என்ற கருத்தை சில முஸ்லீம்கள் எதிர்ப்பார்கள். எனவே, முதல் மனிதன் ஆதாம் கடவுளால் படைக்கப்பட்டதன் காரணமாக கடவுளுடைய குமாரன் என்று எப்படி அழைக்கப்பட்டானோ அதேபோல் இயேசு கடவுளுடைய குமாரன். அப்படிப்பட்ட மகன்களைப் பிறப்பிக்க கடவுளுக்கு சொல்லர்த்தமான மனைவி தேவையில்லை. முஸ்லீம்கள் திரித்துவப் போதகத்தை நம்புவதில்லை. இதனால், யெகோவா தேவன் உன்னதமானவர் என்பதை எடுத்துக்காண்பிப்பதற்கு இப்படிப்பட்ட பொதுவான அடிப்படையைப் பயன்படுத்துகிறோம்.

இப்போது மதிய உணவு வேளை. எங்கள் தொகுதியின் அங்கத்தினர்கள் கரும்பு வயல்களிலிருந்து வெளியேறி, சாலைக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். நகரத்திற்கு திரும்பிவருவதற்காக பஸ்ஸிற்கு காத்துக்கொண்டிருக்க வருகின்றனர். சிறிது களைப்படைந்து இருந்தாலும், எல்லாரும் காலை “மீன்பிடித்தல்” செயல் பற்றி உற்சாகமாயிருக்கின்றனர். வித்தியாசமான சூழ்நிலைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் தக்கவராக வளைந்துகொடுப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி நன்றாகப் பலனளித்தது.

பிஜியின் தண்ணீர்களும் பாறைத்தொடர்களும் பலவிதமான மீன்களால் நிரம்பியிருக்கின்றன. வெற்றிபெற, பிஜிய ங்கோனன்டோ (மீனவன்) தன்னுடைய வேலையில் திறம்பட்டவனாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்த “மீன்பிடித்தல்” வேலைக்கும் அதுவே உண்மையாய் இருக்கிறது. கிறிஸ்தவ ‘மனுஷரைப் பிடிக்கிறவர்கள்’ திறமையுடையவர்களாகவும், பொது மக்களின் பல்வேறுபட்ட நம்பிக்கைகளுக்குத் தக்கவாறு தங்களுடைய பிரசங்கத்தையும் முறைப்படியான விவாதத்தையும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும். (மத்தேயு 4:19) இது பிஜியில் உண்மையில் அவசியம். மேலும் பலன்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர மாநாடுகளில் வெளிப்படையாகக் காணப்படுகிறது. அங்கு பிஜி நாட்டினர், இந்தியர்கள், ரோட்டுமான்கள், கதம்பமான இனப் பின்னணிகளை உடைய மக்களும், யெகோவா தேவனை ஐக்கியமாக வணங்குகிறார்கள். ஆம், பிஜி தண்ணீரில் நடக்கும் ‘மீன்பிடிக்கும்’ வேலையின்மீது அவருடைய ஆசீர்வாதம் இருக்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் என்ற புத்தகத்தில் பக்கம் 115-17-ஐப் பாருங்கள்.

[பக்கம் 23-ன் வரைப்படம்]

விடி லிவு

வனுவா லிவு

சுவா

லேவுட்டோக்கா

நடி

0 100 கி.மீ.

0 100 மைல்

18°

180°

[பக்கம் 24-ன் படம்]

பூரே, அல்லது உள்ளூர் வீடு

[பக்கம் 24-ன் படம்]

பிஜியில் ஒரு இந்துக் கோயில்

[பக்கம் 25-ன் படங்கள்]

பிஜியில் வெற்றிகரமாக மனிதர்களைப் ‘பிடித்தல்’

[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]

Fiji Visitors Bureau

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்