அலாஸ்காவின் கடைசி எல்லைப் பகுதியில் முக்காடை நீக்குதல்
இரண்டு நாட்களாக இப்போது, நாங்கள் நாலுபேர் அலாஸ்காவின் பிரபலமான தங்க வயல் நாடிச்செல்லும் மக்களின் வேகமுள்ள நோம் நகரத்திலுள்ள ஒரு சிறிய அறையில் பரபரப்பாகப் பணி செய்துகொண்டிருந்தோம். 1898-ல் 40,000-க்கும் மேற்பட்ட தேடுவோர் ஒன்றைத் தேடுவதற்காக இங்கு வந்துகுவிந்தனர்—தங்கம்! நாங்களோ மறுபட்சத்தில் ஒரு வித்தியாசமான பொக்கிஷத்தைத் தேடுகிறோம்.
அப்போதைக்கு, எங்கள் அக்கறை “விரும்பப்பட்டவர்கள்” மீது இருந்தது. அவர்கள் பேரிங் ஜலசந்திக்கு மேற்கே 300 கிலோமீட்டர் தூரத்திலுள்ள செயின்ட் லாரன்ஸ் தீவில் இருக்கும் கேம்பல், சவூங்கா போன்ற தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் வாழக்கூடும். (ஆகாய் 2:7, NW) முன்னாள் சோவியத் யூனியனாய் இருந்ததிலிருந்து வெறுமனே ஒருசில கிலோமீட்டர் தூரத்திலுள்ள பனிநிறைந்த ஆர்க்டிக் நீரில் இன்யவட் மக்கள் தைரியமாகச் சென்று, அங்குத் திமிங்கலங்களை வேட்டையாடுவர். ஆனால் வீசும் பனியும், மந்தாரமான திரைபோன்ற மூடுபனியும் எங்களைத் தடுத்து நிறுத்தியது. எங்களுடைய விமானம் தரையிறங்கியது.
நாங்கள் காத்திருக்கையில், கடந்த சில ஆண்டுகளின் சம்பவங்களை மனத்திரைக்குக் கொண்டுவந்தேன். மேலும் அந்த அடர்த்தியான புதர்களடங்கிய இடத்தில் சாட்சிக்கொடுக்கும் வேலையை யெகோவா ஆசீர்வதித்ததால், அவருக்கு நன்றி சொன்னேன். உலகத்தின் கடைசி எல்லைப் பகுதி என்று சிலரால் அழைக்கப்பட்ட அலாஸ்காவில், 60,000-க்கும் அதிகமான உள்ளூர்வாசிகள் 150-க்கும் மேலான ஒதுக்கமாயிருக்கும் சமுதாயங்களாக இருந்தனர். இவர்கள் எந்தவிதமான சாலைகளாலும் இணைக்கப்பட்டில்லாத, சுமார் 16,00,000 சதுர கிலோமீட்டர் காட்டுப்பகுதியில் பரவியிருந்தனர். அவர்களுக்குக் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை எடுத்துச் செல்வதில் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் விமானம்மூலம், இந்தத் தனிப்படுத்தப்பட்ட கிராமங்களின் மூன்றில் ஒரு பங்கை நாங்கள் ஏற்கெனவே சென்றெட்டிவிட்டோம்.—மத்தேயு 24:14.
இந்த ஒதுக்குப்புறமான குடியிருப்புகளை அடைவதற்கு, நிலப்பகுதியை பல நாட்களாக மூடியிருக்கக்கூடிய மேகங்கள், மூடுபனி ஆகியவற்றினூடே அடிக்கடி விமானம் இறங்கவேண்டியது வரும். நிலப்பரப்பை அடைந்தவுடன், அங்கு ஊடுருவப்படவேண்டிய இன்னுமொரு மூடுபனி கண்டிப்பாய் இருக்கும். ஒரு முக்காடைப்போலவே, அது இந்தக் கனிவான, சமாதானமுள்ள மக்களின் மனங்கள் மற்றும் இருதயங்களை மூடியிருக்கிறது.—2 கொரிந்தியர் 3:15, 16-ஐ ஒப்பிடவும்.
ஒரு வேதனைமிக்க இடைமாற்றம்
அலாஸ்காவின் புதர்ப்பகுதி, இன்யவட், அலியூட், அமெரிக்க இந்தியர் ஆகியோரால் குடியிருக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய விசேஷித்த பரம்பரைப் பழக்கவழக்கங்களையும் குணங்களையும் உடையவர்களாக இருக்கின்றனர். ஆர்க்டிக் பனிக்காலத்தில் உயிர்வாழ்வதற்காக, வேட்டையாடுதல், மீன்பிடித்தல், திமிங்கிலம்பிடித்தல் போன்ற தேசத்தின் வளங்களைப் பயன்படுத்தியும் பாதுகாத்தும் வாழ கற்றுக்கொண்டிருக்கின்றனர்.
அவர்கள்மீது வெளிநாட்டு ஆதிக்கம் 1700-களின் மத்திபத்தில் வந்தது. ரஷ்ய தோல் வணிகர்கள் விலங்குத் தோல் உடைகள் அணிந்திருந்த மக்களைக் கண்டார்கள், அவர்கள் கடல்நாய் கொழுப்பின் (seal oil) வாசனையுடைவர்களாய் இருந்தனர். அவர்கள் பனிக்கட்டியாலாகிய குடிசைகளில் (igloos) அல்ல, ஆனால் புல் கூரைகளையும் அடித்தள நுழைவாயிலையும் உடையதாய் இருந்து, நிலப்பரப்பின் கீழ் கட்டப்பட்ட மண்கட்டி வீடுகளில் வாழ்ந்தனர். இந்த மிருதுவாகப் பேசும், கனிவான, ஆனாலும் உடற்கட்டுடைய மக்களுக்கு அந்த வணிகர்கள் பல வினைமையான பிரச்னைகளைக் கொண்டுவந்தனர். இவற்றில் புதிய பண்பாடு, புதிய நோய்கள் அடங்கும். இவை, சில கோத்திரக்காரர்களின் மக்கள் தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டன. மதுபானம் மக்கள்மத்தியில் சாபமாகச் சீக்கிரத்தில் மாறியது. புதிய பொருளாதார முறை, பிழைப்புக்கான வாழ்க்கை முறையிலிருந்து, பணம் சார்ந்த முறைக்கு மாறுவதைப் பலவந்தப்படுத்தியது. இன்றுவரை, அது ஒரு வேதனைமிக்க இடைமாற்றம் என்று சிலர் உணர்கின்றனர்.
கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் வந்தபோது, அலாஸ்கா நாட்டினர்மீது மற்றொரு வகையான மாற்றம் வற்புறுத்தப்பட்டது. சிலர் மனவருத்தத்தோடு தங்களுடைய பாரம்பரிய மதப் பழக்கங்களை—காற்று, பனிக்கட்டி, கரடி, கழுகு போன்றவற்றின் ஆவிகளை வணங்குவதை—விட்டுவிட்டாலும், மற்றவர்கள் மதங்களின் கலவையில் அல்லது குழப்பத்தில் விளைவடைந்த கோட்பாடுகளின் கதம்பத்தை உருவாக்கினர். இதெல்லாம் பெரும்பாலும் அந்நியர்கள்மீது சந்தேக உணர்வுக்கும், நம்பிக்கையின்மைக்கும் வழிநடத்தியது. பார்வையாளர்கள் சில கிராமங்களில் எப்போதும் வரவேற்கப்படுவதில்லை.
எனவே, எங்களுக்கு முன்னிருந்த சவால் என்னவென்றால், இந்தப் பரந்த எல்லைப் பகுதியிலிருக்கும் இந்த நாட்டினர் அனைவரையும் அடைவது எப்படி? அவர்களுடைய சந்தேக உணர்வுகளை நீக்குவது எப்படி? முக்காடை நீக்குவதற்கு நாங்கள் என்ன செய்யலாம்?
சாட்சிக்கொடுப்பதற்கு ஆரம்ப முயற்சிகள்
1960-களின் ஆரம்பத்தில், திடகாத்திரமான ஒருசில அலாஸ்கராயிருந்த சாட்சிகள் கடும் தட்பவெப்பநிலைகள்—கடும் காற்றுகள், பூஜ்யத்திற்கும் கீழான வெப்பநிலைகள், உறைபனிக்காலங்கள்—மத்தியிலும் தைரியமாகச் சகித்திருந்து, தங்களுடைய சொந்த, ஒற்றை எஞ்சின் விமானங்களைக் கொண்டு வடக்கே ஆங்காங்கே இருக்கும் கிராமங்களுக்கு பிரசங்க பிரயாணங்களை மேற்கொண்டனர். முன்னிகழ்வுகள் பற்றிய நினைவுக்காட்சியில், இந்தத் தைரியமிக்க சகோதரர்கள் உண்மையில் மிக அதிகமான ஆபத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தனர். ஒருமுறை எஞ்சின் இயங்காது நின்றுபோதல், கிட்டத்தட்ட நிச்சயமாகவே பேராபத்துக்கு வழிநடத்தியிருக்கும். பாதுகாப்பாக விமானம் தரையிறங்கினாலும், உதவிக்காக அநேக கிலோமீட்டர் செல்லவேண்டிய தொலைவிலுள்ள இடத்தில் பூஜ்யத்திற்குக் கீழான வெப்பநிலைகளிலும் பிரயாணம்செய்ய எந்தவித உதவியில்லாமலும் இருந்திருப்பர். பிழைத்திருத்தல் உணவும் தங்கும் இடமும் பெறுவதோடு சம்பந்தப்பட்டிருக்கும்; அவையோ கிடைப்பது அரிது. நல்லபடியாக எந்தவித வினைமையான விபத்துக்களும் நடக்கவில்லை, ஆனால் அப்படிப்பட்ட ஆபத்துகள் அசட்டைச் செய்யப்படக்கூடாதவை. எனவே, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் அலாஸ்கா கிளை அலுவலகம் இந்த அணுகுமுறையை உற்சாகப்படுத்தவில்லை.
வேலையைத் தொடர்ந்து செய்வதற்கு, ஃபேர்பாங்க்ஸ் மற்றும் நார்த்போல் ஆகிய சபைகளில் உள்ள உண்மையுள்ள சகோதரர்கள் தங்களுடைய முயற்சிகளையெல்லாம் பெரிய நகரங்களான நோம், பாரோ, கோட்ஸ்பு போன்றவற்றில் ஒருமுகப்படுத்தினர். இவை பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் விமானங்கள் செல்லும் பகுதிகள். இந்த இடங்களுக்கு—வடக்கிலும் மேற்கிலும் 720-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்—போவதற்கு அவர்கள் தங்களுடைய சொந்த பணத்தைப் பயன்படுத்தினர். அக்கறை காண்பிப்போருடன் பைபிள் படிப்பு நடத்துவதற்காக சிலர் நோமிலேயே பல மாதங்கள் தங்கினர். பாரோவில், ஒரு தனி வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அது கடும்குளிரான −45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு ஒரு புகலிடமாக இருந்தது. பூமியின் எல்லைகள் வரை நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியான இயேசுவின் கட்டளையை இருதயத்தில் ஏற்றுக்கொண்டவர்களால், பல ஆண்டுகளாக, $15,000-க்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது.—மாற்கு 13:10.
எதிர்பாராத உதவி வருகிறது
அதிகமாக ஒதுக்கப்பட்டிருந்த சமுதாயங்களைச் சென்றடைவதற்கு தேடுதல் தொடர்ந்தது, யெகோவா வழியைத் திறந்தார். ஓர் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானம் கிடைக்கக்கூடியதாக இருந்தது—அலாஸ்காவின் பாறைகள் நிறைந்த மலைத்தொடர்களைப் பாதுகாப்பாகக் கடப்பதற்குச் சரியாகவே தேவையானதாக அது இருந்தது. 4,200 மீட்டர்களுக்கும் உயரமாகச் செல்லும் அநேக மலைகள் அலாஸ்காவில் இருக்கின்றன. பிரபலமான மெக்கின்லி சிகரமும் (டினாலி) கடல் மட்டத்திற்குமேல் 6,193 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
இறுதியில், விமானம் வந்துசேர்ந்தது. ஒரு பாழாய்ப்போன, மங்கலான, பலவர்ண பறக்கும் இயந்திரம் விமான ஓடுபாதையில் இறங்கியபோது எங்களுடைய மனவருத்தத்தைக் கற்பனைச் செய்துபாருங்கள். அது பறப்பதற்குத் தகுதியுடையதுதானா? எங்களுடைய சகோதரர்களின் உயிரை அதனிடம் நம்பிக்கையோடு ஒப்படைக்கமுடியுமா? மீண்டுமாக, யெகோவாவின் கரம் குறுகியதாய் இல்லை. உரிமம்பெற்ற மெக்கானிக்குகளால் (mechanics) வழிநடத்தப்பட்டவர்களாக, 200-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தங்களுடைய சேவைகளை மனமுவந்து செய்து, பல ஆயிரக்கணக்கான மணிநேரங்களைச் செலவழித்து, முழு விமானத்தையும் புதுப்பித்தனர்.
அதைப் பார்ப்பதற்கு என்னே ஓர் ஆனந்தம்! அலாஸ்காவின் விண்ணில் ஏறிச்சென்று, ஒரு புதிய விமானம்போல் 710WT என்ற பதிவு எண் வால்பகுதியில் பகட்டாக தீட்டப்பட்டு மிளிர்ந்தது! ஏழும் பத்தும் பைபிளில் முழுமையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால், 710 என்பது இருளில் முழுவதும் மூடப்பட்டிருக்கும் இருதயத்தின் முக்காடுகளை நீக்குவதற்கு யெகோவாவின் அமைப்பு கொடுத்த ஆதரவை வலியுறுத்திக் காண்பிப்பதற்காக எடுக்கப்படலாம்.
அலியூஷன் தொடருக்குக் கீழ்
விமானத்தைப் பெற்றதிலிருந்து, 80,000 கிலோமீட்டர் காட்டுப்பகுதிகளை, ராஜ்ய நற்செய்தியையும் பைபிள் பிரசுரங்களையும் 54-க்கு அதிகமான கிராமங்களுக்கு எடுத்துச்செல்வதன்மூலம் சென்றெட்டினோம். இது ஐக்கிய மாகாண கண்டத்தை 19 தடவைகள் கடப்பதற்குச் சமம்!
1,600 கிலோமீட்டர் நீளமுள்ள அலியூஷன் தீவுகள் மூலமாக மூன்று முறைகள் கீழே போயிருக்கிறோம். இது பேரிங் கடலிலிருந்து பசிபிக் பெருங்கடலைப் பிரிக்கிறது. தீவுத் தொடரை உருவாக்கும் கிட்டத்தட்ட மரங்களே இல்லாத 200-க்கும் அதிகமான தீவுகள் அலியூஷ நாட்டினரின் வீடாக மட்டுமல்ல, வெண்பனி நிற தலைகள், வித்தியாசமான கறுப்பு வெள்ளை வரியையும் இறகுகளையுமுடைய ஆயிரக்கணக்கான கடல் பறவைகள், மொட்டைக் கழுகுகள், பேரரசர் வாத்துக்கள் ஆகியவற்றிற்கும் வசிப்பிடமாக இருக்கின்றன.
எனினும், அந்தப் பகுதியின் மயங்கவைக்கும் அழகு, அதற்குரிய அபாயங்களோடு இல்லாமல் இல்லை. கடல்மீது பறக்கையில், நுரைததும்பும் பனிமூடிய நீரில் மூன்று முதல் ஐந்து மீட்டர் உயர பெரிய கடல் அலைகளை நாங்கள் காணமுடிந்தது. அது அவ்வளவு குளிராக இருந்ததால், கோடைகாலத்திலும் ஒருவர் 10 முதல் 15 நிமிடங்கள்தான் அதில் தாக்குப்பிடிக்கமுடியும். இறங்கும்படி கட்டாயப்படுத்தப்படும்போது, விமானியின் வாய்ப்புகள் ஒரு கரடுமுரடான, பாறை நிறைந்த தீவாக அல்லது குளிர்மிகுந்த, சாவுக்கேதுவான கடலாக இருக்கும். A & E (ஏர்கிராஃபட் மற்றும் எஞ்சின்கள்) மெக்கானிக்ஸ் சான்றிதழ் பெற்று, விமானத்தை மிக நேர்த்தியான வடிவமைப்பில் காத்துவரும் எங்களுடைய திறமைமிக்க சகோதரர்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!
ஒரு பிரயாணத்தில் நாங்கள் டச் துறைமுகத்தை நோக்கியும், மீன் பிடிக்கும் கிராமமாகிய அனலஸ்காவை நோக்கியும் போனோம். அந்தப் பகுதி ஒரு மணிநேரத்திற்கு 130-190 கிலோமீட்டர் வேக காற்றுக்களுக்குப் பெயர்பெற்றதாய் இருந்தது. சந்தோஷகரமாகவே, அந்த நாள் நன்றாக அமைதியாகத்தான் இருந்தது. ஆனாலும் பல முறைகள் எங்களைக் குமட்டுகிற அளவிற்கு அமளிசெய்தது. விமானம் இறங்கும் தற்காலிகத் திட்டு—பாறைமிக்க மலைப்பகுதியில் வெறுமனே ஒரு வெட்டுத்தடமான ஓடுபாதை—பார்வையில் பட்டபோது என்னே ஒரு திகைப்பு! ஓடுபாதையின் ஒருபுறம் ஒரு செங்குத்தான கற்பாறை இருந்தது, மறுபுறத்தில், பேரிங் கடலின் பனிமூடிய நீர் இருந்தது! நாங்கள் கீழே இறங்கியபோது, அது ஈரமான ஓடுபாதையாக இருந்தது. அங்கு வருடத்தில் 200 நாட்களுக்குமேல் மழைபெய்யும்.
கடவுளுடைய வார்த்தையையும் நோக்கத்தையும் அந்தப் பகுதியில் வசிப்போரோடு கலந்துபேசுவது என்னே ஓர் ஆனந்தமாய் இருந்தது! வயதுவந்தவர்கள் பலர் யுத்தமில்லாத ஓர் உலகத்தைப் பற்றிய நம்பிக்கையைப் போற்றினார்கள். டச் துறைமுகம் ஜப்பானியர்களால் இரண்டாம் உலகப் போரின்போது குண்டுவீச்சுக்குட்பட்ட நினைவுகள் இன்னும் அவர்கள் நினைவில் தெள்ளத்தெளிவாய் பதிந்திருந்தன. அதேபோலவே அப்படிப்பட்ட சாட்சிகொடுத்தல் பயணங்களைப் பற்றிய எங்கள் நினைவுகளும் மறக்கமுடியாதவை.
கொஞ்சங்கொஞ்சமாக சூடுபிடித்தல்
தட்பவெப்பநிலையை மீண்டும் பரிசீலனைசெய்யும்போது, வெப்பநிலையில் சிறிது அதிகரிப்பு இருப்பதை நாங்கள் கவனிக்கிறோம். அது புதர்களுக்கிடையே நாங்கள் செய்த வேலையை ஞாபகத்திற்குக் கொண்டுவருகிறது. மெதுவாக, ஆனால் சமநிலையாக, மக்களின் இருதயங்களில் ஒரு சூடுபிடித்தலை நாங்கள் கண்டிருக்கிறோம்.
அயலாரிடம் மக்கள் கொண்டிருந்த சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை என்னும் அறியாமையை நீக்குவதற்கு காலம் எடுத்திருக்கிறது. எங்களுடைய ஆரம்ப முயற்சிகளில், கிராம சர்ச் தலைவர்கள் விமானத்திடம் வந்து, எங்களுடைய விஜயத்தின் நோக்கத்தைக் கேட்டு, பின்பு உடனடியாக கிளம்பும்படி எங்களைக் கேட்பது அசாதாரணமானதாய் இல்லை. அப்படிப்பட்ட வரவேற்புகள், உண்மையில், உற்சாகமிழக்கச் செய்வதாய் இருந்தன. ஆனால் மத்தேயு 10:16-ல் காணப்படுகிற இயேசுவின் ஆலோசனையை நாங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டோம்: “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.” எனவே நாங்கள் புத்தம்புதிய பச்சடிக்கீரை, தக்காளிகள், முலாம்பழங்கள், மேலும் உள்ளூரில் எளிதில் கிடைக்காத மற்ற பொருள்களும் நிரப்பப்பட்ட விமானத்தோடு திரும்பிப்போனோம். முன்பு எதிர்த்த குடிகள் இப்போது எங்களுடைய விமான சரக்கைப் பார்க்க ஆவலுடன் இருந்தனர்.
ஒரு சகோதரர் “கடையை” கவனித்துக்கொண்டு, புத்தம்புதிய பொருள்களுக்குப் பணத்தை வசூலிக்கும்போது, மற்ற பலர் வீட்டுக்கு வீடு சென்று, விமானத்தில் புதிய சரக்கு வந்திருக்கிறது என்பதைப் பற்றி சொல்வர். வீடுகளில், அவர்கள் இவ்வாறும் விசாரித்தனர்: “ஓ, ஆக, நீங்கள் பைபிளை வாசிப்பவரா? கடவுள் நமக்கு ஒரு பரதீஸை வாக்குக்கொடுத்திருக்கிறார் என்று காண்பிக்கும் இந்தப் பைபிள் படிப்பு உதவியை நீங்கள் அனுபவிப்பீர்கள் என நான் அறிந்திருக்கிறேன்.” இப்படிப்பட்ட தூண்டும் அளிப்பை யார் மறுக்கமுடியும்? ஒவ்வொருவரும் மாம்சப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய உணவைப் போற்றினார்கள். அவர்கள் இனிய வகையில் வரவேற்றனர், அநேக பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன, ஒருசில இருதயங்களும் சூடுபிடித்தன.
எல்லையைக் கடத்தல்
யுகான் பிராந்தியத்தில், ஒயிட் ஹார்ஸ் சபை ஒதுக்குப்புறமான வடமேற்கு பிராந்தியங்களில் சில பகுதிகளைச் சந்திப்பதற்காக கனடாவிற்குள் செல்ல “அடியெடுத்துவைக்க” “மக்கெதோனிய” அழைப்பை எங்களுக்குக் கொடுத்தது. (அப்போஸ்தலர் 16:9) எங்களில் ஐவர் ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கேயுள்ள பியூஃபோர்ட் கடலில், மெக்கென்ஸி விரிகுடாவுக்கு அருகிலிருந்த ஒரு கிராமமாகிய டுக்டோயாக்டூக் என்ற இடம் நோக்கிச் சென்றோம்.
‘இந்த விநோதமான பெயரை எப்படி உச்சரிப்பது?’ நாங்கள் வந்துசேர்ந்தபோது, இவ்வாறு யோசித்துக்கொண்டிருந்தோம்.
“டூக்,” என்று ஓர் இளம் மனிதன், பெரிய புன்னகையோடு பதிலளித்தான்.
“அதைப் பற்றி ஏன் நினைக்கவில்லை?” என்று நாங்கள் வியப்படைந்தோம்.
டுக்டோயாக்டூக்-வின் மக்கள் வேதவசனங்களை அதிகம் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்பதைக் காண்பதில் ஆச்சரியமடைந்தோம். இதன் காரணமாக, நாங்கள் பல சிநேகப்பான்மையான கலந்துரையாடல்களைக் கொண்டிருந்தோம், அதிகமான பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. எங்கள் இளம் பயனியர்களில் ஒருவர் ஒரு வீட்டுக்காரரோடு அறிவொளியூட்டும் உரையாடலைக் கொண்டிருந்தார்.
“நான் ஓர் ஆங்கிலிக்கன்!” என்று வீட்டுக்காரர் சொன்னார்.
“ஆங்கிலிக்கன் சர்ச், ஒத்தபாலினத்தவர் புணர்ச்சியை ஆதரிக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?” என்று எங்களுடைய பயனியர் கேட்டார்.
“அப்படியா?” என்று அந்த மனிதன் ஐயுற்று தயங்கினார். “அப்படியென்றால், நான் இனி ஒருபோதும் ஓர் ஆங்கிலிக்கன் அல்ல.” நம்பிக்கையளிக்கும்விதத்தில், பைபிளின் நற்செய்திக்கு மற்றொரு நபர் தன் இருதயத்தை திறந்துவைத்திருந்தார்.—எபேசியர் 1:19.
அந்தப் பகுதியில் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதற்கான எங்களுடைய தீர்மானத்தைக் கண்டு ஒரு முதியவர் கவர்ந்திழுக்கப்பட்டார். பொதுவாக நாங்கள் எல்லா வேலையையும் நடந்துபோய்தான் செய்வோம். விமானம் இறங்கும் தற்காலிகத் திட்டிலிருந்து கிராமத்திற்கு ஒரு கிலோமீட்டர் அல்லது அதிகமான தொலைவு நடப்பதை அது உட்படுத்தும். பின்பு ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதற்கு, நாங்கள் சரளைக்கல் அல்லது சகதி வழிகளில் கடினமாக நடக்கவேண்டியதிருந்தது. அந்த மனிதர் தன்னுடைய சிறிய வண்டியைக் கொடுத்து உதவிசெய்தார், அது என்னே ஓர் ஆசீர்வாதமாக இருந்தது! எல்லையைத் தாண்டி, கனடாவின் பிராந்தியத்தில் உதவிசெய்தல் ஓர் அருமையான சிலாக்கியமாக இருந்தது.
அது பிரயோஜனமானதுதானா?
தட்பவெப்பநிலை மோசமாகிறபோது, நாங்கள் இப்போது இருக்கிறதுபோல, செயலற்றவர்களாக அல்லது நிரந்தரமாகத் தாமதமானவர்களாகி விடுகிறோம், அல்லது ஒரு நாள்முழுவதும் பிரசங்கித்தல் ஒரு பயனையும் கொண்டுவராதிருந்து ஆனால் உற்சாகமின்மையை அல்லது ஏன் பகைமையைக் கொண்டுவந்திருப்பதாக உணரும்போது, நாங்கள் செலவழித்த நேரம், சக்தி, செலவு பிரயோஜனமானதுதானா என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவோம். சிலர் அக்கறைக் காண்பிப்பவர்கள்போலிருந்து, கடிதத்தொடர்பு கொள்வதாக உறுதியளித்தும் அவ்வாறு செய்யாதிருக்கிற மக்களைக் குறித்து நாங்கள் சிந்தித்துப் பார்ப்போம். பிறகு, கடிதம் எழுதுவது அங்கு வாழும் பல உள்ளூர்வாசிகளின் வழக்கமல்ல என்பது எங்கள் நினைவிற்கு வரும். சிநேகப்பான்மை, பைபிள் செய்தியில் அக்கறை என்பதாக எளிதில் தவறாகக் கருதப்படலாம். சில சமயங்களில் வெற்றியை அளவிடுதல் அதிக கடினமாய் தோன்றுகிறது.
ராஜ்ய பிரஸ்தாபிகளாகிய மற்றவர்களின் நல்ல அனுபவங்களை ஞாபகப்படுத்துகிறபோது, எதிர்மறையான எண்ணங்கள் உடனே மறைந்துவிடுகின்றன. உதாரணமாக, ஃபேர்பாங்க்ஸ்-ஐச் சேர்ந்த சாட்சி, வடகோடியிலிருந்த பாரோ கிராமத்தில் பிரசங்கித்தாள். அவள் கலிபோர்னியாவில் கல்லூரியிலிருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த பருவவயதான ஒரு பெண்ணைச் சந்தித்தாள். இந்தச் சகோதரி கடிதத்தொடர்புமூலம் அக்கறையை வளர்த்தாள், அந்தப் பெண் கல்லூரிக்குத் திரும்பிப் போனபிறகும்கூட அவளை உற்சாகப்படுத்தினாள். இன்று, அந்த இளம் பெண் யெகோவாவின் ஒரு சந்தோஷமான, முழுக்காட்டுதல் பெற்ற ஊழியக்காரியாக இருக்கிறாள்.
கதவு தட்டும் சத்தம் என் எண்ணவோட்டங்களை தடைசெய்கிறது, மேலும் அதெல்லாம் பிரயோஜனமானதுதான் என்ற மற்றொரு அத்தாட்சியைக் கொடுக்கிறது. ஒப்புக்கொடுக்கப்பட்டு, முழுக்காட்டப்பட்ட ஒரே இன்யவட் சாட்சியாக நோமில் இதுவரைக்கும் இருக்கும் எல்மர் கதவருகில் நிற்கிறார்.
“நீங்கள் ஊழியத்திற்குப் போகும்போது, நான் உங்களோடு வரவா?” என்று அவர் கேட்கிறார். மிக அருகாமையில் இருக்கும் சபையிலிருந்து 800-க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்தில், தனிமையில் வாழும் அவர், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவருடைய சகோதரர்களோடு சேர்ந்துகொண்டு ஊழியத்தில் பங்கெடுக்க விரும்புகிறார்.
மேகங்களினூடே கதிரவனின் கதிர்கள் பாய்கின்றன, சீக்கிரத்தில் வெளியே செல்வதற்குப் பச்சைக்கொடிக் காட்டப்படும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். எல்மர் விமானத்திற்குள் ஏறும்போது, அவருடைய இன்பகரமான, மலர்ந்த முகத்தோற்றத்தால் நாங்கள் புத்துணர்ச்சியூட்டப்படுகிறோம். எல்மருக்கு இது ஒரு விசேஷித்த நாள். அவர் தன் சொந்த இன்யவட் மக்களுக்கே பிரசங்கம்பண்ண நாங்கள் போய்ச்சேரும் கிராமத்திற்கு எங்களோடு வருகிறார். உலகத்தின் கடைசி எல்லையில் வாழ்வோரின் இருதயங்களிலிருந்து முக்காடை நீக்கும் முயற்சியில் எங்களோடு சேர்ந்துகொள்கிறார்.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 23-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
1. கேம்பல்
2. சவூங்கா
3. நோம்
4. கோட்ஸ்பு
5. பாரோ
6. டுக்டோயாக்டூக்
7. ஃபேர்பாங்க்ஸ்
8. ஆங்கரேஜ்
9. அனலஸ்கா
10. டச் துறைமுகம்
[பக்கம் 24-ன் படம்]
தனிப்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சென்றடைய, அடிக்கடி அலாஸ்காவின் பல மலைத்தொடர்களில் ஒன்றைக் கடந்துபோக வேண்டியிருக்கிறது
[பக்கம் 25-ன் படம்]
பெட்டி ஹோஸ், சொபி மிஸாக், கேரி டிப்பில்ஸ் ஆகியோர் முழு நேர ஊழியத்தில் ஒட்டுமொத்தமாக 30-க்கும் அதிகமான ஆண்டுகள் ஈடுபட்டிருக்கின்றனர்