அவர்கள் எங்களுக்கு முன்மாதிரி வைத்தார்கள்
க்ரேக் ஸங்கர் சொன்னபடி
எட்டு ஆண்டுகளாக என் மனைவி கேயலும் நானும் பயனியர்களாக, யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களாக இருந்து வருகிறோம். கடந்த ஆறு ஆண்டுகளாக, ஆஸ்திரேலியாவின் மிகத் தொலைவான குடியேற்ற நாடுகளிலுள்ள பழங்குடியரான ஜனங்களுக்குள் சேவித்துக்கொண்டிருக்கிறோம். என் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் எங்களுக்கு வைத்த சிறந்த முன்மாதிரியைத்தானே பின்பற்றுகிறோம்.
என் பெற்றோரின் பெற்றோரைப் பற்றி முக்கியமாய்ச் சொல்லுகிறேன். நாங்கள் எப்பொழுதும் அவர்களை ஓப்பா, ஓமா என்று பாசத்துடன் அழைத்தோம், இது டச்சு மொழியில் தாத்தா பாட்டிமா என்பதற்குச் சமம். என் தாத்தா சார்ல்ஸ் ஹாரிஸ், மெல்போர்னில் இன்னும் வைராக்கியத்தோடு சேவை செய்துகொண்டிருக்கிறார், அங்கே அவர் ஏறக்குறைய 50 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.
பைபிள் சத்தியங்களைக் கற்றல்
ஓப்பா ஆஸ்திரேலியாவின் தீவு ஆட்சிப்பகுதியான டாஸ்மேனியாவிலுள்ள ஒரு சிறிய பட்டணத்தில் பிறந்தார். 1924-ல் அவர் 14 வயதாயிருக்கையில், அவருடைய தகப்பன் ஒரு ஏலத்தில் கப்பலோட்டியின் கடற்பெட்டி ஒன்றை வாங்கினார். ஆவிக்குரியப் பிரகாரமாய்ப் பேசவேண்டுமானால், அது உண்மையான பொக்கிஷ பெட்டியாக நிரூபித்தது, எவ்வாறெனில், அது, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் முதல் தலைமை பொறுப்பாளரான சார்ல்ஸ் டேஸ் ரஸல் எழுதின அடுக்கான புத்தகங்கள் அடங்கியதாக இருந்தது.
ஓப்பாவின் தகப்பன் அந்தப் புத்தகங்களில் அவ்வளவு அதிகமாய் அக்கறையுடையவராகத் தோன்றவில்லை, ஆனால் ஓப்பா அவற்றை வாசிக்கத் தொடங்கி, அவை இன்றியமையாத பைபிள் சத்தியங்கள் அடங்கியவையாக இருந்தனவென உடனடியாகக் கண்டுணர்ந்தார். ஆகவே சர்வதேச பைபிள் மாணாக்கர்களைக் கண்டுபிடிக்கும்படி தேடத் தொடங்கினார், இவர்கள் அந்தப் புத்தகப் பிரசுரிப்போரின் பிரதிநிதிகள், இப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்படுகின்றனர். தான் கற்றுக்கொண்டிருந்த பைபிள் சத்தியங்களைப்பற்றி மேலுமான விளக்கங்களைப் பெறக்கூடும்படி அவர்களிடம் பேச விரும்பினார்.
பலரிடம் விசாரித்த பின்பு, மற்றவர்களுக்குக் கற்பிப்பதில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டுக்கொண்டிருந்த, முதிர்வயதான மூன்று பெண்களைக் கண்டுபிடித்தார். இளம் சார்ல்ஸின்பேரில் அவர்கள் மிகுந்த செல்வாக்குடையோராக இருந்தனர். முடிவில், 1930-ல், அவர் யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்து தண்ணீரில் முழுக்காட்டப்பட்டார். இறைச்சிக் கடைக்காரனாகத் தன் வேலையை அவர் விட்டுவிட்டு வடக்கே சிட்னிக்குப் பயணப்பட்டார், அங்கே முழுநேர சுவிசேஷகனாக ஒரு நியமிப்பைப் பெற்றார்.
ஆஸ்திரேலியாவில் பயனியர் ஊழியம்
அடுத்த ஒருசில ஆண்டுகளின்போது, சார்ல்ஸ் பிரசங்கம் செய்த பிராந்தியங்கள் சிட்னியின் கடற்கரை புறநகரான பாண்டையும் அதோடுகூட நியூ செளத் வேல்ஸ் பிரதேசத்திலுள்ள நாட்டுப்புறப் பகுதிகளும் உட்பட்டிருந்தன. பின்பு கண்டத்தின் மறுபுறத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் அவருக்கு நியமிக்கப்பட்டது. ஆறு மாதங்களாகப் பெர்த்தின் வியாபார பிராந்தியத்தில் அவர் சாட்சி கொடுத்தார், பின்பு, வேறு இரண்டு பயனியர்களோடுகூட வடமேற்கு ஆஸ்திரேலியாவின் அவாந்திரவெளிப் பிரதேசங்கள் அவருக்கு நியமிக்கப்பட்டன.
ஆர்த்தர் உவில்லிஸ், ஜார்ஜ் ரோல்ஸ்டன், சார்ல்ஸ் ஆகிய இம்மூவரின் பிரசங்க நியமிப்பிடம் இத்தாலியின் அளவுக்கு நான்கு மடங்குகள் பெரிதாக இருந்தது! ஜனக்குடியிருப்பு சிதறியதாய்ச் சொற்பமாகவும், நாட்டுப்புற சூழிடம் வறண்ட வெற்றிடமாகவும், வெப்பம் கடுமையாகவும் இருந்தது. ஆட்டுக்கிடைவெளி மனைகள் என்றறியப்பட்ட கால்நடை பண்ணைகளுக்கிடையே 500 கிலோமீட்டருக்கு மேலான தூரம் சிலசமயங்களில் பயணப்படும்படி தேவைப்பட்டது. அவர்கள் பயன்படுத்தின ஊர்தி 1930-ன் தராதரங்களோடு ஒப்பிடினும் பாழடைந்த நிலையில் இருந்தது. ஆனால் அவர்களுக்கு உறுதியான விசுவாசமும் மிகுந்த தீர்மானமும் இருந்தன.
ஒடுக்கமானவையும் பள்ளங்கள் உண்டாகியவையுமான மண் பாதைகள் ஒட்டகத் தடங்களால் அடிக்கடிக் குறுக்கிடப்பட்டன, மேலும் அங்குமிங்கும் (வண்டல் மண்ணான) நுண்ணிய தூசி ஆபத்தான மர அடிக்கட்டைகளை மூடிமறைத்திருந்தது. மோட்டார் வண்டியின் அதிர்ச்சி-தாங்கும் வில்லமைப்புகள் அடிக்கடி உடைந்தன. இரண்டு சந்தர்ப்பங்களில் பின் சக்கரத்தின் அச்சு முறிந்தது, மேலும் பல தடவைகளில் சக்கர டயர்கள் பிளந்தன. தங்கள் பயணத்தைத் தொடரும்படி அந்தப் பயனியர்கள் பழைய டயர்களிலிருந்து பாகங்களை உட்செருகி, இணைக்கும் சாதனங்களைக்கொண்டு ஏற்கெனவேயுள்ள டயர்களோடு ஒன்றிணைத்தனர்.
இத்தகைய கடினமான நிலைமைகளின்கீழ் விடாது தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்படி எது அவர்களுக்கு ஊக்கமருளியதென, நான் சிறுவனாக இருந்தபோது ஓப்பாவைக் கேட்டேன். தாங்கள் தனிமையாக இருந்தது யெகோவாவிடம் நெருங்கியிருக்கச் செய்ததென அவர் விளக்கினார். சிலசமயங்களில் உடல்சார்ந்த இக்கட்டு, ஆவிக்குரிய ஆசீர்வாதமாயிற்றென அவர் கூறினார்.
இத்தனையனேக மக்கள் பொருளுடைமைகளைத் திரட்டுவதில் மட்டுக்குமீறி அக்கறையுடையோராகத் தோன்றுவதைக் குறித்து, ஓப்பா சற்றேனும் மேம்பாடோ சுயநீதியோ இல்லாமல், ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். “கூடியவரை சொற்பமான உடைமைகளோடு வாழ்க்கை நடத்துவதே மிக மேம்பட்டது. தேவைப்பட்டபோது இயேசு திறந்தவெளியில் தூங்க மனமுள்ளவராக இருந்தாரெனில், நம்முடைய ஊழிய நியமிப்பு தேவைப்படுத்தினால் அவ்வாறு செய்வதற்கு நாமும் மகிழ்ச்சியுடையோராக இருக்க வேண்டும்” என அவர் எனக்கு நினைப்பூட்டினார். (மத்தேயு 8:19, 20) நிச்சயமாகவே, அவரும் அவருடைய கூட்டாளிகளும் அவ்வாறு செய்தனர்.
அந்நிய நாட்டு ஊழியத்துக்கு அழைக்கப்பட்டது
1935-ல் ஓப்பா புதிய பிரசங்க ஊழிய நியமிப்பைப் பெற்றார்—தென் பஸிபிக் தீவுகளிலுள்ளோருக்குச் சாட்சிபகருவது. இன்னும் ஆறுபேரோடு, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் 16 மீட்டர் ஒளிதாங்கி (Lightbearer) என்ற பாய்மரக் கப்பலில் கடற்பிரயாணம் செய்தார்.
ஒரு சமயத்தில், ஆஸ்திரேலியாவின் வடக்கேயுள்ள பவழக் கடலில் இருக்கையில், ஒளிதாங்கியின் துணை இயந்திரம் கெட்டுவிட்டது. காற்று எதுவுமில்லை, ஆகவே கரையிலிருந்து பல கிலோமீட்டருக்கப்பால் செயலற்ற இக்கட்டான நிலையில் விடப்பட்டனர். கிரேட் பாரியர் பவழப்பாறையில் கப்பல் மோதி கவிழும் ஆபத்து இருந்தபோதிலும் கடலின் மிகச் சிறந்த அமைதி ஓப்பாவின் மனதை ஆழமாய்க் கவர்ந்தது. தன் டைரியில் இவ்வாறு எழுதினார்: “அந்த அமைதியான கடலில் ஒவ்வொரு சாயங்காலத்திலும் சூரியன் அஸ்தமித்ததை நான் ஒருபோதும் மறந்துவிடமாட்டேன். அந்தக் காட்சி அவ்வளவு அழகியதாக இருந்ததால் அது என் நினைவில் எல்லா காலத்துக்குமாக ஆழமாய்ப் பதியவைக்கப்பட்டுள்ளது.”
மகிழ்ச்சியுண்டாக, அவர்கள் அந்தப் பவழப்பாறையை நோக்கி மிதக்கடித்துக்கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக, காற்று திரும்பிவந்தது, பாய்விரித்து பாப்புவா நியூ கினீயிலுள்ள போர்ட் மோர்ஸ்பிக்குள் பத்திரமாகச் சென்றனர், அங்கே தங்கள் இயந்திரத்தைப் பழுதுபார்த்து சரிசெய்தனர். போர்ட் மோர்ஸ்பியிலிருந்து தர்ஸ்டே தீவுக்கும் அங்கிருந்து இந்தோனீஷியாவின் ஒரு பெரிய தீவாகிய ஜாவாவுக்கும் கப்பலைச் செலுத்தினர். “நிலநடுக்கோட்டின் குறுக்காகத் தொங்கவிடப்பட்ட பவழ ஆரம்” என விவரிக்கப்பட்டிருக்கிற இந்த நாட்டின்பேரில் ஓப்பாவுக்கு ஆழ்ந்த விருப்பமுண்டாயிற்று. அந்தச் சமயத்தில் இந்தோனீஷியா டச்சுக்காரரின் குடியேற்ற நாடாக இருந்தது, ஆகவே தாத்தா டச்சு மற்றும் இந்தோனீஷிய மொழிகளைக் கற்றார். எனினும் தன் பிரசங்க ஊழியத்தில் அவர் அளித்த புத்தகங்கள்: டச்சு, இந்தோனீஷியன், சீனமொழி, ஆங்கிலம், அரபியமொழி ஆகிய ஐந்து மொழிகளில் இருந்தன.
பைபிள் புத்தகங்களை அளிப்பதில் ஓப்பா வெகு வெற்றிகரமாக இருந்தார். பட்டாவியாவில் (இப்பொழுது ஜகார்த்தா) உவாட்ச் டவர் புத்தகக் கிடங்கின் பொறுப்பேற்றிருந்த க்ளெம் டேஷாண், நம்முடைய பிரசங்க வேலையை மறைவாய்க் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ஒரு டச்சு அதிகாரிக்கு முன்பாக வரும்படி அழைக்கப்பட்டார். அந்த அதிகாரி அவரை: “கிழக்கு ஜாவாவில் எத்தனை ஆட்கள் வேலைசெய்யும்படி நீ வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
“ஒரே ஒருவர்” என சகோதரர் டேஷாண் பதில் சொன்னார்.
“நான் அதை நம்பும்படி நீ எதிர்பார்க்கிறாயா? எங்கும் வினியோகிக்கப்பட்டிருக்கிற உங்கள் புத்தகங்களின் தொகையைக்கொண்டு மதிப்பிட்டால், ஒரு பெரிய சேனையான வேலையாளர்களை கட்டாயமாக நீ கொண்டிருக்க வேண்டும்!” என அந்த அதிகாரி கோபமாகக் கத்தினார்.
அது தன் வாழ்க்கையில் மிக அதிகத் திருப்திதரும் புகழுரைகளில் ஒன்றென ஓப்பா உணருகிறார். ஆனால் நிச்சயமாகவே அதற்கு அவர் தகுதியுடையவர், ஏனெனில், ஒவ்வொரு மாதமும் 1,500-க்கும் 3,000-த்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான புத்தகங்களை அளிப்பது அவருக்குச் சாதாரணமாக இருந்தது.
திருமணம், தடையுத்தரவு, மற்றும் போர்
டிசம்பர் 1938-ல் வில்ஹெல்மீனா என்ற பெயருடைய ஓர் இளம் இந்தோனீஷியப் பெண்ணை ஓப்பா மணம் செய்தார், இவர் என் பாட்டியாரானார். ஓமா, அல்லது பாட்டிமா, தயவும், கனிவும், சுறுசுறுப்பும், அமைதியாகப் பேசுபவருமாக இருந்தார். எனக்குத் தெரியும், ஏனெனில் நான் சிறுபிள்ளையாக இருந்தபோது அவர் என் நெருங்கிய நண்பராக இருந்தார்.
அவர்களுடைய திருமணத்துக்குப் பின்பு ஓப்பாவும் ஓமாவும் தங்கள் பயனியர் சேவையை ஒன்றாகத் தொடர்ந்து செய்தனர். இதற்குள்ளாக, ஒளிதாங்கியில் பயணம் செய்த மற்றவர்கள் உலகத்தின் மற்றப் பாகங்களுக்குச் சிதறிச் சென்றனர் அல்லது வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் ஓப்பா இந்தோனீஷியாவைத் தன் வீடாக்கிக் கொண்டார், அங்கு நிலைத்திருக்கவும் தீர்மானித்தார்.
இரண்டாம் உலகப்போர் நெருங்கியபோது, இந்தோனீஷியாவை ஆண்டுகொண்டிருந்த டச்சு அரசாங்கம், மதகுருக்களின் வற்புறுத்தலினால், யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கையின்பேரில் கட்டுப்பாடுகளை வைத்து, முடிவில் நம் ஊழியத்தைத் தடையுத்தரவிட்டது. ஆகவே பிரசங்க ஊழியம், பைபிளை மாத்திரமே பயன்படுத்தி, இக்கட்டான நிலையில் செய்யப்பட்டது, ஓப்பாவும் ஓமாவும் சந்தித்த ஏறக்குறைய ஒவ்வொரு பட்டணத்திலும் அதிகாரிகளுக்கு முன்பாக அவர்கள் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பெரும் குற்றவாளிகளைப்போல் அவர்கள் நடத்தப்பட்டனர். அந்தத் தடையுத்தரவு போடப்பட்ட பின்பு சீக்கிரத்திலேயே ஓமாவினுடைய சகோதரியின் கணவர் கிறிஸ்தவ நடுநிலை வகிப்புக்குரிய அவருடைய நிலைநிற்கையினிமித்தம் சிறையிலடைக்கப்பட்டார். டச்சு சிறை ஒன்றில் அவர் மரித்தார்.
ஊர்தியோடு இணைத்துக் கட்டி மூடப்பட்ட வண்டியொன்றில் ஓப்பாவும் ஓமாவும் வாழ்ந்தனர். இடம்பெயர்ந்து செல்லக்கூடிய இந்த ஊர்திவீட்டைப் பயன்படுத்தி ஜாவா முழுவதிலும் அவர்கள் பிரசங்க ஊழியத்தைச் செய்தனர். 1940-ல் ஜப்பானிய இராணுவ படையெடுப்பு பயமுறுத்தல் எழும்பின சமயத்தில், அவர்கள் ஒரு மகளின் பிறப்பால் ஆசீர்வாதத்தைப் பெற்றனர், அந்த மகளே என் தாயாரானார். அந்தக் குழந்தைக்கு, J. F. ரதர்ஃபோர்டின் பெயரால், விக்ட்ரி எனப் பெயரிட்டனர், குழந்தை பிறக்கும் சமயம் வரையாக அவர்கள் விடாது பயனியர் செய்துகொண்டிருந்தனர்.
1942-ன் தொடக்கத்தில், ஓப்பாவும் ஓமாவும் விக்ட்ரியும், போர்னியோவிலிருந்து திரும்பிவந்துகொண்டிருந்த, ஒரு டச்சு சரக்குக் கப்பலில் இருந்தபோது, ஒரு ஜப்பானிய போர்க்கப்பலிலிருந்து உரத்த பீரங்கி வெடி சத்தம் ஒன்று கேட்டது. விளக்குகளெல்லாம் அணைந்துவிட்டன, ஜனங்கள் வீறிட்டுக் கத்தினர். இவ்வாறு போர் என் குடும்பத்தாரின் வாழ்க்கைக்குள் எட்டினது. அவர்கள் பத்திரமாய்த் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தபோதிலும், ஒருசில நாட்களுக்குப்பின்தானே ஜப்பானியர் ஜாவாவுக்குள் படையெடுத்தனர், டச்சு அதிகாரி ஒருவர் ஓப்பாவும் ஓமாவும் இருக்கும் இடத்தைப்பற்றிய விவரங்களை ஜப்பானிய போர்வீரர்களுக்குத் தெரிவித்துவிட்டார்.
ஜப்பானியர் அவர்களைக் கண்டுபிடித்தபோது, விக்ட்ரியின் விளையாட்டுப் பொருட்களும் உட்பட அவர்கள் உடைமைகள் முழுவதையும் அவர்களிடமிருந்து அபகரித்துவிட்டு வெவ்வேறுபட்ட இரண்டு கான்சன்ட்ரேஷன் முகாம்களுக்கு அவர்களைக் கொண்டுசென்றனர். விக்ட்ரி ஓமாவுடன் தங்கும்படி அனுமதிக்கப்பட்டாள், அடுத்த மூன்றரை ஆண்டுகளாக ஓப்பா அவர்களைக் காணவில்லை.
கான்சன்ட்ரேஷன் முகாம்களில் வாழ்க்கை
சிறைப்பட்ட நிலையிலிருந்தபோது, ஓப்பா ஒரு பட்டணத்திலிருந்து மறுபட்டணத்துக்கு—சுரபையாவிலிருந்து எங்கேவிக்கும், பாண்டுங்குக்கும், முடிவில் சிம்மாஹிக்குமாக—மாற்றப்பட்டுக்கொண்டிருந்தார். இப்படி இடைவிடாது மாற்றப்பட்டுக்கொண்டிருந்தது, தப்பியோடுவதற்காக ஒன்றிணைந்து திட்டமிடும் எந்த முயற்சியையும் குலைப்பதற்காகும். கைதிகள் பெரும்பாலும் டச்சுக்காரரும், ஒருசில பிரிட்டிஷாரும் ஆஸ்திரேலியர் சிலருமாக இருந்தனர். இந்த முகாம்களில் இருந்தபோது, முடிவெட்டும் தொழிலை ஓப்பா கற்றார், இந்தத் திறமையை அவர் இடையிடையே எப்போதாவது இன்னும் பயன்படுத்துகிறார். அவர் வைத்துக்கொள்ளும்படி அனுமதிக்கப்பட்ட ஒரே மதப் புத்தகம் பைபிள்—அவருடைய கிங் ஜேம்ஸ் வர்ஷன்.
இதற்கிடையில், ஓமாவும் விக்ட்ரியுங்கூட வெவ்வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டு வந்தனர். இந்த முகாம்களில் பெண்கள் வெளியே “சமூக சேவைகள்” செய்யும்படி முகாம் அதிகாரியால் கட்டளையிடப்பட்டனர். எனினும், ஏதோ காரணத்திற்காக, ஓமா ஒருபோதும் தெரிந்துகொள்ளப்படவில்லை. அந்தப் பெண்கள் ஜப்பானிய போர்ச் சேவகருக்கு பரத்தைகளாகச் சேவிக்கும்படி வெளியே கொண்டுசெல்லப்பட்டனரென பின்னால் ஓமாவுக்குத் தெரியவந்தது.
ஜப்பானியர் பெண் பிள்ளைகளை தயவுடன் கருதாததால், ஓமா விக்ட்ரியை ஒரு பையனைப்போல் உடுத்தி அவளுடைய முடியைக் குட்டையாகக் கத்தரித்து விட்டிருந்தார். விக்ட்ரி என்ற பெயர் எதைக் குறித்தது—ஜப்பானிய பேரரசின் படைக்கு வெற்றியா அல்லது அமெரிக்கர்களுக்கு வெற்றியா என முகாம் தலைமை அதிகாரி தெரிந்துகொள்ள விரும்பினபோது விக்ட்ரி என்ற இந்தப் பெயர் பெரும் தொந்தரவை உண்டுபண்ணினது.
“பூமிக்குரிய எல்லா அரசாங்கங்களின்மீதும் கடவுளுடைய ராஜ்யத்திற்கு வெற்றி!” என என் பாட்டியார் பெருமிதத்துடன் பதிலுரைத்தார்.
“ஜப்பானிய பேரரசின் படைக்கு வெற்றி” என்று சொல்ல மறுத்ததற்குத் தண்டனையாக, ஓமாவும் அவருடைய ஐந்து வயது மகளும் வெப்பமண்டல கடும் வெயிலில் தலை குனியாமல், எட்டு மணிநேரங்கள் நேராக நிமிர்ந்து நிற்கும்படி வற்புறுத்தப்பட்டனர். நிழலோ தண்ணீரோ உட்காருவதோ முன்னால் குனிவதோ எதுவும் கூடாது. ஆனால் யெகோவாவின் உதவியினால் அவர்கள் இந்தப் பயங்கர கடும் சோதனையில் உயிர்தப்பிப் பிழைத்தனர்.
ஓமா சிறைப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு சென்றபின், அவருடைய கணவர் இறந்துவிட்டதாக அந்த முகாம் அதிகாரி அவளிடம் சொன்னார்! ஓமா விசனத்துடன் ஓப்பாவின் படத்தைத் தன் உருக்குலைந்த கைப்பெட்டிக்குள் அடியில் வைத்துவிட்டு, தன் ஆழ்ந்த மனத்துயரத்தின் மத்தியிலும் தொடர்ந்து செயலாற்றினார்.
சிறைச்சாலை முகாம் வாழ்க்கை கடினமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் அன்றாட உணவுப்படியானது, காலையுணவு ஒரு சிறுகுவளை மரவள்ளிக் கிழங்கு, நண்பகலுணவு, சவ்வரிசியால் செய்யப்பட்ட 200 கிராம் அளவான ரொட்டி, மாலையுணவு, காய்கறி வடிநீரில் ஒரு சிறுகுவளை அரிசி சாதம். இத்தகைய மிகக் குறைவான உணவுப்படிகளின் காரணமாகச் சத்துக்குறைவு சாதாரணமாக இருந்தது, சீதபேதிக்காளானோர் அன்றாடம் மரித்துக்கொண்டிருந்தனர்.
ஓப்பா சிறையிலிருக்கையில், ஊட்டக் குறைவினால் மூளையைத் தாக்கும் தோல்வெடிப்பு நோயாலும், சத்துக்குறைவாலுண்டாகும் எடீனா (பட்டினி நோய்) என்ற நோயாலும் அவர் துன்பமனுபவித்தார். ஓமாவுங்கூட தன் சிறு பெண் பட்டினியால் சாவதைத் தவிர்க்க விக்ட்ரிக்குத் தன் உணவை அடிக்கடி கொடுத்துவிட்டதால் பெரும்பாலும் சாகும் நிலைக்குள்ளானார். கொடுமையும் பட்டினியும் இடைவிடாது இணைந்திருந்துகொண்டிருந்தன. தங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் நெருங்கியவர்களாய்த் தங்களை வைத்துக்கொண்டதால் மாத்திரமே அவர்கள் உயிர்தப்பிப் பிழைத்திருக்க முடிந்தது.
ஓப்பாவுக்கு பெருவிருப்பமான கூற்றுகளில் ஒன்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது: “தெய்வீகரான யெகோவாவுடன் ஒத்திசைவில் இருப்பதே சுதந்திரம்.” இவ்வாறு, ஓப்பா, கடுகடுத்த சிறையிருப்பை சகித்துக்கொண்டிருக்கையிலுங்கூட மெய்யான ஒரு கருத்தில் சுதந்திரமாய் இருப்பவராகத் தன்னைக் கருதினார். யெகோவாவின்பேரில் அவருக்கும் ஓமாவுக்கும் இருந்த அன்பு ‘சகலத்தையும் சகிக்க’ அவர்களுக்கு நிச்சயமாகவே உதவிசெய்தது. (1 கொரிந்தியர் 13:7) கடவுளுடன் அந்த நெருங்கிய உறவையே கேயலும் நானும் இப்போது காத்துவர நாடுகிறோம்.
விடுதலையும் குறிப்பிடத்தக்க ஒன்றுசேருதலும்
முடிவில், இரண்டாம் உலகப் போர் 1945-ல் முடிவடைந்தது. ஜப்பான் சரணடைந்த பின்பு சீக்கிரத்திலேயே, ஓப்பா ரயில் வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டார். ஜகார்த்தாவிலிருந்து பாண்டுங்குக்குப் போகும் வழியில், அந்த ரயில் வண்டி இந்தோனீஷியப் போர்வீரர்களால் நிறுத்தப்பட்டது. ஜப்பானியருடன் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தபோதிலும், டச்சுக்காரரிடமிருந்து சுதந்திரத்தைப் பெறும்படி இந்தோனீஷியர் போரிட்டுக்கொண்டிருந்தனர். ரயில் வண்டியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டதால் ஆச்சரியமுற்ற ஓப்பா ஆங்கிலத்தில் பேசுவதற்கு மறந்து டச்சு மொழியில் பேசத் தொடங்கினார். இந்தோனீஷியருக்கு டச்சு சத்துருவின் மொழியாக இருந்தது, சத்துரு கொல்லப்பட வேண்டும்.
நல்ல காலமாக, அந்தப் போர்வீரர்கள் ஓப்பாவைச் சோதனையிட்டுக்கொண்டிருக்கையில் அவருடைய வண்டி ஓட்டுனருக்கான ஆஸ்திரேலிய உரிமத்தை கண்டனர், இதைப்பற்றி அவர் முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தார். மகிழ்ச்சியுண்டாக, இந்தோனீஷியர் ஆஸ்திரேலியாவுடன் போரிடுவோராக இல்லை. இன்றுவரையாக ஓப்பா, தான் ஆஸ்திரேலிய குடிமகனாயிருந்ததை நிரூபித்த அந்த உரிமத்தின் கண்டுபிடிப்பை கடவுளுடைய தலையிடுதலாகக் கருதுகிறார், ஏனெனில் அதே நிறுத்தலிடத்தில் சில மணிநேரங்களுக்குப்பின் தானே அதே படைவீரர் ரயிலில் கடந்து சென்ற 12 டச்சுக்காரரைக் கொன்றனர்.
இந்தச் சம்பவத்துக்குச் சிறிது காலத்துக்குப் பின், ஓமாவும் விக்ட்ரியும் போரால் பாழடைந்த பகுதிகளிலிருந்து தங்களைக் கொண்டுசெல்ல ஊர்திக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது, முடிவற்ற வரிசையாக ஊர்திகள் போர்வீரர்களையும் பொது அலுவலர்களையும் சுமந்துசென்றுகொண்டிருந்தன. எந்தக் காரணமும் தெரியாமல், திடீரென்று அந்த வரிசை நின்றுவிட்டது. ஓமா மிக அருகிலிருந்த ஓர் ஊர்தியின் திறந்த பின்புறத்தில் பார்வை செலுத்த நேரிட்டது, அங்கே, தனக்கு ஆச்சரியமுண்டாக, மெலிந்தவராயிருந்த ஒரு மனிதனைக் கண்டு அவரை உடனடியாக அடையாளங்கண்டுகொண்டார். அவர் அவளுடைய கணவர்! அவர்கள் திரும்ப ஒன்றுசேர்ந்ததன் உணர்ச்சிக்கிளர்ச்சியை சொற்களால் விவரிக்க முடியாது.
திரும்பவும் ஆஸ்திரேலியாவில்
இந்தோனீஷியாவில் 11 ஆண்டுகள் வாழ்ந்த பின்பு, பாட்டனார் தன் குடும்பத்துடன் 1946-ல் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச்சென்றபோது வாழ்க்கை அவர்களுக்கு எளிதாக இல்லை. அவர்கள் போர் அகதிகளாகத் திரும்பிச்சென்றனர்—கைவிடப்பட்டோராகவும், உணவற்றோராகவும், உள்ளூர் ஆட்கள் பலரால் சந்தேகத்துடன் கருதப்படுவோராகவும் இருந்தனர். ஓமாவும் விக்ட்ரியும் ஆசிய நாட்டிலிருந்து வந்து குடியேறியவராக இன வேறுபாடு காட்டி நடத்தப்படுவதைப் பொறுமையோடு சகிக்க வேண்டியதாக இருந்தது. தன் குடும்பத்தைப் பராமரிக்கவும் அவர்களுக்கு ஒரு வீட்டை அளிக்கவும் ஓப்பா கடினமாக நெடுநேரம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த இக்கட்டுகளின் மத்தியிலும் அவர்கள் சகித்து நிலைத்திருந்து தங்கள் ஆவிக்குரியத்தன்மை பாதிக்கப்படாமல் பிழைத்தனர்.
இப்பொழுது, 48-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின், ஓப்பா மெல்போர்னில் வாழ்கிறார், அங்கே அவர் வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் இன்னும் பங்குகொள்கிறார். விக்ட்ரியும் அவளுடைய பிள்ளைகளும் சத்தியத்தை ஏற்று, தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் முறையில் முழுநேர பயனியர் சேவையில் பிரவேசிப்பதைக் கண்டிருக்கிறார்.
என் தகப்பனாகிய டெஸ் ஸங்கரும் விக்ட்ரியும் 1950-ன் தொடக்கத்தில் முழுக்காட்டப்பட்டனர், டெஸ் 1958-ல் ஆஸ்திரேலிய பெத்தேல் குடும்பத்தின் உறுப்பினரானார். விசேஷித்தப் பயனியராகச் சேவித்துக்கொண்டிருந்த விக்ட்ரியை அவர் மணம் செய்த பின்பு, அவர்கள் சிறிதுகாலம் பயனியர் செய்தனர், பின்பு பயண ஊழியத்தை ஏற்கும்படி அழைக்கப்பட்டனர். பிறகு நான் பிறந்தேன், என்னை வளர்க்கும்படி பயண ஊழியத்தை அவர்கள் விட்டுவிட வேண்டியிருந்தது. எனினும், 27 ஆண்டுகளுக்குப் பின்னும், அப்பா இன்னும் பயனியர் சேவை செய்கிறார்.
1990-ன் தொடக்கத்தில் ஓமா, என் தாய் வளர்க்கப்பட்ட அதே வீட்டில் சமாதானமாய் மரித்துவிட்டார். நானுங்கூட இதே மெல்போர்ன் வீட்டில் வளர்க்கப்பட்டேன், என் இளம் சகோதரனும் சகோதரியும்கூட அங்கு வளர்க்கப்பட்டனர். ஒரு வீட்டை ஒன்றாகப் பகிர்ந்துகொள்வது எங்கள் குடும்பத்துக்கு மெய்யான ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது. சிலசமயங்களில் இடநெருக்கடி அதிகமாயிருந்தது, ஆனால் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாக எனக்கு ஒருபோதும் நினைவில்லை. எங்கள் திருமணத்தின் முதல் நான்கு ஆண்டுகளின்போதும், என் மனைவி கேயல் அங்கே ஓரிடத்தைப் பெற்றாள், அது அதிக பிடித்தமான இடமாக அவளுக்கிருந்தது. எங்கள் புதிய ஊழிய நியமிப்புக்காக அதைக் கடைசியாக விட்டுச் செல்கிறபோது, நான் அழுதேன். அந்த வீட்டில் மிகுதியான ஆதரவையும் அன்பையும் நான் பெற்றிருந்தேன்.
இப்பொழுதோவெனில், கேயலுக்கும் எனக்கும் மிகுதியான மகிழ்ச்சிக்குக் காரணம் உள்ளது, ஏனெனில் என் பெற்றோரும் அவர்களுக்கு முன்னால், அவர்களுடைய பெற்றோரும் செய்ததை நாங்கள் செய்யக்கூடியோராக இருக்கிறோம். நாங்கள் வீட்டைவிட்டுச் சென்றபோது, விட்டுச்செல்வதற்கான காரணத்தின்பேரில் ஆறுதலைக் கண்டடைந்தோம், அதாவது முழுநேர சேவையில் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கே. எங்கள் உண்மையுள்ள மூதாதையர்களின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு நாங்கள் கடினமாக உழைக்கிறோம், கடினமான ஊழியநியமிப்புகளில் ஊழியம் செய்தபோதும், கடுமையான வறுமையில் இருந்தபோதும், ஜப்பானிய கான்சன்ட்ரேஷன் முகாம்களில் பல ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தபோதும் இதைப்போன்ற ஆறுதலை அவர்கள் கண்டடைந்தனர்.—2 கொரிந்தியர் 1:3, 4.
யெகோவாவை நோக்கிக் கூறின தேவாவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட அரசன் தாவீதின் பின்வரும் சொற்களில் ஓப்பா எப்பொழுதும் ஆறுதலைக் கண்டார்: “ஜீவனைப் பார்க்கிலும் உம்முடைய அன்புள்ள தயவு மேம்பட்டது.” (சங்கீதம் 63:3, NW) அந்த அன்புள்ள தயவை நித்தியமாக அனுபவித்து மகிழவேண்டுமென்பதே எப்போதும் என் பாட்டனாரின் ஆர்வமிகுந்த ஆவலாக இருக்கிறது. அதை அவரோடு பங்குகொள்வதே அவருடைய முழு குடும்பத்தின் ஆவலாகவும் உள்ளது.
[பக்கம் 21-ன் படம்]
ஓமா மற்றும் ஓப்பா ஹாரிஸ்
[பக்கம் 23-ன் படம்]
க்ரேக் ஸங்கர் (பின்னால்), தன் மனைவி, பெற்றோர், தம்பி தங்கையுடன்