கிழக்கு மேற்கைச் சந்திக்கையில்
“ஓ, கிழக்கு கிழக்குத்தான், மேற்கு மேற்குத்தான், இவையிரண்டும் என்றும் ஒன்றுசேராது.” பிரிட்டிஷ் கவிஞர் ரட்யார்ட் கிப்லிங்கினுடைய இந்த வார்த்தைகள் மனிதகுலத்தைப் பிரிக்கும் வேரூன்றிய பண்பாட்டு வித்தியாசங்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன; இன்று நம்மைச் சுற்றி எங்கும் வேகமாகப் பரவக்கூடிய கோத்திர, இன, தேசிய பகைமைகளுக்கு இவை காரணமாக இருக்கின்றன. பலர் இவ்வாறு கேட்கின்றனர், இந்த நிலைமையைக் குறித்து கடவுள் ஏதாவது செய்யமுடியாதா? ஆம், அவரால் செய்யமுடியும்! இப்பொழுதும்கூட அவர் ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறார்! கிப்லிங்கினுடைய கவிதையின் அடுத்த வரி இதைப் பற்றி குறிப்பிட்டது. கிழக்கும் மேற்கும் எவ்வளவு காலம் பிரிந்திருக்கும்? அந்தக் கவிஞர் சொன்னார்: “கடவுளின் மகா நியாயத்தீர்ப்பு சிங்காசனத்தின் முன்பாக பூமியும் வானங்களும் சீக்கிரத்தில் நிற்கும் வரை.”
கடவுள், நியாயத்தீர்ப்பு செய்யும் பொறுப்பைத் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22-24, 30) ஆனால், அந்த நியாயத்தீர்ப்பின் காலம் எப்போது ஆரம்பிக்கிறது? யார் நியாயந்தீர்க்கப்படுவர், என்ன விளைவுடன்? 1914-ம் ஆண்டில் மனிதகுலத்தைப் பாதிக்க ஆரம்பித்த உலக யுத்தங்கள், அதோடு சேர்ந்து வந்த வேதனைகள் போன்றவற்றை தீர்க்கதரிசனத்தில் விளக்கினவர் இயேசுவே. அவர், காணக்கூடாத வகையில் தாம் “வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும்,” ‘அடையாளத்தை’ இவை குறிக்கின்றன என சொன்னார்.—மத்தேயு 24:3-8, NW.
இந்தப் பெரிய தீர்க்கதரிசனத்தின் உச்சக்கட்டத்தில், நம்முடைய இன்றைய காலமே நியாயத்தீர்ப்பின் காலமாக இருப்பதாக இயேசு குறிப்பிடுகிறார்; தம்மைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.” அடையாளப்பூர்வமாக, பூமியிலுள்ள எல்லா மக்களும் இந்த நியாயாதிபதிக்கு முன்பாக இப்பொழுது கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்; இரட்சிப்பைத்தரும் அவருடைய செய்திக்கு அவர்கள் பிரதிபலிக்கும் முறையைக் குறித்து கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். மகா உபத்திரவ சமயத்தில் சீக்கிரமாக நியாயத்தீர்ப்பு அமல்படுத்தப்படுகையில், வெள்ளாடுகளைப் போன்ற கீழ்ப்படியாத மக்கள் “நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ [செம்மறியாடுகளைப் போன்ற கீழ்ப்படிதலுள்ளவர்கள்] நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.”—மத்தேயு 25:31-33, 46; வெளிப்படுத்துதல் 16:14-16.
‘கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்’
இந்த உலகத்தின் நியாயத்தீர்ப்பு முதலாம் உலக யுத்தத்தின் கடுமையான ஆண்டுகளின்போது உண்மையில் ஆரம்பித்துவிட்டது. அந்தச் சமயத்தில், கிறிஸ்தவ மண்டல குருவர்க்கத்தினர் யுத்தம் செய்யும் தன்னலக் கும்பல்களுக்கு இருதயப்பூர்வமான ஆதரவைக் கொடுத்தனர். ‘தேவனுடைய கோபத்திற்கு’ உட்பட தகுதியான கெட்டுப்போன உலகத்தின் பாகமாக அவர்களை இது அடையாளப்படுத்தியது. (யோவான் 3:36) எனினும், கடவுளில் விசுவாசம் வைத்து சமாதானத்தை நேசித்துக்கொண்டிருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன? 1919-ம் ஆண்டில் ஆரம்பித்து, ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் பக்கமாக இவர்கள் கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள்.
பூகோளமெங்குமிருந்து அவர்கள் வந்திருக்கின்றனர்; முதலில் 1,44,000 அபிஷேகம்செய்யப்பட்டவர்களின் மீதமானோர் கிறிஸ்தவ சகாப்தத்தின் நூற்றாண்டுகள்தோறும் தெரிந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ‘கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராக’ அவருடைய பரலோக ராஜ்யத்தில் இருக்கப்போகிறவர்கள். (ரோமர் 8:17) இவர்களிடம் கடவுளுடைய தீர்க்கதரிசி இவ்வாறு சொல்கிறார்: “பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.”—ஏசாயா 43:5-7.
ஆனால் அது மட்டுமல்ல! முக்கியமாக 1930-களிலிருந்து, ஒரு திரளான கூட்டம், இப்போது லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பவர்கள் கூட்டிச்சேர்க்கப்பட ஆரம்பித்தார்கள். மத்தேயு 25:31-46-ல் இயேசு குறிப்பிட்ட ‘செம்மறியாடுகளாக’ இவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக இருக்கிற அபிஷேகம்செய்யப்பட்ட மீதியானோரைப்போல, இவர்கள் “நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள்” என்று அறிவிக்கிறவரை “விசுவாசிக்கும்படிக்கு” வருகிறார்கள். (ஏசாயா 43:10-12) இந்தத் திரள்கூட்டத்தினரைக் கூட்டிச்சேர்ப்பதும் ‘கிழக்கிலிருந்தும் மேற்கிலுமிருந்தும், வடக்கிலிருந்தும் தெற்கிலுமிருந்தும் பூமியின் கடைகோடிகளிலிருந்தும்’ தொடர்ந்து நடந்துவருகிறது.
சமாதானத்தை நேசிக்கிற இந்தச் செம்மறியாடுகள் ஒரே சர்வதேச சகோதரத்துவமாக ஒருங்கிணைக்கப்படுகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் 231 நாடுகளின் பல்வேறுபட்ட மொழிகளைப் பேசுகின்றனர். ஆனாலும், “ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு,” பைபிளின் ராஜ்ய செய்தியாகிய “சுத்தமான பாஷை”யை கற்றுக்கொள்வதில் ஆவிக்குரிய வகையில் ஒன்றுபட்டிருக்கின்றனர். (செப்பனியா 3:9) நம்பிக்கை, நோக்கம், மற்றும் செயலில் அவர்களின் ஐக்கியம், கிழக்கு உண்மையில் மேற்கைச் சந்தித்திருக்கிறது என்பதற்கும் மற்ற எல்லா திசைகளிலிருந்தும் வருகிற மக்கள் பேரரசராகிய யெகோவாவின் சேவைக்காகவும் புகழிற்காகவும் கூட்டிச்சேர்கின்றனர் என்பதற்கும் ஓர் அற்புதகரமான சான்றளிக்கிறது.
பின்வரும் அறிக்கைகள் காண்பிப்பதுபோல், சில நாடுகளில் இந்தக் கூட்டிச்சேர்த்தல் மிகத் தனிச்சிறப்பான சூழ்நிலைகளில் நடந்துவருகிறது.