“யெகோவாவின் சாட்சிகள்தான் என்னைக் காப்பாற்றினார்கள்!”
இந்தக் கடைசி நாட்களில், அநேகர் “கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 3) மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்தில் விருப்பார்வ ஊழியராக இருக்கும் ஐஸிக் என்பவர் இதுவே உண்மையாக நடப்பதாக கண்டுணர்ந்தார். அவர் சொல்கிறார்:
“ஜனவரி 1992-ல், நான் ஆள்நடமாட்டமில்லாத நீண்ட சாலை வழியாக வாடகை டாக்ஸியில் இன்னொரு ஐந்து பேரோடு பயணம்செய்துகொண்டிருந்தேன். எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் சம்பாஷித்தவுடன், என்னிடமிருந்து அவள் ஒரு பைபிள் சார்ந்த சிற்றேட்டை சந்தோஷமாக வாங்கிக்கொண்டாள்.
“பிற்பகல் நான்கு மணி அளவில், லைசன்ஸ் நம்பரே இல்லாத ஒரு புதிய கார் திடீரென்று எங்கள் டாக்ஸியை மடக்கியது; இதனால் கீறிச்சொலியுடன் எங்கள் கார் பிரேக் போட்டு நின்றது. மூன்று புஷ்டியான ஆட்கள் துப்பாக்கியுடன் அந்தக் காரிலிருந்து இறங்கி எங்கள் கதவுகளை சடாரென்று திறந்தார்கள். அதில் ஒரு ஆள், ‘எல்லாருமே வெளியே இறங்குங்கள்’ என்று சீறினான்.
“இன்னொரு ஆள் என்னுடைய புத்தகப் பையைப் பிடித்து இழுத்தான். பையில் வெறும் பைபிள் பிரசுரங்களைப் பார்த்தவுடன் அதைத் தூக்கிக் கடாசினான். ‘உன்னிடம் வேறு என்ன இருக்கிறது?’ என்று துப்பாக்கியைக் காட்டிக் கேட்டான். பட்டென்று என்னுடைய பணப்பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தேன். ‘இதுதான் இருக்கிறதா?’ என்று கேட்டான். நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்றும் சாட்சிகள் பொய் சொல்வதே இல்லை என்றும் அவனிடம் சொன்னேன். என்னுடைய கையிலிருந்த பணப்பையை சட்டென்று பிடுங்கியவுடன், உவாட்ச் டவர் அடையாள அட்டையை பார்த்து, ‘உவாட்ச்டவரா, இங்கேயே நில்’ என்று சொன்னான்.
“அடுத்து, நான் டாக்ஸியில் பேசின பெண்ணைப் பார்த்தான். அவள் வெடுக்கென்று நெக்லெஸை அவிழ்த்து, தன் பர்ஸிலிருந்த பணத்தையும் கொடுத்தாள். அவளுடைய வெடவெடத்த கையில் அந்த வழிப்பறிக் கொள்ளைக்காரன் சிற்றேட்டைப் பார்த்ததும், நாங்கள் இருவரும் ஒரே தொகுதியினர் என்று நினைத்து, என்னோடு நிற்கும்படி அவளிடம் சைகைக் காட்டினான்.
“இதற்குள்ளாக, ஆயுதந்தரித்துவந்த மற்றக் கொள்ளைக்காரர்கள் எங்களோடு பயணஞ்செய்துவந்த மற்ற ஆட்களைப் பயங்கரமாகத் தாக்கினார்கள். டிரைவரையும் எங்களோடு பயணஞ்செய்த இன்னொரு ஆளையும் அடித்துப்போட்டு, அவர்களிடமிருந்ததைப் பறித்துக்கொண்டார்கள். வேறொரு கொள்ளைக்காரன் இன்னொரு பெண் போட்டிருந்த நெக்லெஸை கழுத்திலிருந்து பிடித்து இழுத்தான். அவள் தர மறுத்தபோது, அவர்கள் துப்பாக்கியின் தடித்த முனைகளால் அவளைத் தலையிலும் மார்பிலும் விளாசித்தள்ளி, சாகும்வரை அவளை விடவில்லை. மூன்றாவது பெண்ணை டாக்ஸியிலிருந்து வெளியே தரதரவென்று இழுத்துப்போட்டு மார்பில் சுட்டுக்கொன்றார்கள். பாவம், அவளும் செத்துப்போனாள். என்னையும் என்னோடிருந்த அந்த இளம் பெண்ணை மாத்திரம் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
“பின்னர் அந்த வழியாக வாகனத்தில் போன ஓர் ஆள் எங்களை வண்டியில் ஏற்றிச்சென்றபோது, கதிகலங்கிய அந்தப் பெண், ‘யெகோவாவின் சாட்சிகள்தான் என்னைக் காப்பாற்றினார்கள்!’ என்று சொல்லிக்கொண்டே சென்றாள்.”